50-50 என்ற வாக்குறுதியை நாங்கள் ஒருபோதும் அளிக்கவில்லை: தைவான்
தனது சிப் உற்பத்தியில் பாதியை அமெரிக்க மண்ணில் அமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை தைவான் நிராகரிப்பு; வர்த்தகப் பதற்றங்களுக்கு இடையே கடும் எதிர்ப்பு

தமது குறைக்கடத்தி (semiconductor) உற்பத்தியில் பாதியை அமெரிக்க மண்ணுக்கு மாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தத்தை தைவான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், அத்தகைய கோரிக்கைக்கு தைபே "ஒத்துக்கொள்ளாது" என்றும் வலியுறுத்தியுள்ளது.
தைவான் துணைப் பிரதமர் செங் லி-சியுன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது அமெரிக்காவின் யோசனை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிப் உற்பத்தியை 50-50 எனப் பிரிப்பது குறித்து எங்கள் பேச்சுவார்த்தைக் குழு ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை" என்றார்.
"இந்த முறை நாங்கள் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கவில்லை என்பதை உறுதியாக நம்புங்கள், அத்தகைய நிபந்தனைக்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்," என்றும் அவர் கூறினார்.
அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தைவான் ஏற்றுமதி மீதான அமெரிக்க வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் "சில முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கு கூறியிருந்தார்.
டிரம்ப் நிர்வாகம் தைவான் ஏற்றுமதிகள் மீது தற்காலிகமாக 20% வரி விதித்ததைத் தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தைபே வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதற்குப் போராடி வரும் நிலையில்தான் இந்த எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது என AFP செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான தைவானின் ஏற்றுமதியில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் தயாரிப்புகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றில் 70%-க்கும் அதிகமானவை சிப்களை உள்ளடக்கியவை. செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான வளர்ச்சியால் இந்தத் துறைக்கு தற்போது அதிகத் தேவை உள்ளது. இது அமெரிக்காவுடனான தைவானின் வர்த்தக உபரியை அதிகரித்துள்ளதுடன், டிரம்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிப் உற்பத்தி மீதான அழுத்தத்தை எதிர்த்தபோதிலும், பதற்றங்களைத் தணிப்பதற்காக, அமெரிக்க முதலீடுகளை அதிகரிக்கவும், எரிசக்தி கொள்முதலை உயர்த்தவும், தனது பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3%-க்கும் அதிகமாக உயர்த்தவும் தைவான் உறுதியளித்துள்ளது.
- வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு