அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப ஒப்பந்தம்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுக்கப்படும் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி!

செங்கனல்

அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப ஒப்பந்தம்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுக்கப்படும் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி!

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் எஞ்சிய சுயாதிபத்திய உரிமையையும் ஏகாதிபத்தியங்களின் காலடியில் வைத்து, நாட்டை அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்க அயோக்கியத்தனத்தைத்தான் இந்திய-அமெரிக்க உறவில் புதிய வளர்ச்சி, மேக்-இன்-இந்தியா என கதையளக்கின்றனர் ஆளும் வர்க்க அறிவுக் கூலிகள்.

மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்  போது, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியா கையெழுத்துட்டுள்ளது. இதில் முக்கியமானவையாக இரண்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக குறைக்கடத்திகள் எனும் சிப்புகள் உற்பத்தியின் ஏகபோக நிறுவனமான மைக்ரான்  என்ற அமெரிக்க நிறுவனம் குஜராத்தில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தம். மற்றொன்று GE எனும் ஜெனரல் எலக்டிரிக் அமெரிக்க  நிறுவனம், HAL உடன் ஜெட் என்ஜின் தயாரிப்பதற்கான ஒப்பந்தம்  ஆகும்.

HAL  -GE ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படும் வரிசையான  திட்டங்களின் வாயிலாக  “அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு நாடு மிகவும் தன்னிறைவு மற்றும் தற்சார்பை பெறும்” என்று HAL இன் தலைவர் பேசியிருக்கிறார்.

அமெரிக்க உடனான ஒப்பந்தங்கள்  வாயிலாக, விண்வெளி ஆராய்ச்சி, குவாண்டம் ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்திகள் தொடர்பான தொழில்நுட்பங்கள், போர் விமானங்களுக்கான ஜெட் என்ஜின் உற்பத்தி என பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க போவாதாகவும் இது மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்ற பிரச்சரத்தை  பாஜக- ஆர் எஸ் எஸ் கும்பல்கள் பரப்பி வருகின்றனர்.. முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, மோடி-பைடன் ஒப்பந்தங்கள் வாயிலாக மேக்-இன்-இந்தியா திட்டம் வலுபெறப்போவதாக எழுதுகின்றனர். ஆனால் மோடி-பைடன் ஒப்பந்தத்தை நாம் கூர்ந்து பார்த்தால், இவை மறுகாலணியாக்கத்தின் தீவிரமான நடவடிக்கைகள் என்று புரிந்து கொள்ளலாம். இதனை மைக்ரான் சிப் தொழிற்சாலை மற்றும் GE-HAL ஒப்பந்தங்களைக் கொண்டு விளக்கலாம்.

இன்று நாம் பயன்படுத்தும் சலவை இயந்திரம் முதல் விமானங்கள் வரை, விண்வெளி ஆராய்ச்சி முதல் செயற்கை நுண்ணறிவு வரை என அனைத்தும் மின்னணு சாதனங்களையே சார்ந்து உள்ளன. போரில் பயன்படுத்தப்படும் டாங்கிகளும், துப்பாக்கிகளும் கூட ட்ரோன்களுடன் சேர்ந்து இயக்கப்படும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேடார்கள் மற்றும் சாட்டிலைட்டுகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு அதிநவீன வழியில் போர் நடத்தப்படுகிறது. உலகில் எந்த தொழிலைக் எடுத்துக்கொண்டாலும் சரி, எந்தவொரு சாதனங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, எல்லா மின்னனுச் சாதனங்களிலும் ”குறைக்கடத்திகளால் ஆன சிப்புகளே”(Semiconductor chips) மூளையாக செயல்படுகிறது.

இப்படி அனைத்து தொழில்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மின்னனுத்துறையில், ஒரு  நாட்டின் எதிர்கால வளர்ச்சி என்பது அந்நாடு கொண்டுள்ள குறைக்கடத்தி சிப் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பொருத்து உள்ளது எனலாம். ஆனால் மோடி அரசோ, குறைக்கடத்தி சிப் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான முயற்சி இல்லாமல் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கடைநிலை தொழில்நுட்பங்களை வாங்கிக்கொண்டும் அந்நாட்டு நிறுவனங்களுக்கு கடைநிலை வேலைகளை செய்து கொடுப்பதையும் இந்தியாவின் வளர்ச்சி என்று பீற்றிக்கொள்கின்றன. மைக்ரான் சிப் தொழிற்சாலை மற்றும் GE-HAL ஒப்பந்தத்திலும் இதுதான் நடந்துள்ளது.

மைக்ரான் ஒப்பந்தம் மூலம் நடக்கவிருப்பது என்ன?

பாஜகவாலும், முதலாளித்துவ அறிவுக் கூலிப்படையினராலும் மிகவும் போற்றப்படும் மைக்ரான் ஒப்பந்தத்தின் மூலம் அந்நிறுவனம் குஜராத்தில் அமைக்கப்போகும் சிப் தொழிற்சாலையில் இத்தொழில்நுட்பத்தின் மிக முக்கிய  பகுதியான சிப்   வடிவமைப்பு மற்றும்  உருவாக்கம்  (Design & Fabrication) ஆகியவற்றை செய்யப்போவதில்லை. அத்தொழிநுட்பங்களை இந்தியாவிற்கு வழங்கப்போவதும் இல்லை. சிப்புகளில் பழுது இருக்கிறதா என சோதனை செய்வது, சிப்புகளை PCB யில் பொருத்துவது, சிப்புகளை எந்தவித புறச்சேதாரமும் இல்லாமல் பேக்கிங் செய்வது என்ற  கடைநிலை பிரிவுகளை செய்வதற்கு தான் மைக்ரான் நிறுவனம் குஜராத்தில்  தன் ஆலையை அமைக்கவிருக்கிறது

மைக்ரான் தனது சிப் வடிவமைத்தல் மற்றும் உருவாக்கம்  என்ற தொழில்நுட்ப திறன்களை கொண்டு அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில்  உற்பத்தி செய்த சிப்புகளை  வெறுமனே அசெம்பிளி, பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் போன்றவற்றிற்காக  மட்டுமே இந்த குஜராத் ஆலை அமையப் போகிறது.

இது போன்ற கடைநிலை சிப் தொழிலுக்கான சந்தையில்  13 விழுக்காடு   அளவில் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மலேசியா, சிப் தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட வெகு தூரம் முன்னேறி உள்ளது. மைக்ரான் நிறுவனம் சிப் தொழில்நுட்பத்தின் கடைநிலை வேலைகளை, மலேசியா இந்தியா என இரு நாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் தனது விநியோகச் சங்கிலிக்கு எந்த ஆபத்து நேராமல் பார்த்து கொள்ள முயல்கிறது..

அதே சமயத்தில்  உயர்ந்த தொழில்நுட்பமான சிப் வடிவமைத்தலை ஊக்குவிப்பதற்காக  வாஷிடங்கனில் 100 பில்லியன் டாலர் முதலீட்டில் புதிய ஆலையை  அமைக்கவிருக்கின்றன அமெரிக்க சிப் நிறுவனங்கள்.

இப்படி சிப் உற்பத்தியில் கடைநிலை வேலை செய்வதற்கான ஒரு தளமே இந்திய குஜராத் ஆலை.

மைக்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், அதை யார் தரப்போகிறார்கள் என்பதை பார்த்தால்,  மோடியின்  அமெரிக்க அடிமை சேவகம் அப்பட்டமாக வெளிவருகிறது

மைக்ரானின் குஜராத் ஆலையை அமைப்பதற்கான மொத்த செலவு 2.75 பில்லியன் டாலர் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.  இதில் 50 விழுக்காட்டுத் தொகையை ஒன்றிய மோடி அரசு மானியமாக வழங்கிடும். இவ்வாறு மானியமாக அளிக்கப்படும் தொகையே 11 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். மீதம் உள்ள தொகையில் 20 விழுக்காட்டுத் தொகையை பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு அளித்திடும். மைக்ரான் நிறுவனமோ, வெறும் 825 மில்லியன் டாலர் (30 விழுக்காடு) அளவில் மட்டுமே இந்த ஆலைக்காக செலவு செய்து, 2.75 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலை முழுவதையும் தன் உடைமையாக ஆக்கி கொள்கிறது. மருத்துவம், கல்வி, கேஸ் மானியம், ஊரக வேலைவாய்ப்பு என மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சேவைகளை ‘வீண்’ எனக் கூறும் மோடி கும்பல்  அமெரிக்க நிறுவனமான மைக்ரானுக்கு 70% பணத்தை மானியமாக வாரி வழங்குவதை ஊதாரித்தனம் என்றுதான் சொல்லவேண்டும். இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை மூலம் வேலைவாய்ப்பு பெருகும் பொருளாதாரம் பெருகும் எனக் கதையளக்கின்றனர். இதற்கு சீனா-பாக்ஸ்கான் அனுபவமும் இந்தியா-நோக்கியா  அனுபவமுமே மிகச்சிறந்த உதாரணம்.  

HAL-ஜெனரல் எலக்டிரிக் ஜெட் என்ஜின்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம்:

போர் விமானங்கள் உற்பத்தியில் ஒத்துழைப்பை அளிப்பது என்ற பெயரில் அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)  நிறுவனத்திற்கும் இடையே, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின்  எம்கே-2 இலகுரக போர் விமானங்களை,  ஜெனரல் எலக்டிரிக் நிறுவனத்தின்   GE-F414 ஜெட் என்ஜின்களோடு பொருத்தி  உற்பத்தி செய்திட, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், நாம் சுயமாக போர்விமானங்களுக்கான என்ஜின்களை 2100 ஆண்டு வரை தயாரிக்கமுடியாமல் போவதோடு நமது போர்விமான வடிவமைப்புகளை GE- F414 என்ஜின்களுக்கு ஏற்ப காவு கொடுக்கப் போகிறோம் என்கிறார் முன்னாள் விமானப்படை அதிகாரி சிரிவத்ஸா.

ஜெட் என்ஜின்களின் மிகமுக்கிய பாகமான டர்பைனில் உள்ள  பிளேடுகள் உயர் வெப்பத்தை(~1900 டிகிரி செல்சியஸ்) தாங்கக் கூடியவையாக இருக்கவேண்டும். அத்தகையப் பிளேடுகளை தயாரிக்கக்கூடிய தொழில் நுட்பம் நான்கு நாடுகளிடம் மட்டுமே உள்ளது. கடந்த ஐம்பது வருடங்களாக பெரும் செலவில் இந்தியா முயற்சித்தும் இதில் பெரிய வெற்றியடைய முடியவில்லை.

ஜி.இ நிறுவனம் தனது நாற்பது வருட பழைய ஜெட் இன்சின்(GE F414) தொழில் நுட்பத்தைத்தான் இந்தியாவிற்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதுவும் 80 சதவிகித தொழில்நுட்பம் மட்டுமே தரப்படும் என்கிறது ஒப்பந்தம். டர்பைன் பிளேடுகளுக்கான தொழில்நுட்பத்தை அமெரிக்கா வழங்காது என்பது நாம் உறுதியாகக் கூறலாம்.

1961 ஆம் ஆண்டு HF-24 எனும் போர் விமானத்தினை HAL நிறுவனம் தயாரித்தது. ஆனால் அதற்கான என்ஜின்கள் வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்டதாகும். இதன் பின்பு கடந்த 62 ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொண்டும், இந்தியாவில் உள்நாட்டு ஜெட் என்ஜின்கள் உற்பத்தி முழுமையடைவில்லை. HAL தயாரித்துள்ள “காவேரி” என்ஜினும் சோதனையில் தான் உள்ளது. இந்நிலையில் தற்போதைய அமெரிக்க ஒப்பந்தமானது HAL,  GE என்ஜின்கள் தயாரிப்பதற்கான வெறும் அசெம்பிளி லைனான (ஹிந்துஸ்தான் அசெம்பிளி லைனாக) மாறப் போகிறது என்பதே உண்மை.

இவ்வாறு சிப் மற்றூம் ஜெட் என்ஜின்கள் தொழில்நுட்பத்தை நம்நாட்டில் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை மோடி அரசின் அமெரிக்க-இந்திய ஒப்பந்தங்கள் மூலம் முற்றாக தகர்த்துவிட்டு இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளில் ஒப்படைத்துள்ளது. இதையே தொழில் வளர்ச்சி என்றும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விரும்புகிறார்கள் என்று பீற்றிக்கொள்கிறது மோடி-அமித் ஷா கும்பல்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் எஞ்சிய சுயாதிபத்திய உரிமையையும் ஏகாதிபத்தியங்களின் காலடியில் வைத்து, நாட்டை அடிமையாக்கும் இந்த மறுகாலணியாக்க அயோக்கியத்தனத்தைத்தான் இந்திய-அமெரிக்க உறவில் புதிய வளர்ச்சி, மேக்-இன்-இந்தியா என கதையளக்கின்றனர் ஆளும் வர்க்க அறிவுக் கூலிகள்.

ஈரை பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் முயற்சியாக இது போன்ற தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா வளரும்  என திரும்ப திரும்ப பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இவை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு ஒரு போதும் பயன்படப்போவதில்லை!

(தாமிரபரணி)

- செங்கனல்

http://senkanal.com/index.php/2023/07/19/india-america-mou/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு