மனதை உறுத்தும் விடை தெரியா கேள்விகள்?

அறம் இணைய இதழ்

மனதை உறுத்தும் விடை தெரியா கேள்விகள்?

தவிர்த்திருக்க கூடிய ஒரு பெரும் அசம்பாவிதம் அரங்கேறிவிட்டது! விஜய் , காவல்துறை, அரசு நிர்வாகம் என முத்தரப்பிலும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் உள்ளன. அலட்சியம், பொறுப்பின்மையோடு அறிவின்மையும் கைகோர்த்து நின்று 40 மனித உயிர்களை பலி கொடுத்த துயர நிகழ்வு ஒரு அலசல்;

இந்த விவகாரத்தில் இன்னாருக்கு ஆதரவு, இன்னாருக்கு எதிர்ப்பு என்று தீர்மானித்துக் கொள்ளாமல் என்ன நடந்தது? எதை தவிர்த்திருக்கலாம் என்று பார்ப்போம்;

நெரிசலான இடங்களில் ரோடு ஷோவும், அரசியல்  பரப்புரையும் நடத்துவது கடும் நெருக்கடியாகிறது. ஆபத்துக்கு வாய்ப்பிருக்கிறது  என்ற பட்டறிவை கடந்த நான்கு மாவட்டங்களில் பெற்ற அனுபவத்தின் வாயிலாக த.வெ.கவினரும், விஜய்யும் உணராமல் போனது துரதிர்ஷ்டம்.

தன்னை சந்திக்க பெரும் திரள் மக்கள் முன் கூட்டியே வந்து காத்து கிடக்கிறார்கள் எனும் போது, விஜய் அந்த இடத்திற்கு சொல்லிய நேரத்திற்கு போகாமல், பல மணி நேரம் தாமதமாகச்  செல்வதை அலட்சியம் என்பதா? ”காத்து கிடக்கட்டுமே, போக்குவரத்து ஸ்தம்பிக்கட்டுமே” என்ற ஆணவமா? விஜய் தெளிவுபடுத்தட்டும்.

உண்மையில் நெருக்கியடித்து கடல் போல அலை அலையாய் தலைகள் தெரியும் விஜய்யின் ரோடு ஷோவை தொலைகாட்சிகளில் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே, ”ஐயோ அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாதே..” என்ற பதற்றம் இருந்து கொண்டே இருந்தது.

விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி தருவதில் பல கெடுபிடிகளை காட்டியது, கேள்வி மேல் கேள்வி கேட்டு அலைக் கழித்தது, இடத்தை மாற்றித் தந்தது …என காவல்துறை தரப்பில் தரப்பட்ட நெருக்கடிகள் எல்லாமே மக்கள் நலன் கருதியதா?  எனில், இந்த உயிர்பலிகள் நடந்திருக்கக் கூடாதே…?

தவெகவினர் தான் அரசியலுக்கு புதியவர்கள். ஆனால், போலீசார் பல களங்களைக் கண்டவர்கள் என்ற வகையில், நல்ல விஸ்தாரமான இடமாக பார்த்து விஜய் பரப்புரைக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். மேலும், விஜய் வேன் வருவதற்கும், பிரச்சாரம் முடிந்த பிறகு அங்கிருந்து சுலபத்தில் செல்வதற்குமான பாதையை ஏற்படுத்தி காவல்துறை அரண் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருப்பின், வேனின் முன்னும், பின்னுமாக மக்கள் வெள்ளம் முட்டி மோதி இருக்காது. காவல்துறை போதுமான அளவு பாதுகாப்பு பணியை செய்யவில்லை என்பதற்கு விஜய்யின் வேன் சம்பந்தப்பட்ட இடத்தை அடைய முடியாமல் திணறியதே சாட்சியாகும்.

விஜய்க்கு வரும் கட்டுக்கடங்கா கூட்டம் மற்றும் அந்தக் கூட்டத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், குறுகிய இடம் தருவதால் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவற்றால் பெரும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என சட்டம், ஒழுங்கு போலீசாரும், உளவுத் துறை போலீசாரும் பல முறை காவல்துறை தலைமைக்கு கவனப்படுத்தியும் விஸ்தாரமான இடத்தை உறுதி செய்வதிலும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதிலும்  பெரும் தோல்வி கண்டுள்ளது காவல் துறை. அப்படியானால் இந்த விவகாரத்தில் காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் அவர்களின் கைகளை கட்டிப் போட்டது யார்?

குறிப்பாக சென்ற முறை  விஜய் பெரம்பலூருக்கு செல்வதாகக் கூறி, செல்ல முடியாமல் போன நிகழ்வில் கூடிய கட்டுக்கடங்கா மக்கள் கூட்டத்திற்கு விஜய் சென்று இருந்தால், பல உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கும் என அன்றே உளவுத் துறை தந்த அறிக்கை உதாசீனப்படுத்தப்பட்டது எப்படி?

சரி, பெருந்துயரம் அரங்கேறிய கரூர் நிகழ்வுக்கு வருவோம்.

கரூரில் விஜய்யின் வேன் பரப்புரைக்கு த.வெ.கவினர் கேட்ட இடங்களை காவல் துறை மறுத்துள்ளார்கள். அதில் நமக்கு எந்த கேள்வியும் இல்லை. ‘அந்த இடங்கள் பொருத்தமற்றவை, தவிர்க்க வேண்டியவை’ என காவல்துறை கருதி அதை மறுத்திருக்கும் பட்சத்தில் நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், இந்த குறுகலான வெறும் 60 அடி அகலமுள்ள சாலையை ஏன் ஒதுக்க வேண்டும்.

இதே கரூரில் முதலமைச்சர் கலந்து கொண்ட முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடந்ததே. அந்த இடத்தையோ, அல்லது சேலம் பைபாஸ் சாலை போன்ற ஒரு இடத்தையோ ஒதுக்கி இருந்தால், இந்த விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

விஜய் வரும் போது தான் அவருக்கு வழி ஏற்படுத்த போலீசார் தள்ளுமுள்ளு செய்து வழி ஏற்படுத்துகிறார்கள். ஆனால், அவர் வருவதற்கு முன்பே அவர் நிற்க வேண்டிய இடத்தை அடையும் வண்ணம் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வைக்கவில்லை. இதில் த.வெ.க தொண்டர்களும், நிர்வாகிகளும் கவனம் காட்டி இருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் அரசியல்;

விஜய் வந்து நின்ற அந்த நிமிஷமே இரண்டு அம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குள் யாரோ மயக்கம் போட்டு விழுந்துள்ளதாகச் சொல்லி உள்ளே நுழைய முயன்றதும், அதற்கு வழி ஏற்படுத்த கூட்டத்தினர்ரை தடியடி நடத்தில் காவல் துறை நெருக்கடி தந்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாகும். மயக்கம் அடைந்த ஒருவரை காப்பாற்றுவதற்காக எனச் சொல்லி,சுமார்  40 உயிர்களை பலி கொள்ளும் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளார்களோ..? என்ற சந்தேகம் எழுகின்றது.

எதிர்கட்சிகள் கட்சிகள் நடத்தும் இது போன்ற சாலை பரப்புரையின் போது மாற்றுப் பாதையில் செல்லாமல் ஆம்புலன்ஸ்களை கூட்டத்திற்குள் ஊடுருவ வைப்பது என்பது சமீப காலமாக சர்ச்சையாகி வருவது கவனத்திற்குரியது.

இந்த நிகழ்வில் ஆம்புலன்ஸ்களில் திமுக பேனர்களும், செந்தில் பாலாஜி படங்களும் இருந்ததும் கவனத்திற்கு உரியது. மயக்கம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிப் போகும் வழியில் மரணித்ததும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அங்கு ஆம்புலன்சை தயாராக வைத்திருந்து கூட்டத்திற்குள் ஊடுருவ முயற்சித்தன் பின்னணியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். விஜய் பேச ஆரம்பித்ததும் ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் ஊடுருவ விஜய்யும் அதற்கு வழிவிடச் சொன்னார்.

இவ்வளவு மக்கள் கூட்டம் இந்தக் குறுகிய இடத்தில் கூடும் போது, காவல்துறையினர் அங்கு விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தது அரசியல் அழுத்தமா? என விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

ஏழு மணி நேரத் தாமதம்; ஏற்க முடியாத குற்றமே

தன்னை தற்காத்துக் கொள்ள பவுன்சிலர்களை வைத்துள்ள விஜய், மக்களை பாதுகாக்க த.வெ.க தொண்டர் படையை களத்தில் இறக்கி பாதுகாப்பு தந்திருக்க வேண்டும். மணிக்கணக்கில் காத்திருந்தவர்கள் அன்னம், தண்ணீர் இல்லாமல் மிகச் சோர்ந்து இருந்த போது தண்ணீர், உணவு தரவும் ஏற்பாடுகள் இல்லை. மக்களை ஏழு மணி நேரம் காக்க வைத்தது மிக, மோசமான குற்றச் செயல். இதற்கு விஜய் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும்.

வ்வளவு மக்கள் கூடியிருக்கும் பகுதியில் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்?

லோக்கல் திமுகவினரும், திமுக அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் இந்த வேகத்துடன் இந்த சாவுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? அரசு நிர்வாகத்தை முடுக்கி வேலை வாங்கினால் போதுமே.

திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு வாய் திறந்து அனுதாபத்தை வெளிப்படுத்தவே சில நாட்களை கடத்தியவர் முதல்வர் ஸ்டாலின். கள்ளக் குறிச்சியில் இதைவிட அதிகமானோர் கள்ளச் சாராயம் அருந்தி மாய்ந்த போது, அந்த எளியோரை பார்க்கவோ, காப்பற்றவோ இந்த ஆட்சியாளர்கள் தற்போது காட்டிய வேகத்தில் கடுகளவும் காட்டவில்லையே. சென்னையில் ஏழை தூய்மை பணி செய்யும் பெண்கள் பத்து நாட்களாக சாலையில் அமர்ந்து போராடிய போது வந்து பார்க்காவிட்டாலும் அழைத்து பேசவோ, விளக்கம் தரவோ முதல்வர் ஸ்டாலின் விருப்பமின்றி மெளனம் காத்தார்.

விசாரணை கமிஷன் எதற்கு?

இந்த நிகழ்வு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டாலே ஒரே வாரத்தில் அனைத்து உண்மைகளையும் அம்பலபடுத்திவிட முடியும். அதைவிடுத்து, உயிரிழப்பு நடந்த ஒரு சில மணி நேரத்திலேயே அவசரமாக  நீதிபதி அருணா ஜெகதீசனைக் கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையம் அறிவிக்கிறார் முதல்வர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இதே நீதிபதி அருணாஜெகதீசன் தந்த அறிக்கையை ரகசியமாக மறைத்து குற்றம் இழைத்த காவலர்களை காப்பாற்றி பதவி உயர்வு தந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ கழித்து இந்த ஆணையத்தின் அறிக்கை வரட்டும் என தீர்மானித்து விட்டாரா? அம்பலப்பட வேண்டிய அனைத்து உண்மைகளையும் அது வரை பொத்தி வைக்கவோ, இவ்வளவு அவசரம்…? என்பதற்கெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு பதில்  சொல்வாரா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/22895/karur-vijay-meeting-tragedy/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு