வக்ஃபு வாரியம் - மடங்கள்: யாரிடம் அதிக நிலக்குவியல் உள்ளது?

சையத் முஹம்மது

வக்ஃபு வாரியம் - மடங்கள்: யாரிடம் அதிக நிலக்குவியல் உள்ளது?

வக்பு நிலம் 9.40 லட்ச ஏக்கரா? இல்லை! நாடு முழுவதுமுள்ள வக்பு சொத்துக்களை விடவும், வெறும் 4 மாநிலத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நிலங்களே 10 லட்சம் ஏக்கரைத் தாண்டுகிறது! - அசாத்-உதின் ஒவைசி அனல் பேச்சு

இந்தியாவில் 9.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியங்களின் உடைமையாக இருக்கிறது என்ற பரவலான கருத்தை ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாத்-உதின் ஒவைசி மறுத்துப் பேசியிருந்தார். குறிப்பாக, வெறும் நான்கு மாநிலங்களில் மட்டும் 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் 'ஜல்சா ரஹ்மத்துல்-லில்-அலமீன்' என்ற பொதுக்கூட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகப் பேசிய ஒவைசி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்: "தமிழ்நாட்டில், கோயில் மற்றும் மடங்களுக்கு (துறவற மடங்கள்) சொந்தமான நிலங்கள் மொத்தம் 4.78 லட்சம் ஏக்கராகவும், ஆந்திரப் பிரதேசத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 4 லட்சம் ஏக்கர் நிலமும் உள்ளது. தெலங்கானா மாநிலம் இத்தகைய நிலங்களில் 87,000 ஏக்கரைக் கொண்டுள்ளது. மேலும், ஒடிசாவில், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வெளியிட்ட (CAG) அறிக்கையின்படி, வெறும் 13 கோயில்கள் மட்டுமே 12,776 ஏக்கரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்த நான்கு மாநிலங்களே 10 லட்சம் ஏக்கர் அளவைத் தாண்டிச் செல்கின்றன. இதற்கு மேலாக, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், வங்காளம், அசாம் அல்லது ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் நிலவுடைமையை  நான் கணக்கில் சேர்க்கவில்லை," என்று பேசியிருந்தார்.

தனி தர்கா வாரியம் அமைக்க வேண்டுமென பேசி வருவோரைக் அசாசுதீன் ஒவைசி கடுமையாகச் சாடினார். அவர்களை "ரங் பிரங்கே" (வண்ணம் பூசிய) கோமாளிகள் என்றும், வெளிவேஷம் போடுபவர்கள் என்றும் கூறி அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார். காஜா கரீப் நவாஸின் ஆன்மீக வாரிசு (ஜனாஷீன்) என்று ஒருவர் கூறிக்கொள்வதையும் அவர் ஏற்க மறுத்தார். அதற்குப் பதிலாக அவர்களைக் கிண்டலாக, "பிரதமர் நரேந்திர மோடியின் ஜனாஷீன்" என்று வர்ணித்தார். இந்த நபர்கள் தர்காவிலிருந்து ஆண்டுக்கு ₹2 கோடி இலாபம் பெறுவதாகவும், இது ஆண்டுதோறும் 5% அதிகரிப்பதாகவும் ஒவைசி குற்றம் சாட்டினார். "நீங்கள் விழுங்கும் அந்த ₹2 கோடியில், ஏழைகள், விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?"  என்று அவர்களின் சமூக நலப் பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். வக்ஃப் திருத்த மசோதாவுக்கு அவர்கள் அளித்த ஆதரவையும் அவர் கடுமையாகக் கண்டித்து, அவர்களை வெட்கமற்றவர்கள் என்று சாடினார்.

"இதை சூஃபித்துவம் என்றும், உங்கள் பழக்கவழக்கங்கள் வேறுபட்டவை என்றும் நீங்கள் கூறுகிறீர்கள் என்றால், எனக்குச் சொல்லுங்கள்—அவை ஷரியாவிற்கு இணக்கமாக இருக்கின்றனவா இல்லையா?". "ஆம் எனில், புதிய சட்டம் எதுவும் தேவையில்லைதானே; நடைமுறையில் உள்ள சட்டமே போதுமானதுதானே.". "இல்லை எனில், புதிய சட்டம் வேண்டும் என்று கூறுவது வெறும் உங்கள் சொந்த விருப்பம் மட்டுமே," என்று அவர்களின் மத நிலைப்பாட்டிற்கு சவால்விட்டதோடு அதுகுறித்து தெளிவுபடுத்தவும் கோரினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக்காலம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையோடு அசாசுதீன் ஓவைசி பேசினார். அத்துடன், வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) படுதோல்வியைத் தழுவும் என்றார். மேலும், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் தமது கட்சி சிறப்பாகச் செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட வக்ப் (Waqf) திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசிய ஓவைசி, அது இஸ்லாமிய அறக்கட்டளைகளின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் என்று எச்சரித்தார். "போராட வேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் எங்களுடன் துணை நிற்பீர்களா? அல்லது D.J. இசைக்கு நடனமாடுவதில் மூழ்கியிருப்பீர்களா? நீங்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களையும் (மசூதிகளையும்), இறைநேசர்களின் தர்காக்களையும், உங்கள் மூதாதையர்களின் கல்லறைகளையும், கான்காக்களையும் (சூஃபி ஆலயங்கள்) பாதுகாப்பீர்களா?" என்ற தனது ஆதரவாளர்களை நோக்கிக் அறைகூவல் விடுத்தார்.

ஷேக் ஹசீனாவிற்கு ஆதரவு தருவது ஏன்?

வெளியுறவுக் கொள்கை விவகாரத்திற்குத் திரும்பிய ஓவைசி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு பிரதமர் மோடி அளிக்கும் ஆதரவை வன்மையாகக் கண்டித்தார். அவர் மோடியை, தேசிய நலனை விடத் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

"ஏன் அவரை இங்கு அழைத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு, பங்களாதேஷ் நமது அண்டை நாடுதான். அங்கு பாகிஸ்தானின் கை ஓங்கினால், அவர்கள் இந்தியாவிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வார்கள்" என்பதை மட்டும் நான் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று பேசினார். தனது கருத்தை வலியுறுத்தவும் நிரூபிக்கவும், அவர் 2005 ஆம் ஆண்டு ஹைதராபாத் சிறப்பு அதிரடிப்படை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பை மேற்கோள் காட்டி பேசினார். அது ஒரு பங்களாதேஷ் நாட்டவரால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மதராசா குறித்து சர்சைக்குரிய கருத்தை பேசிய மத்திய இணை அமைச்சர் பண்டியை வறுத்தெடுத்த ஒவைசி

மதரஸாக்களை பயங்கரவாதத்துடனும், ஆயுதப் பயிற்சி வழங்கும் இடமென்றும் தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரை அசாதுதீன் ஒவைசி கடுமையாகச் சாடினார். அமைச்சரின் இந்தக் கூற்றை அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பு மனநிலை என்று கூறியதோடு, "இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சுகளை பேசிவரும் நீங்களெல்லாம் ஒரு அமைச்சரா? ஒரு AK-47 துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட ஒரு மதரஸாவையாவது எனக்கு காட்டுங்கள்!" என்று கேள்வி எழுப்பினார்.

மணிப்பூர் கலவரம் பற்றிப் பேசிய ஒவைசி, 800க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்கள் இன்று வரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தரும் நிலைமையையும் அம்பலப்படுத்தினார். "மரியதைக்குரிய அமைச்சர் அவர்களே, தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டியிருந்தால் கூட, இப்போதே மணிப்பூருக்குச் செல்லுங்கள்! அங்கு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவப் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அளவுக்கு மௌனம் சாதிப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியதோடு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.

சமீபத்திய மிலாது நபி ஊர்வலங்களின் போது (நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்) ஏற்பட்ட இடையூறுகள், ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஒவைசி, அதிக ஒலி கொண்ட DJ ஒலிப்பெருக்கி சாதனங்களின் பொருத்தமற்ற பயன்பாட்டை வன்மையாகக் கண்டித்தார். "மிலாது நபி ஊர்வலங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மிகத் தெளிவாகத் தெரிகிறது - நமது மத அனுஷ்டானங்களில் DJ ஒலிப்பெருக்கி சாதனங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. அரசாங்கம் இந்த வழக்கத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்; இதுபோன்ற இடையூறுகள் முற்றிலும் தேவையற்றவை," என்பதையும் அவர் சேர்த்துப் பேசினார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/national/telangana/4-states-alone-have-10-lakh-acres-as-hindu-endowment-land-940-lakh-acres-waqf-countrywide-a-far-cry-asad/article68667372.ece

Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு