அஸ்ஸாம் ரைபிள்ஸை மணிப்பூரிலிருந்து வெளியேற்றுக!

மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை

அஸ்ஸாம் ரைபிள்ஸை மணிப்பூரிலிருந்து வெளியேற்றுக!

"சட்டவிரோதமாக குடியேறி போதைப்பொருள் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுடன்" அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்றழைக்கப்படும் துணை இராணுவப் படையினர் நெருங்கிய நட்புறவை பேணிவருவைதை சுட்டிக்காட்டி ‘அஸ்ஸாம் ரைபிள்ஸை மணிப்பூரிலிருந்து வெளியேற்றுமாறு மத்திய அரசுக்கு கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்று மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

"சட்டவிரோதமாக குடியேறிய போதைப்பொருள் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளுடனும்(நார்கோ பயங்கரவாதிகள்), சின்-குகி பழங்குடியினத்தை சேர்ந்த நார்கோ பயங்கரவாதிகளுடனும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் வெளிப்படையாகவே நட்பு பாராட்டி வருவதால், மணிப்பூர் மக்கள் அஸ்ஸாம் ரைபிள்ஸின் பாதுகாப்புப் பணி மீதிருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர்" என்று ஒருங்கிணைப்புக் குழுவின்(COCOMI) ஊடக ஒருங்கிணைப்பாளர் Somorendro Thokchom வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

மியான்மரில் இருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப்பாதையைக் கடந்து மணிப்பூர் மாநிலத்திற்குள் சட்டவிரோதக் குடியேறியவர்களே தற்போதைய பதற்ற நிலைக்கு காரணம் என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அவர்களால் மனிப்பூர்  மாநில மக்கள்தொகையின் இயல்புகளில் பாரதூரமான  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது; வனப்பகுதிகளை அழித்து அபினி செடிகளை பயிரிட்டுள்ளனர். மேலும் மத்திய மற்றும் மாநில அரசியலில் தலையிடுவதன் மூலம் பழங்குடி மக்களின் உயிருக்கு கொல்லி வைத்துள்ளனர்.

“எந்நேரமும் அசாம் ரைபிள்ஸ் படையினர் மணிப்பூர் மற்றும் மியான்மர் எல்லையில்தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தங்கள் கடமையை சரியாகச் செய்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களின் நுழைவை தடுத்திருந்தால், தொடர்ச்சியாக நடந்துவந்த சீர்குலைவு நடவடிக்கைகளை நிச்சயமாக தடுத்து நிறுத்தியிருக்கலாம், இப்போது நடப்பவையும் கூட நடந்திருக்காது”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அஸ்ஸாம் ரைபிளைச் சேர்ந்த கர்னல் புராரி (1998-99), ஜவான் தங்கோகின் ஹாக்கிப் மற்றும் 39வது கமாண்டன்ட்டாக இருந்த ஜஸ்ஜித் சிங் மற்றும் மணிப்பூர் காவல்துறையைச் சேர்ந்த லெட்மிங் ஹாக்கிப் ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக மிசோரம் காவல்துறை மற்றும் அசாம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸை சேர்ந்த படைவீரர்கள் மீது  இதேபோன்ற பல வழக்குகள் உள்ளன, இந்தமைப்பின் மீதிருந்த மக்களின் நம்பிக்கை உடைவதற்கு இந்நிகழ்வுகளே வழிவகுத்துள்ளன ”என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போதைய மோதலில் கூட, போதைப்பொருள்-பயங்கரவாதிகளுடன் கூட்டுசேர்ந்து அப்பாவி கிராம மக்கள் மீதான அவர்களின் இடைவிடாத தாக்குதல்களுக்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் துணை போகும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதன் மூலம் தேசப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்றர் என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மக்களிடம் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அவர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும் ஒரு சிப்பாய் என்ற முறையில் தன் கடமையை செய்யத் தவறிவிட்டனர் என்று அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைவீரர்கள் மீது அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூரில் இருந்து அஸ்ஸாம் ரைபிள்ஸை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக தேசப் பாதுகாப்பை நிலைநிறுத்தும் மத்திய இராணுவப் படைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்கும் பொருட்டு, மத்திய இராணுப் படைகளுக்கு போக்குவரத்து உதவிகள் செய்வதை தவிர்க்குமாறு தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

- விஜயன்

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://www.ifp.co.in/manipur/cocomi-appeals-for-assam-rifless-exit-from-manipur

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. சட்டவிரோத குடியேற்றம்தான் பதற்றத்திற்கு காரணம் என்பதும், இராணுவத்தை அனுப்ப சொல்லும் கோரிக்கையையும் இக்கட்டுரை கூறுகிறது இது விமர்சனத்திற்குரியது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு