மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீதான மோடி கும்பலின் பாசிச ஒடுக்கு முறையை எதிர்ப்போம்!!
செந்தளம் செய்திப் பிரிவு
மோடி கும்பலின் புதிய பாராளுமன்றம் சாமியார்கள், மடாதிபதிகள் புடைசூழ திறக்கப்பட்டது. அது பாராளுமன்றமா? காவி கும்பலின் சாமியார் மடமா என அனைவரையும் எண்ண வைத்தது! காவி'மட' கும்பல்கள் கொடுத்த செங்கோலைப் பெற்றுக்கொண்டு, மோடி தனது செங்கோல் நீதியை டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்தே துவக்கி வைத்தார். பாஜக அமைச்சர் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தை வன்முறை கொண்டு ஒடுக்கியது மோடி கும்பல். மூவர்ண கொடியேந்தி இந்த நாட்டிற்கு பதக்கங்களை பெற்றுத்தந்த மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மீதான இந்த பாசிச ஒடுக்குமுறை நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எதிராக பூஷனை கைது செய்ய வேண்டுமென்று ஜந்தர்மந்தரிலேயே குடில் அமைத்து தொடர்ந்து போராடி வந்தனர். போராட்டம் நடத்திய வீராங்கனை மற்றும் வீரர்களோடு மோடி அரசு எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை. பூஷனை காப்பாற்றும் வேலையையேசெய்து வந்தது. இந்த பூஷன் மீது ஏற்கனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கு உள்ளிட்ட திருட்டு, கலவரம், கொலை, கிரிமினல் சம்பவம், கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இருப்பதற்கான தகுதிகளே இவைதான் போலும்.
பூஷனுக்கு எதிராக போராடி வந்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற 'மட' திறப்பன்று, தங்களுக்கான நீதிகேட்டு புதிய பாராளுமன்ற பாசிச மடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கவும், மோடி அரசு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தது. இந்த நாட்டிற்காக பதக்கம் வென்று தந்தவர்கள் மீது கலவர வழக்கையும் பதிவு செய்தது.
கிட்டத்தட்ட ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய 109 பேர் உள்ளிட்ட டெல்லி முழுவதும் 700 வீராங்கனைகள் வீரர்களை கைது செய்தது.
இந்நிகழ்வு குறித்து பாஜகவின் ஆதரவாளரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஸ்தானா தேவைப்பட்டால் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவோம் என்றும் இப்போது அவர்கள் குப்பையைப் போல இழுத்து எறியப்பட்டதாகவும், பாஜக அரசின் நிலைபாட்டினை வெளிப்படையாகக் கூறினார். இந்த அதிகார வர்க்க ஆணவ போக்கிற்கு எதிராக வீரர் வீராங்கனைகள் கொந்தளித்தனர். இதற்கு எதிராக எதிர்வினை ஆற்றிய வீரர் பஜ்ரங் புனியா "தோட்டாக்களை ஏந்துவதற்கு எங்கே வர வேண்டும் என சொல்லுங்கள் நான் முதுகை காட்ட மாட்டேன் என் மார்பில் ஏந்துவேன்" என பதிலுரைத்தார்.
மேலும் கைது செய்யப்பட்டு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட வீரர் ஒருவர், "பார்த்தீர்களா ஒரு ஜனநாயக நாட்டில் எங்களால் போராட்டம் நடத்த முடியவில்லை, இங்கு நடந்திருப்பது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவது போன்றது" எனக் கூறி ஒட்டுமொத்த போராட்டக்காரர்களின் எண்ண ஓட்டத்தை பதிவுசெய்தார்.
இது மோடி அரசின் முகத்திரையை கிழித்து எறிந்த சொற்களாகும்.
போராட்டக்காரர்களை ஜந்தர் மந்தரிலிருந்து விரட்டி அடித்து அவர்களது குடில்களையும் சூறையாடிய காவல்துறை ஒரு வழியாக வீரர் வீராங்கனைகளை போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, இனி போராட அனுமதி மறுத்தும் அறிவித்துள்ளது. ஆனால் மோடி அரசின் மீது நம்பிக்கையிழந்த வீரர் வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் எறிவதாக அறிவித்து ஹரித்துவார் நதிக்கரை வந்தவர்களிடம் விவசாய சங்கங்கள் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டு பிரச்சனையை தீர்க்க மோடி அரசுக்கு 5 நாள் கெடு விதித்துள்ளது.
பாசிச மோடி கும்பல் நாட்டுமக்கள் அனைவரின்மீதும் பாசிச ஒடுக்குமுறைகளை ஏவி வரும் நிலையில் தலைநகரில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீதான பாசிச ஒடுக்கு முறைக்கு எதிராகவும் பா.ஜ.க எம்பி பிரிஜ் பூசன் சிங் உள்ளிட்ட கயவர்களை கைது செய்ய கோரி நடத்தும் வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அனைத்து தரப்பு மக்களும் குரல் கொடுப்போம்! ஆதரவாக போராடுவோம்!
- செந்தளம் செய்திப்பிரிவு