நீதிபதிகள் நியமனங்களில் ஏனிந்த பாகுபாடு? -ஹரிபரந்தாமன்
அறம் இணைய இதழ்

உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. இந்த நியமனங்களில் பார்ப்பனர்களே அதிகமாகவும் பிற உயர்சாதியினர் அதற்கடுத்த நிலையில் அதிகமாகவும் இருப்பதன் பின்னணியில் கடைபிடிக்கப்படும் தந்திரம் என்ன? – நீதிபதி ஹரிபரந்தாமன்;
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தமிழ்நாட்டில், குறிப்பாக வழக்குரைஞர் மத்தியில் தற்போது முக்கியமான பேசு பொருளாகியுள்ளது.காரணம்,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே, சுமார் 13 காலி பணியிடங்கள் இருக்கையில், 2025 ஆம் ஆண்டில் எப்போதும் இல்லாத அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுவதை ஒட்டி மேலும் 12 முதல் 13 காலிப் பணியிடங்கள் ஏற்பட உள்ளன.
உயர்நீதிமன்றத்திற்கு இரண்டு வழிகளில் நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்.
ஒன்று, வழக்குரைஞர்களை நியமிப்பது.
மற்றொன்று, மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது.
சென்னை உயர் நீதிமன்றம் என்பதில் மதுரை கிளையையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. அதில் 50 பேர் வழக்குரைஞர்கள் மத்தியில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். 25 பேர் மாவட்ட நீதிபதிகள் மத்தியில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
தற்சமயம் 65 உயர் நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிகின்றனர். அவர்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர். மீதம் உள்ள 61 பேர்களில், சுமார் 40 பேர் வழக்குரைஞர்கள் மத்தியில் இருந்து நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
பணிமூப்பு அடிப்படையில் தான், மாவட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். ஏதேனும், பிரத்தியேக காரணங்கள் இருப்பின், பணி மூப்பில் மூத்தவருக்கு பதிலாக இளையவர் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் 69% இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுவதால் ,மாவட்ட நீதிபதிகளில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் சமூக நீதி மீறப்படுவதில்லை. எனவே, மாவட்ட நீதிபதிகளில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் செய்வது தொடர்பாக இக்கட்டுரை விவாதிக்கவில்லை.
இந்த நேரத்தில் ஒரு செய்தியை பதிவு செய்தாக வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பது போன்று இந்தியாவின் பல மாநிலங்களில் மாவட்ட நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை .அங்கெல்லாம் மாவட்ட நீதிபதிகளிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பட்டியல் இனத்தவர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர் வருவது சாத்தியம் இல்லை. அதாவது, சமூக நீதி மறுக்கப்படும் நிலை அங்கு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் சுமார் 40 பேர் உள்ளனர் என்று மேலே கூறப்பட்டுள்ளது. அதில் 8 பேர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் . அதாவது மக்கள் தொகையில் 2 % உள்ளவர்கள், 20% நீதிபதிகளாக உள்ளார்கள்!
தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டியலினத்தவர், வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோர் ஆகிய மூன்று பிரிவிலும் சேர்த்து, வழக்குரைஞரில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் இருப்பவர்கள் 8 அல்லது 9 பேர்கள் மட்டுமே. அதாவது 50% க்கும் மேல் மக்கள் தொகையில் உள்ள மேற்சொன்ன மூன்று பிரிவினர்களில் இருந்து நீதிபதிகளாக இருப்பவர்கள் 20% தான்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் பார்ப்பன நீதிபதிகள் எண்ணிக்கை சுமார் இரண்டிலிருந்து மூன்று வரை இருக்கும். ஆனால், 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த எண்ணிக்கை 8 -க்கு குறையாமல் இருக்கிறது.
தந்திரமான வழி முறை;
இப்படி பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கையை கூட்டியதில் ஒரு தந்திரமான வழி முறை கடைபிடிக்கப்படுகிறது.
அதாவது, 25 நீதிபதிகள் பணியிடம் காலியாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பணியிடங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிரப்புவதற்காக பரிந்துரையை சென்னை உயர் நீதிமன்ற கொலேஜியம் செய்யாது. 3 அல்லது 4 முறை பரிந்துரைகள் அனுப்பப்படும். ஒவ்வொரு முறை அனுப்பப்படும் பரிந்துரையிலும் 6 அல்லது 7 பெயர்கள் இருக்கலாம்.
ஒவ்வொரு முறை பரிந்துரைத்து அனுப்பப்படும் 6 அல்லது 7 பெயர்கள் கொண்ட பட்டியலிலும் நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு பார்ப்பனராவது இருப்பார். ஆனால், மேற்சொன்ன மிகுந்த எண்ணிக்கையில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களோ, வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களோ , முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ இருப்பார்களா என்பது நிச்சயம் இல்லை.
இந்த தந்திரமான நடைமுறையை கடைப்பிடிப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. 1985 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சந்துருக்கர் அவர்கள். அவர் அனுப்பிய ஒரு பரிந்துரை பட்டியலில் 6 பேர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த 6 பேருமே பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனை எம்ஜிஆர் அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மண்ணின் மரபு படி ( Soil psychology) ஆதிக்க சாதியாக உள்ள பார்ப்பனர் சமூகத்தில் இருந்து மிகப் பெரும் எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்படுவது ஏற்க முடியாது என்றார். திராவிடர் கழகம் உட்பட்ட மற்ற அரசியல் கட்சியினரும் இதனை எதிர்த்தனர். இதன் விளைவாக அந்த பட்டியல் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
எனவேதான், இப்போது புதிய உத்தியை கையாளுகின்றனர். எனவே காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு ஒரே பரிந்துரையாக பெயர் பட்டியலை அனுப்புவதற்கு பதிலாக, பல பரிந்துரைகளாக அனுப்புவது என்ற தந்திர உத்தி கையாளப்படுகிறது. ஒவ்வொரு பரிந்துரையிலும் குறைந்தபட்சம் ஒரு பார்ப்பனரையாவது பரிந்துரைப்பதன் மூலம் அவர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும் வழியை கொலேஜியம் கடைபிடிக்கிறது.
இந்த நேரத்தில் ஒன்றை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அப்படி ஆட்சேபிப்பது பாசிச போக்காகும். கூடுதல் எண்ணிக்கையில் (over representation) உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பார்ப்பனர்கள் இருக்கின்றனர் என்பதே நாம் சுட்டிக் காட்டுவது.
எனவே, 2025 ஆம் ஆண்டில் நிரப்பப்படும் சுமார் 25 முதல் 30 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளில் மேலும் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது சமூக நீதிக்கு விரோதமானது. அப்படியே நியமனம் செய்தாலும் ஏதோ ஒருவரை நியமனம் செய்வது ஏற்புடையதாக இருக்கும்.
இப்போதுள்ள சுமார் 12 காலிப் பணியிடங்களுக்கு பெயர்களை பரிந்துரைக்கையில், 4 பார்ப்பன வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட போவதாக வழக்குரைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இதற்கு ஆதாரம் ஏதுமில்லை.
21மக்களவை உறுப்பினர்களையும் 10 மாநிலங்கள் அவை உறுப்பினர்களையும் கொண்ட பாராளுமன்ற குழு ,7 -8 -2023 அன்று மேற்சொன்ன இரு அவைகளிலும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பற்றி ஒரு அறிக்கை கொடுத்துள்ளது. அந்த அறிக்கை 133-வது அறிக்கை ஆகும்.
மேற்சொன்ன அறிக்கை, அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.
2018 முதல் 2023 வரை 601 உயர் நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட்டதாக கூறும் அந்த அறிக்கை, அதில் 457 பேர் உயர்சாதியினர் என்று குறிப்பிடுகிறது. அதாவது, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் சுமார் 80% நபர்கள் உயர்சாதியினர். பட்டியல் இனத்தவர் ,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சிறுபான்மையினர் ஆகிய அனைவரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இடங்கள் 144. அதாவது 20% இடங்களில் மக்கள் தொகை மிகப் பெரும்பான்மையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் தொகையில் சிறு எண்ணிக்கையில் உள்ள உயர் சாதியினர் 80% பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, உச்சநீதிமன்ற கொலேஜியம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் கொலேஜியங்கள் நீதிபதிகளுக்கான நியமனங்கள் செய்கையில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரை நியமனம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்று மேற்சொன்ன பாராளுமன்ற குழுவின் 133-வது அறிக்கை கூறுகிறது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் உயர்சாதியினரை மட்டுமே உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மிகப்பெரிய அளவில் 80% முதல் 90% இடங்களில் நியமித்து வருகிறது என்பதும், மிகப் பெரும்பான்மையாக உள்ள பட்டியல் சாதியினர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மிக குறைந்த அளவிலேயே நியமனம் செய்யப்படுகின்றனர் என்பது உண்மை நிலவரம்.
இந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே சமூகநீதி கோருவோரின் கோரிக்கை.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/20803/unbalanced-judges-appointment/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு