டங்கல் திட்டம் ஓர் அடிமை சாசனம் -ஏஎம்கே

நாட்டை அடிமைப்படுத்த முயற்சிக்கும் டங்கல் திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம்!

டங்கல் திட்டம் ஓர் அடிமை சாசனம் -ஏஎம்கே

முன்னுரை

உலகில் காலனியாதிக்கம் முற்றுபெற்றுவிட்டது; இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள்  சுதந்திர முதலாளித்துவ நாடுகள், அமைதி வழியில்  சோசலிசம்; அமைதி வழியில் புரட்சி; சமாதான சகவாழ்வு என்றெல்லாம்  சி.பி.எம், சி.பி.ஐ போன்ற  திருத்தல்வாத கட்சிகள் பேசுகின்றன. அவர்களின் தண்டுவடத்தில் விழும் சம்மட்டி அடியாக இந்நூல் விளங்குகிறது.

இரண்டாம் உலகபோருக்குப் பிறகு...பாசிசத்தின் தோல்வி, ஐரோப்பிய நாடுகள் பலவீனமடைதல், அமெரிக்காவின் கை ஓங்குதல், சோசலிச முகாம்களின் தோற்றம்- காலனிய நாடுகளில் தேசவிடுதலை எழுச்சி பெறுதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் ஏகாதிபத்தியங்கள் நேரடி காலனிய முறையை கைவிட்டு புதியகாலனிய முறையை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி அதன்  காலனிய சந்தைகளை அமெரிக்கா அமைதி வழியில்  பான் அமெரிக்கானா திட்டம் மூலம்  தனக்கான சந்தையாக மாற்றிக் கொள்வதற்காகவே காட், ஐ.எம்.எப், உலக வங்கி போன்ற புதிய காலனிய நிறுவனங்களை  நிறுவியது. இந்த நிறுவனங்கள் மூலம் ஏகாதிபத்தியங்கள்  பழைய காலனிய நாடுகளை மிகவும் வஞ்சகமான முறையில் புதிய காலனிய நாடுகளாக மாற்றிக்கொண்டன. காட் ஒப்பந்தத்தின் 8வது சுற்று பேச்சுவார்த்தை உருகுவேவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் 'டங்கல் திட்டம்' உருவாக்கப்பட்டது. இது பண்பளவில் மாறுபட்டிருந்தது.

வர்த்தகத்திற்கு தொடர்பில்லாத முதலீடுகள், சேவை வணிகம், அறிவுசார் சொத்துரிமை, வேளாண்மை போன்றவற்றை ஒப்பந்தங்களின் மூலம் ஏகாதிபத்தியங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வழியமைத்தது. அன்றைய காங்கிரஸ் - நரசிம்மராவ் அரசு முதுகை வளைத்து மண்டியிட்டு அமெரிக்கா ஏகாதிபத்தியற்கு முழுமையாக நம் நாட்டை விற்கும் இந்த அடிமைச் சாசனத்தில் கையொப்பமிட்டது. இன்று அதன் விளைவுகளைதான் நாம் அனுபவித்து கொண்டுள்ளோம்.

மாவோ, காலனியம் முற்றுப் பெறவில்ல;. புதிய காலனியமாக  தொடர்கிறது என்றார். குருசேவ் கும்பலை புதிய காலனிய தாசர்கள் என்றார். குருசேவின் இந்திய வாரிசுகளான சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் இந்தவகை புதிய காலனிய ஆதரவு கருத்துகள் இன்று எம்.எல் அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.  டங்கல் திட்டம்  மூலம்  எவ்வாறு இந்தியா உள்ளிட்ட புதிய காலனிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள்  அடிமைப்படுத்துகின்றன என்பதை நிறுவுவதால்  இந்த நூல் இன்றும் பொருத்தப்பாட்டுடன் விளங்குகின்றது.. இந்நூல் மஜஇக-வால் 1993-ல் வெளியிடப்பட்டது. தற்போது சமரன் மறுபதிப்பு செய்கிறது. ஏஎம்கே வழிகாட்டுதல்களை தொடர்ந்து பதிப்பிப்பதில் சமரன் பெருமிதம் கொள்கிறது.

பதிப்பாளர்

--------------------------------------------------------------------------------------------

 

அன்பார்ந்த தொழிலாளர்களே! விவசாயிகளே! பிற உழைக்கும் மக்களே!

நமது நாட்டை ஆளும் நரசிம்மராவ் கும்பல் காப்புவரி மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்த அமைப்பின்   (GATT) புதிய ஒப்பந்தத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள டங்கல் அறிக்கையை ஏற்று கையொப்பமிடுவது என முடிவெடுத்துள்ளதை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற ஜனநாயகவாதிகள் தங்களின் எதிர்ப்பினையும் போராட்டத்தையும் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் காட்  (GATT) அமைப்பு பற்றியும் அதற்காக முன்வைக்கப்பட்டுள்ள டங்கல் திட்ட அறிக்கை பற்றியும் அறிந்து கொள்வதுடன் பிற பகுதி உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் நாமும் இணைந்து போராடுவதும் இன்றைய அவசரப் பணியாகும்.

வர்த்தகம் மற்றும் காப்புவரிக்கான பொது ஒப்பந்த அமைப்பின் தோற்றமும் நோக்கமும்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான சர்வதேச அரசியல் சூழ்நிலையின் பிரதான அம்சங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம், ஒரு வலுவான சோசலிச முகாம் தோன்றிற்று. காலனி, அரைக்காலனி நாடுகளில் வீசத்தொடங்கிய தேசிய விடுதலைப் போராட்ட அலை எழுச்சியின் விளைவாக, அந்நாடுகளில் நேரடி காலனி ஆட்சி வடிவத்தைக் கைவிட்டு ஒரு புதிய காலனி ஆட்சி முறையையும் சுரண்டலையும் மேற்கொள்ளும்படி ஏகாபத்திய நாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பாசிச ஜெர்மனியும் ஜப்பானும் தோல்வி அடைந்தன; பிரிட்டனும் பிரான்சும் பலவீனமடைந்தன; போருக்குப் பிறகு அமெரிக்கா வல்லமை வாய்ந்த ஏகாதிபத்தியமாக உருவானது. இதன் விளைவாக ஏகாதிபத்திய சக்திகளின் பலாபலத்தில் மாற்றம் ஏற்பட்டது. பிறகு ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் கூட்டமைப்புகளை புனரமைப்பதற்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்தன. போரில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் மற்றும் உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு, பலவீனப்பட்டுப்போன தனது கூட்டாளிகளை நிர்ப்பந்தித்து அவற்றின் காலனிகளையும் செல்வாக்கு மண்டலங்களையும் தனக்கு திறந்து விடும்படிச் செய்வது சாத்தியமான ஒன்றாக ஆயிற்று. அமெரிக்கா தனது விருப்பங்களை பிற ஏகாதிபத்திய நாடுகளின் மீது திணிப்பதற்குச் சாதகமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான சர்வதேச அரசியல் சூழ்நிலை இருந்தது. இத்தகைய நிலைமையில் தனது பொருட்களுக்கு கட்டுப்பாடற்ற சந்தை, உபரி மூலதனத்திற்கு பாதுகாப்பான வாய்ப்புகள், குறைந்த செலவில் சுலபமாக கச்சாப் பொருட்களைப் பெறுவதற்கான ஆதாரங்கள் ஆகிய மூன்றையும் பெறுதல் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு, அது தனது மேலாதிக்கத்தின் கீழ் சர்வதேச நாணய அமைப்பையும் உலகளாவிய வர்த்தக முறையையும் கொண்ட ஒரு உலக முதலாளித்துவ பொருளாதார அமைப்பை நிறுவ விரும்பியது. உலகப் பொருளாதார அமைப்பைக் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்காவின் தலைமையில் 1944இல் "பிரெட்டன் உட்ஸ்" என்ற இடத்தில் ஒரு சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காலத்துக்குப் பிந்திய நிதி ஆதார அமைப்புக்கு உருவம் கொடுக்க இம்மாநாட்டில் உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் (IMF) தோன்றின I.T.G (சர்வதேச வர்த்தக அமைப்பு) உருவாக்கும் எண்ணமும் அதற்கு இருந்தது. ஆனால் பல காரணங்களால் அது உருப்பெறவில்லை. 1947இல் "காட்" (வர்த்தகம் மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்தம்) அதனிடத்தில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு தோன்றிய பன்னாட்டு நிதி, வளர்ச்சி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் - IMF, உலக வங்கி மற்றும் காட் - இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மூன்றாம் உலக நாடுகளை நவீன காலனி ஆதிக்கத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் ஒடுக்குவதற்குமான நிறுவனங்களாக இருக்கின்றன. பொருளாதாரத் துறையில் நவீனகாலனியாதிக்க நடவடிக்கைகளில் உலகவங்கி, IMF, GATT ஆகிய மூன்றும் முக்கிய பங்கை ஆற்றி வருகின்றன.

வர்த்தகம் மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்தம்  (GATT) அமைப்பின் குறிக்கோள் உலக நாடுகளுக்கிடையிலான சரக்கு வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவது என அவ்வமைப்பு கூறுகிறது. இது தொடர்பாக உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னால் ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 1.ஜெனிவா சுற்று (1947); 2. ஆனெசி சுற்று (1949); 3. டோர்குவே சுற்று (1951); 4.ஜெனிவா சுற்று (1955); 5. டில்லான் சுற்று (1960-61); 6. கென்னடி சுற்று (1964-67); 7. டோக்கியோ சுற்று (1978 - 79) ஆகியனவாகும். இந்த சுற்றுபேச்சுகள் அனைத்தும், இப்பொது ஒப்பந்த அமைப்பு  (GATT) பொதுவாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பாக அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் செயல்பட்டு வந்ததைத்தான் காட்டுகிறது. பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் மேலாதிக்கத்தையும், உலக வர்த்தகத்தில் செய்யும் அபாயகரமான சதிவேலைகளையும் "காட்" அமைப்பு எதிர்ப்பதே இல்லை. காட் அமைப்பின் கொள்கைகளுக்கு எதிராகப் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு பொது ஒப்பந்தத்தில் எந்தவிதமான வழிமுறைகளும் இல்லை.

முன்னர் நடந்த ஏழு சுற்றுப் பேச்சுகளிலிருந்து உருகுவே சுற்றுப் பேச்சு பண்பு வகையில் மாறுபட்டது.

உருகுவே சுற்றுப் பேச்சு 'காட்' அமைப்பின் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையாகும். இது பன்னாட்டு வர்த்தக (பேரங்களுக்கான) ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையாகும். இந்த சுற்றுப் பேச்சு 1986ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியன்று 'பண்டாடெல் எஸ்ட்' என்னும் இடத்தில் துவங்கியது. இந்த சுற்றுப் பேச்சு இதற்கு முன் நடைபெற்ற சுற்றுப் பேச்சுகளிலிருந்து மாறுபட்டது. அது எவ்வாறு மாறுபட்டது என்பதைப் பார்ப்போம்.

வர்த்தகம் மற்றும் சுங்க வரிக்கான பொது ஒப்பந்தம்  (GATT) என்பது சர்வதேச சரக்கு வர்த்தகம் தொடர்பான ஒரு ஒப்பந்தமேயாகும். பொருட்களின் வர்த்தகத்துடன் நேரடி தொடர்பில்லாத வெளி நாட்டு மூலதனம், சேவை வணிகம், அறிவுச் சொத்துரிமை போன்ற விசயங்களும், வேளாண்மையும் காட் ஒப்பந்த வரம்பிற்குட்பட்டவை அல்ல. ஆகையால் காட் என்பது பொருட்களின் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர வேறு பிரச்சினைகளைக் கையாள்வதற்கான ஒரு அமைப்பாகக் கருதக்கூடாது. இருப்பினும் இந்த சுற்றுப்பேச்சில் பொருட்கள் வர்த்தகத்துடன் நேரடி தொடர்பில்லாத மேற்கூறப்பட்ட விசயங்களை 'காட்' அமைப்பின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் முயற்சிக்கின்றன. ஆகையால் உருகுவே சுற்றுப் பேச்சு இதற்கு முன்னர் நடைபெற்று ஏழு சுற்றுப் பேச்சுகளிலிருந்து பண்பு வகையில் மாறுபட்டதாகும். இதுவே இந்த சுற்றுப் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவமுமாகும்.

உருகுவே சுற்றுப் பேச்சு வார்த்தையின் மூலம் சர்வதேச பொருட்களின் வர்த்தகத்துக்குத் தொடர்பில்லாத முதலீடுகள், சேவை வணிகம், அறிவுச் சொத்துரிமை, வேளாண்மை போன்றவற்றை பொது ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் முயற்சி செய்வதற்கான காரணம் என்ன?

1960-ஆம் ஆண்டுகளில் தோன்றிய நாடு கடந்து செயல்படும் ஏகபோக முதலாளித்துவ தொழில் நிறுவனங்கள் இன்று உலக உற்பத்தியையும் சந்தையையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டன. அவற்றின் பொருளாதார நடவடிக்கைகள் ஒரு மிகப்பெரும் நாட்டின் எல்லைகளுக்குள் கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டன. வேறுவிதமாகச் சொன்னால், நாடுகளின் எல்லைகளும் இறையாண்மையும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் விரிவாக்கத்திற்கும் தடைகளாகிவிட்டன. நாடு கடந்து செயல்படும் தொழில் கழகங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்கள் - சர்வதேச ஏகபோக மூலதனம் - விரைவாகப் பலம் பெற்றுள்ளது. தனிப்பட்ட நாடுகளின் மட்டத்திலும், ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதாரத்திலும் அவை உற்பத்தியின் முழுப் பிரிவுகளையும் அல்லது துறைகளையும் கைப்பற்றி ஏகபோக ஆதிக்கம் செலுத்துகிறது. 1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நாடு கடந்து செயல்படும் தொழில் கழகங்கள் மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள் முதலாளித்துவ உலகில் தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானதாகவும், அயல் வர்த்தகத்தில் சரிபாதிக்கு அதிகமானதையும், புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்திற்கான உரிமங்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தையும் தன்வசம் கொண்டிருந்தன. உலக முதலாளித்துவ பொருளாதார ஒருங்கிணைப்பு பிரமாதமாக முன்னேறியுள்ளது. இதனால் உலகிலுள்ள மூலப்பொருட்கள், ஆதாரங்கள், சந்தை, உழைப்பு, போக்குவரத்து சாதனங்கள், சேவைகள் முதலானவற்றை தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவதும், தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்வதும் சாத்தியமானதாகிவிட்டது. நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் உலகளவில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை மிக நெருக்கமாக ஒருங்கிணைப்பதில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.

உலக அந்நிய செலாவணி சந்தையில் இப்போது நாளொன்றிற்கு 1 டிரில்லியன் (1000 பில்லியன் டாலர்கள்) பெறுமானமான வர்த்தகம் நடைபெறுகிறது. 1986 இல் நடைபெற்றதைவிட இது மூன்று மடங்காகும்.

உலகளவில் நடைபெறும் தொழில் நுட்ப பரிமாற்றமும் இதே வேகத்தில் நடைபெறுகிறது.

உலக வர்த்தகமும் வேகமாக அதிகரித்த வண்ணமுள்ளது. 1993-இல் உலக வர்த்தகத்தின் மதிப்பு 8 டிரில்லியன் டாலர்களாக (8000 பில்லியன் டாலர்கள்) இருக்கும் என மதிப்பீடு செய்யப் பட்டிருக்கிறது. 1950 இல் நடைபெற்ற உலக வர்த்தகத்தின் மதிப்பைவிட இது 20 மடங்காகும்.

நாடு கடந்து செயல்படும் தொழில் கழகங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்கள் அந்நிய நாடுகளில் செய்துள்ள நேரடி முதலீடு ஏற்கெனவே (1993 இல் 2 டிரில்லியன் டாலர்களைக் (2000 பில்லியன் டாலர்கள்) தாண்டிவிட்டது.

உலக வர்த்தகத்தில் இன்று சேவைத்துறைகளான வங்கி, காப்பீடு, தொலைத் தொடர்பு வேகமாக வளர்ந்து வருகின்றன. உலக வர்த்தகத்தில் இவை நான்கில் ஒரு பங்கை வகிக்கின்றன.

ஆகையால், மூலதனம், பொருட்கள், சேவைகள் முதலியன உலகெங்கும் சுதந்திரமாக செல்வதற்கு நாடுகளின் எல்லைகள் மற்றும் இறையாண்மை தடையாக இருப்பதை அகற்றிவிட வேண்டும் என சர்வதேச ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் (TNC, MNC) நலன்கள் கோருகின்றன. எனவே, உருகுவே சுற்றுப் பேச்சின் மூலம் வர்த்தகம் மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்தத்தை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மறு சீரமைப்பதில் ஏகாதிபத்திய நாடுகள் - குறிப்பாக அமெரிக்கா - கவனத்தை செலுத்தியது. அரசு தலையீடு மற்றும் கட்டுப்பாடு இல்லாத 'தடையற்ற' வர்த்தகக் கொள்கை சர்வதேச அளவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும் பிற ஏகாபத்திய நாடுகளும் கோரிக்கையை முன்வைத்தன. "தடையற்ற வர்த்தகக்" கொள்கையின் கீழ் இதுவரை இடம் பெற்றிருந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் வர்த்தகத்தோடு, முதலீடுகள், சேவை, வணிகம், அறிவுசார் சொத்துரிமை, வேளாண்மை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இப்புதிய பிரச்சினைகளை வர்த்தகம் மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தி, சர்வதேச ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் (நாடு கடந்து செயல்படும் தொழில் கழகங்கள் பன்னாட்டு தொழில் கழகங்கள்) கட்டுப்பாடற்ற இயக்கத்தை உறுதி செய்யும் புதிய விதிகளை அமல் செய்யும் 'சர்வதேச பொருளாதார போலீசாக' உருவெடுக்க அவை விரும்பின.

ஏகாதிபத்திய நாடுகள் முன் வைத்துள்ள இந்த திட்டத்தின்படி, இத்தகைய புதிய கொள்கைகள் வர்த்தகம் மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுமானால், மூன்றாம் உலக நாடுகள் தங்களின் நாட்டு பொருளாதாரத்தை அவற்றிற்கு அகலத் திறந்துவிட வேண்டும்; அவ்வாறு செய்வது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அளவு கடந்த உரிமைகளை வழங்குவதோடு, மூன்றாம் உலக நாடுகளில் எவ்வித அரசாங்கத் தலையீடுமின்றி அவை நுழைவதற்கும், உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையாக அவற்றை நடத்தவும் வழி செய்யும். இத்தகைய "சுதந்திரம்" தொழில்துறை உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளுக்கு மட்டுமின்றி, வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, செய்தித் தொடர்பு பூன்ற சேவைகளுக்கும் வழங்கப்படும்.

"அறிவுசார் சொத்துரிமைகள்" அமல்படுத்துவதின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்; மூன்றாம் உலக நாடுகளின் சட்டங்களில் காப்புரிமை வழங்கப்பட வேண்டும். அவற்றை கண்காணிப்பதற்கு பொது ஒப்பந்தத்திற்கு போலீசு உரிமையையும் தர வேண்டும். இவ்வாறு செய்வது மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் நுட்ப ஏகபோக அதிகாரத்தைப் பெறுவதற்கு உத்திரவாதம் செய்யும்.

பொது ஒப்பந்தத்தின் கீழ் முதலீடு, சேவை வணிகம், மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் ஆகிய துறைகளைக் கொண்டு வருவதால், மூன்றாம் உலக நாடுகளில் இதுவரை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வந்த துறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிடும். அதோடு வேளாண்மைத் துறையையும் கொண்டு வருவதால், இந்நாடுகளின் வேளாண்மைத் துறையின் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் நிறுவப்படும். இந்நாடுகள் உணவுப் பொருட்கள் உற்பத்தியின் சுயசார்பை இழந்து, உணவுக்குக்கூட ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் விலை ஏற்படும். இந்நாடுகளில் வேலையின்மை, பஞ்சம், பசி பட்டினிச் சாவுகள் தலை விரித்தாடும்.

மேலும், 'சுதந்திரச் சந்தை' பொருளாதாரம் மற்றும் "தடையற்ற வர்த்தக"க் கொள்கைகள் அமல்படுத்துவதின் விளைவாக, மூலதனக் குவிப்பும் ஏகபோகங்களும் வளரும்; இந்நாடுகளின் பொருளாதாரம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிறிய எண்ணிக்கையிலான பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தின் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்குள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளும்கூட அரித்துச் செல்லப்படும். மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் கொள்கைகளை வகுத்தல், சட்டமியற்றுதல் மற்றும் அவற்றை அமல்படுத்தும் அதிகாரங்களை இழந்து பொம்மை அரசாங்கங்களாக மாற்றப்பட்டு, அரைகுறை இறையாண்மையையும் இழந்துவிடும். இதனால் இந்நாடுகளின் மீது நவீன காலனித்துவ ஆதிக்கம் மேலும் திடப்படுத்தப்பட்டுவிடும்.

காட்  (GATT) அமைப்பிற்கான டங்கல் திட்டமும் உள்ளடக்கமும்

அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி உலக முதலாளித்துவ பொருளாதாரம் மிக நெருக்கமாக ஒருங்கிணைவதில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, வர்த்தகம், மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்தத்தின் மூலம்  (GATT) நேரடி அந்நிய முதலீடு, சேவை வணிகம், அறிவுசார் சொத்துரிமைகள் ஆகிய துறைகளை ஆளுமை புரியும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச விதிகளை திருத்தியமைப்பதற்கு டங்கல் திட்டம் முயல்கிறது. நாடுகளின் பொருளாதார இறையாண்மை; நாடுகளின் வளர்ச்சி கட்டத்தின் அடிப்படையில் நாடுகளை பாகுபடுத்தி வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு தனி உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு ஆகிய இரண்டும் நேரடி மூலதனத்தின் (நாடு கடந்து செயல்படும் மூலதனத்தின்) சுதந்திரமான செயல்பாடுகளுக்கு தடைகளாக இருக்கின்றன. இத்தடைகளை ஒரு தண்டனை நடவடிக்கை முறையின் மூலம் அகற்றுவதுதான் அந்த திருத்தியமைத்தலின் சாராம்சமாகும். மேலும் டங்கல் திட்டம் ஒரு "புதிய உலக ஒழுங்கமைப்பை" ஏற்படுத்த முயல்கிறது. அது ஏற்படுத்த விரும்பும் உலக ஒழுங்கமைப்பில், பரஸ்பர சார்பு மற்றும் சுதந்திர சந்தை என்பனவற்றின் பெயரால், மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தங்களின் பொருளாதார சுதந்திரத்தை நாடு கடந்து செயல்படும் மூலதனத்தின் (சர்வதேச ஏகபோக மூலதனத்தின்) நலன்களுக்குச் சேவை செய்யும் சர்வதேச நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். முதலாவதாக, நாடுகளின் பொருளாதார இறையாண்மைக்கு தரப்பட்டுவந்த இலக்கணத்தைத் திருத்தி ஒரு புதிய இலக்கணத்தை தருவதின் மூலமாக அது இக்குறிக்கோளை அடைய முனைகிறது. நாடுகள் பொருளாதார இறைமையுடையது என கருதப்பட்டு வந்ததற்கு மாறாக, இப்போது நாடுகளின் பொருளாதார இறையாண்மை முதலாளித்துவ பொருளாதார உறவுகள் உலகமயமாவதற்கு உட்பட்டது என்ற இலக்கணத்தை தருகிறது. நாடுகளின் பொருளாதார இறையாண்மையை இரு சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடச் செய்வது, நாடுகள் ஒரு சுதந்திரமான வளர்ச்சிப் பாதையைக் கடைப்பிடிப்பதற்கான உரிமையை நிராகரித்துவிடுகிறது.

சர்வதேச ஏகபோகங்களைக் கட்டுபடுத்துவதற்கான அதிகாரத்தை பெயரளவுக்காவது மூன்றாம் உலக நாடுகள் கையாண்டு வருகின்றன. டங்கல் திட்டம் மிக விசுவாசமாக சேர்த்துக் கொண்டுள்ள ஏகாதிபத்திய நாடுகளின முன்மொழிதல்கள் (Proposals) மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார இறையாண்மை ஆக்கிரமிக்கபடுவதைச் சட்ட ரீதியான ஒன்றாக ஆக்குகிறது. தற்சார்புப் பொருளாதாரக் கொள்கைகளை கைவிட வேண்டும் என மூன்றாம் உலக நாடுகளுக்கு அது ஆணையிடுகிறது. தேச கொள்கைகளை உருவாக்கும் செயல்முறைகளைக் கைப்பற்றிக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தங்களின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமையை நிராகரித்து விடுகிறது. மறுபுறம், பரஸ்பர சார்பு என்ற கருத்தாக்கம் உலக ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள் மூன்றாம் உலக நாடுகளை அடிபணியச் செய்வதே ஆகும். ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குச் சேவை செய்யும் ஒரு சர்வதேச நிறுவனத்திடம் மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மையை ஒப்படைக்கச் செய்வது, ஏகாதிபத்தியத்தின் அரசியல் பொருளாதார ஆதிக்கங்களுக்கு இந்நாடுகளை கீழ்படியச் செய்வதையும் அத்துடன் வரும் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்வது என்றே பொருள்படும்.

நாடுகளின் பொருளாதார இறையாண்மை குறித்து ஒரு கேடான இலக்கணத்தைத் தருவதோடு டங்கல் திட்டம் நின்று விடவில்லை. உலக நாடுகள் சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் இருப்பதால் - நாடுகளைப் பாகுபடுத்தி வளரும் நாடுகளுக்கு - மூன்றாம் உலக நாடுகளுக்குத் - தனிச்சிறப்பான உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்று வந்தது. டங்கல் திட்டம் இக்கோட்பாட்டையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது. முந்தைய GATT ஒப்பந்தங்களில் அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளும் டங்கல் திட்டத்தில் நீக்கப்ப்பட்டுள்ளன.

அந்நிய ஏகபோக முதலாளித்துவத்தின் போட்டியிலிருந்து தங்கள் உள் நாட்டு தொழில்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும், அந்நியச்செலாவணி பற்றாக் குறையின் காரணமாகவும் வளரும் நாடுகள் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதை 'காட்' அமைப்பு அனுமதித்து வந்தது டங்கல் திட்டம் இதையும் நிராகரித்துவிட்டது அத்துடன், வளரும் நாடுகளுக்கென இதுவரை அளிக்கப்பட்டு வந்துள்ள சலுகைகள் இனி மிகவும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று டங்கல் திட்டம் கூறுகிறது. இதனால் வளரும் நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகளும் ஒரே நிலையில் வணிகத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறுவதின் மூலம் டங்கல் திட்டம் ஒரு சமனற்ற போட்டியை ஆதரிக்கிறது.

ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் நிலவும் தேக்க வீக்கத்திலிருந்து மீளவும், அவற்றின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மூன்றாம் உலக நாட்டு மக்களின் தோள்கள் மீது ஏற்றி விடவும், மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளின் சரணாகதியைப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச ஏகபோக மூலதனத்திற்கு - பன்னாட்டு தொழில் கழகங்கள் மற்றும் நாடு கடந்து செயல்படும் தொழில் கழகங்களுக்கு உலகச் சந்தையை ஏற்படுத்திடவும் டங்கல் திட்டம் உருகுவே சுற்றுப் பேச்சைப் பயன்படுத்துகிறது.

காட் அமைப்பின் தலைவர் ஆர்தர் டங்கல் முன்வைத்த திட்டமானது முக்கியமாக (1) சேவை வணிகம் குறித்த பொது ஒப்பந்தம் (GATS) (2) வணிகம் தொடர்பான முதலீட்டு வரையறை (GATS) (3) வணிகம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்பு தனிக்காப்புரிமைகள் (TRIPS) (4) பன்முக வணிக அமைப்பு (MTO) (5) வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய புதிய ஒப்பந்தங்களை இணைப்பாகக் கொண்டுள்ளது.

இவையனைத்தும் பகுதி பகுதியாக அன்றி ஒட்டு மொத்தமாக ஏற்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட அனைத்து ஒப்பந்தப் பிரிவுகளும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்டவையே ஆகும்.

சேவை வணிகம் குறித்த பொது ஒப்பந்தம் (GATS) (General Agreement on Trade Services))

வங்கி, காப்பீடு, தொலைத் தகவல் தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, போக்குவரத்து, கல்வி, உடல் நலம் போன்ற பல சேவைத் துறைகளில் நடைபெறும் வர்த்தகத்தை வணிகம் மற்றும் சுங்கவரிக்கான பொது ஒப்பந்த ('காட்'டின்) வரம்புக்குள் கொண்டு வருகிறது, டங்கல் திட்டம். 'தடையற்ற வர்த்தக' கொள்கைகளை சேவை வணிகத்திற்கும் டங்கல் திட்டம் விரிவுபடுத்துகிறது.

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் - ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தித் துறை வளர்வதைவிட சேவைத்துறை அதிகமாக வளர்கிறது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் சேவைத்துறை வணிகத்தை உலக அளவில் பிரம்மாண்டமாக விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. சேவைத்துறை ஏற்றுமதியில் இன்று முன்னணியில் நிற்பது அமெரிக்காதான். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிடி வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உலக வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள விரும்புகின்றன. சேவைத் துறைகள் பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் உள்நாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அநேக மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வங்கி, காப்பீடு, நிதி, செய்தித் தொடர்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்ற சேவை நிறுவனங்களில், அன்னிய நிறுவனங்கள் நுழைவதற்குள்ள தடைகளை அகற்ற பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆகையால் டங்கல் திட்டம், பொருட்கள் வர்த்தகத்துடன் நேரடி தொடர்பில்லாத சேவை வணிகம் குறித்த பொது ஒப்பந்தத்தை "காட்" ஒப்பந்த வரம்பிற்குள் கொண்டு வருகிறது.

இந்திய அரசு சேவை வணிகம் குறித்த டங்கல் திட்டத்தை ஒப்புக் கொண்டால், அந்நிய பன்னாட்டு நிறுவனங்களை உள்னாட்டு நிறுவனங்களைப் போல் நடத்த வேண்டும். பன்னாட்டு தொழில் கழகங்களுக்கு (TNC, MNCs) நம் நாட்டில் சேவை வணிகம் செய்வதற்கு சுதந்திரம் தரவேண்டும்; அத்துடன் அத்துறையில் முதலீடு செய்வதற்கும் சுதந்திரம் தரவேண்டும். அதாவது அத்துறையில் வர்த்தகம் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் தற்போதுள்ள சில தடைகளை அகற்ற வேண்டும். ஒப்பந்தம் மீறப்படுமானால் அந்நிய முதலீட்டாளர்களுக்கு உள்ள - பன்னாட்டுக் கம்பெனிகளுக்குள்ள ஒட்டு மொத்த பதிலடி தரும் உரிமையை ஏற்க வேண்டும். உதாரணமாக, அந்நிய நாட்டின் - ஒரு ஏகாதிபத்திய நாட்டின் வங்கிக் கிளையை இந்தியாவில் திறக்க அனுமதி மறுக்கப்படுமானால், அந்த அந்நிய நாடு தன்னாட்டில் இந்திய நாட்டிலுள்ள ஒரு வங்கியின் கிளையை திறக்க அனுமதி மறுப்பதோடு, இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கலாம். இத்தகைய ஒரு ஒட்டுமொத்த பதிலடி தரும் உரிமை வழங்கப்படுவதற்கான காரணம் இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளில் - ஏகாதிபத்திய நாடுகளில் வங்கிக் கிளைத் திறப்பதற்கோ வர்த்தக அமைப்புகளை விரிவுப்படுத்துவதற்கோ முதலீடு செய்து தொழில் நிறுவனங்களைத் துவக்குவதற்கோ வலிமை இல்லை, ஆகையால் ஒரு துறை தொடர்பான ஒப்பந்தம் மீறப்படுமானால் மற்ற துறைகளின் மீது பதிலடி கொடுத்தால்தான் அந்த நாட்டை பணிய வைக்க முடியும். ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளை பணிய வைப்பதற்கும், ஏகாதிபத்திய நாடுகள் இடும் கட்டளைகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் கீழ்ப்படிந்து அவற்றை அமல்படுத்தச் செயவதற்கும், ஒட்டுமொத்த பதிலடி தரும் உரிமை என்பது ஒரு சிறந்த ஆயுதமாகும்.

அந்நிய சேவை நிறுவனங்கள் உள் நாட்டு சேவை நிறுவனங்கள் போல் நடத்தப்படவேண்டும் என்பதன் பொருள் அவற்றிற்கு எந்த நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என்பதே ஆகும் அப்படியென்றால் நமது உள் நாட்டு நிறுவனங்களோடு நியாயமற்ற ஆதிக்கப் போட்டியை நடத்துவதற்கு ஏகாதிபத்திய ஆதிக்கப் போட்டியை நடத்துவதற்கு ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கு அனுமதி அளிப்பதாகும். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த அந்நிய பன்னாட்டு சேவை நிறுவனங்களை உள்நாட்டு நிறுவனங்களுடன் சுதந்திரமாக போட்டியிட அனுமதித்தால், அவை உள்நாட்டு சேவைத்துறை நிறுவனங்களை வீழ்த்தி தமது ஏகபோகத்தை நிலைநாட்டி விடும். அந்நிய நிதிமூலதனம் நமது நாட்டு வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுமானால் தொழில்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பொருளாதாரங்களிலும் தனது ஆதிக்கத்தை நிறுவி விடும்.

நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறையோ, பன்னாட்டுத் துறையோ எதுவும் மிஞ்சாது. அந்நிய நிதி, மூலதன ஆதிக்கம் நம் நாட்டின் அயல் நாட்டு வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடும்.

அந்நிய நிதி மூலதன ஆதிக்கம் தேசிய முதலாளித்துவ நிறுவனங்களை வளரவிடாமல் ஒடுக்கும். அந்நிய நிதி மூலதன ஆதிக்கம் அரை நிலப் பிரபுத்துவ சக்திகளை நிலைநிறுத்திக் கொண்டு மிகவும் பிற்போக்கான ஜனநாயக விரோதமான முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பலப்படுத்தும்.

பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மக்கள் தொடர்பு, தொலைக்காட்சி, வானொலி, கல்வி, உடல் நலம், அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி, மற்றும் பிற மேற்கட்டுமான அமைப்புகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும். இதனால் தேச விரோத, ஜனநாயக விரோத, மக்கள் விரோத, தரங்கெட்ட, சீரழிந்த பண்பாடு வளர்வதற்கு ஊக்கம் அளிக்கப்படும். அந்நிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது என்பதன் பெயரிலும், உள் நாட்டு சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதன் பெயரிலும் விபச்சார விடுதிகள் நடத்துவது ஒரு பெரும் தொழிலாக வளர்க்கப்படும். அந்நிய நிதிமூலதன ஆதிக்கம் அரசியல் வாழ்வில் ஜனநாயகத்தை ஒடுக்கி பாசிசத்திற்கு இட்டுச் செல்லும். சுருங்க கூறின், சுதந்திர, கட்டுப்பாடற்ற சேவை வணிகம் நவீன காலனித்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு ஒரு சாதனம்.

வணிகம் தொடர்பான முதலீட்டு வரையறைகள் (TRIMS) (Trade Related Investment Measure)

டங்கல் அறிக்கையின் இப்பிரிவின்படி அந்நிய முதலீட்டாளர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய முதலீட்டாளர்களைப் போலவே நடத்தப்பட வேண்டும். அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் எந்த அளவு முதலீடு செய்ய அனுமதிப்பது, எத்தகைய தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளையும் நம் நாட்டு மூலப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும், இந்திய வல்லுநர்களையே பதவிக்கமர்த்த வேண்டும். லாபத்தினை வெளிக்கொண்டு செல்லாமல் இந்தியாவிலேயே மறுமுதலீடு செய்ய வேண்டும். அந்நிய செலாவணியை ஈட்டும் நோக்கில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். என்றெல்லாம் அந்நிய முதலீட்டாளர்களை கட்டுப்படுத்தும் உரிமையை இனி இந்திய அரசு இழந்துவிடும்.

இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் விரும்பிய இடங்களில் விரும்பிய தொழில்களில் தம் விருப்பம்போல் முதலீடு செய்து நம் நாட்டின் கனிம வளங்கள், குறைந்த விலையில் மனித உழைப்பு, பரந்த சந்தை ஆகியவற்றை சுரண்டி கொள்ளையடித்து செல்வர், உள் நாட்டு மூலப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்றோ அல்லது அதிகம் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தும் விதத்தில் பல நோக்கு தொழில் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்றோ இனி கட்டுப்படுத்த முடியாது. ஆகையால் இனி பன்னாட்டு நிறுவனங்கள் தமக்குத் தேவையான மூலப்பொருட்களை விலை குறைவாக கிடைக்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்வதுடன் தமக்கு லாபமிகு தொழில் உற்பத்தியில் மட்டுமே ஈடுபடுவர். உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என பன்னாட்டு நிறுவனங்களை இனி கட்டுப்படுத்த முடியாதாகையால் நம் நாட்டின் அந்நிய செலாவணி இழப்பு மேலும் கூடுதலாகும்.

தடையற்ற இறக்குமதிக் கொள்கையால் நாட்டின் சிறுவீத மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் திவாலாகும் நிலை உருவாகும். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வீதிக்கு விரட்டப்படுவர்.

டங்கல் திட்டத்தின் இவ்வொப்பந்தத்தின் விளைவாக நாட்டின் சமூகப் பொருளாதார வாழ்வு அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படும். மறுபுறம் இந்திய அரசு அனைத்து கட்டுப்படுத்தும் அதிகாரங்களையும் இழந்து வெறும் பொம்மை அரசாக மாறி நிற்கும்.

இதனால் நம் நாட்டில் இதுவரை பொதுத்துறையின் கட்டுபாட்டின் கீழிருந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். மேலும் புதிய தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்வதற்கேற்ப இந்நிறுவனங்களில் தொழிலாளர் வெளியேற்றுக் கொள்கையும் கடைபிடிக்கப்படும்.

மேலே கூறியப்படி டங்கல் திட்டத்தில் வலியுறுத்தப்படும் தடையற்ற இறக்குமதிக் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கோருதல், தொழிலாளர் வெளியேற்றக் கொள்கை போன்றவற்றை ஏகாதிபத்தியவாதிகள் சர்வதேசிய செலாவணி நிதியம் (IMF), உலக வங்கி போன்ற நவகாலனியாதிக்கத்திற்கான வேறு கருவிகள் மூலம் நம் நாட்டில் ராஜீவ் காலம் தொட்டே அமுல்படுத்தத் துவங்கிவிட்டனர். இத்தகைய கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியதன் விளைவாக நம் நாட்டில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காண்போம்.

தாராள இறக்குமதிக் கொள்கையை செயல்படுத்தத் துவங்கிய பின் நம் நாட்டில் சுமார் 1.96 லட்சம் சிறு தொழிற்கூடங்கள் நலிவடைந்து போனதாக அத்துறைக்கான அமைச்சரே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அரசின் நலிவடைதல் என்ற அளவுகோலுக்கு வராமல் ஆனால் அதேவேளையில் உண்மையிலேயே நலிவடைந்துபோன சிறு தொழிற்சாலைகள் இன்னும் பல ஆயிரக்கணக்கில் இருப்பதாக சிறு தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அண்மையில் ரிசர்வ் வங்கி நலிவடைந்த தொழிலகங்களில் சுமார் 64367 தொழிற்சாலைகளில் அவற்றின் துறை மற்றும் அவற்றால் ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 64367 தொழிற்சாலைகளில் பொறியியல் துறையில் மட்டும் 24941 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதனால் ரூ.477 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மேலும் ரசாயனப் பொருள் உற்பத்தியில் 8203 தொழிற்சாலைகள் நலிவுற்றதால் ரூ.282.2 கோடியும் நெசவுத் தொழிலில் 16149 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.171.80 கோடியும், மின் துறையில் 6057 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.134.70 கோடியும், இரும்பு எஃகு தொழிலில் 2942 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.129.70 கோடியும், காகிதத் தொழிலில் 2634 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.36.51 கோடியும், ரப்பர் உற்பத்தியில் 2069 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.39.63 கோடியும், சிமெண்ட் உற்பத்தியில் 737 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.20.35 கோடியும், சர்க்கரை உற்பத்தியில் 348 தொழிலகங்கள் நலிவுற்றதால் ரூ.14.09 கோடியும், சணல் உற்பத்தியில் 287 தொழில்கங்கள் நலிவுற்றதால் ரூ.6.16 கோடியும் நஷ்டமேற்பட்டுள்ளன.

மேற்சொன்ன கணக்கின்படி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வெறும் 64367 நலிவுற்ற தொழிலகங்களால் மட்டும் மொத்தம் ரூ.1312.14 கோடி நஷ்டமேற்பட்டுள்ளது. மேற்சொன்ன ஆய்வுப் பட்டியலில் இடம் பெறாத நலிவுற்ற நிறுவனங்கள் அரசின் கணக்குப்படியே கூட 1,57,075. இவற்றின் மொத்த நஷ்டம் ரூ.1408.61 கோடியாகும். அரசு தரும் இக்கணக்கைவிட இப்படிப்பட்ட விஷயங்களில் அசல் கணக்கு அதிகமாகவே இருக்கும் என்பதை தினமணி போன்ற முதலாளிய பத்திரிக்கைகளே தெரிவிக்கின்றன. மேலே கூறிய 1.96 லட்சம் தொழிலகங்கள் நலிவுற்றதால் அதன் நேரடி விளைவாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதிக்கு விரட்டப்பட்டனர்.

அடுத்ததாக தாராள இறக்குமதிக் கொள்கையின்படி இறக்குமதி பொருட்களுக்கான காப்புவரிகள் நீக்கப்பட்டுவிட்டதால் பன்னாட்டு நிறுவனங்களின் இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன உரங்களின் விலை நம் நாட்டின் உற்பத்தி செய்யப்படும் ரசாயன உரங்களின் விலையை விட டன் ஒன்றுக்கு 3000 ரூபாய் குறைவாக உள்ளது. இதனால் சமீபத்தில் நம் நாட்டின் உர உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன. உற்பத்தி இழப்பை ஈடுகட்டி உற்பத்தியைத் தொடரும் நோக்கில் அன்னிய இறக்குமதிப் பொருளுக்கு காப்பு வரியை உயர்த்தி இழப்பை ஈடுசெய்வதற்குப் பதிலாக இந்திய அரசானது 1993 - 94 ஆம் ஆண்டிற்கான மானியமாக ரூ.756 கோடியை வழங்கியுள்ளது. உண்மையில் தொழில் உற்பத்திக்காக வழங்கும் இம்மானியத்தை விவசாயிகளுக்காக வழங்கும் உர மானியம் எனக் கூறி விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றுகிறது.

இவையன்றி பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணியையும் நரசிம்மராவ் கும்பல் துவங்கிவிட்டது மிகப்பெரும் அரசுத்துறை நிறுவனமான ரயில்வேயின் பல பிரிவுகள் தனியாருக்கு திறந்து விடப்பட்டுள்ளன. மேலும் உள் நாட்டுப் பயணிகள் விமானப் போக்குவரத்தும் தனியாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் புதிய தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்வதற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை இறக்குமதி செய்வதற்கேற்ப புதிய வேலைவாய்ப்புகள் மூடப்பட்டதுடன் கட்டாயப்பணி ஓய்வுத்திட்டம் போன்றவற்றின் மூலம் தொழிலாளர் வெளியேற்றக் கொள்கைகளையும் நரசிம்மராவ் கும்பல் நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டது. இதனால் ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை பெறும் வாய்ப்பை இழந்தனர். மறுபுறம் வேலையில் இருந்து கோடிக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் வீதிக்கு விரட்டப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இனிமேல் டங்கல் திட்டத்தின் வணிகம் தொடர்பான முதலீட்டு வரையறைகள் (TRIMS), மற்றும் வணிகம் சார்ந்த பொது ஒப்பந்தம் (GATS) ஆகியவற்றையும் ஏற்று செயல்படுத்தத் துவங்கினால் மேலே கூறிய போக்குகள் மேலும் தீவிரமடையும்.

வணிகம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்பு தனிக்காப்புரிமை (TRIPS) Trade Related Intelectual Patents sight

டங்கல் திட்டம் தொழில் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுடன், மருந்துப் பொருட்கள், உணவுப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தனிக்காப்புரிமை வழங்குவதற்கான ஒப்பந்தத்தையும் முன்வைக்கிறது.

19-ஆம் நூற்றாண்டு வரை அதாவது உலக முதலாளித்துவத்திற்கிடையில் சுதந்திரப்போட்டி நிகழ்ந்த காலத்தில் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் தனிக்காப்புரிமை கோரப்படவில்லை. ஆனால் ஏகபோகம் தோன்றிய பிறகு புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை அந்தந்த நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தனிக்காப்புரிமை சட்டங்கள் அமலுக்கு வந்தன.

இதுநாள் வரை அறிவியல் தொழில் நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே நடைமுறையிலிருந்த தனிகாப்புரிமை இனி டங்கல் திட்டத்தின் மூலம் தாவரங்கள், உணவுபொருட்கள், விலங்குகள் போன்றவற்றின் புதிய ரக கண்டுபிடிப்புகளுக்கும் விரிவாக்கப்படும். இதன்மூலம் மனித குலத்தின் அறிவுத்திறனை முற்று முழுக்க நிதிமூலதனத்தின் நலனுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்காகவும் மாற்றுவதே டங்கல் திட்டத்தின் நோக்கம்.

ஏற்கெனவே உலகளவில் 35 லட்சத்திற்கும் கூடுதலான கண்டுபிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே தனிக்காப்புரிமை பெற்றுள்ளன. அதாவது உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெறப்பட்ட தனிக்காப்புரிமைகளில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே மூன்றாம் உலக நாடுகள் மொத்தமும் பெற்றிருக்கின்றன. இதுவரையிலும் கூட வளர்ச்சிபெற்ற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளே தனிக்காப்புரிமை மூலம் அறிவியல் தொழில் நுட்பக் கண்டு பிடிப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதையே இத்தகவல் தெரிவிக்கின்றது. டங்கல் திட்டத்தின் மூலம் இது விரிவாகவும் கடுமையாகவும் செயல்படுத்தப்படும். மேலும் டங்கல் திட்டத்தை ஏற்பதன் மூலம் நம் நாட்டில் ஏற்கனவே அமுலில் இருக்கும் இந்திய தனிக்காப்புரிமை சட்டம் அதன் செயல்பாட்டை இழக்கும்.

இந்திய தனிக்காப்புரிமை சட்டத்தின் வரலாறும் உள்ளடக்கமும்

1858 இல் காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிக்காப்புரிமை சட்டத்தின் எதிர்மறை விளைவுகளை ஆராயும் நோக்கத்துடன் 1947 ஆட்சி மாற்றத்திற்குப்பின் 1948-இல் ஜஸ்டிஸ் பக்க்ஷி டக்சந்த் என்பவரின் தலைமையிலும் 1957ல் ஜஸ்டிஸ் ராஜகோபாலய்யர் என்பவரின் தலைமையிலும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த ஆய்வுக் குழுக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் கொண்டு வந்த தனிக்காப்புரிமை சட்டம் இந்தியாவில் அன்னிய நிறுவனங்களின் ஏகபோகத்தை வளர்க்கிறது என்பதை ஆய்வு செய்து முன் வைத்தன. இவ்விரு ஆய்வுக்குழுக்களின் முடிவுகளும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மற்றும் திட்டக்குழுவின் இணை குழுவிலும் விவாதிக்கப்பட்டது. இருபதாண்டுகள் தொடர்ந்த விவாதத்திற்குப்பின் 1970-இல் இந்திய தனிக்காப்புரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

1970-ஆம் வருடத்திய இந்திய தனிக்காப்புரிமை சட்டம் இந்திய ஆளும் வர்க்கத்தின் பேரம் பேசும் ஆற்றலை தற்காத்துக்கொள்ளும் விதத்தில் விவசாயம், உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், அணுசக்தி ஆகியவை தொடர்பான கண்டுப்பிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமை வழங்குவதை நிராகரித்துவிட்டது. மேலும் அறிவியல் தொழில் நுட்ப பொருட்களின் உற்பத்திக்கு தனிக்காப்புரிமை வழங்காமல் உற்பத்திக்கான செயல்முறைக்கு மட்டுமே தனிக்காப்புரிமையை வழங்குகிறது. இதன்படி ஒரு நிறுவனம் புதியதாக கண்டுபிடித்த பொருள் அல்லது மருந்தை வேறு நிறுவனம் வேறுவிதமான உற்பத்தி செய்முறையை பயன்படுத்தி அதே பொருளை அல்லது மருந்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்தந்த நிறுவனங்களின் உற்பத்தி செயல்முறைகளுக்கு மட்டுமே தனிக்காப்புரிமை வழங்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

ஆனால் டங்கல் திட்டமோ ஒரு நிறுவனம் கண்டுபிடித்த புதிய பொருளை அல்லது மருந்தை வேறு செய்முறையை பயன்படுத்தி கூட செய்பொருளை உற்பத்தி செய்யக்கூடாது என்ற வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கும் இருபதாண்டு காலம் தனிக்காப்புரிமை வழங்கப்பட வேண்டும் என கோருகிறது.

இத்தகைய டங்கல் திட்டத்தை ஏற்பதால் இந்தியாவின் 1970-ஆம் வருடத்திய தனிக்காப்புரிமை சட்டம் தானாகவே செயலிழந்துவிடும். நம் நாட்டில் கடந்த காலங்களில் பல நூற்றுக்கணக்கான புதிய உயிர் காக்கும் மருந்துகளை இந்திய தனிக்காப்புரிமை சட்டம் வழங்கிய பாதுகாப்பின் மூலம் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் மாற்று செய்முறைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து வந்தனர். மேலும் ஆண்டுதோறும் சுமார் 800 கோடி ரூபாய் அளவிற்கு மருந்துப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் கொண்டதாக இந்தியா இருந்தது.

இனி டங்கல் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பின் எந்த ஒரு புதிய மருந்தையும் வேறு செய்முறையை பயன்படுத்திக்கூட 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியாது. உரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான ராயல்டி செலுத்துவதன் மூலமோ அல்லது தொழில் நுட்பக் கூட்டுகளை ஏற்படுத்திக்கொண்ட பிறகேதான் நாம் அந்த மருந்துகளை அல்லது புதிய பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதுவரை நாம் அவற்றை பயன்படுத்த முடியாது. நம் மக்கள் நோய்களிலிருந்து உயிரை காத்துக்கொள்ளும் உரிமையினை பன்னாட்டு நிறுவனங்களே இனி தீர்மானிக்கும்.

ஏற்கெனவே நாம் கூறியப்படி புதிய கண்டுப்பிடிப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ள தனிக்காப்புரிமைகளில் உலகளவில் 75 சதவிகிதத்தை வளர்ச்சி பெற்ற ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் பெற்றுள்ளதால் டங்கல் திட்டத்தின் மூலம் அவை நம் நாட்டின் சமூக வாழ்வின் அனைத்து உற்பத்தித் துறையின் மீதும் தனது கோரப்பிடியை நிறுவும். இனி நம் நாட்டில் அனைத்து உற்பத்தித் துறையிலும் எந்தப் பொருளை உற்பத்தி செய்வது, எந்த அளவிற்கு உற்பத்தி செய்வது, எந்த விலைக்கு விற்பது போன்றவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை இவர்கள் பெறுவார்கள். மறுபுறம் இந்திய அரசோ கட்டுப்படுத்தும் உரிமைகள் அனைத்தும் இழந்து புதியவகை அடிமை அரசாக மாறி நிற்கும்.

அடுத்ததாக டங்கல் திட்டமானது வேளாண்மை வளர்ச்சிக்கான ஒப்பந்த திட்டத்தையும் தனியாக முன் வைக்கிறது. இதன் நோக்கமானது இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்துறையையும் முற்று முழுவதுமாக பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் கொள்கைக்கும் திறந்து விடுவதே ஆகும்.

காட்  (GATT) ஒப்பந்தத்தில் விவசாயத்துறை சேர்க்கப்படுவதன் காரணமும் திட்ட உள்ளடக்கமும்:

1991-இல்  (GATT) காட் ஒப்பந்தத்திற்காக நடந்த உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் முதன் முதலில் விவசாயத்துறைக்கான பொது ஒப்பந்தத் திட்டம் முன் வைக்கப்பட்டது.

டங்கல் அறிக்கை கீழ் வருவனவற்றை ஒப்பந்தத்திற்கான திட்டமாக முன் வைத்துள்ளது:

1. உணவுப்பயிர்கள், தாவரங்கள் ஆகியவற்றின் நவீனரக விதைகள் மற்றும் புதியரக விலங்கினங்கள். நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமை வழங்கப்பட வேண்டும்.

2.         விவசாய உற்பத்திக்கு வழங்கப்படும் மானியங்கள் உற்பத்தியின் மொத்த மதிப்பில் 10 சதவிகிதத்திற்கு குறைக்க வேண்டும். மற்றும் புதிய மானியங்கள் ஏதும் வழங்கப்படக் கூடாது.

3. உணவு தானிய வர்த்தகத்தில் இதுவரை கடைப்பிடிக்கப்படும் இறக்குமதிக்கான தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு நாடும் தனது மொத்த உற்பத்தியில் 3.3 சதவிகித அளவிற்கு உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

4. ஏற்றுமதிக்காக சுகாதாரமிக்க தரம் கொண்ட பொருட்கள் எனும் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுதல்.

5.         பொது வினியோக முறையை ஒழித்தல்.

ஆகியவற்றை விவசாயத்துறைக்கான ஒப்பந்தத் திட்டமாக டங்கல் முன் வைத்துள்ளார்.

வேளாண் துறையில் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடந்தகால அனுபவங்களை உலகப் பொதுத் திட்டமாக்குவதே டங்கல் திட்டம்

அமெரிக்க ஏகாதிபத்தியம் பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வேளாண்மைத் துறையில் தனது பெரும் வேளாண் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு 60ஆம் ஆண்டுகளில் அந்நாடுகளின் விவசாயத் துறையில் கீழ்வரும் திட்டங்களை செயல்படுத்தத் துவங்கினர்.

1. பசுமைப்புரட்சி, 2. சரக்கு போக்குவரத்திற்கான கட்டுமானப் பொருட்களின் வளர்ச்சி, 3.ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி, 4. விவசாயம் சார்ந்த தொழிலகள், 5. தடையற்ற ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை ஆகியன.

மேற்சொன்ன திட்டங்கள் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (IMF) மற்றும் அமெரிக்க நிதி உதவி மையங்கள் ஆகியவற்றின் மூலம் இந்நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்நாடுகளில் விவசாய உற்பத்தி, வர்த்தகம், விநியோகம், உணவுப் பொருட்கள் பதனிடுதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, விவசாயப் பொருட்களின் நுகர்வு, பண்ணைப் பொருட்களுக்கான தொழில்கள், கிராம விவசாயக் கூடங்கள், விவசாயத் தொழில் நுட்ப உதவி மற்றும் பணி, பிற பண்ணை சார்ந்த தொழில்கள் விவசாய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு திட்டமிடுதல் என வேளாண்மையின் சகல பிரிவுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிறுவப்பட்டு இந்நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவகாலனியாதிக்கத்தை வலுப்படுத்தியது.

மூன்றாம் உலக நாடுகளின் வேளாண்மைப் பொருளாதாரத்தில் பெரும் வேளாண்மைப் பொருளாதாரத்தில் பெரும் வேளாண் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிலைப் பெறச் செய்வதையும், சர்வதேச ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் (TNC; MNC) தேவைகளுக்கு ஏற்ற விரிந்த சந்தையை உருவாக்கும் பொருட்டும் இத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நோக்கியே ஏகாதிபத்திய நாடுகளின் இன்றைய திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி வைப்பது உலக வங்கி, "காட்", IMF ஆகியவற்றின் குறிக்கோளாக இருக்கிறது. உலக வங்கியின் 1986 ஆம் ஆண்டு உலக வளர்ச்சி அறிக்கை இதைத் தெளிவாகக் காட்டுகிறது. பசுமைப் புரட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் மந்த நிலைக்கு காரணங்களையும், அவற்றிற்கான தீர்வுகளையும் அந்த அறிக்கை கூறுகிறது. அது கூறும் தீர்வுகளை அறிவது, எந்த நோக்கத்திற்காக வேளாண்மை பிரச்சனை 'காட்' ஒப்பந்த வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்து கொள்ளப் பயன்படும்.

உலக வங்கியின் அறிக்கை கூறும் முதலாவது தீர்வு, உற்பத்தியை, விவசாயிகளிடமும் (பெரும் நிலப்பிரபுக்களிடம் என்று பொருள்); வர்த்தகத்தை வியாபாரிகளிடமும் விட்டு விடவேண்டும் வேளாண்மைத்துறை நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது.

அரசாங்கம் தலையிடக் கூடாது என்று உலக வங்கி கூறுவதின் பொருள்: 1) நீர்ப்பாசன வசதி செய்து தருதல், மின்சாரம் வழங்குதல், விலவளத்தை மேம்படுத்துதல், மற்றும் வேளாண்மைத்துறை ஆராய்ச்சி போன்ற கட்டுமான பணிக்களுக்காக அரசாங்கம் முதலீடு செய்யக்கூடாது.; 2) வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் மானியம் தரக்கூடாது; 3) பொது வினியோக முறையின் மூலம் மக்களுக்கு உணவுப் பொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விநியோகம் செய்யக் கூடாது என்பதே ஆகும்.

மூன்றாம் உலக நாடுகளில் ஒரு முழு நிறைவான முதலாளித்துவ ஜனநாயக நிலச்சீர்திருத்தத்தின் மூலம் முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளுக்கு முடிவு கட்டப்படாதவரை, கட்டுமானப் பணிக்காக அரசாங்கம் முதலீடு செய்தல், வேளாண்மைத்துறைக்கு மானியம் தருதல், மற்றும் பொதுவினியோக முறையின் மூலம் உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற அரசாங்க நடவடிக்கைகள் மூலம் மக்களின் அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது; இந்நாடுகள் சமூகவளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை என்றாலும் இத்தகைய அரசாங்க தலையீடுகள் இல்லாவிட்டால், காலனி ஆட்சி காலத்தில் பஞ்சங்களினால் மக்கள் மாண்டது போன்ற ஒரு நிலைமையும்; பின்னர் மூன்றாம் உலக நாடுகள் றி.லி.480 கீழ் உணவு பெறுவதற்காக அமெரிக்காவிடம் கையேந்தி நின்றதைப் போன்ற ஒரு நிலைமையும்தான் ஏற்படும். மூன்றாம் உலக நாடுகள் உணவுப் பொருட்களுக்காக ஏகாதிபத்தியவாதிகளிடம் கையேந்தி நிற்கும் நிலைமையை உருவாக்குவதற்காகத்தான் வேளாண்மைத் துறையில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்று உலக வங்கி கூறுகிறது. அதன் இரண்டாவது தீர்வுடன் சேர்த்துப் பார்ப்போமானால் இதை நன்கு உணரலாம்.

இரண்டாவது, உணவுத் தன்னிறைவுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. அதிக லாபம் தரக்கூடிய விளைச்சலை விவசாயிகள் பயிரிடவேண்டும். உணவு தானியங்களை வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளிடமிருந்து, குறிப்பாக அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து மிதமான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

உலகவங்கி கூறுவது போல், உணவுப்பிரச்சனையில் தன்னிறைவு என்பது வெறும் லாப நட்ட கணக்கல்ல. இது ஒரு அரசியல் தன்னாட்சிப் பிரச்சினையாகும். ஏகாதிபத்திய அரசுகள் மூன்றாம் உலக நாடுகளை அரசியல் ரீதியில் தமக்குக் கீழ்ப்படியச் செய்வதற்காக பயன்படுத்தக் கூடிய ஒரு பிரச்சினையாகும். அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.மி.கி தனது 'உணவு ஒரு ஆயுதம்' என்ற ஆவணத்தில் பின்வருமாறு கூறுகிறது.

உணவு தானியங்களுக்காக ஏனைய நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிக்கத்தான் போகிறது. இது என்றைக்குமில்லாத ஒரு அந்தஸ்தை அமெரிக்காவுக்கு அளிக்கப்போகிறது.

மூன்றாவது, பெரும் பொருளாதார பலம் படைத்தவர்களிடம் நிலத்தை ஒப்படைத்துவிட வேண்டும் - இதுதான் உலக வங்கியின் நிலச்சீர்திருத்தம். பெரும் பயிர் பண்ணைகளையும் தோட்டங்களையும் உருவாக்க வாய்ப்புள்ள இடங்களில், பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் பெரும் பண்ணைகளை உருவாக்க ஊக்குவிக்க வேண்டும். பெரும் பண்ணைகளை உருவாக்க முடியாத இடங்களில், பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையிலான விவசாய முறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

உலக வங்கியின் கோட்பாட்டின்படி, நிலச்சீர்திருத்தம் என்பதன் பொருள் நிலப்பிரபுக்களின் நிலங்களை உழுபவர்க்குச் சொந்தமாக்குவதல்ல. நில உடமை உச்ச வரம்புகளை நீக்கி விடவேண்டும். விவசாயிகளையும், ஊர் பொதுச் சொத்தாக இருக்கும் நிலங்களையும் அரசாங்க உதவியுடன் உழுபவரை வெளியேற்றி விட்டு, அவற்றை பணபலம் படைத்தவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதே ஆகும்.

ஆப்பிரிக்க நாடுகளில் கிராமங்களின் பொதுச் சொத்தாக இருந்த நிலங்கள் எல்லாம் வளைத்து தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்காவில் அரசு ஆதரவுடன் விவசாயிகளை வெளியேற்றி விட்டும், காடுகளை அழித்தும், தரிசுகளை பட்டா போட்டுக் கொடுத்தும், ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட பெரும் எஸ்டேட்டுகளும், கால்நடைப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. இவை எல்லாம் உலக வங்கியின் பேராதரவுடன் நடந்தவையாகும்.

பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் வேளாண்மைத் துறையில் ஆதிக்கம் நிலைபெறச்செய்வதற்கும், வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் இரண்டிலும் உள்ள பண்ணைகளையும் வேளாண் சார்ந்த தொழில்களையும் இணைத்து உலகளாவிய 'சூப்பர் மார்க்கெட்டு' களை உருவாக்குவதற்கும், இதன் மூலம் அவை உலகவேளாண்மை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் மேலாதிக்கம் செய்வதற்கும் ஊக்கமளிப்பதுதான் உலக வங்கியின் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதி என்ற முறையில்தான் (மேற்கூறப்பட்ட தீர்வை அது கூறுகிறது) பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் பெரும் பண்ணைகள் உருவாக்குவதற்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையிலான விவசாய முறைக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற அது கூறுகிறது.

இலங்கையில் உலக வங்கியின் உதவியுடன் 400 கோடி டாலரில் மஹாவல்லி நீர்தேக்கம் உருவாக்குகிறது. இந்த திட்ட பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு கம்பெனிகளிடம் விடப்பட்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட பெரும் எஸ்டேட்டுகளும், கால்நடைப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. கென்யாவில் தேயிலையை ஒப்பந்த அடிப்படையில் ப்ரூக்பாண்ட் கம்பெனி பயிரிடுகிறது. பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ கம்பெனி பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான விவசாயிகளை புகையிலை விவசாயம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களை இயக்குகிறது. டெல்மோண்டே, யுனைடெட் ஃபுரூட் கம்பெனியும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பத்தாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வாழை, பைனாப்பிள் (அன்னாசி) போன்ற பழத்தோட்டங்களை பயிர் செய்வதற்கு ஒப்பந்த முறையை பெரிதும் கையாண்டு வருகின்றன. உலக வங்கியின் வேளாண்மைக் கடங்களில் பெரும் பகுதி இத்தகைய ஏகபோகங்களின் திட்டங்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன. மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்துறையை நவீனப்படுத்தும் திட்டங்களில் இத்தகைய பன்னாட்டு ஏகபோகங்களின் திட்டங்களுக்குத்தான் முக்கிய இடத்தை உலக வங்கி அளிக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் விவசாயப் பொருட்கள் உற்பத்தியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள், அவை செயல்படும் நாடுகளின் தேவைக்காக உற்பத்தி செய்வதுமில்லை; ஆராய்ச்சியும் செய்வதில்லை. அந்நாடுகளின் மக்கள் நுகரும் உணவுப் பொருட்களையோ அவர்களுக்குத் தேவையான பிற அத்தியாவசியப் பொருட்களையோ உற்பத்தி செய்வதில்லை, வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளின் மேட்டுக்குடிகளுக்கும் தேவையான சுகபோக ஆடம்பரப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.

இந்த பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயம் செய்யும் இடங்களில் நிலப்பிரபுக்களையும், பணக்கார விவசாயிகளையும் தனது ஒப்பந்தக்காரர்களாக மாற்றி விடுகிறது. நடுத்தர எளிய விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கி, கூலிப்பட்டாளத்திற்குள் தள்ளி விடுகிறது. இதனால் வேலையின்மை அதிகரிக்கிறது.

இந்த நிறுவனங்கள் உலகளவில் வேளாண் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் வியாபாரத்திலும் ஏகபோகங்களாக இருக்கின்றன. எனவே அவற்றின் நோக்கமும் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வதாக இருக்கின்றன. உலகளவில் வேளாண் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் வியாபாரத்திலும் ஏகபோக நிலை வகிப்பதால் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கும் விவசாயிகளின் நலன்களுக்கும் எதிராக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன ஏன்பதை அடுத்த அம்சத்தை பரிசீலனை செய்யும் போது பார்ப்போம்.

நான்காவது, விவசாய வளத்தின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கவேண்டும்; ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் விலை பொருட்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; வேளாண் துறையை ஒன்றிரண்டு ஏற்றுமதி விளைபொருட்களுடன் மையப்படுத்தவேண்டும் என்பனவாகும்.

விவசாய வளத்தின் மீது வெளிநாட்டின் வர்த்தகம் தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. வளரும் நாடுகள் தாங்களாகவே முன்வந்து, ஒரேயடியாக தங்களுடைய வெளிநாட்டு வேளாண் வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்கி சுதந்திரமாக இயங்கிவிட்டால், அதன் பயனாக வளரும் நாடுகள் 2820 கோடி டாலர் அசல் வருவாய் பெறும், இந்நாடுகள் சுதந்திர வர்த்தகத்துக்கு வராவிட்டால் 1025 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்று உலக வங்கி தருவ்து கணக்கல்ல, இது ஒரு செப்படி வித்தை. உலக வங்கி சொல்வது போல், சர்வதேச வேளாண் விளைபொருட்கள் சந்தை ஒரு சுதந்திரப் போட்டிச் சந்தையல்ல. சர்வதேச சந்தையில் ஒன்றோடொன்று கழுத்தறுப்பு போட்டியில் ஈடுபடும் எண்ணற்ற நாடுகள் இருக்கின்றன. ஆயினும் பொருட்களை வாங்க ஒரு சில பன்னாட்டு ஏகபோகங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஏகபோகங்களுக்கு மட்டுமே இருக்கின்றன. இந்த ஏகபோகங்களுக்கு சந்தையின் மீது இருக்கும் கட்டுப்பாடுதான், சர்வதேச வேளாண் வர்த்தகத்தின் அடிப்படை நிலையாகும் உலகளாவிய உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் மீது ஏகபோக கட்டுப்பாடு செலுத்தும் கம்பெனிகளுடன்தான் ஏழை நாடுகளின் ஒருங்கிணையாத உற்பத்தியாளர்கள் போட்டியிட நேரிடுகிறது. உலக வங்கி இந்த பன்னாட்டு கம்பெனிகளின் ஏகபோக ஆதிக்கத்தைத் தான் மூடிமறைக்கிறது. உலகச்சந்தையில் எவ்வாறு இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் வேளாண் துறையை ஒன்றிரண்டு ஏற்றுமதிப் பொருட்களுடன் மையப்படுத்தும் நாடுகளின் கதி என்ன என்பதையும் பார்ப்போம்.

பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் தான் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில் உற்பத்திப் பொருட்களின் உலக வியாபாரத்தில் ஏகபோக நிலை வகிக்கின்றன. கார்கில் என்ற அமெரிக்க - கனடா பன்னாட்டுக் கம்பெனி கோதுமை வியாபரத்தில் 60 சதவிகிதத்தை கட்டுப்படுத்துகிறது. தயார் நிலை உணவுப் பசை, கூழ், வறுத்த காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள், பழச்சாறுகள், உலர்ந்த பழவகைகள், மதுவகைகள், குளிர்ந்த பானங்கள், ரொட்டி, இனிப்புகள் போன்ற தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்களின் உலக வர்த்தகத்தில் பெப்சி, கோகோ, பிரிட்டானியா, நெஸ்லே போன்ற சர்வதேச ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் (TNC, MNC) ஏகபோக நிலைமை வகிக்கின்றன. பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவங்கள் அதிக விலை கொடுத்து வாங்கி குவித்துக் கொண்டு விடுகின்றன. முதலில் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்குப் போட்டியாக குறைந்த விலைக்குப் பொருட்களை விற்று அந்நாடுகளை வீழ்த்திவிட்டு சந்தையைப் பிடித்துக் கொள்கின்றன. பின்னர் சந்தையில் பொருட்களை ஏக்போக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கின்றன. இவ்வாறு தான் அவை ஏக்போகத்தை உருவாக்கிக் கொள்கின்றன.

(உலக சர்க்கரை சந்தையில்) கியூபா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற மூன்றாம் உலக நாடுகள் உலக சர்க்கரைஸ் சந்தையில் அதிக விற்பனை செய்து வந்தன. கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பிய சமூக நாடுகள் கரும்பு உற்பத்தியாளருக்கு தாராளமாக மானியம் வழங்கின. இதன் விளைவாக, சர்க்கரை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்நாடுகள் உலகின் மிகப்பெரும் ஏற்றுமதியாளர்களாக ஆகிவிட்டனர். இந்நாடுகளின் பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ கம்பெனிகள் வருடத்திற்கு 40 லட்சம் டன் சர்க்கரையை உலக சந்தையில் குவிக்கின்றன. இதனால் பரம்பரையாக ஏற்றுமதி செய்து வந்த மூன்றாம் உலக நாடுகளில் சர்க்கரைத் தொழில் நலிவடைந்து வருகிறது.

அமெரிக்கா எண்ணெய் வித்துக்கள், பயிறுகள் உற்பத்தி செய்வதற்கு தாராளமாக மானியம் அளித்தது. பெருமளவுக்கு அவற்றின் உற்பத்தியை பெருக்கியது அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் அவற்றை உலகச்சந்தையில் குவித்து 1980 - 87க்கும் இடையில் அவற்றின் விலையை 40 சதவிகிதத்திற்குமதிகமாக குறைத்தது. இதனால் பல தென் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் வித்துக்கள், பயிறுகள் விவசாயம் நசிந்து போனது.

ஐரோப்பிய நாடுகள் கோதுமை உற்பத்தி செய்வதற்கு ஒரு டன்னுக்கு ரூ.5400 மானியம் கொடுத்து உற்பத்தியைப் பெருக்குகிறது அதை உலக சந்தையில் விற்று பின் தங்கிய நாடுகளின் கோதுமை விவசாயத்தை அச்சுறுத்துகிறது.

இதே போன்ற நிலைதான் தேக்கு, கொக்கோ, ரப்பர் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யும் வளரும் நாடுகளுக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படும் துண்டு அதிகமாகிறது. இந்நாடுகளின் அந்நியக் கடனும் அதிகரித்த வண்ணமிருக்கிறது.

வேளாண்துறையை ஒன்றிரண்டு ஏற்றுமதி விளை பொருட்களுடன் மையப்படுத்தும் நாடுகளின் துயரக் கதைகள் நிரம்ப இருக்கின்றன.

- 1930களில் விலை வீழ்ச்சியைத் தடுக்க மூன்று கோடி சாக்குப் பைகள் காப்பிக் கொட்டையை பிரேசில் எரிக்க நேர்ந்தது.

- 1950களில் கானா கொக்கோவை முக்கிய பயிராக பயிரிட்டது. கொக்கோ விலை டன்னுக்கு 1000 டாலாராக இருந்தது, 400 டாலராக சரிந்தது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளானது.

- 1960களில் முந்திரியை மட்டுமே பயிரிட்டு ஏற்றுமதியைப் பெருக்க செனகல் முயற்சித்தது. முந்திரி வளர்ச்சி நெருக்கடிக்குள்ளானது. இதிலிருந்து மீள, ஐரோப்பாவுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் பிராந்தியமாக மாற முயன்று கடனாளியாகிவிட்டது.

எனவே, சுதந்திர வர்த்தகம், வேளாண்மையை ஒன்றிரண்டு ஏற்றுமதி விளைபொருட்களுடன் மையப்படுத்த வேண்டும் என்று உலகவங்கி கூறும் தீர்வு பெரும் வேளாண் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் (TNC, MNC) நலன்களுக்கு சேவை செய்வதற்்கே தவிர வேறு ஒன்றிற்கும் அல்ல.

உலக வங்கி கூறும் இதையேதான் 'காட்' அமைப்பு வேறு வார்த்தைகளில் பின்வருமாறு கூறுகிறது:

"நாடுகளிடையே சுதந்திரமான வர்த்தகத்தை செழுமைப் படுத்தினால் உலகளாவிய உற்பத்தியும் வளர்ச்சி அடையும்."

"ஒவ்வொரு நாடும் அவற்றின் ஆற்றலுக்கேற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வது என்ற அடிப்படையில் பணிப் பங்கீடு முறை உலகளாவிய பொருளாதார செயலாற்றலையும், உற்பத்தியையும் உயர்த்தும்."

மூன்றாம் உலக நாடுகளில் வேளாண்மைத் துறை பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது; அந்நாடுகள் உணவு தன்னிறைவுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை; உணவு தானியங்களை மிதமான விலைக்கு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்; பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களை இந்நாடுகளின் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்; இந்நாடுகளின் அரசுகள் தங்களுடைய வெளிநாட்டு வேளான் பொருட்கள் வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்கி சுதந்திரமாக இயங்கவிட வேண்டும்; வேளாண்மைத் துறையை ஒன்றிரண்டு ஏற்றுமதிப் பொருட்களுடன் மையப்படுத்த வேண்டும் என்பவை உலக வங்கி மூன்றாம் உலக நாடுகளுக்கு கூறும் தீர்வுகளாகும். உலக வங்கி கூறும் இந்தத் தீர்வுகள் பெரும் வேளாண் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சேவை செய்பவையே ஆகும். உலக வங்கியின் இந்தத் தீர்வுகள் காட் ஒப்பந்த வரம்புக்குள் வேளாண்மைத் துறையைக் கொண்டு வருவதற்கான காரணங்களை தெளிவாகக் காட்டுகின்றன.

மூன்றாம் உலக நாடுகளுக்கு உலக வங்கி கூறியுள்ள தீர்வுகளை உலகப் பொதுத்திட்டமாக்குவதே டங்கலின் விவசாயத் திட்டமாகும்.

டங்கலின் விவசாயத் திட்டத்தினை ஏற்று செயல்படுத்தினால் இனி விவசாயத் துறையில் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

புதிய ரக வித்துக்கள் மற்றும் விலங்கினங்களின் கண்டுபிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமை வழங்குவதால் ஏற்படப் போகும் விளைவு:

பசுமைப் புரட்சியின் ஓர் அம்சமான சர்வதேச விதை வியாபாரம், இப்போது வேகமாக வளர்ந்து வருவதோடு, அதிகமான லாபத்தையும் கொடுக்கிறது.

பயிர் வளர்ப்புக்கும், புது ரக விதைகளுக்கும் காப்புரிமை வழங்கும் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டதன் விளைவாக, இப்போது புதிதாக உருவாக்கப்படும் விதைகளுக்கு உரிமைத்தொகை (ஸிஷீஹ்ணீறீ௴ஹ்) கொடுத்தாக வேண்டும். இதுபோன்ற சட்ட திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன. விதை விற்பனையில் நல்ல லாபம் இருப்பதைப் புரிந்து கொண்ட இந்நிறுவனங்கள் இந்தத் துறையை ஆக்கிரமித்துக் கொண்டு, விதை விற்பனையிலும் அதன் விநியோகத்திலும் முழு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சர்வதேச விற்பனையை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பகாசூர பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியமானவை:

ராயல் டச்/ஷெல் (பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து)

டாடேலைஸ் - பிரிட்டன்

சாண்டோஸ்

சிபா - கெயகி - சுவிட்சர்லாந்து

ரோன் - பௌலன்ஸ்

எல்ப் - அக்யூவாட்டேன்

இ.எம்.சி நிறுவனம் - பிரான்ஸ்

பேயர்

பி.ஏ.எஸ்.எப் - ஜெர்மனி

ஃபிஸர்

அப்ஜான்

க்ரேஸ்ரோப் & ஹாஸ்

அக்ரி செர்ச்

டெக்கால்ப்

ப்யூரெக்ஸ்

ஒலின்

ஆக்ஸிடெண்டல்

ஐ.டி.டி

எம்.எம்.ஸி.

கார்க்கில்

யூனியன் கார்பைடு

ஆண்டர்சன் - க்லேட்டன்

எந்த அளவிற்கு 'உணவுப் பயிர்களின்' மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது என்பதை பின்வரும் பட்டியலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

நிறுவனத்தின் எண்ணிக்கை

விதை வடிவுரிமை சதவீதம்

பயிர்வகை

4

 48%

சோயா

4

   36%

கோதுமை

1

100% கத்தரிக்காய்

3

100%

புகையிலை

2

100% 

காலிப்பிளவர்

 

இந்தப் பன்னாட்டு நிறுவனங்கலின் நலங்களுக்கு சேவை செய்யும் பொருட்டே வேளாண்மைத்துறைக்கான டங்கல் திட்டம், புதியரக வித்துக்கள், விலங்கினங்கள், நுண்ணுயிரிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்கு தனிக்காப்புரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே பாசிச ராஜீவ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட "புதிய விதைக் கொள்கை"யின் மூலம் பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் விதைப் பண்ணைகளை நிறுவி விவசாய இடுபொருள் உற்பத்தியில் தமது ஆதிக்கத்தை நிறுவ முயல்கின்றன. இதற்காக இந்நிறுவனங்கள் நம் நாட்டில் ஏற்கெனவே விவசாயிகளால் அரிதாகப் பயன்படுத்தப்படும் விதைகளை சேகரித்து அவற்றை வீரியப்படுத்தி தமது புதிய கண்டுபிடிப்புகளாக அறிவித்துக்கொண்டு அவற்றை நமது விவசாயிகளுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்று வருகின்றன.

உதாரணமாக, பெங்களூரிலுள்ள 'கார்க்கில்' எனும் அமெரிக்க விதை நிறுவனம் குடை மிளகாய் விதையை கிலோ 10,000 ரூபாய்க்கும் கத்திரிக்காய், தக்காளி ஆகியவற்றின் விதைகளை 1 கிலோ ஆயிரம் ரூபாய் என்றும் விற்று நம் விவசாயிகளை கொள்ளையடிக்கிறது.

இது நாள் வரையிலும் மனித குலத்தின் அறிவுத் திறனால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் உணவுதானிய விதைகள் மற்றும் கால் நடைகளை கலப்பின சேர்க்கையின் மூலம் வீரியப்படுத்துவதையே தமது புதிய கண்டுபிடிப்பாக இப்பன்னாட்டு நிறுவனங்கள் அறிவித்துக் கொள்கின்றன.

நம் நாட்டில் பயிரிடப்படும் பல்வேறு தாவரங்களில் சுமார் 1900 ரக விதைகளை ஆராய்ச்சி செய்வதற்காக, விதை ஆராய்ச்சியில் முன்னோடியாக உள்ள 12 வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பிவைத்தது. நமது மூதாதையரின் அறிவுசார் சொத்துக்களான இம்மூல விதைகளை கலப்பின் சேர்க்கையின் மூலம் வீரியப்படுத்தி அவற்றை தமது புதிய கண்டுப்பிடிப்பாக இந்நாடுகளைஸ் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் அறிவித்துக் கொள்ளும். இவ்வாறு களவாடப்பட்ட விதைகளுக்கு டங்கல் திட்டத்தின் மூலம் இந்நிறுவனங்கள் தனிக்காப்புரிமை பெறுவார்கள்.

தனிக்காப்புரிமை பெற்ற விதைகள் மற்றும் கால்நடைகளின் உற்பத்தி உரிமை அந்தந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கே உரியதாகும். ஒவ்வொரு விதைப்புக்கும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதையை 'கார்கில்' போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்ளை விலைக்கே வாங்கியாக வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளைக் கொண்டு விளைவித்ததில் ஒரு பகுதியை சுதந்திரமாக தாமே மீண்டும் விதையாக பயன்படுத்திக்கொள்ள இனி முடியாது. அது சட்டப்படி குற்றமாகிவிடும். இதேபோல் ஒரு பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து கால்நடைகள் வாங்கினால் கால்நடைகள் மட்டுமே நமது விவசாயிக்கு சொந்தமாகும். அவை ஈனும் கன்றுகள் அந்த பன்னாட்டு நிறுவனத்திற்கே சட்டப்படி சொந்தமாகும்.

உணவு தானியங்கள் மற்றும் கால்நடைகளின் புதிய ரக கண்டுபிடிப்புகளுக்கு டங்கல் திட்டத்தின்படி தனிக்காப்புரிமைகள் வழங்கப்படுமானால், நம் நாட்டில் எந்தெந்த தானியங்களை எந்தெந்த அளவில் உற்பத்தி செய்வது, எத்த்கைய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது, எந்தெந்த பயிர்களின் உற்பத்தியை சீர்குலைப்பது, விவசாய விளைபொருட்களில் எவ்வகைகளை ஏற்றுமதி செய்வது எவற்றை இறக்குமதி செய்வது, இடுபொருட்கள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது போன்ற வேளாண்மையின் அனைத்து வாழ்வுத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

இதன் விளைவாக இனி விவசாய உற்பத்தி என்பது அதிக பணத்தை முதலீடு செய்யும் சக்திபெற்ற பெரும் நிலவுடமையாளைர்கள் மற்றும் பணக்கார விவசாயிகளுக்கானதாக மட்டும் மாறிவிடும். சிறிய முதலீட்டையும், குடும்ப உழைப்பையும் மட்டுமே நம்பி வாழும் நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் இனி விவசாய உற்பத்தியைத் தொடர முடியாமல் நிலத்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

விவசாயத்துறை மானியங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படப் போகும் விளைவுகள்

டங்கல் திட்டம் விவசாய உற்பத்திக்கு இதுவரை வழங்கி வந்த அரசு மானியங்களையும், பொது வினியோக முறைக்காக (ரேஷன் முறை) வழங்கி வந்த மானியங்களையும் மொத்த தேசிய வேளாண்மை உற்பத்தியில் 10% சதவிகிதத்திற்கு குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் நாடுகளின் விவசாயப் பொருட்களுக்கு உலக சந்தையை பெறும் நோக்கத்தில் பொருட்களின் விலையை செயற்கையாக (உற்பத்தி செலவைவிட குறைவாக) குறைப்பதற்கு வழங்கும் அரசு மானியங்களையும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தமது நாட்டின் உணவு உற்பத்தியில் சுய தேவையை பூர்த்தி செய்ய வேண்டி விவசாய உற்பத்திக்கு வழங்கும் மானிய உதவியையும் வேறுபடுத்திப் பார்க்க டங்கல் திட்டம் மறுக்கிறது.

வேளாண்மைத் துறைக்கான மானியங்கள் வழங்குவதில் உலகளவில் மிக அதிக அளவாக ஜப்பான் 72.5 சதவிகிதமும், ஐரோப்பிய சமூக நாடுகள் 37 சதவிகிதமும், தென் கொரியா 60.7 சதவிகிதமும், அர்ஜண்டைனா 38.3 சதவிகிதமும், பிரேசில் 21.5 சதவிகிதமும், பாகிஸ்தான் 21.8 சதவிகித மானியமும் வழங்குகின்றன. ஆனால் இந்தியா தனது தேசிய வேளாண் உற்பத்தியில் வெறும் 2.3 சதவிகிதம் மட்டுமே மானிய உதவி வழங்கி வருகிறது.

அப்படி வழங்கப்படும் மானிய உதவியிலும் அதிக நிலம் படைத்தோர்க்கு அதிகளவில் கடனுதவி, அதிக கடனுதவி பெறுவோர்க்கே அதிகளவு மானிய உதவி என்ற வரைமுறைகளே பின்பற்றப்படுவதால், 20 சதவிகிதத்தினராக இருக்கும் பெரும் நிலவுடமையாளர்களும், பணக்கார விவசாயிகளும் மொத்த மானியத் தொகையில் சுமார் 70 சதவிகிதத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால் 80 சதவிகிதத்தினராக உள்ள நடுத்தர மற்றும் சிறுவிவசாயிகள் மொத்த மானியத் தொகையில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே பெறுகின்றனர்.

நம் நாட்டில் குறைந்த மானிய உதவியே வழங்கப்படுவதற்கேற்ப விவசாயத்திற்கான இரசாயன உரங்களை பயன்படுத்தும் அளவும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவானதாகவே இருக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதத்தினராகக் கொண்ட நம் நாடு உலகின் மொத்த விவசாய உற்பத்தியில் வெறும் 12 சதவிகிதத்தை மட்டுமே உற்பத்தி செய்கிற்து. எனவே டங்கல் திட்டம் விவசாய மானிய உதவியை 10 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனக் கட்டுப்படுத்துவதன் மூலம் நம் நாட்டின் வேளாண்மை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

இது மட்டுமின்றி டங்கல் திட்டம் பொது வினியோக முறைக்காக உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்து விநியோகிக்கும் முறையையும் அதற்காக வழங்கப்படும் மானிய உதவியையும் நிறுத்தக் கோருகிறது. நம் நாட்டில் 50 சதவிகிதத்திற்கும் கூடுதலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றார்கள். வறுமைக் கோட்டின் கிழே வாழும் உழைப்பாளி மக்களும், நடுத்தர வர்க்கப் பிரிவனரும் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பொது விநியோக முறையில் இயங்கும் நியாயவிலைக் கடைகளையே சார்ந்துள்ளனர். தங்களின் உயிர்த்தேவைக்கு அவசியமான அளவிற்கும் குறைவான உணவையே நமது நாட்டின் பெரும் பகுதி மக்கள் உண்டு உயிர்வாழ்கின்றனர். இனி டங்கல் திட்டத்தின் மூலம் பொது வினியோக முறையும் நிறுத்தப்படுமானால் நாட்டின் பெரும்பகுதி மக்கள் உண்ண உணவின்றி பட்டினியால் சாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஏகாதிபத்தியவாதிகள் டங்கல் திட்டத்தின் மூலம் மட்டுமின்றி உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (IMF) ஆகியவற்றின் மூலம் நம் நாட்டில் வழங்கப்படும் விவசாய மானியங்களை நிறுத்தும்படி ஆணையிட்டுள்ளனர். நம் நாட்டை ஆளும் பாசிச நரசிம்மராவ் கும்பலும் அதனை சிரமேற்கொண்டு செயற்படுத்தத் துவங்கிவிட்டது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் தமது நாடுகளில் வழங்கப்படும் ஏற்றுமதிக்கான விலைக்குறைப்பை ஈடுசெய்ய வழங்கும் மானிய உதவியை இனி வேறு விதத்தில் தொடருவர்.

வேளாண் உற்பத்தி மற்றும் பொது விநியோக முறைக்காக வழங்கும் மானியத்தை நிறுத்தக் கோருவதன் மூலம் நம் நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவ டங்கல் திட்டம் முயற்சிக்கிறது.

உணவு தானிய இறக்குமதிக்கான தடைகளை நீக்குவதால் ஏற்படப் போகும் விளைவுகள்

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தமது வேளாண்மை உற்பத்தி மற்றும் தேசிய சந்தையை பாதுகாக்கும் நோக்கத்துடன் இதுவரை கடைப்பிடித்து வந்த உணவு தானிய பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கிக்கொள்ள வேண்டும் என டங்கல் திட்டம் வலியுறுத்துகிறது. மேலும், ஒவ்வொரு நாடும் 1993 முதல் தேசிய வேளாண்மை உற்பத்தியில் 20 சதவிகித அளவிற்கு உணவு தானியங்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது இதை 2003-ஆம் ஆண்டுகளில் 3.3 சதவிகிதத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் கோருகிறது. 1986 முதல் 88-ஆம் ஆண்டுவரை இந்நாடுகள் இறக்குமதி செய்த அல்லது இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்ட தானியங்களின் அளவிற்கு குறையாமல் கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

1986-87க்கு இடைப்பட்ட வறட்சிக் காலத்தில் இந்தியா 16 லட்சம் டன் சமையல் எண்ணெயையும், 6.5 லட்சம் டன் சர்க்கரையையும் இறக்குமதி செய்தது. இதன் தோராய மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் ஆகும். 1986-87 ஆண்டுகளில் இறக்குமதி அளவிற்கு குறையாமல் இறக்குமதி செய்தே ஆகவேண்டும். இனி டங்கல் திட்டத்தை ஏற்பதால் இந்தியா இனி ஆண்டு தோரும் ரூபாய் 2000 கோடி அளவிற்கு உணவு தானியங்களை இறக்குமதி செய்யும்படி நிர்பந்திக்கப்படும். இதனன்றி உணவுதானிய இறக்குமதிக்கான காப்பு வரிகள் உள்ளிட்ட தடைகள் அனைத்தும் நீக்கப்படப்போவதால் ஏகாதிபத்திய நாடுகளில் விளைவிக்கப்பட்ட உபரி தானியங்கள் இந்தியா போன்ற நாடுகளில் குவிக்கப்படும்.

நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்டு, மிகுந்த உற்பத்தித் திறனுடன் நம்மைவிட பல மடங்கு அதிகமாக உணவு தானியங்களை உற்பத்தி செய்து வருகின்றன. எனவே இந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருக்கும் உணவு தானியங்களின் விலை உண்மையில் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களின் விலையை விட (முன்பே உர உற்பத்தியில் நாம் காண்பதைப் போல) குறைவாக இருக்கும். இதன் மூலம் நம் நாட்டின் விவசாயப் பொருட்களின் விலை அதன் உற்பத்தி செலவிற்கும், கீழாக வீழ்த்தப்பட்டு விவசாயம் லாபகரமற்றதாகிவிடும். இதன் விளைவாக ஏற்கெனவே நம் நாட்டில் உர உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதைப் போலவே நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் விவசாய உற்பத்தியை நிறுத்திவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவர். இதனால் பலகோடி விவசாயிகள் வாழ்விழந்து வறுமையில் வாடும் நிலைமை உருவாகும். டங்கல் திட்டம் மூலம் முன்பே பார்த்தப்படி பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் தொழிலாளர் வெளியேற்றக் கொள்கையை கடைப்பிடிப்பதனால் மட்டுமே ஒரு கோடி அரசு ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போலவே தொழில்துறையிலும் டங்கல் திட்டத்தின் பாதகமான விளைவுகளால் ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல கோடி தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள், விவசாயத்துறையிலோ பல கோடி சிறு விவசாயிகள் வேலையிழப்பார்கள் மறுபுறம் நமது நாட்டின் விவசாய உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிறுவப்பட்டு நவகாலனியாதிக்கம் வலுப்படும்.

பன்முக வணிக அமைப்பு (MTO)

டங்கல் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமானால் 'காட்' அமைப்பின் இடத்தை பன்முக வணிக அமைப்பு வகிக்கும், டங்கல் திட்டத்தை ஏற்கும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளாக ஆகிவிடும். இந்த நாடுகள் டங்கல் திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்பதை இந்த அமைப்பு கண்காணிக்கும் இந்த கங்காணி அமைப்பு எதிர்காலத்தில் வர்த்தகக் கொள்கைகளைப் பரிசீலித்து வழிகாட்டும் அதிகாரம் படைத்தது. இப்போது மூன்றாம் உலக நாடுகளை மிரட்டி பணிய வைப்பதற்கு அமெரிக்கா வர்த்தகத் தடைச்சட்டத்தின் 301 பிரிவை பயன்படுத்தி வருகிறது. டங்கல் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமானால் ஏகாதிபத்திய அரசுகள் இந்த அமைப்பின் பேரில் அந்த வேலையை செய்யும், ஏகாதிபத்திய வல்லரசுகளின் பொருளாதாரத் தடை, முற்றுகை போன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த அமைப்பின் பெயரில் சட்டவடிவம் கொடுக்கப்படும். மூன்றாம் உலக நாடுகளின் சட்டங்கள், கொள்கை வகுத்தல் அனைத்தையும் டங்கல் திட்டம் இந்த அமைப்பின் ஆணைக்கு உட்படுத்துகிறது. இதன் மூலம் அந்நிய நாடுகளின் அரைகுறை அரசியல் சுதந்திரத்தையும் நசுக்குகிறது. இது ஒரு தண்டிக்கும் அமைப்பாகும். குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த அமைப்பின் நீதி. ஒரு நாடு ஏதாவது ஒரு துறையில் ஒப்பந்தத்தை மீறினால், அதைப் பணிய வைப்பதற்கு மற்றொரு துறையிலோ அனைத்துத் துறைகளிலுமோ பதிலடி கொடுக்கலாம். அதாவது ஒட்டு மொத்த பதிலடி கொடுக்கலாம் என்பது இந்த அமைப்பு தண்டனை வழங்கும் முறை. இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்துக்கும் சம உரிமை கிடையாது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஒட்டு மொத்த பதிலடி கொடுப்பது உரிமை அதற்கு அடிபணிந்து போக வேண்டியது மூன்றாம் உலக நாடுகளின் கடமை. இதுதான் இந்த கங்காணி அமைப்பின் ஜனநாயகம். ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் முரண்பட்டிருந்தாலும், மூன்றாம் உலக நாடுகளை ஒடுக்குவதற்காக இத்தகைய ஒரு கங்காணி அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் ஒன்றுபடுகின்றனர்.

ஆகையால், டங்கல் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமானால், மூன்றாம் உலக நாடுகளின் மீது நவகாலனித்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், அந்நாடுகளின் பன்னாட்டு ஏகபோகங்களின் சுரண்டலை தீவிரப்படுத்துவதர்கும் உலக வங்கி, IMF உடன் இந்த அமைப்பும் சேர்ந்து ஏகாதிபத்திய வல்லரசுகளின் கைகளில் ஒரு திரிசூலமாக இருக்கும்.

டங்கல் திட்டம் குறித்து இந்திய ஆளும் வர்க்கத்தின் நிலை

இந்தியாவை ஆளுகின்ற தரகு பெருமுதலாளித்துவ வர்க்கம், பிற ஏகாதிபத்திய திட்டங்களை வரவேற்று செயற்படுத்துவதை போன்றே டங்கல் திட்டத்தையும் வரவேற்கின்றன.

டங்கல் திட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் உயர்தொழில் நுட்பமும் பெரிய அளவில் அன்னிய முதலீடும் கிடைக்கும் என்றும் இதனால் பெருகி ஏற்றுமதிக்கான வாய்ப்பும் பெருகும் என்றும் வாதிடுகின்றனர். இவையனைத்தும் ஏகாதிபத்திய தாசர்களின் வாதமே ஆகும்.

நம் நாட்டின் ஆளும் வர்க்கமான தரகு பெருமுதலாளித்துவ வர்க்கமும், நிலவுடமை வர்க்கமும் தங்களுக்குத் தேவையான உயர் தொழில் நுட்பம், அன்னிய முதலீட்டு உதவி, ஏற்றுமதிக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பெறும் நோக்கத்தில் டங்கல் திட்டத்தை ஆதரிக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய இந்த ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நாட்டின் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் வாழ்வையே சூறையாட நம் நாட்டின் ஆட்சியாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவை ஆளும் பெரும் தரகு முதலாளிகளும் பெரும் நிலப்பிரபுக்களும், அவர்களைப் பிரதி நிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளும் நாட்டின் பொருளாதாரத்தின் தேசிய வாழ்வைத் தீர்மானிக்கும் துறைகளையும், அயல் நாட்டு பொருளாதார உறவுகளையும் உறுதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும், சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் நாட்டின் தேவையை நிறை வேற்றுவதற்காக உற்பத்தி செய்தல் ஆகியவற்றைத் தமது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஏகாதிபத்தியவாதிகள் நம் நாட்டு உழைக்கும் மக்களை சுரண்டி பெறுகின்ற லாபத்தில் ஒரு பங்கைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்நிய மூலதன ஆதிக்கம் கூடாது என்பதல்ல அவர்களின் கோரிக்கை. அதற்கு மாறாக அந்நிய மூலதனத்துடன் துவக்கப்படும் நிறுவனங்களில் உள்ளூர் மூலதனத்திற்கு ஒரு குறிப்பிட்ட பங்கு, அந்நிறுவனங்கள் லாபத்தை வெளியே எடுத்து செல்வதைக் கட்டுப்படுத்துவது, நிர்வாகத்திலும் உத்தியோகத்திலும் குறிப்பிட்ட பங்கு போன்றவையே அவர்களின் கோரிக்கைகளாக இருக்கின்றன.

நிலப்பிரபுக்களின் நிலத்தை உழுபவர்க்கு சொந்தமாக்கும் நிலச்சீர்த்திருத்தத்திற்கு மாறாக, அன்னிய நிதி மூலதனத்தை சார்ந்து விவசாயத்தை நவீனப்படுத்தல் என்னும் பெயரில் நிலப்பிரபுக்களை முதலாளிய முறைக்கு செல்வதை ஊக்குவிப்பதும், நாட்டின் தேவைக்கான உற்பத்தி என்பதற்கு மாறாக ஏற்றுமதி செய்வதற்காக செய்யப்படும் உற்பத்திக்கு முன்னுரிமை என்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளாக இருக்கின்றன.

மேற்கூறப்பட்ட கொள்கைகளைக் கடைப்பிடிப்பதின் காரணமாக இந்திய ஆளும் வர்க்கத்தினரும், அவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் டங்கல் திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

நம் நாட்டை ஆளும் பாசிச நரசிம்மராவ் கும்பல், டங்கல் திட்டத்தின் உள்ளடக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவே மறுக்கிறது. மேலும் டங்கல் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிப்பதைக் கூட தவிர்த்து விட்டு கள்ளத்தனமாக நேரடியாக 'காட்'  (GATT) ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது என முடிவெடுத்துள்ளது.

டங்கல் திட்டத்தை ஏற்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக பி.ஜே.பி நடிக்கிறது, உண்மையில் டங்கல் திட்டத்தை ஏற்பதை எதிர்த்து பாராளுமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திற்கு வெளியிலோ அது போராடத் தயாராக இல்லை. பி.ஜே.பி - யின் துணைத் தலைவரான மல்கானி டங்கல் திட்டத்தின் சில அம்சங்களில் மட்டும் கருத்து வேற்றுமை இருக்கிறது. இருப்பினும் நரசிம்மராவ் ஆட்சிக்கு காங்கிரசில் ஒரு பிரிவினரே தொல்லை கொடுத்தாலும் நாங்கள் தொல்லை தரமாட்டோம் என தெரிவித்துள்ளார் அத்வானி.

இதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி - யும் அதிகார வர்க்க தரகு ஏகபோக முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவேறு அரசியல் பிரதிநிதிகளாக இருப்பதே ஆகும். எனவேதான் பாசிச நரசிம்மராவ் கும்பல் செயல்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதகமான விளைவுகளையும், டங்கல் திட்டத்தை ஏற்று செயல்படுத்தப்போவதால் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளையும், டங்கல் திட்டத்தை ஏற்று செயல்படுத்தப்போவதால் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளையும், மக்கள் அறிந்து கொள்ளாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய (முகலாய அரசர்கள்) முஸ்லீம்களை இன்றைய நம் எதிரிகளாக முன் நிறுத்திக் காட்டுகின்றது. இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கை', டங்கல் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் நம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய ஆளும் வர்க்கங்களும் கூட்டாக கொள்ளையடிப்பதற்கும் ஏகாதிபத்தியவாதிகள் நம் நாட்டின் மீது நவகாலனியாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கும் துணை போகிறது.

 

டங்கல் திட்டம் குறித்து பிற கட்சிகளின் நிலை

ஜனதாதளம் உள்ளிட்ட பிற தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களின் ஆதரவு சக்தியான பணக்கார விவசாயிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் டங்கல் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்றன. எனினும் டங்கல் திட்டத்தை எதிர்த்து மக்களை திரட்டி ஒரு உறுதிமிக்க போராட்டத்தை நடத்த இவை தயாராக இல்லை. வலது, இடது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளோ டங்கல் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறினாலும் அதை ஏகாதிபத்திய வாதிகளின் வெறும் பொருளாதார ஒடுக்குமுறைக்கான கருவியாக மட்டுமே குறைத்து சித்தரிக்கின்றன. இதற்குக் காரணம் இவ்விரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தியா - அரசியல் சுதந்திரம் பெற்ற நாடு என்ற தங்களின் பித்தலாட்டமான வரையறையை அமல்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்காக புதிய பொருளாதாரக் கொள்கை, டங்கல் திட்டம் போன்ற ஏகாதிபத்திய திட்டங்களால் நம் நாடு, மிச்ச மீதி அரசியல் உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமைப்பட வேண்டியிருக்கும் என்பதையும், நம் நாட்டின் மீது நவகாலனியாதிக்கம் நிறுவப்படும் என்பதையும் மூடி மறைக்கின்றன.

எனவேதான் இவ்விரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாடு அடிமைப்படுத்தப்படுவதை எதிர்த்து அனைத்து பிரிவு உழைக்கும் வர்க்கத்தையும், பிற ஜனநாயக சக்திகளையும் கொண்ட ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை உருவாக்கிப் போராட முயற்சிக்காமல், தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதையும் தொழிற்சாலைகள் மூடப்படுவது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவது போன்றவற்றையும் தனி தனியாக அந்தந்த நிறுவனங்களில் தொழிலாளர்களைக் கொண்டு அந்தந்த நிறுவனங்களின் தொழிலாளர் நலக் கோரிக்கைகளுக்கான பொருளாதாரப் போராட்டமாக தொழிலாளர்களின் போராட்டத்தை குறுக்கி விடுகின்றன.

இதற்குக் காரணம் ஜனதாதளம் உள்ளிட்ட தேசிய முன்னணி கட்சிகளும், வலது - இடது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நம் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்க தரகு ஏகபோக முதலாளித்துவத்துடன் சமரசம் செய்து கொள்ளும் பாதையை பின்பற்றுவதே ஆகும். எனவேதான் இக்கட்சிகள் ஆளும் பாசிச கும்பலின் நாசகரத் திட்டங்களை எதிர்த்து ஒரு வலுமிக்க போராட்டத்திற்கு மக்களைத் திரட்டுவதை மறுத்துவிட்டு தங்களின் பாராளுமன்ற நலனுக்கு ஏற்ற வகையில் வெறும் அம்பலப்படுத்தல்கள் மற்றும் கண்டன அறிக்கைகளுடன் தங்களின் எதிர்ப்பை நிறுத்திக் கொள்வதுடன் உழைக்கும் வர்க்கத்தின் போராடும் ஆற்றலையும் சீரழித்து வருகின்றன. எனவே, இக்கட்சிகள் எதுவும் டங்கல் திட்டம் போன்ற நம் நாட்டை அடிமைப்படுத்தும் திட்டத்தை எதிர்த்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க முடியாது. இக் கட்சிகளை நம்புவது ஆற்றைக் கடக்க மண் குதிரைகளை நம்புவதைப் போன்றது ஆகும்.

டங்கல் திட்டத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழும் விவசாய இயக்கங்கள் பற்றி

டங்கல் திட்டத்தினை எதிர்த்து நம் நாட்டில் பரவலாக விவசாயிகள் எதிர்ப்பியக்கத்தையும், தீரமிக்க போராட்டத்தையும் துவக்கியுள்ளனர்.

குறிப்பாக கர்நாடகத்தில் நஞ்சுண்ட ஸ்வாமியின் தலைமையிலான விவசாய சங்கத்தினர் பெங்களூரில் ஊள்ள 'கார்கில்' எனும் பன்னாட்டு விதை நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தி தங்களின் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் திகாயத் தலைமையிலான உத்திரபிரதேச விவசாயிகள் சங்கமும், நஞ்சுண்ட ஸ்வாமியின் கர்நாடக விவசாயிகள் சங்கமும் இணைந்து டெல்லியில் டங்கல் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணியை கடந்த மார்ச் 3-ஆம் நாள் நடத்தியுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

அப்பேரணியில் -

1)         பன்னாட்டு நிறுவனங்கள் விதைத்துறையில் நுழைவதை தடைசெய்.

2)         விதை உள்ளிட்ட உயிர் பொருட்களின் மறு உற்பத்தி உரிமை நம் தேசத்தின் உடைமையே.

3)         பன்னாட்டு நிறுவனங்கள் கோரும் தனிக்காப்புரிமையை வன்மையாக எதிர்க்கிறோம்.

4)         இந்தியாவின் 1970-ஆம் வருடத்திய தனி காப்புரிமை சட்டத்தை பாதுகாப்போம்.

5)         உலக வர்த்தகத்தையே மொத்தமாக கட்டுப்படுத்த நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிகளை எதிர்த்து முறியடிப்போம்.

என்று நம் நாட்டின் விவசாயிகள் டங்கல் திட்டத்தை எதிர்த்து முழங்கியுள்ளனர். மேலும் நரசிம்மராவ் அரசு டங்கல் திட்டத்தை ஏற்று செயல்படுத்த முயற்சித்தான் அதை ஆட்சியிலிருந்து விரட்டுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவ்விவசாய இயக்கங்களைப் பொறுத்தவரை டங்கல் திட்டத்தை ஏற்பதன் மூலம் நம் நாட்டின் அனைத்து வாழ்வுத் துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிறுவப்பட்டு நாடு அடிமைப்படுத்தப்படும் என்றும் பார்க்காமல் வெறுமனே விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படுவர் என்றும் விவசாயத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிறுவப்படும் என்றும் பார்க்கின்றனர். எனவேதான் டங்கல் எதிர்ப்பியக்கத்தை வெறும் விவசாயிகளின் போராட்டமாக குறுக்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையில் தங்களுடன் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பிற ஜனநாயக சக்திகள் ஆகியவற்றைக் கொண்டதொரு பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர வேண்டியுள்ளது. அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியால் மட்டுமே "டங்கல் திட்டம்" போன்ற ஏகாதிபத்திய திட்டங்கள் முறியடிக்கப்படும் என்பதுடன் நம் நாட்டை ஆளுகின்ற தரகு பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் அரசை தூக்கியெறிந்து விட்டு ஒரு புரட்சிகர ஜனநாயகக் குடியரசை நிறுவமுடியும்.

டங்கல் திட்டத்தை எதிர்த்து நமது பணி

டங்கல் திட்டம் என்பது நமது நாட்டு பொருளாதார வாழ்வின் எல்லா துறைகளிலும் ஏகாதிபத்தியவாதிகளின் - பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவும் ஒரு திட்டமாகும். பன்முக வணிக அமைப்பு என்ற ஏகாதிபத்திய கங்காணி அமைப்பைக் கொண்டு நாட்டின் அரை சுதந்திரத்தையும் பறித்துவிட்டு ஒரு புதிய அடிமைத்தனத்தை முழுவதுமாக சுமத்தும் நோக்கத்தைக் கொண்ட ஒரு திட்டமாகும். ஆகையால் போராடுவதும், டங்கல் திட்டத்தை முறியடிப்பதும் பாட்டாளி வர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பணியாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர், விவசாயிகள் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக வர்க்கங்களின் ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது, அனைத்து ஏகாதிபத்திய மூலதனங்களையும் தரகு முதலாளித்துவ மூலதனங்களையும் பறிமுதல் செய்வது, அவற்றை நாட்டுடமையாக்குவது, நிலப்பிரபுக்களின் நிலங்களை உழுபவர்க்குச் சொந்தமாக்குவது, நாட்டு பொருளாதாரத்தின் தேசிய வாழ்வைத் தீர்மானிக்கும் அனைத்து துறைகளையும், அயல் நாட்டு வர்த்தக உறவுகளையும் மக்கள் ஜனநாயகக் குடியரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது, சமூக நீதியுடன் வளர்ச்சிக்குத் திட்டமிடுவது, நாட்டின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கும், சோசலிசத்துக்கு மாறிச் செல்வதற்கும் ஏற்ற முறையில் உற்பத்தியை திட்டமிடுவது ஆகியன நமது புதிய ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கமாகும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதின் மூலம் தான் நாட்டின் எல்லா அடிப்படையான பிரச்சினைகளுக்கும் தீர்வு கானமுடியும். டங்கல் திட்டத்தை முறியடித்து விடுவதினால் மட்டுமே அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்தியா விடுதலை அடைந்து விடமுடியாது என்பதை நாம் அறிவோம். ஆயினும் ஏகாதிபத்தியவாதிகளின் புதிய தாக்குதலை முறியடிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு டங்கல் திட்டத்தில் கையொப்பமிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்து நமது போராட்டம் தொடரும். இந்த ஒரு கோரிக்கையை வென்றெடுத்து விட்டால் கூட இந்தியா விடுதலை அடையது என்பதற்காக, இந்திய அரசாங்கம் டங்கல் திட்டத்தில் கையொப்பமிடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது இருக்கும் உரிமைகள் பறிக்கப்படுவதையும், புதிய அடிமைத்தனமும் சுரண்டலும் திணிக்கப்படுவதையும் எதிர்ப்பில்லாமல் அனுமதிப்பதாகும். ஏகாதிபத்தியவாதிகள் புதிய தாக்குதல்களையும், நாட்டு ஆளும் வர்க்கங்களின் துரோகங்களையும் முறியடிப்பது உடனடி பணியாகிவிடுகிறது. இத்தகைய உடனடிப் பணிகளை நிறைவேற்றும் வழியாகத்தான், புதிய மக்கள் ஜனநாயகக் குடியரசு என்ற நமது மகத்தான லட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டியுள்ளது. எனவே டங்கல் திட்டத்தை முறியடிக்க உறுதி கொள்வோம்.

டங்கல் திட்டத்தை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமானால்

-           நாட்டின் பொருளாதாரம் பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு திறந்து விடப்படும்.

-           பொருட்கள் வர்த்தகத்துடன் நேரடித் தொடர்பில்லாத வேளாண்மை, வெளி நாட்டு முதலீடு, சேவை வணிகம், அறிவுசார் சொத்துரிமை ஆகிய துறைகள் காட் ஒப்பந்த வரம்புக்குள் கொண்டு வரப்படும்.

-           இதனால் அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய நாடுகளின் நவீன காலனியாதிக்க சுரண்டல் நம் நாட்டில் தீவிரமடையும்.

-           நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களையும் வங்கி, காப்பீடு போன்ற சேவைத்துறை நிறுவனங்களையும் ஏகாதிபத்தியவாதிகள் விழுங்கி விடுவர்.

-           அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி முளையிலேயே கிள்ளியெறியப்படும்.

-           எண்ணிலடங்கா தேசிய முதலாளித்துவ நிறுவனங்கள் திவாலாகும்.

-           ஒரு கோடி தொழிலாளர் வேலையை இழப்பார்கள். நாட்டின் வேலை இல்லாதோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

-           வேளாண்மைத்துறையும் வேளாண் சார்ந்த தொழில்களும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடப்படும்.

-           பெரும் வேளாண் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் பண்ணைகளைத் துவக்கவும், ஒப்பந்த முறையில் விவசாயத்தில் பங்கு கொள்ளவும் ஊக்குவிக்கப்படும்.

-           வேளாண்துறையை ஒன்றிரண்டு ஏற்றுமதி விளைபொருட்கள் பயிர் செய்வதற்கு மையப்படுத்தப் படும்.

-           உணவு தானியங்களின் உற்பத்தி புறக்கணிக்கப்படும்.

-           உணவு தன்னிறைவு பகற்கனவாகிவிடும்.

-           உணவு தானியத்திற்காக அமெரிக்காவிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

-           புதிய கண்டுபிடிப்பு உரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் விதைகளை விற்று கொள்ளையடிக்கும்.

-           விவசாயிகளுக்குத் தரப்படும் மானியங்கள் நிறுத்தப்படும்.

-           விவசாயிகளுக்கு வங்கி கடன் நிறுத்தப்படும்.

-           அரசின் வேளாண் கொள்கையால் விவசாயிகள் ஓட்டாண்டிகளாக்கப்படுவர்.

-           கிராமப்புற வேலையின்மை அதிகரிக்கும்.

-           பொது வினியோக முறையின் மூலம் உணவு பொருட்கள் நியாய விலைக்கு விற்கப்படுவது படிப்படியாக நிறுத்தப்படும்.

-           மக்களின் மீது பசியும் வறுமையும் திணிக்கப்படும்.

-           பன்முக வணிக அமைப்பு என்ற ஏகாதிபத்தியவாதிகளின் கங்கானி அமைப்பு உருவாக்கப்படும்.

-           நம் நாட்டின் அரைகுறை இறையாண்மையைப் பறித்துக் கொண்டு, இந்திய அரசை ஒரு "பொம்மை அரசாக" மாற்றிவிடுவதற்கு இந்த கங்காகணி அமைப்பு செயல்படும்.

-           ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் சுமையை நம் நாட்டு மக்களின் ஈது ஏற்றிவிடுவதற்கு டங்கல் திட்டம் ஒரு கருவியாக செயல்படும்.

-           புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்படுவதுடன் டங்கல் திட்டம் ஏற்கப்படுவதால் வரும் விளைவுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களை எதிர்க்கொள்ளும் பொருட்டு, இந்திய ஆளும் வர்க்கத்தினரின் பாசிச ஆட்சியை நோக்கிய பயணம் வேகமடையும்.

எனவே, இந்தக் கொடிய டங்கல் திட்டத்தை இந்திய அரசாங்கம் ஏற்பதை எதிர்ப்போம்.

"நரசிம்மராவ் கும்பலே டங்கல் திட்டத்தை ஏற்காதே! என முழுங்குவோம்.

இம்முழக்கத்தை ஏற்று, நரசிம்மராவ் அரசாங்கம் டங்கல் திட்டத்தை ஏற்பதை முறியடிக்க முன்வருமாறு அனைத்து நாட்டுப்பற்று கொண்டோரையும், ஜனநாயக வாதிகளையும் ம.ஜ.இ.க அழைக்கிறது.

டங்கல் திட்டத்தை முறியடிப்போம்

ராவ் அரசாங்கமே டங்கல் திட்டத்தை ஏற்காதே!

அரைகுறை சுதந்திரத்தையும் அடகு வைப்பதை முறியடிப்போம்!

பன்னாட்டு கம்பெனிகளை விரட்டியடிப்போம்!

நிலப்பிரபுக்களின் நிலங்களை உழுபவர்க்கு நொந்தமாக்குவோம்!

ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைத்திடுவோம்!

- ஏஎம்கே

நவம்பர் 1993

நன்றி : மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்