36 சதவீத ஐஐடி (பாம்பே) பட்டதாரிகளே வேலை பெற முடியாமல் திண்டாட்டம்

தமிழில் : சகா

36 சதவீத ஐஐடி (பாம்பே) பட்டதாரிகளே வேலை பெற முடியாமல் திண்டாட்டம்

எவ்வளவுதான் உயர்தரமான, தலைசிறந்த கல்வி நிறுவனம் என்று சொல்லபட்டாலும், பம்பாயில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியில்(IIT) படித்து சமீபத்தில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகளில் 36 சதவீதம் பேர் உரிய வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் தவித்து வருவதாக சமீபத்திய செய்திகள் கூறுகின்றன. நிலவும் சமூக அமைப்பில் வேலை பெறுவதென்பது எந்தளவிற்கு கடினமானதாக மாறியுள்ளது என்பதையும், வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவது பற்றியும் இந்த ஒரு நிகழ்வு அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. 

செய்திச் சுருக்கம்:

லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்(IIM), இராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா உயர் கல்வி நிறுவினம்(BITS Pilani) வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதற்காக தங்களது கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்களிடமே உதவி கேட்கும் நிலைக்கு சென்றுள்ள செய்தி வெளிவந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் தற்போது பம்பாய் ஐஐடி பட்டதாரிகளில் 36 சதவீதம் பேர் உரிய வேலைவாய்ப்பை பெற முடியாமல் திண்டாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படித்த பட்டதாரிகளில் 29 சதவிதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுவதாக இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை(India Employment Report) வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

அதிகம் படித்த இளைஞர்களுக்கே, நிலவும் சமூக அமைப்பில் வேலைபெறுவது கடினமாக மாறியுள்ளது குறித்து பெரும் கவலைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன.

இன்றைய சமூக அமைப்பில் வேலை பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்ற விசயத்தை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டதென்றே சொல்லலாம். சில மாதங்களாகவே, உலகெங்கிலும் சில முன்னணி கம்பனிகள் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தன, புதிதாக தொழிலாளர்களை வேலைக்கெடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளன; மட்டுமல்லாது சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் இன்னும் பல வகையிலான சலுகைகளையும் பறித்து வருகின்றன.

ஐஐடி, ஐஐஎம், போன்ற கல்வி நிறுவனங்களில் படித்தாலே “நூற்றுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி” என்றவாறெல்லாம் தலைப்புச் செய்திகள் வெளிவந்து அனைவரின் கவனத்தை பெற்றுவந்தது ஒருகாலம் என்றால், இன்று பம்பாய் ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அங்கு படித்த 36 சதவீத மாணவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்தளவிற்கு தலைவிரித்தாடுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

மொத்தமாக 2000 பட்டதாரிகள் இந்தாண்டிற்கான(2024) வளாக நேர்காணலுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 712 பேருக்கு அதாவது 36 சதவீதம் பேருக்கு உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தேசிய அளவில் இந்திய அரசாங்கம் வெளியிடும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில்(NIRF) 2021, 2022-ம் ஆண்டுகளில் மூன்றாம் இடத்திலும், 2023-ம் ஆண்டில் நான்காம் இடத்திலும் பம்பாய் ஐஐடி இடம்பிடித்திருப்பது கவனிக்கவேண்டிய விசயமாகும். 

கைநிறைய சம்பளம் - பகல் கனவாக மாறுகிறதா?

உலகப் பொருளாதாரம் வீழ்ந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களால் முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகுப்பை ஏற்றுக்கொண்டு வருவதற்கு எந்தக் கம்பனியும் தயாரில்லை என்று இந்தஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பம்பாய் ஐஐடி கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

எங்கள் கல்லூரியில் மிக அதிகமாக தேர்வு செய்யப்படும் படிப்பாக கணினி அறிவியில் துறையும், பொறியியல் துறையும் இருந்து வருகிறது. வழக்கமாக இதில் சேர்ந்து படிக்கும் எல்லோருக்குமே வேலை கிடைத்துவிடும். முதல் முறையாக இந்த ஆண்டில்தான் 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை அடைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்று கல்லூரியைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

 இலட்சக் கணக்கில் சம்பளம் பெற்றுத் தருவது, கை நிறைய சம்பளம் பெற்றுத் தருவது என்ற நோக்கில் எங்கள் கல்லூரி செயல்படுவதாக கூறப்பட்டாலும், பல மாணவர்களின் தேவைகளுக்கும், எதிர்ப்பார்ப்புகளுக்கும் இந்த நோக்கம் ஒத்துப்போகவில்லை என்ற கவலைகளும் எழவே செய்கின்றன. ஒட்டுமொத்தமாக இவை வளாக நேர்காணலின் போது வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதில் பலதரப்பட்ட தடைகளை உருவாக்கிவிடுகிறது.

டிசம்பர் மாதத்தில் முதல் கட்டமாக நடந்த வேலைவாய்ப்புக்கான வளாக நேர்முகத்தேர்வில், தலா 85 மாணவர்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் வேலை கிடைத்திருப்பதாக அறிவிப்பு வந்தது. பின்னர், வெளிவந்த அறிவிப்பில், 22 பேருக்கு மட்டுமே இத்தகைய சம்பளத்துடன் வேலை கிடைத்திருப்பதாக மாற்றிக் கூறப்பட்டது. மே மாதம் 2024 வரை வேலைவாய்ப்புக்கான நடைமுறைகள் தொடரும் என்று கூறப்படுகிறது.

கல்லூரியின் சார்பில் பல கம்பனிகளை நேர்முகத் தேர்விற்கு அழைத்து வந்தாலும், அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் குறித்து பல மாணவர்கள் ஒருவித குழப்பமான நிலையையே எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இதில் துவக்கத்தில் கிடைக்கும் சில வேலைவாய்ப்புகளுக்கு மாறாக  வேறு வழிகளில் வேலைவாய்ப்புகளை தேடிக் கொள்வதற்கும் விரும்புவதாக கூறப்படுகிறது. 

கணிசமான கம்பனிகள் இயங்கும் நாடு எதுவோ அங்கிருந்தே தங்களுக்கான ஆட்களை பெற்றுக்கொள்ள விரும்புவதும், நிலவுகின்ற சந்தைத் தேவைகள் தொடர்ந்து மாறிவருவதாலும் வேலைப் பெற விரும்பும் மாணவர்களுக்கும், பணிவழங்கும் கம்பனிகளுக்கும் புதியப் புதிய சவால்களை உருவாக்கிவிட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மாறிவரும் நிலைமைகளையும், சவால்களையும் கணக்கில் கொண்டு, மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நிலவுகின்ற சமூக அமைப்பின் யதார்த்த நிலைமைகளோடு பொருந்திப் போகும் வகையிலான தீர்வுகளை கல்வி நிறுவனங்களும், கம்பனிகளும் ஒன்றுசேர்ந்து உருவாக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இந்தியா டுடே பத்திரிக்கை சார்பாக ஐஐடி பாம்பே நிர்வாகத்திடம் பேசுவதற்காக முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை.

சமூக ஊடகங்களில் இது பற்றி என்ன பேசப்படுகிறது

இந்தியாவிலேயே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனத்தில் ஒன்றான பாம்பே ஐஐடியில் சேர்ந்த மாணவர்கள், பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர் என்ற செய்தியைக் கேட்ட பலரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். X தளத்தில் உள்ள பயனர்கள் (முன்பு Twitter) இந்தச் சிக்கலைப் பற்றி விவாதித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்:

"இந்தியாவின் சிறந்த கல்லூரி ஒன்றிலிருந்து இப்பெடியொரு செய்தி வந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்தளவிற்கு மோசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது" என்று ஒரு பயனர் கூறினார்.

"இந்தியாவில் எத்தனைபேர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள் என்பதை யாராவது கணக்கெடுத்து வருகிறார்களா? வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு தகுதிபடைத்த அரசியல்வாதி யாராவது நம் நாட்டில் இருக்கிறார்களா?" என்றாவாறெல்லாம் எழுதி வருகின்றனர்.

"ஐஐடியில் சேர்ந்துவிட்டாலே வாழ்வில் வெற்றியடைவது/ வேலை பெறுவது உறுதி என்ற நிலை இருந்தது, ஆனால் இனி அப்படி இருக்கப்போவதில்லை" என்று ஒரு பயனர் குறிப்பிட்டார்.

“ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற கல்வி நிறுவனங்களில் நாம் எதை எதிர்ப்பார்க்க முடியும்” என்று ஒரு பதிவர் பின்னூட்டம் இட்டுள்ளார்.

"பாம்பே ஐஐடியில் பட்டம் பெற்ற பிறகும் வேலை கிடைக்காமல் திண்டாடுவதை கற்பனை செய்து பாருங்கள். நினைக்கும்போதே நடுக்கம் ஏற்படுகிறது! என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான பட்டாதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள்

மனிதவள மேம்பாட்டு நிறுவனமும், சர்வதேச தொழிலாளர் கழகமும் (ILO) சேர்ந்து மார்ச் 26 அன்று வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையின்(2024) படி, இப்பேதைய சூழலில் ஒரு வேலையைப் பெறுவதென்பது மிகக் கடினம் என்றும், அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகம் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதென்பது அதைவிட கடினமானதென்றும் கூறியுள்ளது.

ILO அறிக்கையின்படி, இந்தியாவில் பட்டதாரி இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 29.1 சதவீதமாக உள்ளது. மறுபுறம், கல்வி பயிலாதவர்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 3.4 சதவீதமாக உள்ளது. நீங்கள் ஒரு பட்டதாரியாக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது என்பதே இத்னமூலம் தெரிய வரும் செய்தியாகும்.

2022-ம் ஆண்டில், இந்தியாவில் வேலைத் தேடி அலைபவர்களில் 83 சதவீதம் பேர் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களாகவே இருந்துள்ளனர். இந்திய இளைஞர்கள் இப்போது அதிகம் படித்திருக்கிறார்கள், ஆனால் படித்த பெரும்பான்மையான இளைஞர்களுக்கு போதுமான வேலைகள் உருவாக்கப்படவில்லை.

இதன் காரணமாக முழு நேரமோ-அரைநேரமோ சமூக உற்பத்தியில் ஈடுபடும் இளைஞர்களின் (25 வயது வரை) (LFPR) எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இது 2000 ஆம் ஆண்டில் 54 சதவீதமாக இருந்ததென்றால் 2022-ல் 42 சதவீதமாக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் தத்தளிக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி ஒன்றும் முதல் நிறுவனம் அல்ல

நிலவும் சந்தை வாய்ப்புகளில் உரிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரமுடியாமல் தத்தளிக்கும் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் பாம்பே ஐஐடி ஒன்றும் முதல் நிறுவனம் அல்ல.

2024-ம் ஆண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு உதவிக் கரங்களை நீட்டுங்கள் என்று BITS Pilani கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் அக்கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பிரிவின் முதல்வர்(ஆரிய குமார்) கடந்த பிப்ரவரி மாதம் வேண்டுகோள் விடுத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று சமூக ஊடகத்தில் தீயாகப் பரவியது.

 

“தற்போதைய சூழலில் பொருளாதாரம் எந்தளவிற்கு வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதும், அதன் காரணமாக தொழில்களும், புதிதாக ஆட்களை தேர்வு செய்வதும்கூட எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்றொரு வீழ்ச்சியை உலகப் பொருளாதாரம் சந்தித்ததே இல்லை. தொழில்நுட்பம் சார்ந்து துறைகள்தான் இந்த வீழ்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அத்துறையில் மட்டும் ஜனவரி 2022-ம் ஆண்டில் தொடங்கி கிட்டத்தட்ட 4 இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர்.” என்று முன்னாள் மாணவர்கள் பிரிவு முதல்வரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

2022-23ம் கல்வியாண்டில் BITS Pilani கல்லூரியில் (இந்தியக் கிளை) பட்டம் பெற்ற 89 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்ற நல்ல செய்தி அந்தாண்டிற்கான இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகுதான் வேலைவாய்ப்புகள் கிடைப்பது பெருந் திண்டாட்டமாக மாறியது என்பதையும் ஆரிய குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்(ஜனவரி 2024ல்) மேலாண்மைப் துறையில் பட்டம் வழங்கும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனத்திலும்(லக்னோ ஐஐம்) இதே வழிமுறையில் முன்னாள் மாணவர்களிடம் வேலைவாய்ப்புகளுக்கான உதவியை நாடியுள்ளது.

முன்னாள் மாணவர்கள் நீட்டிய உதவிக் கரத்தின் மூலமாக மட்டும் இந்தாண்டில் பட்டம் பெற்ற 72 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர். நமது கல்வி நிறுவனத்தில் சேரும் எவருக்கும் 100 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்ற தொடர்கதை முற்றுபெற்றுவிடாமல் தக்க வைக்க உதவுங்கள் என்ற பெயரிலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“அருமை மாணவர்களே (2011-ம் கல்வியாண்டில் பட்டம் பெற்றவர்கள்)  

இச்செய்தி தங்கள் கவனத்திற்கு வந்துவிடும் என்று நம்புகிறோம். இந்தாண்டு படிப்பை முடித்து, வளாக நேர்காணலில் வேலை பெற முடியாமல்போன நமது மாணவர்கள் கவலை தீர்வதற்காகவே இந்தச் செய்தியைப் இங்கு பதிவிடுகிறோம். நம்மிடம், தொழில்திறமை வாய்ந்த 72 மாணவர்கள் வேலைவாய்ப்பு நாடி நிற்கிறார்கள். 2011-ம் ஆண்டில் பட்டம்பெற்ற முன்னாள் மாணவர்கள் இவர்களுக்கு வேலைப் பெற்றுத் தர உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

- சகா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.indiatoday.in/education-today/news/story/concerns-mount-as-iit-bombay-left-with-36-graduates-without-job-offers-2522872-2024-04-03

Disclaimer: இந்த தொகுப்பு கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு