உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் VBSA மசோதா

செந்தளம் செய்திப்பிரிவு

உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் VBSA  மசோதா

இந்தியாவின் மத்திய ஒன்றிய அரசு உயர்கல்வித் துறையை மத்திய அமைச்சகத்தின் கீழ் மையப்படுத்தி பாசிசமயமாக்க முயற்சிக்கும் மசோதா தான் VBSA-2025.   பல்வேறு மொழிகளை கொண்ட மாநிலங்களின் கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில், 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' (VBSA-2025) எனும்  உயர்கல்வி ஒழுங்குமுறை மாற்ற மசோதா, மத்திய கல்வி அமைச்சகத்தால் முன்வைக்கப்பட்டது. இது டிசம்பர் 12, 2025 அன்று அமைச்சரவை ஒப்புதல் பெற்று, டிசம்பர் 15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது; டிசம்பர் 16 அன்று கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இது பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE) ஆகிய தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்து, மத்திய அமைச்சகத்தின் கீழ் ஒரே ஒழுங்குமுறை அமைப்பாக ஒன்றிணைக்கும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கையாகும். 

'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் பின்னணி:

'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா' (Viksit Bharat Shiksha Adhikshan Bill) என்று இந்தியில் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய உயர்கல்வி ஒழுங்குமுறை கட்டமைப்பு, தற்போதைய பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE) மற்றும் கட்டிடக்கலைக் கல்வி உள்ளிட்ட  அமைப்புகளுக்குப் பதிலாக  VBSA என்ற உச்சநிலை ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும். அதன் கீழ் ஒழுங்குமுறை கவுன்சில் (Regulatory Council), அங்கீகாரக் கவுன்சில் (Accreditation Council), தரநிலைக் கவுன்சில் (Standards Council) ஆகிய மூன்று கவுன்சில்கள் செயல்படும். இருப்பினும், கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலோ அல்லது நிதியுதவி வழங்குவதிலோ இந்த அமைப்பிற்கு எந்தப் பங்கும் இருக்காது; அந்தப் பொறுப்பு தொடர்ந்து மத்திய நிர்வாக அமைச்சகத்தின் வசமே இருக்கும். அதேபோல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் இதற்கு இருக்காது எனக் கூறப்படுகிறது.  அதாவது “ஒழுங்குமுறை + நிதி” இரண்டையும் ஒரே தன்னாட்சி அமைப்பான UGC மற்றும் AICTE  வைத்திருக்கும் தற்போதைய முறையை மாற்றி, புதிய VBSA-வுக்கு அந்த நிதி ஒதுக்கீடு/ வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் மானியங்கள் வழங்கப்படும் என மசோதாவின் நிதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால்  நிதி  வழங்கும்  மற்றும் மாநிலங்களுக்கான பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரம்   இரண்டையும்   மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் அபாயம் உள்ளது. மேலும்,  PRS -India  (Parliament and State Legislative Research) ஆய்வின்படி, கல்வி Concurrent List-ல் இருப்பதால் மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது;  கல்வி என்பது மத்திய அரசுக்கும்   மாநில அரசுக்கும் சமமான பங்கு உள்ளது.  அதே நேரத்தில் உயர்கல்வியின் தரநிலைகளை ஒருங்கிணைத்தல் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. VBSA போன்ற மத்திய ஒழுங்குமுறை அமைப்பு உருவானால், உயர்கல்வியின் தரநிலை, அங்கீகாரம், ஒழுங்குமுறை போன்றவற்றில் மத்திய அரசின் பங்கு அதிகரிக்கலாம் அல்லது  மையப்படுத்தப்படும்.  எனவே   மாநிலங்களின் பங்கு, மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி, துணைவேந்தர் நியமனம், பாடத்திட்டம் வடிவமைத்தல், கல்லூரி இணைப்பு, தர நிர்ணயம் மற்றும் அங்கீகார நடைமுறைகள் போன்ற அனைத்து அதிகாரங்களும் நேரடியாக மத்திய அரசிடம் பறிபோகும் அட்சம் உள்ளது. 

நிதிப் பகிர்வு வரலாறும் மாநில உரிமைகள் பறிப்பும்:

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு அமைவதற்கு முன் (ஐ.மு.கூ ஆட்சிக் காலத்தில்), மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வந்தது. UGC மூலமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி நிதியை உயர்த்துவதற்குப் பதிலாக, மன்மோகன் - சோனியா காந்தி (காங்கிரஸ்) அரசு ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) என்ற கல்வியை மையப்படுத்தும் திட்டத்தை அக்டோபர் 2013-இல் தொடங்கியது. காங்கிரஸ் ஆட்சியிலும் கல்வியை அதிகார குவிப்பையும் இந்தி தினிப்பையும் கார்பொரேட் நலம் சார்த்தே செய்துவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 RUSA திட்டத்தின் கீழ் நிதிப் பகிர்வு பின்வருமாறு அமைந்தது:

பொதுப் பிரிவு மாநிலப் பல்கலைக்கழகங்கள்: தொடக்கத்தில் 65% மாநில அரசும், 35% மத்திய அரசும் நிதி வழங்கி வந்தன. பின்னர் 2013–14 காலத்தில் இது 60:40 என்ற விகிதத்தில் நிலைப்படுத்தப்பட்டது.

சிறப்புப் பிரிவு மாநிலங்கள் (வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட்): 90% மத்திய அரசும், 10% மாநில அரசும் நிதிப் பங்களிப்பு செய்தன.

யூனியன் பிரதேசங்கள் (UTs): 100% நிதியையும் மத்திய அரசே வழங்கி வந்தது.

UGC நேரடி வளர்ச்சி மானியம் (10% முதல் 15% மட்டுமே):

RUSA திட்டத்திற்கு முன்பாக, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தனது சட்டப்பிரிவு 12(B)-இன் கீழ் தகுதிபெற்ற மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாகத் திட்ட மானியங்களை வழங்கியது. எனினும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் மொத்த பராமரிப்பு மற்றும் வளர்ச்சிச் செலவில் UGC-ன் பங்களிப்பு 10% முதல் 15% வரை மட்டுமே இருந்தது.  மாநிலப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் ஊதியம், நிர்வாகச் செலவுகள் மற்றும் அன்றாடப் பராமரிப்புச் செலவுகளில் 85% முதல் 90% வரையிலான பெரும் தொகையை மாநில அரசுகளே ஏற்று நடத்தி வந்தன. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, ஏகாதிபத்திய  கொள்கைக்கு அடிபணிந்து, UGC-ன் பங்களிப்பாக வழங்கி வந்த அந்த சொற்ப 10% - 15% தொகையையும் 2019 இருந்து முழுமையாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கவில்லை. இதனால் பெருபான்மையான பல்கலைக்கழகங்கள் நிதிப்பற்றாக்குறையால் தவிக்கின்றன. ஒருபுறம் மாநில அரசுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது (சென்னை, அண்ணாமலை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்கள்). மறுபுறம் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவு, எட்டா கனியாகவே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (CSIR) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முழு நிதியையும் வழங்கி வருகின்றன. ஆனால், அவற்றை மத்திய அரசின் ஒற்றை அதிகாரத்திற்குள் கொண்டுவர மோடி - அமித்ஷா அரசு படிப்படியாகப் புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP - 2020), UGC-2025, UGC-MMTTC-2023 ஆகியவற்றைச் செயல்படுத்தி வருகிறது. மற்றும் தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதலில் உள்ள VASA-2025 மசோதாவை செயல்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.

  முதலில்  UGC தன்னாட்சி அமைப்பின் ஒருபகுதியாக உள்ள உயர்கல்வி ஆசிரியர்களின் “கற்பித்தல் திறன்” மற்றும் “தொழில்முறை மேம்பாட்டை” மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வந்த பழைய UGC-HRDC/ Academic Staff College மையங்களை,  5 செப்டம்பர் 2023 அன்று Malaviya Mission Teacher Training Centres (MMTTCs) என்று பெயர் மாற்றி தேசிய கல்விக் கொள்கை  2020-ன்  (NEP 2020)  நோக்கங்களின் கீழ் மறுசீரமைக்கப்பட்டன.

  அடுத்ததாக, இந்த புதிய ஒழுங்குமுறை அமைப்பு, கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், அங்கீகாரம் அளித்தல் மற்றும் தொழில்முறை தரநிலைகளை நிர்ணயித்தல் ஆகிய மூன்று முக்கிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் என்று, ஜூலை 2021-இல் பொறுப்பேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், இந்த உயர்கல்வி ஆணையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தன்னாட்சி அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகளைத் தனக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் நோக்கில், ஆர்.எஸ்.எஸ் (RSS) பின்னணி கொண்ட பேராசிரியர்  ஜெகதேஷ் குமார் என்பவரை யுஜிசி-யின் தலைவராக  நியமித்து,   ஜனவரி 6, 2025 அன்று 'UGC-2025' என்று விதிமுறையை மாற்றி புதிய அறிக்கையையும் வெளியிட்டது. இந்த புதிய விதிகள் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பதுடன், மாணவர்களின் நலன்களையும் முழுமையாகப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, இளங்கலைப் பட்டப்படிப்பு (Undergraduate) போன்ற அடிப்படைக் கல்வியையே சீர்குலைக்கும் விதமாகப் 'பலதுறைக் கலவைக் கல்வி' (Interdisciplinary Education), தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி என்று பல மாற்றங்களைப்  புகுத்தப்பட்டுள்ளன.

இக்'கலவைக் கல்வி' திட்டத்தின்படி, மாணவர்கள் எந்தவொரு துறையிலிருந்தும் மற்றொரு துறைக்கு எளிதாக மாற முடியும். அதாவது, பிளஸ் 2 வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான அடிப்படை அறிவு இல்லையென்றாலும், மாணவர்கள் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் நிபந்தனையின்றித் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; மேலும், ஒரே படிப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் சேரவும், அதிலிருந்து விலகவும் முடியும் (Multiple Entry and Exit options).

உண்மையில் இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், கல்வியை ஒரு வணிகப் பொருளாக மாற்றி, அதை முழுமையாகக் கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைப்பதே ஆகும். அதேபோல, மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் UGC விதிகள் திருத்தப்பட்டுள்ளன. மேலும், துணைவேந்தர் பதவிக்குக் கல்வியாளர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை என்றும்; அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அல்லது காவி மடாதிபதிகள் என யார் வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம் என்றும் இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கின்றன.  

உயர்கல்வித் துறையை வலுப்படுத்த ஒழுங்குமுறை அமைப்பில் முழுமையான சீர்திருத்தம் தேவை என்பதை வலியுறுத்திய 'தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020'-ன் நோக்கங்களுக்கு இந்த புதிய VBSA -2025 மசோதா இணக்கமாக உள்ளது. ஒழுங்குபடுத்துதல், அங்கீகாரம் அளித்தல், நிதியுதவி அளித்தல் மற்றும் கல்வித் தரநிலைகளை நிர்ணயித்தல் ஆகிய பணிகள் தனித்தனியாக, சுதந்திரமான மற்றும் அதிகாரம் பெற்ற ஒற்றை மத்திய அரசின் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சரவையில் டிசம்பர் 2025-ல் பரிந்துரைத்துள்ளது.  இந்த  மசோதா பாராளமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டால், உயர் கல்வியானது முழுமையாக மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும். இது மாநிலங்களுக்கான கல்வி உரிமையை பறிக்கும் செய்யலாகும். 

தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தப் பல்கலைக்கழகங்களுக்கு இனி AICTE ஒப்புதல் தேவையில்லை:

மேலாண்மை, கணினிப் பயன்பாடுகள் (Computer Applications), பயணம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் கீழ், திறந்த தொலைநிலைக் கற்றல் (ODL) அல்லது இணையவழி (Online) முறையில் இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளை வழங்குவதற்கு, மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இனி யுஜிசி-க்கு (UGC) விண்ணப்பிக்கும்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் (AICTE) முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக AICTE அளித்த கடிதத்தைக் கருத்தில் கொண்டு, ஆணையம் தனது சமீபத்திய கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகக் கருதப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் (Deemed Universities) ODL அல்லது ஆன்லைன் முறையில் இத்தகைய படிப்புகளை வழங்குவதற்கு, UGC-இல் விண்ணப்பிப்பதற்கு முன்பு AICTE-இன் முன் ஒப்புதல்/பரிந்துரை/NOC சான்றிதழைத் தொடர்ந்து பெற வேண்டும். குறிப்பாக உயர்கல்வியைத் தனியார் கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கத்துடன் தான் இந்த VBSA-2025 மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்கல்வி ஒழுங்குமுறை குழுவின் உறுப்பினர்களாகப் அமைச்சர்கள், தொழிலதிபர்கள்/கார்ப்பரேட்டுகள் மற்றும் கல்வியாளர்கள் இடம்பெறுவார்கள் என்பது கல்வியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் உயர்கல்வியை ஒப்படைக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது.

VBSA–2025 மசோதாவும் உயர்கல்வியை தனியார், கார்ப்பரேட் மயமாக்கலும்

VBSA–2025 மசோதா உயர்கல்வியை நேரடியாக “தனியார்மயமாக்கும்”  சில அம்சங்கள், குறிப்பாக நிதி மற்றும் மாநிலங்களுக்கான அதிகாரம் என்று மத்திய அரசு மையப்படுத்துவது உயர்கல்வியில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன என்பது தெளிவாகிறது. குறிப்பாக, UGC-ன் மானியம் வழங்கும் அதிகாரத்தை புதிய ஒழுங்குமுறை அமைப்பிலிருந்து பிரிப்பது, பல்கலைக்கழகங்களின் நிதித் தேவைகளை அரசின் நேரடி நிதியுதவிக்கு அப்பால் மாற்று ஆதாரங்களைத் தேடச் செய்யக்கூடும்; இதனால் தனியார் முதலீடு, தொழில்துறை நிதி மற்றும் கார்ப்பரேட் கூட்டாண்மைகளின் மீது நிறுவனங்கள் அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலை உருவாகலாம். அதேபோல், நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி, அங்கீகாரம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான அணுகுமுறை வழங்கப்படுவதால், கட்டண உயர்வு, சந்தைத் தேவைக்கேற்ப பாடத்திட்ட மாற்றம், ஏன் அந்நிய கல்விமுறையை புகுத்துதல், கார்பொரேட் -தொழில் நிறுவனங்களுடன் நெருக்கமான இணைப்பு போன்றவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, கல்வி ஒரு சமூக உரிமை என்ற பார்வையிலிருந்து விலகி, முதலீடு–லாபம்–சந்தைத் தேவையை மையமாகக் கொண்ட கல்விச்சேவை வணிகமாக மாறும் அபாயம். அரசு கல்வி, சுகாதாரம் என்ற அடிப்படையான சேவையை  கைவிட்டு, கார்பொரேட் நலம் சார்ந்த திட்டங்களை வழக்கும் ஒரு பாசிச நிலைக்கு இட்டு செல்லும் என்ற விமர்சகர்கள்  கல்வியாளர்கள் மத்தியில் நாடுமுழுவதிலும் ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, கல்வியைக் கார்பொரேட் மயமாக்கும் மோடி அரசின் பாசிசப்போக்கிற்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்யவும் நாம் அணிதிரள வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, உயர்கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் எதேச்சதிகார VBSA - 2025 மசோதாவை மத்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்! வெற்றி பெறுவோம்!

(Ref.: பிரைடின் டைம் செய்திப் பிரிவு, 14 டிசம்பர் 2025) & தி இந்து, 28 ஏப்ரல் 2024)

- செந்தளம்  செய்திப்பிரிவு