மத அரசியலில் கேரள சிபிஎம் ஈடுபடுவதால் ஏற்படும் அபாயங்கள்
தி வயர் - தமிழில்: வெண்பா

தற்போது தாங்கள் ஆளும் ஒரே மாநிலத்தையும் இழந்துவிடுவோமோ என்ற கவலையில், கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்துத்துவ அரசியலையும் இஸ்லாமிய வெறுப்புணர்வையும்கூட இயல்பாக்கும் அபாயத்தைக் கொண்டதொரு அபாயகரமான அரசியல் உத்தியைப் பரிசோதித்து வருகிறது. இந்த உத்தி முற்றிலும் புதியதல்ல என்றாலும், இப்போது எவ்வித மன உறுத்தலோ-தயக்கமோ இன்றி செயல்படுத்தப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியையும் இந்துத்துவத்தையும் தொடர்ந்து விமர்சித்தும் எதிர்த்தும் வரும் அதே வேளையில், இந்த உத்தியானது ஒரே நேரத்தில் இந்து வகுப்புவாதத்தைத் திருப்திப்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது. இந்த உத்தியின் இரண்டு கூறுகள்: முதலாவதாக, பாஜகவிலிருந்து இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் ஈர்க்கும் நோக்கில், பழமைவாத ஆனால் தீவிரவாதமற்ற முஸ்லிம் அமைப்புகளை அரக்கர்களாகச் சித்தரிப்பது; இரண்டாவதாக, இந்து மத நிகழ்வுகளிலும் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்பது, ஏன், அவற்றுக்கு நிதி ஆதரவு அளிப்பது.
கேரளாவில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) உறுதியாக ஆதரிப்பதால், அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முடியாது என்ற அனுமானத்தின் அடிப்படையில் சிபிஐ(எம்)-இன் அரசியல் உத்தி அமைந்துள்ளது. மற்ற பல மாநிலங்களைப் போலல்லாமல், கேரளாவின் பொருளாதாரம், அரசியல் மற்றும் கல்வித் துறைகளில் முஸ்லிம்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், மாநிலத்தில் உள்ள கணிசமான இந்துக்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்கு எதிரான மனப்பான்மையுடன் மாறிவிட்டனர் என்ற அனுமானத்திலும் இடதுசாரிகள் செயல்படுகின்றனர்.
கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரும், மாநில சிபிஐ(எம்)-இன் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான தாமஸ் ஐசக், கோவில்களுடன் ஈடுபடுவதற்கான காரணத்தை இவ்வாறு விவரித்தார்:
“நாம் கோவில்களிலிருந்தோ அல்லது மதத்திலிருந்தோ முழுமையாக விலகி இருக்க முடியாது, ஏனெனில் இந்துத்துவ அமைப்புகள் இந்த இடங்களைக் கைப்பற்ற அதிக வாய்ப்பை வழங்கிவிடும். இந்த அமைப்புகளில் ஈடுபட்டு, பாஜக அவற்றைக் கைப்பற்றுவதைத் தடுப்பதில் தீவிரப் பங்காற்ற விரும்பும் எந்தவொரு முற்போக்கான தனிநபரையும் நாங்கள் ஆதரிப்போம். இதற்கு, மக்களின் வாழ்வில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நுட்பமானதொரு அணுகுமுறை தேவைப்படுகிறது”.
சிபிஐ(எம்)-இன் தற்போதைய அணுகுமுறைக்கு செப்டம்பர் 20 அன்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அகோலா ஐயப்ப சங்கமம்’ அல்லது ‘உலகளாவிய ஐயப்ப பக்தர்கள் மாநாடு’ சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. “சபரிமலையின் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, வகுப்புவாதத்திற்கு எதிராக நிற்கிறது,” என்று சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி ஒரு தலையங்கத்தில் எழுதினார்:
“சாதிப் படிநிலைகளையும் வகுப்புவாதப் பிரிவினைகளையும் பலவீனப்படுத்த இத்தகைய உள் சீர்திருத்த இயக்கங்கள் அவசியம் என்று இடதுசாரிகள் எப்போதும் கருதி வந்துள்ளனர். சங்கமத்தை மதவாதமாக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்கும் இதுவே காரணம். பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் நீண்ட காலமாக சபரிமலையை அரசியல் ஆதாயத்திற்கானதொரு ஆயுதமாகப் பயன்படுத்த முயன்று வருகின்றன; முற்போக்கு சீர்திருத்தத்தை நம்பிக்கையின் மீதான தாக்குதலாகச் சித்தரிக்கின்றன. சபரிமலை ஒருபோதும் வகுப்புவாத சக்திகளுக்குச் சொந்தமானதல்ல. அதன் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, சமூகங்களுக்கிடையேயான அதன் தொடர்புகள் மற்றும் அதன் சீர்திருத்தங்களின் வரலாறு ஆகியவை வகுப்புவாதத்திற்கு எதிராக உள்ளன”.
துரதிர்ஷ்டவசமாக, சபரிமலையை பாஜக ஆயுதமாக்குவதைத் தடுக்க சிபிஐ(எம்) தேர்ந்தெடுத்த பாதை, அதுவே சில முக்கிய சமரசங்களைச் செய்துகொள்வதை உள்ளடக்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி, கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் (LDF) மாநிலம் முழுவதும் பெண்கள் தலைமையிலான மனித சங்கிலிப் போராட்டத்தை உருவாக்கியது. இன்றோ, கோவிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்த பிரச்சினையில் கட்சி மௌனம் சாதிக்கிறது.
இந்தச் சூழ்நிலையின் முரண்நகையானது, முதல்வர் பினராயி விஜயன் மாநாட்டு இடத்திற்குத் தனது அதிகாரப்பூர்வ காரில், ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன (SNDP) யோக பொதுச் செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசனுடன் வந்தபோது, அது அபாயகரமான பரிமாணங்களை எடுத்தது. வெள்ளாப்பள்ளி நடேசன், முஸ்லிம்களைத் தவறாமல் அரக்கர்களாகவும், கிறிஸ்தவர்களை அவ்வபோது அவ்வாறு சித்தரிக்கவும் கூடிய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் இந்துப் பேரினவாதி. சமீப காலத்தில், முதல்வர் வெள்ளாப்பள்ளியைப் பலமுறை புகழ்ந்து தள்ளியுள்ளார் - அவரையே ஒரு காலத்தில் கேரளாவின் ‘தொகாடியா’ என்று முதல்வர் விவரித்திருந்தார்.
செப்டம்பர் 20 மாநாட்டில், முதல்வரின் தொடக்க உரைக்குப் பிறகு, எதிர்பார்க்கப்படாத காட்சி அரங்கேறியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநில முஸ்லிம்கள் "போதைப் பொருள் ஜிகாத்" நடத்துவதாகக் குற்றம் சாட்டிய கத்தோலிக்கப் பேராயர் ஒருவரை 'மாபெரும் அறிஞர்' என்று பாராட்டிய அமைச்சர், வி.என். வாசவன்தான் யோகி ஆதித்யநாத்திடமிருந்து வந்த ஒரு கடிதத்தைப் பாராட்டுதலுடன் வாசித்தார். உத்தரப் பிரதேச முதல்வர் தன்னால் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து, நிகழ்வுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். சுவாரஸ்யமாக, அவரது கட்சியோ இந்நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்தது மட்டுமல்லாமல், அருகிலேயே இதற்கு போட்டியாக மற்றொரு நிகழ்ச்சியையும் நடத்தியது.
இந்தச் சூழ்நிலை இதைவிட விசித்திரமாக இருந்திருக்க முடியாது: தனது சொந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முற்றிலும் கண்டிக்கத்தக்க வார்த்தைகளையும் செயல்களையும் மட்டுமே தனது புகழுக்குக் காரணமாகக் கொண்ட ஒரு மனிதரை எல்.டி.எஃப் அரசாங்கம் அழைத்திருந்தது. வகுப்புவாதத்தின் மிக விஷமத்தனமான சில நபர்களுடன் வெளிப்படையாகத் தெரிந்த இந்த இணக்கம், கேரள அரசின் வழக்கமான ஆதரவாளர்கள், எல்லாச் சூழ்நிலைகளிலும் கட்சியைப் பாதுகாப்பவர்கள் என அவர்கள் அனைவரையுமே திகைப்பில் ஆழ்த்தி மௌனமாக்கியது.
பல ஆண்டுகளாக கேரளாவில் சிபிஐ(எம்)-இன் பலவீனங்களில் ஒன்று, மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதியைக் கொண்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்குள் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்த இயலாமையே ஆகும். தேர்தல் கணக்குகள் மிகவும் சவாலாக மாறும் நிலையில், கட்சியின் கவனம் இந்துக்களிடையே, குறிப்பாக ஈழவர் சமூகத்தினரிடையே, கணிசமான வாக்குகளைத் திரட்டுவதில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இப்போது அது செய்வது சுயஅழிவுக்கானதொரு உறுதியான பாதையாகும். அதைவிட மோசமாக, இது வகுப்புவாதத்தையும் தீவிரப்படுத்தும்.
ஏற்கனவே, மாநிலக் காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன; இந்துத்துவ வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக இருப்பதும், முஸ்லிம்கள் மீதான சிறு குற்றங்களுக்குக்கூட மிக ஆர்வத்துடன் பாய்வதும் காவல்துறையின் செயலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு சமீபத்தியதொரு உதாரணம், முஸ்லிம் மத அமைப்பால் நடத்தப்படும் தனியார் பள்ளியில் பணிபுரியும் முஸ்லிம் பள்ளி ஆசிரியை ஒருவர், இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கு எதிரானது என்பதால் ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்குச் செய்தி அனுப்பிய சம்பவம். அந்த ஆசிரியையின் செய்தி உண்மையில் மிகவும் தவறானதுதான், ஆனால் இந்துத்துவ சித்தாந்தவாதிகளும் ஆதரவாளர்களும் பயங்கரமான வகுப்புவாதக் கருத்துக்களை வெளியிடும்போது கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அளவுக்கு அது மோசமானதல்ல.
இடதுசாரிகள், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் பலவீனமான நிலையில் இருந்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் முக்கியத்துவமானவர்கள். நாட்டின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருப்பதால், சிபிஐ(எம்) நமது அரசியல் வாழ்வில் ஒரு முக்கியமான இருப்பாகும். ஆனால் இப்போது கேரளாவில் அது செய்வது, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதன் முழுமையான ஆதிக்கத்திலிருந்து முழுமையான மறைவுக்கு மாறிய அழிவானது, அதனால் சுயமாக ஏற்படுத்திக்கொண்டதே என்பதை நினைவூட்டுகிறது. இந்த நாட்களில் வெளிப்படும் இத்தகைய அறநெறியற்ற சந்தர்ப்பவாதத்துடன் அது தொடர்ந்தால், கேரளாவும் வங்கம் மற்றும் திரிபுராவின் வழியில் செல்லக்கூடும்.
இது பாஜகவிற்கு கதவுகளை அகலத் திறந்துவிடும். கேரளாவில் பாஜக தேர்தல் ரீதியாக முன்னேறத் தவறியதற்குக் காரணம், மாநிலத்தின் தனித்துவமான மக்கள்தொகை அல்லது மதச்சார்பற்ற கண்ணோட்டம் என்பதை விட, அரசியல் களத்தின் பங்கை இரண்டு போட்டியிடும் கூட்டணிகளான காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (UDF) சிபிஐ(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் (LDF) -ம் ஆக்கிரமித்திருப்பதே ஆகும்.
கேரளாவில் நன்கு அறியப்பட்ட ஒரு நகைச்சுவை என்னவென்றால், எஸ்.என்.டி.பி-யின் (SNDP) வெள்ளாப்பள்ளி யாருக்காக வாக்குகள் கேட்டாரோ, அந்தத் தலைவர் டெபாசிட் இழந்தே மாநிலத்தின் தேர்தல் வரலாறு. வெள்ளாப்பள்ளியின் மகன், துஷார், கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அமைப்பாளர் ஆவார். இடதுசாரிகள் மூடநம்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அந்த நிகழ்வாவது தன்னுடைய புதிய நட்பைப் பற்றி பினராயி விஜயனை இருமுறை சிந்திக்க வைக்க வேண்டும்.
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/politics/dangers-ahead-as-cpim-navigates-religious-politics-in-kerala
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு