தொற்றா நோய்களின் குவிமையமாக இந்தியா

வெண்பா (தமிழில்)

தொற்றா நோய்களின் குவிமையமாக இந்தியா

இதய நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற தொற்றுநோய் அல்லாத நோய்கள் (NCDs) இந்தியாவில் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன என்கிறார் யுனிசெஃப் - இந்திய சுகாதார தற்காலிகத் தலைவர் டாக்டர் விவேக் சிங். TNIE-க்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் ஏற்படும் அனைத்து இறப்புகளில் 63% தொற்றுநோய் அல்லாத நோய்களால் ஏற்படுகின்றன என்று கூறினார். இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

இந்தியாவின் தொற்றுநோய் அல்லாத நோய்களின் சுமை எவ்வளவு பெரியது?

இந்தியாவில் நிகழும் மொத்த இறப்புகளில் சுமார் 63% இந்த வகை நோய்களால் ஏற்படுகின்றன, ஆனால் இந்த எண்ணிக்கை மட்டுமே உண்மையான அபாயத்தை முழுமையாகக் காட்டவில்லை. உண்மையிலேயே முக்கியமானது என்னவென்றால், இந்த இறப்புகளில் 30 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் இறப்புகளின் பங்குதான் - இதைத்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) அகால மரணம் என்று வரையறுக்கிறது.

இந்திய மக்கள் தங்களது குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவைப்படும் உற்பத்தித் திறனுடைய இந்த வயதுகளில்தான், அத்தகைய நோய்களினால் இறப்புக்கு ஆட்படுகின்றனர். எனவே, தொற்றுநோய் அல்லாத நோய்களால் ஏற்படும் அகால மரணங்களைக் குறைப்பதில்தான் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலகளவில், நிலையான வளர்ச்சி இலக்கை (SDG) 3.4 க்கு கீழ் அதாவது 2030-க்குள் அத்தகைய நோய்களால் ஏற்படும் அகால மரணங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க நாடுகள் உறுதியளித்துள்ளன.

இந்த இலக்கை அடைய இந்தியா இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது, இந்தியாவில் தொற்றுநோய் அல்லாத நோய்களால் ஏற்படும் மரணங்களில் சுமார் 25-26% 30-70 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகழ்கின்றன. பிரேசிலில் இந்த எண்ணிக்கை சுமார் 23% ஆகவும், நோர்டிக் நாடுகள் அல்லது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது 10-15% ஆகவும் தான் உள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியா தன்னை உலகளாவிய சராசரிகளுடன் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சவால் என்பது தொற்றுநோய் அல்லாத நோய்களால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்போது இறக்கிறார்கள் என்பதும்தான். இளம் வயதில் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதே உண்மையான பொது சுகாதார முன்னுரிமையாகும், ஏனெனில் எந்தவொரு குடும்பமும், சமூகமும், பொருளாதாரமும் தங்கள் உற்பத்தித் திறன்மிக்க மக்களை இழக்க முடியாது.

நிலைமை எவ்வளவு தீவிரமானது?

இந்தியாவில் இளைஞர்களிடையே தொற்றுநோய் அல்லாத நோய்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. இந்தப்போக்கு, வழக்கமான தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக்குகிறது. தொற்றுநோய் அல்லாத நோய்களில், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நீரிழிவு நோய் இளம் வயதிலேயே தோன்றுகிறது; இந்தியாவில் சுமார் 8-10 லட்சம் குழந்தைகள் டைப் 1 நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்தாலும், இந்த வளர்ச்சிப் போக்கைத் தெளிவாகக் காண முடிகிறது, நாம் புறக்கணிக்க முடியாத ஒரு எச்சரிக்கை மணியாகும். உண்மையான பிரச்சினை என்னவென்றால், கடந்த பத்தாண்டுகளில் தொற்றுநோய் அல்லாத நோய்களின் சுமை எவ்வளவு வேகமாக அதிகரித்துள்ளது என்பதுதான். நோய்த்தடுப்பு என்பது வாழ்க்கைச் சுழற்சியின் ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டும். சுகாதார மேம்பாடு வயதான பிறகு தொடங்குவதாக இருக்கக்கூடாது. இது கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிலிருந்தே தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.

இந்தியா தற்போது மும்முனை சவாலை எதிர்கொள்கிறது: ஊட்டச்சத்துக் குறைபாடு, பல்வேறு நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகள், அதிகரித்து வரும் அதிக எடை மற்றும் உடல் பருமன். கவலையளிக்கும் விதமாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டை விட உடல் பருமன் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சுகாதார மேம்பாடு, தடுப்பு, சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்தியா தீர்க்கமாகச் செயல்படவில்லை என்றால், இந்த நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும். முன்னோக்கிய பாதை என்பது ஆரம்பத்திலேயே கண்டறிதல், வலுவான சுகாதாரக் கல்வி, ஆரோக்கியமான சூழல்களை உருவாக்குவதில் உள்ளது. இதன் மூலம், இந்தியாவின் இளைஞர்கள் தொற்றுநோய் அல்லாத நோய்களின்றி பாதுகாக்கப்பட முடியும்.

இந்தியாவில் தொற்றுநோய் அல்லாத நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு தேசியத் திட்டம் (NP-NCD) உள்ளது. அதன் வரம்பை குழந்தைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டுமா?

இன்றைய கவனம், குழந்தைகளை மையமாகக் கொண்ட சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நோக்கி நகர்கிறது. அரசு, யுனிசெஃப் மற்றும் பிற நிபுணர்களின் ஆதரவுடன், பள்ளிகளில் ஆரம்பநிலை பரிசோதனைகளைத் தொடங்குவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

இதன் அவசரம் தெளிவாகத் தெரிகிறது. மாறிவரும் வாழ்க்கை முறைகள், மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரித்து வரும் நுகர்வு ஆகியவை சுகாதார அபாயங்களை அதிகரிக்கின்றன. எனவே, இந்தியாவின் தொற்றுநோய் அல்லாத நோய் தடுப்பு உத்தியின் அடுத்த கட்டம் சிகிச்சை மட்டுமல்ல, சுகாதாரக் கல்வி மற்றும் பொறுப்பான தகவல் தொடர்பு ஆகும். இளம் வயதிலிருந்தே பள்ளி, குடும்பம் மற்றும் சமூகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆரோக்கியமான தேர்வுகளை உறுதி செய்வதற்கும், வலுவான தடுப்பு முறைக்கும், நோயற்ற பாதுகாப்பிற்கும் முக்கியமாகும்.

தொற்றுநோய் அல்லாத நோய்களின் சுமையைக் குறைக்க இந்தியா என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

போலியோ ஒழிப்பு அல்லது கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெரிய அளவில், வேகமாகவும் பாதுகாப்பாகவும் வழங்கியது என பொது சுகாதாரத்தில் இந்தியாவுக்கென சாதனைப் பதிவு உள்ளது. உலகளவில் தடுப்பூசிகளை பற்றிய அவதூறுகள் நீடித்தபோதிலும், நோய்த்தடுப்பு முறையை மிக அதிகப் பலன் தரும் முறையாக இந்தியா தொடர்ந்து கருதி வருகிறது. இப்போது, அரசாங்கம் HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்தவும், குழந்தைகளை மையமாகக் கொண்ட பல்வேறு தொற்றுநோய் அல்லாத நோய்கள் தடுப்பு முயற்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும் தயாராகி வருகிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை குழந்தைகளிடையே தொற்றுநோய் அல்லாத நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் வழிவக்கும்.

ஆரோக்கியமான உணவு எப்போதும் எளிதில் கிடைப்பதில்லை அல்லது மலிவாக இருப்பதில்லை. அதேசமயம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் கடை அலமாரிகளையும் விளம்பரங்களையும் ஆக்கிரமித்துள்ளன. கலாச்சாரக் கண்ணோட்டங்களும் உணவுத் தேர்வுகளை வடிவமைக்கின்றன—உதாரணமாக, முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது, தொற்றுநோய் அல்லாத நோய்களின் அபாயத்திற்கு எதிரான எளிமையான, சக்திவாய்ந்த பாதுகாப்புகளில் ஒன்றாகும். இருப்பினும், புட்டிப்பால் கொடுப்பது பெரும்பாலும் உயர்ந்ததொரு விருப்பமாகத் தவறாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவது போன்ற வண்ணக் குறியிடப்பட்ட ஊட்டச்சத்து லேபிள்கள் குழந்தைகள், எழுத்தறிவற்றவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தேர்வுச் செய்ய உதவுகின்றன. இதேபோன்ற தெளிவான முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தியா பயனடையலாம். ஆரம்பத்திலேயே தொடங்குவதன் மூலம், இந்தியா நோய்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான, அதிக உற்பத்தித்திறன் கொண்ட எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.

வெண்பா (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.newindianexpress.com/nation/2025/Sep/30/india-hub-of-non-communicable-diseases

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு