புதிய குற்றவியல் சட்டத்தில் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டுள்ளது: பாலியல் வல்லுறவுக்கு இரையாகும் ஆண்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லையா?
தமிழில் : விஜயன்
முன்பிருந்த இ.பி.கோ. சட்டப்பிரிவு 377ல் இருந்த சட்டப் பாதுகாப்புகள் ஜீலை 1 முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்களில் ஒன்றான பாரதிய நியாய சஹ்கிதா(BNS)விலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு 377 ஏன் முக்கியமானது?
வயது வந்த இரு ஆண்கள் பரஸ்பர விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது இயற்கைக்கு புறம்பான உடலுறவு என்பதன் அடிப்படையில் சட்டப்பிரிவு 377-ன் கீழ் குற்றவியல் வழக்கு தொடர்வதை 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியமான தீர்ப்பின் மூலம் இரத்து செய்தது என்றாலும் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சட்ட வழியிலான தீர்வுகளைத் தேடுவதற்கு இன்றும்கூட இந்தச் சட்டப்பிரிவு தான் உதவிகரமாக இருந்து வருகிறது.
நவம்பர் 2023ல், சட்டப்பிரிவு 377ல் இருக்கும் சட்டப் பாதுகாப்புகள் தொடர வேண்டுமென நாடாளுமன்றக் குழு பரிந்துரைகளை வழங்கிய போதும், பாரதிய நியாய சஹ்கிதா(BNS)வில் இவை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஆண்கள் சட்டப்பூர்வமாக எந்தவொரு நியாயத்தையும் பெற முடியாது என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
சட்டப்பிரிவு 377 பற்றி சுருக்கமாக காண்போம்
வயது வந்த இரு ஆண்களும் பரஸ்பர விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என இ.பி.கோ. சட்டப்பிரிவு 377 கூறியது. மிருகங்களை புணர்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்வது மட்டுமல்லாது, ஆண் பெண்களுக்கிடையில் ஆண்குறி, பெண்குறி வழியான உடலுறவு அல்லாத வழியில் உடலுறவு கொள்ளும் எந்த பாலினத்தவரும் இச்சட்டப் பிரிவின்படி தண்டிக்கப்படுவர். இதில் பரஸ்பர விருப்பம் என்ற அம்சம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
ஆண்-பெண் இணையர்களில் வாய் வழியாக, ஆசனவாய் வழியாக கலவிக்கு நிர்பந்திக்கப்படுவதை தண்டிப்பது பற்றி பேசினாலும், நெகிழ்பாலுறவாளர்களையும்(Queer), மூன்றாம் பாலினத்தவர்களையும் ஒடுக்குவதற்காகவே இச்சட்டப்பிரிவு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
“இயற்கைக்கு புறம்பான வழியில் எந்தவொரு ஆணுடனோ, பெண்ணுடனோ அல்லது விலங்குடனோ சிற்றின்ப வேட்கைக்காக உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது அபராதத்துடன்கூடிய பத்தாண்டு சிறை தண்டனையோ வழங்கப்படும்” என்பதே நீக்கப்பட்ட சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்ட வாசகமாகும்.
சட்டப்பிரிவு 377 தங்களை வஞ்சிப்பதாக LGBTQIA+ பிரிவினர் கலகக்குரல் எழுப்பத் துவங்கியது முதல் கடந்த பத்தாண்டுகளாகவே சர்சைக்குரிய விசயமாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரனைக்கு வந்த நவ்தேஜ் சிங் எதிர் ஒன்றிய அரசு வழக்கில் செப்டம்பர் 6, 2018 அன்று மிக முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. வயது வந்த இருவருக்கிடையில் - எந்தவொரு பாலினத்தை சேர்ந்தவராகினும் - பரஸ்பர விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்பிரிவு 377-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று தீர்ப்பளித்ததன் மூலம் இதிலிருந்து சிலவற்றை உச்ச நீதிமன்றமே நீக்கம் செய்தது.
எனினும், இயற்கைக்கு புறம்பான வழியில் விலங்குகளுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகளை இச்சட்டத்தின்கீழ் தண்டிப்பதற்கு எத்தடையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
பாரதிய நியாய சஹ்கிதாவில் என்ன மாறியுள்ளது?
பகுதி V-ல் வரிசையாக சொல்லப்பட்டுள்ள பாலியல் குற்றங்களில் குறுகிய பார்வையோடு அதாவது “பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை” மட்டுமே பாலியல் குற்றம் என புதிதாக அமலுக்கு வந்துள்ள பாரதிய நியாய சஹ்கிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவு பற்றி கூறும் உட்பிரிவு(2)ல் அடங்காத பாலியல் வல்லுறவில் ஈடுபடும் எவருக்கும் பத்தாண்டுகளுக்கு குறையாதளவிற்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்; இதை வாழ்நாள் சிறை தண்டனையாகவும் நீட்டிக்கலாம்; அபராதமும் விதிக்கலாம்” என்று BNS சட்டம் கூறுகிறது.
“வயது வந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கிடையில் பரஸ்பர விருப்பத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வதை மட்டுமே உச்ச நீதிமன்றம் சட்டப் பிரிவு 377-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறியது. ‘ஆண்கள், பெண்கள், அல்லது விலங்குகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வல்லுறவுகளினால்’ பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டப்பிரிவின் மூலம் நீதி கேட்பதற்கான வழியிருந்தது என்பதே மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விசயமாகும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உஜைனி சாட்டர்ஜி தி குவிண்ட் பத்திரிக்கையிடம் பேட்டியளித்த போது கூறினார்.
பாலினச் சிறுபான்மையினர்களையும் அவர்களின் தேவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டியிருந்ததால்தான் சட்டப்பிரிவு 377-ன் சில பகுதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்று விளக்குகிறார் உஜைனி.
“சட்டப்பிரிவு 377-ல் உள்ள நியாயமான அம்சங்களை, அமலுக்கு வந்துள்ள BNS சட்டத்தில் சேர்க்காமல் விடுவதன் மூலம் ஏராளமான சட்டப் பாதுகாப்புகளும், பாலியல் குற்றங்கள் சார்ந்த ஒழுங்குமுறைகளும் நீர்த்துப் போகும் நிலை ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த சட்ட அமைப்பு முறையில் பெரும் ஓட்டை விழுவதாகவே கருத முடியும்” என்கிறார் உஜைனி.
பாலியல் வல்லுறவு என்றால் ஆண்களே குற்றவாளிகள், பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்று BNS சட்டக்கூறு 63 கூறுகிறது. குற்றம் செய்யாத ஆண்களும் இதன் மூலம் இரையாக்கப்படும் நிலை உண்டு என்பதை மறுக்கும், மறைக்கும் ஆணவமான ஆணாதிக்க மனநிலையிலிருந்துதான் இப்படியொரு சட்டக்கூறு உருவாகியிருக்க முடியும் என்கிறார் உஜைனி.
சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவதன் மூலம் “பாலியல் தாக்குதலுக்கு இரையாகும் ஆண்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும்” இல்லாத நிலையே உருவாகும் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் சாராத ஆய்வாளர் மிகிர் ராஜாமனே.
ஆண் நெகிழ்பாலுறவாளர்கள்(Queer men) அல்லது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி சட்டத்தில் வெளிப்படையாக குறிப்பிட்டு, அதை சரிசெய்வதற்கான நடைமுறைகளை முன்வைக்கவில்லையெனில், பாலியல் குற்றங்களில் மற்றவர்களுக்கு கிடைக்கும் நீதியும், அதேபோன்ற சட்டப் பாதுகாப்பும் இவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.
“பெரும்பாலான பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராகவே நடக்கிறது என்பதை மறுக்கவில்லை; பாதிக்கப்படும் பெண்களும் நீதி கிடைக்காமல் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. எனினும், இதை வைத்து பாலியல் தாக்குதலுக்கு இரையாகும் நெகிழ்பாலுறவாளர்களையும், மூன்றாம் பாலினத்தவர்களையும் நாம் புறக்கணித்துவிட முடியாது,” என்கிறார் உஜைனி.
“பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மட்டுமல்லாது பல்வேறுபட்ட பாலினத்தவருக்கு எதிராகவும் நடக்கிறது என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க முன்வரவில்லை” என்கிறார் மிகிர் ராஜாமனே.
BNS சட்டத்தின் பொருள் வரையறை பிரிவில் மட்டும்தான் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது; வேறு எங்குமே அவர்களைப் பற்றிய குறிப்பு இல்லை என்கிறார் டெல்லியைச் சேர்ந்த முஷ்கன் திப்ரிவாலா. இது பற்றி அவர் குவிண்ட் பத்திரிக்கையிடம் பேசிய போது, “குறிப்பிடப்பெற்றிருப்பதுகூட இப்போதைக்கு வரவேற்கத்தக்க அம்சம்தான். ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதலுக்கு ஆளான ஆண்/மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒரு ஆண் வழக்கு தொடுப்பதற்கான உரிமையை BNS பறித்துவிட்டது” என்கிறார் அவர்.
இ.பி.கோ. சட்டப்பிரிவு 377-ல் இருப்பது போன்று “பாலின நடுவுநிலையை” BNS பின்பற்றவில்லை என்கிறார் முஷ்கன் திப்ரிவாலா.“ஒரினச் சேர்க்கையாளர்கள் உரிமை பற்றி” BNS கண்டும் காணாதது போல் இருப்பதாக கூறுகிறார்.
“ஓரினச் சேர்கை உறவுமுறைகளை சட்டப்பிரிவு 377 குற்றமாக கருதவில்லை. ஆனால், இரு ஆண்களுக்கிடையிலான/ இரு பெண்களுக்கிடையிலான உடலுறவை BNS சட்டம் அங்கீகரிக்க மறுப்பதோடு ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு இரையாகும் பெண்கள் பற்றி மட்டுமே பேசுகிறது… இருபாலினமய-ஆணாதிக்க கோட்பாட்டிலிருந்தே இதுபோன்ற நிலைப்பாடும் தோன்றுகிறது,” என்கிறார் வழக்கறிஞர் திப்ரிவாலா.
“இ.பி.கோ. சட்டப்பிரிவு 375-ல் பாலியல் குற்றங்கள் எவருக்கு எதிராக நடந்திருந்தாலும், யார் நடத்தியிருந்தாலும் அதை தண்டிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், BNS சட்டத்தில் ஆண் குற்றவாளியாகவும், பெண் பாதிக்கப்பட்டவராக இருக்கும்போது மட்டுமே பாலியல் குற்றங்களுக்கான நியாயம் கோர முடியும். அடிப்படையில், ஆண்-பெண் இணையரல்லாதவர்களுக்கிடையிலான பாலியல் உறவில் ஒருவருக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு இச்சட்டத்தில் நியாயம் கேட்பதற்கான வழிமுறையே இல்லை. உடல் ரீதியான தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால் அதற்கான சட்டப்பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கலாம், ஆனால் பாலியல் ரீதியிலான தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், குற்றம் செய்தவர் ஆணாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர் பெண்ணாகவோ இல்லாதபட்சத்தில் பாரதிய நியாய சஹ்கிதாவில் நியாயம் கோர முடியாது… ஒரு பெண் குற்றம் செய்பவராக இருந்து, பாதிக்கப்படுவது ஆணாக இருக்கிற போது பாரதிய நியாய சஹ்கிதா சட்டத்தின்கீழ் புகார்கூட அளிக்க முடியாது. உடல் ரீதியான தாக்குதல் நடந்ததாக கூறி மட்டுமே நாம் புகார் அளிக்க முடியும்.” என்கிறார் முஷ்கான் திப்ரிவாலா.
ஆண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு வழியென்ன?
சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டுவிட்டதால், ஆண் என்ற பாலின வகைமைக்குள் வராத குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு வழியமைத்து தந்துள்ளனர் என்பதே உஜைனியின் கருத்தாக உள்ளது. “இதனால் நிறைய குழப்பங்கள் ஏற்படுவது மட்டும் உறுதி” என்கிறார் உஜைனி சாட்டர்ஜி.
பாலியல் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படும் ஆண் நெகிழ்பாலுறவாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு மாற்று வழி என்ன இருக்கிறது? என்று LGBTQ+ பிரிவினரின் உரிமைக்காக இயங்கி வரும் “Yes, We Exist” என்ற தொண்டு நிறுவனத்தை தோற்றுவித்த ஜீத் கேள்வி எழுப்புகிறார். “இன்றைக்கு, இவர்களுக்கு ஏற்படும் பாலியல் தாக்குதலுக்கு எதிராக புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றால் எந்த சட்டத்தின் கீழ் இவர்களின் புகார் பதிவு செய்யப்படும்? சட்டப்பிரிவு 377-ல் இருந்த சட்டப் பாதுகாப்புகளை இப்போதுள்ள எந்த சட்டப் பிரிவிலும் பெற முடியவில்லை,” என்கிறார் ஜீத்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் நீதி கேட்க வேண்டுமெனில் BNS சட்டத்திலுள்ள பிற சரத்துகளை துணைக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் திப்ரிவாலா.
BNS சட்டத்தின்படி, உடல்ரீதியான தாக்குதலோடு பாலியல் வன்முறையும் ஏற்பட்டுள்ளதென்கிறபோது சட்டப்பிரிவு 114 முதல் 117 வரை உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். 114-காயம் ஏற்படுத்துதல், 115-வேண்டுமென்று தெரிந்தே காயம் ஏற்படுத்துதல், 116-கடுமையான காயம் ஏற்படுத்துதல், 117-வேண்டுமென்று தெரிந்தே கடுமையான காயம் ஏற்படுத்துதல் என்பன போன்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்காடலாம். இவற்றோடு கூடவே, சட்டப்பிரிவு 131(உயிருக்கு ஆபத்து ஏற்படாதநிலையிலும் பிறர்மீது தாக்குதல் தொடுப்பது அல்லது கொலைவெறியோடு தாக்குவதை தண்டித்தல்), சட்டப்பிரிவு 351(கொலை மிரட்டல்) போன்றவற்றை துனைக்கு கொண்டுவருவதன் மூலம் மட்டுமே வாதாட முடியும்,” என்கிறார் திப்ரிவாலா.
திப்ரிவாலா சொல்வதை ஒப்புக்கொண்டு உஜைனி சாட்டர்ஜி இவ்வாறு பேசினார்:
“சட்டப்பிரிவு 117(வேண்டுமென்றே கடுமையான காயம் ஏற்படுத்தல்), சட்டப்பிரிவு 126(சட்டவிரோதமாக சிறைவைத்தல், அடைத்து வைத்தல்), சட்டப்பிரிவு 137(பலவந்தமாக கடத்திச் செல்லுதல்), சட்டப்பிரிவு 138(நயவஞ்சகமாக கடத்திச் செல்லுதல்), சட்டப்பிரிவு 131-135(வன்முறைத் தாக்குதல்), சட்டப்பிரிவு 143(ஆள் கடத்தல்) போன்று உடல்ரீதியான தாக்குதலுக்கு தண்டனை வழங்கும் சட்டங்களை பயன்படுத்தியே நாம் வழக்காட முடியும்” என்று தி குவிண்ட் பத்திரிக்கையிடம் உஜைனி சாட்டர்ஜி கூறுகிறார்.
எனினும், “குற்றமும் அதற்கான தண்டனையின் கடுமையும் மேற்சொன்ன ஒவ்வொன்றிற்கும் மாறுபடுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் உஜைனி.
மூன்றாம் பாலினத்தவர்கள்(உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் கீழ் சட்டப் பாதுகாப்பு உண்டு என்பதை திப்ரிவாலாவும், ஜீத் அவர்களும் ஒப்புக்கொண்ட போதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையின் கடுமையளவிற்கு இல்லை என்றே கூறுகின்றனர்.
“மூன்றாம் பாலினத்தவர்கள் சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை வழங்க முடியும். ஆனால், இப்பிரிவின்கீழ் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரைதான் தண்டனை வழங்க முடியும்; இந்த தண்டனை அவ்வளவு கடுமையானதல்ல என்பதே இதிலுள்ள குறைபாடு” என்று திப்ரிவாலா கூறுகிறார்.
திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவை குற்றமாக்கும் விதிகளும் சேர்க்கப்படவில்லை
தங்களது மனைவியருடன் வாய் அல்லது ஆசன வாய் வழியாக, பலவந்தமாக உடலுறவு கொள்வதை சட்டப்பிரிவு 377 தண்டனைக்குரிய குற்றமாக கூறியது என்று தி குவிண்ட் பத்திரிக்கையிடம் பேட்டியளித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரோகின் பட் கூறினார்.
“தங்கள் கனவரால் வாய் அல்லது ஆசன வாய் வழியாக பலவந்தமாக உடலுறவுக்கு நிர்பந்திக்கப்பட்ட மனைவிகள் - திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவு குற்றமல்ல என்ற நிலையிருந்த போதிலும் - சட்டப்பிரிவு 377-ன் கீழ் நியாயம் கேட்டு பல வழக்குகள் தொடுத்துள்ளனர். ‘இயற்கைக்கு புறம்பான வழியில் உடலுறவு கொள்ளுதல்’ என்பதன் அடிப்படையில் இவை வருவதால் மனைவிகளால் வழக்கு தொடுக்க முடிந்தது,” என்கிறார் ரோகின் பட்.
BNS சட்டத்தில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவை குற்றமாக கருதும் விதிகள் உருவாக்கப்படவில்லை. “மனைவியுடனான - 15 வயது பூர்த்தியடைந்த மனைவியுடனான - உடலுறவில் ஈடுபடுவது வல்லுறவாக கருத முடியாது என்று இ.பி.கோ. சட்டப்பிரிவு 375ல்(திருமண உறவில் நடக்கும் பாலியல் வல்லுறவு) 2-வது விதிவிலாக்காக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் குற்றங்களை வரையறுத்து, அவற்றிற்கு தண்டனைகள் வழங்குவதற்காக 1960-ல் உருவாக்கப்பட்ட காலனிய கால இந்திய தண்டனை சட்டத்தொகுப்பிற்கு(இ.பி.கோ.) மாற்றாகவே BNS கொண்டு வரப்படுவதாக முதலில் பாஜக அரசாங்கம் சென்ற ஆண்டு ஆகஸ்டில் கூறியிருந்தது.
இதுவரையிலிருந்த இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான பல சட்டப் பாதுகாப்புகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 21, 2023ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற நிலையில், ஜீலை 1, 2024 முதல் அமலுக்கு வந்தது.
(வர்ஷா ஸ்ரிராம்)
(இந்த –தி குவிண்ட்–கட்டுரை முதலில் 18 ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்பட்டது. புதிய குற்றவியல் சட்டங்கள் ஜீலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்டு, மறுபடியும் வெயிடப்பட்டுள்ளது)
- விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு