இட ஒதுக்கீடு பற்றி - ஏ.எம்.கே

இடஒதுக்கீடு ஒரு இடைக்கால சீர்திருத்தமேயாகும். இது சாதிப்பிரச்சனைக்கான தீர்வும் அல்ல. ஒரு முதலாளித்துவ வகைப்பட்ட, சில்லறைச் சீர்திருத்தமே. ஆனால், இந்தச் சீர்திருத்தத்தைக் கூடமுழுமையாக அமல்படுத்த வேண்டுமானால்: அடிப்படை பொருளியல் மாற்றங்கள் அவசியமானது ஆகும். அப்போதுதான், அனைத்து மக்களும், கல்வியும், வேலை வாய்ப்பும் பெற முடியும். வாழ்க்கை உத்திரவாதமும் பெறமுடியும்.

இட ஒதுக்கீடு பற்றி - ஏ.எம்.கே

ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் உரிமையைப் பாதுகாப்போம்!

இடஒதுக்கீட்டால் கிடைக்கும் உரிமைகள் உழைக்கும் மக்களை அடையப்  போராடுவோம்! சாதிய முறையைச் சவக்குழிக்கு அனுப்ப உறுதிகொள்வோம்!

 

இவ்வாண்டு   தமிழகத்தில்   பள்ளிகள்,   கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் 69% இட ஒதுக்கீட்டை நம்பி,மேல் படிப்பிற்கு மனுச் செய்தனர். ஆனால் 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத்தான் அமல்படுத்த முடியும் என்ற அண்ணா பல்கலைக் கழக அறிவிப்பு, மனுப்போட்டவர்களை பதற்றமடையச் செய்தது. தமிழகம் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளானது.

அண்ணா பல்கலைக்கழகம் ஏன் அவ்வாறு அறிவித்தது?

டெல்லி உச்சநீதி மன்றத்தில் மண்டல் கமிஷன் குறித்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், எல்லா சாதிகளுக்குமான மொத்த இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பு நவம்பர் 92-இல் வெளியானது. ஆனால் 93 இல் தமிழக அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை.

எனவே, தமிழக அரசு 50 சதவிகித இடஒதிக்கீட்டுச் சட்டத்தை ஓராண்டு அமல்படுத்தாததை எதிர்த்து விஜயன் என்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் உயர்நீதி மன்றமும், 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத்தான் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இத்தீர்ப்பு வருவதற்குள் 69 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்து, அவ்வருடப் படிப்பும் முடிந்துவிட்டது. இதை மாற்ற முடியாது. ஆனால், இது நீதிமன்றத்தை அவமதித்ததாகும் என டெல்லி உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் ஜெயா அரசு பதறிப்போனது. ஓர் ஆண்டு 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது. இனி, (பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 50 சதவிகிதத்தை 31   சதவிகிதமாக குறைத்து) மொத்தம் 50 சதவிகிதத்தை  இடஒதுக்கீட்டையே அமல் செய்கிறோம் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து ஓடி வந்தது.

தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான், அண்ணா பல்கலைக்கழகம் 50 சதவிகித இடஒதுக்கீட்டைத்தான் அமல்படுத்த முடியும் என அறிவித்தது. இதுதான் மாணவர்களை பதற்றமடையச் செய்தது; தமிழகம் கொந்தளிப்புக்குள்ளானது.

 

69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல்

இடஒதுக்கீடு தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமையாகும். இதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஜெயா அரசு புரிந்துகொண்டது. தனது துரோகத்தை மறைக்க பந்த் நாடகம் நடத்தியது. சட்டசபையில் 69 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. தற்போது நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வருவதாகக் கூறுகிறது.

மறுபுறம், தமிழகத்தில் உள்ள எல்லா எதிர்கட்சிகளும் 69சதவிகித இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முழங்கின. எல்லா அகில இந்தியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளைப் போலவே, தங்களது தேர்தல் நலன்களிலிருந்து இதை ஆதரித்தன. அல்லது ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் ராவ் அரசும் தனது நலனிலிருந்து, தமிழக இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டிவந்தது.

ஆனால்     அதன் மீதும்     மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இடஒதுக்கீட்டை நாம் ஏன் ஆதரிக்கிறோம்?

இடஒதுக்கீடு என்பது என்ன? இன்று சமூகத்தில் பெரும்பான்மையோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட மக்களாக உள்ளனர். இவர்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கித் தருவதே இடஒதுக்கீடாகும்.

கடந்த காலத்தின் நிலப்பிரபுத்துவ வர்ணாசிரம தர்மத்தில் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால், பழங்குடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்விபெற அனுமதிக்கப்படவில்லை. இப்போதும் நாட்டில் ஏற்றம் கண்ட சாதிகள் உள்ளன. இவை கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். இதற்கு இடஒதுக்கீடு அவசியமானது ஆகும்.

ஒடுக்கப்பட சாதிகள், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்காக சாதிய அடிப்படையில், ஒடுக்கும் சாதி, ஒடுக்கப்படும் சாதி எனப் பாகுபடுத்தப்பட்டு, ஒடுக்கப்படுவோருக்கு தனி உரிமை என்ற அடிப்படையில் தரப்படுவதால் இடஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டியது அவசியமாகும். இது பறிக்கப்படுவதை, குறைக்கப்படுவதை தடுப்பதும் நமது கடமையாகும்.

எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை உத்திரவாதம் செய்யப்படுமானால், இடஒதுக்கீட்டிற்கு அவசியமே இல்லை. அப்போது உயர் அதிகாரப் பதவிகளை ஒழுங்குப்படுத்த மட்டுமே இது தேவைப்படலாம். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. இருக்கின்ற வேலைவாய்ப்புகளோ மிகக்குறைவு, இதில் சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குவது அவசியமாகிறது. இதைக் குறைப்பது ஜனநாயக விரோதமானது. எனவே 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காக்கப் போராடுவது நம்முன் உள்ள உடனடிப் பணியாகும், கூடவே இடஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்கவும், அமல்படுத்தவும் மாநிலங்களுக்கே முழு உரிமை கோருவதும் அவசியமாகும்.

 

இடஒதுக்கீடு, உரியவர்களுக்கே போய்ச் சேரவேண்டும்:

69 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதியுடன் ஆதரிக்கிறோம் அதே உறுதியுடன், அது உரியவர்களுக்கே போய்ச்சேர வேண்டும் என்றும் கூறுகிறோம். நாம் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது சாதிய அமைப்பை நிலைநிறுத்த அல்ல; சாதி சமத்துவத்திற்காகவும் அல்ல; மாறாக, சாதியை ஒழிப்பதற்கும், புதிய ஜனநாயக சமூக அமைப்பை நிறுவவும் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே. எனவே சாதிய ஒடுக்குமுறையால், சாதியச்சுமையால் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கே இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.

இன்றைய இந்தியா மனுநீதி காலத்து இந்தியா அல்ல. அரைக்காலனிய-அரைநிலப்பிரபுத்துவ இந்தியா. எனவே, சாதிகள், நிலப்பிரபுத்துவ மனுநீதியின் கணங்களைக் கடந்து, மாறுதல் அடைந்துள்ளன. சாதிகள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளன. பல வர்க்கங்களைத் தன்னகத்தே கொண்டதாக மாறியுள்ளன. இன்று ஒரே சாதியில் பல வர்க்கங்கள் இருக்கின்றன. ஒரே வர்க்கம் பல சாதிகளிலும் இருக்கின்றன. இருப்பினும் சாதியும் வர்க்கமும் ஒன்றல்ல. வர்க்கங்களிலும், எல்லா வர்க்கங்களும் சாதியை ஒழிக்க விரும்புவது இல்லை. பிற்பட்ட சாதியில் உள்ள ஆதிக்க வர்க்கங்கள், சாதியத்தை நிலை நிறுத்தவே விரும்புகின்றன. அவைகளுக்கு தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த சாதியம் தேவைப்படுகிறது. இத்தகைய ஆதிக்க வர்க்க சக்திகளுக்கு இடஒதுக்கீட்டில் இடம் தரலாமா?

ஆனால், பழங்குடி இனமக்கள், இன்னும் குலங்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் வர்க்க உருவாக்கம் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே  உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும், உழைக்கும் வர்க்கங்கள்தான் உள்ளன. ஆதிக்க வர்க்கங்கள் தோன்றவில்லை. இந்த இரண்டு பிரிவுகளும், சமூக ஒடுக்குமுறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சாதி ஒழிப்பு உடனடித் தேவையாக உள்ளது. எனவே இவர்களுக்கு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு தருவது சரியானதாகும். கூடவே பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும், முடிதிருத்துவோர், துணி வெளுப்போர், குயவர், கொல்லர் போன்ற சேவை பிரிவினர் உள்ளனர். இவர்கள் சாதி ரீதியான அந்தஸ்தோ, முன்னேற்றமோ இல்லாமல் நலிவடைந்துள்ளனர். இவர்களின் குலத்தொழில் நசிந்து வருகிறது. இவர்களின் சாதியை நிலை நிறுத்துவதற்கான பொருளியல் அடிப்படை உடைந்து விட்டது. இவர்களுக்கு சாதியம், இன்றும் ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. எனவே இவர்களுக்கு சாதியடிப்படையில் இடஒதுக்கீடு தருவது நியாயமானதே.

மேலும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக-பெண் விடுதலைக்குத் துவக்கப்புள்ளி என்ற வகையில், பெண்களுக்கென தனி ஒதுக்கீடும், கலப்புமணத்திற்கு நிபந்தனையற்ற தனி ஒதுக்கீடும் செய்வது அவசியமாகும்.

பிற்படுத்தப்பட்ட சாதியிலோ, இன்று உழைக்கும் வர்க்கங்கள், ஆதிக்க வர்க்கங்கள் என இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. எனவே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இங்கு ஒத்துவராது. அவ்வாறு கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட பணக்கார விவசாயிகள், தரகு முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள், உயர் அரசு அதிகாரிகள், பெரும் வணிக முதலாளிகள் ஆகியோரே எல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வர். (பொருளாதார அளவுகோலும் வர்க்க அளவுகோலும் ஒன்றல்ல) மறுபுறம் அச்சாதிகளில் உள்ள, கூலி, ஏழை, நடுத்தரவிவசாயிகள், தொழிலாளிகள், அறிவாளிகள் மற்றும் நடுத்தர வர்க்கம் போன்ற ஜனநாயக வர்க்கங்களுக்கு பயன் ஏதும் கிடைக்காது. இது சமூக நீதியாகாது. எனவேதான் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆதிக்க வர்க்கங்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்கிறோம். இதுதான் உண்மையான சமூகநீதியாகும்.

இன்று, கிராமப்புறங்களில் உடைமை வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாதிக்கக்காரர்களில் ஒரு பகுதி பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளை ஒடுக்குகின்றனர். தங்கள் சாதிகளில்  உள்ள உழைக்கும் ஜனநாயக வர்க்கங்களை ஒடுக்குவதும் இவர்களேதான். இவர்கள் சாதிக்கட்டுபாடுகளை விதிக்கின்றனர். அதை மீறுவோருக்குக் கடும் தண்டனை கொடுக்கின்றனர். இத்தகைய ஆதிக்க வர்க்கங்களுக்கு சாதியின் பெயரால் இடஒதுக்கீட்டில் வாய்ப்பளிப்பது சரியாகுமா? அவ்வாறு அளித்தால் கல்வியும் வேலை வாய்ப்பும் ஜனநாயக விரோதிகளின் கரத்தைப் பலப்படுத்தும் கோட்டை மதில்களாக மாற்றப்படும். இது சமூக நீதிக்கு எதிரானது.

இடஒதுக்கீட்டின் வரலாறு காட்டுவதென்ன?

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில், அரசாங்கப் பணிகளில் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரப்பட்டது. பின்பு இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு கோரப்பட்டது. பின் இந்துக்களிலேயே தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கென்று தனியாக ஒதுக்கீடு கோரப்பட்டது. பின்பு இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட  இடங்கள்  எல்லாம்  பிராமணர்களின் கைகளுக்கே போனதால் பிராமணர் அல்லாதோருக்குத் தனி ஒதுக்கீடு கோரப்பட்டது, அந்த ஒதுக்கீடும் பிராமணர் அல்லாத மேல்சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கென தனி ஒதுகீடு கோரப்பட்டது. பின்பு அதிலும் மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்கப்பட்டது. இத்தகைய பாதையில் பயணப்பட்டு வந்துள்ளதுதான் 'சமூகநீதி' போராட்டம். அந்த வழியில் வரலாற்று நிலைமைகளுக்கேற்ப இது தொடரவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாகும்.

இப்போது அதன் மைல்கல்லாகத்தான்; இன்றைய யதார்த்த வளர்ச்சி நிலைக்கு ஏற்பதான், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் உள்ள உழைக்கும் வர்க்கங்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்கிறோம். ஆதிக்க வர்க்கங்களுக்கு இடஒதுக்கீட்டில் இடமிருக்கக் கூடாது என்கிறோம்.

இதன்படி, ஒவ்வொரு ஊரிலும், யார் யார் இடஒதுக்கீட்டிற்கு உரியவர்கள் என்பது முடிவு செய்யப்பட வேண்டும். இதனை அரசு அதிகாரிகள் மூலம் செய்யக் கூடாது. மாறாக உழைக்கும் (ஜனநாயக) வர்க்கங்களைக் கொண்ட மக்கள் கமிட்டிகளை அமைத்து, அதன் மூலம்தான் முடிவு செய்யவேண்டும். அப்போதுதான் இடஒதுக்கீட்டில் ஆதிக்க வர்க்கங்கள் பங்கு பெறுவதைத் தடுக்க முடியும்.

 

ஏழைகளுக்கு இடஒதுக்கீடு மட்டும் போதாது! இலவசக் கட்டாயக் கல்வியும் தேவை!

தாழ்த்தப்பட்ட மக்களும், மலைவாழ் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஏழை மக்களும் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் பிள்ளைகள் ஆரம்பக்கல்வி கூடப் பெறமுடியாத நிலையில் உள்ளனர். குழந்தை உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். இவர்கள் அனைவருக்கும் உணவு உடையுடன் கூடிய கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும். போதிய உபகாரச் சம்பளத்துடன் கூடிய உயர் கல்விக்கும் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இக்கட்டாய இலவசக் கல்விக்கான உத்தரவாதம்தான் இவர்களுக்கு முதல்பெரும் சீர்திருத்தம் ஆகும். இது செய்யப்படாததால்தான், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டில் உயர்பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

ஆனால் சமூக நீதிக்காகப் போராடுவதாய்க் கூறிக்கொள்ளும் கட்சிகள், இதுகுறித்து மூச்சுக்கூட விடுவதில்லை. காரணம், இவர்கள் உழைக்கும் மக்களுக்காக சமூகநீதி கேட்கவில்லை என்பதே உண்மை. இதனை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், "எங்களுக்குத் தகுதி இருப்பதால் முன்னேறினோம்" எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும், பணக்கார வீட்டுப் பிள்ளைகளும்கூட, மக்களின் வரிப்பணத்தில்தான் படிக்கின்றார்கள். ஒவ்வொரு டாக்டரையும், இஞ்சினியரையும் உருவாக்க பல லட்சம் அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. இவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் இருப்பதால் இவர்களால் படிக்க முடிகிறது. இந்த வசதி உழைக்கின்ற மக்களின் பிள்ளைகளுக்கும் அரசாங்க செலவில் செய்து கொடுக்கப்படுமானால் அவர்களாலும், மேற்படிப்பு படிக்க முடியும்.

எனவே, வறுமையின் விளைவால், கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு மட்டும் கோருவது ஒரு மோசடி நாடகமாகும்.

 

சமூக நீதியை அழிக்கும் ராவ் அரசின் கொள்கைகள்

நரசிம்மராவ்  அரசாங்கம்,  69  சதவிகித  இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் மறுபுறம், புதிய பொருளாதாரக் கொள்கை, சந்தை பொருளாதாரம் ஆகிய கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், இடஒதுக்கீட்டையே பயனற்றதாக்கி வருகிறது.

இடஒதுக்கீடு  அரசுக்  கல்வி  நிறுவனங்களிலும்  அரசுத்துறைகளிலும்தான் இருந்து வருகிறது. ஆனால் ராவ் அரசோ, இவற்றைத் தனியார் மயமாக்கி வருகிறது. கல்வி தரும் பொறுப்பை அரசாங்கம் கைகழுவி வருகிறது. தனியார் நர்சரி முதல் சுயநிதிக் கல்லூரி வரை, இடங்களை ஏலத்தில் விட்டு, லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றன. சுருங்கக்கூறின், சில உயர் சாதிகள் மட்டுமே கல்வி பெற முடியும் என்றது 'நிலப்பிரபுத்துவ மனுநீதி'. பணம் உள்ளவர்கள் மட்டுமே கல்வி பெறமுடியும் என்கிறது இன்றைய 'ராவ்நீதி'.

மேலும், ராவ் அரசாங்கம், தனது புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலம், நாட்டையே அடகு வைக்கிறது. அரசுத் துறைகளைத் தனியார்மயம் ஆக்கிவருகிறது. இதன்மூலம்,வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டைப் பயனற்றதாக்குகிறது. சமூக நீதியை அழிக்கிறது.

 

உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு! அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரான , சமூக நீதிக்கு குழிபறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்போம் !

உண்மையான சமூகநீதிக்கு ஒரேவழி உற்பத்தி உறவுகளில் மாற்றம் கொண்டு வருவதுதான்:

சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்கள், இடஒதுக்கீட்டால் மட்டுமே, அவ்வொடுக்குமுறையிலிருந்து விடுபட முடியாது. இடஒதுக்கீடு ஒரு இடைக்கால சீர்திருத்தமேயாகும். இது சாதிப்பிரச்சனைக்கான தீர்வும் அல்ல. ஒரு முதலாளித்துவ வகைப்பட்ட, சில்லறைச் சீர்திருத்தமே. ஆனால், இந்தச் சீர்திருத்தத்தைக் கூடமுழுமையாக அமல்படுத்த வேண்டுமானால்: அடிப்படை பொருளியல் மாற்றங்கள் அவசியமானது ஆகும். அப்போதுதான், அனைத்து மக்களும், கல்வியும், வேலை வாய்ப்பும் பெற முடியும். வாழ்க்கை உத்திரவாதமும் பெறமுடியும்.

ஆனால், இட ஒதுக்கீட்டைப் பெறவதில்தான் விமோசனமே உள்ளது போன்ற மாயை, திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. சரி, அப்படியே வேலை கிடைத்தாலும், அந்தந்தச் சாதியில், ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் வேலை கிடைக்கும், மீதமுள்ளவர்கள் என்ன செய்ய? தங்களில் ஒருவர் முன்னேறி விட்டார். அது போதும் என்று சும்மா இருந்து விடவா? இல்லை எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்காகப் போராட வேண்டுமா? இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

உழைப்பவர்களின் வாழ்வு உயர்வதற்கான உண்மையான சமூகநீதி, சாதி சீர்திருத்தத்தில் இல்லை. உற்பத்தி உறவுகளில் மாற்றம் கொண்டு வருவதில்தான் உள்ளது - உழுபவருக்கு நிலத்தைச் சொந்தமாக்குவதில் உள்ளது - அந்நிய ஏகாதிபத்தியச் சுரண்டலை ஒழித்துக்கட்டுவதில் உள்ளது.

ஆனால், ராவ் அரசோ அந்நிய ஏகபோகக் கம்பெனிகளின் காலடியில், இந்தியப் பொருளாதாரத்தை பலி கொடுத்து சரணாகதிப் பாதையில், வேகமாகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, நாட்டை அடகு வைக்கிறது. ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் நலன்களிலிருந்து, இந்தியாவை ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாகவே தொடர்ந்து கட்டிக்காக்கப் பாடுபடுகிறது. சமூகநீதியைச் சாகடிக்கிறது. நாடாளுமண்ற எதிர்க்கட்சிகள், இவற்றை எதிர்த்து, முறியடிக்கத் தயாரில்லை. இதன் மூலம் இக்கட்சிகள் அனைத்துமே சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டுகின்றன.

எனவே, தேசத்துரோக ராவ் அரசைத் தூக்கி எறிந்தால்தான்; மாற்று ஜனநாயக் அரசமைப்பைத் தோற்றுவிக்க முடியும். உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க முடியும். சமூக ஒடுக்குமுறைக்கான  அடித்தளத்தை  நொறுக்க  முடியும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசதிகாரத்தில் பங்குபெற முடியும். உண்மையான சமூகநீதி உதயமாகும்.

எனவே உண்மையான சமுகநீதியை நிலைநாட்ட, போலிச் சமூகநீதிக் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும்.

 

இடஒதுக்கீட்டில் தமிழக ஆளும்கட்சி எதிர்க்கட்சிகளின் நிலைபாடு

எல்லாக் கட்சிகளுமே, இன்று இடஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன. காரணம், வரப்போகும் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்ளவும், ஓட்டு வாங்கவும்தான்.

அ.தி.மு.க ஜெயா அரசு, டெல்லி உச்சநீதிமன்றத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது தவறு என மண்டியிட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டு, தமிழகத்தில் வந்து 69% இட ஒதுக்கீடே என் உயிர் மூச்சு என முழங்கி நாடகமாடுகிறது.

திராவிடர் கழக வீரமணியோ, இந்த நடிப்பையும் பாராட்டினார். "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டமும் அளித்தார். மறுபுறம், தனது சுயநிதிக் கல்லூரிகள் மூலம் சமூக நீதிக்கு சவக்குழியும் தோண்டிக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதியோ தனது சொந்த அணிகளின் நம்பிக்கையையே இழந்து நின்றிருந்தார். அந்த நேரத்தில் வெடித்த இப்பிரச்சனையை, வாராது வந்த மாமணி எனக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். இதைக் கொண்டு, தனது அடுத்த கட்ட அரசியல் சுற்றுக்கு தன்னை தயார் செய்து கொண்டு வருகிறார். ம.தி.மு.க, பா.ம.க ஆகியனவும் மேற்கண்ட போக்குகளுக்கு விதிவிலக்கு அல்ல. இடது கம்யூனிஸ்டுகளோ, தங்களது நாடாளுமன்ற சந்தர்பவாதத்திலிருந்து, இடந்தேடும் அரசியல் கூட்டணிப்பற்றி சிந்தித்து கொண்டுள்ளனர்.

இந்த கட்சிகள் எல்லாம், சமூகநீதிக்கு எதிரான, ராவ் அரசின், புதிய  பொருளாதார  கொள்கையையும்;  நாடே  அடகு போவதையும் எதிர்க்கும் நோக்கமற்றவை, திராணியற்றவை. இவை இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகப் பெரிதுபடுத்தி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

மேற்குவங்க ஜோதிபாசுவோ, அந்நிய மூலதனத்திற்குச் சிவப்பு கம்பளம் விரித்து ஆனந்தத்துடன் வரவேற்கிறார். இவர்கள் எல்லாம் சமூக நீதிக்கு சவக்குழித் தோண்டுபவர்கள். இவர்களை நம்பி பயனில்லை.

மக்கள் போராடிப்பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவது உடனடி பணியாக உள்ளது. நமது போராட்டங்கள் புதிய சட்டங்களை உருவாகட்டும்! 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் அரங்கேற்றுவோம். இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே என்பதை நிலைநாட்டுவோம்! அந்நிய ஆதிக்கத்திலிருந்தும், நிலவுடமை நுகத்தடியிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்போம்! உண்மையான சமூகநீதியை உருவாக்க ஓங்கி முழங்குவோம்!

* 69 சதவீத இட ஒதுக்கீட்டை குறைக்க அனுமதியோம்!

* இட ஒதுக்கீட்டை தீர்மானிப்பது மாநிலங்களின் உரிமை, இதில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு இல்லை உரிமை!

* 69% இட ஒதுக்கீடு ஆதிக்க வர்க்கங்களுக்கு அல்ல; உழைக்கும் வர்க்கதிற்கே உரிமையாக்குவோம்!

* அரசியல் அணிசேர்க்கைக்கான வழித்தடமாக இட ஒதுக்கீடு போராட்டத்தைப்  பயன்படுத்தும்  ஓட்டுக்கட்சிகளை இனங்கண்டுக்கொள்வோம்!

* சமூக நீதியைச் சீர்குலைக்கும் ராவ் அரசின் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கையை முறியடிப்போம்!

* உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம்!

- ஏ.எம்.கே

ஆகஸ்ட் 1994