பொதுத் துறை நிறுவனங்களை பலிகடாவாக்கும் களவாணி அரசு!

அறம் இணைய இதழ்

பொதுத் துறை நிறுவனங்களை பலிகடாவாக்கும் களவாணி அரசு!

பொதுத் துறை நிறுவனங்களை பலிகடாவாக்கும் களவாணி அரசு! 

லாபகரமான பொதுத்துறை வங்கியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்ற பாஜக அரசின் நோக்கம் தான் என்ன? அதுவும் மிகக் குறைந்த விலைக்கு நம் IDBI வங்கியை தூக்கி கொடுத்ததின் பின்னால் உள்ள சதி திட்டம் என்ன?  இதில் லாபம அடைந்தது யார்? பொதுத் துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார்களுக்கு தாரை வார்ப்பதின் பின்னணி என்ன?

ஐ டி பி ஐ என்றழைக்கப்படும் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி , 1964ல் இந்திய அரசால் நிறுவப்பட்டதாகும். தொழில் வளர்ச்சிக்கான நிதி உதவிகளை தொழில் முனைவோருக்கு வழங்கவும் வளர்ச்சி மற்றும் கட்டுமானங்குறித்த நிதி ஆதாரங்களை சேகரித்து , வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் ஐடிபிஐ முதலில் ஒரு வளர்ச்சி வங்கியாக, மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நிறுவப்பட்டது.

தொழில் துறையில் அவர்கள் பெரிய முதலாளிகளாக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் புதிய முதலாளிகளாக இருந்தாலும் சரி, தொழில் முனைவோருக்கு தேவையான மூலதனத்தை கடனாக வழங்கி தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இவ்வங்கி நிறுவப்பட்டது. மாநிலங்களில் உள்ள டான்ஸி மற்றும் சிட்கோ போன்ற அமைப்புகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் சிறுகுறு தொழில் முனைவோருக்கு மூலதனம் மற்றும் இயந்திரங்களுக்காக கடன் கொடுக்கின்ற பணம் உண்மையில் ஐடிபிஐ வங்கி வழங்கிய பணம் தான். இந்திய அரசுக்கும் , எல் ஐ சி க்கும் சொந்தமான இந்த வங்கி 2005 வாக்கில் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைப்போலவே சாதாரண வாடிக்கையாளர்களுக்கான செயல்பாடுகளையும் தன் சேவைகளாக மாற்றி கமர்சியல் வங்கியாகிவிட்டது.

இதனால் வளர்ச்சி வங்கி என்ற மறைமுக நிலையில் இருந்து தொழில்வளர்ச்சிக்கு உதவிய இவ்வங்கி , 2005 ல் தொழிற் கடன்கள் மட்டுமின்றி , சாதாரண மக்களுக்கான வர்த்தக சேவைகளிலும் இறங்கி செயல்பட்டு வருகிறது.

2019ல் இந்த வங்கியின் வாராக்கடன்களின் (NPA) விகிதம் அதிகரித்ததால் வங்கியின் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்திய அரசு எல்ஐசி நிறுவனத்தை இவ்வங்கியில் மேலும் முதலீடு செய்ய அறிவுறுத்தியது. இதன்படி 51% பங்குகளை எல்ஐசி வாங்கியது. ரிசர்வ் வங்கி ஐடிபிஐ வங்கியை “உடனடி திருத்த நடவடிக்கை என்ற தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தது. 2019 முதல் 2021 வரை அத்தகைய கண்காணிப்பில் இயங்கிய ஐடிபிஐ வங்கி 2021 , மார்ச் 10 அன்று அத்தகைய கண்காணிப்பிலிருந்து வெற்றிகரமாக வெளியேறி சுயமாக இயங்கி வருகிறது. ஆக தற்பொழுது இந்திய அரசு ஐடிபிஐ வங்கியின் 95% பங்குகளை (நேரடியாகவும், மறைமுகமாக எல்ஐசி மூலமும்) தன்வசம் வைத்துள்ளது எனலாம்.

இவ்வாறு வாராக்கடனால் சிக்கலில் இருந்த ஐடிபிஐ வங்கி எல்ஐசி யின் முதலீட்டாலும் ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் இயங்கியதாலும் சிக்கலில் இருந்து மீண்டு இயல்பாக இயங்கும் இந்த வங்கியை இப்பொழுது மத்தியிலுள்ள மோடி அரசு விற்க துணிந்துள்ளது.

விற்க வேண்டிய அவசியம் என்ன?

நட்டத்தில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை , நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த் வலியுறுத்தி வந்தார்.

இப்பொழுது ஐடிபிஐ வங்கி நட்டத்தில் இயங்கவில்லை, மாறாக,

2026 – நிதி ஆண்டில் இவ்வங்கி ஈட்டிய லாபம் – ₹9513 கோடிகளாகும்.

2026- ல் வங்கி கட்டிய வரி. ₹2413 கோடிகளாகும்!

வட்டியின் மூலம் வங்கிக்கு வரவு ₹13,512 கோடிகளாகும்!

இவ்வாறு நல்ல நிலையில் இயங்கும் வங்கியை இப்பொழுது ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் என்ற கனடா நாட்டு நிறுவனத்திற்கு “குறைந்த விலைக்கு “ விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் நிறுவனத்தில் இப்பொழுது தலைமை பொறுப்பில் உள்ளவர் அதே அமிதாப் காந்த் தான் என்பது மேலும் நமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், அன்று விற்க வேண்டும் என்ற கூறிய அமிதாப் காந்த் தற்போது கனடா நாட்டு நிறுவனத்தில் இணைந்து தான் சார்ந்துள்ள நிறுவனத்திற்கே அதை வாங்க நினைப்பதும், மோடி கும்மல் அமிதாப் காந்த் விரும்பியபடி ஐடிபிஐ வங்கியை சொற்ப விலைக்கு விற்பதும் ஒரு ஏதேச்சையான நிகழ்வா?

தில்லுமுல்லுகளுக்கு ஒரு அளவே இல்லாமல் , கேள்வி கேட்பவர் யாரும் இல்லை என்ற ம்மதையில் மோடி கும்பல், சட்டதிட்டங்கள் மற்றும் விதிகளை மாற்றிய அக்கிரமத்தை பிசினஸ் வேர்ல்டு என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக கூட்டப்பட்ட முக்கிய துறை செயலாளர்கள் கூட்டத்து நிழ்ச்சி நிரலை அம்பலப்படுத்திய பிசினஸ் வேர்ல்டு பத்திரிக்கை , விதிகள் அப்பட்டமாக வளைக்கப்பட்டு ஐடிபிஐ வங்கியின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு கனடா நாட்டு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளதை வெளிக் கொண்டு வந்துள்ளது..!

ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் முதலில் கொடுத்த ஏலமதிப்பில் ஒரு ஷேரின் விலை 75 என்று கேட்டிருந்தது, ஆனால் அரசு நிர்ணயித்த ரிசர்வ் விலையோ ஒரு பங்கிற்கு ரூ 94.42.

ஆனால், அரசின் குறைந்த பட்ச விலையை கூட எட்டாத ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி ஐடிபிஐ பங்குகளை விற்பது?

முக்கிய துறை செயலாளர்கள் அதற்கும் ஒரு நூதன வழியை கண்டுபிடித்தனர்.

முதலில் ஐடிபிஐ பங்கின் விலையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்து அதற்கு வலு சேர்க்கும் விதிகளை தேடிய அதிகாரிகளுக்கு நொடித்துபோன நிறுவனங்களை விற்பனை செய்யும் பொழுது கடைபிடிக்க வகுக்கப்பட்ட பொதுவான நிதிநிலை விதிகள் (General Financial Rules) கண்ணில் பட்டது . உடனே, அதை துணைக்கு வைத்து கொண்டு, அரசு நிர்ணயித்த பங்கின் விலையை விட ஏலதாரர் குறைந்த விலைக்கு கேட்டால் , ஏலம் விடும் அதிகாரி அதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு குறைந்த ஏலவிலையை ஏற்று கொள்ளலாம் என்ற இரயில்வே ஸ்கிராப் ஏல விதியை இங்கு பயன்படுத்தி கொண்டனர். ஆனால், இயங்கும் நிறுவனத்தின் பங்குகளை விற்கும் பொழுது இந்த விதி பொருந்தாது என்பதை பற்றியெல்லாம் அதிகாரிகள் கவலைப்படவில்லை!

அடுத்து , ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றொரு நிறுவனமும் ஏலத்தில் கலந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த நிறுவனவத்தின் பெயரைக்கூட வெளியிடாத அதிகாரிகள் அந்த நிறுவனத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக உள்துறை அமைச்சகம் அந் நிறுவனத்தை மீண்டும் ஏலத்தில் பங்குபெறுவதை தடுத்து இருக்கிறது. ஆனால் அந்த நிறுவனம் பற்றிய அடிப்படை உண்மைகளை கூட நிதி அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் வெளியிட மறுத்து வருகின்றன.

இறுதியில் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் மட்டுமே கலந்து கொண்ட ஏலத்தில் , அந்நிறுவனம் இறுதியாக கொடுத்த மதிப்பான (ஒரு பங்கின் விலை ரூ.81) என்பதை ஏற்றுக் கொண்டு ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கே ஐடிபிஐ பங்குகளை விற்றுள்ளது மோடி கும்பல்.

இந்த விற்பனையின்போது வங்கியை வாங்கிய ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் போர்டு இயக்குனராகவும், அதே வேளையில்  ஐடிபிஐ யின் பங்குகளை விற்பவர் என்ற நிலையிலுள்ள எல்ஐசி போர்டு இயக்குனராகவும் ஒரே சமயத்தில் இரு நிறுவன போர்டுகளில் இயக்குனராக ஜி. மகாலிங்கம் கலந்து  கொண்ட கண்றாவியும் நடந்துள்ளது.

இவ்வாறு வெளிப்படையாக தில்லுமுல்லுகள் செய்து ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தில் இயங்கும் ஐடிபிஐ வங்கியை விற்க வேண்டிய அவசியம் என்ன ? என்று ஐடிபிஐ ஊழியர்கள் சங்கம் கேள்வி கேட்டுள்ளது.

உண்மையில் இவ்வாறு விதிகளையும் நியாயமான நடைமுறைகளையும் காற்றில் எறிந்துவிட்டு விற்பனையை அரசு ஏன் மேற்கொள்ள மோடியை யார் நிர்ப்பந்திதனர்?

இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளதாக சில உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

அவற்றில் முதன்மையானது அரசிற்கு அந்நிய முதலீட்டு பணத்தின் தேவை மிகமிக அதிகமாக உள்ளது என்பது தான். அதைவிட உண்மையான காரணம் மேற்காசிய யுத்தத்தால் ஏற்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம், அந்நியச்செலாவணி இருப்பு குறைந்து வருதல், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருதல் ஆகியவற்றால் , அரசின் கஜானா கடுமையான நெருக்கடியில் இருப்பதாக, விவரம் அறிந்த அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னாள் நிதி அமைச்சக செயலாளர்

சுபாஷ் கர்க் இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளதாக தரவுகளுடன் கூறியதை சுட்டிகாட்டி ,பதவியில் இருக்கும், ஆனால் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் கஜானாவின் நெருக்கடி நிலை பற்றி கூறுகின்றனர்.

‘அச்சே தின் ‘ என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இறுதியில் இந்திய வளங்களை ஒருசில நிறுவனங்கள்

ஆட்டையை போட அனுமதிக்கின்ற மோடி கும்பல் கடைசியில் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம்

இறுதியாக கேட்ட 52,878 கோடி ரூபாய்களுக்கு ஐடிபிஐ வங்கியை விற்றுவிட்டது.

இதை கேள்வி கேட்ட எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்து உள்ளார். ஆனால், ஏன் லாபத்தில் இயங்கும் ஒரு வங்கியை அந்நிய தனியார் நிறுவனத்திற்கு , அதுவும் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கூறாமல் நழுவியுள்ளார். அவர் மட்டுமல்ல , ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட, அரசு அதிகாரி ஒருவர் கூட நியாயப்படுத்த முடியாத இந்த களவாணித்தனத்தை என்னவென்பது? இந்த நிலைமை நீடித்தால், இந்தியா ஒரு கிழக்கிந்திய கம்பெனி ஆளுமைக்கு பதிலாக பல கம்பெனிகளின் ஆளுமையில் கட்டுண்டு கிடக்கும்..!

ச.அருணாச்சலம்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/33263/idbi-bank-sale-by-bjp-govt/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு