தமிழ்நாட்டு பல்கலைக்கழக பாடத்தில் மதவெறி ஊடுருவும் அபாயம்! - மரியம் குமாரன்

தீக்கதிர்

தமிழ்நாட்டு பல்கலைக்கழக பாடத்தில் மதவெறி ஊடுருவும் அபாயம்! - மரியம் குமாரன்

பாடநூல்களும்; பாடம் சார்ந்த உரை நூல்களும் பொறுப்புணர்வோடு எழுதப்பட வேண்டும். உரிய பரிசீலனையும், அங்கீகாரமும் இல்லாமல் எவர் வேண்டுமானாலும் பாட நூல்களையோ; உரை  நூல்களையோ எழுதி வெளியிடலாம் என்ற போக்கு மிக அபாயமானது. 

கல்வியில் மதவாதத்தைப் புகுத்தி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, வெறுப்பை விதைத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது பாசிச சங்கிகளின் பாரம்பரிய செயல் திட்டமாகும். பாடநூல்களில் தங்கள் கருத்தியலை ஊடுருவச் செய்து, பொதுவான மனங்களில் மதவாத நஞ்சை புகுத்துவதில், பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள் நீண்ட காலமாக மும்முரம் காட்டி வந்துள்ளன.

அமுதத்தை நஞ்சாக மாற்றல்

மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திய கடந்த பத்தாண்டுகளில், கல்வித்துறை அடைந்துள்ள கடும் சீர்கேடுகளை சொல்லில் வடிக்க முடியாது. கல்வித் திட்டங்கள் அனைத்திலும் காவிச் சாயத்தை கரைத்து ஊற்றியுள்ளனர் இவர்களின் மதவெறி அணுகுமுறை கல்வி என்ற அமுதத்தை நஞ்சாக மாற்றி உள்ளது. அதை சரி செய்ய பெரும் பணி ஆற்ற வேண்டிய சூழல் உள்ளது. மதவெறி பாசிசத்திற்கு மரண அடி கொடுக்கின்ற மனித நேய அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் முற்போக்கும் சமூக நீதியும் ததும்புகின்ற அணுகுமுறைகளுடன் கூடிய கல்வியின் உள்ளீடுகள் சமூகத்தை உயர்த்தும் வகையில் அமைந்திருக்கும்; அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. ஆயினும் கூட, அந்தக் கட்டமைப்புக்குள் சங்கிகளின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில், அப்பட்டமான மத வெறிக் கருத்துக்கள் எழுதப்பட்டிருந்ததை 2021 ஆம்  ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினரு மான முனைவர் ஜவாஹிருல்லா உயர் கல்வித் துறை யின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, இந்த அவலத்தை செய்தியாளர் சந்திப்பு நடத்தி அம்பலப் படுத்தியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது தமிழக உயர்கல்வித்துறை, தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒருங்கி ணைந்த (New TANSCHE Syllabus) பாடத்திட்டத்தை  நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறைக்கு ஆதரவாகவும்; எதிராகவும் கல்வியாளர்களிடையே கருத்து முரண்பாடு உள்ளது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டு பல்கலைக்கழ கங்கள் முழுமையான பாடத்திட்டத்தில் இப்போது சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன.

பாடநூலா? ஆர்எஸ்எஸ் பிரசுரமா?

அண்மையில் சாருலதா பதிப்பகம் வெளி யிட்டுள்ள இளநிலை பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவத்திற்கான பொதுத் தமிழ், “தமிழக வரலாறும் பண்பாடும்” என்ற நூலைப் படித்த போது பேரதிர்ச்சி ஏற்பட்டது. முனைவர் இரா.செல்வராணி; முனைவர் இரா.மருதவேல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இப்பாட நூலில் பக்கம் 2- 105 இல், ‘முகமதியர் ஆட்சி’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், இது பாட நூலா? அல்லது ஆர் எஸ்எஸ் இதழின் பிரசுரமா? என்று நினைக்கும் அளவுக்கு கொடிய செய்திகளை உள்ளடக்கி உள்ளது. அத்த னையுமே சிறிதும் உண்மை கலப்பில்லாத அவதூறுகள். முஸ்லிம் படையெடுப்பு என்ற துணைத் தலைப் பிட்டு, “மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக்காபூர்,  மதுரை நகரத்தை சூறையாடினான்; மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் திருச்சுற்று மதில்களையும் 14 கோபுரங்களையும் தரைமட்டம் ஆக்கினான்; கோவிலில் இருந்த பல கோடி மதிப்பிலான பெரும் செல்வத்தை கொள்ளையிட்டான்; மாலிக்காபூர் ராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பினான்; அங்கே அவன் நினைவாக ஒரு மசூதி கட்டப்பட்டது; அது முதல் 50 ஆண்டுகள் வரையில் மதுரையை சுல்தான்கள் ஆண்டு  வந்தனர்; எதிர்பாராத ஆனால் வலிமை மிகுந்த முஸ்லிம் படையெடுப்பினால், விந்திய மலைக்கு தென்பாற்பட்ட அரசுகள் வீழ்ச்சியுற்றன; எங்கும் குழப்ப மும் அச்சமும் குடி புகுந்தன.” -என்று மதவெறி கொப்பளிக்க எழுதப்பட்டுள்ள அப்பாடத்தின் அடிக்குறிப்பு மிகுந்த அபாயமானதாக உள்ளது. “வினா: இஸ்லாமியர் பேசிய மொழி என்ன? விடை: அரபு மொழி” மாணவர்களுக்கு வரலாற்றைச் சொல்லித் தருவ தற்குப் பதிலாக, அவதூறுகளை பாடம் என்ற பெயரில் பயிற்றுவிப்பதே சங்கிகளின் செயல் திட்டம்.

உண்மை மறைப்பும்  அவதூறு பொழிவும்

இரு மன்னர்கள் இடையேயான போரை, மதங்க ளுக்கு இடையேயான போராகக் காட்டி, இந்து மதத்தை,  படையெடுத்து வந்த முஸ்லிம்கள் வஞ்சித்தார்கள் என்ற உணர்வை உருவாக்குவதும்; சமகால சக முஸ்லிம்க ளிடம் இந்துக்கள் இதற்காக பழி தீர்க்க வேண்டும் என்று வழி நடத்துவதும் தான் ஆர்எஸ்எஸ்-இன் அரசியல். சிவாஜிக்கும் அவுரங்கசீப்புக்கும் போர் நடந்தது உண்மை. அதே நேரத்தில் சிவாஜி இந்து மதத்திற்கா கவும் அவுரங்கசீப் இஸ்லாமியருக்காகவும் போரிட வில்லை என்பதும் உண்மை. அவுரங்கசீப்பின் படைத் தளபதிகளாக இந்து ராஜபுத்திரர்களும், சிவாஜியின் படைத்தளபதிகளாக முஸ்லிம்களும் இருந்தது சொல்லப்பட வேண்டிய உண்மையாகும். சிவாஜிக்கும் அவுரங்கசீப்புக்கும் போர் என்ற பாதி உண்மையை கூறிவிட்டு, மீதி உண்மைகளை மறைத்து; திரித்து; மதவெறி அரசியலை நடத்துவது சங்கிகளின் கைவந்த கலை. தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் எழுதப் பட்டுள்ள பாட உரைநூலில், முஸ்லிம் படையெடுப்பு என்று ஒரு மதச்சாயம். மாலிக்காபூரை மதுரையின் மீது படையெடுத்து வர அழைப்புத் தந்தவர் சுந்தரபாண்டி யன் என்ற உண்மை மறைப்பு. மதுரை மீனாட்சி  அம்மன் கோவிலின் பதில்களையும்; கோபுரங்களை யும் மாலிக்காபூர் தரைமட்டம் ஆக்கியதாக ஓர் அபாண்டம். முஸ்லிம்கள் அனைவரும் அரபு மொழி பேசுவதாக ஓர் அபத்தம். மாலிக்காபூரை எதிர்த்து நின்ற பாண்டிய மன்ன னின் படையில் முஸ்லிம்கள் கணிசமாக இருந்ததைப் பார்த்துவிட்டு, “நீங்கள் எங்களோடு இணைய வேண்டும் என்று மாலிக்காபூர் தரப்பு அழைப்பு விட, முஸ்லிம்கள் வீரர்கள் “பாண்டியனின் படையில் நின்று வீரமரணம் அடைவோமே தவிர, உங்களோடு சேர மாட்டோம்” என உறுதிபடச் சொன்னதை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் பல மேடைகளில் சிலாகித்துப் பேசியுள்ளார். அவர் காவியுடை தரித்தவர் தான்; ஆனால் மக்களிடையே ஒற்றுமை நிலவ வைத்த மகத்தான ஞானி. ஆனால் சங்கிகளோ காவி நிறத்தை களங்கம் செய்வதற்கென்றே களமாடி வருபவர்கள். “இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி என் தாய் மொழியான தமிழுக்கே உண்டு” என்று இந்திய அரசியல் நிர்ணய அவையில் ஓங்கி முழங்கியவர் கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள். இப்பாடப் புத்தகமோ முஸ்லிம்கள் பேசும் மொழி அரபி என்கிறது. முஸ்லிம்களை பொது சமூகத்தில் இருந்து அந்நியப் படுத்தும் அபாயத்தை இத்தகைய பாடங்களில் பார்க்க முடியும். இதுவே எதிர்காலத்தில் பெரும் அபாயமாக வந்து முடியும். சமூக நல்லிணக்கம் மடியும்.

பரிசீலனைக் குழு  அமைத்தல் அவசியம் 

தமிழ்நாட்டுக்குள் மதவெறி பாசிசம் எந்த வகை யிலும்; எந்த வழியிலும் நுழைந்து விடக்கூடாது என்ற முனைப்பு கொண்ட திராவிட கருத்தியல் அரசு ஆட்சி செய்யும்போது, இத்தகைய நூல்கள் எந்த துணிவில் எழுதப்படுகின்றன? பாடநூல்களும்; பாடம் சார்ந்த உரை நூல்களும் பொறுப்புணர்வோடு எழுதப்பட வேண்டும். உரிய பரிசீலனையும், அங்கீகாரமும் இல்லாமல் எவர் வேண்டுமானாலும் பாட நூல்களையோ; உரை  நூல்களையோ எழுதி வெளியிடலாம் என்ற போக்கு  மிக அபாயமானது. இந்த களத்தை மதவாத பாசிச பாசிஸ்டுகள் மிகத் துல்லியமாக பயன்படுத்திக் கொள்ளும் பயிற்சி பெற்றவர்கள். எனவே பாட நூல்கள் மற்றும் பாடநூல் சார்ந்த உரை நூல்களின் பரிசீலனைக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுவ வேண்டும். மதவெறிக் கூறுகளையும் அவதூறுகளையும் உள்ள டக்கிய பாடநூல்கள் மற்றும் வழி நூல்களை தடை செய்து பறிமுதல் செய்ய வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் எதிர்காலத்தில் அபாயத்தை சந்திக்க நேர்ந்து விடும். 

கட்டுரையாளர் : கல்வியாளர் 

தீக்கதிர்

https://theekkathir.in/News/articles/world/inculcating-religiousism-in-education-and-disrupting-social-harmony

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு