"தீண்டாமையை நவீன முறையில் நான் தினசரி எதிர்கொள்கிறேன்" - எம்எல்ஏ சின்னதுரை

பிபிசி தமிழ்

"தீண்டாமையை நவீன முறையில் நான் தினசரி எதிர்கொள்கிறேன்" - எம்எல்ஏ சின்னதுரை

    தீண்டாமை ஒழிந்துவிட்டது என்று அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும், நடைமுறையில் தீண்டாமை நவீன வடிவங்களில் தொடர்கிறது என்று சொல்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்.

    தமிழகத்தில் சமூக மாற்றத்திற்காக பல முன்னெடுப்புகள் நடைபெற்றபோதும், தீண்டாமை ஒழிப்பில் நாம் பயணிக்கவேண்டிய தூரம் அதிகம் என்றும், தான் எம்எல்ஏ ஆகிவிட்டதாலேயே எல்லாம் மாறிவிட்டது என்று சொல்லமுடியாது என்றும் அவர் கூறுகிறார்.

    சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, கந்தர்வக்கோட்டையில் உள்ள புனல்குளம் கிராமத்தில் உள்ள தலித் காலனியில் வசிக்கிறார். 1980களில் இருந்து தீண்டாமை கொடுமைக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சின்னதுரை. அவரது தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில், தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் அவரை வேதனையின் உச்சத்திற்குத் தள்ளியது என்கிறார்.

    ''நான் பிறந்து வளர்ந்தது முதல் தீண்டாமையை பல்வேறு விதங்களில் அனுபவித்திருக்கிறேன். என் தாத்தா வேலை பார்த்தவீட்டில், மாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில்தான் அவர் உட்காரவேண்டும், அங்குதான் அவர் சாப்பிடவேண்டும். நான் அவருடன் சென்ற நேரத்தில் நானும் அங்குதான் சாப்பிடுவேன்.

    மூத்திர நாற்றம் எங்களை வாட்டும். அறுவறுப்பைப் பார்த்தால் வேலை கிடைக்காது. நாங்கள் செருப்பு போட முடியாது, சைக்கிள் ஓட்ட முடியாது, டீ கடையில் எங்களுக்கு தனி டம்ளர் வைத்திருப்பார்கள். இப்படித்தான் நான் வளர்ந்தேன்,'' என்று தனது இளமைக் கால அனுபவத்தைக் கூறினார்.  

    இப்போதும் சின்னதுரை காலனி பகுதியில்தான் வசிக்கிறார். ''நான் ஒரு எம்எல்ஏ. ஆனால், தலித் மக்களுக்கான பகுதியில் உள்ள சுதந்திரம், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் எனக்கு இருக்காது. பெரும்பாலும் என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்வதற்கான சந்தர்ப்பங்கள்கூட அதிகமிருக்காது. ஊர் கோவிலும்கூட சாதி ரீதியாகத் தனியாக உள்ளது. தற்போது, இறையூரில் குடிநீரில் மலத்தைக் கலந்த சம்பவம் எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது.

    இன்னும் எத்தனை காலங்களுக்கு தலித் மக்கள் இதுபோன்ற வன்கொடுமையை அனுபவிக்கவேண்டும்?'' என்று வருத்தத்துடன் பேசினார்.

    இறையூர் பகுதியில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 70 நபர்கள் மீது விசாரணை மட்டும் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் இரட்டைக் குவளை முறை, கோவில்களில் தலித் மக்கள் நுழைவதற்குத் தடை, ஆங்கில புத்தாண்டு நாளன்று தலித் மக்கள் கேக் வெட்டுவது தடுக்கப்பட்டது உள்ளிட்ட பலவிதமான தீண்டாமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாம் இறையூர் கிராமத்திற்குச் சென்றபோது பல குழந்தைகள் மலம் கலந்த தண்ணீரை குடித்ததால் நோய்வாய்ப்பட்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

    ''இறையூர் பகுதியில் மூன்று சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். மூன்று தரப்பினர்களிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. 70 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டோம் என்றும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகக் கருதுகிறோம். ஆனால் குற்றவாளியைக் கைது செய்யும்வரை இந்த விவகாரத்திற்காகத் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம்,'' என்கிறார் சின்னதுரை.  

    தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மற்றும் தனது தொகுதியில் உள்ள கிராமங்களில் தீண்டாமை பல படிநிலைகளில் இருப்பதை வைத்துப் பார்க்கையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி தீண்டாமை ஒழிந்துவிட்டது என்றாலும் நடைமுறையில் தீண்டாமை ஒழியவில்லை எனத் தோன்றுவதாகக் கூறுகிறார் சின்னதுரை.

    ''நான் எம்எல்ஏ ஆகிவிட்டதால் என்னிடம் காட்டப்படும் தீண்டாமை குறைந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. பல நேரங்களில் மனச்சுமையை நான் உணர்ந்திருக்கிறேன். குறைந்தபட்சம் உதட்டளவில் என்னிடம் நேரடியாக ஒரு சிலர் பேசுவதில்லை.

    ஆனால் பொது நிகழ்ச்சிகளில், பத்திரிகையில் பெயர் போடும் போது, என் பெயரை சிறிய எழுத்துகளில் போடுவார்கள், ஒரு சில நிகழ்ச்சிகளில் பெயரைப் போட மாட்டார்கள். பொது இடங்களில் நான் மாற்று சமூகத்தினருக்கு இணையாக அமர்ந்து பேசும் நிலை இருந்தால், அதை ஒரு சிலர் தவிர்த்துவிடுவார்கள்.

    தலித் சமூகத்தைச் சேர்ந்த நபருடன் சரிக்குச் சமமாக அமர்ந்து பேசுவது தங்களுக்கு அவமானம் எனக் கருதுகிறார்கள். நேரடியாக தீண்டாமையைக் காட்டுவதில்லை என்பதால் அது முழுமையாக மறைந்துவிட்டது என்று சொல்லமுடியாது,'' என்கிறார் சின்னதுரை.

    பல ஊர்களில் தலித் மக்களுக்குத் தனி சுடுகாடு, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தனி சுடுகாடு உள்ளது என்று கூறிய சின்னதுரை, சமத்துவ சுடுகாடு இருக்கும் இடங்களிலும் தீண்டாமை தொடர்வதாகக் என்கிறார்.

    "சுடுகாட்டின் எரிமேடையிலும் தீண்டாமை"

    ''சமத்துவ சுடுகாடு இருக்கும் இடங்களில்கூட, எரிமேடையில் தீண்டாமை காட்டப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் உடலை எரித்துவிட்டு, தலித் சாதியைச் சேர்ந்தவரின் உடலை எரிப்பார்கள்.

    ஆனால், எரிமேடையில், தலித் ஒருவரின் உடல் எரிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் பல புனிதப்படுத்தும் சடங்குகளைச் செய்துவிட்டு, பிறகுதான் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் உடலை எரிக்கிறார்கள்.

    இறந்த பிறகும் சாதியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைத்தான் இந்த நிலை நமக்கு உணர்த்துகிறது,''என்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில், சுதந்திர தினத்தன்று (2022ல்) தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடி ஏற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார். அதற்கான முன்னெடுப்புகளில் பங்கு பெற்றவர் சின்னதுரை.

    அவர், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டில் தலித் தலைவர்கள் காவல்துறையின் மேற்பார்வையில்தான் கொடி ஏற்றும் சூழல் நிலவுகிறது என்பது சாதிப் பாகுபாடு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்குச் சான்று என்கிறார்.

    ''2021இல் கந்தர்வகோட்டை கரம்பக்குடி கிராமத்தில் தலித் தலைவர்கள் கொடி ஏற்ற முற்பட்டபோது, மாற்று சமூகத்தினர், பயங்கர ஆயுதங்களுடன் வந்து தலித் தலைவர்களைத் தாக்க முற்பட்டனர். காவல்துறை மற்றும் ஊடகங்கள் இருந்தபோதும் அவர்கள் தாக்க முற்பட்டார்கள்.

    அதனால், 2022இல் வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காகவும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகியுள்ள தலித் தலைவர்கள் கொடி ஏற்றவேண்டும் எனவும் எங்கள் கட்சி சார்பாகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாகவும் அரசிடம் வலியுறுத்தினோம். அதனால்தான் தமிழ்நாட்டில் அனைத்து தலித் தலைவர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தில் காவல்துறையின் பாதுகாப்போடு தலித் தலைவர்கள் கொடி ஏற்றினார்கள் என்பது நம் வரலாற்றில் பதிவாகியுள்ளது,'' என கனத்த மனதுடன் சொல்கிறார் சின்னதுரை.

    ''எங்கள் ஊரில், இந்த நவீனகாலத்திலும்கூட, தலித் மக்கள் பொங்கல் நேரத்தில், அவர்கள் வேலை பார்க்கும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆட்டு கறி அல்லது கோழி கறி கொடுத்து, நாங்கள் உங்கள் குடி என்று சொல்லவேண்டும்.

    அதாவது உங்களுக்கு அடிமை என்று பொருள். அப்போதுதான் தலித் மக்களுக்கு  வேலை கொடுப்பார்கள். கிராமங்களில் ஆதிக்க சமூகத்திடம் வேலையை எதிர்பார்த்து நிற்கும் தலித் குடும்பங்களின் நிலை இதுதான்,'' என்கிறார்.

    புதுக்கோட்டையில் பொங்கல் காலத்தில் தலித் மக்கள் ஆதிக்க சமூகத்திடம் தாங்கள் அவர்களின் அடிமைகள் என்று சொல்லும் சடங்கு தொடர்வதாகச் சொல்கிறார் சின்னதுரை. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே அவருடைய அடுத்த இலக்கு.

    எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்

      www.bbc.com /tamil/articles/cxe055pzee4o

      Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

      What's Your Reaction?

      like

      dislike

      love

      funny

      angry

      sad

      wow