பாஜக அரசின் கொள்கைகளை பறைசாற்றும் பட்ஜெட்!
அறம் இணைய இதழ்
திமுக அரசு பதவி ஏற்ற பிறகு வெளியிடப்பட்டு இருக்கும் மூன்றாவது பட்ஜெட் இது! பி.டி.ஆர். சிறந்த பொருளாதார நிபுணர் தான்! ஆனால், அவரை சரியாக சுதந்திரமாக இயங்கவிடாதது ஒரு புறமும், தமிழக பொருளாதார கள நிலவரங்கள் அவருக்கு போதுமான அளவுக்கு தெரியாமல் இருப்பது மறுபுறமாக இருக்கும் சூழலில், வேறெப்படி அவரால் ஒரு மக்கள் நல பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்?
அரசு பள்ளிக் கட்டிடங்கள் பல சிதிலமடைந்த நிலையில் உள்ளன! ஆசிரியர் பணியிடங்கள் பல்லாயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன! இந்த நிலையில் மேன்மேலும் தேசிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதை என்னென்பது? தமிழக அரசுக்கு என்று தனியாக ஒரு கல்வி கொள்கை உருவாக்க ‘நாம்கேவாசாக’ ஒரு குழு அமைத்தீர்கள்! ஆனால், அதற்கு நீதி ஒதுக்க தைரியம் இல்லையே!
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்புக்கான எண்ணும், எழுத்தும் திட்டத்தை இரண்டாம், மூன்றாம் வகுப்பு வரை அமல்படுத்துவதற்கே எதிர்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இனி நான்காம், ஐந்தாம் வகுப்பிற்கும் விரிவுபடுத்துவதாகச் சொல்லி ரூ 110 கோடி ஒதுக்குகிறீர்கள் என்றால், ஆரம்ப கல்வியை அழிக்க மத்திய பாஜக அரசு போட்டுக் கொடுக்கும் திட்டத்தை மனசாட்சி இல்லாமல் அமல்படுத்தி வருகிறீர்கள் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்.
ஏற்கனவே 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 50,000 பேர் பரிட்சை எழுதவராத நிலைமை குறித்த குறைந்தபட்ச குற்ற உணர்ச்சி கூட உங்களுக்கு இல்லையே! உயர்கல்வித் துறையில் பேராசிரியர்கள் நியமனங்கள் இன்றி, ஒப்பந்த கூலி போல வேலை வாங்கும் போக்கிற்கு தீர்வில்லையே!
இராணுவ வீரர் இறந்தால் 20 லட்சமாக இருந்த தொகையை ஒரேயடியாக 40 லட்சமாக்குகிறீர்கள்! இராணுவ வீரர் மத்திய அரசின் ஊழியர் அவரது இறப்பிற்கு மத்திய அரசே பெரும் நிதி தருகிறது. இது பாஜகவின் தேசபக்தி அரசியலுக்கு இது போட்டி போல இருக்குது! அதே போல அற நிலையத் துறையில் கோயில் பெரும்பணி திட்டங்களுக்கு என்று நானூற்று சொச்சம் கோடிகளை இறைப்பதும் இந்த ரகமாகத் தான் தெரிகிறது! ஆக, திராவிட மாடல் என்பது பாஜகவின் வழியில் போட்டி அரசியல் செய்வது தான் போலும்!
சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன! டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கெளரவமான ஊதியம் தராமல் நோகடிக்கிறீர்கள்! மருந்து, மாத்திரை பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது! புதிய அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைப்படுகின்றன! ஆனால், கிண்டியில் மட்டும் கருணாநிதி பெயரால் ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அறிவித்து உள்ளீர்கள்! அறிவித்த வரை நன்றி!
மின்சாரத் துறையில் தனியார்களை நுழைத்தது முதல் அதன் நஷ்டம் மலையென உயர்ந்து கொண்டே உள்ளது. அப்படியும் கூட மேன்மேலும் அரசு-தனியார் கூட்டுறவில் மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கபடும் என அறிவித்து உள்ளீர்கள்! தனியார் – அரசு இணைந்து பங்களிப்பு என்பது அரசு வளங்களை தனியார்கள் சூறையாடவே வழி செய்துள்ளன என்பதே கடந்த கால அனுபவமாகும்!
எல்லா துறைகளிலும் தனியார் மயம்! அரசு வேலை வாய்ப்புகளை அடியோடு இல்லாதொழித்தல், தேசிய கல்வி திட்ட அமலாக்கம், கார்ப்பரேட்டுகளுக்காக விவசாய நிலங்களை அபகரித்தல், கிராமபுற பொருளாதாரத்தை சிதைத்தல்.. ஆகிய மத்திய பாஜக அரசின் கொள்கைகள், வேலைதிட்டங்கள் அனைத்தும் இந்த பட்ஜெட்டில் எதிரொளிக்கின்றன!
சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்களை அள்ளி இறைப்பதன் வாயிலாக அரசு கஜானாவின் சரிபாதிக்கும் மேற்பட்ட தொகையை செலவழித்து ஓட்டு வங்கி அரசியலைத் தான் அரசு செலவில் நடத்திக் கொள்கிறீர்கள்! உழைப்பில்லாமல் வாழும் மனநிலையை மக்களுக்கு உருவாக்கி எல்லோரையும் கையேந்த வைத்துவிட்ட பிறகு, அவர்களை கேள்வி கேட்கும் அதிகாரமற்றவர்களாகவும், மேன்மேலும் அரசை சார்ந்து வாழக் கூடியவர்களாவும் மாற்றிவிடுகிறீர்கள்!
நாட்டின் மிகப் பெரிய சொத்து அதன் இயற்கை வளங்கள் தாம்! ஆனால், திமுக அரசு பதவி ஏற்றது முதல் ஏகப்பட்ட புதிய குவாரிகளை உருவாக்கி, ஆற்றோரங்களை மேலும் ஆழப்படுத்தி மண் அள்ளி வருகிறது! உயர்ந்தோங்கி மலைகளை எல்லாம் சிறுகச்,சிறுக விழுங்கி எம் சாண்டாக்கி கேரள மாநிலத்திற்கு அனுப்புகிறது! இதில் ஒரு சொற்பமான தொகையை அரசு கஜானாவிற்கு தந்து பெருமளவு பணத்தை தனியாரும், ஆட்சியாளர்களும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்! பல ஆயிரம் ஆண்டுகளில் இயற்கை நமக்கு உருவாக்கி தந்தவற்றை அழிக்கும் அதிகாரத்தை கூச்ச நாச்சமில்லாமல் செய்கிறார்கள்!
இதே போல தமிழகத்தின் தனிப் பெரும் சொத்து இளைஞர்களின் உழைப்பாற்றல் தாம்! அந்த உழைப்பாற்றல் டாஸ்மாக் மதுவால் உறிஞ்சப்பட்டு, அவன் உதவாக்கரையாகிவிடுகிறான். வெகு சீக்கிரத்தில் உயிர் இழந்து மடிகிறான். இந்தியாவில் தமிழகமே அதிக விதவைகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது! இந்த உழைப்பு பற்றாக்குறையே வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கே வந்து குவிய வழியேற்படுத்துகிறது. இது குறித்த எந்தவித சிந்தனையுமற்று, மதுவால் வரும் பணத்தின் மீதே கண்ணாக இருக்கிறீர்களே…
மத்தியில் மோடி அரசு பதவி ஏற்றது தொடங்கி நாட்டில் சிறு, குறு தொழிலகங்கள் பல நலிவடைந்து புதை குழிக்கு போய்விட்டன! இன்று வரை அவற்றை மீட்டெடுக்க ஒரு சிறு முயற்சி கூட இல்லை! முதலாவதாக இதில் கள நிலவரங்கள் தெரிந்தால் தானே அதற்கேற்ப திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை தர முடியும்.
புத்தகக் கண்காட்சிக்கு எதற்கு பத்து கோடி அள்ளிவிடப்படுகிறது? ஏற்கனவே மிக லாபகரமாக புத்தகக் கண்காட்சியை நடத்தி வரும் கோடீஸ்வர முதலாளிகளுக்கு எதற்கு பணம்? அந்த பணத்தைக் கொண்டு தமிழகத்தில் நலிவடைந்த நூலகங்களை சீரமைத்து நூலகர்களை வேலைக்கு வைக்கலாமே! நல்ல நூல்களை வாங்கி வைக்கலாம் நூலகத்திற்கு!
மேன்மேலும் உலக வங்கி கடன்களையும், வெளிநாட்டு கடன்களையும் வாங்குவதை நிறுத்துங்கள்! அதிமுக ஆட்சியை விட்டு போகும் போது 5.7 லட்சம் கோடி கடன் வைத்தார்கள்! அதை கடுமையாக விமர்சித்த நீங்கள் அந்த கடனை 7.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு மேற்கொண்டு 90,000 கோடிகள் கடன் வாங்கப் போவதாக அறிவித்து உள்ளீர்கள்! இவ்வளவு கடன்கள் வாங்கியும் சொத்து வரி, கலால் வரி உள்ளிட்ட பல வரிகளை ஏற்றிய பிறகும் 30,000 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டைத் தருகிறீர்கள்! அரசு செலவிலான ஆடம்பர விழாக்களை நிறுத்துங்கள்! ஊருக்கு ஊர் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த போட்டோ கண்காட்சிகள் எதற்கு? இவர் காந்தியா? வ.உ.சியா? ஓமந்தூர் ராமசாமியா? காமராஜரா? எந்த வகையில் நாட்டுக்கு தியாகம் செய்திருக்கிறார்? ஊழல் செய்வதை நிறுத்துங்கள். கமிஷன் அடிப்பதை நிறுத்துங்கள். இவை முடியுமானால், நாம் கடன் வாங்கும் அவசியமே இருக்காதே!
சாவித்திரி கண்ணன்
aramonline.in /12831/t-n-govt-budjet-bjp-policy/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு