முதலாளித்துவம் மற்றும் தொழிலாளர்களின் குடியேற்றம்

வி.ஐ.லெனின்

முதலாளித்துவம் மற்றும் தொழிலாளர்களின் குடியேற்றம்

முதலாளித்துவம் நாடுகளின் இடம்பெயர்வுக்கான ஒரு சிறப்பு வடிவத்திற்கு வழிவகுத்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை நாடுகள், பெரிய அளவில் இயந்திரங்களை அறிமுகப்படுத்தி, பின்தங்கிய நாடுகளை உலக சந்தையில் இருந்து வெளியேற்றுவது, தனது நாட்டில் ஊதியத்தை சராசரி விகிதத்திற்கு மேல் உயர்த்துவதன் மூலம் பின்தங்கிய நாடுகளில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கிறது.

நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இவ்வாறு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து அலைகிறார்கள். மேம்பட்ட முதலாளித்துவம் அவர்களை வலுக்கட்டாயமாக அதன் சுற்றுப்பாதையில் இழுத்துச் செல்கிறது, அவர்கள் வாழும் வீடுகளிலிருந்து அவர்களை கிழித்தெறிந்து விடுகிறது உலக வரலாற்று இயக்கத்தில் பங்கேற்பாளர்களாக ஆக்குகிறது மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களின் சக்திவாய்ந்த, ஒன்றுபட்ட, சர்வதேச வர்க்கத்துடன் அவர்களை நேருக்கு நேர் கொண்டு செல்கிறது.

கடுமையான வறுமை மட்டுமே மக்களை தங்கள் பூர்வீக நிலத்தை கைவிட கட்டாயப்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை, மற்றும் முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மிகவும் வெட்கமின்றி சுரண்டிக்கொள்கிறார்கள். ஆனால் நாடுகளின் இந்த நவீன குடியேற்றத்தின் முற்போக்கான முக்கியத்துவத்திற்கு பிற்போக்குவாதிகள் மட்டுமே கண்களை மூடிக்கொள்ள முடியும். முதலாளித்துவத்தின் மேலும் வளர்ச்சியின்றி, அதை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டமின்றி மூலதனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை சாத்தியமில்லை. இந்த போராட்டத்தில்தான் முதலாளித்துவம் முழு உலகிலும் உழைக்கும் மக்களை இழுத்துச் செல்கிறது, உள்ளூர் வாழ்க்கையின் வலிமையான, உற்சாகமான பழக்கங்களை உடைக்கிறது தேசியத் தடைகளையும் தப்பெண்ணங்களையும் உடைக்கிறது, அனைத்து நாடுகளிலிருந்தும் தொழிலாளர்களை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பல வளர்ந்த நாடுகளின் மிகப்பெரிய தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் ஒன்றிணைக்கிறது.

தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவிற்கான குடியேற்ற புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

பத்தாண்டுகள் 1821-30                 99,000

பத்தாண்டுகள் 1831-40               496,000

பத்தாண்டுகள் 1841-50            1,597,000

பத்தாண்டுகள் 1851-60            2,453,000

பத்தாண்டுகள் 1861-70            2,064,000

பத்தாண்டுகள் 1871-80            2,262,000

பத்தாண்டுகள் 1881-90            4,722,000

பத்தாண்டுகள் 1891-1900            3,703,000

ஒன்பது ஆண்டுகள் 1901-09    7,210,000

 

குடியேற்றத்தின் வளர்ச்சி மிகப்பெரியது மற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1905-09 ஐந்தாண்டுகளில் அமெரிக்காவில் நுழைந்தவர்களின் சராசரி எண்ணிக்கை (அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் குறிப்பிடப்படுகிறது) ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் தோற்ற இடத்தில் ஏற்பட்ட மாற்றம் கவனிக்கத்தக்கது 1880 வரையிலானது பழைய குடியேற்றம் என்று அழைக்கப்பட்டது அதாவது பழைய நாகரிக நாடுகளான கிரேட் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஓரளவு சுவீடனில் இருந்து குடியேறுவது. 1890 வரை கூட, கிரேட் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி மொத்த குடியேறியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வழங்கின.

1880 முதல், புதிய குடியேற்றம் என்று அழைக்கப்படும், கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவிலிருந்து, ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் ரஷ்யாவிலிருந்து நம்பமுடியாத அளவிற்கு வேகமாக அதிகரித்து இருந்தது. இந்த மூன்று நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

பத்தாண்டுகள் 1871-1880                        201,000

பத்தாண்டுகள் 1881-1890                        927,000

பத்தாண்டுகள் 1891-1900                     1,847,000

ஒன்பதாண்டுகள்  1901-1909             5,127,000

ஆகவே, பழைய உலகில், சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நிலவும், நிலவிய நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களைப் பாதுகாத்த மிகவும் பின்தங்கிய நாடுகள், வேறு எதையும் விட அதிகமாக நாகரிக நிலைக்கு கட்டாயப் பயிற்சி பெறுகின்றன. அமெரிக்க முதலாளித்துவம் பின்தங்கிய கிழக்கு ஐரோப்பாவின் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை (ரஷ்யா உட்பட, 1891-1900இல் 594,000 மற்றும் 1900-09இல், 1,410,000 புலம்பெயர்ந்தோரை வழங்கியது) அவர்களின் அரை நிலப்பிரபுத்துவ நிலைமைகளிலிருந்து கிழித்தெறிந்து அவர்களை முன்னேறிய, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் படையில் அணிவகுக்கச்செய்கிறது.

கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த குடியேற்றம் மற்றும் தொழிலாளர் என்ற மிகவும் அறிவுபுகட்டக்கூடிய புத்தகத்தின் ஆசிரியரான ஹர்விச் சில சுவாரஸ்யமான அவதானிப்புகளைச் செய்கிறார். குறிப்பாக 1905 புரட்சிக்குப் பின்னர் (1905-1,000,000; 1906-1,200,000; 1907-1,400,000; 1908 மற்றும் 1909-1,900,000 முறையே) அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ரஷ்யாவில் பல்வேறு வேலைநிறுத்தங்களில் பங்கேற்ற தொழிலாளர்கள் வெகுஜன வேலைநிறுத்தத்தின் துணிச்சலான மற்றும் மிகவும் ஆக்ரோஷமான உணர்வை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தினர்.

ரஷ்யா தொலைதூர மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளது, தனது சிறந்த தொழிலாளர்களில் சிலரை வெளிநாடுகளுக்கு இழக்கிறது; முழு உலகிலும் உழைக்கும் மக்கள்தொகையில் மிகவும் தீவிரமான மற்றும் திறமையான உடல் பிரிவுகளை எடுத்துக் கொண்டு அமெரிக்கா மேலும் மேலும் வேகமாக முன்னேறி வருகிறது. 

அமெரிக்காவுடன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வளர்ச்சி வேகத்தில் இருக்கும் ஜெர்மனி, தொழிலாளர்களை வெளியேற்றும் நாடாக இருந்த நிலையிலிருந்து, பிற நாடுகளிலிருந்து அவர்களை ஈர்க்கும் ஒரு நாடாக மாறிக்கொண்டிருக்கிகிறது. 1881-90 பத்து ஆண்டுகளில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை 1,453,000; ஆனால் ஒன்பது ஆண்டுகளில் 1901-09 இது 310,000 ஆகக் குறைந்தது. இருப்பினும், ஜெர்மனியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1910-11ல் 695,000 ஆகவும், 1911-12 இல் 729,000 ஆகவும் இருந்தது. இந்த குடியேறியவர்களை தொழில் மற்றும் பிறப்பிடத்திற்கு ஏற்ப பிரித்து பின்வருவனவற்றைப் பெறுகிறோம்:

1911-12களில் ஜெர்மனியில் வேலை செய்த வெளிநாட்டு தொழிலாளர்கள் (ஆயிரங்களில்)

விவசாயம் தொழிற்துறை மொத்தம்
ரசியாவிலிருந்து 274 34 308
ஆஸ்திரியாவிலிருந்து 101 162 263
பிற நாடுகளிலிருந்து 22 135 157
மொத்தம் 397 331 728

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள், அதிக எண்ணிக்கையிலான விவசாய கூலித் தொழிலாளர்களை வழங்குகிறது. முன்னேறிய நாடுகள் தங்களைப் போலவே சிறந்த ஊதியம் தரும் தொழில்களைக் கைப்பற்றி, அரை காட்டுமிராண்டித்தனமான நாடுகளுக்கு மிக மோசமான ஊதியம் தரும் தொழில்களை விட்டுச் செல்கின்றன. பொதுவாக ஐரோப்பா ("பிற நாடுகள்") ஜெர்மனிக்கு 157,000 தொழிலாளர்களை வழங்கியது அவர்களில் பத்தில் எட்டு பங்கு (157,000 பேரில் 135,000) தொழில்துறை தொழிலாளர்கள். பின்தங்கிய ஆஸ்திரியா தொழில்துறை தொழிலாளர்களில் பத்தில் ஆறு பங்கை (263,0ளி0 இல் 162,000) மட்டுமே வழங்கியது. எல்லாவற்றிலும் மிகவும் பின்தங்கிய நாடான ரஷ்யா, தொழில்துறை தொழிலாளர்களில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே வழங்கியது (308,000 பேரில் 34,000).

இவ்வாறு, ரஷ்யா தனது பின்தங்கிய நிலைக்கு எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் தண்டிக்கப்படுகிறது. ஆனால் மற்ற மக்களோடு ஒப்பிடும்போது, ​​ரஷ்யாவின் அதிகளவிலான தொழிலாளர்கள் இந்த பின்தங்கிய நிலை மற்றும் காட்டுமிராண்டித்தனமான நிலையிலிருந்து வெடித்தெழுவர், மற்றவர்கள் தங்கள் சொந்த நாட்டின் இந்த "மகிழ்ச்சிகரமான" அம்சங்களுக்காக எதிர்த்துப் போராடுவதை விடவும், விடுதலைக்கு மிக நெருக்கமான ஒரே சர்வதேச சக்தியாக அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுடனும் ஒன்றுபடுவர்.

முதலாளித்துவ வர்க்கம் ஒரு தேசத்தின் தொழிலாளர்களை இன்னொருதேசத்தின் தொழிலாளர்களுக்கு எதிராகக் தூண்டுகிறது. முதலாளித்துவத்தால் அனைத்து தேசியத் தடைகள் உடைக்கப்படுவது தவிர்க்க முடியாதது மற்றும் முற்போக்கானது என்பதை உணர்ந்த வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள், பின்தங்கிய நாடுகளிலிருந்து தங்கள் சக ஊழியர்களை அறிவூட்டவும் ஒழுங்கமைக்கவும் உதவ முயற்சிக்கின்றனர். 

குறிப்புகள்:

[1] அமெரிக்காவைத் தவிர அமெரிக்க கண்டத்தின் பிற நாடுகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. கடந்த ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,50,000, பிரேசிலில் சுமார் 1,70,000 மற்றும் கனடாவில் 2,00,000 க்கும் அதிகமானோர்; ஆண்டுக்கான மொத்தம் 6,20,000.

-லெனின், LCW, Vol, 19; Page 454-457

மொழிபெயர்ப்பு: சமரன், பிப்ரவரி 2020 இதழ்