சிறு, குறு வணிகத்தை சீரழித்த பாஜக அரசு!

அறம் இணைய இதழ்

சிறு, குறு வணிகத்தை சீரழித்த பாஜக அரசு!

சில்லறை வணிகத்தில் 90 சதவீதத்துக்கு மேலான பங்கை வகித்த வணிகர்களின் நிலை பாஜக ஆட்சியில் படு மோசமாகியுள்ளது. பண மதிப்பு, ஜி.எஸ்.டியால் 30 சதவீதத்துக்கும் மேலான சிறு, குறு வணிக அமைப்புகள் மூடப்பட்டன! தூக்குக் கயிற்றில் தொங்கியவர்களில் 36% தெரு வியாபாரிகள்!, 37%  சிறு வர்த்தகர்கள்!

சில்லறை வணிகத்தில் அங்கம் வகிக்கும் சிறுகுறு வணிகர்கள் பாஜக அரசின் அராஜக அடக்குமுறையால் மீளமுடியாத பாதிப்பில் உள்ளனர்.  தன் சகாக்களின் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு வணிகர்கள் கையில் காசு இல்லாமல், செயல்பாட்டு மூலதனம் இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். பணமதிப்பிழப்பால் சிறு, குறு வணிக நிறுவனங்களில் 60% வேலை இழப்பு ஏற்பட்டது. அவற்றின் வருமானம் 47% சரிவடைந்தது.

அதைத் தொடர்ந்து பாஜக அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சிறு குறு வணிகத்தைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பண மதிப்பு, ஜி.எஸ்.டியால் 30 சதவீதத்துக்கும் மேலான சிறு குறு உற்பத்தி அமைப்புகளும், வணிக அமைப்புகள் மூடப்பட்டன. அதற்கடுத்து வந்த கோவிட் பேரிடரால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கக் காலத்தில் அவர்களின் முதலுக்கே மோசம் வந்தது. அவதிப்பட்ட சிறு குறு வணிகர்களுக்கு பாஜக அரசு உதவிக்கரம் நீட்டவில்லை.

பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும் வணிக நிறுவனங்களுக்கே சாதகமாக அமைந்தது. கோவிட் பொது முடக்கக் காலத்தில் இ-காமர்ஸ் வலைத் தளங்கள் நுகர்வோர் மத்தியில் பிரபலம் அடைந்தன. சிறுகுறு வணிகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதி, மின்சாரம், இணைய வசதி, மென்பொருள் போன்றவற்றுக்கான அணுகல் இல்லாததாலும், நிதிப் பற்றாக்குறையாலும் அவற்றால் இணைய வழிக்கு வணிகத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை. டிஜிட்டல் இந்தியாவால் அதிகம் பாதிப்படைந்தவர்கள் சிறு, குறு வணிகர்கள் தான்.

நாடு தழுவிய பொது முடக்கத்தின போது பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்கும் தெரு வணிகர்களில் 10 சதவீதத்தினாரால் மட்டுமே செயல்பட முடிந்தது. 80%க்கும் அதிகமான வியாபாரிகளால் தங்கள் தற்காலிகக் கடைகளைத் திறக்கக் கூட முடியவில்லை. ஏறக்குறைய 60% நடைபாதை வியாபாரிகள் தங்கள் அன்றாட சம்பாத்தியத்தை நம்பிப் பிழைப்பு நடத்துவதால், இது அவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது என்று தேசிய தெரு வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சக்திமான் கோஷ் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியாவில் விவசாயிகளை விட வணிகர்களிடையே தான் அதிகத் தற்கொலைகள் நிகழ்ந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. தூக்குக் கயிற்றில் தொங்கியவர்களில் 36% தெரு வியாபாரிகளாகவும், 37%  சிறு வர்த்தகர்களாகவும் இருந்துள்ளனர்.

இன்றும் நுகர்வோரில் ஒரு பிரிவினர் இணைய வழியில் பொருட்களை வாங்கவே முன்னுரிமை அளிக்கின்றனர். இந்தியாவில் அமேசான், ஃபிளிப்கார்ட், மிந்த்ரா, ஸ்னாப்டீல், நைக்கா போன்ற இ-காமர்ஸ் வலைத் தளங்களும், ஜியோமார்ட், பிக்பாஸ்கெட் போன்ற உள்நாட்டுப் பெரு வணிக வலைதளங்களும் இந்திய வணிகச் சந்தையில் கணிசமான பகுதியை ஆக்கிரமித்துள்ளன. உலகளவில் 7ஆவது பெரிய இ-காமர்ஸ் சந்தையாக இந்தியா உள்ளது. ஸ்வீடன், கியூபா, ஈரான் போன்ற நாடுகளில் அமேசான் வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இகாமர்ஸ் நிறுவனங்கள் இந்திய வர்த்தக நெறி முறைகளை மீறி முற்றுரிமை பெற்றுள்ளதைக் கட்டுப்படுத்த பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆத்மா நிர்பர், சுவராஜ் எனக் கொக்கரிக்கும் பாஜக அரசு வெட்கமில்லாமல் ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் 100% அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது.

இந்தியாவின் 90% சில்லறை விற்பனையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT) பொதுச்செயலாளர் சுமித் அகர்வால், அமேசானின் ஜெஃப் பெசோஸை “பொருளாதாரப் பயங்கரவாதி” என்று சாடியுள்ளார். “சிறு சில்லறை விற்பனையாளர்களை அழிக்கும் கொள்ளையடிக்கும் போட்டி வணிகத்தில்” ஈடுபட்டதற்காக அமேசானைக் கண்டித்துள்ளார்.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத் துறையை ஈவிரக்கமின்றி அழிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. 40 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வாழ்க்கையை மிதித்து அழிக்காமல் அவர்கள் விடப்போவதில்லை என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது.

தற்போதைய வணிகக் கொள்கை நெறிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம், அதிரடி தள்ளுபடி, விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மூலதனத்தைத் தங்கள் துணை விற்பனையாளர்கள் மூலம் மூலதனமாகச் செலுத்துவதை அனுமதிக்கிறது என்றும், இவை அனைத்தும் 8.5 கோடி சிறு வணிகர்கள், அவர்களைச் சார்ந்த குடும்பங்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தின் இழப்பில் சந்தைப் பங்கைப் பெறுவதற்கும் சட்டவிரோதமான நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கும் செய்யப்படுகிறது என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) கூறியுள்ளாது.

“இந்த நிறுவனங்கள் இ-காமர்ஸ் மட்டுமல்ல, இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தின் முழு நிலப் பரப்பையும் கட்டுப்படுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் தங்கள் பேராசைகளையும், மறைமுக நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக கிழக்கிந்தியக் கம்பெனியின் இரண்டாவது பதிப்பாகத் தங்களை நிலைநிறுத்த முயற்சிக்கின்றன என்று நம்புவதற்கு எங்களுக்குக் காரணம் உள்ளது என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT) பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகியவை இந்தியாவின் சில்லறை வர்த்தகத் துறையை அழித்து வருகின்றன, இ-காமர்ஸில் நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை மாற்றியமைக்குமாறு பாஜக அரசிடம் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஸொமேட்டோ, ஸ்விக்கி, உபர் ஈட்ஸ் போன்ற உணவு விற்பனைச் செயலிகளால் சிறு உணவகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தவும் பாஜக அரசு தவறியுள்ளது.

பாஜக ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வாலும் நிதிப் பற்றாக்குறையாலும் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவில் மக்கள் வேலையிழந்துள்ளனர், அவர்களின் வருமானம் சரிவடைந்து, வாங்கும் சக்தி குறைந்திருப்பது சிறு, குறு வணிகர்களை பெரிதும் பாதித்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் மூலம் பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறோம் என்ற பேரில் அமைப்பு சாரா சில்லறை வணிகத்தை அழித்துள்ளது மோடி அரசு.

கட்டுரையாளர்; சமந்தா

அறம் இணைய இதழ்

aramonline.in /17487/small-industries-crisis/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு