மோடியும், மு.க.ஸ்டாலினும் வேறு வேறல்ல!

அறம் இணைய இதழ்

மோடியும், மு.க.ஸ்டாலினும் வேறு வேறல்ல!

அப்பப்பா! எத்தனை ஒற்றுமைகள்! ஊடகங்களை வசப்படுத்துவதில்! பொய் பிம்பங்களை கட்டமைப்பதில்! அதிரடியாக மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்துவதில்! நிருபர்களை பார்க்காமல் ஓடி ஒளிவதில்! சொல் ஒன்றும் செயலொன்றுமாக நடப்பதில்!  சீன் காட்டுவதில்… வடக்கில் ஒரு மோடி என்றால், தெற்கில் ஒரு ஸ்டாலின்!

நாட்டில் என்ன நடந்தாலும் சரி, அது தனக்கு சம்பந்தமில்லாதது போல பாவனை காட்டி கடந்து செல்வதை ஒரு ராஜதந்திரமாக ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இதைத் தான் மோடி ஏற்கனவே செய்து கொண்டுள்ளார்.

ஒரு பக்கம் குடும்பத்தினரின் அதீத தலையீடுகள், பொருளாதார அனுகூலங்கள் ஆட்சியில் அரங்கேறிக் கொண்டுள்ளன!

மறுபக்கம் இதை மத்திய ஆட்சியாளர்கள் தட்டிக் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காக அவர்களின் மக்கள் விரோத சட்டதிட்டங்கள் எல்லாவற்றையும் மளமளவென்று நிறைவேற்றித் தந்து கொண்டே, ”நடப்பது திராவிட மாடல் ஆட்சி தான்…” என வீர வசனம் பேசுகிறீர்கள்!

ஆளுநர் ரவி வேறு அடிக்கடி தலைவலி தருகிறார்! அவரது அவமானங்களை எல்லாம் துடைத்துக் கொண்டு, அவரது தேனீர் விருந்தில் ஓடிச் சென்று மகனோடு கலந்து கொள்கிறார்கள்! ஆனால், உங்கள் கூட்டணிக் கட்சிகள் ஆளுனரை எதிர்த்து போராடி உங்கள் போலீசிடம் அடிஉதை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

இதோ கவர்னர், ”திராவிடல் மாடல் என்பது காலாவதியானது! இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது’’ என அடித்துவிடுகிறார். கவர்னரின் இந்த கமெண்ட்டுக்கு திமுகவில் இருந்து பதில் சொல்ல இந்தக் கட்டுரை எழுதும் நேரம் வரை யாரும் முன் வந்ததாகத் தெரியவில்லை!

அதே சமயம் மார்க்சிஸ்ட் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “திராவிட மாடல் செத்துப் போன தத்துவம். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது. பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏன் இப்படி பதில் கொடுக்கும் துணிச்சல் இல்லாமல் போகிறது திமுகவிற்கு?

ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மிதமிஞ்சி நடந்து கொண்டுள்ளது! மணல் கொள்ளைகள், தாதுமணல் கொள்ளைகள், எம்.சாண்ட்டுக்காக மலைகளை விழுங்கும் குவாரிகள் ஆகியவை இந்த ஆட்சியில் அதிகப்பட்டுள்ளன!

ஆட்சியின் அனைத்து துறைகளிலும் முதலமைச்சரின் மருமகன் தலையீடுகள் இருப்பது பட்டி தொட்டியெங்கும் விவாதப் பொருளாகியுள்ளது! போதாக்குறைக்கு மகனை அமைச்சராக்கி சகல துறைகளையும் கண்காணிக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது! இந்த நிலையில் தான் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியாகிறது!

அந்தக் கட்சியில் பலருக்கும் இருக்கக் கூடிய மனக் குமுறலைத் தான் அவர் தனிப்பட்ட உரையாடலில் யாரிடமோ பேசியுள்ளார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இது போன்ற உரையாடல்களை அந்த கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலரே தனிப்பட்ட உரையாடல்களில் நெருக்கமான ஊடக நண்பர்களிடம் பேசிக் கொண்டு தான் உள்ளனர்.

விசயம் மிக முக்கியமானது. பதவிக்கு வந்த இரண்டாண்டுகளில் சுமார் 30,000 கோடிகள் அளவிற்கு முதலமைச்சரின் மருமகன் சபரீசனும், மகன் உதயநிதியும் ஆதாயம் அடைந்துள்ளனர் என்ற கொடூரமான உண்மை பின்னுக்கு தள்ளப்பட்டு, பேசிய பி.டி.ஆர் மீது நடவடிக்கை உண்டா? இல்லையா? என்ற விவாதம் தான் முன்னெடுக்கப்பட்டது!

பல ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், ”இவ்வளவு பேசிய பிடிஆர் மீது ஸ்டாலின் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்! ஏன் பிடிஆரை காப்பாற்றுகிறார் ஸ்டாலின்?” என கேள்வி எழுப்புகிறார்கள்!

உண்மையில் பிடிஆரை ஸ்டாலின் காப்பாற்றவில்லை! தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கே அமைதி காத்தார். பத்து நாட்களாக தமிழமெங்கும் பேசுபடு பொருளான ஒரு விவகாரத்தை பேசத் தயங்கி மென்று முழுங்கிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே நிதி அமைச்சரையும் இது குறித்து விளக்கம் சொல்லாமல் அமைதி காத்திடுங்கள் என அவர் சொல்லி இருக்கலாம். ஆனால், அவரை விளக்கம் சொல்ல நிர்பந்தித்து, தன் மகனையும், மருமகனையும் அவர் வாயால் புகழ வைத்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டார்.

இறுதியாக வாய் திறந்த ஸ்டாலின் ”இந்த மட்டமான அரசியலைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை” என்பது எவ்வளவு கோழைத்தனம்! ‘மட்டமான விஷயங்கள் ஆட்சியில் நடந்து கொண்டிருப்பது பிழையல்ல,  அதை பேசுவது தான் பிழை’ என்கிறார்.

சரி, பேச வேண்டாம் ஸ்டாலின். ஆனால், செயலில் காட்டலாமே! நீங்க சொல்லும் இந்த மட்டமான காரியத்தை செய்த நபரை ஏன் தண்டிக்கவில்லை? ஏன் காவல்துறை நிதி அமைச்சரின் புகழுக்கும், ஆட்சிக்கும் கேடு விளைவிப்பவர்களை தண்டிக்கத் துணியவில்லை. எனில், குற்றம் இழைத்த நெஞ்சம் குறுகுறுக்கிறது என பொருள் கொள்ளலாமா?

கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற ஆட்சி அதிகார பலம் அனைத்தையும் பயன்படுத்துகிறீர்களே யாருக்கு பயந்து? இந்த வழக்கில் அப்பாவி தலித் இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர்களை கைது செய்து அலைகழித்தீரே..!

வேங்கை வயல் விவகாரத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த அந்த ஊர் பெரிய மனிதனை கைது செய்யாமல், வழக்கை திசை திருப்பி பாதிக்கப்பட்ட மக்களையே பலிகடா ஆக்கப் பார்க்கிறீர்களே!

இது என்ன குஜராத்தா? உத்திரபிரதேசமா? நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? அல்லது பாஜகவின் பாஸிச ஆட்சியா?

மத்தியில் மோடி ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குவதாகக் கூறினாலும், மறைமுகமாக அதைத் தான் அமல்படுத்த காய் நகர்த்தி வருகின்றனர்.

அதே போல இங்கே நீங்கள் தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்கும் சட்டத்தை வாபஸ் வாங்கினாலும், அதை முதலாளிகள் அமல்படுத்திக் கொள்ள தொழிலாளர் நல ஆணையத்தின் மூலம் ஊக்கப்படுத்துகிறீர்கள்! இதை பேசாமல், ‘முதலாளிகள் நல ஆணையம்’ என பெயர் மாற்றி விடலாமே?

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி வாகன் ஓட்டிகளிடம் தாறுமாறாக அபராத கட்டணத்தை வசூலித்து அவதிக்கு உள்ளாக்குகிறீர்கள்!

தேசிய கல்விக் கொள்கைகளை ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அமல்படுத்தி வருகிறீர்கள்!

அரசின் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கி வருகிறீர்கள்!

‘லேண்ட் கன்சாலிடேசன் பில்’ என்ற பெயரில் விவசாய நிலங்கள் நீர் நிலைகளை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்க சட்டம் கொண்டு வருகிறீர்கள்! கடைசியாக நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிய அவசர, அதிரடி பாணிகள் பாஜகவின் மோடி அரசையே அப்படியே பிரதிபலிப்பதாக உணரப்பட்டது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும்!

அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து ஒப்பந்தக் கூலிகளாக வேலை வாய்ப்பை மாற்றி வருகிறீர்கள்!

ஆக, எல்லாவற்றிலும் மோடி பாணியையே அச்சரம் பிறழாமல் பின்பற்றி வருகிறீர்கள்! இதையே உதயநிதிக்கும் சொல்லித் தந்து மோடியைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க அனுப்பி வைத்தீர்கள்!

அவரைப் போலவே பதவி ஏற்றது முதல் பத்திரிகையாளர்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிகிறீர்கள்! அதே சமாய்ம் பத்திரிகை முதலாளிகளை சரிகட்டி ஊடகஙகளில் ஆட்சிக்கு ஆதரவு செய்திகளே வெளி வரும்படி செய்கிறீர்கள்!

அவரது ‘மன் கி பாத்’ போலவே, ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் பொதுச் சமூகத்தின் மனதில் மாய பிம்பங்களை கட்டமைக்க நீங்களே தன்னிச்சையாக பேசிக் கொள்கிறீர்கள்!

எல்லா வகைகளிலும் உங்கள் செயல்பாடுகளை மதிப்பிடும் போது, மோடியும், நீங்களும் வேறு,வேறு அல்ல என்ற புரிதலுக்கே வர முடிகிறது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

aramonline.in /13400/modi-stalin-resemblings/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு