உள் இடஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: ஆதரவும் எதிர்ப்பும்!!

செந்தளம் செய்திப்பிரிவு

உள் இடஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: ஆதரவும் எதிர்ப்பும்!!

தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடியின (ST) மக்களிடையில் சமூக-பொருளாதார, கல்வி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாவதால் இப்பட்டியலில் உள்ளவர்களை துணை வகைப்படுத்துவதன் (sub-classification) மூலம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஆகஸ்ட் 1 அன்று தீர்ப்பளித்திருந்தது. 

தீர்ப்பின் சாராம்சத்தை பின்வருமாறு கூறலாம்

தாழ்த்தப்பட்ட சாதிகளிடையில் ஒப்பீட்டளவிலான பின்தங்கிய நிலை இருப்பதாலும், முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது அவசியமாகிறது. SC, ST இடஒதுக்கீட்டிலும் பொருளாதார அளவுகோலை கொண்டு மதிப்பிடும் செழுமை அடுக்கினரை விலக்கி வைக்க வேண்டும் என்று 7ல் 4 நீதிபதிகள் கருத்துரைத்துள்ளனர். 

தாழ்த்தப்பட்ட சாதிகளில்கூட வேறுபட்ட அளவிலான தீண்டாமைக் கொடுமைகளையே அனுபவித்து வந்துள்ளனர் என்பதாலும், சமூக-பொருளாதார அளவிலும், கல்வியிலும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே உருவாகியிருப்பதாலும் பட்டியல் சாதிகளை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொதுவான அடிப்படையை மட்டும் கணக்கில் கொண்டு ஒரே வகையினமாக (Homogenous category) கருதமுடியாது " . 

அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 16-ல் குறிப்பிடப்படும் ‘அரசு’ என்பது மாநில அரசையும் சேர்த்துத்தான் கூறுகிறது. எனவே, போதுமான பிரதிநிதித்துவம் பெறப்படுவதை உறுதிபடுத்துவதற்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசிற்கு உரிமையுள்ளது. ஆனால், இது பட்டியலில் உள்ள சாதிகளை நீக்குவதற்கோ, புதிதாக சேர்ப்பதற்கோ மாநில அரசிற்கு உரிமையில்லை என்பதையும் சேர்த்தே கூறுகிறது.

‘பின்தங்கிய வகுப்பினரை’(backward class) அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பது பற்றி அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 16(4) பேசுகிறது. அவ்வகையில், தாழ்த்தப்பட்ட சாதிகளிலுள்ளவர்களில் பின்தங்கியிருப்பவர்களை தனி வகுப்பாக(class) கருதி அவர்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை அரசுகள் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உள் இடஒதுக்கீட்டின் வரலாறு: ஒரு சுருக்கம்

2000-ம் ஆண்டு ஆந்திராவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு மறுசீரமைப்பு சட்டமே இந்தத் தீர்ப்பின் துவக்கப் புள்ளியாக பார்க்கப்படுகிறது. 1970-களிலிருந்தே ஆந்திராவிலுள்ள பட்டியல் சாதியில் தனிப்பெரும் சாதியாக சொல்லப்படும் மாதிகா(Madiga) மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் போதுமானளவு கிடைக்கப் பெறவில்லை என்ற கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 80-களின் துவக்கத்தில் மண்டகிருஷ்ண மாதிகா என்பவர் உள்ளூர் அளவில் ஆதிக்க சாதிகளை எதிர்த்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது அப்போதைய ஆந்திர மக்கள் யுத்தக் குழுவினரின் ஆதரவுடன் மக்களை அணிதிரட்டி வந்துள்ளார். பின்னர், மக்கள் யுத்தக் குழுவினரிடமிருந்து விலகி அரசிலயமைப்புச் சட்டப்படி, அகிம்சை வழியில் உள் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடுத்தடுத்த வன்முறைச் சம்பவங்களை எதிர்த்த போராட்டத்தில் மாலா சாதியினர்(அதிக மக்கள்தொகையுள்ள மற்றொரு தாழ்த்தப்பட்ட சாதி) தலைமையில் அணிதிரள்வது தங்களது(மாதிகா) சாதியின் வளர்ச்சிக்கு துணை புரியாது என்ற நிலைப்பாட்டில் நின்று 1994-ல் மாதிகா இடஒதுக்கீடு போராட்ட குழுவை(MRPS) கட்டியமைத்தார். பின்னர், 1996-ல் தாழ்த்தப்பட்ட சாதிகளிடையில் ஒப்பீட்டளவிலான பின்தங்கிய நிலை, தீண்டாமை பாகுபாடுகள் குறித்து ஆய்வதற்கு நீதிபதி இராமச்சந்திர ராஜீ தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிதாக சட்டமியற்றினார். அதில், 57 சாதிகளைக் கொண்ட பட்டியல்(SC), நான்கு துணைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது. ஆந்திராவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 15 சதவீத இடஒதுக்கீடு பிரிக்கப்பட்டு, ரெல்லி(Rellis) மற்றும் ஆதி ஆந்திர மக்களுக்கு தலா 1 சதவீதமும், மாலா(Malas) மக்களுக்கு 6 சதவீதமும், மாதிகா(Madigas) மக்களுக்கு 7 சதவீதமும் ஒதுக்கப்பட்டது.

இந்த சட்டத்தை ஐதராபாத் உயர் நீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பிற்கு எதிராக E.V. சின்னையா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2004-ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் ஒரே வகுப்பினராக கருதப்படும் பட்டியல் சாதியினரை துணை வகைப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 14ல் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமைக்கு எதிரானது; மேலும், சரத்து 341(2)ன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பட்டியலில் எந்தவொரு மாற்றங்களையும் கொண்டு வருவதற்கான அதிகாரம் நடைமுறையில் நாடாளுமன்றத்திடமே உள்ளது என்பதால் ஆந்திர சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு மறுசீரமைப்பு சட்டம் செல்லாது என்று E.V. சின்னையா வழக்கில்(2004) கூறப்பட்டது. 

2009 இல் திமுக அரசு கொண்டு வந்த அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து கிருஷ்ணசாமி ( புதிய தமிழகம்) வழக்கு தொடர்ந்தார். இதேபோல, பஞ்சாப் மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி, மஜாபி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இதை எதிர்த்து பஞ்சாப் - ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது’ என்று அந்த நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. 

எல்லா வழக்குகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்புகளை மறுத்துத்தான் சமீபத்தில் ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, துணை வகைப்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என பெரும்பான்மை (6:1 ) தீர்ப்பு வழங்கியுள்ளது. சமமான நிலைமைகளில், சமமானவர்களுக்கிடையில் சமத்துவ உரிமை வழங்கப்பட வேண்டும் என்றுதான் சரத்து-14 கூறுகிறதே தவிர தனித்துவமான வேறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள் இடஒதுக்கீடு மூலம் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள உண்மையான சமத்துவத்தை (Substantive equality) அடைய முடியும் என்று தாங்கள் நம்புவதாக தீர்ப்பு எழுதி வைத்துள்ளனர்.

உள் இடஒதுக்கீட்டிற்கான ஆதரவும், எதிர்ப்பும்

இத்தீர்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலித்திய அமைப்புகள், கட்சிகள் சார்பாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன. தமிழகத்தில் உள்ள வி.சி.க.வினரை பொறுத்தமட்டில் 2004ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பில் முன்மொழியப்பட்ட சிலவற்றை மறுபதிப்பு செய்து பேசி வருகின்றனர். அதோடு, திராவிட மாடல் ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளை லாவகமாக மறந்(றைத்)துவிட்டு யோகி ஆதித்யநாத் போன்ற இந்துத்துவ சக்திகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு பட்டியல் சாதியிலுள்ளவர்களை துணை வகைப்படுத்துவதற்கு அனுமதித்தால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று வி.சி.க.வினர் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இவ்விவகாரங்களில் தலையிட, நாடாளுமன்றத்திற்கே உரிமையுள்ளது என்று உச்ச நீதிமன்றம் 2004 இல் கூறியதையே ஒப்புவித்து செல்கிறார்கள். உள் இட ஒதுக்கீடு மட்டுமல்ல இட ஒதுக்கீட்டையும் கூட அரசியல் கட்சிகள் வாக்குவங்கிக்காகவே பயன்படுத்துகின்றன; அதற்காக, இட ஒதுக்கீட்டில் மாநில உரிமையை பறிப்பது சரியாகுமா? யோகி ஆதித்யநாத்திடமிருந்து பறித்து மோடியிடம் கொடுப்பது தீர்வாகுமா? மாநில உரிமைகளை மறுத்து தமிழகத்திலுள்ள அருந்ததியர் மக்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டை இத்தீர்ப்பு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டியதால் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறி சி.பி.எம்., திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாகவும், சி.பி.எம். சார்பாகவும், இன்னப்பிற அருந்ததியர் மக்களுக்கான சங்கங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்திற்கு அடிபணிந்த அன்றைய கருனாநிதி ஆட்சியில் வாக்கு வங்கி நலன்களை கணக்கில் கொண்டு தனிச் சட்டமியற்றப்பட்டது என்பதுதான் உண்மை. “உள் இடஒதுக்கீட்டிற்காக தன்னிடம் யாரும் கோரிக்கை வைக்கவில்லை, தானாக இந்தக் கோரிக்கையை முன்னெடுத்ததோடு, இதை நடைமுறைக்கும் கொண்டு வந்திருப்பதாக” அவரே ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பேசியதை அன்றே பல்வேறு தரப்பினரும் நிராகரித்திருந்தனர். அவ்வகையில், சிபிஎம் கட்சி வரவேற்பதையும் திமுக வரவேற்பதையும் நாம் ஒரே தட்டில் வைத்து மதிப்பிட முடியாது.

இடஒதுக்கீடு பலன்களை பெறுவதில், பொருளாதார அளவுகோலை கொண்டு மதிப்பிடப்படும் செழுமை அடுக்கினரை (Creamy layer) விலக்கி வைக்க வேண்டும் என்று 7ல் 4 நீதிபதிகள் கருத்துரைத்திருப்பதற்கு மத்திய பாஜக அரசின் கேபினட் அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இடஒதுகீடு முறையை ஒருநாளும் ஏற்றுக்கொண்டதே இல்லை. RSS-ன் அரசியல் பிரிவாக இருக்கும் பாஜகவும் மற்ற எல்லா ஆளும் வர்க்க கட்சிகளைப் போல மாநிலத்திற்கு மாநிலம், தேர்தலக்கு தேர்தல் நிலைப்பாடுகளை மாற்றி மாற்றியே கூறி வந்துள்ளது என்பது வரலாறு. “அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் செழுமை அடுக்கினர் என்ற விசயம் பேசப்படவேயில்லை. அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் SC/ST மக்களுக்கு என்ன வழங்கப்பட்டதோ அதை அப்படியே வழங்கப்பட வேண்டும் என்பதே அமைச்சரவையின் தீர்க்கமான முடிவாக இருக்கிறது,” என்று சட்டத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆக.8 அன்று கருத்து தெரிவித்திருந்தார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களை மேம்படுத்தும் வரை இடஒதுக்கீடு முறை தொடரலாம் என்று கூறியிருந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை 75 ஆண்டுகளாக மேம்படுத்துவதற்காக அம்பேத்கர் முன்மொழிந்துள்ள எந்தவொரு பொருளாதார வகைப்பட்ட சீர்த்திருத்தங்களையும் செய்யாமல் இன்று அம்பேத்கர் சொன்னதையே நாங்கள் செய்கிறோம் என்று பாஜகவினர் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

தாழ்த்தப்பட்ட சாதிகளை துணை வகைப்படுத்துவதன் மூலம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என 2014, 2019ல் நடந்த நாடளுமன்ற தேர்தல்களில் பாஜக கூறியது. 2024 தேர்தலில், வெளிப்படையாக தேர்தல் அறிக்கையில் சொல்லாவிட்டாலும், சில மாநிலங்களில் நடந்த பிரச்சாரத்தில் அறிவித்துள்ளனர். குறிப்பாக, உள் இடஒதுக்கீட்டிற்கான துவக்கப் புள்ளியாக பார்க்கப்படும் ஆந்திராவில் மாதிகா சாதியினருக்கு உள் இடஒதுக்கீடு உரிமை சட்டப்பூர்வமாக்கப்படும் என மோடி பேசியிருக்கிறார். அதன் காரணமாக, ஆந்திராவில் உள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கும் அமைப்பினர் பா.ஜ.க.விற்கு ஆதரவளித்திருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்பை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற பின்னணிகளையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. மட்டுமல்லாது, உள் இடஒதுக்கீடு பற்றி மட்டுமே பேச வேண்டிய வழக்கில் செழுமை அடுக்கினர் பற்றிய கருத்தை புகுத்த வேண்டியதற்கு பின்னால் பாஜகவின் தலையீடு மறைமுகமாக இருக்கிறதென்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தேர்தல் ஆதாயத்திற்காகவும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் கேபினட் தீர்மானத்தின் மூலமாக செழுமை அடுக்கு முறையை(creamy layer) எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர். EWS என்ற பெயரில் பணக்கார உயர் சாதிக்காரர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை வைத்தே பாஜகவின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடியும்.

இத்தீர்ப்பு மோடியின் கூட்டணி கட்சிகளிடையேகூட சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம், லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) சிரக் பாஸ்வானும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சௌத்திரியும் துணை வகைப்படுத்தலை எதிர்க்கும் நிலையில், தெலுங்கு தேசிய கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இத்தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“ஆக.1-ம் தேதி வெளிவந்த தீர்ப்பை வாசிக்கும்போது, நீதிபதிகள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவது போலவே தோன்றியது” என்று அம்பேத்கரியவாதியும், கெஜ்ரிவால் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராகவும் இருந்த இராஜேந்திர பால் கௌதம் கருத்துரைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட சாதிகளில் எந்த சாதி எந்தளவிற்கான இடஒதுக்கீட்டின் பலன்களை பெற்றுள்ளது என்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு புள்ளிவிவரத் தகவல்களும் இல்லை என்கிற நிலையில், எதன் அடிப்படையில் துணை வகைப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இத்தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சாதிகளின் கருத்து என்னவென்பதை கூட கேட்கவில்லை என்பதோடு “தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக்கொள்வதற்கே இத்தீர்ப்பு வழியமைத்து தந்துள்ளது” என்கிறார் கௌதம்.

நாட்டிலுள்ள முதல் 10 பொதுத்துறை வங்கிகளிலுள்ள 147 பொதுத் தலைமை மேலாளர்களுக்கான பதவிகளில் 135 இடங்களை உயர் சாதிக் காரர்களே கைபற்றி வைத்திருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, தலைமைப் பதவிகளில் இடஒதுக்கீடுகளால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியவில்லை என்கிறார் கௌதம். 

“தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்குகளே முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில், இதிலுள்ள சில சாதிகள் நல்ல பலன்கள் பெற்றுவிட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்,” என்று கேள்வி எழுப்புகிறார் கௌதம். மேலும், அவர், துணை வகைப்படுத்தலை எதிர்க்கவில்லை என்றும், இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோருவதாக கூறுகிறார்.

2021-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், இது தொடர்பாக 57,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் கூறுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பங்கேற்பு அதிகமாகிற போது அதிகார மையங்கள் ஜனநாயகத் தன்மையுடையதாக மாறுவதற்கு வழிவகுக்கும் என்று அகில இந்திய கட்சிசாரா தாழ்த்தப்பட்டபவர்களுக்கான சங்கத்தின் (AIISCA) தலைவர்களில் ஒருவராக இருக்கும் JNU பேராசிரியர் ஹரிஷ் வாங்கடே கூறுகிறார்.

மேலும் அவர், தனியார் துறைக்கும் இடஒதுக்கீடு முறை விரிவுபடுத்துவதன் மூலம், அனைத்து பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதோடு, ஒட்டுமொத்த தனியார் துறையும் ஜனநாயகத் தன்மையுடைதாக மாறுவதற்கும், இந்தியாவின் செழுமையான பன்முக சமூக-கலாச்சாரத்தை வெளிப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று வாங்கடே கூறியிருக்கிறார். 

தனியார் துறைக்கும் இடஒதுக்கீடு முறையை விரிவுபடுத்தப்பட வேண்டுமெனக் கூறும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்து வரும், சேவை செய்யத் துடிக்கும் தலித்திய கட்சிகளின் ஏகாதிபத்திய ஆதரவு, தனியார்மய ஆதரவு என்ற வர்க்க சமரச போக்கை அம்பலப்படுத்த வேண்டியதும் நம் கடமையாக இருக்கின்றது.

தாழ்த்தப்பட்டவர்கள் சொத்துகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய மனுவையும், தனிச் சொத்துடைமையே இருக்கக்கூடாது எனக் கூறிய மார்க்ஸையும் நாம் ஏற்கக்கூடாது என்று இந்திய தலித் முதலாளிகள் சம்மேளனத்தின் (DICCI) தலைவர் மிலிந் காம்ப்ளே ஒருமுறை பேசியிருப்பார். ஆனால், இந்திய முதலாளிகள் சம்மேளனத்துடன்(ICC) கைக்கோர்த்துக்கொண்டு அந்நிய நிதி மூலதனத்திற்கு ஆரத்தி எடுக்கிறார். நிலவுடைமையை அடிப்படையாக கொண்ட சுரண்டலை நிலைநாட்டுவதற்கு சாதியப் படிநிலைகளை சட்டப்பூர்வமாக்கிய மனுவையும், எல்லாவகையான சுரண்டல் முறைக்கும் அடிப்படையாக விளங்கும் தனிச்சொத்துடமையை ஒழிப்பதற்கு அறிவியல்பூர்வமான வழிகூறிய மார்க்ஸையும் ஒரேதட்டில் வைத்து எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம் தலித்துக்கள் என்ற அடையாளத்தின் பின்னால் இருந்து கொண்டு இவர்கள் இப்போதைய ஆளும் வர்க்கமாக இருக்கும் தரகு-பெருமுதலாளியத்திற்கு சேவை செய்யக் கோருவது எதிர்க்கப்பட வேண்டியதே. பத்தாண்டுகளுக்கு முன்பு இவர் துணை வகைப்படுத்தலை எதிர்த்து வந்த நிலையில், தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பேசியிருப்பது 10 ஆண்டுகாலத்தில் மத்தியில் நடந்துவரும் பாஜக ஆட்சியின் மீதான பற்றுதலையே வெளிப்படுத்துகிறது. 

உள் இடஒதுக்கீட்டிற்கான ஆதரவுகள், எதிர்ப்புகளில் மிக முக்கியமானவையாக பார்க்கும் போது

1. தாழ்த்தப்பட்டவர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதும், இடஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழிப்பதுதான் RSS-ன் இலக்கு. RSS மட்டுமல்ல ஏகபோக கார்ப்பரேட்களின் நலனிற்கு சேவை செய்யத் துடிக்கும் அமைப்புகள், கட்சிகளின் இலக்கும் அதுவாகத்தான் உள்ளது.

2. தனியார்மய கொள்கைகளால் இடஒதுக்கீடே செல்லாக் காசாகி வருகிறது. ஆனால், இதை அறிமுகப்படுத்திய காங்கரஸ் கட்சியை யாரும் குறை சொன்னதாக தெரியவில்லை.

3. இடஒதுக்கீட்டின் பலன்களை சில சாதிகள் மட்டும் அபகரித்துக் கொண்டதாக சொல்வது ஏற்புடையதல்ல. அந்தக் குறிப்பிட்ட சாதியிலுள்ள நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்கள் மட்டுமே தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர் என்பதை புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. 

4. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது ஏற்புடையதல்ல. வர்க்க அளவுகோலும் பொருளாதார அளவுகோலும் ஒன்றல்ல. 

5. SC பிரிவிலேயே மிகவும் ஒடுக்கப்படுகிற அருந்ததியர்க்கான உள் இடஒதுக்கீட்டை புதிய தமிழகம் உள்ளிட்ட சில தலித்திய அமைப்புகள் எதிர்ப்பது விமர்சனத்திற்குரியது. 

படிக்கவும் : இட ஒதுக்கீடு பற்றி - ஏ.எம்.கே

உள் இடஒதுக்கிட்டை எதிர்ப்பவர்களில் கூட, சிலர், குறிப்பாக ஆனந்த் டெல்டும்டே போன்றவர்கள் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான ஒரு வழிதானே தவிர அதுமட்டுமே ஒரே வழியல்ல என்று கூறுகின்றனர். உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும்கூட சமமான பகிர்வை உத்திரவாதம் செய்ய முடியாது, துணைப் பட்டியலிலுள்ள தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்கவே செய்யும் என்று டெல்டும்டே கூறுகிறார். அதாவது, தீண்டாமை கொடுமையால் சாதிய அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்திற்காக கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை பொருளாதார வகைப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுப்புவதன் மூலம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாவதற்கு அரசின் புதிய தாராளமய கொள்கைகளே காரணம் என்று கூறுகிறார். நிரந்தரத் தீர்வல்ல என்று டெல்டும்டே போன்றவர்கள் சொல்வது ஓரளவிற்கு சரியாக இருந்தாலும், இதன் காரணமாகவே உள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. அது முழு உண்மையும் அல்ல. இன்றும்கூட, இட ஒதுக்கீட்டின் வழியாக அரசுப் பள்ளியில் ஏன் ஐஐடி போன்ற உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் மீதுகூட எத்தகைய சாதிய வன்கொடுமைகள் கட்டவிழ்த்துப் விடப்படுகிறது என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதுமட்டுமல்லாது, இவர்கள் சொல்வது போன்று புதிய தாராளமயக் கொள்கைகளால் பல லட்சக் கணக்கான காலிப்பணியிடங்களை ஒழித்துக்கட்டியப் பிறகு எஞ்சியுள்ள சிலநூறு அரசுப் பணியிடங்களில் சேரும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்களை பல்வேறு நூதனமான வழிகளில், பல்வேறு கட்டுப்பாடுகள், அதிகார மீறல்கள் வாயிலாக வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்டு வருவதையும் திறைமறைவில் பார்க்க முடிகிறது. இவ்வளவு ஏன், அதிகாரமற்ற உள்ளாட்சி சபைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பெயரளவிற்கான தலைவர் பதவிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்பவர்களைகூட சரிசமமாக நடத்தாமல் சாதிய வன்மத்துடன் ஒடுக்கிவருவதை இன்றும் பார்க்க முடிகிறது. 

இங்ஙனம், இடஒதுக்கீட்டின் துணை விளைவாக அதிகரித்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒன்றையே காரணம் காட்டி இடஒதுக்கீட்டை அல்லது உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதென்பது சமூக நீதிக்கு எதிரானதாகும். ஏனெனில், சமூக ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படும் சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்குவதென்பதே அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அவ்வகையில் அது உரியவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படும் உள் இடஒதுக்கீட்டை உத்திரவாதப்படுத்துவதற்கு மாநில அரசிற்கு உரிமை உள்ளது என்ற தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதே. அது எவ்வாறு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது ஆய்வுக்குரியதாக இருப்பினும், உள் இடஒதுக்கீட்டை இவர்கள் சொல்லும் வாதங்களில் நின்று –அதாவது ஏகாதிபத்தியங்களின் புதிய காலனிய சுரண்டலையும், அதனால் விளைந்துள்ள பொது நெருக்கடியையும் மூடிமறைத்துவிட்டு – வெறுமனே பொருளாதார ஏற்றத்தாழ்வு, தலித்திய அரசியல் லாபத்திலிருந்து மட்டும் எதிர்ப்பது விமர்சனத்திற்குரியது. இன்றைய அரசின் வர்க்க சார்பை புறந்தள்ளிவிட்டு தலித்திய கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றினாலும்கூட அவர்களால் தலித் மக்களின் விடுதலைக்கான தீர்வை வழங்க முடியாது என்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியும், வீழ்ச்சியுமே நிகழ்கால சான்றாக விளங்குகிறது. 

அதேபோல, உள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவளிக்கும் சில முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் கூட புதிய தாராளமயக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும் பொதுப்பட்டியல் என்ற உயர் சாதியினருக்கான அறிவிக்கப்படாத 50% இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுடன் ஆதரிப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், ஏற்கனவே சமூக நீதி பேசி ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள், அவர்களுக்கு தேர்தலில் ஆதரவு திரட்டும் தலித்திய கட்சிகள் தப்பித் தவறிக்கூட இடஒதுக்கீடு உரியவர்களுக்கே, அதாவது சாதிய ஒடுக்குமுறையால் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கே கிடைக்க வேண்டுமென கோரிப் போராடுவதில்லை. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டால் பறையர் ஒதுக்கீடு பாதிக்கப்படும் என சொல்பவர்கள் SC ஒதுக்கீட்டின் மொத்த சதவிகிதத்தை உயர்த்தக்கோர தயாரில்லை; தைரியமும் இல்லை. மட்டுமல்லாது ஆண்ட, ஆளும் கட்சிகளின் நிரந்தர தொங்கு சதையாக இவர்கள் மாறி நிற்கின்றனர் என்பதையே கடந்த கால வரலாறு காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும்கூட ஆதிக்க வர்க்கங்கள் உருவாகியுள்ளதால், ஆதிக்க வர்க்கங்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட சாதிகளிலுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும், ஜனநாயக சக்திகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வர்க்க அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரிக்கையை மழுங்கடிப்பதற்காக - பிற்படுத்தப்பட்ட சாதிகளிலுள்ள ஆதிக்க வர்க்கங்களுக்கு சேவை செய்யும் வகையில் - கொண்டு வரப்படும் உள் இடஒதுக்கீடு எதிர்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் மத்தியில் ஆதிக்க வர்க்கங்கங்கள் இன்னும் உருவாகவில்லை; அங்கே வர்க்க அடிப்படையிலான இட ஒதுக்கீடு பொருத்தமற்றது; அவர்கள் அனைவருக்கும் இடஒதுக்கீட்டை உத்திரவாதம் செய்ய வேண்டும். 

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்

பொதுவாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை, ஆழமான பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுவதில்லை அல்லது ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்கு வேண்டிய நுணுக்கமான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் சேர்த்தே முன்வைக்கப்படுகிறது. 

2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் அதிகம் வாழக்கூடிய சில மாநிலங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரே வகுப்பிற்குள்ளேயே எந்தளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது என்பதை தொகுத்து தி ஹிந்து ஆங்கில இதழ் புள்ளிவிவர அட்டவனையாக வெளியிட்டிருந்தது. அவை பற்றிய பொருள் விளக்கத் தொகுப்பை சுருக்கமாக பின்வருமாறு காணலாம்.

மகாராஷ்டிரா மாநிலம்

மகாராஷ்டிராவிலுள்ள பட்டியல் சாதிகளில்(SC) 43.5 சதவீதம் பேர் நகர வாழ்க்கையோடு தொடர்புடையவர்களாகவும், 44.5 சதவீதம் பேர் விவசாயக்கூலிகளாகவும் இருக்கிறார்கள். அதேபோல, 14.8 சதவீதத்தினர் மட்டுமே பத்தாம் வகுப்பு வரையும், 8.2 சதவீதத்தினர் மட்டுமே பட்டப் படிப்பு வரையும் படித்துள்ளார்கள்.

இம்மாநிலத்திலுள்ள பட்டியல் சாதிகளில் ஒப்பீட்டளவில் முன்னேறியதாக சொல்லப்படும் பாம்பி (Bhambi) சாதியினருக்கும், அப்பட்டியலில் கடைக்கோடியிலுள்ள மாங் (Mang) சாதியினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அலசிப் பார்க்கும் போதும் பின்வரும் முடிவுகளுக்கு வர முடிகிறது.

பாம்பி சாதியில் 100 பேர் நகரத்தில் வாழ்கிறார்கள் என்றால் மாங் சாதியில் 66 பேர் மட்டும் நகரத்தில் வாழ்கிறார்கள். பாம்பி சாதியைச் சேர்ந்த ஒருவர் விவசாயக் கூலியாக இருந்தால், 22 மாங் சாதியினர் விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். பாம்பி சாதியில் 100 பேர் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்கள் என்றால் மாங் சாதியில் 69 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். அதேபோல, பாம்பி மக்களில் 100 பேர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மாங் சாதியில் 35 பேர் மட்டுமே பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

பட்டியல் சாதிகளிடையில் ஒப்பீட்டளவில் முன்னேறியதாக சொல்லப்படும் பாம்பி மக்களிடையே கூட கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருவதைப் பார்க்க முடிகிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 83 சதவீதம் பேர் இன்னமும் பத்தாம் வகுப்புகூட படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். 90 சதவீதம் பேர் பட்டப் படிப்பு கூட பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் நிலைமையே இப்படியிருக்கும் போது, இப்பட்டியலில் கடைகோடியிலிருக்கும் மாங் மக்களின் நிலைமை என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேற்கு வங்கம் மாநிலம்

மேற்கு வங்கத்திலுள்ள பட்டியல் பழங்குடியின(ST) மக்களில் 8.3 சதவீதம் பேர் மட்டுமே நகரமயமாக்கலோடு இணைந்துள்ளனர், கிட்டத்தட்ட 42.2 சதவீதம் பேர் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். மேலும், 4.1 சதவீதம் பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு வரையும், 2 சதவீதம் பேர் மட்டுமே பட்டப் படிப்பு வரையும் படித்திருக்கிறார்கள்.

இம்மாநிலத்திலுள்ள பட்டியல் பழங்குடியின மக்களில் ஒப்பீட்டளவில் முன்னேறியதாக சொல்லப்படும் புத்திய(Bhutia) மக்களுக்கும், இதே பட்டியலில் கடைக்கோடியிலுள்ள பூம்ஜி(Bhumji)மக்களுக்கும் இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அலசிப் பார்க்கும்போது இடஒதுக்கீட்டின் பலன்கள் சரியொப்பு வீதமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது புலப்படுகிறது.

புத்தியா மக்களில் 100 பேர் நகரத்தில் வாழ்கிறார்கள் என்றால், பூம்ஜி மக்களில் 10 பேர் மட்டுமே நகர வாழ்க்கையோடு தொடர்பிலிருக்கிறார்கள். புத்தியா மக்களில் 10 பேர் விவசாயக் கூலியாக இருந்தால், பூம்ஜி மக்கிளிடையில் 97 பேர் விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். அதேபோல, 100 புத்தியா மக்கள் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றால், 31 பூம்ஜி மக்கள் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். இதுவே பட்டப்படிப்பு என்கிறபோது, 100க்கு பத்து பூம்ஜி மக்கள் மட்டுமே பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

இதுவொருபுறமிருக்க, ஒப்பீட்டளவில் முன்னேறியதாக சொல்லப்படும் புத்தியா பழங்குடி மக்களிடையே கூட கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருவதை பார்க்க முடிகிறது.

39 சதவீத புத்தியா மக்கள் நகரத்தில் வாழ்ந்தாலும், 95 சதவீதம் பேர் விவசாயம் சாராத தொழில்களை செய்து வந்தாலும், அவர்களில் 90 சதவீத்திற்கும் அதிகமானோர் பத்தாம் வகுப்பு வரையில்கூட படிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டனர் என்பது அப்பட்டமான பொய் என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு சிறுபிரிவினரின் முன்னேற்றத்தைக்கூட குடிதாங்கிகளாலும், அம்பேத்கரிய சுடர்களாலும், சாதி வெறியர்களாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதையே இடஒதுக்கீடு, உள் இடஒதுக்கீடு எதிர்ப்பு பேச்சுக்களில் பார்க்க முடிகிறது. இன்னும் ஒரு சிலர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக இருக்கும் கொஞ்ச நஞ்ச பங்கையும் தந்திரமாக பறித்துக் கொள்வதற்காகவே செழுமை அடுக்கினர் என்பன போன்ற தனிநபர் ரீதியான பொருளாதார அளவுகோலை முன்வைக்கின்றனர். பார்ப்பன எதிர்ப்பு சமூக நீதி பேசி ஆட்சியில் அமர்ந்துள்ள திராவிட கட்சிகளின் நரம்பும் சதையுமாக இருப்பவை பிற்படுத்தப்பட்ட, ஆதிக்க சாதிகளிலுள்ள ஆளும் வர்க்கங்களே என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் முன்னிறுத்தப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் சாதிய பின்புலத்தில் அம்மனமாக தெரிகிறது. சாதித் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அம்பேத்கரும், பெரியாரும் எவ்வளவு போராட்டம் நடத்தியிருப்பினும், அவர்களின் வழியை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் கட்சிகள், அமைப்புகளால் ஏன் சட்டவழியில் வழங்கப்பட்ட உரிமைகளையும், சில்லறை சீர்த்திருத்தங்களைகூட பெற முடியாமல், ஒரு ஜனநாயகப் பாத்திரத்தைகூட ஆற்ற முடியாமல் சீரழிந்து நிற்கின்றனர் என்பதையும் சேர்த்தே உள் இடஒதுக்கீட்டிற்கான விவாதத்தை பார்க்க வேண்டியுள்ளது. “நாம் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது சாதிய அமைப்பை நிலைநிறுத்த அல்ல; சாதி சமத்துவத்திற்காகவும் அல்ல; மாறாக, சாதியை ஒழிப்பதற்கும், புதிய ஜனநாயக சமூக அமைப்பை நிறுவவும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே!” என்ற தோழர் ஏம்எம்கே வழிகாட்டுதலை மனதில் வைத்துத்தான் தற்போதைய உள் இடஒதுக்கீட்டுப் பிரச்சனையையும் அணுக வேண்டியுள்ளது.

- செந்தளம் செய்திப்பிரிவு