ஐயப்பன் மாநாடு: இந்துத்துவ பாசிசத்திற்கு காவடி தூக்கும் கேரள சிபிஎம் அரசு!

செந்தளம் செய்திப்பிரிவு

ஐயப்பன் மாநாடு: இந்துத்துவ பாசிசத்திற்கு காவடி தூக்கும் கேரள சிபிஎம் அரசு!

இன்று (20.09.2025) உலக ஐயப்பன் மாநாடு (Agola ayyappa sangamam) கேரள மாநிலம் பம்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டினை கேரள சிபிஎம் அரசு திருவிதாங்கூர் தேவஸ்தான அறக்கட்டளையுடன் இணைந்து நீண்ட கால தயாரிப்புடன் நடத்தியுள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்க விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளுக்கும், பல்வேறு சாதி சங்கங்களுக்கும், கேரள நிலவுடமையாளர்களுக்கும், பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட்களுக்கும் ஐயப்ப பக்தர்கள் எனும் பெயரில்  3000க்கும் மேற்பட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிந்தது. 

பாஜகவும் மாநில எதிர்கட்சியான காங்கிரசும் இந்த அழைப்பை நிராகரித்திருந்த நிலையில் இதனை சிபிஎம்-ன் தேர்தல் அரசியலுக்கான நாடகம் என்றும் விமர்சித்திருந்தன. விஷ்வ ஹிந்து பரிஷத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளது. திமுகவின் மு.க.ஸ்டாலின் பங்கெடுப்பதாக முதலில் பேசப்பட்டிருந்த சூழலில் கேரள பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், மு.க.ஸ்டாலின் தனக்கு பதிலாக இந்து அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபுவையும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பி.டி,பி. தியாகராஜனையும் அனுப்பி வைத்துள்ளார். 

பூஜை புனஷ்காரங்களுடன் கோலாகலமாக துவங்கிய மாநாட்டில் பினராயி விஜயன் உள்ளிட்ட கேரள அமைச்சரவையும் திருவிதாங்கூர் தேவஸ்தான அறக்கட்டளை நிர்வாகிகளும் மட்டுமில்லாமல் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP), நாயர் சேவை சங்கம் (NSS) உள்ளிட்ட பல்வேறு ஆதிக்க சாதி சங்கங்களும் பங்கேற்றன. இந்த சாதி சங்கத் தலைவர்கள் பேசுகையில் பினராயி விஜயன் ஓர் உண்மையான ஐயப்பப் பக்தர் என புகழ்மாலை சூட்டினர். திமுக அமைச்சர் பிடிபி தியாகராஜனோ ஐயப்பனுக்கு  மாலை அணிந்து பக்தி பரவசத்துடன் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்பி ஐயப்ப மாநாட்டை வணங்கியுள்ளார். உத்திர பிரதேச முதல்வரான ஆர்.எஸ்.எஸ். சாமியார் யோகி ஆதித்யநாத், இந்த மாநாட்டை வாழ்த்தி ஆசி அனுப்பியதுடன். மாநில பாஜகவினரும், விஷ்வ ஹிந்து பரிஷத்தும் இந்த மாநாட்டை நிராகரித்திருக்கக் கூடாது பங்கேற்றிருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். மேலும்,  பினராயி விஜயன் பகவத் கீதையை மேற்கோள் காட்டி பேசியதோடு பகவத் கீதையும் சபரிமலை ஸ்தல வரலாறும் சமத்துவத்தை போதிப்பதாக உருகினார்.

ஐயப்பனை கேரளாவின் வழிபாட்டு அடையாளமாக – இந்துத்துவ பாசிச அடையாளமாக நிறுவுவதில் இவர்களின் ஒன்றுகுலாவுதல் இவ்வாறு இன்று வெளிப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமன் என்றால் தமிழகத்தில் முருகன், ஒரிஸ்ஸாவில் பூரி ஜெகன் (சிவன்) என்றால் கேரளாவில் ஐயப்பன் என மதவாத அடையாளங்களை பாசிசத்தின் வடிவமாக இவர்கள் பாஜகவுடன் கைக்கோர்த்து கட்டியமைத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நிதிமூலதன ஆதிக்க சேவகர்களே! இவர்கள் அனைவரும் ஆளும் வர்க்கக் கூட்டுகளின் பல்வேறு பிரதிநிதிகளே! ஆனால் எதிர் எதிர் அணிகள் போல நாடகமாடி மக்களை ஏமாற்றுகின்றனர்.   

பம்பையில் உள்ள ஐயப்பன் கோவிலின் கட்டுமானங்களை மேம்படுத்த சுமார் 1034 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது கேரள சிபிஎம் அரசு. முதல் கட்டமாக ரூ.600 கோடியை உடனடியாக ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகள் துவங்க டெண்டர் விடப்படும் எனும் அறிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், டிரோன் கண்காணிப்பு என அதி நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐயப்பன் கோவிலை உலகளாவிய வழிபாட்டுத் தளமாக மாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளது. இவை இல்லாமல் ஆன்மீக சுற்றுலாவை வளர்த்தெடுத்தல், ஈகோ  – டூரிஸம், ரயில்பாதைகள் அமைத்தல், விமான நிலையம் அமைத்தல் உள்ளிட்டவற்றையும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது கேரள சிபிஎம் அரசு.

மத்திய பாஜக அரசின் இந்துத்துவ பாசிசத்திற்கு வால் பிடித்துக் கொண்டு தமிழக திமுக அரசு முருகன் மாநாட்டை இந்த ஆண்டின் துவக்கத்தில் நடத்தியது போல, கேரள சிபிஎம் அரசு ஐயப்பனை கையில் எடுத்துள்ளது. இதற்கு அங்குள்ள மாநில தரகு முதலாளித்துவ கும்பல்களுடனும், நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்திகளுடனும், சாதிவெறி சங்கங்களுடனும் கைக்கோர்த்துள்ளது கேரள சிபிஎம் அரசு. 

ஒரு ஜனநாயக அரசு எனில் மதம் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறது மார்க்சியம். கொள்கை அளவிலான மதச்சார்பற்ற ஜனநாயக அரசை கூட தாங்கள் ஆளும் மாநிலத்தில் வழங்கமுடியவில்லை தேர்தல் பாதையில் சீரழிந்த இந்த சிபிஎம் கட்சியால் - இதுதான் இன்றைய அதன் அவலநிலை. உதட்டில் ஜோசப் ஸ்டாலின் உள்ளத்தில் அதானி என்று கார்ப்பரேட் சேவை செய்தவர்கள் இன்று அடுத்தக் கட்ட பிற்போக்கை எட்டி பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்திற்குப் பதிலாக ஐயப்பனுக்கு ஹரிவராசனம் பாடத் துவங்கிவிட்டனர் என்பதுதான் கொடுமையான விசயம்.

பாசிசத்தின் வர்க்க அடித்தளத்தில்  மட்டுமின்றி, அதன் வடிவத்திலும் கூட ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பலின் கொள்கையை பின்பற்றுகிறது கேரள சி.பி.எம் அரசு. அதாவது அதானிக்கு பாத பூஜை செய்வது மட்டுமின்றி, இந்துத்துவ பாசிசத்தையும் முன்னெடுத்துள்ளது கேரள CPM அரசு. அக்கட்சியின்  சிவப்பு வேசம் கலைந்து காலப்போக்கில் காவியாகி விட்டது அப்பட்டமாக தெரிகிறது. பாராளுமன்றவாத கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என  மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது. 

பாஜகவுக்கு திமுக அரசு  மட்டுமல்ல, சி.பி.எம் அரசும் கூட மாற்றல்ல என்பதையே அது  நடத்தியுள்ள ஐயப்பன் மாநாடு பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளது.  

- செந்தளம் செய்திப் பிரிவு