ராணுவத்திற்கு பயிற்சி தரும் ஆர்.எஸ்.எஸ்!

அறம் இணைய இதழ்

ராணுவத்திற்கு பயிற்சி தரும் ஆர்.எஸ்.எஸ்!

இந்தியாவை மதவெறி கூடாரமாக்க ஆட்சி அதிகாரத்தை மிகத் தவறாக பாஜக அரசு பயன்படுத்துவது சைனிக் பள்ளிகள் விவகாரத்தில் சந்தேகமின்றித் தெரிகிறது. அதிலும், இந்திய ராணுவத்தை இந்துத்துவ மதவெறி ராணுவமாக கட்டமைக்க – பிஞ்சிலேயே நஞ்சை விதைக்க – இப்படியும் செய்கிறார்களே…!

1961 ஆம் ஆண்டே தோற்றுவிக்கப்பட்ட சைனிக் பள்ளிகள் என்பவை முழுக்க, முழுக்க அரசுப் பள்ளிகளாகத் தான் செயல்பட்டன. இதில் பாரபட்சமற்ற முறையில் பாடத் திட்டங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அவற்றை அரசிடம் இருந்து விடுவித்து தனியார் அமைப்பிடம் தரும் வகையில் தனியார் அரசு கூட்டுறவோடு புதிய சைனிக் பள்ளிகளுக்கு வித்திட்டுள்ளது. ராணுவத்திற்கு தளபதிகளை உருவாக்கும் இவை போன்ற புதிய சைனிக் பள்ளிகள் யார் வசம் தரப்பட்டுள்ளன என்ற கேள்வி ஆர்.டி.ஐ சட்டப்படி கேட்கப்பட்டத்தில் அவற்றில் 63% தீவிர இந்துத்துவவாதிகளிடம் தரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் தனியார் சைனிக் பள்ளிகளை சில பாஜக பிரமுகர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், இந்துத்துவ அமைப்புகளும் நடத்தி வருவது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக அறிய வந்துள்ளதானது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், ஒரு ராணுவப் பள்ளியை பிரபல தொழில் அதிபர் அதானியிடம் தந்துள்ளது பாஜக அரசு. இதன் மூலம் இந்திய பெரு நிலப்பரப்பையும், பொருளாதாரத்தையும் மட்டுமின்றி, ராணுவத்தின் ஒரு பகுதியையே கூட அதானி வசம் தருமளவுக்கு தன் எஜமான விசுவாசத்தை காட்டுகிறது பாஜக அரசு.

இந்த சைனிக் பள்ளிகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மிக உயர்ந்த தரத்தில் கல்வி கற்றுத் தரப்படுகிறது. வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமின்றி குதிரை ஏற்றம், மலை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், விமானம் மற்றும் கப்பலை கையாளுதல் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன! இவை அனைத்துக்கும் மத்திய அரசின் நிதி தரப்படுகிறது. இத்துடன் மூர்க்கத்தனமான இந்துத்துவ சித்தாந்தத்தையும் 11 வயது முதலே கற்றுத் தருவதற்காகவே பாஜக பிரமுகர்களும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் வசமும் இவை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வருங்காலத்தில் புறக்கணிப்பு காரணமாக இஸ்லாமிய சமூகம் பொங்கி எழுமானால் ஈவு இரக்கமின்றி அவர்கள் ஒடுக்கப்படலாம், நசுக்கப்படலாம். எங்கேனும் இந்து-இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படுமானால் இந்த சைனிக் பள்ளியால் உருவாக்கப்பட்ட ராணுவத் தளபதிகள் அந்தச் சூழலை எவ்வாறு கையாளுவார்கள் என நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது. அதுவும் பெண் குழந்தைகளுக்கான இரு பிரத்தியேக ராணுவப் பள்ளிகள் பாபர் மசூதி இடிப்பில் நேரடியாக ஈடுபட்டு கைதான சாத்வி ரிதம்பரா என்ற பெண் சாமியார் வசம் தரப்பட்டுள்ளது என்பது ஒரு சின்ன சாம்பிளாகும்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த சைனிக் ராணுவப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பிலும், நாந்தேட் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்ற செய்திகள் காங்கிரஸ் ஆட்சியின் போதே ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் பல தளங்களிலும் நிக்ழந்துள்ளதற்கு சாட்சியாகும். ஆர்.எஸ்.எஸ் கட்டளைக்கு கீழ் படிந்த பாஜகவின் ஆட்சியில் சகல மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸின் அஜந்தாக்கள் செயல் வடிவம் பெற்று வருவதன் அறிகுறியாகவே இந்த சைனிக் பள்ளிகள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே துவங்கப்பட்டது போக, தற்போது பலமில்லாத ஆட்சியாளர்கள் காரணமாக தமிழ்நாட்டிலும் காலூன்றுகின்றன. கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ, பஞ்சாபிலோ இவை தோற்றுவிக்கப்படவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

ஆனால், தமிழகத்தில் பாஜக பலமாக உள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம் அமராவதி அணை அருகே ஆண்டிக் கவுண்டனூரில் செயல்படும் சைனிக் பள்ளியில் சுமார் 650 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் தூத்துக்குடியில் சைனிக் பள்ளி தொடங்கவும் ஏற்பாடாகியுள்ளது. இதை தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஏன் எதிர்க்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

முன்பு ராஜிவ்காந்தி காலத்தில் மத்திய அரசின் பள்ளியாக கொண்டு வரப்பட்ட நவோதயா பள்ளிகளை இந்தி கற்றுத் தரப்படுகிறது என்ற ஒற்றை காரணத்தால் முற்றிலும் புறக்கணித்தன, இரு திராவிடக் கட்சியின் ஆட்சிகளும்! ஆனால், தற்போது இவை சைனிக் பள்ளிகள் விவகாரத்தில் சைலண்டாக ஒத்துழைப்பது கவலையளிக்கிறது.

இந்த சைனிக் பள்ளிகள் இந்துத்துவ இயக்கங்கள் வசம் தரப்பட்டது போல, சிறுபான்மை கிறிஸ்த்துவ, இஸ்லாமியர்களின் கல்வி நிறுவனங்களுக்கு தராமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்துத்துவ சிந்தனை போக்கு என்ற ஒற்றை பரிமாணத்திலேயே ராணுவ வீரர்கள் பிஞ்சு பருவம் தொடங்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் திட்டம் செயல் வடிவம் கண்டுள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ் தன் தொண்டர்களுக்கு தினசரி ஷாகா பயிற்சி தருவதை, தற்போது ராணுவத்திற்குள்ளும் ஆரம்பித்துவிட்டது என்பதே சரியான புரிதலாக இருக்கும். எது நிச்சயமாக நடக்கக் கூடாதோ, எதில் தனியார்களும், மதவாத சிந்தனைகளும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டுமோ.., அது நடந்தேவிட்டது.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

aramonline.in /17446/sainik-schools-bjp-rss/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு