மோசடித் தேர்வுகள்! கொந்தளிப்பில் மாணவர்கள்!

அறம் இணைய இதழ்

மோசடித் தேர்வுகள்! கொந்தளிப்பில் மாணவர்கள்!

நீட் தேர்வில் எக்கச்சக்க சிக்கல்கள்! வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், ஊழல், கருணை மதிப்பெண்கள், தேர்வு முடிவுகளில் குளறுபடி..என  அம்பலமாகி வருகின்றது. நீட், க்யூட், நெட் போன்ற தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ  என்பது யார் ஆதாயம் பெற இயங்குகிறது..? இந்த சூதின் வலைப் பின்னல்கள்  குறித்து ஒரு அலசல்.

நீட் ஏற்படுத்திய கொதிப்பு அடங்குவதற்குள்,யு.ஜி.சி – நெட் தேர்வு மோசடி அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18 ந்தேதி நடைபெற்ற யு.ஜி.சி – நெட் தேர்வில்  முறைகேடுகள் நடத்திருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததாகக் கூறி, அடுத்த நாளே 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை. டார்க் வெப், டெலிகிராம், வாட்சப்  போன்ற செயலிகளில் வினாத்தாள் ரூ5,000 முதல் 10,000 வரை சுமார் 6 லட்சத்திற்கு விற்கப்பட்டது ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளது.

மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் , யு.ஜி தேர்வு  மே 15 ந்தேதி முதல் 24 தேதி வரை நாடு முழுவதும் 320 நகரங்களில்  நடத்தப்பட்டது. இதில் மே -15 ந்தேதி டெல்லி நொய்டா , பரிதாபாத், காசியாபாத், குருகிராம் ஆகிய மையங்களில்  நடத்தப்பட இருந்த  தேர்வு அன்று  காலை திடீரென ரத்து செய்யப்பட்டது.   அதேபோல், உத்தரப் பிரதேசம் – கான்பூரில் 220 மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் அங்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணத்தை என்.டி.ஏ இதுவரை  தெரிவிக்கவில்லை.

இது மட்டுமல்ல, ஜூன் -23 ந்தேதி நடத்தப்படுவதாக இருந்த  முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் – பி.ஜி நுழைவுத் தேர்வை மத்திய சுகாதாரத்துறை திடீரென ரத்து செய்துள்ளது. அதே போல், அறிவியல் பாடங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் சி.எஸ்.ஐ.ஆர் – யு.ஜி.சி தேர்வு ஜூன் -25 முதல் 27 ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெட் / சி.எஸ்.ஐ.ஆர் – யு.ஜி.சி தேர்வுகள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாக மட்டுமல்ல, முனைவர் பட்டப் படிப்பிற்கான தகுதியாகவும், முனைவர் பட்டப்படிப்பின் போது பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்படும் ஜே.ஆர்.எப் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான  தகுதித் தேர்வாகவும் உள்ளது.  இதில் நடந்துள்ள முறைகேடுகளாலும், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் பேராசிரியர் பணி, முனைவர் பட்டப் படிப்பு, கல்வி உதவித் தொகை போன்ற கனவுகளுடன் உள்ளவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிட்டது.

கையும் களவுமாக சிக்கிய என்.டி.ஏ!

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ந்தேதி அறிவிக்கப்படும் என்று முதலில் சொன்னது என்.டி.ஏ. ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் நாடே மூழ்கியிருந்த தருணத்தில் திடீரென நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது ஏன்?

மே 5 ந்தேதி நீட் தேர்வு நடந்த போதே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.  குஜராத்திலும், பீகாரீலும்  11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை போலீசார் என்.டி.ஏ வுக்கும் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை மூடி மறைத்து விட்டு வினாத்தாள் கசியவே இல்லை என்றது.

என்.டி.ஏ. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து முறைகேடு நடத்திருப்பது அம்பலப்பட்டுக் கொண்டிருந்த போதும், கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி காலதாமதத்திற்காக கருணை மதிப்பெண் வழங்கினோமே தவிர, வினாத்தாள் கசியவே இல்லை என்றார். பின்னர் சில நாட்கள் கழித்து நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. ஆனால், வினாத்தாள் கசியவில்லை என்றார் கல்வி அமைச்சர் தர்மேந்திர  பிரதான். ஆனால், கல்வி மாஃபியா கும்பல் 300 கோடி இலக்கு வைத்து நாடு முழுவதும் வினாத்தாள் விற்பனையை படுஜோராக நடத்தி இருக்கும் உண்மை தற்போது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிவிட்டது.

மே-4 ந்தேதி சிக்கந்தர் யாதவ், அகிலேஷ் குமார், பிட்டு சிங் ஆகிய மூன்று இடைத் தரகர்களும் பீகாரில்  அரசு சுற்றுலா மாளிகையில் 25 மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து பயிற்சி அளித்துள்ளனர். வினாத்தாள் விற்பனை குறித்து சிங்கந்தர் யாதவ் எழுதி வைத்திருந்த டைரியில் அமைச்சரின் தொடர்பு குறித்து எழுத்தப்பட்டுள்ளது.  32 லட்சம் கொடுத்து முன்கூட்டியே வினாத்தாள் வாங்கியதை அனுராக் யாதவ் என்ற பீகார் மாணவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வினாத்தாள்  இரவோடு இரவாக பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களை சார்ந்த பல மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கோத்ரா – பர்வாடி ஜலராம் பள்ளி தேர்வு மையத்தில் மேற்பார்வை செய்த ஒரு ஆசிரியர் சரியான விடைகளை எழுதுவார் எனக்கூறி 4 மாணவர்களிடம் ரூ.2 கோடியே 82 லட்சம் ராய் ஓவர்சீஸ் என்ற தனியார் பயிற்சி மையத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் துஷார் பத், மற்றும் இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.டி.ஏ அதிகாரிகள், வினாத்தாள் தயாரித்தவர்கள், தேர்வு நடத்தும் மையங்களுக்கான அதிகாரிகள், தனியார் பயிற்சி மையங்கள், இடைத்தரகர்கள் என நாடு முழுவதும் வலைபின்னலைக் கொண்ட கல்வி மாஃபியா கும்பலுக்கு என்.டி.ஏ ஒரு களமாக அமைந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

கருணையின் பெயரால் மெகா மோசடி!

நீட் தேர்வுகளின் போது கட்டுப்பாடுகள் என்ற பெயரால் மாணவிகளின் உள்ளாடைகளை கழட்டச் சொன்ன வக்கிரத்தையும், 5 நிமிட தாமதத்திற்காக கெஞ்சிய மாணவர்களுக்கு கருணை காட்டாத கொடூரத்தையும் அரங்கேற்றிய என்.டி.ஏ தான் 1,563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கி இருக்கிறது. இதன் பின்னால் மிகப் பெரிய மோசடி ஒளிந்திருக்கிறது.

கருணை மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் தனியார் பயிற்சி மையத்தைச் சார்ந்தவர்கள். 4 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் தங்கள் பயிற்சி மைய மாணவர்களை டாப்பர்களாக உருவாக்கவும், அதன் மூலம் மீண்டும் கல்லா கட்டவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கவும் பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றன. அதில் ஒன்றாகத்தான் இவ்வாண்டு கருணை மதிப்பெண் என்ற மோசடியை மிகவும் ரகசியமாக, என்.டி.ஏ வின் மூலமாகவே செய்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியான போது தேர்வு தாமதம், கருணை மதிப்பெண்கள் குறித்து எதுவும் பேசாத என்.டி.ஏ, தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் எழுப்பிய பிறகே, நேரம் இழப்பிற்காக கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகச் சொன்னது. அதுவும், விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாம். என்.டி.ஏ இதனை ஒரு சாதாரண விசயம்போல் சொல்கிறது. ஆனால், இந்த கருணை மதிப்பெண்கள் தான் இக்கல்வியாண்டில் மருத்துவக் கல்வி சீட் யாருக்கு  கிடைக்க  வேண்டும், யாருக்கு கிடைக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கப் போகிறது.

720 என்ற முழு மதிப்பெண்கள், இரண்டாம் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் இத்தகைய கருணை மதிப்பெண் பெற்றவர்கள் தான். இவர்கள் அனைவரும் ராஜஸ்தான், அரியானா, உ.பி, பீகார் போன்ற பி.ஜே.பி ஆளும் மாநிலங்களைச் சார்ந்தவர்கள் என்பது கூடுதல் தகுதி. இவர்களுக்கு நாட்டின் புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் ( ஆண்டுக் கட்டணம் ரூ.13,610/-) சேருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து, கருணை மதிப்பெண்களால் இதுவரை இல்லாத அளவில் கட்-ஆப் மதிபெண்கள் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரே தரவரிசைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்தது. இவர்கள் நாடு முழுவதும் உள்ள அரசுக் கல்லூரி இடங்களை ஆக்கிரமித்து விடுவார்கள். பணமுதலைகள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி விடுவார்கள். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் போவதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வசதியும் இல்லை. கருணையின் பெயரால் உண்மையான மெரிட் மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்படுகிறது.

நீட் தேர்வும், முறைகேடும் இரட்டைக் குழந்தைகள்!

நீட் தேர்வு 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2014 இல் பி.ஜே.பி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்பு தான்  ஒரே நாடு, ஒரே தேர்வு என்று சொல்லி, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் 2016 இல் உச்சநீதிமன்றத்தின் வழியாக நாடு முழுவதும் வலுக்கட்டாயமாக திணித்தது. இதன் மூலம் மாநிலங்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டது. நீட் – ஐ எதிர்த்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் 85% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டையும் பறித்து செய்து சமூகநீதியை தோற்கடித்தது பாஜக அரசு.

தகுதியான, திறமையான மருத்துவர்களை உருவாக்குவதும், லஞ்ச, ஊழல் முறைகேடுகளை தடுப்பதும் நீட் தேர்வின் நோக்கமல்ல. 2016 முதல் 2024 வரை நீட் தேர்வில் நடந்து வரும் முறைகேடுகள் இதனை நிரூபித்துவிட்டன. கல்வியிலும், மருத்துவத்திலும் தனியார் மயத்தை தீவிரப்படுத்துவது தான் அதன் உண்மையான நோக்கம். அதன் மோசமான விளைவுகளைத் தான் கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் நாம் சந்தித்து வருகிறோம்.

நீட்தேர்வின் கூடவே பிறந்த தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் கல்வி மாஃபியா தலைநகரமாக உருவெடுத்துள்ளது. ‘மெரிட்டை’ நீட் தீர்மானிக்கும், கல்விக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் தீர்மானிக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு 5 லட்சமும், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுக்கு 25 லட்சமும் கட்டணமாக தீர்மானித்து பல லட்சம் கோடிகளில் புரளுகின்றன. இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுதான் நீட் தேர்வு.

நீட் என்பது மருத்துவக் கல்லூரி சேரும் மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களின் உயிர் காக்கும் மருத்துவப் பிரச்சனையாகும். கடந்தாண்டு வரை, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், விலக்கு கேட்டும் தமிழகம் மட்டுமே போராடி வந்தது. தற்போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளன. நீட் முறைகேடுகளை எதிர்த்து கடந்த 20 நாட்களாக மாணவர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் என நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அது நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் மக்கள் போராட்டமாக தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

கட்டுரையாளர்: த.கணேசன், கல்வி செயற்பாட்டாளர். மக்கள் கல்விக் கூட்டியக்கம்.

அறம் இணைய இதழ்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு