ஸ்டாலின் பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு அழைத்தபோது

அது நமது சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றும் ஆற்றல் பெற்றிருந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஸ்டாலின் பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு அழைத்தபோது

சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் பகத்சிங்கிற்கு அனுப்பப்பட்ட "அழைப்பு" இந்திய புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றில் பெரிதும் அறியப்படாத ஒன்று. இந்த அழைப்பு சிங்கை சென்றடையவில்லை,  அது பெறப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வரலாற்றாசிரியர்கள் ஊகிக்க முடியும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருந்தால், அது நமது சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றும் ஆற்றல் பெற்றிருந்தது என்பதில் சந்தேகமில்லை.

பகத்சிங்கையும் ஸ்டாலினையும் இணைத்தவர் 1920ல் தாஷ்கண்டில் நிறுவப்பட்ட நாடுகடந்த (emigre) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான சௌகத் உஸ்மானி. அவர் இந்திய தேசியவாதிகளிடம் தொடர்பை உருவாக்கி கொள்ள எம்.என்.ராயால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1920 களில் கான்பூரில் பிரசுரமாகிய பிரதாப் (ஹிந்தி) நாளிதழின் பிரபல ஆசிரியர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மூலம் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டார்.

பகத்சிங் பிரதாப்பில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் உஸ்மானியின் அரசியல் மற்றும் பயண நினைவுக் குறிப்பான "பெஷாவர் டு மாஸ்கோ: ஒரு இந்திய முஹாஜிரீன் டைரியின் பக்கங்கள்" கட்டுரைக்கு மதிப்புரை வழங்கினார். உஸ்மானி கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும், ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் தொடர்பினால், அவர்களின் செயல்பாடுகள் குறித்து கோமின்டெர்னுக்கு (கம்யூனிஸ்ட் அகிலம்) தெரிவித்து வந்தார்.

1928 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரசுக்கு உஸ்மானி செல்லவிருந்தபோது, பகத்சிங்கையும் அவரது நெருங்கிய கூட்டாளியான பெஜோய் குமார் சின்ஹாவையும் சோவியத் யூனியனுக்கு வருமாறு அழைத்தார். இந்த சம்பவம் குறித்து உஸ்மானி எழுதினார், “சர்தார் பகத் சிங்கை நான் எப்போது முதலில் சந்தித்தேன் என்பது இப்போது எனக்கு சரியாக நினைவில் இல்லை. நான் அவரை லாகூரில் அல்லது கான்பூரில் சந்தித்தேன்... அந்த நேரத்தில் [இந்துஸ்தான் குடியரசுக் கட்சி] HRA என்பது HSRA [இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சி] ஆக மாற்றப்பட்டது. இந்த புதிய அமைப்பு கம்யூனிஸ்ட் அகிலத்துடன் செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டது. தனிநபர்களின் ஆயுதமேந்திய நடவடிக்கைகளை கைவிடுவதற்கு முன், அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ள சில முக்கியமான செயல்களை ஒழுங்கமைப்பார்கள் என்று தெரிவித்தேன்... நான் பெஜாய் பாபுவிடம் (பிஜாய் குமார் சின்ஹா), 'வாருங்கள், மாஸ்கோவுக்குச் செல்லலாம்' என்று சொன்னேன். பகத் சிங் மற்றும் பெஜாய் சின்ஹாவின் மாஸ்கோ பயணம் சோவியத் யூனியனினடமிருந்து  ஆயுத உதவி பெற வாய்ப்பளிக்கும் என நான் நம்பினேன்.

பெஜோய் குமார் சின்ஹா பகத்சிங்குடன் இணைந்து HSRAவின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளராக இருந்தார். அவர் சோவியத் யூனியனில் புதிய மனிதன் என்ற புத்தகத்தில் உஸ்மானியின் அழைப்பை உறுதிப்படுத்துகிறார். அவர் எழுதுகிறார், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியான ஷௌகத் உஸ்மானி, கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாட்டில் பங்கேற்க மாஸ்கோவிற்குச் செல்லவிருந்தார், என்னையும் என் கூட்டாளிகளையும் புரட்சிகர இயக்கத்தின் பிரதிநிதிகளாக சோவியத் யூனியனுக்குத் தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பை பகத்சிங்கிடம் விவாதித்தேன், இது சரியான நேரம் அல்ல என்றும், எங்கள் திட்டங்களை நிறைவேற்றியவுடன் மாஸ்கோ செல்வது என்றும் முடிவு செய்தோம்.

உஸ்மானி, பகத் சிங் மற்றும் சின்ஹா ஆகியோரை சோவியத் யூனியனுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்பதை, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான முசாபர் அகமதுவும் உறுதிப்படுத்துகிறார். அகமது தனது சுயசரிதையான மைசெல்ஃப் அண்ட் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியாவில், உஸ்மானி மற்றும் சின்ஹாவின் சந்திப்பைப் பற்றி குறிப்பிடுகிறார். உஸ்மானிக்கு சின்ஹா பயணசெலவுக்காக ரூ.200 கொடுத்ததாகவும், உஸ்மானி சோவியத் யூனியனின் நிதி உதவியை பெற்று தருவதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறுகிறார்.

உஸ்மானி அடுத்ததாக 1928 இல் சோவியத் யூனியனுக்குச் சென்றார், அங்கு அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஆறாவது காங்கிரஸ் கவுன்சில் அவையில் சேர்க்கப்பட்டார். இந்த மாநாடு 17 ஜூலை 1928 ல் தொடங்கி 1 செப்டம்பர் 1928 ல் முடிவடைந்தது. காலனிய பிரச்சினையை பற்றி  விவாதிக்கப்படும்போது HRA இன் செயல்பாடுகளையும்  காங்கிரஸ் குறிப்பிட்டது ஆர்வமூட்டியது. இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற முதலாளித்துவக் கட்சிகளின் தோல்விக்கு மாற்றாக HRA இன் எழுச்சியை அது அங்கீகரித்தது. (காங்கிரஸ் ஒரு தீவிர குட்டி-முதலாளித்துவக் கட்சியாகத் தொடங்கியது, ஆனால் போராட்டம் தொடர்ந்தபோது, அது முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் கட்சியாக மாறியது) 

“... இந்தியாவில் காந்தியவாத இயக்கங்கள் போன்ற இயக்கங்கள்... முதலில் தீவிரமான குட்டி முதலாளித்துவ சித்தாந்த இயக்கங்களாக இருந்தன, இருப்பினும் அவை பெரும் முதலாளித்துவத்திற்கு செய்த சேவையின் விளைவாக, முதலாளித்துவ தேசியவாத-சீர்திருத்த இயக்கமாக மாற்றமைடந்தன. இதற்குப் பிறகு, இந்தியாவில்... பல்வேறு குட்டி முதலாளித்துவக் குழுக்களில் (எ.கா. குடியரசுக் கட்சி...) இருந்து மீண்டும் ஒரு தீவிரப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது, இது ஏறக்குறைய திடமான தேசிய-புரட்சிகரக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது." என்று அகிலம் குறிப்பிட்டது.

துரதிர்ஷ்டவசமாக, உஸ்மானி மாஸ்கோவிலிருந்து திரும்பியவுடன், மார்ச் 1929 இல் தொடங்கிய மீரட் சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே, பகத் சிங்கும் அவரது தோழர்களும் 1928 டிசம்பரில் ஜான் சாண்டர்ஸை படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்தனர். மீரட் சதி வழக்கு தொடங்கிய பிறகு, தொழிலாளர் விரோத பொதுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக தகராறு மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் (HSRA சார்பில்) பகத் சிங்கும் பி.கே. தத்தும்  நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசியதற்காக கைது செய்யப்பட்டனர்.

குறிப்பிடத்தக்க வகையில், நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசும் முடிவிற்கு முன்பே, பகத் சிங் (ஏற்கனவே லாகூர் சதி வழக்கில் தலைமறைவாக இருந்ததால்) சோவியத் யூனியனுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தை HSRA தலைவர்கள் கொண்டிருந்தனர். வேறு சில புரட்சியாளர்கள் குண்டு வீசுவது என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், பகத் சிங்கால் கட்சியின் கருத்தை நீதிமன்றத்திலும் பத்திரிகைகளிலும் சிறந்த முறையில் முன்வைக்க முடியும் என்ற சுகதேவின் முன்மொழிவை அனைவரும் ஒப்புக் கொண்டதால், அப்பணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். உஸ்மானி கைது செய்யப்பட்டு விட்டதால், சோவியத் யூனியனில் இருந்து வந்த செய்தி HSRA உறுப்பினர்களை சென்றடையவில்லை. பிந்தைய காலத்திலும் கூட ஸ்டாலின் அந்த செய்தியை பகத் சிங்கிடமோ  HSRAவிடமோ  அவரால் தெரிவிக்க முடியவில்லை.

பின்னர், புது தில்லியில் பிரசுரமாகிய நை ஜமீன் (இந்தி) இதழில் உஸ்மானி எழுதிய கட்டுரையில், அவர் இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, ஸ்டாலின் பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு அழைத்து வருமாறு தன்னை கேட்டுக் கொண்டார் என்று எழுதினார். உஸ்மானியின் கூற்றுப்படி, ஸ்டாலினின் வார்த்தைகள், "பகத்சிங்கை மாஸ்கோவிற்கு வரச் சொல்லுங்கள்."

இப்போது எழும் கேள்வி, ஸ்டாலினுக்கு பகத்சிங்கை எப்படித் தெரிந்தது?

பகத் சிங்கின் மருமகளும், அவரின் சரிதையை எழுதியவருமான வீரேந்தர் சிந்துவின் கூற்றுப்படி, பஞ்சாபில் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிய பாபா சந்தோக் சிங் மற்றும் பாபா குர்முக் சிங் ஆகிய இரண்டு கெதர் இயக்கத்தினர் மூலம் ஸ்டாலினும் அகிலமும் பகத்சிங்கைப் பற்றி அறிந்திருக்கலாம். அவர்கள் பகத்சிங்கை தங்கள் தொழிலாளர் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளவும் முயன்றனர்.

இருப்பினும், பகத்சிங் மீதும் இந்தியப் புரட்சி இயக்கத்தின் மீதும் ஸ்டாலின் காட்டிய ஆர்வம், இந்தியா மற்றும் சீனா போன்ற காலனிகளில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்களின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்கள் குறித்து ஆறாவது காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் விளைவாகவும் இருக்கலாம். கம்யூனிஸ்ட் அகிலம் ஏற்கனவே ஹிந்துஸ்தான் குடியரசுக் கழகத்தைப் பற்றி அறிந்திருந்ததோடு  (தேசிய சீர்திருத்தவாதிகளுக்கு தலைமையான) காங்கிரசுக்கு மாற்றாக (குட்டி முதலாளித்துவ தலைமையிலான) இதை தேசிய புரட்சிகர அமைப்பாகக் கருதியது.

ஆறாவது காங்கிரஸ் காலனிகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரங்களில் தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தது.  இந்த  காங்கிரசில், காலனித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் "அனைத்து குட்டி முதலாளித்துவ குழுக்கள் மற்றும் கட்சிகளிடமிருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தொடக்க நிலையிலிருந்தே மிகத் தெளிவான முறையில் தங்களைத் தாங்களே வரையறுத்துக் கொள்ள வேண்டும்" என்று முன்மொழிந்தது.

எவ்வாறாயினும், குட்டி முதலாளித்துவத்தின் தலைமையிலான தேசிய-புரட்சிகரக் கட்சிகளைப் பொறுத்தவரை, ஆறாவது காங்கிரஸ், "[தேசியப் புரட்சிகர இயக்கங்கள்] உண்மையான புரட்சிகர இயக்கமாக இருந்தால், ஆளும் சக்திக்கு எதிராகவும், அதன் பிரதிநிதிகளுக்கெதிராகவும் அது உண்மையாகப் போராடினால், (விவசாயிகளையும்  சுரண்டலுக்குள்ளாகும் பரந்துபட்ட மக்களையும் புரட்சிக்கு அணிதிரட்டுவதற்கு தடைகளை ஏற்படுத்தாதவாறு) அவர்களுடன் தற்காலிக தொழிற்சங்க அல்லது ஒத்துழைப்பு இயக்கங்களை சாத்தியமாக்க வேண்டும்" என்று கூறியது. 

HRA வானது  HSRA வாக மாறியது பற்றியும், அலு சோசலிசத்தின் இலக்குகளுக்காக உழைக்க முடவெடுத்தது பற்றியும் உஸ்மானி அறிந்திருந்ததார், இதுவே பகத் சிங் குறித்து கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக் குழுவிடமும்  ஸ்டாலினிடமும் ஆர்வத்தைத் தூண்டியது.

லாகூர் சதி வழக்கில் பகத் சிங் மற்றும் சின்ஹா கைது செய்யப்பட்ட பிறகு, HSRA கெதர் கட்சியின் மூத்த தலைவர் பிருத்வி சிங் ஆசாத்தை சித்தாந்த மற்றும் இராணுவப் பயிற்சிக்காக சோவியத் யூனியனுக்கு அனுப்ப முடிவு செய்தது, ஆனால் ஆசாத் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. எனவே, HSRA அவருக்குப் பதிலாக சுரேந்திர பாண்டே மற்றும் யஷ்பால் (பின்னாளில் ஹிந்தி நாவலாசிரியரானவர்) ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது. இருப்பினும், பிப்ரவரி 1931ல் கட்சியின் தளபதி சந்திரசேகர் ஆசாத்தின் திடீர் மரணம் அதன் திட்டங்களை தோல்வியடையச் செய்தது.

சில மாதங்களில் யஷ்பாலும் கைது செய்யப்பட்டார், இறுதியில் பாண்டேயும் சிறையில் அடைக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட பிறகு, பாண்டே கான்பூரில் HSRA ஐ புதுப்பிக்க முயன்றதோடு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றினார். நீதிமன்றத்திலிருந்து, பகத் சிங்கும் அவரது தோழர்களும் 21 ஜனவரி 1930 அன்று லெனினின் நினைவு நாளில் தங்கள் மரியாதை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு ஒரு தந்தி அனுப்பினார்கள்.

HSRA உறுப்பினர்கள் சோவியத் யூனியனுக்குச் செல்ல முயன்றாலும், பயணத்திற்கான சூழல் அமையவில்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகுதான் பெஜோய் குமார் சின்ஹா சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்ய முடிந்தது.

- வெண்பா

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://senthalam.com/en/513