கரப்பான் பூச்சி ஜனதா தலைவர்களின் உண்மையான பின்னணி என்ன?

அறம் இணைய இதழ்

கரப்பான் பூச்சி ஜனதா தலைவர்களின் உண்மையான பின்னணி என்ன?

சர்வ வல்லமை படைத்த மோடியின் பாஜக அரசை அஞ்சாமல் எதிர்க்கும் இந்த இளைஞர்கள் யார்? கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என விளையாட்டு பிள்ளைகளை போல வந்து, இன்று விஸ்வரூபம் கொண்டுள்ள இவர்களின் சமூகப் பின்னணி என்ன? கல்வித் தகுதிகள் என்ன? இவர்கள் தேச விரோதிகளா? இதில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் உள்ளார்களா? ஒரு தெளிவான அலசல்;

”கரப்பான் பூச்சி கட்சியினரை அழித்துவிட வேண்டும். இவர்கள் தேச துரோகிகள். அந்நிய நாட்டின் கைக் கூலிகள், வன்முறையாளர்கள், கூட்டம் சேர்த்து அரசாங்கத்தையே மிரட்டப் பார்க்கிறார்கள். இவர்களை நசுக்கிப் போட வேண்டும்” என பாஜகவினரும், அவர்களின் ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர். இவை உண்மையா? இவர்கள் யார்? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் நாம் உள்ளது உள்ளபடியே பார்ப்போம்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இளம் தலைவர்கள் அனைவரும் நல்ல கல்வி கற்றவர்களாகவும், சமூகத் தளத்தில் நல்ல அந்தஸ்துள்ளவர்களாவும் உள்ளனர். இதில் சிலர் நல்ல வருமானம் உள்ள வேலைகளில் உள்ளனர். தங்கள் வசதி, சம்பாத்தியம் ஆகியவற்றில் எந்தக் குறையும் இல்லாத இவர்கள் பொது நோக்கத்தை முன் வைத்து வீதிகளில் இறங்கி போராடி அடி, உதை பெறுகின்றனர். ‘அநீதிகளை எதிர்க்க வேண்டும், அடுத்தவர் நலனில் அக்கறை காட்ட வேண்டும்’ எனச் செயல்படும் இவர்களை அவதூறு செய்கின்றனர், பாஜகவினரும், அவர்களின் ஆதரவாளர்களும்!

அபிஜித் தீப்கே;  மகாராஷ்டிராவின் சத்திரபதி சம்பாதி நகரை சேர்ந்தவர். ஒரு நடுத்தர தலித் குடும்பத்தை சேர்ந்த இவர் புனேவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் பாஸ்டன் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். அமெரிக்கா செல்வதற்கு முன்பு சில ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியில் தகவல் தொழில் நுட்ப பிரிவில் செயல்பட்டுள்ளார். ஊழற்ற நேர்மையான நல்லாட்சிக்கான தேடலால் ஆம் ஆத்மியில் சேர்ந்ததாக கூறும் இவர்கள் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்த நிலையில் அதைத் துறந்து பொது நலன்களுக்காக போரட்ட களம் கண்டுள்ள இவர் தான் இந்தக் கட்சியை நிறுவியத் தலைவராவார்.

இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை, பாஜக அரசு வேலை வாய்ப்புகளை குறைத்து காண்டிராக்ட் சிஸ்டம் கொண்டு வருவது, நீட், குயிட் உள்ளிட்ட தேர்வுகளை அரசே நடத்தாமல் தனியார் ஏஜென்ஸிகள் லாபம் பார்க்கும் நோக்கத்தில் நடத்த கொடுத்ததின் விளைவாக தொடர்ந்து 10 ஆண்டுகள் தேர்வுகளில் செய்யப்பட்ட மோசடிகள்.. போன்றவையே கரப்பான் பூச்சி கட்சியின் தோற்றத்திற்கு காரணம் ஆயிற்று.

”இணையத்தில் எங்களை 40 லட்சம் பேர் தொடர்ந்தனர். இரண்டு லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். இதையடுத்தே இயக்கம் உருவானது. தற்போது அனைத்து இந்திய மாநிலங்களிலும் இதன் கிளைகள் உருவாகி வளர்ந்து வருகிறது…தற்போதைய நிலையில் இணையத்தில் காக்ரோச் பார்டியை 1,50,000 லட்சம் பேர் தொடர்கின்றனர். 3,50,000 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்’’ என்கிறார், அபிஜித் தீப்கே.

கங்கை நதி, யமுனை நதி ஆகியவற்றை தூய்மை செய்கின்றனர். குப்பைகளை களத்தில் இறங்கி அப்புறப்படுத்துகின்றனர்.

இன்றைய அரசியல், சமூக அவலங்கள் குறித்து இவர்கள் வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவையாகும்!

”நடுநிலையோடு  ஆட்சி அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்க வேண்டிய நீதிபதிகள், தங்கள் பணி ஓய்விற்குப் பிறகு அரசாங்கத்திடமிருந்து பதவிகளையும், பயன்களையும் பெற்றுக் கொள்வது ஆபத்தான போக்காகும்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள் அதன் பிறகு மிக உயர்ந்த அதிகார பதவிகளை பெறக் கூடாது. நீதித்துறை எப்போதும் சுதந்திரமாக இயங்க வேண்டும். நீதித்துறையே அரசாங்கத்தின் விருப்பத்திற்கு செயல்படத் தொடங்கிவிட்டால், இந்த அமைப்பில் பிறகு என்ன தான் மிச்சமிருக்கும்? அப்படியானால், நமது ஜனநாயகத்தை இனி யார் தான் பாதுகாப்பார்கள்?” என்று இவர்கள் எழுப்பும் கேள்வி அர்த்தமுள்ளதாகும்.

# தகுதியான வாக்களார்களை ஜாதி, மதம், கட்சி ஆகிய கண்ணோட்டங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது பெருங்குற்றமாகும். இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

# நாடாளுமன்ற, சட்டமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கு 50 சதவிகித இடங்கள் தர வேண்டும். மத்திய, மாநில அமைச்சரவையிலும் 50 சதவிகிதம் பெண்களுக்கு தர வேண்டும்.

# அதானி, அம்பானி போன்ற பெருநிறுவன முதலாளிகளின் ஊடகங்களை தடை செய்ய வேண்டும். அரசுக்குச் சாதகமாகச் செயல்படும்  ஊடகவியலாளர்களின் வங்கி ஆவணங்கள் மற்றும் வருவாய் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்திய ஊடகங்கள் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் நிலைமைக்கு உத்திரவாதம் ஏற்படுத்த வேண்டும்.

# தேர்தலில் ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுவிட்டு, சுயநலத்திற்காக மற்றொரு கட்சிக்குத் தாவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் 20 ஆண்டுகள் வரை போட்டியிட முடியாதபடிக்கு தடை விதிக்க வேண்டும்.

# இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்படி, குடிமக்கள் அனைவரும் கண்ணியத்துடன் வாழ்வதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

“தற்போதைய அரசியல் அமைப்பின் மீது இளைஞர்களுக்கு மிகுந்த சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் இளைஞர்கள் மாற்றத்தை வலியுறுத்திக் குரல் கொடுக்கிறார்கள். ஏனெனில் கடந்த 10-12 ஆண்டுகளாக ‘இந்து-முஸ்லிம்’ பிரிவினையை மையமாகக் கொண்ட வெறுபுப் பேச்சுகளைத் தவிர, இளைஞர்கள் வேறு எதையும் கேட்கவில்லை.” என்று அப்ஜித் தீப்கே கூறுவதில் உண்மை இல்லையா?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் குறித்த பின்னணியை சற்று பார்ப்போமேயானால், வியப்பே ஏற்படுகிறது. அறிவு, ஆற்றல், சுய ஒழுக்கம், நல்ல குடும்ப பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள்!

அசுதோஷ் ரான்கா ; கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருகிணைப்பாளரான இவர் கான்பூர் ஐ.ஐ.டியில் பி.டெக் (B.Tech Materials Engineering) பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில்  பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மாணவப் பருவத்திலேயே ஐஐடி கான்பூரில் படித்தபோது, 2016-2017  காலகட்டத்தில் அங்குள்ள மாணவர் அமைப்பின் தலைவராகவும்  செயல்பட்டுள்ளார். எனவே, இவர் திடீர் தலைவரல்ல.

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, தடையை மீறி நுழைந்ததற்காக சிறையில் ஒருவாரம் அடைக்கப்பட்ட அசுதோஷ் ரான்கா, அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு, இவர் உலக புகழ்பெற்ற மெக்கன்சியில் (McKinsey & Company) சீனியர் அட்வசைராக பணிபுரிந்துள்ளார்.  இதற்மும் முன்பாக டெல்லி சட்டமன்றத்தின் அசோசியேட் ஃபெலோவாகவும்  பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அசுதோஷ் ரான்கா!

இளம் தலைவர்கள் செளரவ்தாஸ் , அசுதோஸ் ரான்கா

சௌரவ் தாஸ் ; சி.ஜே.பி இயக்கத்தின் மிக முக்கிய முகமாக அறியப்படும் இவர், இக் கட்சியின் தலைமைச் செய்தி தொடர்பாளர். இவர் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளராக பல புகழ் பெற்ற பத்திரிகைகளில் சிறப்பு கட்டுரைகள் எழுதியுள்ளார். தனது புலனாய்வு கட்டுரைகள் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். தேசிய ஊடக அரங்கில் ஒரு நேர்மையான பத்திரிகையாளர் என்ற நன் மதிப்பை பெற்றவர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிதானமாகவும், தெளிவாகவும் ஆவண, ஆதாரங்களோடு இவர் பேசும் பாணியே அலாதியானதாகும். இது மட்டுமின்றி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராகவும் பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவரும் சமீபத்திய போராட்டத்தில் சிறை சென்றார்.

அஜிங்க்யா ஷிண்டே; சிஜேபியின் தேசிய அமைப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றுகிறார். மகாராஷ்டிராவைச் ஷிண்டே, பி.டெக் படித்துள்ளார். ஆம் ஆத்மியின் சமூக வலைதளத்தள பிரிவில் அபிஜித் திப்கேவும், ஷிண்டேவும் ஒன்றாகப் பணியாற்றினர். காவல்துறை கைது செய்யப்பட்டு சிறைச்சாலை செல்லும் முன்பாக அபிஜித் தீப்கே இவ்வாறு கூறினார். “நானும், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரும் கைது செய்யப்பட்டுவிட்டோம். நாங்கள் இல்லாத நேரத்தில், அஜிங்கிய ஷிண்டே (35) போராட்டத்தையும் சிஜேபி இயக்கத்தையும் முன்னின்று வழி நடத்துவார். அவரைப் பின்பற்றுங்கள்”. இதில் இருந்தே அஜிங்க்யா ஷிண்டேயின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

தீபக் பாலியான்;  கட்சியின் தேசிய அமைப்புக் கூட்டுப் பொறுப்பாளர், வட மண்டல தலைவர் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளரான இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். இயற்கை விவசாயம் செய்பவர், சுற்றுச் சூழல் ஆர்வலர். ராஜஸ்தான் இளைஞர்களை திரட்டி டெல்லியில் நடந்த போராட்டத்தில் சிஜேபியின் முக்கிய தளபதியாக செயல்பட்டார். அறிவார்ந்த பேச்சு, உறுதியான செயல்திட்டம் ஆகியவற்றுக்கு பேர் போனவர்.

ஆஃப்ரீன் நவாஸ் ; கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான இவர் ஆளுமைமிக்க பெண் தலைவராவார். கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முதன்மை செய்தித் தொடர்பாளராகவுள்ள இவர் ஊடகங்களில்  மிக கண்ணியத்துடன் வலுவாக பேசக் கூடியவர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இவர், வணிக நிர்வாகவியலில் முதுகலை (MBA) பட்டம் பெற்றவர். சொந்தமாக சிறு வணிகம் செய்பவர்.

விஜய் ரெட்டி மல்லங்கி:தென்னிந்தியப் பொறுப்பாளரும், தேசிய ஊடகத் தலைவருமான இவர் தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், நியூயார்க்கில் உள்ள  கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தீவிர களச் செயற்பாட்டாளரான இவர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற கே.பி.ஆர் தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிராக நடத்தப்பட்ட  “Save KBR” போன்ற சுற்றுச்சூழல் போராட்டங்களிலும், ஊழலுக்கு எதிரான சமூக அமைப்புகளிலும் தீவிரமாகச் செயல்பட்டவர். ஆரம்ப காலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் (AAP) இணைந்து பணியாற்றியவர்.

ரத்னா சிங் ; இவர் கட்சியின் சட்ட விவகாரப் பிரிவின் தலைவராக  பொறுப்பு வகிக்கிறார். இவர் டெல்லியில் உள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் (GGSIPU) கீழ் இயங்கும் சட்டப் பள்ளியில் (எமிட்டி லா ஸ்கூலில்) பயின்று, சட்டப் படிப்பை முடித்த பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் Bar & Bench , Scroll.in  போன்ற முன்னணி ஆங்கில  ஊடகங்களில் பத்திரிகையாளராகப்  பணியாற்றிவிட்டு, தற்போது நீதிமன்றங்களில் வழக்கறிஞராகத் தொடர்ந்து வருகிறார். கட்சியின் சட்டக் கொள்கை உருவாக்குவதிலும், நீதித்துறை சீர்திருத்தங்கள், கட்சித் தாவல் தடைச் சட்டங்களை வலுப்படுத்துவது போன்ற முக்கிய சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் இவர் பிரதானப் பங்காற்றுகிறார்.

வைஷ்ணவி கௌர் ; கட்சியின் கொள்கை வகுப்பாளராகவும், ஊடகப் பேச்சாளராகவும் செயல்படும் இவர் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் (BA LL.B. Hons.) பயின்றுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கொள்கை ஆய்வு மையங்களுடன் இணைந்து பணியாற்றிய  பரந்துபட்ட அனுபவம் கொண்ட  பொதுக் கொள்கை நிபுணர்.

ரோகன் தேஷ்பாண்டே ; தொழில்நுட்பப் பிரிவுத் தலைவரான இவர், மும்பையில் உள்ள புகழ்பெற்ற IHM Mumbai -ல் ஹோட்டல் மேலாண்மை படித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (cockroachjanatapart.com), உறுப்பினர் சேர்க்கைக்கான டிஜிட்டல் தளம் மற்றும் அதன் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் அனைத்தும் இவர் உருவாக்கியவையே! அதை திறம்பட நிர்வகித்து வருகிறார். அத்துடன் இவர் சமூக மற்றும் அரசியல் சார்ந்த தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

யோகேஷ் இங்கிலே; கட்சியின் (CJP) நிதி மேலாண்மை மற்றும் பிராந்தியக் கட்டமைப்பில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் ஒரு முதன்மைத் தலைவராக உள்ளார். கட்சியின் அனைத்து விதமான கணக்கு வழக்குகளையும், நிதி சார்ந்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியோ, அரசியல்வாதிகளிடமிருந்து நிதியோ பெறாமல் , வெளிப்படைத் தன்மையுடன்  உறுப்பினர்களின் பங்களிப்பை பெற்று கட்சி நிதியை நிர்வகிக்கிறார்.

அங்கித் பரத்வாஜ் ;  பீகார், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்கும் பெரும்பங்காற்றி வருகிறார். “பள்ளி திக் கரோ” எனப்படும் (School Thik Karo ) பள்ளிகளைச் சீரமைப்போம் இயக்கத்தை உருவாக்கி, அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்றவை குறித்து கள ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்த அரசுக்கு நிர்பந்தம் தந்தவர். அஸ்ஸாமில் வெள்ள பாதிப்பு காலங்களில் களப்பணி ஆற்றியவர்.

ஆக, இந்த இளைஞர்கள் தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்! விரக்தியான ஒரு சமூகச் சூழலில், காலம் தந்துள்ள கொடையாகத் தான் இவர்களை கருத வேண்டியுள்ளது. தமிழ் நாட்டை சேர்ந்த இளைஞர்களில் பலரும் தற்போது இந்த இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இவர்கள் ஒரு மாற்று சக்தியாக, இன்னும் பல நல்லோர்களை இயக்கத்தில் இணைத்து வலிமை பெறுவது நாட்டிற்கு நல்லதாகும்.

கட்டுரையின் முகப்பில் உள்ளவர்கள் வரிசைகிரமமாக அபிஜித் தீப்கே, செளரவ் தாஸ், அசுதோஸ் ரான்கா, அஜிங்க்யா ஷிண்டே, தீபக் பாலியான், ஆஃப்ரீன் நவாஸ், விஜய் ரெட்டி மல்லங்கி, ரத்னா சிங்,வைஷ்ணவி கௌர்,ரோகன் தேஷ்பாண்டே, யோகேஷ் இங்கிலே, அங்கித் பரத்வாஜ் ஆகியோர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்          

https://aramonline.in/33242/leaders-of-cockroach-janata-party/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு