மேம்பாடு எனும் பெயரில் இந்திய பாதுகாப்புத் துறையை இஸ்ரேல் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடும் மோடி அரசு

தமிழில் : வெண்பா

மேம்பாடு எனும் பெயரில் இந்திய பாதுகாப்புத் துறையை இஸ்ரேல் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடும் மோடி அரசு

அதானியின் ஆயுததளவாட நிறுவனம் இஸ்ரேலிய முன்னணி நிறுவனத்துடன் கூட்டு: எல்பிட் சிஸ்டம்ஸ் அதர்வாவின் 44% பங்குகளை வாங்கியுள்ளது

இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை உயர்த்துவதற்கான யுத்ததந்திர நடவடிக்கையின் பேரில் புகழ்பெற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் லிமிடெட், அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் (ADSTL) துணை நிறுவனமான அதர்வா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் 44% பங்குகளை வாங்குவதன் மூலம் கூட்டு சேர்ந்துள்ளது. உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சியில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் ஹைஃபாவைச் சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ், தரை, வான் மற்றும் கடல்சார் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதிலும் உற்பத்தி செய்வதிலும் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது. ஆளில்லா போர் விமானங்கள் (யுஏவி), போர்க்கால எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்றவற்றில் அவர்களின் நிபுணத்துவம் அதர்வாவுக்கு செல்வாக்காக அமையும். அது இந்திய பாதுகாப்புத்துறையின் தயார்நிலைக்கும் உதவும்.

அதானி டிஃபென்ஸ், ஏற்கனவே இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் தன்னை முன்னணி தனியார் நிறுவனமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அது ஏற்கனவே ஆயுத உற்பத்தி மையம், UAV உற்பத்தி மையம் ஆகியவற்றை நிறுவியுள்ளது. தற்போது நாக்பூரில் பரந்த அளவிலான விமான பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கு (MRO) வசதியை முதன்முறையாக இந்தியாவில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதானி டிஃபென்ஸ் மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் இடையேயான இந்த கூட்டு இந்திய அரசுக்கு முக்கிய பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை எளிதாக்கும், வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும். மேலும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வேலைத்திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும். அதோடு இந்திய அரசின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.

ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ளும் அமைப்புகளின் மேம்பாடு குறிப்பாக கவனம் செலுத்த வேண்டிய பகுதியாகும். ட்ரோன் தாக்குதல்களால் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் அதற்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கிடையே அவசியமாக்குகிறது. இவ்வகையில் அதானி டிஃபென்ஸ் மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸின் கூட்டு முக்கியமானதாகிறது.

அதர்வா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 44% பங்குகளை எல்பிட் சிஸ்டம்ஸ் வாங்கியதானது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சுயசார்புக் கொள்கையில் முக்கிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த யுத்தத்தந்திர கூட்டு இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், அத்துறையில் உலகளவில் முன்னணியாக விளங்கவும் மகத்தான ஆற்றலை பெற்றுள்ளது.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://idrw.org/indian-defence-giant-adani-partners-with-israeli-expertise-elbit-systems-acquires-44-stake-in-atharva-advanced-systems/