ஒரு புரட்சியாளருடனான எதிர்பாராத சந்திப்பு

"Encounter" with an "Extremist"

ஒரு புரட்சியாளருடனான எதிர்பாராத சந்திப்பு

இது சாதாரணமாக நீங்கள் செய்தித்தாள்களில் கடந்து வரும் ஒன்றல்ல. "போலீசாருடனான மோதலில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்" என்ற செய்திகள் பெரும்பாலும் மோதல்கள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகளை இரக்கமற்ற முறையில் கொல்வதாகும். "நியூஸ்சைடு" என்ற தமிழ்நாட்டு இதழ் துணிச்சலான, ஆபத்தான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திவருகின்றனது. இந்த வகையில் போலீசால் மிகவும் தேடப்பட்டு வரும், போலீசின் கண்ணோட்டத்தில் (Parlance) நக்சல்பாரி தீவிரவாதியும், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் விடுதலைக்காக ஒன்றுபட்டு நிற்கும் உத்வேகம் கொண்ட இளைஞர்களின் பார்வையில் (Vision) "புரட்சியாளராகத் திகழும் ஒருவரை நாம் சந்திக்கின்றோம்".

அவர்தான் அறுபத்து ஏழு வயதாகும் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்கள். இவர் வக்கீலாக இருந்து புரட்சியாளராக பரிணமித்தவர். கிட்டதட்ட முப்பது ஆண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றார். (இன்று வரை). 1970களில் ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். விடுதலையான பின் எமர்ஜென்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் மறுபடியும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்.

சாருமஜூம்தார் மற்றும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பு என்கிற அற்புதராஜ் ஆகியோருடன் இணைந்து 1969 ஆம் ஆண்டு 22 ஆம் தேதி நக்சலைட் இயக்கம் என்று அழைக்கப்படுகின்ற இந்திய பொதுவுடைமைக்கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)டைத் தோற்றுவித்தார். அக்கட்சியின் மத்தியக் குழுவில் (Central Committee) முக்கிய பங்காற்றினார்.

இன்று இந்த மத்தியக் குழுவின் உயிரோடு இருக்கும் ஒரே உறுப்பினர் இவரே. மற்றவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்டு விட்டனர். ஓரளவு வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் இவர் தனது மாணவப்பருவத்திலேயே அரசியலால் கவரப்பட்டார். 

சென்னைப் புறநகர் பகுதிகளான அம்பத்தூர்-பட்டாபிராம் தொழிற்சாலை வளையத்தில் போர்குணமிக்க (Millirant) தொழிற்சங்கங்களை கட்சி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் இதயங்களை வென்று அவர்களது நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கியவர்.

குடும்ப பந்தங்களை துறந்து, வக்கீல் தொழிலைத் தூக்கியெறிந்து முழுநேர புரட்சியாளராக ஒரு கம்யூனிஸ்டாக மற்றும் கட்சியின் அமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கினார். இவர் ஏற்றுக்கொண்ட பணியின் மீதான இவரது அர்ப்பணிப்பும், துணிவும் அசாதாரணமானதாகும் (Extradinary), பதவியையும், புகழையும் எவ்வழியேனும் (Hook or crook) அடைவதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ள இன்றை அரசியல்வாதிகளிடையே நிச்சயமாக இவர் வித்தியாசமானவராகத் திகழ்கின்றார்.

புரட்சியாளர்களுக்கான வாழும் உதாரணமாக விளங்குகின்றார். இவர் மார்க்சிய - லெனினிய - மாவோயிச சிந்தனைகளின் தத்துவம் மற்றும் நடைமுறையில் தன்னை நிபுணராக்கியுள்ளார். இவருடைய நெருங்கிய சகாக்கள் இவரின் ஆழ்ந்த அறிவைப் பற்றி விளக்கிய போது நாங்கள் இவர் மீது உயர்ந்த மதிப்பு கொண்டவர்களானோம். புரட்சிகரத் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில், "இந்த நாட்டின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு (Concrete Conditions) ஏற்ப, புரட்சிகரத் தத்துவத்தை பொருத்துவது" என்ற இவரது தனித்துவம் இணையற்றது.

புரட்சிகர அமைப்புகள் பாதிக்கப்பட்டு பின்னடைவுகளுக்கு உள்ளான போதெல்லாம் பெரும்பாலான தலைவர்கள் பிளவுபட்டுப் போனார்கள்; சோர்வுற்றார்கள்; சாதியவாதிகளிடம் சரணடைந்தார்கள் அல்லது பூர்ஷ்சுவா கட்சிகளிடம் பிழைப்புவாதிகளாகிப் போனார்கள். இவரது, "இயங்கியல் வழியிலான புரட்சிகர நடைமுறை" ஒவ்வொரு பின்னடைவின் போதும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்தம் பக்கம் நிற்கச் செய்தது. மேலும், அமைப்பை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி நகர்த்திச் சென்றது.

இவரது நீண்ட அரசியல் வீரப்பயணத்தில் (March), இவர் ஒரு போதும் சோர்வால் சூழப்பட்டதில்லை. பார்வைக்கு எளிமையான இந்த இரும்பு மனிதருக்கு பேச்சு, விருப்பம் மற்றும் எல்லாமும் இந்தியப் புரட்சியைத் தவிர வேறொன்றுமில்லை.

இவரை பாசத்துடனும், மிகுந்த மரியாதையுடனும் ஏ.எம்.கே. என்றழைப்பார்கள். இவருடனான இந்த நேர்முக உரையாடலின் மூலம் ஒரு புரட்சியாளரைப் பற்றி நாம் ஆழமாக அறிந்து கொள்வோம்.

உங்களுடைய ஆரம்ப கால அரசியல் பற்றி...

"நான் எனது கிராமமான ஆனைமல்லூரிலிருந்து வேலூரில் கிருத்துவர்களால் நடத்தப்படும் ஊரிஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்காக சேர்ந்தேன். அங்கிருந்த பேராசிரியர்களும், கிருத்துவ மதபோதகர்களும் இந்து மதத்தின் அம்சங்களாக உருவ வழிபாடு, நால்வருண பாகுபாடு, தீண்டாமைக் கொடுமைகள்... இன்ன பிற பற்றி விமர்சிப்பார்கள். நான் இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இவைகள் என்னுள் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தின. அதே சமயத்தில் மதமாற்றம் இத்தீமைகளுக்கெல்லாம் இறுதித் தீர்வாக இருக்க முடியாது என்று எண்ணினேன். அத்தருணத்தில் தந்தை பெரியாரின் கடவுள் நம்பிக்கை, வர்ணாசிரம தர்மம், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் மற்றும் பகுத்தறிவுக் கருத்துக்கள், திராவிட நாடு ஆகியவைகளுக்கான பிரச்சாரம் மற்றும் இந்தித் திணிப்பிற்கு எதிரான அணிதிரட்டல் முதலியவை மாணவப் பருவத்தில் என்னைக் கவர்ந்தன. நான் திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன்" 

உங்களுடைய ஆர்வமெல்லாம் திராவிட இயக்கத்தில் பால் இருக்கும் பட்சத்தில், நீங்கள் எவ்வாறு ஒரு கம்யூனிஸ்டாக உருவானீர்கள்?

"நான் திராவிட இயக்கத்தின் பால் அனுதாபியாக இருந்த போது பொதுவுடைமை இயக்கத்தின் தோழர்கள் சிலரைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் பெரியாருடைய திராவிடர் கழகத்தின் கொள்கைகள் மீது சில விமர்சனங்களை முன் வைத்தார்கள். அவர்கள் பெரியாரின் நாத்திகவாதமானது கொச்சைப்பொருள் முதல்வாதம் என்றும், மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாதம் அறிவியல் பூர்வமானதென்றும்; திராவிட இனம் என்ற கருத்தாக்கம் முந்தைய கருத்தாக்கமான இனவாதமாக வகைப்படுத்தக்கூடிய ஒன்றாகும் என்றும், எனவே, மொழி வழியிலான தேசிய இனமே சரியானது என்றும் விளக்கினார்கள். மேலும், தி.க.வினர் பிராமணர் எதிர்ப்பு பேசினாலும், அவர்கள் பார்ப்பனரல்லாத பண்ணையார்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றார்கள் மற்றும் ஜஸ்டிஸ் கட்சியின் காலத்திலிருந்தே அவர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஆதரித்து வந்தனர் என்று விமர்சித்தார்கள். இந்த விமர்சனங்களில் நான் முழு உடன்பாடு கொண்டதால், இதைத் தொடர்ந்து பொது உடைமைக் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

நீங்கள் சி.பி.ஐ.யின் மாணவர் அணியில் மிகவும் இயங்கியதாகச் சொல்லப்பட்டதே... அங்கே உங்களது அனுபவம் யாது?

நான் பட்டப்படிப்பிற்காக வேலூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். பிறகு, சென்னையில் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த கார்த்திகேயன் என்பவரின் வழிகாட்டுதலில் சென்னை மாணவர் அமைப்பு (MSO) என்றழைக்கப்பட்ட மாணவர் அமைப்பைக் கட்டும் வேலையில் ஈடுபட்டேன். இடது திரிபுவாத போக்கு இருந்த போதிலும், 1948 முதல் 1951 வரையிலான ஆண்டுகளில் சி.பி.ஐ கட்சியானது போர்க்குணமிக்கதாக விளங்கியது. பிறகு, கட்சியானது 

காலஞ்சென்ற எஸ்.ஏ.டாங்கே தலைமையில் திரிபுவாதத்திற்கும் மற்றும் பாராளுமன்ற கட்சியாகவும் மாறும் காலகட்டமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்று முழக்கங்களான "சோசலிச சமுதாயம்" என்பதை மதிப்பீடு செய்து தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமை முழக்கத்தை கைவிடுவது; இந்திய தேசிய ஒற்றுமை என்ற கருத்தாக்கத்துடன் இணைந்து செல்வது, தேசிய இன சுயநிர்ணய உரிமை பேசிய காலத்திலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து போராடாமல் இருந்தது - போன்ற சில நிலைபாடுகளை சி.பி.ஐ. எடுத்தது. ஆனால், திராவிட இயக்கங்களோ பார்ப்பன எதிர்ப்பு, வட இந்தியர் எதிர்ப்பு, திராவிட நாடு கோரிக்கை, காங்கிரஸ் எதிர்ப்பு, மற்றும் இந்தி எதிர்ப்பு போன்ற முழக்கங்களை முன் வைத்து போராட்டங்களை நடத்தினார்கள். இதன் மூலம் சிறப்பான வகையில் மக்களை பொதுவாகவும் மற்றும் குறிப்பாக மாணவர் சமுதாயத்தையும் ஈர்த்தார்கள். ஆனால், புரட்சிகர அரசியலை மாணவர்களிடம் முன் வைப்பதற்கு பதிலாக கல்விக்கான உதவித்தொகை, கட்டணக் குறைப்பு, விடுதிக்கான வசதிகள் போன்ற பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமே எங்களது போராட்டம் இருந்ததால், நாங்கள் வலுவான மாணவர் அமைப்பை உருவாக்குவதில் தோல்வியடைந்தோம்.

1960-களில் மோகன் குமாரமங்கலம், எஸ்.சி.சி. அந்தோணிப்பிள்ளை போன்ற ஜாம்பவான்களை அரங்கத்தினின்று அகற்றி போக்குணமிக்க தொழிற்சங்கங்களை எவ்வாறு கட்டினீர்கள்?

நாங்கள் தொழிற்சங்க இயக்கத்திற்கு வந்த பொழுது குருசேவ் தலைமையிலான (சோவியத் யூனியனின்) திருத்தல்வாதப் போக்குகள் சர்வதேசிய மற்றும் தேசிய தாக்கம் செலுத்த முயற்சித்தன. சமாதான வழியிலான புரட்சி, சமாதான வழியிலான மாற்றம் போன்ற கருத்தாக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சி.பி.ஐ. இந்த வழியைப் பற்றி, காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்டது மேலும், தொழிற்சங்க இயக்கத்தில் சட்ட ரீதியான நடைமுறையை மட்டுமே பின்பற்றியது.

எங்களைப் பொறுத்த வரையில், குருசேவினுடைய திரிபுவாத நிலையை தவறானதாகக் கருதினோம். தொழிற்சங்க இயக்கத்தை லெனினிய அடிப்படையில் கட்ட ஆரம்பித்தோம். பாராளுமன்ற சந்தப்பவாதம் மற்றும் பொருளாதாரவாதம் ஆகியவற்றை எதிர்த்த லெனின் "என்ன செய்ய வேண்டும்?" என்ற துண்டுப்பிரசுரம் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது; மற்றும் லெனினியத்தால் தாக்கம் பெற்றோம். எந்த அளவிற்கு புரிந்து கொண்டோமோ அந்த அளவிற்கு அதை செயற்படுத்தினோம். அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்த அணிதிரட்டலாலும், காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளின் அம்பலப்படுத்தியதாலும், முதலாளியத்திற்கு முந்தைய சுரண்டல் வடிவமான காண்ட்ராக்ட் முறை போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களாலும், தொழிலாளர்களின் அன்றாட கோரிக்கைகளுக்கான சட்ட வரம்புகளைத் தாண்டி போர்க்குணமிக்க போராட்டங்களை ஒருங்கிணைத்ததாலும் மாணவர் சமுதாயத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு அப்போராட்டம் திராவிட இயக்கத்தால் கைவிடப்பட்ட பின்பும் தொழிலாளர்களின் ஆதரவை திரட்டியதாலும் எங்களின் தலைமையை பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

நீங்கள் ஏன் வக்கீல் தொழிலை விட்டு வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியராக மாறினீர்கள்?

பிரச்சனை என்னவென்றால் ஒரு கம்யூனிஸ்டு கட்சி வேலைகளை ஒரு பகுதிநேர வக்கீலாக இருந்து கொண்டே செய்வதா? இல்லை முழு நேர ஊழியராக இருந்து கொண்டு செய்வதா? என்பது தான். ஒரு கம்யூனிஸ்ட்டு கண்டிப்பாய் ஓர் வக்கீலாக வேலை பார்த்துத் தான் ஆக வேண்டும் என்பதில்லை; அவர் கட்சியின் அமைப்பாளராகவோ அல்லது விவசாயிகள் இயக்கத்திலோ அல்லது எந்த ஒரு வெகுஜன அமைப்பிலோ பணியாற்றலாம். இவை கட்சியின் தேவை மற்றும் நிலைமைகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.

என்னைப் பொறுத்த வரையில் சட்டப்படிப்பை நான் வக்கீல் தொழிலை மேற்கொள்வதற்காகப் படிக்கவில்லை. படிக்கும் போதே எனது கனவெல்லாம் ஒரு முழுநேர ஊழியராக கட்சியின் அமைப்பாளராக மற்றும் ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆக வேண்டும் என்பதுதான்.

ஒரு புரட்சியாளருக்கு குடும்பம் சுமையானதா?

ஒருவர் தன்னை புரட்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட பிறகு குடும்பத்தை ஒரு சுமையாக கருத வேண்டியதில்லை. நீண்ட மக்கள் யுத்தம் மற்றும் தலைமறைவு வாழ்க்கை ஆகியவற்றின் கோட்பாடுகள் மற்றும் ஆயுதப் புரட்சியினுடைய அரசியல் ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட ஒருவரின் குடும்ப வாழ்க்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதுதான் பிரச்சனை. தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்ட நேரத்திலேயே குடும்ப வாழ்க்கை எனக்கு ஒத்து வரவில்லை. அதற்கு முன்பு கூட திருமணம் எனக்கு பெற்றோர்களால் செய்து வைக்கப்பட்டதே. என்னுடனான அவர்களுடைய ஒத்துழைப்பு என்பது அவர்களின் வர்க்கத் தன்மை மற்றும் சிந்தனையின் தீவிரத்தைப் பொறுத்தே இருந்தது.

ஒரு புரட்சியாளன் தலைமறைவு வாழ்க்கைக்கான வரையறைகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது, குடும்பம் ஒரு சுமையாக இருப்பதில்லை. நான் அரசியலில் நுழைவதற்கு முன்பே செய்து வைக்கப்பட்ட குடும்பம் எனது தலைமறைவு வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லை.

சி.பி.எஸ்.யூ. மற்றும் சி.பி.சி ஆகியவற்றுக்கிடையில் சர்வதேச அளவில் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற "மாபெரும் விவாதம்" என்ற தத்துவப் போராட்டம் சி.பி.ஐ.-ன் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?

குருசேவால் தலைமை தாங்கப்பட்ட முழு திருத்தல்வாதம் 1950 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எஸ்.யூ) இருபதாவது காங்கிரசில் "ஸ்டாலினிசத்தை அகற்றுவது" என்ற பெயரில் நிலை நிறுத்தப்பட்டது. எல்லா மக்களுக்குமான கட்சி, எல்லா மக்களுக்குமான அரசு, அமைதியாக போட்டி, அமைதியான மாற்றம் மற்றும் சமாதான சகவாழ்வு போன்ற கருத்தாக்கங்களால் வர்க்கப் போராட்டத்திற்கான காரணங்களும், தேசிய விடுதலைப் புரட்சியும் காட்டிக் கொடுக்கப்பட்டன.

இத்தகைய திருத்தல்வாதத்தை எதிர்த்து தோழர் மாசேதுங்கால் தலைமை தாங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.சி) "மாபெரும் விவாதம்" என்றழைக்கப்பட்ட தத்துவப் போராட்டத்தை நடத்தியது. சி.பி.ஐ தலைவர்கள் தெலுங்கான ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு 1950களில் பூர்சுவா பாராளுமன்றப் பாதையின் மூலம் கேரளாவினுடைய அரசில் பங்கேற்றதன் மூலம் குருசேவை ஒரு படி முந்திக் கொண்டார்கள் அவர்கள் குருசேவ்வின் திரிபுவாத வழியை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றவாத நிலையை எடுத்து காங்கிரசுக்கு ஆதரவளித்தார்கள்.

டாங்கேயிசத்தை எதிர்த்து கலகம் செய்த இ.எம்.எஸ். நம்பூதிரி மற்றும் ஜோதிபாசு போன்றவர்கள் மாவோவின் சிந்தனையையும், வழியையும் ஏற்றுக் கொள்ளாததோடு தத்துவப் போராட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அளவில் சுருக்கிக் கொண்டார்கள். மேலும் திரிபுவாதத்தை உள்ளடக்கிய நடுநிலைவாதம் என்ற நிலையை எடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து இந்த தலைவர்கள் எஸ்.ஏ.டாங்கேயின் கடிதத்தை வைத்துக் கொண்டு (1930' களில் சிறையிலிருந்து ஆங்கில அரசாங்கத்திற்கு எழுதப்பட்டது) தத்துவார்த்த காரணங்களை உள்ளடக்கி சி.பி.ஐ. (மார்க்சிஸ்டு) டை உருவாக்கி கட்சியை (சி.பி.ஐ) பிளவுபடுத்தினார்கள்.

சரி! நீங்கள் சி.பி.ஐ.(எம்) ல் சேர்ந்தீர்கள், அங்கு உங்களின் அனுபவம் என்ன? ஏன் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினீர்கள்?

'காலனியாதிக்கம் ஓர் முடிவிற்கு வந்து விட்டது மற்றும் பொருளாதாரப் போராட்டத்தின் மேல் மையமிட்ட புதிய நிலை' வந்துள்ளது என்ற குருச்சேவின் வாதத்திற்கு "புதிய காலனியவாதிகளுடைய மன்னிப்பு என்றழைக்கப்பட்ட ஆவணம், காலனி ஆதிக்கம் முடிவிற்கு வரவில்லை; மாறாக புதிய காலனியாதிக்கம் என்ற புதிய வடிவத்தில் தொடர்கின்றது என்று பதிலுரைத்தது. அந்த ஆவணம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அரசியல் மற்றும் பொருளாதாரப் போராட்டங்களை நடத்த அறை கூவல் விடுத்தது. "புதிய காலனியவாதிகள்" என்ற ஆவணம் வர்க்கங்களின் பங்கு, ஆளும் வர்க்கங்களின் தன்மை, முதலாளித்துவ நாடுகளிலுள்ள முதலாளித்துவ வர்க்கங்கள், உலகைப் பங்கீடு செய்து கொள்வது ஆகிய காரணங்களின் அடிப்படையிலான புதிய காலனியத்தின் சார்புத்தன்மை மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் மற்றும் அவர்களின் பல்வேறு வடிவங்கள் போன்ற விசயங்கள் குறித்து விரித்துரைக்கப்படவில்லை. இருந்தபோதிலும், "அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழலிலிருந்து பிறக்கின்றது" என்ற முழக்கம் அரசு மற்றும் புரட்சி பற்றிக் கவர்ந்தது. அரசியல் ரீதியான போர்த்தந்திர மற்றும் செயல் தந்திர பாதைகள் முறையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த பலவீனங்கள் இருந்த காரணத்தால் சி.பி.எம் தலைவர்களின் நடுநிலைவாதம் முற்றிலுமாக தோற்கடிக்கப்படவில்லை.

"மாபெரும் விவாதம்" இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற வாதத்தை எதிர்த்து இந்தியப் புரட்சியை நிறைவடையச் செய்வதற்காக மார்க்சிய-லெனினிய-மாவோயிச சிந்தனையின் அடிப்படையில் 1970 - களில் விவசாயப் புரட்சியைத் தொரடங்கினோம்.

அதே வருடத்தில் இந்திய தொடு வானத்தில், மேற்கு வங்கத்தில் உதயமான நக்சல்பாரி எழுச்சியானது காரணிகளுக்கான கிரியா ஊக்கியாக சேவை செய்தது. இத்தகைய அரசியல் வழியை பின்பற்றியதற்காக நாங்கள் சி.பி.ஐ.(எம்) மிலிருந்து வெளியேற்றப்பட்டோம்.

சி.பி.ஐ.(எம்)மிற்கும் சி.பி.ஐ.(எம்.எல்)க்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் யாவை?

சி.பி.ஐ.(எம்) நடுநிலையாளர் நிலையை எடுத்தது. இது, சோவியத் யூனியனை (சி.பி.எஸ்.யூ) ஒரு திரிபுவாத கட்சியென்று ஒப்புக்கொண்ட போதிலும், சோவியத் யூனியனை ஒரு "சமூக ஏகாதிபத்தியம் அல்ல" என்று வாதிட்டது. மேலும், இந்தியாவை அரசியல் ரீதியாக சுதந்திரம் பெற்ற நாடாகக் கருதுகிறது. இதோடு கூடவே இந்திய ஆளும் முதலாளிகளை தேசிய முதலாளிகள் என்று இது வரையறுக்கின்றது. இதுபோல், ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினருடனும் "ஒற்றுமை மற்றும் போராட்டம் என்ற பாதையை செயற்படுத்தினர் மறுபுறத்தில் இந்தியப் புரட்சிக்கான போர்க்குண வழியை முன் வைக்க மறுத்ததோடு, பாராளுமன்றப் பாதையையே முன்வைத்து பின்பற்றினர். எனவே, சி.பி.ஐ. க்கும் சி.பி.எம். மிற்கும் இடையில் அடிப்படையில் யாதொரு முரண்பாடுமில்லை. இவைகள் இரண்டு திரிபு வாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளேயாகும்.

சி.பி.ஐ.(எம்.எல்)யைப் பொறுத்தவரையில், மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையை தமது வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக்கொள்கின்றது. அது சி.பி.எஸ்.யூ. ஒரு திரிபுவாதக் கட்சியென்றும், சோவியத் யூனியனை சமூக ஏகாதிபத்தியம் என்றும் கூறியது. அது மேலும், இந்தியா ஒரு அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்றும் இந்திய அரசை தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு என்றும் இந்திய ஆளும் வர்க்கங்களை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடமாட்டார்கள் என்றும் அவர்கள் புதிய காலனி ஆதிக்கத்தின் தாசர்கள் என்றும் கூறியது. மேலும், அது இந்திய ஆளும் வர்க்கங்களான தரகு முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் தாக்குவதற்கு அறைகூவல் விடுத்தது. இது, இந்தியப் புரட்சிக்கான புரட்சிகரப் பாதையாக நீண்ட மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்தது. இதன் காரணத்தால் எம்.எல் இயக்கம் பாராளுமன்றப் பாதையையும், பாராளுமன்ற வாதத்தையும் எதிர்த்தது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். போன்ற கட்சிகளுக்கும் மற்றும் எம்.எல் இயக்கத்திற்கும் இடையிலான முரண்பாடு என்பது திரிபுவாதத்திற்கும், மார்க்சியத்திற்குமிடையிலான முரண்பாடாகும். 

'அழித்தொழிப்பு (வர்க்க எதிரியை) வழியை எவ்வாறு எடுத்துக் கொண்டீர்கள்? மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?'

எம்.எல் இயக்கம் மா-லெ தத்துவத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை; நிலைமைகளை பயிலவில்லை; அரசியல் நடைமுறை மற்றும் தந்திரங்களை வகுக்கவில்லை; அது தன்னெழுச்சியான செயல்தந்திர வழியை பின்பற்றியது. வியட்நாம் மீதான அமெரிக்கத் தாக்குதலை உலப்போருக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதிக் கொண்டு அது செயல் தந்திரங்களை வகுத்தது. புரட்சியினுடைய சமச்சீரற்ற வளர்ச்சிக்கான விதிகளை மறுத்தது. அது அதிகமாக சுற்றித்திரிய வேண்டிய தேவையிருக்கும் கொரில்லாப் போர் முறையை முன்வைத்தது. 

நான் அழித்தொழிப்பு வழியில் கருத்து வேறுபாடு கொண்டிருத்த போதிலும் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் பற்றி நான் அதாவது போதிய அறிவு பெற்றிருக்கவில்லை. இதற்கான அடிப்படைக் காரணங்கள் யாதெனில், லெனினுடைய கொரில்லா யுத்த முறை பற்றிய கட்டுரையில், அவர் வெளிப்படுத்திய அடிப்படைக் கருத்துக்கள் மீதான புரிதல் போதாமையும்; இடது சந்தர்ப்பவாத அணிகளான லின்பியோவின் "நீண்ட மக்கள் யுத்தம் நீடுழி வாழ்க" என்ற தவறான கருத்துக்களை சரியாக புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தோல்வியுமேயாகும்.

நான் அழித்தொழிப்பை ஓர் வழியாக கருதவில்லை என்றாலும், அதை போராட்டத்தின் ஓர் வடிவமாக எடுத்துக் கொண்டதால், வெகுஜன நடவடிக்கையும், அழித்தொழிப்பும் இணைந்த மையக் கூட்டுக்குழுவில் நான் இணைந்து கொண்டேன். இதே அடிப்படையில், நாங்கள் ஆந்திராவின் மா-லெ அமைப்போடு இணைந்து மக்கள் யுத்தக் குழுவை (பி.டபிள்யூ.ஜி) உருவாக்கினோம். இந்த அமைப்பின் நடைமுறையின் அடிப்படையிலும், பல்வேறு புரட்சிகரக் குழுக்களின் விமர்சனத்தாலும் கட்சியின் அரசியல் வழியின் மீது கருத்து வேறுபாடுகள் பி.டபிள்யூ.ஜி.-யினுள் மெதுவாக எழுந்தன.

இந்த வேறுபாடுகளை நீங்கள் விளக்க முடியுமா?

சீனாவை தலைமை தாங்கிய காலஞ்சென்ற டெங்சியோ பிங்கால் 11வது சி.பி.சி காங்கிரசில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ சர்வாதிகாரம் ஏற்படுத்தப்பட்டதன் மீதான விமர்சனத்தில் நாங்கள் உடன்பாடு கொண்டிருந்ததும், சி.பி.சி. யால் முன்வைக்கப்பட்ட "மூன்றுலகக் கோட்பாடு" வர்க்க சமசரப் பாதையைக் கொண்டது என்று கூறியதாலும், கட்சியின் செயல்தந்திர வழி தன்னெழுச்சி உடையது என கூறியதாலும் பி.டபிள்யூ.ஜி. இல் முரண்பாடுகள் தோன்றின. இத்தகைய கருத்துக்களை நாங்கள் வெளியிட்டமைக்காக பி.டபிள்யூ.ஜி -லிருந்து வெளியேற்றப்பட்டோம்.

எமர்ஜென்சிக்குப் பிறகு நீங்கள் சிறையிலிருந்து வெளியே வந்தீர்கள்; எம்.எல். இயக்கம் பல்வேறு குழுவாக சிதறி இருந்த போதிலும் நீங்கள் ஏன் கூட்டக்குழுவை தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் சிறையிலிருந்து வெளியே வந்த பொழுது வினோத் மிஸ்ரா குழுவானது அழித்தொழிப்பு வழியை ஒரே பாதையாக ஏற்றுக் கொண்டிருந்தது. இதில் நான் கருத்து வேறுபாடு அவர்கள் என்னை திரிபுவாதி என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த முயன்றார்கள். மற்றொரு குழுவான எஸ்.ஓ.சியோ அக்காலகட்டத்தில் எமெர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரசை எதிர்த்து முன்னாள் ஜனதா அரசுடன் மையத்தில் ஓர் ஐக்கிய முன்னணியை கட்டும் தீர்மானத்தை கொண்டு வந்திருந்தது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் நான் இந்தக் குழுவில் இணையவில்லை. திருப்பத்தூர் பகுதியில் இயங்கி வந்த கண்ணாமணி குழு ஒரு அராஜகவாத குழுவாக இருந்ததால், அக்குழுவை நான் தவிர்த்துவிட்டேன். மைய கூட்டக்குழு அழித்தொழிப்பையும், வெகுஜன இயக்கத்தையும் அமைப்பில் ஒருங்கிணைத்திருந்தது. அழித்தொழிப்பை போராட்ட வடிவங்களுள் ஒன்றாக நான் ஏற்க் கொண்டிருந்த காரணத்தால் இந்தக் குழுவில் இணைந்தேன்.

நக்சல்பாரி இயக்கம் ஏன் வேகமாக வளரவில்லை? மேலும் அவை பல்வேறு குழுக்களாக பிளவுபட்டதன் காரணம் என்ன?

சீனாவிலும் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்ட பிறகு, இடது திரிபுவாத அழித்தொழிப்பு வழியை வைத்திருந்த வினோத் மிஸ்ரா குழுவானது, அதற்கு நேர் எதிரான வலது திரிபுவாதத்தில் வீழ்ந்து பாராளுமன்றக் கட்சியாக தன்னை மாற்றிக் கொண்டது.

அவர்கள் அரசு அதிகாரத்துவ முதலாளியத்திலிருந்து தனியார் முதலாளியத்திற்கு (தனியார் சொத்தினுடைய முதலாளித்துவம், உடைமை உரிமையின் பிரதானமான வடிவமாகும்) ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டின்றி வெற்றிகரமாக மாறிச்செல்ல முடியவில்லை. அதனால் இந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. இதற்கு பொருத்தமாகவும் பொதுவுடைமை இயக்கங்களை தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் அப்புறப்படுத்தவும் அவர்கள் கலைப்புவாதத்தை முன்னிறுத்தினார்கள்.

எம்.எல் இயக்கத்தில் இடது சந்தர்ப்பவாத வழிக்கு ஏற்பட்ட தோல்வியானது, இத்தகைய கலைப்புவாதிகளுக்கு கட்சியில் ஊடுருவவும் கட்சியைப் பிளக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. தத்துவார்த்த காரணங்களால் கட்சி பிளவுபட்டது. மார்க்சிய-லெனினியத்திற்கு மாற்றான வலது முதலாளித்துவ வழி புதிய இடதுகள் என்ற பெயரில், ஸ்டெரக்சுரலிசம் மற்றும் பின்நவீனத்துவம் என்ற கருத்தாக்கங்கள் மூலமாக முன்வைக்கப்பட்டன. குருச்சேவ் காலத்திலிருந்தே இத்தகைய கருத்துக்கள் தொடருகின்றன. இத்தகைய கருத்தாக்கங்களை அதன் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே எதிர்க்காததால் அவர்கள் எம்.எல் இயக்கத்தினுள் ஊடுருவி பிளவிற்கு உள்ளாயின. தத்துவப் போராட்டத்தினால் மட்டுமே, மார்க்சிய - லெனினியவாதிகளை ஒரு பாட்டாளிவர்க்க கட்சியின் கீழ் ஒன்றுபடுத்த முடியும்.

ஏன் உங்களை சிறையிலிட்டார்கள்? அது குறித்த உங்களின் சிறை அனுபவம் யாது?

பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள கந்தர்வகோட்டையைச் சேர்ந்த நிலப்பிரபு கொலை சம்பந்தமான வழக்கிற்காக என்னை கைது செய்து சிறையிலடைத்தார்கள். அந்த வழக்கிலிருந்து நான் விடுதலையடைந்ததும் கூட மறுபடியும், எனது சிறைவாசம் அவசர காலகட்டத்தில் மிசாவின் கீழ் தொடர்ந்தது.

சிறையில் நக்சல்பாரி கைதிகள் தனிமைப்படுத்தப் பட்டார்கள் மற்றும் மோசமான சித்திரவதைக்கு ஆளானார்கள். மற்ற உடனிருந்த சிறைக்கைதிகள் நக்சல்பாரி கைதிகளிடத்து மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால், நக்சல்பாரிகள் வெளியே மட்டும் போராடவில்லை; உள்ளேயும் போராடுகின்றார்கள் என்று எண்ணினார்கள். சிறைக் கைதிகளை வகைப்படுத்தினால் அவர்களை நான்கு விதமாய் பிரிக்கலாம். 1. சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்து விட்டு தண்டிக்கப்பட்டவர்கள், 2. வாய்க்கால் - நிலம் சம்பந்தமான பிரச்சனைகளையொட்டிய கொலையாளிகள், 3. பெரியபணக்காரர்களின் சதிவேலைகளால் பாதிக்கப்பட்டவர்கள், 4. கொலை மற்றும் கொள்ளைகளில் தண்டிக்கப்பட்ட கறுப்பு குல்லாய் கைதிகள்.

நாங்கள் அவர்களுடைய துன்பத்திற்கான சமூக காரணங்களை விளக்கினோம். அவர்களுடைய துன்பத்திற்கான காரணங்களை அம்பலப்படுத்தினோம். அரசாங்கத்தினுடைய வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்தினோம். கைதிகளின் மீதான சிறை அதிகாரிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைகளை எதிர்த்தும் கைதிகளுக்கான உரிமைகளுக்காகவும் அவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் இறங்கினோம்.

கடலூர் சிறையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு குல்லாய் கைதிக்கு தக்க மருந்து வழங்கப்படாததை எதிர்த்தது; தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரியது; கைதிகளின் உணவுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்தது; கைதிகளுக்கு அடிப்படை, முறையாக மருத்துவ உதவி செய்யாததை எதிர்த்தது மற்றும் சென்னை சிறையில் வார்டன்களின் நலன்களுக்காக கோரிக்கை வைத்தது போன்ற எங்களின் ஒருங்கிணைந்த போராட்டம் / எதிர்ப்பு சிறைச்சாலைகளையே செயலிழக்கச் செய்தது. சென்னை மத்திய சிறையில் அமைச்சர் தன்னளவில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சமரசம் செய்து வைத்தார். இவ்வாறு எங்களால் நடத்தப்பட்ட பல போராட்டங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

நீதிமன்றத்தை புறக்கணிப்பது உங்கள் கட்சியில் உள்ள நடைமுறை தானே! நீங்கள் புறக்கணித்தீர்களா (அ) வாதிட்டீர்களா?

இது தன்னெழிச்சியானது தானே தவிர கட்சியின் முடிவல்ல. ஆரம்பத்தில் நான் கூட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தேன். பிறகு வெளியேயும் சிறைக்கு வெளியேயும், உள்ளேயும் இருந்த தோழர்கள் கட்சியானது சட்டப் பூர்வ வாய்ப்புகளை செயல்தந்திர ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் இதனைப் பின்பற்றி நாங்கள் நீதிமன்ற வழக்குகளை நடத்தினோம்.

தமிழகத்தில் எம்.எல் இயக்கத்தின் பின்னடைவுகளுக்கு காரணம் முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரத்தால் கட்டவிழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையே என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறதே?

ஒரு இயக்கத்தின் பின்னடைவுக்கு அல்லது வெற்றிக்கு காரணம் ஒடுக்கு முறை அல்ல மாறாக அதன் அரசியல் பாதையே. அவர் (தேவாரம்) ஒடுக்கும் அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் ஒரு கருவி, அவ்வளவே! இது குறித்து முன்னாள் டி.ஜி.பி மோகன் தாஸ் அவருடைய "மாயையும், உண்மையையும்" என்ற புத்தகத்தில் "தேவாரம், என்னை போன்ற உயர் அதிகாரிகள் நக்சல்பாரிகளை ஒழித்துக்கட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாலன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே தேவாரத்தின் ஒடுக்கு முறைக்கு பலியானார். 

நீங்கள் உங்கள் சொந்த வழியில் போல்ஷ்விக் கட்சியை ஆரம்பித்தீர்கள்? எந்த பாதையை அது பின்பற்றுகின்றது?

எமது அமைப்பு 1970ல் பின்பற்றப்பட்ட கட்சியின் வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்பொழுது அது வேலைத் திட்டத்திற்கு சேவை செய்யும் வகையில் போர்த்தந்திரத்தையும், செயல்தந்திரத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது நாங்கள் விவசாயிகள் (பணக்கார விவசாயிகளின் ஒரு பிரிவினர் மற்றும் தேசிய முதலாளிகள்) மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனான கூட்டோடு, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஒரு மக்கள் ஜனநாயக குடியரசமைக்க அரசியல் ரீதியில் மக்களை அணி திரட்டிக் கொண்டிருக்கின்றோம். இருப்பினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது இன்னும் ஆயுதப் போராட்ட வடிவத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

ஆந்திரா மற்றும் பீகார் போன்றவற்றோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம் வளராததற்கு ஏதேனும் பிரத்தியேகமான காரணங்கள் இருக்கின்றனவா?

அரைக்காலனிய மற்றும் அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயமானது சமச்சீரற்ற வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய மக்கள் ஜனநாயக புரட்சிக்கான புறவயக் காரணிகள் சமச்சீரற்று வளர்ச்சியடைந்துள்ளன. அதன்படி ஆயுதப் போராட்டத்தினுடைய வளர்ச்சியும் சமமற்று இருக்கின்றது. இன்னும் ஆந்திராவை எடுத்துக் கொண்டால் ஆயுதப் போராட்டம் இப்போது பரவலாக வளர்ச்சியடையவில்லை. தண்டகாருண்யா பகுதியில் ஆயுதப் போராட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ராயல் சீமா போன்ற கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்னும் ஆயுதப் போராட்டம் அதற்கான வடிவத்தை எடுக்கவில்லை. ஆந்திரா மற்றும் பீகார் பகுதிகளில் அரை நிலவுடைமை உறவுகள் மற்றப் பகுதிகளை ஒப்பிடுகையில் பலமானதாக இருக்கின்றன. எதிர்புரட்சிகர வன்முறைகளால் மக்களின் இழப்புக்கள் அதிகாக இருக்கின்றபடியால் அங்கு அது ஆயுத போராட்ட வடிவம் கொள்வது முற்றிலும் முறையானதே.

உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றவர்கள் இயக்கத்திலிருந்து வெளியேறி "தமிழக விடுதலைப் படை"யை உருவாக்கினார்களே! ஏன்?

தமிழ்நாட்டின் தேசிய இன சுயநிர்ணய பிரச்சனையில், அவர்கள் பூர்சுவா தேசிய இனவாதத்தை முன் வைத்தார்கள். அதாவது தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையை வைத்தார்கள். ஆனால் கட்சிக்கு இதில் உடன்பாடில்லை தேசிய இனப்பிரச்சனையில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அதே வேளையில், பிரிவினையா அல்லது ஒற்றுமையா என்பதை விவசாயப் புரட்சியின் அடிப்படையில் தீர்மானிக்கப்டும் என்பதை நாங்கள் திடமாக நம்புகின்றோம். பிரிவினைக்கான கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது ஒவ்வொரு தேசிய இனத்தின் பிரிவினை பிரச்சனையையும் தனி வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பொறுத்தவரையில், இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்ட காஷ்மீர் தேசிய இனத்தவரின் பிரிவினைக் கோரிக்கை நியாயமான கோரிக்கையாகும்.

மற்ற தேசிய இனங்களுக்கு, அவர்கள் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளும் போது மட்டுமே விடுதலைகிட்டும் நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

அப்படியானால், நீங்கள் தனி ஈழத்திற்கான காரணங்களை எந்த அடிப்படையில் ஆதரிக்கின்றீர்கள்?

ஸ்ரீலங்கா அரசாங்கமானது புத்தமத, சிங்கள பெரும்பான்மை இனவெறி மற்றும் பாசிச வெறி கொண்ட அரசாக மாறிவிட்டது- இந்த அடிப்படையிலேயே தமிழ் இனத்தை அழித்தொழிக்கின்றது. தமிழினத்தை அரசியல் ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்கப்படும் பின்னணியில் நாங்கள் தனி ஈழக் கோரிக்கையை உறுதியாக ஆதரிக்கின்றோம்.

அதே சமயத்தில், இலங்கை அரசை ஜனநாயகப் படுத்துவதாக இருந்தாலும், இலங்கை பாட்டாளி வர்க்கத்தை பெரும்பான்மை தேசிய இனவாதத்திலிருந்து மீட்டெடுப்பதாக இருந்தாலும் தமிழர்கள் வெற்றி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த நிலைமைகளை இந்திய நிலைமைகளோடு இணைத்துப் பார்க்க முடியாது.

டாக்டர் கிருஷ்ணசாமி, மணி மற்றும் திருவள்ளுவன் போன்ற நபர்கள் சாதிய அமைப்புகளோடு ஒன்றிணைந்துவிட்டார்களே ஏன்? இனி வர்க்கப் புரட்சி சாத்தியமில்லை; சாதிப் புரட்சி ஒன்றே தீர்வு என்ற காரணத்தினாலா?

திருவள்ளுவன் மட்டுமே எங்களது அமைப்பிலிருந்து வெளியே சென்றார். மற்றவர்கள் வெவ்வேறு அமைப்புகளிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் எம்.எல் இயக்கம் பொதுவான பின்னடைவால் பாதிக்கப்பட்டதாலும் அதைக் தொடர்ந்து புரட்சியின் மீது நம்பிக்கை இழந்ததாலும் ஏகாதிபத்தியம் மற்றும் சமூக ஏகாதிபத்திய வாதிகளினால் சர்வ தேசிய பட்டாளிவர்க்க இயக்கத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலைப்பு வாதத்தால் தாக்கம் கொண்டதாலும், அவர்கள் வெளியேறினார்கள். சாதிய முறையை ஒழிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட அரசியல், தத்துவார்த்த நிலைபாடுகள் ஒன்றும் புதிதான ஒன்றல்ல. அவர்கள் பெரியாரியம், அம்பேத்காரியம் மற்றும் பின்நவீனத்துவம் ஆகியவற்றின் கலவையை முன் வைத்தார்கள். இந்த நாட்டில் அம்பேத்காரியத்திற்கும், பெரியாரித்திற்கும் கம்யூனிச இயக்கத்தைப் போலவே நீண்ட வரலாறு உண்டு. இருப்பினும், அம்பேத்காரியம் மற்றும் பெரியாரியம் ஆகிய இரண்டாலும் சாதியை ஒழிக்க முடியாது. ஏனென்றால் இரண்டு கருத்தியல்களுமே சாதிய இருப்பிற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை தகர்க்க இலக்கு கொள்ளாமல் சமுதாய மேற்கட்டுமானங்களான சாதிய பாகுபாடுகள், சாதிய அகமணம் மற்றும் தீண்டாமை போன்றவற்றை எதிர்த்துப் போராடுகின்றன.

அவர்கள் நிலவுகின்ற இந்த அரசமைப்பிற் குள்ளாகவே கல்வி, வேலை மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றில் சலுகைகளைப் பெறுவதன் மூலம் சாதியத்தை ஒழித்துவிட முடியும் என்று கனவு காண்கிறார்கள். அதனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள். எம்.எல் இயக்கத்தை பொருத்தவரையில், நிலவுகின்ற அரசமைப்பை புரட்சிகர முறையில் மாற்றியமைத்து ஒரு புதிய ஜனநாயக அரசை அமைப்பதின் மூலம் மட்டுமே நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை மற்றும் அதன் பொருளாதார வெளிப்படான பிறப்பின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை, படிநிலை அமைப்பு மற்றும் தீண்டாமை போன்றவற்றை ஒழிக்க முடியும் என கூறுகின்றது. 

உங்கள் இயத்தின் வெகுஜன அமைப்பான புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தை சேர்ந்த மார்க்ஸ், கோச்சடை, கேசவன் மற்றும் கல்யாணி ஆகியோர் ஏன் வெளியேறினார்கள்?

நான் முன்பே கூறியபடி ஒருபுறம் மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் பால் நம்பிக்கை இழந்ததாலும், ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் சமூக ஏகாதிபத்தியவாதிகளின் கலைப்புவாதத்திற்கும் பலியானதாலும் அவர்களால் எமது இயக்கத்தில் இருக்க இயலவில்லை. முதலில் சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியம் அல்ல என்றார்கள். இப்போது, இது ஏகாதிபத்தியத்திற்கு பிந்தைய காலகட்டம் என தைரியமாகச் சொல்லுகின்றார்கள். அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடைய மன்னிப்பிற்காக வேண்டுகோள் விடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கம்யூனிச தத்துவம் காலத்திற்கேற்ப பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியினுடைய மொகித்சென் கூறுகின்றார். ராஜ் என்ற பொருளாதாரா நிபுணர் மார்க்சியம் அதனளவிலேயே முழுமையற்றது என்ற அளவிற்கு கூறியிருக்கின்றாரே?

கம்யூனிச தத்துவம் ஒரு வளர்ந்து கொண்டிருக்கின்ற அறிவியல் சமுதாயத்தை ஆராயவும், புரிந்து கொள்ளவுமான கருத்தியல் பொருள்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் வளர்ச்சியையொட்டி மார்க்சியமும் தொடர்ச்சியாக தனக்குள்ளேயே வளர்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் மாக்சியத்தால் முன்வைக்கப்பட்ட உலகக் கண்ணோட்டமான இயங்கியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல்வாதமுமே வழக்கொழிந்துவிட்டன என்பதை மொகித்சென் ஏற்றுக்கொள்வாரா? மொகித்சென், கோர்ப்பசேவினுடைய கலைப்புவாதத்தின் ஆதரவாளர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் இவற்றை விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நீதிமன்றங்கள் குறித்து தங்களது கருத்து யாது?

ஊழல் என்பது தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் ஒரு பொதுப் போக்காக நிலவுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் மீது கூட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் ஊழலானது மிகவும் மோசமானது, அப்பட்டமானது, கொடுமையானது மற்றும் ஊழலின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால், ஊழலானது ஜெயலலிதா காலத்திலிருந்து ஆரம்பமானதல்ல. இந்திரா காந்தி காலத்தில் நகர் வாலா ஊழல், ராசீவ் காந்தி காலத்தில் ஃபோபர்ஸ் ஊழல், நரசிம்ம ராவ் காலத்தில் முன்னோடியில்லாத அளவிற்கு நடத்த ஊழல்கள், கருணாநிதியினுடைய சர்க்காரியா ஊழல் போன்ற இந்த ஊழல்களெல்லாம் ஊழல் ஒரு பொதுவான போக்காக இருப்பதின் வெளிப்பாடாகும். இன்னும் வேறு வார்த்தைகளில் சொன்னால், பாராளுமன்ற மற்றும் பூர்சுவா ஜனநாயகம் ஊழலை உள்ளடக்கியதே.

ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்லப்படுகின்றதே! அப்படியானால் பின் எங்ஙனம் பூர்சுவா மற்றும் மூலதனக் கும்பல்கள் அரசாங்கத்தின் மீது தங்களது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன?

பூர்சுவாக்கள் பங்குச்சந்தை மற்றும் அரசாங்கத்திற்கிடையிலான கூட்டணி மூலமும் அதிகாரத்திலுள்ள ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மூலமும் அரசாங்கத்தின் மேல் தாக்கம் செலுத்த முயலுகின்றனர் என்று ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் பதிலுரைப்பார் அதனால், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு சேவை செய்கின்ற பாராளுமன்ற ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு புதிய ஜனநாயக குடியரசை சோவியத் பாதையில் உருவாக்கும் போதுதான் ஊழலை வேரோடு ஒழிக்க முடியும்.

இது கேட்க நன்றாயிருக்கின்றது, ஆனால் யார் இதை நிறைவேற்றுவார்?

இன்று அரசின் மீதும், பாராளுமன்ற அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்த மக்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. சமீபத்தில் நடந்த தேர்தலில் போலி ஓட்டுகளைக் கூட சேர்த்துப் பார்த்தாலும், உண்மையில் 30% சதவீதத்தினரே ஓட்டுப் போட்டுள்ளனர். புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்கம் கடைப்பிடித்து வரும் பொருளாதார நெருக்கடிகளின் மீதான வெகுஜனங்களின் வெறுப்பை பயன்படுத்திக் கொள்ள இன்னும் புரட்சிகர குழுக்களுக்கு வலிமை தேவைப்படுகின்றது தொடர்ச்சியாக நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அவை புரட்சிகரப் போராட்டங்களுக்கு தயாராகி வருவதையும், புறநிலை வளர்ச்சிகள் புரட்சிக்கு சாதகமாகி வருவதையுமே காட்டுகின்றன. நாங்கள் அத்தகைய இலக்கை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.

பி.ஜே.பி-யின் சுதேசி பட்ஜெட் பற்றி தங்களது கருத்து யாது?

இந்த பட்ஜெட்டுக்கும் சுதேசிக்கும் நிச்சயமாக யாதொரு தொடர்பும் இல்லை. இந்த பட்ஜெட் அதனளவிற்கே பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பங்குச் சந்தைகளுக்கும் தரகர்களுக்கும் சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டினுடைய நோக்கம் பணவீக்கத்தை குறைப்பதும், தொழிற் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவம் என்று கூறுகின்றார்கள். இது சர்வதேசிய சூழ்நிலையைப் பொறுத்தது. தென்கிழக்கு ஆசியா, ருஷியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரமே கடுமையான நெருக்கடியின் பிடியில் இருக்கின்றது. மேலும் பொக்ரான் பரிசோதனைக்குப் பிறகு ஜப்பானும், அமெரிக்காவும் விதித்த பொருளாதாரத் தடைகளின் நிபந்தனைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டை நாம் ஆராய வேண்டும்.

ஆளும் பி.ஜே.பி.யோ சீர்திருத்தங்களை தொடரக் கோருகின்றது. எதிர்க்கட்சியான காங்கிரசும், முன்னாள் நிதி மந்திரிகளான மன்மோகன் சிங்கு மற்றும் ப.சிதம்பரமும் சீர்திருத்தங்களை வேகமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி காவல் நாய்களைப் போல் சேவை செய்கின்றனர்.

கடந்த ஏழு வருடங்களாக இந்தியாவிற்குள் வந்த 80 சதவீத அந்நிய முதலீடுகள் ஊக வாணிப முதலீடுகள் என்ற வடிவத்தில்தான் வந்துள்ளது. இந்த முதலீடுகளெல்லாம் உற்பத்தி அல்லாத துறைகளான கடன்கள், பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், சொகுசு விடுதிகள், இருக்கின்ற தொழிற்சாலைகள், கம்பெனிகள் போன்றவற்றை எடுத்தல் ஆகியவற்றில் போடப்படுகின்றன. இதன் விளைவாக நாட்டினுடைய தொழிற் துறை தலை கீழான மாற்றத்தை எதிர்கொண்டிருக்கின்றது. நாட்டினுடைய தற்போதைய தொழில் வளர்ச்சி விகிதமானது 30% சதவீதமாக திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுத்துறை உற்பத்தியில் திடீர் வீழ்ச்சியானது 6.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி இரு மடங்காக கீழிறங்கியுள்ளது.

இந்த தருணத்தில் இந்த வருட பட்ஜெட்டானது பொதுநிதிப் பற்றாக்குறையை குறைப்பதை நோக்கமாகவும் மற்றும் 4 சதவீதத்திற்கு கொண்டு வரப்போவதாகவும் கூறுகின்றனர். இது உண்மையல்ல. அவர்கள் ரூபாய் 25,000 ஆயிரம் கோடியை அரசாங்கம் சிறுசேமிப்பிற்கு கொடுக்க வேண்டிய வட்டித் தொகையை எடுத்து விட்டு நிதிப்பற்றாக்குறை ரூ.77,955 கோடி என்று பொய் சொல்லுகின்றார்கள். உண்மையில் பொதுநிதிப் பற்றாக்குறையானது ரூ.1,04,000/- கோடியாகும்.

இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக அரசாங்கம் முதலீட்டு செலவை 28 சதவீதமாக குறைத்துவிட்டது. அதாவது ரூ.17,000/- கோடியாகும். மறுபடியும் பொதுத்துறையில் உள்ள பங்குகளை ரூ.17,000/- கோடிக்கு தனியாரிடம் விற்க முடிவு செய்துள்ளது. மற்றும் ரூ.9,000/- கோடிக்கு புதிய வரிகளை சுமத்த கோரியுள்ளது. இத்தகைய பட்ஜெட் மேலும் நாட்டினுடைய தொழில் வளர்ச்சியில் தேக்கநிலையை மட்டுமே கொண்டு வரும் மற்றும் இதை சமன் செய்ய, அதிக அந்நியக் கடன்களை ரூ.88,000/- கோடி அசலுக்கான தவணை மற்றும் வட்டித் தொகையாக திருப்பிக் கொடுக்கப்பட்டுளளது. ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் கட்டளைப்படி நடைமுறைப்படுத்தப்படும் புதிய பொருளாதாரக் கொள்கையானது நாட்டை மேலும், மேலும் அந்நியக் கடன்களில் மூழ்கடிக்கும்.

ஏகாதிபத்தியவாதிகளால் உலக அளவில் உருவாக்கப்பட்ட வேலைப் பிரிவினையே அன்னியக் கடன்களுக்கான அடிப்படைக் காரணமாகும். காரணம் என்னவென்றால், ஏகாதிபத்திய நாடுகள் உயர் தொழில்நுட்ப பொருள்களை பின்தங்கிய நாடுகளுக்கு விற்று இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து குறைந்த விலைக்கு மூலப் பொருட்களை வாங்கி கொள்ளையடிக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையில் நடைபெறும் ஏற்றத்தாழ்வான வர்த்தகத்தால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அந்நியக் கடன் சுமையை அதிகரிக்கின்றது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அந்நியக் கடன்கள் நியாயமற்ற கடன்களாகும். இது போன்ற நியாயமற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தவிர்க்க முடியாதது.

அதனால், அந்நிய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுதலை செய்வதற்கு புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்து போராடுவதும், உலக வங்கி, ஐ.எம்.எப் மற்றும் டபிள்யூ.டி.ஓ ஆகியவற்றினின்று இந்திய அரசாங்கத்தை வெளியேறக் கோரியும், அந்நிய கடன்களை தள்ளுபடி செய்யக்கோருவதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் முன்னுள்ள கடமையாகின்றது.

இன்று கண் முன் நடந்து கொண்டிருக்கும் வகுப்பு மற்றும் சாதியச் சண்டைகளுக்கு என்னதான் தீர்வு?

இன்றைய இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி ஒரு இந்து வகுப்புவாத, பாசிச அரசாங்கமாக ஒரு அரசாங்கத்தை ஒருங்கிணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இந்த முடிவையொட்டி அவர்கள் "இந்து ராஷ்டிரியம்" என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார்கள். இந்தியாவை யார் புனித நாடாகவும், தந்தை நாடாகவும் கருதுகின்றார்களோ அவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று கூறுகின்றனர். இதன் படி மெக்காவை புனிதத்தலமாக கருதும் "முஸ்லீம்களும், செருசேலத்தை புனித இடமாகக் கருதும் கிருத்துவர்களும் இந்தியாவைச் சேராதவர்கள் என்று அறிவிக்கின்றார்கள். இவ்வாறு, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடுகின்றார்கள். பாபர் மசூதி தகர்ப்பு மற்றும் கிருத்துவர்கள் மீதான தாக்குதல் ஆகியவை இந்த திட்டங்களை நிரூபிக்கின்றன.

மேலும், சிறுபான்மையினருக்கு எதிராக சண்டைகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையால் வறுமை விளிம்பிற்கு தள்ளப்படும் மக்கள், போராட்டங்களை துவங்காமல் இருக்க, மக்களின் கவனத்தை அவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். மதச்சார்பின்மை பேசும் காங்கிரசும் வகுப்புவாதத்தை சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் பயன்படுத்துகின்றது. வகுப்புவாதத்தை தூண்டும் பி.ஜே.பி.யும் தேசிய வெறியூட்டும் காங்கிரசும் அரசாங்கத்தை பாசிச மயமாக மாற்ற முயற்சிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பியின் "இந்து ராஷ்டிரமானது மதச் சிறுபான்மையினரை மட்டும் எதிர்க்கவில்லை. வேதகால ஆட்சியை மீட்டெடுப்பதை முன்வைத்து, இந்துயிசத்தின் வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிப்பதோடு, தலித்துக்களையும் மற்றும் இதர பலவீனமான பிரிவினரையும் ஒடுக்குகின்றார்கள். பீகாரில் நடந்த படுகொலைகள் இந்த திட்டத்திற்கு எடுத்துக்காட்டுகள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினர் சமூக நீதி என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளை ஒன்று திரட்டினர். இட ஒதுக்கீடு மூலமாக கல்வியிலும், அரசு இயந்திரத்திலும் தங்களது ஆட்சியை நிலைநாட்டினர். இப்போது அதிகாரத்தை தக்க வைக்கும் பொருட்டும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது அடிமைத்தனத்தை திணிப்பதற்கும் அவர்கள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி-க்களுக்கான இட ஒதுக்கீடை தள்ளுபடி செய்யச் சொல்லியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறுமாறும் கோருகின்றார்கள். இவ்வாறு சமூகநீதி பேசிய பெரியாரிஸ்டுகள் இறுதியில் வகுப்புவாதிகளோடு கைக்கோர்த்துக் கொண்டனர்.

தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து சண்டையிடுவதாகக் கூறும் தலித் அமைப்புகள் சாதியை ஒழிப்பதற்கு முறையான திட்டத்தை முன் வைக்காமல் சீர்திருத்தவாத முழக்கங்களோடு தங்களை சுருக்கிக் கொள்ளுகின்றன. அவர்களும் தலித்துககளை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகின்றனர். இதன் வழியாக, அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பிரிவினருடன் கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவும் விரும்புகின்றார்கள்.

மனுவாதி பி.ஜே.பி. மற்றும் சமூக நீதியை முன் வைக்கும் காங்கிரஸ் கட்சிகளைப் போன்று, தமக்குள் அதிகாரத்திற்காக போட்டி போடும் தலித்திய அமைப்புகளும் நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமைப்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த அணிதிரள்கின்றார்கள். அதனால், சாதியம் அகன்ற சமத்துவமான சமூகம் மற்றும் வகுப்புவாதத்தை எதிர்த்த உண்மையான மதச்சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்க ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் வீழ்த்தி மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நம் முன் உள்ள ஓரே வழியாகும். எல்லா மதத்தைச் சேர்ந்த, சாதியைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக தேசப்பற்றுள்ள சக்திகளும் பட்டாளி வர்க்க இயக்கத்தின் பின்னால் அணி திரள்வது மட்டுமே ஒரே தீர்வாகும்.

கடைசியாக ஒரு கேள்வி இந்தியப் புரட்சி வெற்றி பெறும் என்று இன்னுமும் நம்புகிறீர்களா?

(இதற்கு பதிலாக தனது உறுதியான நம்பிக்கை காட்டும் முகமாக புன்முறுவலிட்டார்.)

பேட்டி: ஏ.வி.ஆர்.வர்மா

நன்றி - நியூ சைடு (மாத இதழ்), ஏப்ரல் 1999.

தமிழாக்கம்: செவ்வாழை

- சமரன்

(நவம்பர் 2022 மாத இதழிலிருந்து)