பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வு கொள்! கம்யூனிசமே தில்!

துரை. சண்முகம்

பாட்டாளி வர்க்க   அரசியல் உணர்வு கொள்!  கம்யூனிசமே தில்!

" நீங்க வர்க்கம் மாறலாம்? ஆனா வர்ணம் மாற முடியாது! இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த வர்க்கமாகவும் மாறலாம்.

நீங்க எவ்வளவு பணக்காரன் ஆனாலும் சாதி மாற முடியுமா?

வர்க்கம் பெருசா? வர்ணம் பெருசா?"

    அட! சூப்பர் கேள்வி இல்ல 

ஏன் சாதி விட்டு சாதி மாற வேண்டும்! இனி சாதிய அமைப்பு முறை மாற வேண்டும் என்றுதானே வாதிட வேண்டும்.

இப்படி வைத்துக் கொள்வோமே திடீரென ஒரு குரங்கு வந்து, 

என்னிலிருந்து நீங்கள் மனிதனாக மாறினீர்கள்! நீங்கள் மனிதனில் இருந்து குரங்காக மாற முடியுமா?

   என்ன பதில் சொல்ல முடியும்? 

இனி ஏன் நான் குரங்காக மாற வேண்டும்? என்று தானே சமூக அறிவியல் படி சிந்திக்க முடியும். 

சாதி என்பது மாறாத கல் உரு போல சித்தரிப்பது மூடக் கருத்து. மூட நம்பிக்கை. சமூக வளர்ச்சி கட்டத்தால் சாதி அமைப்பு முறையிலும் சில நெகிழ்வுத் தன்மைகள் வந்திருக்கிறது என்பதுதானே உண்மை. இது தானாக ஏதோ அறிவு வளர்ச்சியால் வரவில்லை. 

முதலாளித்துவ உற்பத்தி முறை அதிகார மாற்றத்தால் நடந்துள்ளது. மக்களின் வர்க்க போராட்ட எதிர்ப்பு இயக்கங்களும் ஜனநாயக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சாதி பற்றிய வாதத்தில் வர்க்கத்தையே மறந்து விட வேண்டும் என சில இயங்கா வியல் குரங்குகள் குதிக்கின்றன.

"சாதி என்பது தன்னைத்தானே மூடிக் கொண்ட வர்க்கம்!" என்று அம்பேத்கர் அவர்கள் எழுதி இருப்பதை படித்திருக்கிறேன். ஆனால் அந்தப் போக்கில் தொடர்ச்சியாக அவரது ஆய்வு செல்லவில்லை.

நகைச்சுவையாக இருந்தாலும் நான் ஏன் மீண்டும் குரங்காக வேண்டும்? என்பது மாதிரி தான் அறிவின் வளர்ச்சி படிநிலை மனித சமூகத்திற்கு  இருக்க முடியும். 

படிநிலை சாதிய அமைப்பு முறை என்பது நில உடமை உற்பத்தி முறையில் தோன்றிய ஒன்று. அதற்குப் பிறகான முதலாளித்து உற்பத்தி முறையில் நிலவும் உறவுகளில் நெகழ்ச்சியும் சமூக உறவுகளும் மாற்றியமைக்கபடாவிட்டால் அது முதலாளித்துவமாக நீடிக்கவே இயலாது.

 அந்த வகையில் "யாரும் மேல் தட்டு வர்க்கமாக மாறுவது" என்பதன் பொருள், யாரும் சுரண்டுவதற்கான உரிமையைப் பெறுகிறார்கள்!

சுரண்டல் திறன் பெற்றவன் வர்க்க மாறுதல் செய்து கொள்ளலாம்! என்பதுதான் அதன் அடிப்படை. இதையும் கூட தனித்தனியாக பார்ப்பது சமூக அறிவின்மை. வரலாற்றில் இதுவரை கல்வி உரிமையே மறுக்கப்பட்ட சாதிகள் கூட முதலாளித்துவம் மாற்றி அமைத்த உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளால் இதுவரை இருந்த சாதியத் தடை உடைக்கப்படுகிறது எனும் நிகழ்வுப் போக்கும் அதற்குள் அடங்கி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே "யாரும் வர்க்கமாக மாறுதல்" எனும் நிகழ்ச்சி போக்கின் உள்ளே சாதிய தளர்வும் உருமாறுதலும் சேர்ந்தே இருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறை வந்த உடனேயே பழைய நில உடமை உற்பத்தி முறையில் தோன்றிய சாதி ஏன் ஒழிக்கப்படவில்லை? 

நமது நாட்டில் நிலஉடமையை எதிர்த்து அதை அழித்தொழித்த வழியில் வந்த முதலாளித்துவம் இல்லை. நில உடமையிடம் சமரசம் செய்து கொண்ட முதலாளித்துவ வளர்ச்சி இங்கே நிலவுகிறது. ஆகவே சாதி ஒழிப்பு என்பது அதற்கு அடிப்படையை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய அமைப்பு முறையை அழித்தொழிக்காமல், 

மேலடுக்கில் சட்டமாகவும் நீதியாகவும் கருத்து பிரச்சாரமாகவும் கொட்டாவி விட்டு கிடக்கிறது.

முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தனது சுரண்டல் முறைக்கு ஏற்ப சாதி அமைப்பு முறையில் ஒரு நெகிழ்ச்சி போக்கை உருவாக்கி, மேற்கொண்டு 

பாட்டாளி வர்க்க அரசியல் தொடர்ச்சியாக்கம் பெறுவதற்கு தடையான பிளவுகளைக் கொண்ட சமூக பிற்போக்கு அம்சங்களை பயன்படுத்திக் கொண்டது.

அதேபோல பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிதான் சாதி அடிப்படைகளை தகர்க்கும் சமூகப் புரட்சியை செய்ய முடியும். 

இந்த அரசியலை புரிந்து கொள்ளாமல், கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்பது போல வாதம் செய்வது ரசனையானது, ஆனால் முட்டாள்தனமானது. 

ஒரு அரசியல் சமூகப் பரிணாம வளர்ச்சிக் கொள்கை அடிப்படையில்தான் 

சமூக நிலைமைகளை மாற்றி அமைக்க முடியும்.

இதற்கு வர்க்க அரசியல்தான் சரியான வரலாற்று உந்து சக்தி என்பது கம்யூனிஸ்டுகளின் திட்டம். 

இல்லை! இல்லை! வாயால் பேசியே மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு பகுத்தறிவு வேப்பிலை அடிப்போம்! என்பது கருத்து முதல்வாத  இயங்காவியல் பார்வை. சாதி ஒழிப்பு மூடநம்பிக்கை இதை எதிர்த்து பிரச்சாரம் செய்வது அவசியம். 

ஆனால் அது வர்க்க அடிப்படையில் இருக்கும்போது மட்டுமே சாதி ஒழிந்த ஓர்மைக்கான சமூகப் போராட்ட நிர்ப்பந்தத்தை வழங்க முடியும்.

வர்க்க அரசியல் அடிப்படை இல்லாமல் சாதியை ஒழிக்க முடியாது. 

ஆனால் முதலாளித்துவ பகுத்தறிவுவாதிகள் மிகத் தெளிவாக, பொதுவாக மார்க்ஸ் லெனின் என்று தொழிலாளர் வர்க்கத்தை ஏய்க்க அடையாளம் காட்டிக் கொண்டாலும், குறிப்பான வர்க்கப் போராட்ட இயக்கங்களை கடவுளர்களைப் போலவே கண்டு கொள்வதில்லை.

நீங்கள் எவ்வளவு தெளிவுபடுத்தினாலும், 

பூமி சுழல்வதைப் பற்றி அறிவியல் விளக்கங்களை கொடுத்தாலும், 

அப்ப அதை சுத்தி விடுவது யாரு? எத்தன சயின்ஸ் வந்தாலும் மேலே மேலே கோயில் பெருகிட்டு தானே போகுது ! ஜனங்க சாமி கும்பிட்டுக்கிட்டு தானே இருக்காங்க!

என மடக்கி மடக்கி கருத்து முதல்வாதமாக நாத்திகர்களை பார்த்து கேள்வி கேட்கும் பக்தர்களின் மறுபக்கமாகத் தான் , பெரியாரிய பகுத்தறிவு பேசுபவர்கள்  , ஏன் கம்யூனிசம் வளரல! ஏன் இந்தியாவில் ஆட்சியை புடிக்கல?" என்று ஒரு திரைக்கதையின் சுப முடிவை போல இந்த சமூக மாற்றத்தின் தனக்கான பங்களிப்பை நாம் ஏன் வர்க்க அடிப்படையில் செலுத்த மறுக்கிறோம் என்பதை கைவிட்டுவிட்டு, தனிப்பட்ட தத்துவ ஈகோவாக டீல் செய்கிறார்கள். 

ஆனால் சமூக நடப்பு என்ன தெரியுமா? 

லட்சக்கணக்கில் திருப்பதிக்கும் சபரிமலைக்கும் குலசாமிகளுக்கும் பக்தர்களாக இருக்கும் இந்த சமூக அமைப்பில், எல்லா பிரச்சினைகளையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நினைப்பில் மட்டும் பக்தர்களான மக்கள் ஒதுங்குவதில்லை. 

இந்தியா முழுக்க தாங்கள் பாதிக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் பக்தர்களாகவும் இருக்கும் பல மக்கள்தான் எழுந்து வந்து போராடி இருக்கிறார்கள்.

சமீபத்திய விவசாயிகள் போராட்டமாக இருக்கட்டும், 

தமிழகத்தின் மெரினா போராட்டமாக இருக்கட்டும், 

தூத்துக்குடி போராட்டமாக இருக்கட்டும், தூய்மை பணியாளர் போராட்டமாக அங்கே திரண்டு நின்று போராடிய மக்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்ல அவர்களிடம் உள்ள மூட பழக்கமும் கடவுள் நம்பிக்கையோ அவர்களின் போராட்ட உணர்வை எப்போதும் தடுத்துக் கொண்டும் நிற்பது இல்லை. 

அங்கே வர்க்க உணர்வு மற்ற பிற்போக்கு உணர்வுகளை வெல்லுகிறது!

மனிதர்களின் இந்த சமூக இயக்கவியலை அரசியலை 

புரிந்து கொள்ளும் அறிவில்லாத பகுத்தறிவுவாதிகள்தான்,

முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்களில் பங்கு பெறாமல் ஆள்பவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நழுவுவது. இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ள பக்தர்களே எவ்வளவோ மேலான மனிதர்கள்.

சமூக எதார்த்தம் நமக்கு போதிக்கும் பாடம் என்னவென்றால், 

வர்க்க உணர்வால்தான் மத உணர்வையும் வெல்ல முடியும்! சாதி உணர்வையும் வெல்ல முடியும்! 

  மார்க்சியம்தான் சுரண்டும் முதலாளித்துவத்தால் வெல்லப்பட முடியாத ஆற்றலாக இருக்கிறது!

முதலாளித்துவ பகுத்தறிவு வாதமும், சவடால் சீர்திருத்த வாதமும் ஆளும் வர்க்க கடவுளர்களின் காலடியில் சாம்பிராணியாக புகைந்து கொண்டிருக்கிறது! 

தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கையை கம்யூனிசம் தான் பெற்றிருக்கிறது. அதாவது வர்க்க போராட்டம்தான் பெற்றிருக்கிறது! இதுதான் உண்மையான வெற்றி! 

 - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/836625612377570/?rdid=Tv3Gu1iOJNQrxOWK

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு