சீனா-ஜெர்மனி பொருளாதார உறவுகள்: போட்டியும் நடைமுறையும்

வெண்பா (தமிழில்)

சீனா-ஜெர்மனி பொருளாதார உறவுகள்: போட்டியும் நடைமுறையும்

ஜெர்மனி நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெய்ல் தனது சீனப் பயணத்தின்போது, "சீன எஃகு காரணமாக ஜெர்மனி எஃகு தொழில் பாதிக்கப்படுவதை" தான் விரும்பவில்லை என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. "அனைத்து வேறுபாடுகளுக்கும், அனைத்து போட்டிகளுக்கும், அனைத்து பகைமைகளுக்கும் இடையிலும்கூட சீனாவுடனான உறவை நியாயமான முறையில் சிறப்பாக மேற்கொள்ள முடியும்" என்றும் அவர் கூறியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. சீன ஆய்வாளர் ஒருவர் குளோபல் டைம்ஸிடம் பேசுகையில், ஜெர்மனி, சீன தொழில்துறையின் போட்டிகள் குறித்த தனது தவறான கருத்தை மாற்றியமைத்து, சீனாவுடன் அதிக நடைமுறை சார்ந்த, வெளிப்படையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கிளிங்பெய்ல் ஷாங்காயில் பேசுகையில், போட்டி நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டாலும், ஐரோப்பிய சந்தை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் ஐரோப்பிய எஃகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் உள்நாட்டு எஃகு தொழிலைப் பாதுகாக்க, இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் புதிய வரிகளை விதிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவு குறித்தும் பேசினார். "நான் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான சந்தைகளுக்கு ஆதரவானவன். ஆனால் ஐரோப்பாவிலும் ஜெர்மனியிலும் நாம் தோல்வியாளராக இருப்பதை நான் விரும்பவில்லை," என்று கிளிங்பெய்ல் கூறியதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை குறிப்பட்டுள்ளது.

கிளிங்பெய்ல், "சீன எஃகு காரணமாக ஜெர்மனி எஃகு தொழில் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை," என்று கூறினார். ஃபுடான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் உள்ள சீனா-ஐரோப்பா உறவுகளுக்கான மையத்தின் இயக்குநர் ஜியான் ஜுன்போ, கிளிங்பெய்ல் முன்வைத்த, 'சீன அரசாங்கத்தின் மானியங்கள்' பற்றிய குற்றச்சாட்டுகளை, பழங்கதையாகவும் (cliché), ஜெர்மன் தொழில்துறை சீனாவுடன் போட்டியிட முடியாமையையும் மூடிமறைப்பதற்கு கூறப்படும் சாக்குப்போக்கு என்றும் கூறி நிராகரித்தார். "சீன தொழில்துறைகளின் எழுச்சிக்கு மானியங்கள் காரணமல்ல, மாறாக, புத்தாக்கத் திறன் மற்றும் முழுமையான தொழில்துறை சங்கிலிகள் உள்ளிட்ட பல காரணிகளின் கலவையாகும். அதே சமயம், மற்றவர்களைக் குறை கூறுவதாலும் தடைகளை உருவாக்குவதாலும் மட்டும் ஜெர்மன் தொழில்துறைகளின் போட்டித்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது," என்றும் ஜியான் குறிப்பிட்டார்.

"கிளிங்பெய்லின் கருத்துகள் சீனா பற்றிய ஜெர்மனியின் கொள்கையின் இரட்டைத் தன்மையை பிரதிபலித்தன," என்று அந்த நிபுணர் மேலும் குறிப்பிட்டார். ஒருபுறம், இது இரு பொருளாதாரங்களுக்கிடையேயான நெருங்கிய உறவுகளை அங்கீகரிக்கிறது, சொல்லப்போனால், கிளிங்பெய்லின் வருகையே இந்த ஒத்துழைப்பு வேகத்தை பராமரிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான நேர்மறையான சமிக்ஞையாகும்; மறுபுறம், சில ஜெர்மனி அரசியல்வாதிகள் சீனா தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர், சிலர் சீன சந்தையை சார்ந்திருப்பதைக் குறைக்க அழைப்பு விடுக்கின்றனர் என்றும் ஜியான் சுட்டிக்காட்டினார். ஜெர்மனியின் கடுமையான பொருளாதார சூழ்நிலையையும் கவனத்தில் கொண்ட ஜியான், "ஜெர்மனி தொடர்ந்து சீனாவுக்கு எதிரான முன்முடிவுகளிலும் தப்பெண்ணங்களிலும் ஈடுபட்டால், அது சீனாவின் ஆழமான ஒத்துழைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இழக்கக் கூடும்" என்று எச்சரித்தார்.

கிளிங்பெய்ல், தற்போதைய ஜெர்மன் அரசிலிருந்து சீனாவுக்குச் சென்ற முதல் பிரதிநிதி ஆவார். தனது பயணத்திற்கு முன்னதாக, கிளிங்பெய்ல் ஜெர்மன் பத்திரிகை நிறுவனத்திடம், "நாம் சீனாவைப் பற்றி பேசக்கூடாது, மாறாக சீனாவுடன் பேச வேண்டும்" என்று கூறினார். அவரது வருகை சீனாவில் உள்ள ஜெர்மன் வர்த்தக சமூகத்தினரால் அன்புடன் வரவேற்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஜெர்மன் வர்த்தக சபையின் நிர்வாக இயக்குநர் மற்றும் வாரிய உறுப்பினர் ஆலிவர் ஓஹ்ம்ஸ், குளோபல் டைம்ஸிடம் கூறுகையில், சபையின் உறுப்பினர்கள் இந்த வருகை குறித்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்றும், "இரு அரசாங்கங்களுக்கு இடையேயான உயர்மட்ட பரிமாற்றத்தை" ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் (Destatis) வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனா மீண்டும் ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக தனது நிலையை மீட்டெடுத்தது, என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஜனவரி முதல் செப்டம்பர் வரை சீனாவுடனான ஜெர்மனியின் மொத்த வர்த்தகம் 185.9 பில்லியன் யூரோக்களை (215.13 பில்லியன் டாலர்களை) எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 0.6 சதவீதம் அதிகமாகும் என்று Destatis கூறியது. இரு பொருளாதாரங்களின் நெருங்கிய பொருளாதார உறவுகள் மற்றும் சீனா தற்போது ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான "தொடர்பைத் துண்டிப்பது" சாத்தியமற்றது என்பதை பெர்லின் உணர வேண்டும் என்று ஜியான் கூறினார். மாறாக, ஜெர்மனி நெருக்கமான இருதரப்பு பொருளாதார உறவுகளுக்குத் தயாராக வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களின் நலன்களுக்கு உண்மையாக சேவை செய்யும் சீனாவோடு பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை அடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.globaltimes.cn/page/202511/1348661.shtml

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு