சொந்த நாட்டில் பரர்க்க கடிமை செய்தே துஞ்சிடோம்! இனி அஞ்சிடோம்! - வ.உ.சி.
துரை. சண்முகம்
ஒரு மனிதன்
எதை விரும்புகிறான் ?
எதை வெறுக்கிறான் ?
என்பது முக்கியமானது.
திருநெல்வேலி கோரல் மில் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் வேலை செய்து கொண்டிருக்கிறார் வ. உ. சி
போராட்ட அலைகளை எழுப்பி ஏறக்குறைய ஊரே வ.உ. சி யின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கனன்று நிற்கிறது.
அவரை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ஒடுக்குமுறை அரசு வின்ச் துரையை கலெக்டர் ஆக போடுகிறது.
அவனும் ஆணவத்தோடு வ. உ. சி யை வரச் சொல்கிறான்.
போராட்டங்களை விலக்காமல் விடுதலை உணர்வுடன் வ. உ. சி பேசுவதால் பேச்சுவார்த்தைக்கு இடையிலேயே மிரட்டும் விதமா குறிப்பு காட்டுகிறான்.
வ. உ. சி தனது சுயசரிதையில் அதை,
" படைச்செருக்கை காட்டி பகன்றான்
படையில்லாதவரிடம் அதை பகர்தல் நன்று என்றேன்!"
என்று சமரசமாகாமல் துணிச்சலுடன் அரசியல் பேசியதை குறிப்பிடுகிறார்.
இந்த காட்சியை நந்தனார் சரித்திர கீர்த்தனையில் நந்தனை மிரட்டும் நிலப் பிரபுவின் உரையாடலோடு தொடர்பு படுத்தி அந்த சாயலில் பாரதியார் உணர்ச்சி பொங்க வடித்த வெடித்த பாடல் இது,
வின்ச்ச துரை பேசுவதாக இப்படி தொடங்குகிறது:
" நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய்
கனல் மூட்டினாய்
வாட்டி உன்னை மடக்கி சிறைக்குள்ளே மாட்டுவேன்
வலி காட்டுவேன்.
கூட்டம் கூடி வந்தே மாதரம் என்று கோஷித்தாய்
எமை தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய்; பொருள் ஈட்டினாய்.
கோழைப் பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய்
சட்டம் மீறினாய் ; ஏழை பட்டிங்
கிறத்த லிழிவென்றே ஏசினாய் வீரம் பேசினாய்.
அடிமை பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கினாய் ; புன்மை போக்கினாய் மிடிமை போதும் நமக்கென்றிருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய்.
தூண்டினாய் புகழ் வேண்டினாய் கண்ட கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய்
சோர்வை ஓட்டினாய்."
இப்படி இன்னும் இரண்டு சரணங்கள் விஞ்ச் துரை வ. உ. சி மீது குற்றம் சாட்டுவதாக இருக்கும்.
இதற்கு வ. உ .சி அவர்கள் பதிலடி கொடுப்பதாக வரும் வரிகள்,
" சொந்த நாட்டில் பரர்க்க கடிமை செய்தே துஞ்சிடோம்! இனி அஞ்சிடோம்! எந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ?
தெய்வம் பார்க்குமோ?
வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம்; முடி தாழ்த்துவோம் ; எந்த ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ அவமானமோ ! பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ ஆண் பிள்ளைகள் நாங்கள் அல்லமோ! உயிர் வெல்லமோ? நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ
இது நீதமோ - பிடிவாதமோ?
ஒற்றுமை வழி ஒன்றே வழி என்று தோர்ந்திட்டோம் ; நன்கு தேர்ந்திட்டோம்
மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக்கெல்லாம் லைவுறோம் சித்தம் கலைவுறோம்!
சதையை துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ?
ஜீவன் ஓயமோ ? இதயத்தில் உள்ளே இலங்கும் மகாபக்தி ஏகுமோ நெஞ்சம் வேகுமோ!
இப்படி போகிறது பாடல்.
பாடல் மட்டுமல்ல கடும் அடக்கு நிலவிய அந்த காலத்தில் வ உ சி யின் விடுதலை உணர்ச்சிகளை வாங்கி பாடியும் எழுதியும் இருக்கிறான் பாரதி.
திருநெல்வேலியில் பிராமணர்கள் பிள்ளைமார்கள் சாதியில் பிறந்தாலும் வழக்கமான பிரிவுகளைக் கடந்து சாதி மறுத்து கூட்டு சேர்ந்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்ப்பதை பெரும் கலக்கமாகவும் பார்த்து இருக்கிறது அன்றைய அரசு.
இதை அன்றைய பஞ்சாப் கவர்னராக இருந்த டயர் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதக் குறிப்பு காட்டுகிறது அதில்,
" அமைதியான சென்னை மாகாணத்தில் திருநெல்வேலியில் பிராமணர்களும் பிள்ளைமார்களும் ஒன்றாகச் சேர்ந்து அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிறார்கள். எப்படியாவது இவர்களது இந்த ஒற்றுமையை குலைக்க வேண்டும்.
அமைதி வழியில் நிலவும் மாகாணத்தில் மிதவாதிகளின் கையில் இருந்து அரசியல் இவர்கள் கைக்கு போகாமல் தடுக்கப்பட வேண்டும்" என்று எழுதி இருக்கிறான்.
திருநெல்வேலி கோரல் மில் தொழிலாளர் வர்க்க போராட்டத்தை கிளர்ச்சியூட்டி நடத்திய வ. உ .சி ,சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் போன்றவர்களின் வேலைகளை பார்த்து வெறுப்புற்று சாதி ரீதியாக விடுதலைப் போராட்ட எதிர்ப்பை சீர்குலைக்க அன்றே முயற்சித்து இருக்கிறது அரசு.
துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு