இஸ்ரேல் - ஈரான் மோதல்: போர் மேகம் சூழும் மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பது என்ன?!

விகடன் இணைய தளம்

இஸ்ரேல் - ஈரான் மோதல்: போர் மேகம் சூழும் மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பது என்ன?!

தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, தாக்குதலில் கொல்லப்பட்டதால் கடும் ஆத்திரமடைந்த ஈரான், எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது.

காசா மீதான போருக்கிடையில் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவு போராளிக்குழுக்கள் ஒன்றுசேர்ந்து இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஆயத்தமாகிவருகின்றன. குறிப்பாக, தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் மீது கடும் ஆத்திரமடைந்த ஈரான், எந்த நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் கொன்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா

கடந்த கடந்த ஜூலை 30-ம் தேதி ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். அங்கு பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்ட ஹனியா, தான் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்தநிலையில், அவர் தங்கியிருந்த அறையின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தனது மெய்க்காப்பளருடன் சேர்ந்து இஸ்மாயில் ஹனியாவும் உயிரிழந்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு ஆளான ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, ``எங்கள் நாட்டுக்கு விருந்தினராக வந்த தலைவரை இஸ்ரேல் கோழைத்தனமாக கொலை செய்திருக்கிறது. அதற்கு கடுமையான பதிலடி நிச்சயம். எங்கள் விருந்தினரை எங்கள் மண்ணில் கொலை செய்ததற்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடமையாக நினைக்கிறோம்!" என அதிரடியாக அறிவித்தார்.

அதேநாளில், லெபனானிலிருந்து செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி ஃபவுத் ஷுக்கர், இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் பெய்ட் ஹில்லெல் நகரில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. ஆனால், இஸ்ரேலில்ன் பாதுகாப்பு கேடயமான `ஐயர்-டோம்' அமைப்பின் மூலம் அந்த ஏவுகணைகள் வரும்வழியிலேயே தாக்கி அழிக்கப்பட்டன. இருப்பினும் தனது அடுத்தகட்ட தாக்குதலை ஹிஸ்புல்லா எந்நேரமும் தொடங்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேல் அடுத்தடுத்து நடத்தியதாக சொல்லப்படும் இந்த இரண்டு தாக்குதல்களும் அதன் பரம எதிரிகளான ஈரான் நாடும், லெபானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹைதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆகிய அமைப்புகளுக்கும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பழிக்குப் பழி தீர்ப்பதற்கான எதிரணிகள் ஒன்றிணைந்திருப்பதாகவும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது.

ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி ஃபவுத் ஷுக்கர்

குறிப்பாக, அமெரிக்க உளவுத்துறை, `ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் போர்த்தொடுக்க வாய்ப்பிருக்கிறது' என எச்சரிச்கை விடுத்திருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா இஸ்ரேல், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக நிற்கும்' என இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசியின்மூலம் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இஸ்ரேல் பாதுகாப்புக்காக ஓமன் வளைகுடாப் பகுதியில் ஏற்கெனவே முகாமிட்டிருக்கும் அமெரிக்காவின் `தியோடர் ரூஸ்வெல்ட்' விமானம் தாங்கி போர்க்கப்பலும், `ஆபிரகாம் லிங்கன்' போர்க் கப்பலும் தயார்நிலையில் இருக்க பென்டகனால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், கூடுதலான போர்க்கப்பல்கள், போர்விமானங்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பவும் அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. அதேபோல, பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டு போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்களையும் மத்திய கிழக்கில் தயார் நிலையில் வைத்திருக்கிறது.

மத்திய கிழக்கில் நாளுக்குநாள் இந்த போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேல், லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டி, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. குறிப்பாக லெபனான் நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கின்றன. இந்தநிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமான சேவைகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல, மற்ற சில நாடுகளும் பதற்றத்துக்குரிய நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கின்றன. இந்த அசாதாரண சூழல் மத்திய கிழக்கில் போர் மூளும் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா

இந்த அசாதாரணமாக போர் மேகம் சூழ்வதற்கு அடிப்படைக் காரணம் பாலஸ்தீனம்(காசா) மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்தான். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர்த்தொடுத்தது. இந்தப் போரில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். அதில், 39,000 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் காசா மீதான ஆக்கிரமிப்புப் போரை கைவிடாத இஸ்ரேல் `ஹமாஸை' அழித்தொழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது' என்றுகூறி தனது தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது. மேலும், தனக்கு இடையூறாக இருக்கும் ஏனைய அமைப்புகளின் தலைவர்களையும் தனது உளவுப்பிரிவான மொசாட் மூலம் குறிவைத்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்ததற்குப் பின்னணியிலும் இஸ்ரேல்தான் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்று தனக்கு எதிரிகளாக உள்ள அனைத்து தரப்பின்மீதும் ஒரேநேரத்தில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த, அந்த அனைத்து அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து இஸ்ரேல் மீது பழிக்குப்பழி தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலை ஏற்பட்டுளது.!

(ரா.அரவிந்தராஜ்)

விகடன் இணைய தளம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு