ஏஎம்கே-வின் மா-லெ வழியில் ஏகாதிபத்திய முரண்கள் மற்றும் பனிப்போர் குறித்த சமரன் நிலைப்பாடு

சமரன்

ஏஎம்கே-வின் மா-லெ வழியில்  ஏகாதிபத்திய முரண்கள்  மற்றும் பனிப்போர் குறித்த சமரன் நிலைப்பாடு

தோழர் பிரபாவின் கலைப்புவாதமும் சமரனின் மா-லெ நிலைபாடும்

தோழர் பிரபா செப்டம்பர் 12 பாலன் நினைவு தினத்தன்று நடந்த நமது ஊர்வலத்தில் பெயர் தேதி குறிப்பிடாத மொட்டைப் பிரசுரம் ஒன்றை தோழர்கள் மத்தியிலும், அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் பிற அமைப்பு தோழர்களிடமும் விநியோகித்துள்ளார். 

சுமார் 11/2 வருடங்களுக்கு முன்பு அமைப்பில் பனிப்போர் குறித்தும் சீன எதிர்ப்பு குறித்தும் விமர்சன அறிக்கை ஒன்றை (அதுவும் பெயர் இல்லாத மொட்டைக் கடுதாசிதான்) வைத்தார். அதன் மீது இரு வழிப் போராட்டம் நடத்தலாம் என நாம் கோரிய போது, வாதம் நடத்த விரும்பவில்லை என்று கூறி வெளியேறினார். இரு வழி போராட்டத்தை மறுப்பது கலைப்புவாதம் என ஏஎம்கே கலைப்புவாதம் குறித்த தீர்மானத்தில் கூறியுள்ளார். ஏஎம்கே மாணாக்கன் என தன்னை உரிமை கோரும் தோழர் அவரது வழிகாட்டுதலை கைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய பிறகு அவரின் கேள்விக்கு பதில் சொல்வது அவசியம் எனக் கருதி அணிகளுக்கு பதில் தந்தோம். ஆதரவாளராக இருப்பேன் என சொல்லி சென்றவர் தற்போது அதே விமர்சனங்களுடன் கூடுதலாக சில விமர்சனங்களையும் உள்ளடக்கிய பிரசுரத்தை அமைப்பு முறை எதுவுமின்றி விநியோகம் செய்துள்ளார். 

அமைப்பிற்குள் இரு வழிப் போராட்டம் நடத்த விரும்பவில்லை என்றவர் தற்போது தெரு விவாதம் நடத்த அழைக்கிறார். மிகவும் கவனமாக தனது பெயரை மட்டும் தவிர்த்துவிட்டு தோழர்களின் பெயர்களை அமைப்புடன் தொடர்புபடுத்தி எழுதும் அளவிற்கு தாழ்ந்துவிட்டார். அமைப்பைக் கலைக்க வாருங்கள் என அணிகளுக்கு அறைகூவல் விடுக்கிறார். ஆனால் எனது தலைமையில் அமைப்பை கட்ட வாருங்கள் என்று கூட பேச தயாரில்லை. இருக்கும் அமைப்பை கலைத்துவிட்டு அணிகளை வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க சொல்கிறாரா? இது அப்பட்டமான கலைப்புவாதம் அன்றி வேறென்ன? எத்துனை அறிக்கைகள், பிரசுரங்கள், நூல்கள் வேண்டுமானாலும் அவர் வெளியிடட்டும். அது நமக்கு கவலையில்லை. ஆனால் தோழர்களின் பெயர்களை அமைப்புடன் தொடர்புபடுத்தி எழுதுவது தவறு என நேரில் சென்று நாம் கூறியபோது, அவ்வாறுதான் இனிமேலும் எழுதுவேன் என கூறுகிறார். அமைப்பின் இரகசியத்தன்மையை ஒழித்துக் கட்டுவது அமைப்புத் துறை கலைப்புவாதம் என்று ஏஎம்கே கூறியுள்ளார். கலைப்புவாதம் பற்றிய ஏஎம்கே நிலைப்பாட்டிற்கு எதிராக சென்றுவிட்டு ஏஎம்கே மாணாக்கன் என்று உரிமைக் கோருவது சந்தர்ப்பவாதமாகும். 

அமைப்புத் துறை கலைப்புவாதம் மட்டுமின்றி அரசியல் துறையிலும் கலைப்புவாத கருத்துகளை முன்வைத்துள்ளார். அது குறித்து 

1) பிரபாவின் அறிக்கைக்கு அமைப்பு ரீதியாக தரப்பட்ட பதில் 2) செப்-12ல் அவர் விநியோகித்த மொட்டைப் பிரசுரத்தின் மீதான விமர்சனம் எனும் இரண்டு தலைப்புகளில் காண்போம்.

I

பிரபாவின் அறிக்கைக்கு அமைப்பு ரீதியாக தரப்பட்ட பதில்

தோழர் பிரபா நமது அமைப்பின் நிலைபாடு மீது பின்வரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அவருடைய அறிக்கை மற்றும் நேரடியான விளக்கத்தில் இடம் பெற்ற விமர்சனங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1) பனிப்போர் என்பது மார்க்சிய - லெனினியக் கருத்தல்ல. இதற்கு ஏஎம்கே.வை துணைக்கு அழைக்காதீர்கள். உங்கள் நிலைப்பாட்டிற்கு அவரை இழுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

2) பனிப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பது சிறுபிள்ளைத்தனமான இடது தீவிரவாத நிலைபாடு. இது அணிகளை அரச பயங்கரவாதத்திற்குப் பலி கொடுப்பது.

3) உள்நாட்டு யுத்தக் கொள்கை என்பது உலகயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வகுக்கப்படும் சர்வேதச செயல்தந்திரம் ஆகும். அதை ஒப்பீட்டளவில் அமைதியான இன்றைய காலகட்டத்தில், குறிப்பான ஒரு நாட்டிற்கு (நம் நாடு) பொருத்த முயல்வது தவறு.

4) விவசாயப் புரட்சிக்கு மக்களை அணி திரட்டாமல் உள்நாட்டுப் போர், பனிப்போர், இரு முகாம்கள் என்று செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்குத் துணை போவது ஆகும்.

5) இன்றைய சூழ்நிலைகளில் தனது ஒற்றைத் துருவ உலக மேலாண்மைக்கான வாய்ப்புகள் அருகி வருகிற சூழலில், அமெரிக்காவானது ரசியா, சீனா மீது ஒரு Proxy warக்கு தயாரித்து வருகிறது. ஆளும் வர்க்கத்தின் மிக வலதுசாரி பிரிவான BJP மூலம் அடிமைத்தனமான இராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டு இந்திய - சீன எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போருக்கு எதிரான உணர்வை மக்கள் மத்தியில் மா - லெ அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டும். அமைப்பின் தற்போதைய செயல் தந்திரம் அதற்கு உதவி செய்யாது.

இவை அறிக்கையில் முன்வைக்கப்பட்டவை ஆகும். அமைப்பில் அவர் பேசியவற்றின் சாரம்சம் பின்வருமாறு

1) அமெரிக்காவின் தலைமையில் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் இருந்தது. தற்போது சீனாவும் ரசியாவும் பல்துருவ உலக ஒழுங்கமைப்பிற்கு முயற்சி செய்கின்றன.

2) சீன ஏகாதிபத்தியம் அமைதியை விரும்புகிறது. எனவே சீனாவுடன் இணைந்து அமெரிக்காவின் போர் தயாரிப்புகளுக்கு எதிராக "யுத்தம் வேண்டாம்; அமைதியே வேண்டும்" எனும் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

3) 'உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்' என்பதன் மூலம் உலகப் புரட்சியை முன்வைக்கிறீர்கள். தனிநாட்டுப் புரட்சியை மறுக்கிறீர்கள். இது காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய நிலைபாடு ஆகும். இதன் மூலம் அமைப்பு 70 திட்டத்திற்கு எதிராக உள்ளது. ஏஎம்கே வழிக்குத் துரோகம் இழைத்துவிட்டது.

4) சீனாவின் மீதான விமர்சனம் என்பது அமெரிக்காவின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும், பாஜகவின் சீனாவிற்கு எதிரான தேசிய வெறி தூண்டுதலுக்கும் துணைப் போவதே ஆகும்.

மேற்கூறியவையே தோழர் பிரபா முன்வைத்துள்ள அரசியல் விமர்சனங்கள் ஆகும். அவரது விமர்சனங்களுக்கு நமது பதில் பின் வருமாறு: 

தோழர் பிரபா முன்வைத்துள்ள கருத்துகள் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன. சீனாவை ஏகாதிபத்தியம் என்று கூறும் அவர், ஏகாதிபத்தியம் என்றாலே யுத்தம் எனும் லெனினியத்தை கைவிட்டு, சீன ஏகாதிபத்தியம் அமைதியை விரும்புவதாக கூறுகிறார். ஏகாதிபத்தியம் என்றாலே யுத்தமும், யுத்த தயாரிப்புகளும், முரண்பாடுகளும், மறுபங்கீட்டிற்கான போட்டியும்தான் எனும் லெனினியத்தை மறுக்கிறார். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியத்தின் 5 வரையறைகள் அமெரிக்கா, சீனா, ரசியா உள்ளிட்ட எந்தவொரு ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும். லெனினின் 5 வரையறைகள் என்னென்ன?

1) உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக் கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம்.

2) வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல். நிதி மூலதனத்தின் அடிப்படையில் நிதியாதிக்க கும்பல்கள் உருவாதல்.

3) நிதி மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம்.

4) சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம்.

5) பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே உலகைப் பங்கீடு செய்வது பூர்த்தியடைதல்.

மேற்கண்ட குணாம்சங்களை அமெரிக்க ஏகாதிபத்தியமும், சீன ஏகாதிபத்தியமும் ரசிய ஏகாதிபத்தியமும் மட்டுமின்றி எந்தவொரு புதிய ஏகாதிபத்தியமும் (அ) பழைய ஏகாதிபத்தியமும் பெற்றிருக்கும். அதாவது ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகங்களின் உருவாக்கம், நிதிமூலதன ஏற்றுமதி, மறுபங்கீட்டிற்கான போட்டி மற்றும் யுத்த தயாரிப்புகள் என்பது எல்லா ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்புவதில்லை; ஆதிக்கத்தையே விரும்புகிறது என்கிறார் லெனின். ஆதிக்கத்திற்கான முயற்சியில், மூலப்பொருட்கள் மற்றும் சந்தைக்கான போட்டியில், செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் காலனிகளைக் கைப்பற்றுவதில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் அளவு ரீதியான வேறுபாடு இருக்குமே ஒழிய, ஆதிக்கம் செய்யாத யுத்தத்தை விரும்பாத அமைதியை விரும்புகிற ஏகாதிபத்தியம் என்று எதுவும் இருக்க முடியாது. அவை ஏகாதிபத்தியங்களின் விருப்பங்களுக்கு உட்பட்டதல்ல. அவற்றின் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவை. காலனிய நாடுகளை மறுபங்கீடு செய்து கொள்ளாமல் ஏகாதிபத்தியம் நீடித்து வாழ முடியாது. ஒரு ஏகாதிபத்தியம் புதியதாக வளர்ந்து வரும்பொழுது, ஏற்கனவே உள்ள ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீடு அதற்குப் பொருத்தமாக இருப்பதில்லை. புதிய ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களுக்கும் காலனிகள் தேவைப்படுகின்றன. எனவே அவை பழைய ஏகாதிபத்திய நாடுகளுடன் காலனிகளை மறுபங்கீடு செய்து கொள்வதற்காகப் போர் தயாரிப்புகளில் ஈடுபடுகின்றன.

இது குறித்து லெனின் கூறுவதை எடுத்துக்காட்டி ஏஎம்கே 'இந்தியப் பாசிசத்தின் பொருளியல் அடிப்படை' எனும் ஆவணத்தில் விளக்கியுள்ளார்.

"லெனின் கூறுகிறார்" ஏகாதிபத்தியம் என்பது நிதி மூலதனத்தின் ஏகபோகங்களின் கட்டமாகும். அது எங்கெங்கும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபடுமே தவிர, விடுதலைக்கான முயற்சியில் அல்ல." என்கிறார்.

'அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கமும் அரபு வசந்தமும்' எனும் நூலின் (2013) முன்னுரையில் ஏஎம்கே. கூறுவதாவது:

"முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, மூலப் பொருட்களின் பற்றாக்குறை எவ்வளவுக்கெவ்வளவு அதிகக் கடுமையாக உணரப்படுகிறதோ, உலகெங்கிலும் மூலப்பொருள் ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்கையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிக உக்கிரமடைகிறதோ காலனிகளை பெறுவதற்கான போராட்டமும் அவ்வளவுக்கவ்வளவு மூர்க்கத்தனமாகி விடுகிறது"

எனும் லெனினின் மேற்கோளை எடுத்துக்காட்டி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மட்டுமின்றி சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளையும் அதில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்.

"பொதுவாக வட ஆப்பிரிக்காவிலும் மத்தியக் கிழக்கிலும் சீனா முக்கியப் பங்கு வகிக்கிறது. லிபியாவின் 11 சதவீத எண்ணெய் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பிரதேசங்களில் சீனாவின் இருப்பை ஊடுருவலாகவே வாஷிங்டன் கருதுகிறது. புவிசார் அரசியலின் அடிப்படையில் இது சீனாவின் அத்துமீறலாகும். லிபியாவில் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த ஆக்கிரமிப்பு என்பது வட ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவை வெளியேற்றுவதற்கான (அமெரிக்காவின்) உள்நோக்கம் கொண்டதே ஆகும்"

என்கிறார் ஏஎம்கே.

மேலும் அவர் கூறுவதாவது:

"ஈராக், எகிப்து, லிபியா தற்போது சிரியா என வரிசையாக நாடுகளைக் கைப்பற்றி இறுதியாக ஈரானைச் சுற்றி வளைத்துத் தாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாகும். அது ஈரானைக் கைப்பற்றும்போது இப்பிராந்தியத்தில் இரசியா மற்றும் சீனாவின் செல்வாக்கை முற்றாக ஒழிப்பதுடன் அது ஒரு கடும் நெருக்கடியை உருவாக்கும்."

இவ்வாறு வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்கா, ரசியா, சீன ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் ஆதிக்கத்திற்கான போட்டி குறித்து ஏஎம்கே 2013-ம் ஆண்டிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் போரை நசுக்கி மாபெரும் இனப்படுகொலை செய்த பாசிச ராஜபக்சே கும்பலுக்கு அமெரிக்கா, சீனா மற்றும் இரசிய ஏகாதிபத்தியங்கள் செய்த உதவி குறித்தும், அங்குச் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டியில் அவை ஈடுபடுவது குறித்தும் 2012 மே தின பிரசுரத்தில் ஏஎம்கே கூறுவதாவது:

"மறுபுறம் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கூறும் ரசிய ஏகாதிபத்திய வாதிகளும், சீனாவும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்றும், நாடுகளின் இறையாண்மையைக் காப்பது என்ற ஐ.நா. சாசனத்தை மீறக் கூடாது என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. ஆனால் இவ்வாறு கூறிக்கொண்டு மனித உரிமையை மீறி ஒரு இனத்தையே அழித்து வரும் இராஜபட்சே கும்பலை இவர்கள் ஆதரிப்பது ஏற்கத் தகுந்தது அல்ல. இவர்களும் இலங்கை மீதான தங்களது செல்வாக்கு மண்டலங்களை விரிவுடுத்துவதற்காதத்தான் இலங்கை அரசுக்குத் துணை போகின்றனர். எனவே இரண்டு ஏகாதிபத்திய முகாம்களின் சதியை எதிர்த்து இலங்கையில் இரு தேசிய இன மக்களும் இராஜபட்சேவின் இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதே ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் உடனடிக் கடமையாகும்."

என்கிறார் ஏஎம்கே. இலங்கையில் இரு ஏகாதிபத்திய முகாம்களின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று ஏஎம்கே. கூறுவது குறிப்பிடத்தக்கது. 2013 நவம்பர் மாதம் ராஜபட்சேவின் இனப்படுகொலைக்கு துணை போகும் ரசிய சீன (ஷாங்காய் கூட்டமைப்பு) அணியின் சதிகளை முறியடிப்போம், சீன முதலாளித்துவ கும்பலே! இலங்கை அரசுக்கு அளித்துவரும் பொருளாதார இராணுவ உதவிகளை உடனே நிறுத்து என்று ம.ஜ.இ.க நிலைபாடு எடுத்தது. 

2 வது பனிப்போர் பற்றி ஏஎம்கே

பனிப்போர் என்றால் என்ன ? 

பனிப்போர் என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் நடக்கும் மறுபங்கீட்டிற்கான போரையே குறிக்கிறது. இது புதிய காலனிய வடிவிலான யுத்தவடிவம் ஆகும். உலக மறுபங்கீடு மற்றும் மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்திய நாடுகள் தமது சார்பு மற்றும் ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு ஆளும் வர்க்கங்களை பதிலிப்போரில் ஈடுபடுத்தும் மறைமுக யுத்தமாகும். ஒரு ஏகாதிபத்திய முகாம் தனது காலனிய / சார்பு நாட்டு ஆளும் வர்க்கத்தை பதிலிப்போரில் ஈடுபடுத்தும்போது, போட்டி முகாம் நேரடியான யுத்தத்தில் ஈடுபடுகிறது. அது பிராந்தியப் போர் எனும் வடிவில் துவங்கி வளர்கிறது. அது ஒரு நீண்ட எதிர்புரட்சிகர பிராந்திய யுத்தமாக நீடிக்கிறது. இது உலகப்போரின் துவக்கமாகவும் அதற்கான தயாரிப்புக் கட்டமாகவும் உள்ளது. அப்போர் உலகப் போராக வெடிக்கலாம். அல்லது பிராந்தியப் போராகவே நீடித்து முடிவிற்கு வரலாம். முதல் பனிப்போர் இவ்வாறே ஆப்கன், லிபியா, இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 20 ஆண்டுகளாக நீடித்தது. தற்போது உக்ரைன் யுத்தம் 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் நடக்கும் அமைதி வழியிலான புதியகாலனிய மறுபங்கீடு அதாவது சந்தைக்கான போட்டியை பனிப்போர் என சொல்வது தவறாகும். பனிப்போர் என்பது இராணுவ வடிவிலான யுத்தத்தையே குறிக்கிறது. சந்தைக்கான அமைதி வழியிலான போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் எப்போதும் அதாவது ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை இருக்கும் என்பதால் அதை பனிப்போர் என சொல்வது தவறாகும். சோசலிச நாட்டிற்கும் ஏகாதிபத்திய நாட்டிற்கும் இடையில் நடக்கும் போர் சோசலிச முகாமை காப்பதற்கான நீதி யுத்தமாகும். ஆனால் பனிப்போர் என்பது ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான அநீதி யுத்தமாகும். எனவே சோசலிசத்தை காப்பதற்கான நீதி யுத்தத்தை பனிப்போர் என சொல்வது முதலாளித்துவ கருத்தாகும். சோஷலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான தத்துவ போர் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான வர்த்தகப் போரை பனிப்போர் என்று கூறுவதும் முதலாளித்துவ கருத்தேயாகும்.

பனிப்போர் என்பது ஏஎம்கே 2018 -ம் ஆண்டு முன்வைத்த கருத்தாகும். அதையே நாம் உயர்த்திப் பிடிக்கிறோம். அதாவது ஏஎம்கே மறைவிற்குப் பிறகு நாம் உருவாக்கிய நிலைபாடு அல்ல. ஆனால் தோழர் பிரபா "உங்கள் நிலைபாட்டிற்கு ஏஎம்கேவைத் துணைக்கு அழைக்காதீர்கள்" என்கிறார். இது உண்மைக்கு மாறானதாகும். அமெரிக்க, ரசிய, சீன ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் பனிப்போர் துவங்கிவிட்டது என்று 2018ம் ஆண்டு மே தின பிரசுரத்தில் தோழர் ஏஎம்கே முன்வைத்துள்ளார். அப்போது பிரபா கேள்வி எழுப்பவில்லை. ஏஎம்கே மறைவிற்குப் பிறகு மனோகரன் வெனிசுலா பிரச்சினையில் பனிப்போர் இல்லை என்றும், சீனாவைச் சார்ந்து நின்று அமெரிக்காவை எதிர்த்து பேச வேண்டும் என்றும் கூறியபோது, அப்போதும் பிரபா இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. மாறாக மனோகரனை எதிர்த்தப் போராட்டத்தில் உறுதியுடன் நின்று போராடினார். ஆனால் தற்போது 'பனிப்போர்' என்பது மா-லெ கருத்தல்ல என்கிறார். இதன் மூலம் மனோகரனின் பனிப்போர் குறித்த திருத்தல்வாத கருத்தையே தற்போது முன்வைக்கிறார். 

'பனிப்போர்' பற்றி 2018 மஜஇக மேதின பிரசுரத்தில் பனிப்போர் துவங்கிவிட்டது எனும் தலைப்பில் ஏஎம்கே கூறுவதாவது:

"அமெரிக்க ஏகாதிபத்தியம் பலமாக இருந்தாலும் இராணுவ ரீதியில் பொருளாதார ரீதியில் சரிந்து வருகிறது. அதன் ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறை 568 பில்லியன் டாலர்களாகும். வீழ்ந்து வரும் அமெரிக்காவிற்குப் போட்டியாக ரசிய, சீன ஏகாதிபத்திய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா சீனா மீது வர்த்தக போரைத் துவக்கியுள்ளது. தவிர்க்க முடியாமல் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் செல்வாக்கு மண்டலங்களுக்காகப் போராடுகின்றன. இதுவே 2-வது பனிப்போரின் அடிப்படையாகும்"

என்கிறார் ஏஎம்கே.

ஆனால் தோழர் பிரபா பனிப்போர் இல்லை எனவும் இது அமைதியான காலகட்டம் எனவும் கூறுகிறார். மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகள் இரு முகாம்களாக பிரிந்திருக்கவில்லை எனவும், பல் துருவ ஒழுங்கமைப்பு எனவும் கூறுகிறார்.

ஒற்றை துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒரு ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்தைக் குறிக்கிறது. பல்துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் உலக மேலாதிக்கத்தைக் குறிக்கிறது. எனவே சீன-ரசிய ஏகாதிபத்திய நாடுகள் முன்வைக்கும் பல்துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒன்றும் முற்போக்கானது அல்ல; ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்கு மாற்றும் அல்ல. அது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக தங்களது மேலாதிக்கத்தை நிறுவுவதே ஆகும்.

பிரபா, ஏகாதிபத்திய நாடுகள் இரு முகாம்களாகப் பிரிந்திருக்கவில்லை என்கிறார். அவ்வாறு கூறுவது ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை மூடி மறைப்பதாகும் என்கிறார். ஆனால் அவரே அமெரிக்கா தலைமையில் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் உருவாகியிருந்தது என்கிறார். உண்மையில் இவ்வாறு கூறுவதுதான் ஏகாதிபத்திய முரண்களை மூடி மறைப்பதாகும். காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய திருத்தல்வாத கருத்தாகும். நமது அமைப்பு அமெரிக்கா உலக மேலாதிக்கத்திற்கு முயற்சி செய்கிறது என்றுதான் கூறியுள்ளதே ஒழிய, உருவாகிவிட்டது என்று கூறவில்லை. அமெரிக்கா தலைமையில் ஒற்றை துருவ உலக அரசு உருவாகிவிட்டது; எனவே தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று நேபாளப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த பிரசண்டாவின் நிலைபாடு காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய திருத்தல்வாத நிலைபாடு என்று நாம் பிரசண்டாவின் கலைப்பு வாதம் பற்றிய நூலில் விமர்சித்து எழுதியுள்ளோம். சீன-இரசிய முகாம் போட்டிக்கு வராதவரை அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய முகாமிற்கும் முரண்பாடுகள் நிலவியே வந்தன.

பனிப்போர் துவங்கியுள்ளது குறித்தும், இந்த பனிப்போர் அமெரிக்க முகாம், சீன-இரசிய முகாம்களுக்கிடையில் துவங்கியுள்ளது குறித்தும் 2018 மேதின பிரசுரத்தில் (மஜஇக) ஏஎம்கே. குறிப்பிட்டுள்ளார் என முன்பே பார்த்தோம். இது குறித்து 2015 மேதின பிரசுரத்திலும் (மஜஇக) கூறப்பட்டுள்ளது. அதில் ஏஎம்கே கூறுவதாவது: "உலகை மறுபங்கீடு செய்வதற்காக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய அணிக்கும், ரசிய-சீன ஏகாதிபத்திய அணிக்கும் இடையிலான போட்டி தீவிரமடைகின்றது". 2015-க்கு முன்பாகவே, 2008ம் ஆண்டு அமெரிக்க அணிக்கும் ஷாங்காய் அணிக்கும் (சீன-இரசிய) இடையிலான செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டிக்களமாக இலங்கையை மாற்ற அனுமதியோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தோம்.

எனவே பனிப்போர் துவங்கியுள்ளது என்பதும், இரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் துவங்கியுள்ளது என்பதும் ஏ எம் கே முன்வைத்த நிலைப்பாடாகும். தோழர் இருக்கும்போது இதுகுறித்து பிரபா கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அவரின் மறைவிற்குப் பிறகு கேள்வி எழுப்புகிறார்.

பனிப்போர் என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான மறுபங்கீட்டிற்கான போராகும். அமெரிக்காவிற்கும் சோசலிச ரசியாவிற்கும் இடையிலோ அல்லது சோசலிச ரசியாவிற்கும் ஜெர்மனி ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலோ இருந்த அரசியல் முரண்பாட்டைப் பனிப்போர் என்று கூறிய முதலாளித்துவ வாதிகளின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. முதலாவது பனிப்போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் நடந்தது. இது குறித்தும் ஏஎம்கே. கூறியுள்ளார்.

முதல் பனிப்போர், உள்நாட்டு யுத்தக் கொள்கை பற்றி ஏஎம்கே 

முதல் பனிப்போர் பற்றி கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத வழி பற்றிய நூலின் முன்னுரையில் ஏஎம்கே கூறுவதாவது:

"ரசியாவில் குருச்சேவின் திருத்தல்வாதமானது கோர்பசேவ் கலைப்புவாதமாக முடிவுற்றது. குருச்சேவின் திருத்தல்வாதம் ரசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டதால் அங்கு சோசலிச ஆட்சி ஒழித்துக் கட்டப்பட்டது. முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்தது. நவீன திருத்தல் வாதிகள் அரசியல் ரீதியிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தனர்.

பின்பு பிரஷ்னேவ் காலத்தில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக மாறி உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போட்டிப் போட்டுப் பனிப்போரில் ஈடுபட்டது."

2012இல் பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு எதிராக எழுதப்பட்ட மஜஇக பிரசுரத்திலும் முதல் பனிப்போர் குறித்துப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது ;

"பெட்ரோலிய வர்த்தகம் சர்வதேச அளவில் டாலரில் நடப்பதால் இந்தியாவிற்கு கடும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச நாணயச் சங்கம், உலக வங்கி, சர்வதேச வர்த்தக கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் மூலமும், டாலரைச் சர்வதேச நாணயமாக மாற்றியதன் மூலமும் தங்களது உலக மேலாதிக்கத்தை நிறுவினர். 1970களில் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடிக்குப் பின் டாலருக்கு இணையாகத் தங்கத்தை வங்கியில் வைக்கவேண்டும் எனும் கொள்கையைக் கைவிட்டு, டாலரை ஏராளமாக அச்சடித்து சர்வதேசச் சந்தையில் புழங்கவிட்டது. டாலர் பரிமாற்றத்தையே ஒரு பெரும் வர்த்தகமாக நடத்தி வருகின்றனர். அதே காலப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் போட்டி போட்டன. பனிப்போரில் ஈடுபட்டன.பெட்ரோலிய வளத்தைப் பங்கிட்டுக் கொண்டன"

1970-80களில் நடந்த இந்த முதல் பனிப்போர் கட்டத்தில் மையக் குழுவில் கொண்டபள்ளி சீதாராமையா தரப்பினர் 'சோவியத் எதிர்ப்பு முன்னணி' எனும் பெயரில் அமெரிக்க ஆதரவு - முதலாளித்துவ சீன ஆதரவு - உள்நாட்டில் என்டிஆர் ஆதரவு நிலைப்பாட்டை முன்வைத்தனர். அதை மறுத்து தமிழகத் தோழர்கள் ஏஎம்கே. தலைமையில் சரியான நிலைபாடு எடுத்தனர். இது குறித்து 1988 அறிக்கை கூறுவதாவது:

"மையக் குழுவில் சர்வதேசப் பிரச்சனைகளில் (சீ.க.க) டெங் பற்றிய மதிப்பீடு, மூன்று உலக கோட்பாடு, உலக யுத்தத்தின் பால் அணுகுமுறை பற்றிய விவாதம் மார்க்சிய செயல்தந்திரக் கோட்பாடுகள் மட்டத்தை அடைந்தது. உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றும் முழக்கத்தை (உலக செயல்தந்திர) பிரச்சாரம் செய்தல், என்டிஆர் போன்ற மாநில ஆளும் கும்பல் பால் நமது அணுகுமுறை (உள்நாட்டு யுத்த தந்திர செயல் தந்திர அரங்கம்) ஆகிய பிரச்சனைகளில் மையக் குழுவில் அடுத்த சுற்று நெருக்கடி துவங்கியது." (1988 அறிக்கை ப.84).

இதுகுறித்து 7.2.2014 அமைப்பு தீர்மானம் கூறுவதாவது (ப 30 - 31):

"சீனா முதலாளித்துவப் பாதையில் செல்கிறது என்ற முடிவுக்கு வந்ததும் டெங் திருத்தல் வாதத்தை எதிர்த்து மூன்று உலக கோட்பாட்டை நிராகரிப்பதற்கான போராட்டத்தைத் துவங்கினோம். மூன்று உலக கோட்பாட்டை எதிர்த்து உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம்."

என்று ஏஎம்கே. கூறினார்.

அதாவது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் உலக மறுபங்கீட்டிற்காக நடக்கும் யுத்தத்தில் அல்லது யுத்த தயாரிப்புகளில் நாம் எந்த ஒரு ஏகாதிபத்திய முகாமையும் ஆதரிக்க முடியாது; எந்த ஒரு உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ கும்பலையும் ஆதரிக்க முடியாது; அநீதி யுத்தத்தை நீதி யுத்தமாக மாற்றுவது; சொந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து சோசலிசப் புரட்சி நடத்துவது என்பதே உள்நாட்டு யுத்தக் கொள்கையாகும். லெனின் வார்த்தைகளில் சொல்வதெனில் சொந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் தோல்வியை நாடுவது என்பதாகும்.

யுத்தம் என்பது அரசியல் யுத்தம், ராணுவ யுத்தம் என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டது. யுத்தம் என்பதை ராணுவ நடவடிக்கையாக மட்டும் பார்ப்பது தவறானது. 1980களில் முதல் பனிப்போரில் உள்நாட்டு யுத்தக் கொள்கையை அல்லது உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவது என்ற நிலைப்பாட்டை ஏஎம்கே. முன்வைத்தார். இரண்டாவது பனிப்போர் துவங்கி விட்ட போதும் (2018ல்) அதே சர்வதேசிய செயல்தந்திர முழக்கமே பொருந்தும் என்று அமைப்பில் விளக்கினார். அதன் அடிப்படையிலேயே நாம் உள்நாட்டு யுத்தக் கொள்கையை இன்றைய சர்வதேச செயல் தந்திரமாக முன்வைத்துள்ளோம். அதற்குச் சேவை செய்யும் வகையில் உள்நாட்டு (தேசிய) செயல் தந்திரங்களை ஏஎம்கே. வழியில் முன்வைத்துள்ளோம். எனவே உள்நாட்டு யுத்தக் கொள்கை என்பது இடது தீவிரவாதம் அல்ல. அது சரியான மா-லெ நிலைப்பாடாகும். மேலும் புரட்சி என்பது அமைதி வழியில் சாத்தியமல்ல. அது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் பலாத்கார நடவடிக்கை என்கிறது மார்க்சியம். எனவே அரசியல் யுத்தத்திற்கு மக்களைத் தயார் செய்வது (கோட்டையை முற்றுகை இடுவது) பிறகு ராணுவ யுத்தத்திற்குத் தயார் செய்வது (கோட்டையைத் தகர்ப்பது) என இரண்டையும் உள்ளடக்கியதே புரட்சியாகும். நாம் உள்நாட்டு யுத்தம் எனக் கூறுவது இன்றைய கட்டத்தில் அரசியல் யுத்தத்தையே குறிக்கிறது. உள்நாட்டு யுத்தம் என்பது இடது தீவிரவாதம் எனில் புரட்சியே இடது தீவிரவாதம்தான்.

உள்நாட்டுப் போர் என்றால் என்ன என்பது குறித்து லெனின் கூறுவதாவது:

"இரண்டாவதாக, உள்நாட்டுப் போர் வேறு எந்த ஒரு போரையும் போன்றதுதான். வர்க்கப் போராட்டத்தை ஒப்புக்கொள்கிறவர், ஒவ்வொரு வர்க்க சமுதாயத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய, சில நிலைமைகளில் தவிர்க்கமுடியாததாக, வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் தீவிரப்படுத்துவதாகவும் இருக்கக்கூடிய உள்நாட்டுப் போரை ஒப்புக்கொள்ளத் தவறமுடியாது. அதுவே ஒவ்வொரு மாபெரும் புரட்சியாலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போரை மறுப்பது அல்லது அதைப் பற்றி மறந்துவிடுவது, மோசமான சந்தர்ப்பவாதத்தில் வீழ்ந்து சோசலிசப் புரட்சியைக் கைவிடுவதாகும்."
(பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இராணுவத் திட்டம் - லெனின்)

உள்நாட்டுப் போர் என்பது வர்க்கப் போர் என்றே லெனின் கூறுகிறார்.

உள்நாட்டு யுத்தக் கொள்கை குறித்து பெரும்பான்மை ஆவணத்திலும் (பக்கம் 45-46) விளக்கப்பட்டுள்ளது.

அது குறித்து ஏஎம்கே. கூறுவதாவது:

1. ஒப்பீட்டளவில் அமைதியான காலங்களில் அதாவது உலக யுத்தம் இல்லாத வேளையில் சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரமானது அரை காலனிகள், நவீன காலனிகளில் தேசிய ஜனநாயக புரட்சிகளையும், வளர்ச்சியடைந்த நாடுகளில் பாட்டாளி வர்க்க புரட்சிகளையும் கொண்டு செல்வது; அதேவேளையில் இரு வல்லரசுகள் உலகத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள அவற்றின் ஏஜென்டுகள் ஆகியோரின் யுத்தக் கொள்கைகளை (பொருளாதார, இராணுவ மயமாக்கல், யுத்த கடன்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள், கட்டாய ராணுவச் சேவை போன்றது) அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போராடுவதும் ஆகும்.

2. ஒரு உலக யுத்தத்தின் போது, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமாக, அந்த யுத்தத்தை ஓர் உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக இருக்கவேண்டும். யுத்தம் பற்றிய பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரம் ஆனது யுத்தத்தின் வர்க்கத் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. உலக யுத்தத்தின்போது ஐக்கிய முன்னணி கொள்கையை மேற்கொள்வதா? அல்லது உள்நாட்டு யுத்தக் கொள்கையை மேற்கொள்வதா? என்பது யுத்தத்தின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. லெனின் கூறுவதைப் போல், "எந்த வரலாற்றுச் சூழ்நிலைகள்" யுத்தத்திற்கு வழிவகுக்கின்றன, எந்த வர்க்கங்கள் அதைத் தொடுத்து இருக்கின்றன, எந்த இறுதி நோக்கத்திற்காகத் தொடுத்து இருக்கின்றன என்பதால் தீர்மானிக்கப்படுகிறது" (யுத்தமும் புரட்சியும் லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 24 ப 390).

3. அது ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக இருக்குமேயானால், அதாவது மோதுகின்ற இரண்டு பக்கமும் ஏகாதிபத்தியவாதிகளாக இருந்தால் (இரண்டாம் உலக யுத்தத்தில் முதல் கட்டத்தில் இருந்ததைப் போல) அப்போது செயல்தந்திரம் ஆனது யுத்தத்தை எதிர்ப்பதாகவும், அந்த யுத்தத்தை ஓர் உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாகவும் அமையும். ஆனால், யுத்தத்தின் வர்க்கத் தன்மை மாறினால், எடுத்துக்காட்டாக மோதுகின்ற சக்திகளில் ஒரு பக்கம் சோசலிச நாடு இருப்பதாக வைத்துக்கொண்டால் (இரண்டாம் உலக யுத்தத்தில் பிற்பகுதிகளில் இருந்ததைப் போல) அது மக்கள் யுத்தமாக மாறுகிறது. சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரமானது யுத்தத்தில் அந்த சோசலிச நாட்டை ஆதரிக்கின்ற எல்லா சக்திகளுடன் ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதன் மூலம் அந்த மக்கள் யுத்தத்தில் பங்கு கொள்வதாக அமையும்"

என்கிறார் ஏஎம்கே.

தோழர் பிரபா இது அமைதியான காலம் என்கிறார்; பனிப்போர் மா-லெ கருத்தல்ல என்று கூறி அதை மறுக்கிறார்; எனவே சீனாவுடன் இணைந்து அமெரிக்காவின் போர் தயாரிப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார். அவரது வாதப்படி இது அமைதியான காலம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் யுத்த தயாரிப்பு கொள்கைகளையும் அம்பலப்படுத்தி காலனிய நாடுகளில் ஜனநாயக புரட்சிகளையும், முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் மேற்கூறப்பட்ட ஏஎம்கேவின் மேற்கோளில் முதல் பாராவில் கூறப்பட்டுள்ளதே ஒழிய, ஒரு ஏகாதிபத்தியத்துடன் சார்ந்து நிற்க வேண்டும் எனக் கூறப்படவில்லை.

சோசலிச முகாம் இல்லாத இன்றைய சூழலில், ஒரு ஏகாதிபத்திய முகாமை எதிர்த்து இன்னொரு ஏகாதிபத்திய முகாமை ஆதரிப்பது வலது விலகல் என்கிறார் ஏஎம்கே.. " சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம்" எனும் கட்டுரையில் அவர் கூறுவதாவது:

"சோசலிச நாடு இருந்த காரணத்தினால் தான் இரண்டாவது உலகப் போரில் பாசிசத்தை எதிர்த்து ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலிருந்த முரண்பாட்டைப் பயன்படுத்தினோம்.

அன்று போல் இன்று ஒரு தரப்பு மட்டும் பாசிச முறைகளைக் கையாள கூடியதாக இல்லை. இரண்டு தரப்புமே பாசிச முறைகளைக் கையாளுகின்றன. ரசியா ஒரு ஜனநாயக நாடல்ல. மிக மோசமான முதலாளித்துவ வளர்ச்சி பெற்றுள்ள நாடு. அது முதலாளித்துவ பாதைக்குச் செல்வதற்காகப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தூக்கி எறியப் பாசிசத்தை கையாண்டது. ஏகாதிபத்தியவாதிகள் பாசிசத்தை நோக்கி எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பது சூழலின் நிலைமைகளை பொறுத்துத்தான் அமைகிறது.

ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாட்டை சோசலிச நாடு இருந்தால்தான் பயன்படுத்த முடியும். சோசலிச நாடு இல்லாவிட்டால் யுத்தத்தில் ஒரு ஏகாதிபத்திய அணியின் முரண்பாட்டைப் பயன்படுத்தி கொண்டு இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் கூட்டு என்பது சாத்தியமில்லை. சோசலிச நாடு இல்லாவிட்டாலும் இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் சேர முடியும் என்று கூறினால் அது மிகப்பெரிய விலகலாகத்தான் இருக்கும்."

என்கிறார் ஏஎம்கே.. (ப.37)

அதே கட்டுரையில் பக்கம் 19இல் அமெரிக்காவை எதிர்த்து சீனா அல்லது ரசியாவுடன் கூட்டுச் சேரலாம் என்று கூறுவது திருத்தல் வாதம் என்கிறார்.

"ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மையடைகிறது. இது புரட்சிக்கு சாதகமானது தான் என்றபோதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மற்ற ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேரவேண்டும் என சமூக ஜனநாயகவாதிகள் கூறுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி, ரசியா, சீனா ஆகிய நாடுகளுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கூட்டு என பாட்டாளி வர்க்க பாதையைத் தூக்கி எறிந்துவிட்டு முதலாளித்துவவாதிகளாக மாறிவிட்ட சமூக ஜனநாயகவாதிகள் கூறுகின்றனர். இதைத்தான் இங்குள்ள திருத்தல் வாதிகளும் முன்வைக்கின்றனர்"

என்கிறார் ஏஎம்கே..

சோசலிச நாடு இருந்தாலும் கூட அது ஏகாதிபத்திய நாடுகளால் தாக்கப்படும்போதுதான் சோசலிச நாட்டை பாதுகாக்கும் பொருட்டு அந்த சோசலிச நாட்டை ஆதரிக்கின்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் கம்யூனிஸ்ட் அமைப்புத் தலைமையில் தற்காலிக ஐக்கிய முன்னணி கட்டப்படலாம் என்றே மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர். சோசலிச நாடு என்பதன் பொருள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசு நிலவும் நாடு என்பதாகும். வர்க்கச் சார்பற்ற சோசலிசம் அல்லது அனைத்து வர்க்கங்களுக்குமான சோசலிசம் என எதுவும் இருக்க முடியாது. கியூபா, வெனிசுலா போன்ற நாடுகள் சோசலிச நாடுகள் என திருத்தல்வாதிகள் கூறுவது ஏற்புடையதல்ல.

சீனா தற்காப்பு நிலையில் உள்ளது என்று கூறி அதை ஆதரிக்க வேண்டும் என்கிறார் பிரபா. சீனாவும் ரசியாவும் தற்காப்பு நிலையில் இல்லை, மறு பங்கீட்டிற்காகவே அமெரிக்காவுடன் போட்டி போடுகின்றன எனவும், இதில் எந்த ஏகாதிபத்தியத்தையும் ஆதரிக்க முடியாது எனவும் ஏஎம்கே (2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்) ஒபாமா வருகையை எதிர்த்து எழுதப்பட்ட மஜஇக பிரசுரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்;

"அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும் ரசிய சீன ஏகாதிபத்தியங்களுக்கும் இடையிலான போட்டி உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியேயாகும். ரசியா,சீனா போன்ற நாடுகள் தற்காப்புக்காக அல்ல, உலக மறுபங்கீட்டிற்காகவே போராடுகின்றன. எனவே உலகை மறுபங்கீடு செய்துகொள்வதற்கான இவ்விரு அணிகளில் எந்த ஒரு அணியின் பக்கமும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் அணி சேர முடியாது."

எனவே அமெரிக்காவை எதிர்த்து 'அமைதியை' விரும்பும் சீனாவுடன் இணைந்து போராட வேண்டும் என்று பிரபா கூறுவது திருத்தல் வாதமே ஆகும்.

தோழர் பிரபா இந்தியாவில் யுத்தம் நடக்கவில்லை, அமைதி நிலவுவதாகக் கூறுகிறார். உலக யுத்தம் என்பது உலகம் முழுவதும் நடக்கும் யுத்தம் அல்ல. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் உலக மறுபங்கீட்டிற்காக நடக்கும் யுத்தமே உலக யுத்தம் ஆகும். இரண்டு உலகப் போர்களும் முதல் பனிப்போரும் அவ்வாறே நடந்தன. முதல் பனிப்போர் மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பாவை மையப்படுத்தி நடந்தது. முதல் உலக யுத்தத்தின் போது உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவது, அநீதி யுத்தத்தை நீதி யுத்தமாக மாற்றுவது எனும் சர்வதேச செயல்தந்திரத்தை லெனின் முன்வைத்தார். அதன் பொருள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் அநீதி யுத்தத்தை ஆதரிக்காமல் சொந்த நாட்டில் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதும், தாய்நாட்டை பாதுகாப்பது எனும் பெயரில் ஏகாதிபத்தியங்களின் அநீதி யுத்தத்தை ஆதரிக்கக் கூடாது என்பதுமே ஆகும்.

முதல் பனிப்போர் இந்தியாவில் நடந்ததா? என்றால் இல்லை. ஆனால் ஏஎம்கே. தலைமையிலான போல்ஷ்விக் அமைப்பு 1970-80களில் நடந்த முதல் பனிப்போர் கட்டத்தில் (அமெரிக்கா மற்றும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மத்திய ஆசியாவை மையப்படுத்தி நடந்த முதல் பனிப்போர்) உள்நாட்டு யுத்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வது என்று நிலைபாடு எடுத்தது. அதை இடது தீவிரவாதம் என்று தோழர் பிரபா அப்போது கேள்வி எழுப்பவில்லை, தோழர் ஏஎம்கே மறையும் வரையிலும் கூட கேள்வி எழுப்பவில்லை.

புதிய காலனிய கட்டத்தில் ஏகாதிபத்தியங்கள் அமைதி வழியில் ஒப்பந்தங்கள், கடன் பத்திரங்கள் மூலம் புதிய காலனிய நிறுவனங்களைக் கருவியாகக் கொண்டு காலனிகளை மறுபங்கீடுச் செய்து கொள்கின்றன. அதற்குச் சாத்தியமில்லாத நாடுகளில் அல்லது அதன் ஆதிக்கத்தை ஏற்க மறுக்கும் நாடுகளை இராணுவ வழி மூலம் மறுபங்கீடு செய்துகொள்கின்றன. அந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகக் கலகங்களைத் தூண்டியும் தீவிரவாத குழுக்களை உருவாக்கியும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவை எடுபிடியாக மாற்றியும் பொம்மை ஆட்சிகளை உருவாக்கிக் கொள்கின்றன. புதிய காலனிய கட்டத்தில் மறுபங்கீட்டிற்கான போர்கள் பிராந்திய போர்களாகவும் சில இடங்களில் நேரடி போர்களாகவும் சில இடங்களில் பதிலிப் போர்களாகவும் நடக்கின்றன. கம்யூனிஸ்ட் அமைப்பு இந்த யுத்தங்களின் பால் அல்லது யுத்த தயாரிப்புகளின் பால் ஒரு சர்வதேச செயல்தந்திரத்தை முன்வைக்க வேண்டும். அதிலிருந்து தேசிய செயல்தந்திரத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். ஏஎம்கே முதல் பனிப்போரில் முன்வைத்த உள்நாட்டு யுத்தக் கொள்கை எனும் சர்வதேச செயல்தந்திரமே இரண்டாவது பனிப்போர் கட்டத்திலும் பொருந்தக் கூடியதாகும். உள்நாட்டு யுத்தக் கொள்கை என்பது உலக யுத்தம் வந்தால்தான் பொருந்தும் என்பதல்ல; உலகப்போரின் துவக்கக் கட்டமாக இருக்க கூடிய பனிப்போர் கட்டத்திலும்  பொருந்தக் கூடியதே. ஆகவேதான் முதல் பனிப்போரில் ஏஎம்கே உள்நாட்டு யுத்தக் கொள்கையை முன்வைத்தார். உள்நாட்டு யுத்தக் கொள்கை என்பது அமெரிக்க சீன ஏகாதிபத்தியங்களின் யுத்த தயாரிப்புகளை எதிர்த்தும், அவற்றின் தரகு வர்க்க ஏஜெண்டுகளை எதிர்த்தும் புரட்சிக்கு மக்களை தயார் படுத்துவது என்பதாகும்.

ஏகாதிபத்திய முரண்களையும், ஆளும் வர்க்க முரண்களையும் எப்போது கையாளலாம் என்பது குறித்து பெரும்பான்மை ஆவணத்திலும், அதனடிப்படையில் எழுதப்பட்ட கனுசன்யால் பற்றிய நூலிலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதையேதான் நாம் பாசிச எதிர்ப்பு அறிக்கையிலும் எடுத்துக் கையாண்டுள்ளோம்.

ஏகாதிபத்திய முரண்பாடுகளையும், ஆளும் வர்க்க முரண்பாடுகளையும் எப்போது கையாள முடியும் என்பது பற்றியும், ஐக்கிய முன்னணி என்பது பாட்டாளி வர்க்கத் தலைமையில் நிறுவப்பட வேண்டும் என்பது பற்றியும் ஏஎம்கே. கூறுவதாவது:

ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் ஏகாதிபத்திய முரண்களைக் கையாள்வது பற்றிய சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் குறித்து தோழர் ஏஎம்கே தனது "பெரும்பான்மை ஆவணத்தில்" கூறியுள்ளார். அதில் "சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம்" எனும் தலைப்பில் ஏஎம்கே. கூறுவதாவது:

"மறைமுக சேமிப்புச் சக்தியாக அமைவது பொதுவாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், குறிப்பாக (அ) இரு வல்லரசுகளுக்கு இடையிலுள்ள முரண்பாடு (அ) ஒருபுறம் ஏதாவது ஒரு வல்லரசுக்கும் மறுபுறம் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு (அ) அரைக்காலனி, நவீன காலனிய நாட்டில் ஒரு வல்லரசுக்கு விசுவாசமான ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினருக்கும், மற்றொரு வல்லரசு, பிற ஏகாதிபத்திய சக்திகள், நாட்டின் உள்ளேயே உள்ள அவற்றின் ஏஜெண்டுகள் ஆகியோருக்கும் இடையிலுள்ள முரண்பாடும் ஆகும்" என்கிறார் ஏஎம்கே.

[இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரமும் ப.44]

அதாவது, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள் என்பது மறைமுக சேமிப்பு சக்திகள் என ஏஎம்கே கூறுகிறார். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகளை (தரகர்கள்) எப்போது, எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி அவர் பின் வருமாறு கூறுகிறார்:

"தன்மையில் தரகர்களாக உள்ள பெரும் முதலாளிய வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாகச் சேவைப் புரிகிற அதனால் வளர்க்கப்படுகிற ஒரு வர்க்கமாகும். எனவே தரகுப் பெரும் முதலாளிய வர்க்கத்திற்குள்ளேயே வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்தியச் சக்திகளால் (குறிப்பாக இரண்டு வல்லரசுகள்) ஆதரிக்கப்படுகின்றன. எனவே, இந்த வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடையும்போது ஒரு குறிப்பிட்ட சக்திக்கு எதிராகப் புரட்சியின் முனை முக்கியமாகத் திருப்பப்படும்போது, பிற சக்திகளைச் சார்ந்த பெரும் முதலாளிய வர்க்கக் கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான போராட்டத்தில் சில குறிப்பிட்ட எல்லை வரை சில குறிப்பிட்ட காலத்திற்கு சேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பாட்டாளி வர்க்கமானது எதிரியைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இந்த பிரிவினருடன் ஒரு ஐக்கிய முன்னணியை அது புரட்சிக்குச் சாதகமாக இருக்குமானால் உருவாக்கலாம்" என்கிறார் ஏஎம்கே. 
(அதே நூல்... பக்கம் 110)

இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது மட்டும்தான் ஏகாதிபத்திய நாடா? 

தோழர் பிரபா இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அமெரிக்காதான் பிரதான ஏகாதிபத்திய எதிரி என்று கூறி, நிதி மூலதன ஆதிக்கத்தில் ஈடுபடும் சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளை ஆதரிக்கச் சொல்கிறார். இது குறித்து நால்வரணிக்கு அளித்த பதில் அறிக்கையில் ஏஎம்கே கூறுவதாவது ;

"மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் அறிவுஜீவிகள் பலரும் ஏகாதிபத்தியம் பற்றி நீர்த்துப்போன வடிவிலேயே விளக்கமளிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியம் என்பது ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த, மேலாதிக்கத் தன்மை கொண்டது மட்டுமேயாகும். அத்துடன் அவர்கள் முதலாளித்துவ ஜனநாயகம் எனும் மாயையில் மூழ்கிப்போனவர்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முதலாளித்துவ மரபுகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள்." (ஐவரணி 2வது அறிக்கை - IV. எய்ம் அமைப்பு (AIM) எனும் என்.ஜி.ஓ-வும் மாவோயிஸ்ட் அமைப்பின் கூட்டும்)

இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது மட்டுமே ஏகாதிபத்தியம்; நிதிமூலதன ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது ஏகாதிபத்தியம் இல்லை அல்லது தற்காப்பு ஏகாதிபத்தியம் எனக் கூறுவது திருத்தல்வாதமாகும்.

சீனா நிதி மூலதன ஆதிக்கத்தில் மட்டுமின்றி, இராணுவ ஆதிக்கத்திலும் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ஹம்பந்த்தோடாவில் இராணுவ தளம் அமைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை ஆக்கிரமித்துள்ளது. ஈழத்தில் இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கும் மேலான மக்களைக் கொன்று குவிக்க ராஜபக்சே கும்பலுக்கு இராணுவ உதவிகளை வழங்கியது. டிஜிபௌட்டி எனும் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு இராணுவ தளத்தை அமைத்துள்ளது, மேலும் வெனிசுலா, இந்தியப் பெருங்கடலில் செஸல்ஸ் தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் இராணுவ தளம் அமைத்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நிதி மூலதன ஆதிக்கத்தில் ஈடுபட்டுவருகிறது. அமெரிக்க நலனுக்கான எட்டுவழிச் சாலையை எதிர்த்துவிட்டு, காஷ்மீர், பாகிஸ்தான், நேபாளம். இலங்கை, ஆப்பிரிக்க நாடுகளில் போடப்படும் சீனாவின் ஒரு வழி ஒரு இணைப்புச் சாலை திட்டத்தை ஆதரிக்க முடியாது. 

ஏகாதிபத்திய சீனாவை விமர்சிக்க கூடாதா? 

சீனா ஏகாதிபத்திய நாடு என்பதும், அது அமெரிக்காவுடன் செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டியிலும் உலக மறுபங்கீட்டிற்கான பனிப் போரிலும் ஈடுபடுகிறது என்பது மா-லெ அடிப்படையில் ஏஎம்கே வால் முன்வைக்கப்பட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கருத்தாகும். அது அமெரிக்காவின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்திலிருந்தோ அல்லது பாஜகவின் சீன எதிர்ப்பு தேசிய வெறியிலிருந்தோ உருவாக்கப்படவில்லை. ஆகவே அமெரிக்கா மற்றும் பாஜகவின் சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்குத் துணை போகிறோம் என்று பிரபா கருதுவது கற்பனையானது ஆகும். இந்திய-சீன எல்லை தகராறுகளை முன்வைத்து பிரபா இவ்வாறு கூறுகிறார். நாம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் இலங்கையில், மத்திய கிழக்கில், ஆப்பிரிக்காவில், லத்தின் அமெரிக்காவில், தெற்காசியப் பிராந்தியத்தில் (குறிப்பாக தென்சீனக்கடல் வளங்களைக் கொள்ளை அடிப்பதன் மூலம் தெற்காசிய மேலாதிக்க முயற்சிகளில்) நடைபெற்று வரும் மறுபங்கீட்டீற்கான யுத்த தயாரிப்புகளைப் பற்றிக் கூறுகிறோம். அவர் இந்திய-சீன எல்லைப் பிரச்சினையையும், பனிப்போரையும் இணைத்துக் குழப்புகிறார்.

இந்தியா அமெரிக்காவின் மேலாதிக்க முயற்சிகளுக்கு எடுபிடியாகச் செயல்பட்டு தெற்காசியப் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்திய-சீன எல்லை தகராறுகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதும் அமெரிக்காவின் குவாட் கூட்டமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதும்தான் நமது நிலைப்பாடாகும். எல்லைப் பிரச்சினைகளில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, சீனா இரண்டுமே அத்துமீறி வருகின்றன என்பதுதான் உண்மை. எல்லைத் தகராறுகளை முன்வைத்து இந்தியா மட்டுமல்ல சீனாவும் உள்நாட்டில் தேசிய வெறியை தூண்டுகிறது. ஒருபுறம் பாஜக கும்பல் சீனாவைக் காட்டி தேசிய வெறியைத் தூண்டுகிறது; மறுபுறம் சீனாவின் அன்னிய முதலீட்டை நாட்டிற்குள் அனுமதிக்கிறது. எந்த ஒரு அன்னிய நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தையும் நாம் அனுமதிக்க முடியாது. நாம் ஏகாதிபத்திய ரசியாவின் சோசலிச முகமூடியைக் கிழித்தெறிந்ததைப் போலவே, ஏகாதிபத்திய சீனாவின் சோசலிச முகமூடியையும் கிழித்தெறிய வேண்டும். அதுவே சீனப் பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்துக்கு நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும். மாவோ காலத்தில் சோசலிச சீனா இந்தியா உட்பட எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. நாம் ஏகாதிபத்திய சீனாவின் ஆக்கிரமிப்புகளை மட்டுமே பேசுகிறோம்.

அமைப்பு 70ம் ஆண்டு திட்டத்திற்கு எதிராகப் போகிறதா? 

அமைப்பு உலகப்போரை உள்நாட்டுப்போராக மாற்றும் சர்வதேச செயல் தந்திர முழக்கத்தைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடுத்த நிலைபாட்டைச் சுட்டிக்காட்டி அமைப்பு எழுபதாம் ஆண்டு திட்டத்தைக் கைவிட்டதாகவும் ஏஎம்கே வழிக்கு துரோகம் செய்வதாகவும் பிரபா கூறுகிறார். இது கற்பனையான வாதம் ஆகும். அமைப்பு உலகப் புரட்சி பேசி தனிநாட்டு புரட்சியை மறுப்பதாக அவர் கூறுவதும் கற்பனையானதே. இந்தியாவில் நாம் நடத்தவேண்டிய புதிய சனநாயகப் புரட்சி உலக சோசலிச புரட்சியின் ஓர் அங்கமாகும். எனவே நாம் உலக சோசலிசப் புரட்சியை மறுப்பவர்கள் அல்ல. எனவே உலகப் புரட்சி பேசுவதையே காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியம் என்று கூறுவது தவறாகும். "ஏக கால உலக புரட்சி; தனி நாட்டுப் புரட்சி சாத்தியமில்லை" என்று கூறுவதே காவுத்ஸ்கிவாதம் அல்லது டிராட்ஸ்க்கிய வாதமாகும். நாம் அவ்வாறு கூறவில்லை. முதல் உலகப்போரில் லெனினும், முதல் பனிப்போரில் ஏஎம்கே வும் (இரண்டாவது பனிப் போரிலும்) "உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம்" என்று நிலைபாடு எடுத்தனர். அது என்ன காவுத்ஸ்கிவாதமா? இல்லை. அவை மிகச் சரியான மா-லெ நிலைபாடுகள்.

70ம் ஆண்டு திட்டம் அமெரிக்கா, சோவியத் சமூக ஏகாதிபத்தியம் இரண்டையும்தான் எதிரிகளாகக் குறிப்பிடுகிறது. அது ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் அணி சேர சொல்லவில்லை. பாசிச எதிர்ப்பு அறிக்கை 70ம் ஆண்டு திட்டத்தின் அடிப்படையிலும். பெரும்பான்மை ஆவணம், கனுசன்யால் பற்றிய ஆவணத்தின் அடிப்படையிலும்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்திய தரகு பெருமுதலாளித்துவம், மாநில தரகு முதலாளிய வர்க்கம் மற்றும் நிலவுடைமை வர்க்கங்களைப் பாசிசத்தின் இலக்குகளாகக் குறிப்பிடுகிறது. பாசிச எதிர்ப்பு அணியை புதிய ஜன நாயக புரட்சியைச் சாதிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்கிறது. உள் நாட்டு யுத்தக் கொள்கை என்பது சர்வதேசிய செயல்தந்திரம் ஆகும். அதனடிப்படையில் மக்கள் ஜனநாயக குடியரசை அமைக்க தரகு முதலாளித்துவ வர்க்கங்களை எதிர்ப்பது என்பது தேசிய செயல்தந்திரம் ஆகும். இரண்டையும் வெவ்வேறாகப் பார்த்து எதிர் நிலைப்படுத்தி இரட்டைச் செயல்தந்திரம் என பிரபா கூறுவது தவறானது.

தொகுத்துக் கூறுவதெனில் ஏகாதிபத்தியம் குறித்தும், ஏகாதிபத்திய முரண்பாடுகள், யுத்த தயாரிப்புகள் குறித்தும், அதன் பால் நாம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் லெனினிய அடிப்படையில் வழிகாட்டிய ஏஎம்கே வழியில் அமைப்பு நிலைபாடு எடுத்துள்ளது. தோழர் பிரபா லெனினியத்தின் வழியில் வழிகாட்டிய ஏஎம்கே வழியிலிருந்து விலகிச் சென்று திருத்தல்வாத நிலைபாடு எடுத்துள்ளார் என்றே அமைப்பு கருதுகிறது.

II

செப்-12ல் அவர் விநியோகித்த மொட்டைப் பிரசுரத்தின் மீதான விமர்சனம்

முதல் அறிக்கையில் பனிப்போர் என்பது 

1) சோசலிச ரசியா மீதான அமெரிக்காவின் அவதூறு மற்றும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் எனவும் 2) இரு (அமெரிக்க -ரசிய) வல்லரசுகளுக்கு இடையிலான ஆயுத மோதல் அல்லாத அரசியல் மோதல் பனிப்போர் அல்ல; இந்த அரசியல் மோதல் உண்மையில் அமெரிக்காவின் பனிப்போர் ஆகும் எனவும் கூறினார். அதாவது பனிப்போர் என்றால் அது சோசலிச ரசியாவுடனான முரண்பாடானாலும் சரி, ஏகாதிபத்திய ரசியாவுடனான சந்தைப் போட்டியானாலும் (அரசியல் மோதல்) சரி, அது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான போர் மட்டுமே எனும் பொருளில் எழுதினார். அதே நேரம் பனிப்போர் என்பது மா-லெ கருத்தல்ல எனவும் குழப்பினார். 

ஆனால் பிரசுரத்தில் பக்கம் 9 இல் "பனிப்போரை அதாவது இரு வல்லரசுகளுக்கு இடையிலான அரசியல், தொழில் நுட்ப, வியாபார போட்டியே" என்கிறார். முதல் அறிக்கையில் இந்த அரசியல் போட்டி பனிப்போர் அல்ல என கூறியவர் தற்போது அதுதான் பனிப்போர் என்கிறார். ஆனால் பக்கம் 10 இல் "அமெரிக்க - ரசிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சந்தைப் போட்டி என்பது அமெரிக்காவின் பனிப்போர்" என மீண்டும் குழப்புகிறார். முன்பு உலகம் இருதுருவங்களாக இல்லை என்றவர் தற்போது இருமுகாம்கள் என்று பேசுகிறார். எது அவருடைய இறுதி கருத்து என்று தெரியவில்லை அதிலும் குழப்புகிறார். 

தோழர் பிரபா பனிப்போர் என்பது சந்தைப் போட்டி என்கிறார். ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை சந்தைப்போட்டி இருக்கப் போகிறது. அவ்வாறெனில் ஏகாதிபத்தியங்க்கள் நீடிக்கும் வரையில் பனிப்போர் நீடிக்கும் என்கிறார். அதுவும் அது அமெரிக்காவின் பனிப்போராக மட்டுமே இருக்கும் என்கிறார். முந்தய அறிக்கையில் அமெரிக்கா தலைமையில் ஒற்றை துருவ உலக மேலாதிக்கம் இருந்தது என்றார். சாரத்தில் அமெரிக்காவுடன் போட்டி போடும் இன்னொரு வல்லரசிற்கு விதிவிலக்கு அளிக்கிறார். அதன் மூலம் அந்த வல்லரசிற்கு (சீன-ரசிய ஏகாதிபத்தியம்) முட்டு கொடுக்கிறார். முதல் அறிக்கையின் மீதான வாதத்தில் சீனாவை ஆதரிக்க வேண்டும் என்றார். ஆனால் இதில் அதை எழுதவில்லை. தற்போது பிரசுரத்தில் ரசியாவையும் மறைமுகமாக ஆதரிக்கிறார். இவை நிச்சயமாக லெனினியம் இல்லை. காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கருத்தேயாகும். இதுதான் அரசியல் துறையில், திட்ட துறையில் கலைப்புவாதம் என கலைப்புவாதம் பற்றிய அமைப்பு தீர்மானம் கூறுகிறது. 

ரசிய-சீன ஆதரவு நிலைபாட்டை ஏன் அவர் வெளிப்படையாக தைரியமாக எழுதவில்லை. ஏனெனில் தன் கருத்தில் அவருக்கே நம்பிக்கையில்லை. மட்டுமின்றி, அது சிபிஎம் நிலைபாடு என்பது அம்பலப்பட்டுவிடும் என்பதே முக்கியமான காரணமாகும். 

உக்ரைன் யுத்தம் நடக்கும் சூழலில் சீன -ரசிய ஏகாதிபத்திய கூட்டணிக்கு ஆதரவென்பது சீன, ரசிய, உக்ரைன் நாட்டு பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமின்றி லெனினின் சர்வதேசிய பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தினை முன்வைக்கும் ஏஎம்கே நிலைப்பாட்டிற்கும் செய்யும் துரோகமாகும்.இதன் மூலம் அப்பட்டமாக சி.பி.எம் மற்றும் அ.மார்க்ஸ் கும்பலின் திருத்தல்வாத நிலைப்பாட்டையும், இந்த நிலைப்பாட்டை தனது புதிய கண்டுபிடிப்பு போல பேசிவரும் டிராட்ஸ்கியவாத பா.வ.ச. அணியின் நிலைப்பாட்டையும் முன்வைக்கிறார்.

பனிப்போர் என்பது மா லெ கருத்தல்ல; ஏஎம்கேவின் கருத்தும் அல்ல என்றவர் தற்போது பிரசுரத்தில் "பனிப்போர் குறித்த முதலாளித்துவ பத்திரிக்கைகளின் கருத்தை... பிரச்சார யுக்தியாக ஏஎம்கே பயன்படுத்தினார்" என அவரை இழிவுபடுத்துகிறார். முதலாளித்துவ கருத்தை ஒரு மார்க்சியவாதி அம்பலப்படுத்துவாரா? அல்லது அதை பிரச்சார யுத்தியாக பயன்படுத்துவாரா? நிச்சயம் அம்பலப்படுத்தவே செய்வார். இதைவிட ஏஎம்கேவை இழிவுபடுத்த முடியுமா? உண்மையில் தோழர் பிரபா அவர்கள்தான் "சோசலிச ரசியா மீதான அமெரிக்காவின் அவதூறு மற்றும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள்தான் பனிப்போர்" என்பதன் மூலம் முதலாளித்துவ கருத்துகளை ஆதரித்து பேசுகிறார். ஞானம் தலைமையிலான நால்வரணியும் (மஜஇமு) அமைப்பிற்குள் இருந்தபோது பனிப்போர் என்பதற்கு தத்துவ அடிப்படை இருக்க வேண்டும் என்று கூறியது. அதாவது சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான தத்துவ முரண்பாடுதான் பனிப்போர் என்று கூறியது. சோசலிசத்தை காப்பதற்கான நீதிப் போரை பனிப்போர் என்று கூறி முதலாளித்துவ கருத்தை முன்வைத்தது. அப்போது, அக்கருத்தை மனோகரனும் பிரபாவும் எதிர்த்தனர். ஏஎம்கே மறைவிற்கு பிறகு நால்வரணி நிலைபாட்டிற்கு மனோகரன் சென்றார். தற்போது தோழர் பிரபாவும் அவர்களின் திருத்தல்வாத நிலைபாட்டிற்கு சென்றுவிட்டார்.

பனிப்போர் குறித்த தனது கருத்திற்கு நமது அமைப்பு ஆவணங்களில் இருந்து எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை. நாம் தீர்மானங்களில் இருந்தும் ம.ஜ.இ.க பிரசுரங்களில் இருந்தும் ஆதாரத்தைக் காட்டி பதில் அளித்ததும் முதலாளித்துவ கருத்துகளை ஏஎம்கே பிரச்சார யுத்தியாக பயன்படுத்தினார் என அவரையும் அமைப்பு தீர்மானங்களையும் இழிவுபடுத்துகிறார். 

பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் சர்வதேசிய கண்ணோட்டம் கூடாதா? 

பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தில் பனிப்போர் என தனி ஆவர்த்தனம் செய்வதாக பிரபா கூறுகிறார். ஏஎம்கே பிரச்சார யுத்தியாக பயன்படுத்தியதை நாம் கோட்பாட்டு மட்டத்திற்கு உயர்த்திவிட்டதாகவும் கூறுகிறார். 

பாசிச எதிர்ப்பை பற்றி பிரபா அவர்கள் பேசும்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு, தரகுமுதலாளித்துவ நிலவுடமை எதிர்ப்பு என சரியாகவே கூறுகிறார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றால் என்ன பொருள்? பாசிச எதிர்ப்பில் சர்வதேசிய கண்ணோட்டம் தேவை என்பதுதான் பொருள். பிரச்சினை அவருக்கு பனிப்போர் என சொல்லி ரசியாவை, சீனாவை விமர்சிக்க கூடாது என்பதுதான். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான பனிப்போரை எதிர்ப்போம்! சீனா ரசியாவை ஆதரிப்போம்! என முழங்கினால் அகம் மகிழ்வார். அவர் எடுத்துக்காட்டிய 88ம் ஆண்டு அமைப்பு தீர்மானத்தில் கூட வல்லரசுகளின் போர் தயாரிப்புகளை எதிர்ப்போம் என்றுதான் கூறப்பட்டுள்ளதே ஒழிய அமெரிக்காவின் போர் தயாரிப்பை மட்டும் எதிர்ப்போம் என சொல்லவில்லை. 70ம் ஆண்டு திட்டமும் இரு ஏகாதிபத்தியங்களையும்தான் எதிரிகள் என கூறுகிறது. அமெரிக்காவை மட்டும் சொல்லவில்லை. பிரபா 70ம் ஆண்டு திட்டம், அவர் காட்டும் அமைப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசுகிறார்; எழுதுகிறார். ஆனால் நாம் 70ம் ஆண்டு திட்டத்தை கைவிட்டு விட்டதாக புரட்டுகிறார். உண்மையில் அவர்தான் சி.பி.எம் நிலைப்பாட்டில் நின்று கொண்டு 70ம் ஆண்டு திட்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார். காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியத்தை முன்வைப்பதன் மூலம் 70ம் ஆண்டு திட்டத்தை கைவிட்டு ஓடுகிறார். 

பனிப்போர் என்பது பிரச்சார யுத்தியாக ஏஎம்கே வைக்கவில்லை, சர்வதேசிய செயல் தந்திரமாகவே வைத்தார் என்பதை 88 தீர்மானமும் கனுசன்யால் குறித்த நூலில் கொண்டபள்ளி தரப்பிற்கு அவர் தந்த பதிலுமே சாட்சி. கொண்டபள்ளி தரப்பு சோவியத் எதிர்ப்பு முன்னணி எனும் பெயரில் ரசியாவை மட்டும் யுத்த தயாரிப்புகளுக்கு பொறுப்பாக்கி அமெரிக்க ஆதரவு எனும் டெங் திருத்தல்வாத நிலையை முன்வைத்தார். பிரபா யுத்த தயாரிப்புகளுக்கும், சந்தைப் போட்டிக்கும் அமெரிக்காவை மட்டும் பொறுப்பாக்கி அமெரிக்க எதிர்ப்பு முன்னணி எனும் பெயரில் ரசியாவிற்கும் சீனாவிற்கும் ஆதரவு தெரிவிக்கிறார். பிரபாவின் நிலைப்பாடும் டெங் முன்வைத்த மூன்றுலக கோட்பாட்டின் அடைப்படையிலான திருத்தல்வாத நிலைப்பாடேயாகும். ஆனால் நாம் டெங் நிலைப்பாட்டினை பேசுவதாக மடை மாற்றுகிறார். 

பாசிச எதிர்ப்பு செயல் தந்திரத்தில் நாம் அணிசேராக் கொள்கையை மீண்டும் பின்பற்றி ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கலாம் என நாம் பேசவே இல்லை. உக்ரைன் போர் குறித்த சமரன் (டிசம்பர் 2021 - மார்ச் 2022) கட்டுரையில்தான் "கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அணிசேராக் கொள்கையை பின்பற்றி ஒரு கூட்டமைப்பு உருவாக்கலாம்" எனும் பொருளில் (இடைக்காலத் தீர்வாக) நாம் எழுதியுள்ளோம். அதை பாசிச எதிர்ப்பு செயல் தந்திரத்தில் நாம் சொன்னதாக பொய்யாக காட்ட முயல்கிறார். இந்திய அரசை அணிசேராக் கொள்கையை கடைபிடி என சொன்னாலும் அது தவறொன்றுமில்லை. அணிசேராக் கொள்கையை இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகள் கைவிட்டு விட்டதை நாம் முன்பு பலமுறை விமர்சித்துள்ளோம். எனவே எந்த ஏகாதிபத்திய நாட்டுடனும் அணி சேராதே! என இந்திய அரசை கோரினாலும் அதில் தவறொன்றுமில்லை. ஏற்கனவே நாம் அவ்வாறு பல பிரசுரங்களில் எழுதியுள்ளோம். தோழர் பிரபாவிற்கு அது பிரச்சினை இல்லை. அமெரிக்க எதிர்ப்பின் பேரில் சீனா ரசியாவுடன் அணி சேரவேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. ஆகவே எந்த ஏகாதிபத்தியத்துடனும் அணி சேரக்கூடாது என சொன்னால் அவருக்கு கசக்கிறது. உக்ரைன் போர் குறித்த அவரது கருத்து என்ன என்பதை எழுதவில்லை எனினும் அணிசேராக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் அவர் மறைமுகமாக சீனா-ரசியாவின் பக்கம்தான் நிற்கிறார். மோடி கும்பல் உக்ரைன் போரில் ரசியாவை ஆதரிக்கிறது. சி.பி.எம் சி.பி.ஐ ஆதரிக்கின்றன. சந்தைக்கான போட்டி அனைத்தும் அமெரிக்காவின் பனிப்போர் என சொல்வதன் மூலம் இவரும் ஆதரிக்கிறார். அணிசேராக் கொள்கையை கடைபிடி! குவாட்டிலிருந்து வெளியேறு! என்று நாம் முழக்கம் வைப்பதன் பொருள் ஆளும் வர்க்கங்கள் அதை செய்யாது என்பதை அம்பலப்படுத்தவே. செய்யும் என்ற மாயை உருவாக்குவதற்காக அல்ல.   

எந்தவொரு செயல்தந்திரம் வகுக்கும்போதும் சர்வதேசிய செயல்தந்திரம், அதற்கு சேவை செய்யும் தேசிய செயல்தந்திரம் வகுக்க வேண்டும் என லெனினியம் வழிகாட்டுகிறது. அதன் அடிப்படையிலேயே நாம் வைத்துள்ளோம். முதல் அறிக்கையின் மீதான வாதத்தில் சீனாவுடன் சேர்ந்து யுத்தம் வேண்டாம் என பிரச்சாரம் செய்ய வேண்டும் என சொன்னார். ஆனால், அறிக்கையில் எழுதவில்லை. இந்த பிரசுரத்திலும் வெளிப்படையாக அதை ஏன் வைக்கவில்லை? மாற்று எனும் வகையில் தனது சர்வதேசிய செயல்தந்திர கண்ணோட்டம் என எதையும் அறுதியிட்டு முழக்கமாக ஏன் வைக்கவில்லை? ஏன் இந்த சந்தர்ப்பவாதம்? அவ்வாறு வைத்தால் அது சி.பி.எம் நிலைப்பாடு என அம்பலப்பட்டுவிடும் என்பதால் தானே! தனது திரிபுவாத கருத்துகளை நியாயப்படுத்த பெரும்பான்மை ஆவணத்தின் முதல் பகுதி கோட்பாடே இல்லை என ஏஎம்கேவை இழிவுபடுத்துகிறார். உலகப்போர்களில் ஆசான்கள் பின்பற்றிய செயல் தந்திரங்கள், இரண்டாம் உலகப் போருக்கு அதற்கு பிந்தய சர்வதேச சூழலை ஆய்வு செய்து அதில் இருந்து ஏஎம்கே முன்வைத்த (பக்கம் 45,46 இல் உள்ள மூன்று அம்சங்கள்) சர்வதேசிய அரசியல் வழிக்கான கோட்பாட்டு வழிகாட்டுதல் ஆகும். சீனாவை ஆதரிக்க வேண்டும் என பேசுகிறார். அதன்படி தேசிய செயல்தந்திரம் பேசுகிறாரா எனில் இல்லை. அவரது சர்வதேசியத்தின்படி சீனாவுடன் ஊகவர்த்தகம் செய்யும் அதானியை ஆதரிக்க வேண்டும். சீனாவின் RCEPஇல் இணையலாம் என்று சொன்ன டாட்டாவை ஆதரிக்க வேண்டும். இதுதான் இவரின் நிலைபாட்டிலுள்ள சுய முரண். ஆனால் முரண்பட்ட செயல் தந்திரம் என நம்மை தாக்குகிறார். சர்வதேசிய கண்ணோட்டத்தில் பாவச அணி அமெரிக்க எதிர்ப்பு பேசி ரசியா - சீனாவை ஆதரிக்கிறது. ஆனால் அவர்களின் தேசிய செயல் தந்திரம் அமெரிக்காவை ஆதரித்து சீனாவை ரசியாவை கண்டித்துவரும் ராகுலை ஆதரிக்கிறது. இது ஒரு கேலிக்கூத்தான செயல் தந்திரம். தேசிய ஜனநாயக முன்னணி அரசு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டை கொண்டுள்ள தேசிய முதலாளிகளின் இடைக்கால அரசை குறிக்கிறது. காங்கிரஸ் -திமுக போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய எடுபிடி தரகு முதலாளித்துவ கட்சிகளை கொண்டு தேசிய ஜனநாயக அரசு அமைப்பதாக கூறுவது மற்றுமொரு கேலிக்கூத்தான செயல்தந்திரமாகும். இந்த முரண்பட்ட குழப்பமான கண்ணோட்டம் பிரபாவிடமும் உள்ளது. 

அமைதியான காலம், யுத்த காலம் இரண்டிலும் ஒரே செயல் தந்திரமா? என கேலி செய்கிறார். நம்மை கேலி செய்வதாக நினைத்து பெரும்பான்மை ஆவணத்தை கேலி செய்கிறார்.லெனின் சொன்னவாறு ஏகாதிபத்தியங்களின் வரலாற்றில் அமைதியான காலம் என்பதும் யுத்த தயாரிப்பு காலமே. ஆகவேதான் அமைதியான காலங்களில் ஏகாதிபத்திய வல்லரசுகளின் யுத்த தயாரிப்புகளை எதிர்ப்போம் என ஏஎம்கே கூறுகிறார். யுத்தம் மூளும் போது வெளிநாட்டு (உலக) யுத்தத்தை எதிர்ப்போம்; அதை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம் என கூறுகிறார். ஏகாதிபத்தியங்களின் யுத்த தயாரிப்பு, யுத்தம் இரண்டையும் எதிர்ப்பது எனும் அரசியல் கோட்பாட்டு அம்சத்தில் இரண்டும் ஒன்றுதான். எனினும் எங்கு வேறுபடுகிறது? அலை இறக்கமா? அலை ஏற்றமா? அதாவது தற்காப்பு செயல் தந்திரமா? தாக்குதல் செயல் தந்திரமா? அதாவது கோட்டையை முற்றுகையிட தயாரிப்பதா? கோட்டையை தகர்ப்பதா? எனும் அம்சங்களில் வேறுபடுகிறது. அம்முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதா? பிரச்சாரம் செய்வதா? என்பது அலை ஏற்றம், அலை இறக்கம் மற்றும் கட்சியின் பலம் பலவீனத்தைப் பொறுத்ததாகும். அதுவே உள்நாட்டு யுத்தம் என்பது அரசியல் யுத்தமா? இராணுவ யுத்தமா? என்பதை தீர்மானிக்கிறது. லெனின் முதல் உலகப்போர் வரும்வரை "உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். உலகப்போர் வந்தபின்பு அதை நடைமுறைப் படுத்தினார். 

இன்று பனிப்போர் உக்ரைனில் உக்கிரமாக நடக்கிறது. அதில் ரசியாவை மோடி ஆட்சி ஆதரிக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும்? புரட்சிகர சூழல் இல்லை; அதாவது அலை இறக்க சூழல் நிலவுகிறது. கட்சியும் பலவீனமாக உள்ளது. ஆகவே இந்த முழக்கத்தை பிரச்சாரம் செய்வது எனும் பொருளில் பேசுகிறோம்.மற்றபடி ஏகாதிபத்தியங்களின் யுத்த தயாரிப்பை எதிர்ப்பதும், யுத்தங்களை எதிர்ப்பதும் அரசியல் கோட்பாட்டு அம்சங்களில் ஒன்றுதான். செயல்தந்திர ரீதியாக அதாவது அலை ஏற்றம், இறக்கம், கட்சி பலம் பலவீனம் எனும் அமசங்களில் மட்டும் வேறுபடுகிறது. அவ்வளவே. 

முதல் பனிப்போரில் உள்நாட்டுப் போர் முழக்கத்தை பிரச்சாரம் செய்வது பற்றியே 88 தீர்மானம் பேசுகிறது. நாமும் இன்று அதே பொருளில்தான் பேசுகிறோம். யுத்தம் என்பது அரசியல், இராணுவ யுத்தம் என இரு கட்டங்களை கொண்டது. நாம் இந்த கட்டத்தில் அரசியல் யுத்தம் (வர்க்கப் போராட்டம்) குறித்தே பேசுகிறோம். இரானுவ யுத்தம் குறித்து அல்ல. இராணுவ யுத்தமும் ஆயுத வடிவிலான வர்க்கப் போராட்டம்தான். கட்சி பலம் பெற்று புரட்சிகர சூழல் வரும்போது அது குறித்து பேசுவோம். அறிக்கையில் முன்பு உள்நாட்டுப் போர் என்பது இடது தீவிரவாதம் என்றார். ஆனால் அவரே தற்போது "மக்களின் ஆயுத போராட்டத்தை ஒருங்கிணைப்பதுதான் புரட்சிப் போரின் இன்றைய காலகட்டத்தின் அடிப்படை போராட்ட வடிவம் ஆகும்" என்கிறார். (புதிய பிரசுரம் பக்கம் 15). தனது வலது விலகலை மூடி மறைக்க ஆயுதப் போராட்டம் என இடது வேடம் போடுகிறார். இது இடது தீவிரவாதம் இல்லையா தோழர் பிரபா அவர்களே? 

ஏஎம்கே உருவாக்கிய குழுதான் அவரது மறைவுக்குப் பிறகும் செயல்பட்டு வரும் போது குட்டி முதலாளித்துவ சக்திகள் கைப்பற்றி விட்டதாக அவர் கூறுவது பொய்யான அவதூறாகும். மூன்று கோஷ்டிகளும் 70ம் ஆண்டு திட்டத்தை கைவிட்டு விட்டதாக கூறிவிட்டு முழுக்க நம்மீதுதான் தாக்குதல் நடத்துகிறார். ஏனெனில் பனிப்போர் குறித்த கருத்தில் இவரது நிலைப்பாடும் மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி நிலைப்பாடும், பாவச அணி நிலைப்பாடும் ஒன்றே. இருவழிப் போராட்டத்தின்போது மஜஇமு அணி சோசலிச ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பனிப்போர்; சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான தத்துவப் போரே பனிப்போர்; அமெரிக்கா -சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரே பனிப்போர் என்று கூறியது. பாவச அணியும் பனிப்போர் என்பதே இல்லை என்றுக் கூறி அமெரிக்கா உலக மேலாதிக்கப் போரை எதிர்த்து ரஷ்யா-சீனாவுடன் அணி சேர வேண்டும் எனவும் கூறுகிறது. இரு அணிகளின் நிலைப்பாட்டைதான் தற்போது பிரபா அவர்களும் முன்வைக்கிறார். பாவச அணிதான் தேர்தல் அரசியலில் சீரழிந்துவிட்டது. நம்மையும் சேர்த்து சொல்வது அவதூறேயாகும். நாம் தேர்தலை புறக்கணித்து வருகிறோம் என அவரும் அறிவார்.  

ஆகவே... தோழர் பிரபா லெனினிய வழியில் செயல்தந்திரம் வகுத்த ஏஎம்கே வழியை விட்டு விலகி காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியம் எனும் அரசியல் துறை (திட்ட துறை) கலைப்புவாதத்தையும், இரு வழிப்போராட்டத்தை மறுத்து அமைப்பை கலைக்க அறைகூவல் விடுப்பது; அமைப்பு இரகசியங்களை காட்டிக்கொடுப்பது என அமைப்பு துறையில் கலைப்பு வாதத்தையும் முன்வைக்கிறார் என எமது அமைப்பு தீர்மானமாக அறிவிக்கிறது. 

எனவே அரசியல் முன்னணிகள் இதுபோன்ற திருத்தல்வாத-கலைப்புவாத நிலைபாடுகளை நிராகரித்து மார்க்சிய-லெனினிய நிலைபாட்டை ஆதரிக்குமாறு கோருகிறோம்.

- சமரன் (நவம்பர் 2023)