“வீடுகள் - பள்ளிகளைக் கட்டியிருக்கலாம்”
தீக்கதிர்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளுடனான கூட்டணி என்ற பெயரில் ஆஸ்திரேலியாவுக்கு ராணுவத் தளவாடங்களை விற்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
சீனாவிடமிருந்து ஆபத்து வரலாம் என்ற பொய்யான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு தனது ராணுவக் கூட்டணிக்குள் ஆஸ்திரேலியாவை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா (ஆக்கஸ்) என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. வழக்கமான அமெரிக்க ராணுவக் கூட்டணிகளைப் போலவே இதிலும் ஆஸ்திரேலியாவுக்கு ஆயுதங்களை விற்பதே நோக்கமாக இருக்கிறது. தனது எல்லைப்பகுதியை சீனா விரிவாக்கம் செய்ய முயற்சிக்கிறது என்று தொடர்ந்து அமெரிக்காவும், பிரிட்டனும் கூறி வருகின்றன.
தங்கள் நாட்டை அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியில் சேர்ப்பதற்கு ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவிப்பதாகக் கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு உதவும் என்றெல்லாம் மக்கள் மத்தியில் கருத்து நிலவியது. ஆனால், ராணுவக் கூட்டணி என்பது அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவது என்பது தெரிய வந்துள்ளதால், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியக் கூட்டணியில் புதிதாக அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்கான உடன்பாடு போடப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்குகிறது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அன்டோனி ஆல்பனீஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 2050க்குள் இந்த எட்டு கப்பல்களும் ஒப்படைக்கப்பட்டுவிடும். இதற்கு 24 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏராளமான பணத்தை தற்போதைய பட்ஜெட்டில் ஆஸ்திரேலியா ஒதுக்கியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத் தள வாடங்களைத் தங்கள் தலையில் அமெரிக்கா கட்டுகிறது என்று மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். முக்கிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் உள்ள நகர் மன்றத்தின் முன்பாகப் பெருந்திரளாகக் கூடிய மக்கள், “சீனாவுடன் போர் வேண்டாம்”, “எங்களிடமிருந்து ஆக்கஸ் திருடுகிறது”, “பசிபிக்குக்கு தேவை அமைதி” மற்றும் “வேண்டாம், அணு நீர்மூழ்கிக் கப்பல்கள்” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மக்கள் தேவைகளை நிறைவேற்றுக
நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற ராணுவத் தளவாடங்களை விட மக்களுக்கு ஏராளமான தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றலாம் என்று அமைதி கோரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையைக் கொண்டு 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள், 4 ஆயிரத்து 500 பள்ளிக்கூடங்கள் மற்றும் 2 லட்சத்து 70 ஆயிரம் வேலைகளை உருவாக்கியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஸ்டீஃபனி டவுரிக் போன்ற அறிவுஜீவிகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அவர் கூறுகையில், “சிந்திக்கக்கூடிய ஆஸ்திரேலியர்களை இந்த உடன்பாடு இழிவுபடுத்துகிறது. போரைத் தவிர்க்க முடியாது என்று எங்களோடு அதிக அளவில் வர்த்தகம் செய்து வரும் சீனா மீது அமெரிக்காவின் பிரச்சாரம் குற்றம் சாட்டுகிறது. இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும். எங்களுக்கு இதனால் எந்தவிதப் பலனுமில்லை. ஒருபக்கமாக சாயாமல் இருப்பதே ஆஸ்திரேலியாவின் தேர்வாக இருக்க வேண்டும். அதை ஏன் நாம் எடுக்க வில்லை?” என்று கேள்வி எழுப்புகிறார். அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தங்கள் மீது சுமை ஏற்றப்படுவதால் இது போன்ற உடன்பாடுகள் தேவையில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
- தீக்கதிர்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு