நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!

உண்மையான ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது ஊழலுக்கும் அடிப்படையாக திகழும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளையும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்தும்; அமெரிக்காவின் புதியகாலனியாக இந்தியாவை மாற்றும் அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களை எதிர்த்தும், நாட்டின் விடுதலைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நடக்கும் ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.

நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!
அன்னா அசாரே தலைமையிலான 'ஊழல் எதிர்ப்பு இந்தியா' என்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான "ஜன் லோக்பால்" சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதிலிமிருந்து நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி டெல்லியில் நடந்த உண்ணா விரதத்தின்போது பல லட்சம் பேர் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது, சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சிக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
வரலாறு காணாத மாபெரும் ஊழல்கள்

சோனியா-மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சி, வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் சிக்கியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ.1,76,000 கோடி, காமன் வெல்த் விளையாட்டு ஏற்பாட்டில் ரூ.70,000 கோடி, ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், ஆதர்ஷ் வீட்டுமனையில் ரூ.60,000 கோடி ஊழல், பன்னாட்டு முதலாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் நிலத்தைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்ற பேரில் பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி, இரும்பு போன்ற கனிம வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடம் தாரை வார்த்ததிலும் பல லட்சம் கோடிகள் அரசின் கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு ஊழல், ஊழல் எங்கெங்கு காண்கிலும் ஊழல் என சோனியா-மன்மோகன் கும்பல் ஊழலில் திளைத்து வருகிறது.
அன்னா அசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பும், உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு (Global Financial Integrity - GFI) என்ற தொண்டு நிறுவனமும், மன்மோகன் கும்பலின் ஆட்சி ஆசியாவிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஆட்சி என்று அறிவித்தன. இதில் இரண்டாவதாக கூறப்பட்ட GFI என்ற நிறுவனம் அமெரிக்காவின் போர்டு பௌண்டேஷன் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். அன்னா அசாரே இயக்கத்தின் தலைமையிலுள்ள குழுவினரில் பலர் இந்த நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெற்றுதான் செயல்பட்டுவருகின்றனர்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, 2010ஆம் ஆண்டு நடத்திய ‘ஊழல் பற்றிய உலகளாவிய மக்களின் கருத்து’ என்ற ஆய்வின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் கட்டுக்கடங்காமல் செழித்து வளர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான நிதி பரிமாற்றங்கள், புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளின்கீழ் பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக சூதாட்டக்காரர்கள் பெருமளவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் அது கூறுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது: கார்ப்ரேட் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் - சர்வதேச சட்டங்களையும், தேசிய சட்டங்களையும் புறக்கணித்தும், இரகசிய வழிமுறைகளைக் கையாண்டும் சட்ட விரோதமான முறையில் ஆண்டொன்றுக்கு 1 டிரில்லியன் டாலர்கள் நாடு கடந்து கடத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு என்ற நிறுவனம் வரி ஏய்ப்பின் மூலமும், கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும், சுதந்திர வர்த்தகம் என்ற பேரில் தவறான விலை நிர்ணயித்ததன் மூலமாகவும், ஊழல் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21,300 கோடி அமெரிக்க டாலர்கள் பணம் (ரூ.9,58,500 கோடி) வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. இதில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி டாலர்கள் 1991-க்குப்பின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப்பின் பதுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.

எனவே ஊழலின் அளவு பிரம்மாண்டமாக பெருகிவருவதும், வெளி நாடுகளில் பதுக்கப்படுவது அதிகரித்து வருவதும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளால் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிவிட்டது.

ஏகாதிபத்திய ஆதரவு நிறுவனங்களின் ஆய்விலேயே இவ்வளவு என்றால் உண்மையான கருப்புப்பணத்தின் அளவு இதைவிட பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். நாட்டில் நடைபெற்றுவரும் மாபெரும் ஊழல்களுக்குக் காரணம் இந்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாரளமய தனியார்மயக் கொள்கைகளாகும். 1991 -ஆம் ஆண்டு நரசிம்மராவ் காலத்திலிருந்து தொடங்கி பா.ஜ.கட்சி உள்ளிட்ட அனைத்து ஆட்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொண்டுள்ள அரசியல் பொருளாதார உடன்படிக்கைகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மன்மோகன்சிங் கும்பல் செய்து கொண்டுள்ள அணுசக்தி மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் அனைத்தும் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. அரைக்காலனிய,  அரைநிலப்பிரபுத்துவ நாடான இந்தியாவில் அரைகுறையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் உலகமய தனியார்மயக் கொள்கைகளால் தகர்க்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. நீர், நிலம், ஆகாயம் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் நாட்டின் தொழிலையும்,  வேளாண்மையையும் அழித்து நாட்டை ஓட்டாண்டியாக்குவதுடன், நாட்டின் அரைகுறை சுதந்திரமும் ஒழிக்கப்பட்டு - நாட்டில் ஊழல் வெள்ளம் கரைபுரண்டோடுவதற்குக் காரணமாக உள்ளது. அதில் 80 சதவீத உழைக்கும் மக்கள் இந்தியாவில் தத்தளித்து நிற்கின்றனர்.

ஊழலுக்கு எதிரான உலகளாவிய மக்கள் இயக்கங்கள்

ஊழல் பிரச்சினை என்பது இந்தியாவிற்கு மட்டுமே உரித்ததன்று. மாறாக அது ஒரு உலகு தழுவிய பிரச்சினையாகும். இவ்வாண்டின் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொடங்கியுள்ள "அரபு எழுச்சி"கள் துனுசியா, எகிப்து, பக்ரைன் முதல் தற்போது லிபியா மற்றும் சிரியா வரை ஏற்பட்டுள்ள மக்களின் எழுச்சிகள் அனைத்திலும், ஊழல் ஒழிப்பு என்பது மையமான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இந்த இயக்கங்கள் அனைத்தும் ஊழலை மட்டுமே முன்வைத்து நடைபெறவில்லை. மாறாக அந்நாடுகளின் இராணுவ சர்வாதிகார ஆட்சியை தூக்கியெறிவதும், ஜனநாயகத்தைக் கொண்டுவருவதும் முக்கிய குறிக்கோளாக உள்ளன. ஆனால் இவ்வெழுச்சிகள் அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறது.

அந்நாடுகளில் இராணுவ ரீதியில் தலையிட்டு அவ்வாட்சிகளை ஒழித்துவிட்டு தமது அடிவருடிகளைக் கொண்டு பொம்மை ஆட்சியை நிறுவி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 2010ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு யுத்த தந்திரத் திட்டத்தை முன்வைத்து அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:
ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க அமெரிக்கா எந்த ஒரு நாட்டிலும் தலையிடும் என்றும் அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார். 2001 - இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் தமக்கு அடங்க மறுத்த நாடுகளை ‘பொறுக்கி அரசுகள்’ என அறிவித்து அந்நாடுகளில் இராணுவத் தலையீடு செய்தது. ஆப்கன் மற்றும் ஈராக் மீது இராணுவத் தலையீடு செய்து அந்த நாடுகளின் ஆட்சிகளை தூக்கியெறிந்து பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகம், மனித உரிமை பேரால் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, மக்களின் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு தமது பொம்மை ஆட்சிகளை எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் உருவாக்கியுள்ளது.

மக்களின் எழுச்சி தற்போது அரபு நாடுகளில் மட்டுமல்லாது முதலாளித்துவ மைய நாடுகளிலேயே காட்டுத் தீ போல் பற்றிப் படர்கிறது. அமெரிக்காவின் "வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்", ``முதலாளித்துவம் ஒழிக" என்று அந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சி பரவியுள்ளது. அது ஐரோப்பா, ஜப்பான் என்று முதலாளித்துவ மைய நாடுகள் முழுவதும் 87 நாடுகளில் பற்றிப் படர்ந்து வருகிறது.

இவ்வாறு மக்கள் உலகம் முழுவதும் ஆட்சிக்கு எதிராக போர்க்கோலம் கொண்டு போராடுவதற்கான காரணம் என்ன?

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடைமுறைப்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை உலகு தழுவியதாக மாற்றியுள்ளது. 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இன்னமும் ஏகாதிபத்திய நாடுகள் மீளவில்லை. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்தார்கள். இதற்கு எதிராகத்தான் மக்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்தும், ஜனநாயகத்திற்காகவும், ஊழலை எதிர்த்தும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.

இந்தியாவில் மன்மோகன் கும்பலின் ஆட்சி பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதையும், மாபெரும் ஊழல்களில் ஈடுபடுவதை எதிர்த்தும் மக்கள் மத்தியில் கோபம் வெடிக்கின்ற ஒரு சூழலில், ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்கள் மன்மோகன் கும்பலின் ஊழலை எதிர்த்து அறிக்கைவிடும் ஒரு நிலைமையில்தான் அன்னா அசாரே இயக்கம் ஊழலை மட்டுமே முன்நிறுத்தி ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

அன்னா அசாரே கொண்டுவர வேண்டும் என்கிற “ஜன்லோக்பால்” சட்டமோ, அல்லது அரசாங்கம் முன்வைக்கும் “லோக்பால்” சட்டமோ ஊழலை ஒழிக்க உதவுமா என்பதை பரிசீலிக்கும்முன் ஊழல் என்பதன் இலக்கணம் என்ன என்பதையும், அதற்கான அடிப்படைகளையும் பரிசீலிப்போம்.

ஊழலின் இலக்கணம்

எங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

ஜனநாயகக் குடியரசுக்கு இனி சொத்துரிமையினால் ஏற்படும் சொத்துரிமை வேறுபாடுகளைப் பற்றி (குடிமக்கள் ஒருவருக் கொருவரிடையில் ஏற்படும் வேறுபாடுகளைப் பற்றி) அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியாது. அதில் செல்வம் தன்னுடைய சக்தியை மறைமுகமாக (உபயோகிக்கின்றது) பயன்படுத்துகின்றது, ஆனால் (அவ்வாறு செய்கையில்) முன்னிலும் உறுதியாக, திட்டவட்டமாகத் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. ஒரு புறத்தில் அதிகாரிகளை நேரடியாக லஞ்சத்தால் தம் கைக்குள்ளடக்கும் வடிவத்தில் – இதற்கு ‘சீரிய’ உதாரணத்தை அமெரிக்கா தருகின்றது – மறுபுறத்தில் அரசாங்கத்திற்கும் பங்குகள் பரிவர்த்தனை அரங்கிற்கும் (ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்கும்) ஒரு நேசக்கூட்டின் வடிவத்தில்...

லெனின், “ஏகாதிபத்திய பொருளாதாரவாதமும் மார்க்சியம் பற்றிய ஒரு கேலிச்சித்திரமும்” என்ற தன்னுடைய நூலில், எங்கெல்சால் மேலே முன் வைக்கப்பட்ட மேற்கோளை எடுத்துக்காட்டுகிறார்.

அவர் முதலாளித்துவ சமுதாயத்தில் ஊழலின் சாராம்சத்தை ஆய்வு செய்துவிட்டு, முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை அடையும் போது எவ்வாறு (ஊழல்) அது மாற்றமடைகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

ஜனநாயகக் குடியரசு என்பது ‘முறைப்படி, தர்க்கவியல் வகையில்’ முதலாளித்துவத்துக்கு முரண்பட்டது, (முதலாளித்துவத்தை மறுதலிக்கிறது) ஏனெனில் அது “அதிகாரபூர்வமாக” பணக்காரர்களையும் ஏழைகளையும் சரிசமமான நிலையில் வைக்கிறது. பொருளாதார அமைப்பிற்கும் அதன் மீது எழுப்பப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கு-மிடையேயுள்ள ஒரு முரண்பாடு அது:  ஏகாதிபத்தியத்திற்கும் குடியரசுக்குமிடையே அதே முரண்பாடு இருக்கிறது. சுதந்திர (தங்குதடையற்ற) போட்டியின்றி (முதலாளித்துவம்) ஏகபோகத்திற்கு மாற்றம் அடைவதினால் அரசியல் சுதந்திரங்களை அடைவது முன்னிலும் “கடினமாகின்றது” என்பதால், என்ற எதார்த்ததினால், இந்த முரண்பாடு ஆழ்ந்ததாகின்றது அல்லது முற்றிவிடுகிறது.

அப்படியானால் முதலாளித்துவம் எவ்வாறு ஜனநாயகத்தை ஏற்று ஜனநாயகம் இருப்பதை அனுமதித்துக்கொண்டு நிற்கமுடிகின்றது? முதலாளித்துவத்தின் சர்வ வல்லமையை மறைமுகமாக செயல்படுத்துவதினால். (அது அவ்வாறு ஜனநாயகத்தை சகித்துக் கொண்டிருக்கிறது) அதற்கு இரு பொருளாதார வழிவகைகள் இருக்கின்றன.

1)நேரடியாகத் தரும் லஞ்சம்

2)அரசாங்கம், பங்குக்கள் பரிவர்த்தனை அங்காடி ஆகிய இவ்விரண்டின் நேசக்கூட்டு,

(நம்முடைய) தத்துவக் கூற்றுகளில் இது பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது – பூர்ஷ்வா அமைப்பு முறையில் நிதிமூலதனம் “தங்குதடையின்றி சுதந்திரமாக லஞ்சம் கொடுக்கலாம், எந்த அரசாங்கத்தையும் விலைக்கு வாங்கமுடியும்”

விற்பனைப் பண்ட உற்பத்தி மேலோங்கி ஆதிக்கம் பெற்றுவிட்டதும், பூர்சுவா வர்க்கமானது ஆதிக்கதிற்கு வந்தவுடன் பணத்தின் பலம் ஓங்கிநின்றதும் – லஞ்சம் தருவது, (நேராகவோ அல்லது பங்குகளின் பரிவர்த்தனை அங்காடி அரங்கின் மூலமோ) எந்தவிதமான அரசாங்கத்திலும்,  எந்தவிதமான ஜனநாயகத்திலும் லஞ்சம் தருவது என்பது – “அடையக்கூடிய”தாகின்றது. (அதாவது விற்பனைப் பண்ட பொருளுற்பத்தி ஆதிக்கம் செலுத்துகையில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்வது எந்தவிதமான அரசாங்க வடிவத்திலும் சாத்தியமாகின்றது மொ-ர்)
முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியத்திற்குப் பீடத்தைத் தந்தவுடன், அதாவது முந்தையகால முதலாளித்துவத்திற்குப் பதில் ஏகபோக முதலாளித்துவம் வந்தவுடன் - (மேற்கூறிய) இந்த விசயத்தில் எது மாறுகின்றது? என்று கேட்கலாம்.

பங்கு மார்க்கெட்டின், பங்கு பரிவர்த்தனை அரங்கின் சக்தி அதிகரிக்கின்றது என்பதுதான் அந்த மாற்றம். ஏனென்றால் நிதிமூலதனம் என்பது, தொழிலியல் மூலதனமானது, அதன் உச்ச உயர்ந்த[ ] மட்டத்தில், ஏகபோகம் என்ற மட்டத்தில், வங்கி மூலதனத்துடன் ஒன்றாக சேர்ந்துவிட்ட
தொழிலியல் மூலதனமாகும். பெரிய வங்கிகள் பங்குகள் பரிவர்த்தனை அரங்குடன் ஒன்றாக இணைந்து, அதை அப்படியே தம்முடன் சேர்த்துக்கொண்டு விடுகின்றன. (ஏகாதிபத்தியம் பற்றி வெளியாகியுள்ள நூல்களும் கட்டுரைகளும், பங்குகள் பரிவர்த்தனை அரங்கின் பாத்திரம் வரவரக் குறைந்து வருவதாகக் கூறுகின்றன. ஆனால் இராட்சச வங்கி ஒவ்வொன்றும் அதுவே ஒரு பங்குகள் பரிவர்த்தனை அரங்காகியுள்ளது என்ற பொருளில்தான்.)”

பழைய காலனிய முறைக்குப் பதிலாக புதிய காலனிய முறை ஏற்பட்டதும் சூழ்நிலை மிக மோசமான முரண்பாடுடையதாயிற்று என்பதை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு புறம், காலனிய முறை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாகவும் மற்றும் அப்போதிருந்த சோசலிச அமைப்பு மிகப்பெறும் நன்மதிப்பை பெற்றிருந்ததன் காரணமாகவும் புதிய காலனிமுறை பழைய காலனி முறையைவிட மிகுந்த “ஜனநாயக முறையை” மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பூர்ஷ்வா ஜனநாயகமுறை, இப்போது எல்லா தேசங்களும் சமமானவை என்றும், ஆகையால் (எல்லா தேசங்களும் சமமானவை), எல்லா தேசமக்களும் சமமானவர்கள் என்றும் சமாதானப்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம், சில தேசங்கள் மற்றெல்லா தேசங்களின் மீது ஆதிக்கம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியமுறை தொடர்கிறது.

ஜனநாயக முகமூடியைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டே, அத்தகைய ஆதிக்கத்தை அனுமதிப்பதற்கு சர்வதேச நிதியம் (IMF), உலகவங்கி (World Bank) போன்ற பிற சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன (Devised). மறுபுறம், அதேசமயம், புதிய காலனியத்தின் கீழ் நிதி மூலதனம் ஒன்றுகுவிதல் அதிகரித்தல் மற்றும் தொழிலின் மீது அவற்றின் கட்டுப்பாடு வரலாறு காணாத மட்டத்தை அடைந்தது. ஜனநாயக முகமூடியைத் தக்கவைத்துக்கொண்டே, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் (the Structural Programs) அதாவது ஏகாதிபத்திய வல்லரசுகளின் பொருளாதாரத் திட்டங்கள் புதிய காலனிய நாடுகளின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டன.

கீன்சிய கொள்கைகளுக்குப் பதிலாக புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகள் மேற்கொள்ளப்படுதல் மற்றும் உலகமயமாதலின் எழுச்சி - அதாவது தேசபடங்கள் (தேச விதிகள்) மரபுகள் ஆகியவற்றை மதிக்காமல் மூலதனம் தேச எல்லைக்குள் சுதந்திரமாக வந்து செல்வதற்கு அனுமதி அளிப்பதால் சூழ்நிலை மேலும் ஜனநாயகமற்றதாகிவிடுகிறது (undemocratic).

இந்த எல்லா மாறுதல்களுக்கு ஊடேயும் ஜனநாயக முகமூடி கலையாமல் பாதுகாக்க வேண்டும். பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் ஜனநாயகமற்ற தன்மைக்கும் அரசியல் அமைப்பின் ஜனநாயக கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை எவ்வாறு இணக்கம் காணச் செய்வது (சம்மதம் செய்துகொள்ளச் செய்வது).

லெனின் சுட்டிக்காட்டிய அடிப்படையான முறைகளில் மாற்றமில்லை - அதிகாரிகளுக்கு பகிரங்கமாக லஞ்சம் அளித்தல் (2G அலைக்கற்றை ஊழல், வாட்டர் கேட் ஊழல் போல) மற்றும் பங்கு பரிவர்தனை அங்காடிக்கும் அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான தொடர்பு (பன்னாட்டு கம்பெனிகள், பெரும் இந்திய கார்பரேட்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்றுள்ள நெருக்கமான தொடர்புகள் போல).

இத்துடன் லெனின் காலத்தில் இல்லாத ஒன்று அதாவது மூன்றாவது நிகழ்வுப்போக்கு (phenomena) ஏற்கெனவே பெறப்பட்ட அடிப்படையான முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும் கூட குறைத்து விடுதல். இவ்வாறு சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமை, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை, சமூகப் பாதுக்காப்புக்கான உரிமை - இவையெல்லம் உலகமயமாதலின் கீழ் வெட்டி குறுக்கப்படுகிறது.

ஆகையால், ஊழலை உண்மையாகவே எதிர்த்துப் போராடவேண்டுமானால், நாம் இந்த முதலாளித்துவ அமைப்பையே எதிர்த்துப் போராடவேண்டும் என்பதைக் காணலாம்.

சுருங்கக் கூறின்:

1) முதலாளித்துவம் எந்தவிதமான அரசாங்கத்திலும் எந்த விதமான ஜனநாயகத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியும். அதற்கு இரு பொருளாதார வழிகள் இருக்கின்றன.

அ) நேரடியாக தரும் லஞ்சம்

ஆ) அரசாங்கம் பங்குகள் பரிவர்த்தனை அங்காடி ஆகிய இரண்டின் கூட்டு.

2) இன்றைய புதியகாலனியக் கட்டத்தில் நிதிமூலதனம் தன் சொந்த நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசப்படுத்துவதின் மூலம் அந்நாட்டு அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செய்ய முடிவதைப் போலவே, அந்நிய நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசப்படுத்துவதன்
மூலம் அந்நாட்டின் அரசாங்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும்;

தம் சொந்த நாட்டு அரசாங்கத்துக்கும் பங்கு பரிவர்த்தனை அங்காடிக்கும் இடையிலான கூட்டின் மீது ஆதிக்கம் செய்வதைப் போலவே, நிதிமூலதனம் அந்நிய நாட்டு அரசாங்கத்துக்கும் பங்கு சந்தை

அங்காடிக்கும் இடையில் கூட்டு ஏற்படுத்துவதன் மூலம் அந்த நாட்டின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

3) முதலாளிகள் (மூலதனம்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடைவதும் ஆகிய இரண்டுமே ஊழல் ஆகும்.

முதலாளித்துவ ஊழலை அன்னா அசாரே கும்பல் எதிர்க்கவில்லை

அன்னா அசாரேவுக்கோ, அவரை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தும் அரசுசாரா அமைப்புகளுக்கோ, நமது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு பெரும் தரகுமுதலாளிகள் மேற்கொள்ளும் இரு பொருளாதார வழிகள் அதாவது

அ) நேரடியாக தரும் லஞ்சம்

ஆ) அரசாங்கத்திற்கும் பங்குகள் பரிவர்த்தனை அங்காடிக்கும் இடையிலான கூட்டு ஆகிய இரண்டைப் பற்றி கவலை இல்லை.

முதலாளிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடையும் ஊழலைப் பற்றியும் அன்னா அசாரே கும்பலுக்கு கவலையில்லை.

ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் மீது நெருப்பைக் கக்கும் அன்னா அசாரே கும்பல், பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு பெரும் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் குழுமங்கள் மற்றும் பிற ஆளும் வர்க்கப் பிரிவினர்களைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஆனால் மேற்கூறப்பட்ட முதலாளித்துவ கும்பல்கள்தான் ஊழல் மற்றும் நேர்மையான, அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமூல்படுத்தல் ஆகிய இரண்டு முறைகளின் மூலம் பிரதானமாகப் பயனடைபவர்கள். மேலும் அரசாங்க மட்டத்திலான ஊழல் நடைமுறைகளில் தொடர்புடைய பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் அன்னா அசாரேயின் ஜன்லோக்பால் அமைப்பில் நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை.

ஜன்லோக்பால் மசோதா முழுவதுமாக நீக்க விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் பெரும் குற்றமான “ஊழல்” குறித்து அதற்குச் சொந்தமான ஒரு வரையறையை வகுத்துக்கொள்ளவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்ற ஒரு செய்தியாகும்.

ஜன் லோக்பால் மசோதாவின் ஆசிரியர்கள், 1988ஆம் ஆண்டு குற்றத்தடுப்புச் சட்டத்தின் 2(4) பிரிவு “ஊழல்” குறித்து என்ன வரையறை செய்துள்ளதோ அதையே தமது ஜன்லோக்பால் மசோதாவிலும் “ஊழல்” குறித்த வரையறையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகையால் ஜன்லோக்பால் மசோதாவில் உள்ள “ஊழல்” குறித்த வரையறை அதற்குச் சொந்தமானது அல்ல. தற்பண்பு உடையதுமல்ல. அதற்கு மாறாக குற்றத் தடுப்பு சட்டத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. ஆகையால் அது தாய் சட்டத்தின் எல்லா பிற்போக்கையும் வரித்துக்கொண்டதாகும்.

1988ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டம் பொதுவான ஊழலை ஒழிப்பதற்கான ஒரு சட்டம் அல்ல. அதற்கு மாறாக, அதிகாரபூர்வமாக, சட்டப்படியாக செய்துகொடுக்கவேண்டிய ஒன்றை அவ்வாறு செய்துகொடுப்பதற்குப் பதிலாக, தவறான வழிகளில் செய்து கொடுப்பதற்கு பணம் அல்லது வெகுமதியாகக் கொடுக்கப்பட்ட பொருட்களை லஞ்சமாக (கையூட்டாக) பெற்றுக்கொண்டு ஊழல் நடைமுறையில் ஈடுபடும் அரசு ஊழியர்களை (public servants) தண்டிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

ஜன் லோக்பால் மசோதாவும் அரசாங்கத்தின் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தைப் போலவே, ஊழலைப் பற்றிய தனது வரையறையில் ஊழல் என்பது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடைவதை மட்டுமே ஊழல் என்று வரையறை செய்கிறது. முதலாளிகள் (பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செய்வதை ஊழல் என்று வரையறை செய்யவில்லை. முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடியாக தரும் லஞ்சத்தை தனது ஊழலைப் பற்றிய வரையறையில் சேர்க்காததற்குக் காரணம் என்ன?

ஏகாதிபத்திய சேவையில் அரசுசாரா நிறுவனங்கள்

அன்னா அசாரேவை முன்னிறுத்தி ஜன்லோக்பால் மசோதாவுக்காக போராடும் India Against Corruption என்ற அமைப்பு ஒரு அரசுசாரா அமைப்புதான். அரசுசாரா அமைப்பு (NGO) என்பதே தவறாக சூட்டப்பட்ட பெயர்தான். அரசுசாரா அமைப்புகள் வெளிநாட்டு அரசுகளின் நிதிமூலதனத்தில் இயங்குகின்ற அரசு சார்ந்த நிறுவனங்களே. அரசுசாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள், ஏகாதிபத்திய அமைப்புகள் (பன்னாட்டு நிறுவனங்கள்) மற்றும் தரகுமுதலாளித்துவ ஆட்சியினரால் நிதிவழங்கப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம், தனியார் வங்கிகள், ஆசிய வங்கி போன்ற நிதிமூலதன கும்பல்கள் அரசுசாரா நிறுவனங்களுக்கு நிதிவழங்குவது மட்டுமல்லாமல் அவற்றை நெறிப்படுத்தவும் செய்கின்றன.

அன்னா அசாரே தலைமையிலான “ஊழலுக்கு எதிரான இந்தியா” என்ற அமைப்பின் தலைமையில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் அமைப்பின் நிதி உதவிப் பெற்றே செயல்படுகின்றனர். அரவிந்த் கேஜரிவால் தமது நண்பர் மனிஷ் சிசோடியா மூலம் (கபீர் என்ற அமைப்பு) அந்நிறுவனத்திடமிருந்து 3,97,000 டாலர்கள் பெற்றுள்ளார். இத்துடன் நீல்கேணீ (NLAEAR) 2,30,000 டாலர்களும், ஜவகர்லால் பல்கலைக்கழகம் 4,00,000 டாலர்களும், மாத்யூடைட்டன் (Sa-than) 9,10,000 டாலர்களும், சந்தீப் தீட்சித் (CBGA) 6,50,000 டாலர்களும், யோ கேந்திர யாதவ் (ICSSR) 3,50,000 டாலர்களும் பிரதாப் பானு (CPR) 6,87,000 டாலர்கள், பார்த்தீப் ஷா (CMAC) 2,50,000 டாலர்களும், அபித் பெவார் (NFI) 25,00,000 டாலர்களும், கிளாட்வின் ஜோசப் (ATREE) 13,19,391 டாலர்களும், சினுஸ்க் மீதர் (Winrock Intl) 18,00,000 டாலர்கள், இந்தியா ஜெய்சிங் (Laugher and Collective) 12,40,000 டாலர்களும், அகிலா சிவராசன் (CA & R) 5,00,000 டாலர்கள் என அனைவரும் பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு இக்கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நிதி உதவி பெற்று - ஏகாதிபத்தியத்தின் அடிமை சேவகர்களாக செயல்பட்டு வருகின்றனர். உள்ளூர் பிற்போக்கு அரசுகளின் தனிப்பட்ட துணை ஒப்பந்தக்காரர்களாகவும் இவ்வமைப்புகள் செயல்படுகின்றன. அரசுசாரா அமைப்புகள் அராசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக செயல்படுகின்றன.

சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துக்களில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவ்வமைப்புகளை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏகாதிபத்திய கையாட்கள் ஆவர். அனைத்து அரசுசாரா அமைப்புகளை கண்ணுக்குத் தெரியாத ஏகாதிபத்தியக் கைகளால், அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குறிக்கோள்களை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர். உலகவங்கி மற்றும் பிற ஜ.நா. அமைப்புகள் தாம் வழங்கும் நிதி யாவற்றையும் அரசுசாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. அதை அப்படியே ஏற்று பல்வேறு அரசாங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலும் அரசுசாரா அமைப்புகளின் செயல்பாடுகள் அப்போதைய ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டன.

உலகமயமாக்கல் காலகட்டத்தில், குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் திருத்தல்வாதிகளின் ஆட்சிகள் வீழ்ச்சியுற்ற பின்னர், அரசுசாரா மற்றும் குடிமை சமுதாய அமைப்புகள் தாராளமயமாக்கலின் மோசமான விளைவுகளை ஈடுசெய்யும் பணியில், ஏகாதிபத்தியவாதிகளால் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை தங்களது கடமையாக ஏற்றுச் செயல்படுகின்றன.

அவை ஏகாதிபத்திய அமைப்புகளாகிய உலகவங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களை சீர்திருத்தியமைக்க முடியும் என்ற மாயையை மக்களிடம் பரப்ப முயலுகின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை நீர்த்துப் போகச் செய்து, சீர்த்திருத்தக் கருத்தாக்கத்திற்கு மக்களைத் திருப்பியிழுத்துச் செல்கின்றன. இன்று ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகெங்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து திசைதிருப்பும் பணியில் அரசுசாரா அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்தியத்தையும் தரகுமுதலாளித்துவத்தையும் எதிர்த்தப் போராட்டத்தை திசைத் திருப்பவே அன்னா அசாரே கும்பல் ஜன் லோக்பால் மசோதா, அதிகாரிகளைத் தண்டிப்பதற்கான சட்டமாக குறுக்கிக்கொள்கிறது. ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள், தரகுமுதலாளிகளின் ஊழல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடும் சட்டமாக ஜன்லோக்பால் மசோதாவை அது உருவாக்க மறுக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அரசுசாரா தொண்டுநிறுவனங்களும் அரபு நாடுகளில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சியை எவ்வாறு தயாரித்த்து என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறுவதைப் பாருங்கள். இவ்வாண்டு பிப்ரவரி 15ம் தேதி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது “அரபு நாடுகளில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒரு வலைப்போரை (Net war) நடத்துவதற்கு நாங்கள் உதவி செய்தோம். அதே போல ரசிய, சீன, இந்திய மொழிகளில் இணையதளப்பிரச்சாரத்தை துவக்க உள்ளோம்” என்று அவர் கூறினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் 2010ம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட தமது யுத்த தந்திர கொள்கைகள் அந்நிய நாடுகளில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், போராட்டம் நடத்தும் என்று அறிவித்துள்ளது. புஷ் ஆட்சியின்போது ஈரானில் ஜனநாயகத்தைக் காப்பது எனும் பேரில் அந்த ஆட்சியைக் கவிழ்த்து, தமது பொம்மை ஆட்சியை நிறுவுவதற்கு ஒதுக்கிய 10 மில்லியன் டாலர்கள் நிதியை 75 மில்லியன் டாலர்களாக உயர்த்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இவை அனைத்தையும் தனது அடிவருடிகள் மூலமும், அரசுசாரா அமைப்புகள் மூலமுமே செய்து வருகின்றது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் குடிமை சமுதாய அமைப்புகள், அரசுசாரா அமைப்புகள் மற்றும் பிற தமது அடிவருடிகள் மூலம் தமக்கு எதிரான ஆட்சிகளை கவிழ்க்கும் செயலில் ஈடுபடுகிறது.

இன்று அரபு நாடுகளில் எழுந்துள்ள மக்களின் கிளர்ச்சிகள், அது ஆரம்பத்தில் தன்னிச்சையாக வெடித்துக் கிளம்பியிருப்பினும், அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் தலையிட்டு தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். தங்களின் மேலாதிக்கத்திற்கு பணியாத ஆட்சிகளை, ஜனநாயகத்தைக் காப்பது என்ற பேரில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகின்றனர். லிபியா அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஏற்கனவே பழைய சோவியத் யூனியனிலிருந்து வெளியேறிய ஜார்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ‘வண்ணப் புரட்சிகள்’ மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதே முறையில்தான் தற்போது லிபியா போன்ற நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம், அரபு நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகளைப் பயன் படுத்துவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக ஒழுங்கமைப்பை மாற்றியமைத்து தமது மேலாதிக்கத்தை நிறுவ முயற்சி செய்கிறது.

இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் NGO என்ற பெயரில் மக்கள் சமூகங்கள் மக்களை அவற்றின் அடிமைகளாகப் படிப்படியாக மாற்றிச் செல்கின்றன. இறுதியில் அரசின் அதிகாரங்களை தமது கைகளுக்குப் படிப்படியாக மாற்றிக் கொள்கிறது. அரசுகளின் அனைத்து வேலைத் திட்டங்களிலும் தலையிட்டு, அவற்றை உருவாக்கிய ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிகழ்ச்சி நிரலுக்கு உகந்ததாக மாற்றிக் கொள்கிறது.

பார்தா சட்டர்ஜீயும் சார்ல்ஸ் ரெய்லரும் Model of civil society என்ற நூலில் மக்கள் சமூகத்திற்கான மூன்று நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்.

1. அரசாங்கம் சாரா கூட்டுக்களை உருவாக்கல்.

2. இவ்வகையான அரசுசாராக் கூட்டமைப்புக்களை இறுக்கமான அமைப்பாக்கல்.

3. இவ்வமைப்புக்களூடாக அரச கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தல்.

(Taylor and Saterjee 1990: 90-118) ஆக NGO களினுடாகக் கட்டமைக்கப்படும் மக்கள் சமூகத்தை அரசின் மீது செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக, அரசைத் தமக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் கருவியாக, ஏன் புதிய அரசுக்களைக் கூட உருவாக்கும் ஆயுதமாகப் பலப்படுத்துவதே ஏக்கதிபத்திய அரசுகளதும், மூலதனச் சொந்தக்காரர்களதும், அதன் தத்துவார்த்த கர்த்தாக்களதும் பிரதான நோக்கமாகும்.

மேற்கண்ட சம்பவங்களை தொகுத்துப் பார்க்கும்போது அன்னா அசாரே தலைமையிலான அரசுசாரா அமைப்புகள் சமூக சேவை நிறுவனங்கள் அல்ல, அது ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் அமைப்புகள்தான் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அதுவே அது முன்வைத்துள்ள ஜன்லோக்பால் திட்டத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் முன்வைக்கும் லோக்பால் திட்டமோ அல்லது அதற்கு மாற்றாக அன்னா அசாரே கும்பலின் ஜன்லோக்பால் திட்டமோ ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கக் கூடிய பன்னாட்டு முதலாளிகளையும், உள்நாட்டு தரகு முதலாளிகளையும் ஊழல் ஒழிப்பு சட்ட வரம்பிற்குள் கொண்டுவரவில்லை. இதுவே இவற்றுக்குள் உள்ள ஒற்றுமையாகும். இவை இரண்டுமே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
 

அன்னா அசாரே கும்பலின் ஜன் லோக்பாலானது இச்சட்டத்திற்குள் பிரதமரையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் கொண்டுவரவேண்டும் என்று கோருகிறது. ஆனால் பிடிவாதமாக அரசாங்கம் அதை மறுக்கிறது. அதற்கு நிபந்தனைகளை விதிக்கிறது. அரசாங்கம் தமது லோக்பால் சட்டத்திற்குள் தொண்டு நிறுவனங்களையும் அதன் பொறுப்பாளர்களையும் கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறது. அரசாங்கம் ஊழல் ஒழிப்புச் சட்ட வரம்பிற்குள் பிரதமர் மற்றும் நீதிபதிகளை நீக்கிவைப்பதன் மூலம் ஊழல் மலிந்த ஆட்சியை தக்கவைக்க முயல்கிறது. அதே நேரத்தில் இந்த ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளை செயல்படுத்தி மக்கள் மத்தியில் தனிமைப்பட்டு போயுள்ள இன்று, ஆளும் கும்பலுக்கு மாற்றாக தொண்டு நிறுவனங்களை உருவாக்கும் வேலையை அன்னா அசாரே கும்பல் உள்ளிட்ட அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் செய்கின்றன. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் பணிந்து போக மறுத்தால் அவர்களை நிர்பந்திக்க தொண்டு நிறுவனங்களை ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்துகிறார்கள். இதைக் கண்டு அஞ்சுகின்ற அரசாங்கம் அவர்களை ஊழல் ஒழிப்பு சட்டத்திற்குள் கொண்டுவர விரும்புகிறது. இதுவே இரண்டு ஊழல் ஒழிப்புத் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளாகும்.

 

ஊழலின் இரண்டுவகை:

இதுவரை நாம் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்க செலுத்துவதற்காக செய்யப்படும் முதலாளித்துவ ஊழல் பற்றி பார்த்தோம். ஊழலில் இன்னொரு வகை உண்டு. அது இலஞ்ச லாவண்ய ஆட்சிமுறையாகும். அதாவது அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், நீதித்துறையினர் போன்றவர்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மக்களை சூறையாடுவது. அதாவது மக்களுக்குத் தேவையான காரியங்களை செய்துகொடுப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் மற்றும் பிற அதிகாரத்தில் உள்ளவர்களும் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பது. இது அரசு மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக செய்யப்படும் ஊழல் அல்ல. அதற்கு மாறாக முதலாளித்துவ முறையில் ஆட்சியாளர்கள் மக்களை சூறையாடி கொள்ளையடிக்கும் முறையாகும். இவ்வாறு இலஞ்ச லாவண்ய ஆட்சிக்கு எதிராகவே பெரும்பாலான மக்கள் அணிதிரளுகின்றனர். மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எதிர்க்கொண்டிருக்கிற, இத்தகைய சிறு சிறு ஊழல்களை எதிர்த்துப் போராடுவதால் மட்டும் ஊழல் ஒழிப்பில் வெற்றியடைய முடியாது. ஏனெனில் முதலாளித்துவம் அரசு அதிகாரத்திற்காக கொடுக்கும் ஊழல்தான் மக்களின் அனைத்து வாழ்வுத் துறைகளையும், சிறு சிறு ஊழல்கள் உள்ளிட்டு அனைத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. எனவே அத்தகைய ஊழல்களை எதிர்த்துப் போராடுவதுதான் பிரதானமாகும். அதுமட்டும்தான் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும்.

ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், நாட்டின் மீதும், அரசின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரடியாக இலஞ்சம் வழங்குவது என்பது ஒருவழியாகும். நாட்டின் மீதும், அரசின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான இரண்டாவது வழி பங்குசந்தைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள உறவுகளின் மூலம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுவது. அதாவது அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் IMF, உலகவங்கி, உலகவர்த்தக கழகத்தின் மூலம் பலதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதிய தாராளமயக் கொள்கைகளை திணிப்பதன் மூலமும்; அமெரிக்க-இந்திய இருதரப்பு அரசியல் பொருளாதார இராணுவ ஒப்பந்தங்கள் மூலமும் இந்தியாவை தமது புதியகாலனியாக மாற்றிவருகின்றனர். இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமும் அமெரிக்கா இந்தியாவை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிறது.

எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது ஏகாதிபத்தியவாதிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியாக வழங்கும் இலஞ்சத்தை எதிர்த்தும்; ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொண்டுள்ள பல்தரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை எதிர்த்தும் நடத்தும்^ போராட்டம் ஆகும்.

இந்திய அரசு கடைபிடிக்கும் புதிய காலனிய தாராளமயக் கொள்கைகளே ஊழலுக்கு அடிப்படை

1947-ல் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றியமைக்கப்பட்ட காலந்தொட்டே இந்தியாவில் ஊழல் நடந்துக்கொண்டுதான் வருகிறது. அப்போதிருந்தே ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும் அரசு இயந்திரத்தை தம் வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடி ஊழலில் ஈடுப்பட்டே வந்துள்ளனர். எனினும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு கடைபிடித்து வரும் புதிய காலனிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தான் நாட்டில் இன்று வரலாறு காணாத ஊழல் நடைபெறுவதற்குக் காரணமாக உள்ளது. அத்துடன் அமெரிக்க - இந்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்திய நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றியமைத்து வருகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிலும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

94-ஆம் ஆண்டுமுதல் ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனியாதிக்க அமைப்புகளின் ஆணைகளுக்கு அடிப்பணிந்து இந்திய அரசு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருகிறது. பல்வேறு ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்தவும், இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், மலிவான மனித உழைப்பையும், கொள்ளையிட இக்கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு போட்டிப் போடுகின்றனர். தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க அவர்கள் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெருமளவில் இலஞ்சம் கொடுக்கின்றனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் ரூ.1,76,000 கோடி; காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரூ.70,000 கோடி; நிலக்கரி பேர ஊழலில் மட்டுமே ரூ.26 லட்சம் கோடி (இன்னமும் விசாரிக்கவில்லை); கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகை இயற்கை எரிவாயு ஊழல் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல்; சுரங்கத் தொழில்களில் குறிப்பாக இரும்பு, எஃகு வெட்டி எடுப்பதில் பல லட்சம் கோடிகள் என ஊழலின் அளவும், எல்லையும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகளும், ஸ்வான் – டெலினார், டொக்கோம்மோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வெளிநாட்டு முதலாளிகளும் ராசா கனிமொழி, கருணாநிதி மற்றும் சிதம்பரம் போன்ற அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து லாபம் அடைந்தது போல; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் எண்ணெய் எரிவாயுவை கொள்ளையடிப்பதற்கு முகேஷ் அம்பானி, சோனியா-மன்மோகன் கும்பலுக்கு இலஞ்சம் கொடுத்ததுபோல; கர்நாடகாவில் ரெட்டி சகோதர்கள், ஒடிசாவில் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பா.ஜ.க மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து பல இலட்சம் கோடிகள் மதிப்புள்ள இரும்புத் தாதுவை சூறையாடுவதுபோல இலஞ்ச ஊழல்கள் மூலம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் இந்திய நாட்டின் இயற்கைவளங்கள், கனிம வளங்கள் போன்றவைகளை மலிவான விலையில் கொள்ளையடிக்கும், மனித உழைப்பை குறைந்த கூலியில் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ ஊழல்களே இந்த ஊழல்கள் அனைத்தும்.

மேற்கண்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு ராசா, கனிமொழி, கல்மாடி போன்ற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களின் மேலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட மாபெரும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக திகழுகின்ற டாட்டா, பிர்லா, அம்பானி, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், டொகோமோ, டெலினார் மற்றும் போஸ்கோ போன்ற பன்னாட்டு முதலாளிகளும் கைது செய்யப்படவில்லை. அவர்களைக் குற்றவாளிகளாகக் கூட அன்னா அசாரே கும்பலோ, அரசாங்கமோ கருதவில்லை. இவர்கள் பார்வையில் இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் மட்டுமே குற்றவாளிகள். இலஞ்சம் கொடுக்கின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அவர்களை மாற்றுவதால் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக, இத்தகைய சட்டங்கள் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு அடிப்பணிய மறுக்கும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மிரட்டி பணிய வைக்கவே பயன்படும். இவ்வாறு அன்னா அசாரே கும்பலின் வலிமையான ஜன்லோக்பால் சட்டம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் ஆதிக்கம் செய்வதற்கான ஒரு கருவியாகவே பயன்படும்.

நேரடி இலஞ்ச ஊழல்கள் மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் கனிம வளங்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாது, அரசாங்கத்தின் கொள்கைகளை வகுக்கும்போது, அதில் தலையிட்டு அந்தக் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைப்பதன் மூலம் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பல இலட்சம் கோடிகளை சுருட்டுகின்றனர். உதாரணமாக பொருளாதார நெருக்கடிகளிலிருந்து பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளை மீட்பதற்கு ஊக்கத்தொகை என்றும், நட்ட ஈடு என்றும் வரிகளை குறைப்பதன் மூலம் இந்திய அரசாங்கம் ஆண்டிற்கு 5 1/4 லட்சம் கோடி ரூபாய்களை கடந்த இரு ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கையில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு மட்டும் மொத்தம் 10.5 லட்சம் கோடிகளை அவர்கள் இலாபமாக பெற்றுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் நேரடி இலஞ்ச ஊழல்கள் என்ற வழிகளில் மட்டுமல்லாது ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் மூலம் செய்யப்படும் பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலமும்; அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவுடன் செய்துக்கொண்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமும் தனது அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் மூலமும் தமது புதிய காலனியச் சுரண்டலையும், ஆதிக்கத்தையும் இந்தியாவின் மீது திணிக்கிறது.

2001ஆம் ஆண்டு உலக வர்த்தக கழகத்தின் (WTO), தோகா மாநாட்டில் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளின் வர்த்தகத்திற்கு தடையாக உள்ள உள்நாட்டு மானியங்களையும்; ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் மானியங்களையும் குறைக்க வேண்டும் என்பதோடு, இந்தியா போன்ற நாடுகள், தங்கள் நாட்டு வேளாண் பொருட்களுக்கு இந்நாடுகள் சந்தையை திறந்துவிடவேண்டும் என்றும் கோரினர். அதற்கு மாறாக இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் நாடுகளின் பொருட்களுக்கு ஏகாதிபத்திய நாடுகளில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதோடு, தாராளமயக் கொள்கைகளை மேலும் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறி எதிர்த்தன. குறிப்பாக இந்தியா, ஏகாதிபத்திய நாடுகளில் ஏராளமான மானியம் பெற்று பன்னாட்டுக் கம்பெனிகள் மலிவான விலையில் இந்தியச் சந்தையில் வேளாண் பொருட்களை கொட்டிக் குவிப்பதால் பல கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் சாதிக்க முடியாததை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் மீது திணித்தது. அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் பரஸ்பர நலன்கள் (Shared Interest) என்று பேசினாலும், அது இந்தியா அமெரிக்காவிற்கு எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனமாகும். அது அமெரிக்காவின் ஆணையை இந்தியா நிறைவேற்றுவது பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இந்தியாவிற்காக அமெரிக்கா என்ன செய்யவேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது.

2005 - ஆம் ஆண்டில் வாஷிங்டனில் புஷ் - மன்மோகன்சிங்கிற்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகள், கட்டமைப்புத்துறை, நிதித்துறை, இராணுவம், அணுசக்தி மற்றும் அறிவுசார் முனைப்பு ஒப்பந்தம் மூலம் வேளாண்துறையையும் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் தமது ஆதிக்கத்தையும் சுரண்டலையும் திணித்தது. தேசத்துரோக சோனியா - மன்மோகன் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து இந்திய நாட்டைக் காட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையிலான வர்த்தகம் தற்போது 40 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதை ஆண்டிற்கு 20 சதவீதம் உயர்த்தி அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவைக் கொள்ளையடிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. 2008 - ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து 26.1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது. அதேகாலத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு 19.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. தனியார் வணிக சேவைகளை 13 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்த வேண்டும் என அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தை திறக்கச் செய்வதன் மூலம், அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற பகாசுரக் கம்பெனிகள், ஆண்டிற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தியச் சந்தையை சூறையாடுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கட்டமைப்புத்துறைகளிலும், வங்கிகள், ஆயுள் காப்பீடு போன்ற நிதித்துறையிலும், ரியல் எஸ்டேட் போன்றத் துறைகளிலும், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் துறைகளிலும், சில்லறை வணிகத்திலும், இந்தியாவில் பத்திரிக்கை மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களிலும், கேபிள் மற்றும் செயற்கைக்கோள் போன்றத் துறைகளிலும் அமெரிக்காவின் மூலதனம் தடையின்றி கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவுடன் இணைந்து மும்பையை ஆசியாவின் ஒரு முக்கிய நிதி மையமாக மாற்றுவது என்றும்; உலகவங்கி, IBRD, IFC மற்றும் ஆசியன் வளர்ச்சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் சாலைகள், பாலங்கள் அமைப்பது; இரயில், விமானப் போக்குவரத்துக்கள், நகரங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் அமைப்பது, எரிசக்தி மற்றும் மின்சாரத் துறைகளில் முதலீடுகள் செய்வதுடன் இவை அனைத்தையும் தனியார்மயமாக்கி பல ஆயிரம் கோடிகளை அமெரிக்கக் கம்பெனிகள் சுருட்டிக் கொள்ள இருக்கின்றன.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஒட்டுமொத்தமாக 1990 - களில் 100 மில்லியன் டாலர்களாக இருந்தது. அது 2005 - ல் 6 பில்லியன் டாலர்களாகவும், 2007 - ல் 20 பில்லியன் டாலர்கள் என அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்காவின் பங்கு 7-ல் 1 ஆகவே இருக்கிறது. எனினும் அண்மையில் அமெரிக்காவைச் சார்ந்த மைக்ரோ சாப்ட், டெல், ஆரக்கிள் மற்றும் IBM போன்ற நிறுவனங்கள் ஐ.டி உள்ளிட்ட சேவைத்துறைகளிலும், பல்கலைக்கழகங்கள் நிறுவுவதிலும் ஏராளமான முதலீடுகளைக் குவித்து கொள்ளை லாபம் பெறுகின்றன.

அமெரிக்காவைச் சார்ந்த நிதி நிறுவனங்கள் இந்தியாவின் நிதித்துறைகளான வங்கிகள், ஆயுள் காப்பீடு, தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் பங்குப்பத்திர வணிகத்தில் ஈடுபடுவதற்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் திவாலாகி மரணப்படுக்கையில் உள்ள  வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்  இந்திய மக்களின் பல இலட்சம் கோடி ரூபாய் சேமிப்புகளை சூறையாடுவதற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆயுத தளவாட உற்பத்தியாளர்கள் இந்தியாவில் ஆயுத வியாபாரம் மூலம் கொள்ளை லாபம் பெறுவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்தியா - தம்மை உலகில் ஒரு வல்லரசாக மாற்றுவதற்கும், தென் ஆசியாவில் தமது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களை அடக்கி வைப்பதற்கும் - தம்மை ஒரு இராணுவ வல்லரசாக மாற்றிவருகிறது. இன்று ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. 2009 - 13 ஆண்டுகளில் இந்தியா 35 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஆயுத கொள்முதல் செய்ய இருக்கிறது. 126 பல்நோக்கு போர் விமானங்கள் (6-9 பில்லியன் டாலர்கள்), 6 ஸ்கார்ப்பியன் நீர் மூழ்கிக் கப்பல்கள் (4.4 பில்லியன் டாலர்கள்), 8-P3C ஓரியோன் நீண்டதூர கண்காணிப்பு மற்றும் தாக்கும் திறனுள்ள விமானங்கள் (3 பில்லியன் டாலர்கள்), அத்துடன் மிராஜ் போர்விமானங்கள், விண்வெளி பாதுகாப்பு ஏவுகணைகள், நடமாடும் பல்குழல் ராக்கெட்டுகளை ஏவும் வாகனங்கள் உள்ளிட்டு ஏராளமான போர்த்தளவாடங்களை வாங்கிக் குவிக்க உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த ஆயுத உற்பத்தியாளர்கள் தங்களது காலாவதியான ஆயுதங்களை இந்தியாமீது திணிக்கவும், இந்தியாவுடன் கூட்டாக தளவாட உற்பத்தியில் ஈடுபடவும், இதன் மூலம் அமெரிக்க கம்பெனிகள் கொள்ளை லாபம் பெறவும் இருக்கின்றன. இவ்வாறு நாட்டின் பாதுகாப்பிலும் சுயசார்பு ஒழிக்கப்பட்டு வருகிறது.

அணுத்துறையில் இந்தியா 80 பில்லியன் டாலர் அளவிற்கு ஒரு பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. சுமார் 40 அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ், ரசியா போன்ற நாடுகளோடு அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தங்களையும், கஜகஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளோடு அணு பொருட்கள் வர்த்தகத்திற்கும் இந்தியா ஒப்பந்தங்களை செய்துள்ளது. அணுமின் திட்டங்களில் முதலீட்டிற்காக ஏகாதிபத்திய நாடுகள் கடும்போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய அணுவிபத்து நட்ட ஈட்டு சட்டங்களை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றவேண்டும் என்று கூறி அணுத்துறையை அமெரிக்காவிற்கு திறந்துவிட நிர்ப்பந்தித்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மரபணுமாற்றுத் தொழில் நுட்பத்தை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்றத் துறைகளில் அதிகரிப்பது; வேளாண் துறையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகரித்தல் போன்ற ஒப்பந்தங்களை இந்தியாவின் மீது திணிப்பதன் மூலம் வேளாண்துறை முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த மான்சான்டோ, கார்கில் போன்ற பகாசுரக் கம்பெனிகளின் ஏகபோகத்திற்கு கதவு திறந்து விடப்பட்டுவிட்டது. இதன் விளைவாக இந்திய விவசாயிகள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை பறித்துவிடுவது, காப்புரிமை பெறுவதன் மூலம் தற்போது பொதுச் சொத்தாக உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும். இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் காடாக இந்தியாவின் வேளாண்மைத்துறை மாற்றப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் புகுந்து மருந்துத்துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீடுகளை பயன்படுத்தி இந்திய நாட்டின் பெரும் மருந்து நிறுவனங்களை விழுங்கிவிட்டன. இந்தியாவின் குளிர்பானக் கம்பெனிகளை விழுங்கி இன்று குக்கிராமம் வரை பெப்சியும், கொக்கோகோலாவும் தண்ணீர் விற்பனையிலும் கோலோச்சுகின்றன. இந்திய நாட்டின் உலகத்தரம்வாய்ந்த கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான எச்.எம்.டி கம்பெனி காணாமல் போய்விட்டது. அதே போலத்தான் புஷ் - மன்மோகன் கும்பல் செய்து கொண்டுள்ள இருதரப்பு அரசியல் பொருளாதார உடன்படிக்கைகள், இந்திய நாட்டின் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் பற்றி இறுக்கி, இந்தியாவின் அனைத்து வளங்களையும் அமெரிக்கா கொள்ளையிடுவதற்கு வழி செய்துள்ளன.

எனவே ஊழலை எதிர்த்தப் போராட்டமானது நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதற்கு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் நேரடியாக இலஞ்சம் கொடுக்கும் முதலாளித்துவ ஊழலை ஒழிப்பதற்கானப் போராட்டத்தோடு, இந்திய அரசோடு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் செய்துக்கொண்டுள்ள பல்தரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை முறியடிப்பதற்கான போராட்டத்தோடு இணைந்ததாகும். மேலும் ஊழலின் இரண்டாம் வகையான இலஞ்ச ஊழல் ஆட்சிமுறையால் மக்களைக் கொள்ளையடிக்கும் ஊழலையும் எதிர்த்துப் போராடுவதுமாகும். இதில் முதலில் கூறப்பட்ட முதலாளித்துவ ஊழலை ஒழிப்பதற்கானப் போராட்டமே முதன்மையானதாகும். ஏனெனில் இந்த ஊழலை ஒழிப்பதன் மூலம் மட்டுமே இரண்டாவது வகையான ஊழல்கள் நடப்பதற்கான நிலைமைகளை மாற்றியமைக்க முடியும்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தூய்மையான பொருளாதார வழிமுறைகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அதாவது அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் நேரடியாக இலஞ்சம் கொடுப்பது; பல்தரப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் நாடுகளை ஆதிக்கம் செய்வது என்ற வழிகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. எந்த ஒரு நாடு இந்த வழி முறைகளில் தங்களுக்குப் பணிய மறுக்கிறதோ அந்த நாட்டின் மீது இராணுவ ரீதியில் ஆக்கிரமிப்பு நடத்தி ஆட்சி மாற்றத்தை செய்து தங்களது பொம்மை ஆட்சியை நிறுவிக்கொள்கின்றன. அதற்கு அன்று அவர்கள் பயங்கரவாதம், பேரழிவு ஆயுதங்கள் என்று கூறி அதை நியாயப்படுத்தினர். இன்றோ மனித உரிமை, ஜனநாயகம், ஊழல் ஒழிப்பு என்று கூறுகின்றனர்.

பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்த அதாவது முதலாளித்துவ ஊழலை எதிர்த்தப் போராட்டமானது, நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்கும் ஜனநாயகத்திற்கும் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்தால் போதாது. பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் மீதும் கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். நேரடி இலஞ்ச ஊழல்களை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாது பல்தரப்பு, இருதரப்பு ஒப்பந்தங்களையும் எதிர்த்து போராடவேண்டும்; புதிய காலனியாதிக்கத்திற்கு சேவைசெய்யும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளையும், அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அமெரிக்க – இந்திய இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களையும் எதிர்த்தப் போராட்டமாகும். அதாவது இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்த்து சோவியத் வடிவிலான ஆட்சிமுறை உருவாக்குவதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ ஊழல் உட்பட அனைத்து வகையான ஊழலுக்கும் முடிவுகட்ட முடியும்.

ஆனால் அன்னா அசாரே கும்பலோ ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ற அளவிற்குக் குறுக்கிக்கொண்டு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத் கொடுக்கும் இலஞ்ச ஊழலை எதிர்க்கவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ கோரவில்லை. அதாவது முதலாளித்துவ ஊழலை இந்தக் கும்பல் எதிர்க்கவில்லை. மாறாக சாதாரண ஊழல்களை மட்டுமே எதிர்க்கிறது. இவ்வாறு அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கும் சேவை செய்கிறது.

 

கருப்புப் பணம்:

அரசாங்கத்திற்குத் தெரியாமல் வரி ஏய்ப்பு, சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தல் (போதைப் பொருள் கடத்தல், அவாலா வர்த்தகம் போன்றவைகள்) இலஞ்ச ஊழல்கள் மூலம் சம்பாதிப்பது போன்ற பல்வேறு வகைகளில் இந்தியப் பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் சுமார் ரூ.105 லட்சம் கோடிகள் வரை வெளி நாட்டில் பதுக்கி வைத்துள்ளனர் என்று ஒரு தகவல் கூறுகிறது. ஸ்விஸ் வங்கியில் மட்டும் ரூ.25 லட்சம் கோடி இந்தியர்களின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு கருப்புப்பணம் வெளி நாட்டில் குவித்து வைக்கப்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் அதாவது புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட இந்தக் காலப்பகுதியில்தான் 65 சதவீதம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குளோபல் பைனான்ஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. அதாவது அந்நிய மூலதனத்திற்கானத் தடைகளும், கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால் கருப்புப் பணம் அதிகமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. அந்நிய நிதி முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறத் தேவையில்லை என்பது, ரூபாய் மாற்று மதிப்பை சந்தைக்கேற்றவாறு அவர்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதி அளித்தது, ஒரு சில நாடுகளுடன் ஒற்றை வரிவிதிப்பு முறை மூலம் அதாவது மொரிசியஸ் வழியாக வரி இல்லாமல், கட்டுப்பாடுகள் இல்லாமல் நிதியை கொண்டுவரவும், கொண்டு செல்லவும் வழி செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளே நம் நாட்டு பணம் வெளி நாடுகளில் பதுக்கி வைப்பதற்கு எளிய வழியாக மாறி உள்ளது. எனவே தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை ஒழிக்காமல், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வராமல் நாட்டிலிருந்து மூலதனம் கருப்புப் பணமாக பறந்தோடுவதை தடுக்க முடியாது. தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்காக்கும் இந்திய அரசை ஒழித்து ஒரு புரட்சிகரமான சுதந்திர மக்களாட்சியை நிறுவாமல் அந்நிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியப் பணத்தை மீட்கவும் முடியாது.

இனி நாட்டில் நடந்துவரும் இத்தகைய மாபெரும் ஊழல்கள் குறித்தும், அதை ஒழிப்பதற்கான சட்டங்கள் கொண்டு வருவது குறித்தும், கருப்புப் பணத்தை மீட்பது குறித்தும் நாடாளுமன்றவாத முதலாளித்துவக் கட்சிகளின் அணுகுமுறைகளை காண்போம்.

மாபெரும் ஊழல்களும் நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளும்

சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஆளும் தரகுப்பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதான அரசியல் கட்சியாகும். பன்னாட்டு, உள்நாட்டுத் தரகுமுதலாளிகள் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக கையாளும் இரண்டு வழி முறைகளுக்கும் ( நேரடி இலஞ்சம் வழங்குவது; பங்குச்சந்தைக்கும் - அரசாங்கத்திற்கும் உள்ள கூட்டுகள் மூலம் அதாவது ஒப்பந்தங்கள் மூலம்) துணைபோகின்ற கட்சியாகும். காங்கிரஸ் கட்சி அந்நிய மூலதனத்திற்கு சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த கட்சியாகும். ஊழல் செய்வதிலும், புதியகாலனிய உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை அடிமைப்படுத்துவதிலும் இக்கட்சி முன்னோடும் கட்சியாகவே திகழ்கிறது. ‘மிஸ்டர்.கிளீன்’ மன்மோகன்சிங்கோ இன்றுவரை ஐ.எம்.எப்பில் பென்சன் வாங்கிக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கு விசுவாசமாக தொண்டூழியம் செய்து புதிய காலனியத்தின் தாசனாகவே திகழ்கிறார்.

எனவேதான் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகின்ற பன்னாட்டு, உள்நாட்டு தரகு பெரு முதலாளிகளை ஊழல் ஒழிப்பு சட்ட வரம்பிற்குள் கொண்டுவர மறுக்கிறது. பிரதமரையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் கொண்டுவர தயங்குகிறது. ஊழல் மலிந்த CBI, ஊழல் தடுப்பு ஆணையம் (CWC) போன்ற அமைப்புகளையும், அதிகாரிகளையும், அமைச்சர்களையும் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கிறது. ஊழல் குற்றங்களில் அவர்களைத் தண்டிக்கவும் மறுக்கிறது. ஊழல் வழக்குகளில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்நிய முதலீடு நாட்டிற்குள் வராது என அக்கட்சி வாதிடுகிறது. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அனைத்து ஊழல் வழக்குகளையும் இரகசியமாக விசாரிக்க வேண்டும் என்றும், அவ்வாறில்லாமல் வெளிப்படையாக விசாரித்தால் நாடாளுமன்ற அமைப்பு முறையே கேள்விக்குறியாகிவிடும் என ஊழலை மூடிமறைக்கப் பார்க்கிறது. ஏற்கெனவே போபர்ஸ் வழக்கை ஊத்தி மூடி சோனியாவையும் அவருடைய உறவினரையும் பாதுகாத்தக் கட்சிதான் இந்தக் காங்கிரஸ் கட்சி.

கருப்புப்பண முதலைகளின் காவலனாகவே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. இந்திய அரசு ஸ்விஸ் வங்கிகளிடமிருந்து பெற்ற கருப்புபண பட்டியலை வெளியிட மறுக்கிறது. சோனியா, ராகுல் பேரில் சட்டவிரோதமாக சம்பாதித்தப் பணம் ஸ்விஸ் வங்கியில் ரூ.80,000 கோடி உள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு சோனியா காந்தி இதுவரை எந்தப் பதிலையும் கூறவில்லை. கருப்புப்பண முதலையை தமது தலைவராகக் கொண்டிருக்கும் கட்சி கருப்புப்பணத்தை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்ப்பது பகற்கனவாகும். இந்தியாவின் ஊழல் வரலாறு என்றால் அது காங்கிரசின் வரலாறாகும். காங்கிரஸ் கட்சி ஊழலை தமது உயிராகக் கருதுகிறது. ஊழல் இல்லையேல் காங்கிரஸ் கட்சி இல்லை.

இந்துமதவாத பா.ஜ கட்சி இந்திய ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் இரண்டாம் நிலைக்கட்சியாகும். இரண்டு வழிகளில் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இக்கட்சியும் துணைபோகும் கட்சிதான். இக்கட்சி புதிய காலனிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமைப்படுத்துவதிலும் காங்கிரஸ் கட்சியோடு போட்டிப் போடும் கட்சிதான். ஊழல் ஒழிப்பு சட்டத்தின் வரம்பிற்குள் பிரதமரையும், நீதிபதிகளையும் இணைக்க வேண்டும் என்று கூறினாலும் பன்னாட்டு, உள்நாட்டுத் தரகு முதலாளிகளை இச்சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ கட்சி கோரவில்லை.

மேலும் இக்கட்சியின் ஆட்சியின்போதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடித்தளம் போடப்பட்டது. இக்கட்சி ஆளும் மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் ஊழலும், எட்டியூரப்பாவின் ஊழலும் மிகவும் பிரசித்து பெற்றதுதான். கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான சவப்பெட்டி ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்விக்கேட்பதற்கான ஊழல், ஆட்சியை பாதுகாக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்தது என இக்கட்சியும் ஒரு ஊழல் மலிந்தக் கட்சிதான். தற்போது அத்வானி தலைமையில் கருப்புப் பணத்தை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் அக்கட்சி நடத்திய ரதயாத்திரை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தந்திரமே ஒழிய உண்மையான ஊழல் ஒழிப்பு யாத்திரை அல்ல.

மாநில அளவிலான தரகு முதலாளித்துவக் கட்சிகளான லல்லுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், உ.பியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் முலாயமின் சமாஜ் வாதக் கட்சி, ஆந்திராவின் தெலுங்கு தேசக்கட்சிகள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகள் நேரடி இலஞ்சம் மூலமும், பன்னாட்டு இருதரப்பு உடன்படிக்கைகள் மூலமும் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும், இந்தியா அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றியமைக்கப்படுவதையும் எதிர்க்கும் கட்சிகளல்ல. லல்லுவின் மாட்டுத்தீவன ஊழலும், முலாயம்சிங் கட்சியின் அமர்சிங் அமெரிக்காவின் அடிவருடி மன்மோகன் ஆட்சியை காப்பாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்ததும் மற்றும் மாயாவதியின் யானை ஊழல் என இவை அனைத்தும் இக்கட்சிகள் ஊழலை எதிர்க்கும் கட்சிகள் அல்ல என்பதை நிரூபித்துள்ளன.

தமிழக ஆளும் தரகுமுதலாளித்துவக் கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மத்திய ஆட்சியில் பங்குகொண்டு பன்னாட்டு, உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகள் இரண்டு வழிகளில் நாட்டின் மீதும், இந்திய அரசின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆதரிக்கும் கட்சிகளேயாகும். திமுகவின் கருணாநிதியோ தமது குடும்ப ஆட்சியை நிறுவுவதிலும், இலஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதிலும் ஒரு கலையாகவே செய்து வருகிறார். மத்தியில் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி 2ஜி அலைக்கற்றையில் மகள், மனைவி, துணைவியர் மூலம் பல ஆயிரம் கோடிகளை சுருட்டியுள்ளார். கலைஞர் டிவிக்கு 200 கோடி என்பது ஒரு உதாரணம்தான். அதேபோல் கடந்த ஆட்சியின்போது ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தமிழகத்தை தாரைவார்த்தும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் நில அபகரிப்பில் ஈடுபட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் திமுக-வினர் பெருமளவில் கொள்ளையடித்துமுள்ளனர். ஒருபுறம் புதிய காலனியத்திற்கு சேவை செய்து கோடிக்கணக்கில் இலஞ்ச ஊழலில் திளைத்தும், மறுபுறம் இதை மூடிமறைக்க மக்களுக்கு இலவசத்திட்டங்களை அறிவித்து அந்தத் திட்டங்களிலும் பல ஆயிரம் கோடிகளை இலஞ்ச ஊழல்மூலம் சுருட்டியவர்தான் கருணாநிதி. சர்க்காரியா காலம்தொட்டு ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செயல்படுத்துபவர்தான் இந்தக் கருணாநிதி. தான் ஊழலுக்கு நெருப்பு என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர் நெருப்பு அல்ல ஊழலின் இருப்பாகவே திகழ்கிறார்.

ஜெயலலிதாவின் அதிமுகவும் ஊழலை ஒழிக்கின்ற கட்சி அல்ல. ஜெயலலிதாவே ஒரு நடமாடும் நகைக்கடைதான் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். டான்சி வழக்கில் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்ததை திருப்பிக்கொடுத்துதான் அந்த வழக்கிலிருந்து விடுபட்டார். ஆனால் பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் அவ்வாறு தப்பிக்க முயற்சி செய்தாலும் தப்பிப்பது அரிதே. புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை ஜெயலலிதா அமல்படுத்தும்வரை அவர் ஊழலிலிருந்து தப்பிக்கவும் முடியாது. அவரால் ஊழலை ஒழிக்கவும் முடியாது.

இடது வலது திருத்தல்வாத கம்யூனிஸ்டு கட்சிகள் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உட்படுத்த வேண்டும் என்பதோடு கார்ப்பரேட் முதலாளிகளையும் உட்படுத்த வேண்டும் என்று கோருவது வரவேற்கத் தகுந்ததுதான். நாட்டில் நடைபெற்று வரும், மாபெரும் ஊழல்களுக்கு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தான் அடிப்படை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஊழல் செய்யாமல் இந்த புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை செயல்படுத்துவதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். மேற்கு வங்கத்தில் இந்த கொள்கைகளை செயல்படுத்தி டாட்டாவிற்கும் மற்றும் இந்தோனேசிய சலீம் குடும்பம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்து மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுத்தான் அந்தக்கட்சி தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. ஏகாதிபத்தியவாதிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு மேற்கொள்ளும் (நேரடி இலஞ்சம் மற்றும் பங்குசந்தைக்கும் அரசாங்கத்திற்குமுள்ள கூட்டுக்கள் என்ற) இருவழிமுறைகள் குறித்து மௌனம் சாதிக்கிறார்கள். எல்லாவிதமான ஜனநாயக நாட்டிலும், முழு அரசியல் சுதந்திரம் பெற்ற நாட்டிலும் கூட இலஞ்சத்தின் மூலம் ஆட்சியை முதலாளிகள் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த அமைப்பிற்குள்ளேயே ஊழலை ஒழிக்க முடியும் என்று திருத்தல்வாத நிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். எனவேதான் இக்கட்சிகள் ஊழலில் ஈடுபட்டு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் கட்சிகளோடு மாறி மாறி சந்தர்ப்பவாதமாகக் கூட்டணி காண்கின்றனர். எனவே இந்த போலி கம்யூனிஸ்டுகளால் எக்காலத்திலும் ஊழலை ஒழிக்க முடியாது.

அன்னா அசாரே தலைமையிலான அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஊழல் எதிர்ப்பு இயக்கமானது நாட்டின் மீது ஏகாதிபத்திய நிதி மூலதனக்கும்பல் ஆதிக்கம் செலுத்துவதற்காக இரண்டு வழிகளை ஆதரிக்கும் இயக்கமேயாகும். இன்று சோனியா மன்மோகன் கும்பல் ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்களின் மீது சுமத்துவதை எதிர்த்தும், மாபெரும் ஊழல்களை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்தும் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு கிடைக்கும் பெரும் ஆதரவு அதை நிரூபித்துள்ளது. நாடாளுமன்றவாத எதிர்க்கட்சியினர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு தயாராவதை திசைத் திருப்பி ஏகாதிபத்திய வாதிகளையும், அவர்களின் அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற பணிகளையே அன்னா அசாரேகும்பல் செய்கிறது. எனவேதான் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளை ஊழல் ஒழிப்பு சட்டவரம்பிற்குள் கொண்டுவர மறுக்கிறது. எனவே அன்னா அசாரே தலைமையிலான அரசுசாரா அமைப்புகளும், குடிமை சமூக அமைப்புகளும், சமூக சேவை அமைப்புகள் அல்ல, மாறாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு தொண்டூழியம் புரியும் சமூக விரோத அமைப்புகளேயாகும்.

வலிமையான லோக்பால் சட்டம் கோரி அன்னா அசாரே நடத்திய மூன்றாம் கட்ட உண்ணாவிரதத்தின் போது பா.ஜ.க மற்றும் திருத்தல்வாதக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து ஒரே மேடையில் தோன்றினர். இதன் மூலம் வலிமையான லோக்பால் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. கடந்த காலங்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஊழல் எதிர்ப்புக் கூட்டணி ஆட்சி உருவானது. அதற்குப் பின்பு வி.பி.சிங் தலைமையில் பா.ஜ.க மற்றும் திருத்தல்வாதிகள் ஆதரவோடு ஒரு ஊழல் எதிர்ப்புக் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் எந்த ஒரு ஆட்சியும் ஊழலை ஒழிக்கவில்லை. அதுபோலதான் தற்போது அன்னா அசாரே கும்பலின் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் அது ஊழலை ஒழிக்கப்போவதில்லை. எனவே ஊழல் ஒழிப்பில் நாடாளுமன்றவாத அரசியல் கட்சிகளை நம்பி எந்தப் பயனும் இல்லை.

ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கூறுவோமானால், ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்பது ஊழலின் இரண்டு வகைகளையும் எதிர்த்தப் போராட்டமேயாகும். ஒன்று, நாட்டின் மீது அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதற்காக தரப்படும் நேரடி லஞ்சம் மற்றும் பங்குச்சந்தைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள கூட்டுக்களின் மூலம் உருவாகும் ஒப்பந்தங்கள்; இரண்டு, இலஞ்ச லாவண்ய ஆட்சியின் மூலம் அரசாங்கம் சாதாரண மக்களின் மீது தொடுக்கும் தாக்குதல்; இவ்விரண்டு ஊழல்களில் முதல்வகை ஊழலை அதாவது நாட்டின்மீதும், அரசின்மீதும் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதற்கான முதலாளித்துவ ஊழல்களை எதிர்த்துப் போராடுவதே முதன்மையானதாகும்.

உண்மையான ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது ஊழலுக்கும் அடிப்படையாக திகழும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளையும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்தும்; அமெரிக்காவின் புதியகாலனியாக இந்தியாவை மாற்றும் அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களை எதிர்த்தும், நாட்டின் விடுதலைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நடக்கும் ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கூட்டு சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டுவதன் மூலமும்; நிலவுகின்ற நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு பதிலாக ஒரு சோவியத் ஆட்சி முறையை நிறுவுவதன் மூலமும் மட்டுமே ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்கமுடியும். நிலவுகின்ற நாடாளுமன்ற ஆட்சி முறையின் கீழ் ஊழலை ஒழிக்கவே முடியாது.

புரட்சியின் மூலம் ஒட்டுமொத்த சமூக அமைப்பை மாற்றினால்தான் ஊழலை ஒழிக்க முடியும். எனினும், முதலாளித்துவ ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் பங்குகொண்டு, அதில் குறிப்பான உடனடி முழக்கங்களை முன்வைத்துப் போராடும்போது மட்டுமே ஊழலை எதிர்த்த இறுதி லட்சியத்தை நோக்கி மக்களை அணிதிரட்ட முடியும். அதற்கு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உடனடி கடமையாக பின்வரும் முழக்கங்களை முன்வைத்துப் போராடுவது அவசியமாகும்.

எனவே ஊழலை எதிர்த்த உடனடிப்பணியாக...

ஊழலுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் ஊழலின் ஊற்றுக்கண்ணான பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளியும் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்;

ஊழலுக்கு அடிப்படையாக திகழும் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை திரும்பப் பெற போராடுவது;

ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகின்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடர்வதுடன் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க வேண்டும்;

ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள அரசுசாரா அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடைசெய்ய வேண்டும்;

ஏகாதிபத்திய அன்னிய நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற்று நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டுவரும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் மக்கள் சமுதாய அமைப்புகளையும், அவைகளின் அமைப்பாளர்களையும் ஊழல் ஒழிப்பு சட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும்!

மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதற்கும், ஊழலை ஒழிக்கவும் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள வேண்டும் என அனைத்து ஜனநாயக வாதிகளையும் அறைகூவி அழைக்கின்றோம்.

* புதிய காலனிய ஆட்சிமுறையை பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்காக கொடுக்கும் விலையே ஊழல்!

* ஊழலின் ஊற்றுக்கண்ணான உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை கைவிடு!

* ஊழல் செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

* ஆளும் வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!!

* கதர் சட்டையின் ஊழலைக் காட்டி காவிச் சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகத்தைக் கண்டு ஏமாறாதீர்.

* ஆளும் கதரும் பாசிசமே! எதிர்க்கும் காவியும் பாசிசமே!!

* ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்து!

* ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - தமிழ்நாடு
ஜனவரி, 2012.