இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது?

நியூஸ் 18

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது?

இந்தியாவில் நிலத்தின் விலை ஒவ்வொரு நாளும் விண்ணைத் தொடுகிறது. மும்பை-சென்னை போன்ற பெருநகரங்களில் குடியிருப்புக்கு மிகக் குறைந்த நிலமே மிச்சம். உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவுக்கு தனது குடிமக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 40 முதல் 80 லட்சம் ஹெக்டேர் கூடுதல் நிலம் தேவைப்படும். இந்த சூழலில் அதிக நிலம் யாரிடம் உள்ளது என்பதை பார்க்கலாம்.

யாரிடம் அதிக நிலம் உள்ளது?

இந்திய அரசிடம் தான் அதிக நிலம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தை தொடர்ந்து சிலர் அதிகளவில் நிலம் வைத்துள்ளனர். அரசாங்க நிலத் தகவல் அமைப்பின் (GLIS) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, பிப்ரவரி 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தின் உரிமையாளராக இருந்தது. இந்த நிலத்தில் 51 அமைச்சகங்கள் மற்றும் 116 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதை விட சிறிய நாடுகள் பல உள்ளன.

இந்திய அரசுக்கு சொந்தமான நிலத்தை விட குறைந்த பட்சம் 50 நாடுகள் உலகில் உள்ளன. கத்தார் (11586 சதுர கிலோமீட்டர்), பஹாமாஸ் (13943 சதுர கிலோமீட்டர்), ஜமைக்கா (10991 சதுர கிலோமீட்டர்), லெபனான் (10452 சதுர கிலோமீட்டர்), காம்பியா (11295 சதுர கிலோமீட்டர்), சைப்ரஸ் (9251 சதுர கிலோமீட்டர்), புரூனே (5765 சதுர கிலோமீட்டர்), பஹ்ரைன் (5765) சிங்கப்பூர் (726 சதுர கிலோமீட்டர்) போன்றவை தான்.

எந்த அமைச்சகத்திற்கு அதிக நிலம் உள்ளது?

அமைச்சகங்கள் வாரியான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ரயில்வேக்கு அதிகபட்ச நிலம் உள்ளது. இந்திய ரயில்வே-க்கு நாடு முழுவதும் 2926.6 சதுர கிலோமீட்டர் நிலம் உள்ளது. இதற்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகம் (இராணுவம்) மற்றும் நிலக்கரி அமைச்சகம் (2580.92 சதுர கிலோமீட்டர்) வருகிறது. எரிசக்தி அமைச்சகம் நான்காவது இடத்திலும் (1806.69 சதுர கிலோமீட்டர்), கனரக தொழிற்சாலைகள் ஐந்தாவது இடத்திலும் (1209.49 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில்) மற்றும் கப்பல் போக்குவரத்து ஆறாவது இடத்திலும் (1146 சதுர கிலோமீட்டர் நிலம்) உள்ளன.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார்?

இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக நிலத்தின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருப்பது கத்தோலிக்க திருச்சபை. இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை இயக்குகிறது.

இந்திய கத்தோலிக்க திருச்சபை 1972 இன் இந்திய தேவாலயங்கள் சட்டத்திற்குப் பிறகு ஒரு பெரிய அளவிலான நிலத்தை கையகப்படுத்தியது, அதன் அடித்தளம் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போடப்பட்டது.

தேவாலய நிலத்தின் மதிப்பு எவ்வளவு?

மீடியத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கத்தோலிக்க திருச்சபை நாடு முழுவதும் 14,429 பள்ளிகள்-கல்லூரிகள், 1086 பயிற்சி நிறுவனங்கள், 1,826 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை நடத்துகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, கத்தோலிக்க திருச்சபையின் மொத்த நில மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

மூன்றாம் இடத்தில் இருப்பது யார்?

வக்பு வாரியம் நிலம் தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. வக்ஃப் வாரியம் 1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மசூதிகள், மத்ரஸாக்கள் மற்றும் கல்லறைகளை நடத்துகிறது.  மீடியத்தின் படி, வக்ஃப் வாரியத்தில் குறைந்தது 6 லட்சத்திற்கும் அதிகமான அசையா சொத்துக்கள் (வக்ஃப் நிலம்) உள்ளது. முஸ்லீம் ஆட்சிக் காலத்தில் வக்ஃபு நிலங்களும், சொத்துக்களும் அதிகம் பெறப்பட்டது.

- நியூஸ் 18

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு