மக்களின் பொருளாதாரத்தை சூறையாடி - அவர்களின் உயிரை 'குடிக்கும்' டாஸ்மாக்கை மூடு!

சமரன்

மக்களின் பொருளாதாரத்தை சூறையாடி - அவர்களின் உயிரை 'குடிக்கும்' டாஸ்மாக்கை மூடு!

மே13 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பத்திலும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பெருங்கரணையிலும் 22பேர் சாராயம் குடித்து இறந்துள்ளனர். இது திமுக அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட படுகொலையே ஆகும்.

டாஸ்மாக்கிற்கு இணையான சாராய சாம்ராஜ்யம்

மரக்காணத்தில் இறந்தவர்கள் பாக்கெட் சாராயம் குடித்து இறந்துள்ளனர். இந்த பாக்கெட் சாராயங்களில் பொதுவாக உற்பத்தி செலவை குறைப்பதற்காகவும், அதிக போதையை தருவதற்காகவும் மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் கலந்து விநியோகிக்கப்படுகிறது. இதன் விகிதம் வழக்கத்தை விட அதிகரிப்பதால் அது உடனடி மரணங்களை ஏற்படுத்துகிறது. மெத்தனால் அதிகமான இந்த விசச் சாராயம்தான் மரக்காணத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், விவசாயிகளுக்கு வேலைக்கான கூலிக்கு பதிலாக கூட இந்த விசம் ஊற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விற்று தள்ளியுள்ளனர். மறுபக்கம், சித்தாமூரில் இறந்தவர்கள் குடித்தது பாக்கெட் சாராயமல்ல அது முறையாக சீலிடப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட பாட்டில்களில் விற்கப்பட்ட சாராயம். ஆனால் இதிலும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது அதே மெத்தனால் அளவு அதிகமான சாராயம்தான். எனில் இந்த சாராயம் முந்தைய காலத்தில் நடைபெறும் குடிசைத் தொழில் முறையில் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. நிழலுலக வலைப்பின்னலில் சட்டவிரோதமாக நிறுவனமயப்பட்ட உற்பத்தியையும், திட்டமிடப்பட்ட விநியோக சங்கிலியையும் கொண்டுள்ளதையே காட்டுகிறது. அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் சாராய விநியோகத்திற்கு இணையாக ஒரு சாராய சாம்ராஜ்ஜியமே நடைபெறுவதையே இந்த உயிர்பலிகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக்கிற்கு இணையாக சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு மேல் புழங்கும் கட்டமைப்பை கொண்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெத்தனால் எனப்படும் எரிச் சாராயம் (Spirit) எரிபொருளாக பயன்படுகிறது. தொழிற்சாலைகளிலும், மருத்துவ ஆய்வகங்களிலும், பெயிண்டிங் பொருட்களிலும் முக்கியமான பயன்பொருள். இது எவ்விதத்திலும் உட்கொள்ள கூடியதல்ல. போதை அதிகம் தருவதற்காக இதை கலந்து உட்கொள்ளும்போது அது உடலுக்குள் சிதைந்து பார்மால்டிஹைடு (பிணங்களை பாதுகாக்கப் பயன்படும் வேதிபொருள்) எனும் விசமாக மாறுகிறது. இது 10mg அளவிற்கு மேல் கூடினாலே கண்பார்வை இழப்பு, உடலுறுப்புகள் செயலிழப்பு முதல் இறப்பு வரை நபர்களை பொறுத்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதை தெரிந்தேதான் இந்த சாராய உற்பத்தியாளர்கள் லாப வெறிக்காக செய்கின்றனர். தமிழகத்தில் அந்த சாராய மாஃபியா கும்பலை இரு திராவிட அரசுகளும் தங்களது அரசியல் நலன்களுக்காக மாறி மாறி வளர்த்துவிட்டே வந்துள்ளனர்.

சரி! கள்ளச்சாராயம்தான் (அரசு அவ்வாறுதான் கூறுகிறது) இப்படி என்றால் அரசு வீதிக்கு வீதி கடைதிறந்து விற்கும் சாராயம் மட்டும் சத்து டானிக்கா என்ன? அதில் உள்ள எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹாலும் விசம் தான். மெத்தனால் உடனடி விசம் என்றால், எத்தனால் நாளடைவில் விசம் (Slow poision). இது உள்ளுக்குள் அசிட்டால்டிஹைடாக மாறி உடலின் உறுப்புகளை மெல்ல சிதைக்கிறது. இந்த சாராயங்களை குடிப்பவர்கள் பெரும்பான்மையினர் போதிய உணவற்ற சாமானிய உழைக்கும் வர்க்கத்தினரே, அவர்கள் இந்த சாராயத்திற்கு இணையான உணவை எடுத்துக் கொள்வதேயில்லை. தன் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை இந்த அரசே சாராயம் மூலம் பிடுங்கி கொண்டால் இணையான உணவு எடுத்துக் கொள்ள அவர்களிடம் ஏது பணம்? எனவே இந்த சாராய போதைக்கு அடிமையான அடுத்த சந்ததியினரின் மரணத்தை, முந்தைய சந்ததியினர் தன் மரணத்திற்கு முன்னரே பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார்  

6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் சாராயம் குடித்து மட்டும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது இனப்படுகொலைக்கு சமமானது. சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இளம் விதவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  எனவே கள்ளச்சாராயமானாலும் சரி அரசு விற்கும் சாராயமானாலும் சரி இரண்டுமே விசச் சாராயம்தான். உண்மையில் கள்ளச்சாராய வியாபாரம் எந்த அரசிற்கும் தெரியாமல் கள்ளத்தனமாக நடப்பதில்லை. அரசு - அரசியல் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன்தான் நடைபெறுகிறது.

டாஸ்மாக் ஏகபோகத்தில் திமுக குடும்பம்

தமிழகத்தில் அரசின் வருவாயில் 10லிருந்து 15% சதவிகிதம் வரை டாஸ்மாக் வருவாயில் இருந்து பெறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 44,000 கோடி வரை டாஸ்மாக் மூலம் வரி வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டில் அதை 50,000 கோடியாக்க ஒருபக்கம் இலக்கு வைத்துள்ளது. இது வெறும் வரி வருவாய் மட்டுமே. மறுபக்கம் ஆட்சியாளர்கள் தங்கள் பினாமிகள் பெயர்களில் உற்பத்தி செய்யப்படும் சாராய ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்வதால் லட்சக்கணக்கான கோடிகளில் கொள்ளையடித்து அதை தனது சொத்தாக்க மாற்றி விடுகின்றனர். இதில் அரசாங்கத்தின் வருவாய்க்காக டாஸ்மாக் விநியோகம் என்பதெல்லாம் கண்துடைப்பு மோசடியே ஆகும். டாஸ்மாக்கை பயன்படுத்தி தங்களது சொத்துக்களை இரட்டிப்பாக்குவதே இவர்களின் நோக்கம். திமுக ஆட்சியில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் கும்பலின் மதுபான ஆலைகள், ஸ்டாலின் குடும்பத்தின் பினாமியான கால்ஸ் நிறுவன ஆலைகள்; அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலா கும்பலின் மிடாஸ் நிறுவனம், பொள்ளாச்சி மகாலிங்கம் கும்பலின் சாராய நிறுவனங்கள் என மாற்றி மாற்றி கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவேதான் இவர்கள் ஆட்சியிலில்லாத போது மதுவை எதிர்ப்பது போல நாடகமாடுவது, தேர்தலின்போது மதுவிலக்கு என வாய்ச் சவடால் அடிப்பதும், ஆட்சிக்கு வந்தவுடன் தனது சாராய சாம்ராஜ்ஜியத்தை அரங்கேற்றி வருகின்றன. எவன் செத்தால் என்ன? எவள் தாலியை அறுத்தால் என்ன? தனது குடும்பச் சொத்தை உயர்த்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கொலைக்கார கூட்டம்தான் இந்த திராவிட கட்சிகள்.

அதிலும், மு.க.ஸ்டாலின் கும்பல் டாஸ்மாக்கில் தனது ஏகபோகத்தை வெகுவாக நிறுவி வருகிறது. விஜய் மல்லையா, சசிகலா, பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற சாராய முதலாளிகளை போட்டியிலிருந்து விலக்கியுள்ளது. அவர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்படுவதில்லை. தனது குடும்ப மற்றும் பினாமி நிறுவனங்களுக்கு மட்டும் சப்ளை உரிமையை வழங்கியுள்ளது. சாராய உற்பத்திக்கு மூலப்பொருளாக பயன்படும் மொலாசஸிற்காக, தமிழகத்தில் இயங்கும் ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு சர்க்கரை ஆலைகளை தனது குடும்பச் சொத்தாக மாற்றி கரும்பு விவசாயிகளை கசக்கிப் பிழிகிறது.    

செந்தில் பாலாஜியின் மது மாஃபியா துறை

இதுமட்டுமின்றி, மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 'கரூர் கேங்' எனும் கொள்ளைக் கூட்ட நெட்வொர்க் உருவாக்கப்பட்டு அவை டாஸ்மாக் விநியோகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது உண்மையில் மதுவிலக்கு துறையல்ல; மது மாஃபியா துறை. கணக்கில் காட்டப்படாத சாராய பாட்டில்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்து பெருமளவில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன. திமுக நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே இதனை வாக்குமூலமாக கொடுத்துள்ளார். தமிழகத்தில் இயங்கும் 5000க்கும் மேற்பட்ட பார்களில் 4000க்கும் மேற்பட்ட பார்கள் முறையான அனுமதி பெறாமலே இயங்குகின்றன. இந்த பார்களை இயக்குவதையும் இதன்மூலம் லாபமீட்டி தருவதையும் இந்த 'கரூர் கேங்' நெட்வொர்க்கின் பொறுப்பில் விட்டுள்ளது மு.க.ஸ்டாலின் கும்பல். டாஸ்மாக்கிலும் கூட உடனடி மரணத்தை விளைவிக்கும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தெரிகிறது. சமீபத்தில் கூட தஞ்சை மாவட்டத்தில் இருவர் இறப்பிற்கு காரணமான டாஸ்மாக் சாராயத்தில் சையனைடு இருந்திருப்பதாக தகவல் உள்ளது. 

இது போதாதென்று, கள்ளச் சாராயத் தொழிலையும் ஆட்சியிலுள்ள - எதிர் கட்சியிலுள்ள கட்சி நிர்வாகிகளும் குண்டர்களும்தான் பொறுப்பெடுத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் வழங்கும் மாமூல் தொகையே போலீசுக்கு மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் நிதியாகவும் திரட்டப்படுகிறது.  எனவேதான் இந்த கள்ளச்சாராயத் தொழிலும் திரைமறைவில் அரசின் பேராதரவோடும் ஆளும்-எதிர்கட்சிகளினால் வெகு ஜோராக நடத்தப்பட்டு  வருகின்றது. மதுவிலக்குத் துறை இந்த கள்ளச்சாராய தொழிலை ஊக்கப்படுத்துகிறதே ஒழிய அதை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவிற்கு அவ்வபோது வலுவில்லாத வழக்குகளை பதிவது - பெயரவிற்கு இரண்டு சாராய பேரல்களை அழிப்பது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் வியாபாரம் நாளொன்றுக்கு பல நூறு டேங்கர் லாரிகள் அளவிற்கு நடைபெறுகிறது. தற்போதைய கள்ளச்சாராய பலிக்கு பின் இந்தாண்டில் மட்டும் 2.5லட்சம் லிட்டர் கள்ளச் சாராயத்தை அழித்ததாக பொய்யான அறிக்கையை அரசு வெளியிடுகிறது. கள்ளச்சாராய படுகொலையை மூடி மறைக்கவும் - மக்களின் கொந்தளிப்பை நீர்த்துப்போக செய்யவும், சாவு செய்தி வந்ததும் வராததுமாக இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின் (சாராயம் விற்றவனுக்கு கூட நிவாரணம் அறிவித்ததுதான் கேலிக் கூத்து). ஓடோடிபோய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் (வேங்கவயல் சாதி வன்கொடுமைக்கு ஆளான கிராமத்தினர் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை). ஆங்காங்கே கண்துடைப்பு வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.  அவ்வளவுதான் பிரச்சனை ஊத்தி மூடப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான முக்கிய சாராய வியாபாரியை காப்பாற்ற விழுப்புரம் நகர ஒன்றிய செயலாளர் உதவியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட மதுவிலக்குத்துறை மேல் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பெயரளவிற்கு மாவட்ட சட்ட ஒழுங்குத்துறை காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் நடவடிக்கை இல்லை; காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரும் இதற்கு தார்மீக பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசின் உளவுத் துறையும் இந்த கொலைக்கு துணை சென்றுள்ளது. இவை அனைத்தும், கள்ளச்சாராய விற்பனையையும் ஆளும் கும்பல் தங்களது ஆதரவுடன் நடத்தி வருகிறது என்பதையே தெளிவாக காட்டுகின்றன. இவ்வாறு, டாஸ்மாக் விற்பனை, டாஸ்மாக்கில் கணக்கில் வராத சாராயம் - கள்ளச் சாராயம், மற்றும் திரைமறைவில் கள்ளச் சாராயம் என அனைத்து சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு சாராய சந்தையில் தனி ஏகபோகத்தை நிறுவி வருகிறது மு.க. ஸ்டாலின் கும்பல்.   

திராவிட கட்சிகளின் ஆதாரமாக விளங்கும் சாராயத் தொழில் 

டாஸ்மாக் மூடினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்துவிடும், அதை ஒழிக்கத்தான் டாஸ்மாக் என்ற இவர்களது கட்டுக்கதைகளை  5மாதங்களில் மட்டும் 2.5லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம்  பிடிப்பட்டதாக கூறும் இவர்களின் அறிக்கையே கேள்விக்குரியதாக்கியுள்ளது. எனவே கள்ளச்சாராயத்தை ஒழிக்கத்தான் டாஸ்மாக்கை அரசே ஏற்று நடத்துகிறது என்பதெல்லாம் சொத்தையான வாதம். இந்த உயிர்பலியையும் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கவே பயன்படுத்தும். டாஸ்மாக்கை மூடு என்ற குரல்களையும், மதுவிலக்கு -முதல் கையெழுத்து எனும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளையும் இந்த உயிர்பலிகளை காண்பித்தே ஒடுக்கும்.

இது இன்று நேற்றல்ல, கடந்த 50  ஆண்டுகளுக்கும் மேலாக திமுக-அதிமுக என இரு திராவிட கட்சிகளும் சாராய உற்பத்தி பின்னணியிலிருந்தே தங்களது கட்சியை வளர்த்துள்ளனர். ராமசாமி உடையார், ஜேப்பியார், ஜகத்ரட்சகன் போன்ற கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவனெல்லாம் இன்று மதுபான ஆலை முதலாளிகள் - அமைச்சர்கள் - கல்வித் தந்தைகள். இந்த கேடு கெட்டவர்கள்தான் நம் ஆட்சியாளர்களாம்! வேதனை!

கையறி யாமை உடைத்து பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

எனும் குறளுக்கு, "ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப் போதைப்பொருளை விலைகொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்" என தெளிவுரை எழுதிய கருணாநிதிதான் 1971ல் முதன்முதலில் சாராயக் கடைகளை திறந்துவிட்டார். மக்களை மூடர்களாக்கினார். அடுத்த 3 ஆண்டுகளில் தேர்தலுக்காக சாராயக் கடைகளை மூடினார். அதைத் தொடர்ந்து கள்ளச்சாராயத் தொழிலை தன் கட்சிக்காரர்கள் மூலமே வெகுஜோராக தொடங்கினார். கட்சியின் செலவினங்களுக்கு இந்த கள்ளச்சாராய தொழிலே நிதியளித்தது.  அதைத் தொடர்ந்த எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மீண்டும் சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. 2003ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டாஸ்மாக் எனும் அரசு நிறுவனம் மூலம் அரசே நேரடியாக சாராயத்தை கொள்முதல் செய்து விநியோகிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இதை அதன் பின் வந்த எடப்பாடி, மு.க.ஸ்டாலின் அரசுகள் இலக்கு வைத்து மக்களை கொள்ளையடித்து வருகின்றன. எனவே தமிழகம் மதுவில் மூழ்கியிருப்பதற்கு அதிமுக - திமுக இரு கட்சிகளுமே பொறுப்பு.

இன்று திமுக அரசு, 24 மணி நேரமும் சாராயம் கிடைக்கும் வகையில் தானியங்கு விநியோக இயந்திரம் (Automatic vending machine) மூலம் மது விற்பனை; திருமண மண்டபங்கள். விளையாட்டு அரங்குகள் அனைத்திலும் மது விநியோகிக்க அனுமதி  என ஒரு பாய்ச்சலை எடுத்துள்ளது. குடிப்பழக்கம் இல்லாமல் வாழ்பவர் இனி தமிழகத்தில் வாழ தகுதியற்றவர் என்ற மோசமான நிலையை உருவாக்கியுள்ளது இந்த 'திராவிடமாடல் போதை' அரசு. இதோடு மட்டுமில்லாமல் கஞ்சா, ஹெராயின், கோக்கைன் உள்ளிட்ட பல்வேறு போதை அடிமைப் பழக்கங்களுக்கும் தமிழக இளைஞர்களை, பள்ளி-கல்லூரி மாணவர்களை பலிகடாவாக்கி வருகிறது. ஹெராயின், கோக்கைன் சப்ளைக்கும் இவர்கள் அதானி குழுமத்துடன் மறைமுக ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

பிற கட்சிகளின் நாடகமும், மக்களின் அவல வாழ்க்கையும்

டாஸ்மாக் - கள்ளச்சாராய கொள்ளை, கொலைகளை விமர்சித்து பேச பாஜக - காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளுக்கு துளியும் தகுதியில்லை. தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஜோராக நடத்தி வருவதும், எதிர்க் கட்சியாக உள்ள மாநிலங்களில் எதிர்ப்பதாக நாடகமாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன. திருத்தல்வாத சிபிஎம் கட்சி கூட கேரளாவில் சாராய விற்பனையை தங்குதடையின்றி நடத்தி வருகிறது. பாமகவினர் ஒருபுறம் கள்ளச்சாராய தொழில் செய்து கட்சி வளர்த்துக் கொண்டு மறுபுறம் டாஸ்மாக் எதிர்ப்பு நாடகமாடுகின்றனர். கோவன் பிரிவு மக்கள் அதிகாரத்தினர் நட்பு முரண்பாடோடு கூட விமர்சிக்க தகுதியற்று ஆளும் திமுக கும்பலின் திராவிட மாயையில் மயங்கி கிடக்கின்றனர். சாராய போதை தெளிந்தாலும் தெளியுமே ஒழிய இவர்களுக்கு திராவிட போதை தெளியாது! ஆகையால், டாஸ்மாக்கை மூடு - கள்ளச்சாராயத்தை ஒழித்துக்கட்டு என்ற முழக்கத்தையும் நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

உழைப்புச் சுரண்டல் ஆரம்பித்ததிலிருந்தே மதுப்பழக்கம் தோன்றியிருந்தாலும், மக்களை இந்த அடிமைத் தளையிலேயே நீட்டித்து வைப்பதற்கு கஞ்சா, அபின், சாராயம் உள்ளிட்ட பல்வேறு போதைகளில் அவர்களை மூழ்கடிப்பதை இந்த ஆளும் வர்க்கங்கள் ஒரு செயல்தந்திரமாகவே பயன்படுத்தி வருகின்றன. ஆளும் வர்க்கம் இதனை ஒரு செயல்தந்திரமாக பயன்படுத்தினாலும், புதிய காலனிய அரசியல்-பொருளாதார கொள்கைகளிலிருந்து இதனை நாம் பிரித்து அணுகுவது தவறு. அல்லது இச்செயல்தந்திரத்தை முதன்மைப்படுத்துவதே காலனிய எதிர்ப்பு என்று வரையறுப்பதும் தவறு. அன்று மக்கள் அதிகாரம் இந்த தவற்றைத்தான் செய்தது. இன்று மதுவெறியைவிட மதவெறியே முன்னிலை வகிப்பதாக பேசிவருகிறது. நாட்டில் அரங்கேறும் பாசிசத்தின் அடிப்படைகளை காண மறுத்து அதை வெறும் மதவெறியாக சுருக்கிப் பார்க்கும் தவறை செய்கிறது. எனவே மது ஒழிப்பு பிரச்சாரத்தை புதிய ஜனநாயகப் புரட்சி பணிகளுக்கு உட்படுத்தியே செய்ய வேண்டும்; அதனை முதன்மை செயல்தந்திரமாக நாம் வகுத்துக் கொள்ளக்கூடாது.

ஏனெனில், மதுப் பழக்கம் நீடிப்பதற்கான பொருளியல் அடிப்படைகளை ஒழிக்காமல் நாம் மதுப்பழக்கத்தை ஒழிக்க முடியாது. இன்றைய புதிய காலனிய உற்பத்தி முறையில் தொழிலாளர்கள் 12மணி நேர உழைப்பையும் தாண்டி கொத்தடிமைகளைப் போல சுரண்டப்படுகின்றனர். முந்தையை காலங்களை காட்டிலும் உழைப்புச் சுரண்டல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மனிதனின் கழிவை மனிதனே அகற்றும் கொடுமையான அவல நிலை இந்த நவயுகத்திலும் தொடரவே செய்கிறது. இதுப்போக, 90களுக்கு பிறகு ஏற்பட்ட உலகமய - தனியார்மய - தாராளமய கொள்கைகளின் விளைவு பண்பாட்டுத் துறையிலும் ஏகாதிபத்திய சீரழிவை புகுத்தியது. அதற்கு முன்  சாராய போதைப் பழக்கம் உள்ளவர்கள் சமூகத்தில் நெறியற்ற வாழ்க்கைமுறையை கொண்ட இழிவானவர்களாக கருதப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோனோர் லும்பன்களாக இருந்தனர். இன்று சினிமாக்கள் உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் போதை ஆசாமிகளையும் குடிகாரன்களையும் கதாநாயகர்களாக முன்னிறுத்தியது (குடிகாரன்களை மதுப்பிரியர்கள் என்று மரியாதையோடு அழைக்க வேண்டுமாம்!). இந்த லும்பன் கலாச்சாரத்தை மேல்தட்டு வர்க்க கலாச்சாரமாக பரப்பி ஏழை-எளிய - நடுத்தர வர்க்க உழைக்கும் மக்களையும் பாட்டாளிகளையும் கூட அந்த பண்பாட்டு சீரழிவுகளுக்கு ஆட்படுத்தியது.  இது ஆணாதிக்கம் அதிகரித்து குடும்ப வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கும் மேல் போதைப் பழக்கங்களுக்கே செலவிடுவதால் உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குகூட பண நெருக்கடியை  ஏற்படுத்துகிறது.போதாதற்கு காவல்துறையின் வழிபறிக்கும் ஆளாக வேண்டும். இந்த நெருக்கடி குடும்பங்களில் சண்டைகளை தோற்றுவித்து பாலியல் வன்கொடுமை முதல் கொலைவரை கூட கொண்டு சென்று விடுகிறது. சமீபத்தில் கூட, ஒரு சிறுமி தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.  உழைப்பாளர்களின் உழைப்பை சுரண்டுவதோடு சாராயம் மூலம் அவர்களின் வருமானத்தையும் சுரண்டி, அவர்கள் குடும்பத்தின் மோசமான சிதைவிற்கு இட்டுச் செல்கிறது இந்த ஆளும் கும்பல். படிக்கும் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட சிறாரையும் சீரழித்து வருகிறது. இவை இந்தியா போன்ற காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியங்களாலும் இங்குள்ள தரகுமுதலாளித்துவ ஆட்சியாளர்களாலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எதிராக மக்களை அணிதிரள விடாமல் பார்த்துக் கொள்கின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல சாராய போதை பொருட்கள் மூலம் மக்களின் சேமிப்பை கொள்ளையடிப்பது; அவர்கள் அரசியல்மயப்படுவதையும் தடுப்பது என்பதை செவ்வனே செய்கின்றன.

உற்பத்தியில் ஈடுபடுவோரும், உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகுவோரும் களைப்புத் தீர குடிப்பர் (ஆண்களுக்கு மட்டும்தான் அந்த களைப்பு என்பதெல்லாம், அவர்களை விட அதிகமாக உழைக்கும் பெண்களுக்கு களைப்பு என்பதெல்லாம் கிடையாது போல!) என்ற நிலை மாறி வேலையில்லாப் பட்டாளத்தையும், இன்னும் சிலரையும் உற்பத்தி குறித்தே சிந்திக்க விடாமல் தடுப்பதற்கும் கூட இந்த போதைப் பழக்கத்தை பரப்பிவிட்டுள்ளன. இந்த வேலையில்லாப் பட்டாளத்தை உருவாக்கியதும், அவர்களை உற்பத்தியில் ஈடுபடவிடாமல் தடுப்பதும் இந்த கோரமான முதலாளித்துவ உற்பத்தி முறைதான். அவர்களும் உற்பத்தியில் ஈடுபட்டால் நாட்டின் பொருளாதாரமும் அரசின் வருவாயும் உயரவே செய்யும். ஆனால் அதை செய்ய வக்கற்ற இந்த ஆட்சியாளர்கள்,

10-15% சதவிகிதம் கூட தாண்டாத டாஸ்மாக்தான் அரசின் வருவாய்க்கு அச்சாணி என்பது போன்ற பொய்யான வாதத்தை வைக்கின்றனர். இந்த டாஸ்மாக் பெரும்பகுதியிலான இளைஞர்கள் உற்பத்தியிலிருந்து வெளியேற்றப்படும் முதலாளித்துவ அவலப் போக்கிற்கே துணைப் போவதோடு, நாட்டின் சுயசார்பு பொருளாதார வளர்ச்சியை பெருமளவில் பாதித்தும் வருகிறது.

மக்களின் நரக வாழ்க்கை தொடரும் வரை மதுப்பழக்கம் ஒழியாது; இந்துத்துவ பாசிசம் ஒழியாமல் நாட்டில் நாகரிக வாழ்வு மலராது. எத்தனால் உள்ள சாராயம் மட்டுமல்ல கள்ளும் கூட சரிவிகித உணவில்லாத இச்சூழலில் உடலுக்கு தீங்கானதுதான். இருப்பினும் மக்களின் அவல வாழ்க்கை நீட்டிக்கும் வரை, ஓப்பீட்டளவில் கேடு குறைவான கள் இறக்கி விவசாயிகள் விநியோகம் செய்ய அனுமதிக்கலாம். தமிழக அரசு சாராய ஏகபோகங்களுக்காக கள் இறக்க தடை விதித்துள்ளது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் வியாபாரம் இன்றும் பயன்பாட்டில் இருந்துதான் வருகிறது. பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கள் இறக்கும் தொழிலை தமிழக அரசும் கூட தனது கட்டுப்பாட்டில் முறைப்படுத்தி நடத்தலாம். மேலும், எத்தனால் சாராய உற்பத்திற்காக கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் சாராய  ஆலைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். சாராய விநியோகத்தை அரசு ஏற்று நடத்துவதை கைவிட வேண்டும். கள்ளச் சாராயம், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றாக ஒழிக்கப் போராட வேண்டும். இதை ஆளும் கும்பல் செய்யாது. எனவே மக்களின் வாழ்வு மலர, மதுப்பழக்கமொழிய மக்கள் ஜனநாயக அரசமைக்க பாட்டாளி வர்க்க கட்சியின் கீழ் அணிதிரள வேண்டும்.

- சமரன்

ஜூன் 2023 மாத இதழ்