ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்

இரா. முருகவேள் - Muranpaadu

ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்

தமிழ் நாட்டில் ஒரு விசித்திரமான வழக்கம் இருக்கிறது. அரசியல் நிகழ்வுகளுக்கு இங்கே கொடுக்கப்படும் விளக்கம் படுபயங்கர அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவிருக்கும். 

பீகாரில் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பிஜேபியை தோற்கடித்தால் அது ஆர் எஸ் எஸ் சதி.  எப்படியென்றால் பிராசந்த் கிஷோர் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள் கட்சியையும் சேர்த்தே தோற்கடித்து உள்ளார். பிரசாந்த் கிஷோர் ஒரு பார்ப்பனர்.  பிஜேபி மக்கள் ஆதரவை இழந்ததால் லல்லு கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதை உடைக்க இன்னொரு பார்ப்பனர் தயாரிக்கப்பட்டு பிஜேபி தோற்கடிக்கப்பட்டாலும் இன்னொரு பார்ப்பனர் மூலம் ஆட்சி நடத்த ஆர் எஸ் எஸ் செய்துள்ள சதி வெற்றி பெற்றுள்ளது. உண்மையில் வென்றது ஆர் எஸ் எஸ்தான்.

அண்ணாமலை பிஜேபியில் சேர்ந்தாலும் ஆர் எஸ் எஸ் சதி, அண்ணாமலை பிஜேபியில் இருந்து விலகி தனியாக ஒரு இயக்கம் உருவாக்கினாலும் ஆர் எஸ் எஸ் சதி.  விஜய் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கினால் ஆர் எஸ் எஸ் சதி. திமுகவை ஒழித்து தவெக எதிர் அண்ணாமலை என்று இரண்டு ஆர் எஸ் எஸ் அமைப்புகளை வைத்து தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஆர் எஸ் எஸ் சதி. அதனால் ஆர் எஸ் எஸ்ஸே பாதிக்கப்பட்டு பிஜேபி வாக்கு சதவீதம் 3-க்கும் குறைந்தாலும் வென்றது ஆர் எஸ் எஸ்தான்.  அமித்ஷாதான் தமிழக தேர்தல் முடிவுகளையே முடிவு செய்கிறார்.  

அப்படியென்றால் அமித்ஷாவின் கட்சியான பிஜேபியையே தோற்கடிக்க கரப்பான் பூச்சி கட்சியால் வாய்ப்பு அமைந்து இருக்கிறதே அதையே ஆதரிக்கலாமே என்றால் முடியாது. கரப்பான் பூச்சிக் கட்சியும்  ஆர் எஸ் எஸ் சதி. பிஜேபி பலவீனமடையும் போது, நாட்டை தன்னுடைய இன்னொரு ஆளைக்கொண்டு ஆள்வது ஆர் எஸ் எஸ் சதி. கரப்பான் பூச்சி ஆம் ஆத்மி சதி என்கிறார்களே. ஆமாத்மியே ஆர் எஸ் எஸ் சதிதான்.!

இதையெல்லாம் கேட்டால் நாளைக்கு திங்கட்கிழமை என்பது கூட ஆர் எஸ் எஸ் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விடும். திமுக,திக,கம்யுனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பல தோழர்கள், நண்பர்கள் இந்தியாவில்   யாருக்குமே சொந்த புத்தி இல்லை. சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலை என்று ஒரு விஷயமே இல்லை. எல்லாருமே ஆர் எஸ் எஸ்  கைப்பாவைகள், அனைத்தையும் நடத்துவது ஆர் எஸ் எஸ்தான்  என்று உறுதியாக நம்புகிறார்கள்.

இந்த சதிக் கோட்பாடு பற்றி விவாதிப்பதற்கு முன்பு சில உண்மைகளைப் பார்த்துவிடுவோம்.

அண்ணாமலை கோவை பி எஸ் ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்தார். பின்பு லக்னோ ஐ ஐ எம்மில் முதுகலை பிஸினெஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தார். அப்போது, அதாவது 2009இல்  விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட ர் கழகத்தில் இயங்கினார். பின்பு ஐ பி எஸ். கர்னாடகாவில் பணி.  இந்தக் காலகட்டத்தில் அதாவது 2020-இல் ரஜினிகாந்த், தான் தொடங்க இருக்கும் கட்சியில் இணைய அழைத்தார் என்றும் தான் பிஜேபியில் இணைய விருப்பம் தெரிவித்து விட்டதால் முடியதென்றும் சொல்லி விட்டதாக அண்ணாமலை கூறினார். தான் தேமுதிகவில் இருந்ததாக அவரே கூறியுள்ளார்.1

இந்தியாவில் ஐ ஏ எஸ், ஐ பிஏஸ் பணிகளில் இருப்பவர்கள் வேலையை விட்டு விலகி அரசியல் கட்சிகளில் சேர்வது வழக்கம் தான். சிவகாமி ஐ ஏ எஸ், பி எஸ் பி கட்சியில் சேர்ந்தார். பாண்டியன் என்ற அதிகாரி நவீன் பட்நாயக் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சசிகாந்த் செந்தில் இப்படி பலர்.

கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டியில் அண்ணாமலை ஒரு ஆம்பீஷியஸ் நபர் அதாவது அதீத எதிர்பார்ப்புகள் கொண்டவர், அவர் ரஜினி காந்த் கட்சி தொடங்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய போது அவரைச் சென்று சந்தித்து அந்தக் கட்சியில் இணைய முயன்றார். ஆனால் ரஜினி கட்சி தொடங்குவதைக் கைவிட்டதால் அது தோவ்வியடைந்தது. பின்பு அவரை பிஜேபி தலைவராக்கியது. இது பிஜேபி எடுத்த ஒரு பரிசோதனை முயற்சி. அவர் ஆர் எஸ் எஸ் அரசியல் கொண்டவர் அல்ல. பிஜேபிக்கு அண்ணாமலையைக் கொண்டு தொடங்கிய  பரிசோதனையைத் தொடரும் மனவலிமை இல்லை என்றார்.  

அதிமுக தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்ததால் அவர் நீக்கப்பட்டார்.  தவிர அண்ணாமலை பிஜேபி தலைவராக இருந்த போது அவரால் ஓரம் கட்டப்பட்டிருந்த நீண்டகால பிஜேபி தலைவர்கள் அவருக்கு எதிராக அணி அமைத்து இயங்கினர்.  இதுவும் அண்ணாமலை நீக்கப்பட்டதற்கு ஒரு காரணம்.    அண்ணாமலையைக் கொண்டு பிஜேபி தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தை அடைய முயன்றது. அது சாத்தியமில்லை என்ற நிலை வந்ததும் அதற்கு அண்ணாமலை தேவையில்லாமல் போய்விட்டார். இதற்கிடையில்   ஆடு வளர்ப்பதாக பசுமை விகடனில் வந்த கவர் ஸ்டோரி எல்லாம் தனிக்கதை.  

நடந்தது எல்லாமே   லாப நட்டக்கணக்குப் பார்த்த ஒரு அரசியல் நடவடிக்கை. தான் தேமுதிகவில் இருந்ததாக அவரே சொல்கிறார். அவர் ஆர் ஏஸ் எஸ் அல்லது ஏபிவிபியில் இருந்ததாக சொன்னதே இல்லை.  

இதில் ஆர் எஸ் எஸ் எங்கே வருகிறது? சதி எங்கே இருக்கிறது.

    பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டு இந்துதுவ எதிர்ப்பு அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்ற திமுகவுக்கு பணி செய்த போதும் பார்ப்பனராகத்தான் இருந்தார். அப்போது அவரது பணி ஆர் எஸ் எஸ் சதி என்று அழைக்கப்படவில்லை. 

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது ஏன் ஆர் எஸ் எஸ், தவெகவை உருவாக்கவில்லை? அப்போது உருவான தேமுதிக ஏன் பெரிய வளர்ச்சி பெறவில்லை? தமிழக முதலாளித்துவ சக்திகளுக்கு அப்போது திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் போதும். இன்னொருக் கட்சிக்கு இடமில்லை. அந்த நிலையில் எந்த ஆர்எஸ்எஸ் சதியும் மூன்றாவது சக்தியை முதலிடத்துக்கு கொண்டு வந்து விட முடியாது.

எம் ஜி ஆர் காலமான பின்பு அதிமுக தலைமையைக் கைப்பற்ற பல்வேறு லாபிகள் முயன்றன. அதில் இந்துத்துவ ஆதரவாளரான ’சோ ராமசாமி’ தலைமையிலான பார்ப்பன லாபியும் உண்டு. ஜெயலலிதா பிறப்பால் பார்ப்பனர் என்பதால் சில இந்துத்துவ பார்ப்பனர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் வழங்கினார். ஜெயேந்திர சரஸ்வதியுடன் நெருக்கம் காட்டினார்.

ஆனால் சங்கராச்சாரியார், அதிமுகவின் முதுகெலும்பாக இருந்த தேவர் லாபியுடன் அதாவது சசிகலா ஆதரவு குழுவுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபட்ட போது கொடுமையாகத் தண்டிக்கப்பட்டார். இந்தியாவில் நினைத்தே பார்க்கதது நடந்தது. ஒரு சங்கராச்சாரியார் கொலை வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அதிமுகவின் செல்வாக்கு மண்டலம் ஜெயலலிதாவின் சாதியை விட முக்கியமானது. அதிமுக ஒரு முதலாளித்துவ கட்சி. அது நீடிக்க வேண்டுமானால் தென்மாவட்டங்களில் செல்வாக்கு வாய்ந்த சசிகலா சாதி அதற்குத் தேவை. சங்கராச்சாரியார் அதிமுக தலைமைக்கோ, அதன் ஆதரவு முதலாளிகளுக்கோ தேவையில்லை. எனவே சங்கராச்சாரியார் வெற்றி பெறவில்லை. விஜய்காந்த்தும்  வெற்றி பெறவில்லை.

இப்போது அதிமுக கவர்ச்சிகரமான வலிமையான தலைமையை இழந்து உள்ளது. புதிதாக வளர்ச்சி பெற்ற கவுண்டர் சாதி அதன் தலைமையைக் கைப்பற்றியதால் மற்ற சாதிகளிடமிருந்து அன்னியப்பட்டுள்ளது. பிஜேபியுடன் மிகவும் நெருங்கியதால் மாநில முதலாளித்துவ சக்திகளின் ஆதரவையும் இழந்துள்ளது. எனவே இப்போது தமிழ் நாட்டுக்கு இன்னொரு மாநிலக் கட்சி அவசியத் தேவையாகவுள்ளது.

இதன் காரணமாகவே பலநூறு கோடி செலவு செய்து விஜயால் மாபெரும் மாநாடுகள் நடத்த முடிந்தது. மிகவும் பெரிய வசதியான அலுவலகங்களை தமிழ்நாடு முழுவதும் திறக்க முடிந்தது. தொழில்ரீதியலான தேர்தல் உத்தி வகுக்கும் அமைப்புகளை பெரும் செலவில் பயன்படுத்த முடிந்தது. இந்தத் தேர்தலில் மிகவும் பாதிக்கப்பட்ட பிஜேபிதான்.  அதன் வாக்கு சதவீதம் 3 ஆகக் குறைந்து விட்டது. அதன் பலவீனம் காரணமாக அண்ணாமலை உடைத்ததில் மேலும் ஒரு சதவீதத்தை இழக்க வாய்ப்பு உள்ளது. அதன் இருபதாண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீரானது. இத்தனையும் ஆர் எஸ் எஸ் சதி என்று சொல்ல முடியுமா என்ன? அதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவைப்படும். அது நமது தோழர்களிடம் இருக்கிறது என்பதுதான் சிக்கலே.

பிஜேபி கட்சியானது  அண்ணாமலை போல ஆர் எஸ் எஸ்  அமைப்பில் இல்லாத, அதில் பயிற்சி பெறாத பலரை இணைத்துக் கொள்வது வழக்கம் தான். அதன் முந்தைய அவதாரமான  ஜன சங்கத்தின் முதல் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியே ஆர் எஸ் எஸ்காரர் அல்ல. அவர் முதலில் காங்கிரசிலும் பின்பு சாவர்க்காரின் இந்து மகா சபையிலும் இருந்தார்.  இந்து மகாசபை தலைவரானர். காந்தி படுகொலைக்கு பிறகு இந்து மகாசபையுடன் கருத்து வேறுபடு கொண்டு விலகினார்.

காந்தி கொலைக்கு பிறகு ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டது.   இந்து மகா சபை தடை செய்யப்படவில்லை.  ஆனால் இந்து மகாசபையின் தலைவர் சாவர்க்கார் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாவே சேர்க்கப் பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.  இந்து மகாசபை தேர்தல்களில் நின்று பல உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுதான் அது தடை செய்யப்படாததற்குக் காரணம் என்ற முடிவுக்கு ஆர் எஸ் எஸ் வந்தது.

எனவே ஆர் எஸ் எஸ் தானும் ஒரு தேர்தல் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்தது. அந்த நேரத்தில் ஷியாமா பிரசாத் முகர்ஜி தனிக்கட்சி தொடங்க ஆர் எஸ் எஸ் ஆதரவைக் கோரினார்.  முகர்ஜி தீவிரமான முஸ்லீம் வெறுப்பாளராகவும் புத்தமதத்தில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ஆர் எஸ் எஸ், தீந்தயாள் உபாத்யாயா,  பால்ராஜ் மதூக், நானாஜி தேஷ்முக்  உள்ளிட்ட ஐந்து தலைவர்களை முகர்ஜிக்கு உதவ அனுப்பியது. இந்தத் தலைவர்கள் ஷியமா பிரசாத் முகர்ஜி மரணமடைந்ததும் ஜன் சங்கத்தைக் கைப்பற்றினர். காரணம் ஜன் சங்க் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அடித்தளத்திலேயே கட்டப்பட்டிருந்தது.

ஆர் எஸ் எஸ், பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு பொருளாதார் கொள்கை வகுத்தவர், அதை சுதந்திர சந்தை, தடையற்ற முதலாளித்துவம் என்ற வழியில் நடத்தியவர் சுப்பிரமணியன் சுவாமிதான். இவர் சர்வோதய சங்கத்தில் இருந்தார். ராக்பெல்லர் ஸ்காலர்ஷிப்பில் ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். சுவாமி அமாத்யசென்னால் டெல்லி பல்கலைக் கழகத்தில் சீன கல்வியல் துறையில் பேராசிரியாராகப் பணிபுரிய அழைக்கப்பட்டார்.  ஆனால் அவரது சந்தைப் பொருளாதாரம் பற்றிய கருத்துக்களால் அவரது பணி தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்பு சுவாமி ஐ ஐ டி டெல்லியில் பேராசிரியரானர். அங்கும் இந்திரா காந்தியால் அவரது பொருளாதார கொள்கைகளுக்காக நீக்கப்பட்டார். பின்பு அவரை பாரதிய ஜனசங்கம் ராஜ்ய சபைக்கு அனுப்பியது. அவர் இந்திரா கந்தியை கடுமையாக எதிர்த்தார் என்பதுதான் காரணம். 

சுப்பிரமணியன் சுவாமி விரையில் ஆர் எஸ் எஸ்சுக்கு நெருக்கமாகிவிட்டார். அவரை ஜனசங்குக்கு பொருளாதார திட்டம் அல்லது கொள்கை வகுத்துத் தரும்படி கேட்டுக்கொண்டனர். சுவாமி முதலாளித்துவத்தின் மீதான அரசு கட்டுப்பாட்டை நீக்குவது, தடையற்ற வணிகம் ஆகியவற்றை முன்வைத்தார். அது வேடிக்கையாக சுதேசி திட்டம் எனப்பட்டது என்கிறது ஜுகல்பந்தி நூல்.

1960கள் வரை கடைக்காரர்கள், சிறுவணிகர்கள் மட்டுமே ஆர் எஸ் எஸ் க்கும் ஜன் சங்குக்கும் நிதியளித்து வந்தனர். ஜன சங்க் ஒரு பார்ப்பன பனியா கட்சியாகவே இருந்து வந்தது. ராஜ்மாதா விஜயராஜே சிந்தியா ஒரு விதிவிலக்கு.

சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்பே இந்த சுதந்திர முதலாளித்துவம், தடையற்ற வணிகம் ஆகியவற்றையெல்லாம் பற்றிப் பேசியவர் ஜன சங்க தலைவரும் ஆர் எஸ் எஸ் பிரசாரக்குமான பால்ராஜ் மதூக். இவர் ஜன சங்க் கட்சியை இதே போன்ற கொள்கைகள் கொண்ட சுதந்திரா கட்சியுடன் இணைத்து விட வேண்டும் என்ற போது ஜன சங்கிலும், ஆர் எஸ் எஸ்ஸிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்குக் காரணம் ஆர் எஸ் எஸ் காரர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த பழமைவாத பிராமணர்கள்.நவீன கல்வி இல்லாதவர்கள். இவர்களால் மாசானி போன்ற வெளிநாட்டு கல்வி கற்றவர்கள், ராஜாஜி போன்ற முன்னாள் கவர்னர் ஜெனரல்கள் இருந்த சுதந்திரா கட்சியுடன் வர்க்க ரீதியில் ஒத்துப் போக முடியவில்லை என்கிறார் ”ஜுகல் பந்தி – மோடிக்கு முந்தைய பிஜேபி” என்ற பிஜேபி பற்றிய வரலாற்று நூலை எழுதிய வினய் சீதாபதி. இந்தச் சித்திரம் சகலத்தையும் சதி செய்து தீர்மானிக்கும் ஆர் எஸ் எஸ் என்ற கருத்துடன் ஒத்துப் போவதில்லை. 

1967 பாராளுமன்ற தேர்தலில் ஜன் சங்க் 35 இடங்களில் வென்றது. 9.31 சதவீத வாக்குகள் பெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது. சுதந்திரா கட்சி  44 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் சுதந்திரா கட்சி திமுக உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. பல முன்னாள் சுதேசி மன்னர்களும், ஜமீந்தார்களும் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர்.  இருந்தும் அதன் வாக்கு சதவீதம் 8.67 மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் ராஜாஜி எண்பது வயதுக்கு மேலாகி தளர்ந்து வந்தார். மேலும் சொல்லிக் கொள்ளும்படி தலைமை அந்தக் கட்சியில் இல்லை. நிலப்பிரபுத்துவ சக்திகளையும், உயர்சாதி நடுத்தர வர்க்கத்தையும் நம்பியிருந்ததால் கட்சி அமைப்பும் வலிமை வாய்ந்ததாக இல்லை. ஜி டி பிர்லா ”சுந்திரா கட்சியின் அரசியல் நல்ல பிஸினெஸ்மேனுக்கான அரசியலல்ல’ என்றார். ஸ்டான்லி கொசானெக் என்ற ஆய்வாளர் சுதந்திரா கட்சிக்கு பெரிய முதலாளித்துவ அமைப்புகள் நிதியுதவி செய்யவில்லை என்கிறார். காரணம் நேருவிய காங்கிரஸ் அரசானது பெருமுதலாளித்துவ அமைப்புகளின் நலனை தீவிரமாகப் பாதுகாத்து வந்தது. 

ஜன சங்க் கட்சிக்கு நல்ல அமைப்பு வடிவம் இருந்தது. ஆர் எஸ் எஸ் காரணமாக உள்ளூர் மட்டத்தில் தொண்டர் பலமும் இருந்தது.  இந்தக் காலகட்டத்தில் இந்திரா காந்தியை விரும்பாத, அவரது பொருளாதார கொள்கைகளை விரும்பாத பாம்பாய் தொழிலதிபர்கள் ஜனசங்க் ஒரு நல்ல மாற்றுக் கட்சியாக இருக்கும் என்று 1967 தேர்தலில்   இருந்து புரிந்து கொண்டனர். இந்த தொழிலதிபர்கள் இந்துதுவத்தின் மேல் சிறுதளவு ஆர்வமும் இல்லாதவர்கள். பலர் இந்துக்களே அல்ல. பார்சி மதத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களும் நாட்டில் முதலாளித்துவத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டுமென்றனர். அதாவது ஏற்கெனவே இருந்த வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நிறுவனங்கள் மீதான அரசு கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றனர். புதிய முதலாளிகள் தோன்றுவதையும், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதையும் இவர்கள் தடுக்கவே விரும்பினர்.   

இவர்களில் மிகவும் முக்கியமானவர் ஒருவர். நுஸ்லி வாடியா. பாம்பே டையிங் நிறுவனத்தின் அதிபர். பார்சி மதத்தைச் சேர்ந்தவர். ஜின்னவின் மகள் வழிப் பேரன்.  நுஸ்லி வாடியா ஜன் சங்கின் பொருளாளர் நானாஜி தேஷ்முக் உடன் 1960 களில் அறிமுகமானார். அவர்தான் டாடாவை நானாஜிக்கு அறிமுகப்படுத்தினார். துணிச்சல் மிக்கவரும், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப் பெயர் பெற்றவருமான நுஸ்லி வாடியா, 1970களில் சர்வ வல்லமை வாய்ந்தவராக இருந்த இந்திரா காந்திக்கு அஞ்சாமல் ஜன் சங்குக்கு பெரும் தொகைகளை நன்கொடையாகக் கொடுக்கத் தொடங்கினார். இவரைப் பின்பற்றி டாட்டாக்களும் மபஃபத்லால்களும் ஜனசங்கிற்கு நன்கொடை அளிக்கத் தொடங்கினர். இந்த முதலாளிகள் ஜன சங்கை ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டுமென்ரு முனைந்து நிற்கவில்லை.  அவர்களுக்கு காங்கிரஸ் அரசில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.  ஆனால் இந்திரா காந்தியின் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக இன்னொரு சக்தி இருந்தால் நல்லது என்ற கருத்திலேயே நன்கொடை அளித்தனர்.

எனவே  ஜன சங்க்கை தடையற்ற முதலாளித்துவ கொள்கையை நோக்கி  பால்ராஜ் மதூக் என்ற முக்கியமான தலைவர், சுப்பிரமணியன் சாமி, நுஸ்லி வாடியா போன்றோர் உந்தித் தள்ளினர். அந்த நேரத்தில் வாஜ்பாய் நேருவியத்தை ஆதரித்து வந்தார். ஜன சங்க் கட்சிக்குள் கடும் கொள்கைப் போராட்டம் நடந்தது.  இந்திரா காந்தி வங்கிகளை தேசிய உடமையாக்கிய போது வாஜ்பாய் ஆதரித்தார். அதே பாராளுமன்றத்தில் அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு தலைவரான  மதூக் எதிர்த்தார். நாட்டின் பணம் அதிகாரிகளின் கையில் போய்விடும். மக்கள் அவர்களிடம் சிக்கிக் கொள்வார்கள் என்றார் மதூக்.  இந்த மதூக் தான் ஜன் சங்க தலைவர் தீன்தயாள் உபாத்யாயா ஒரு ரயிலில் இருந்து வெளியே வீசிக் கொல்லப்பட்ட போது, அதற்கு வாஜ்பாயும், அத்வானியும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

பின்பு வாஜ்பாய் தந்திரமாகச் செயல்பட்டு நானாஜி தேஷ்முக்கையும், பால்ராஜ் மதுக்கையும், சுப்பிரமணியம் சுவாமியையும் ஜன் சங்கத்தை விட்டு விலகச் செய்தார். இதெல்லாம் ஜன் சங்க் எல்லாக் கட்சிகளையும் போன்றதுதான், எல்லாக் கட்சிகளிலும் இருக்கும் குழப்பங்களும், கோஷ்டி மோதல்களும் இந்தக் கட்சியிலும் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இத்தனையையும் ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு நடத்த முடியுமா என்ன? இந்த நடவடிக்கைகளில் ஆர் எஸ் எஸ் வாஜ்பாயை ஆதரித்தது. அதற்கு ஒரே காரணம் தான். டெல்லி ஆளும் வர்க்க வட்டங்களில் வாஜ்பாய்க்கு செல்வாக்கு இருந்தது. அத்வானி போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் உறுதியாக வாஜ்பாயை ஆதரித்தனர். வேறு வழி இல்லை. மேற்குறிப்பிட்ட எதையுமே ஆர் எஸ் எஸ் சதி என்று சொல்லவே முடியாது. இந்த நடவடிக்கைகளில் பல்வேறு அரசியல் சக்திகளின் நலன்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

1934 இல் காங்கிரஸ் தனது உறுப்பினர்கள் இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகளில் இணைவதை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. கோல்வால்கர் மத்தையும், பண்பாட்டையும் காப்பதன் மூலமே விடுதலையை அடைய முடியும், பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதன் மூலம் அல்ல என்றார். இரண்டாம் உலக போரின் போது ஆர் எஸ் எஸ் அமைப்பின் ராணுவப் பிரிவையும் பிரிட்டிஷ் அரசின் உத்தரவின் பேரில் கலைத்தார்.  இந்தக் கால கட்டத்தில் சாவர்க்காரின் இந்துமகாசபை ஹிந்து மிலிடரைசெஷன் போர்டுகள் என்ற அமைப்பை உருவாக்கி இந்தியர்கள் ப்ரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவித்தது. இந்த இரண்டு அமைப்புகளும் கடற்படை எழுச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

ஆர் எஸ் எஸ் தேசிய கொடியை எதிர்த்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்தது. மனுதர்மத்தின் அடிப்படையிலேயே சட்டம் இருக்க வேண்டும் என்றது. நமது அரசியல் சட்ட நிபுணர்களுக்கு மனுஸ்மிரிதி ஒன்றுமேயில்லை. ஆனால் உலகம் அதைக் கொண்டாடுகிறது என்று ஆர்கனைசர் 30.11. 1949 இல் எழுதியது. மனு எங்கள் இதயங்களை ஆள்கிறார். மனு ரூல்ஸ் அவர் ஹார்ட்ஸ் என்ற கட்டுரையை சங்கர் சுப்பா அய்யர் என்பவர் எழுதினார். டாக்டர் அம்பேத்கார் மனுவின் காலம் முடிந்து விட்டது என்று எழுதினாலும் இன்றுவரை இந்துக்களின் தினசரி வாழ்க்கை மனுஸ்மிரிதி மற்றும் ஏனைய ஸ்மிரிதிகளின் விதிகளின் படியே நடக்கிறது என்றார் அய்யர்.  கோல்வால்கர் நமது அரசியல் சட்டம் பலவேறு மேற்கத்திய நாடுகளின் சட்டப் பிரிவுகளை இணைத்து எழுதப்பட்டது. அதில் நம்முடையது  ஒன்றுமேயில்லை என்றார்.  ஆனால் இந்த எதிர்ப்பைக் கொண்டு ஆர் எஸ் எஸ்ஸால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியவில்லை. இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆர் எஸ் எஸ்ஸை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

காந்தி கொலைக்குப் பிறகு பல ஆர் எஸ் எஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  விடுவிக்கப்பட்ட பிறகு கோல்வால்கர் தங்கள் மீதான தடையை நீக்கும் படி நேருவிடம் கோரினார். நேரு அது உள்துறை அமைச்சகத்தின் வேலை என்றார். உள்துறை அமைச்சரான பட்டேல் தடையை நீக்க கோல்வால்கரிடம் பல நிபந்தனைகள் விதித்தார்.

    ஆர் எஸ் எஸ் எழுத்து பூர்வமான கட்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    அதை வெளிப்படையாக வைக்க வேண்டும்.

    அரசியல் சட்டத்தை ஏற்று நடக்க வேண்டும்

    தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ள வேண்டும்

    உட்கட்சி தேர்தல்கள் நடத்த வேண்டும்

    தலைவரின் அதிகாரத்தை வரையறுக்க வேண்டும்

    சிறுவர்களை சேர்க்கும் போது பெற்றோர் ஒப்புதல் வேண்டும்

    வன்முறையை கைவிட வேண்டும்

கோல்வால்கர் இதை ஏற்றுக் கொள்ள மறுத்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்தினார். பின்பு ஆர் எஸ் எஸ் தனக்கு ஒரு கொள்கைத் திட்டத்தை வரையறுத்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. முதலில் பட்டேலுக்கு ஆர் எஸ் எஸ் மீது மென் போக்கு இருந்தது. காந்திகொலை அதை மாற்றி விட்டது. 

சாவர்க்கார் ஆர் எஸ் எஸ்ஸை இந்து மகாசபையுடன் இணைக்க விரும்பினார். ஆனால் ஆர் எஸ் எஸ் மறுத்து விட்டது. இந்துமகாசபை ஆர் எஸ் எஸ்ஸை தனது இளைஞர் அமைப்பாக மாற்ற முயல்வதை ஹெட்கேவாரும், கோல்வால்கரும் தொடர்ந்து தடுத்து வந்தனர்.  கடுப்பான சாவர்க்கார்

    ஒருவன் பிறந்தான், ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தான். ஒன்றுமே செய்யாமல் இறந்து விட்டான்   என்றார்.

காந்தி கொலைக்குப் பின்பு இந்து மகாசபை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்தது. அறுபதுகளில் ஏறக்குறைய செயலிழந்து விட்டது. ராஜாஜியின் மரணத்துக்குப் பிறகு சுதந்திரா கட்சி செயலிழந்தது.   அப்போதும் கூட மகாத்மா காந்தி கொலையின் காரணமாக மக்கள் ஜன சங்க் கட்சியை ஏற்றுக் கொள்ளவேயில்லை. “இது எனக்குப் புரிந்ததும் காந்தியவாதியான ஜெயபிரகாஷ் நாரயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோருடன் நெருங்க முயன்றேன். இந்த இருவரும் எங்களை ஒப்புக் கொண்ட பின்பே மக்களும் எங்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்” என்கிறார் நானாஜி தேஷ்முக் என்ற முன்னாள் ஜனசங்க தலைவர்.2

இந்து மகாசபை, சுதந்திரா கட்சி ஆகியவை இல்லாமல் போனது ஜன சங்கை இந்தியாவின் ஒரே வலதுசாரி, இந்துத்துவ கட்சியாக முன்னிறுத்தியது.    எழுபதுகளின் நடுப்பகுதி வரை ஆர் எஸ் எஸ் ஒரு சதியும் செய்யவில்லை. செய்தாலும் வெற்றி பெறவில்லை.  20000 ஆர் எஸ் எஸ் காரர்கள் காந்தி கொலைக்கு பின்பு கைது செய்யப்பட்டனர். 75 வரை அவர்கள் வாக்கு 9 சதவீதம்தான். பசு பாதுகாப்பு இயக்கம் நடத்திய பிறகும் இதுதான் நிலை. அப்போதும் இதே நாக்பூர் பிராமணர்கள் தான் ஆர் எஸ் எஸை நடத்தி வந்தனர்.  இந்தியாவின் அதிகார அமைப்பு பிராமணர்களின் கையில் தான்  இருந்தது.  எனவே சதி என்பது அபத்தமானது. அரசியல் சூழல் உருவாக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல். அதற்கான சூழல் பின்பே பிஜேபி, ஆர் எஸ் எஸுக்கு வந்தது.

காங்கிரஸ் எண்பதுகளில் பல கலகங்களை சந்தித்தது. தேசிய இனப் போராட்டங்கள், நக்சல்பாரி, விவசாயிகள் எழுச்சிகள் என. அப்போது ராஜீவ் காந்தி இந்து மத உணர்ச்சி  இந்தியாவை ஒன்றாக வைக்க உதவும் என்ற நிலை எடுத்து  தூர்தர்ஷனில் ராமாயணம் தொடர் நாடகத்தை ஒளிபரப்பினார். அயோத்யா மசூதியை இந்து வழிபாட்டுக்கு திறந்து விட்டார். எனவே காங்கிரஸ் தொடங்கி வைத்துதான் இந்துத்துவா பெரிய சக்தியாக வளர்ந்தது. அதற்கு முன் இந்திய மொழிகளில் பல ராமாயண படங்கள் வந்திருந்த போதும் வீட்டுக்கே வந்த இந்த டெலிவிஷன் ராமாயணம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அது ஒளிபரப்பப் படும் போது தெருக்கள் வெறிச்சோடிப் போயின. ரயில்களை ராமாயணம் முடியும் வரை நிறுத்தி வைக்கும் மாறு பயணிகள் கலவரம் செய்தனர். 

1984 இல் பிஜேபி இரண்டே இரண்டு பாராளுமன்ற இடங்கள் மட்டுமே வென்றிருந்தது.  அப்போதுதான் மற்ற அரசியல் வாதிகளை நம்ப முடியாது. இந்து வாக்கு வாங்கி உருவாக வேண்டும் டியோரஸ் சொன்னார். அதிலிருந்து தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இயக்கம் தீவிரமடைந்தது. ராம் ஷீலா பூஜைகள் நடத்தி பிஜேபி ராமர் கோவில் கட்டும் இயக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டது.

ஆர் எஸ் எஸ் பல துணை அமைப்புகளை உருவாக்குகிறது. அன்னா அசாரே, தவிர ஐ ஐ டி போன்ற நிறுவங்களில் ஊடுருவுகிறது என்பது எல்லாம் தான் ஆர் எஸ் எஸ் சதிக்கு ஆதாரமாகக் கூறப்படுகின்றன. இதெல்லாம் முன்பு காங்கிரசுக்கு  ஆதிக்க சாதியினர் செய்ததுதான். பின்பு இவர்கள் பிஜேபிக்கு மாறினர். இவர்கள் மனதில் இந்தியா தங்களுடையது, இதைக் கட்டிக் காப்பது தங்கள் கடமை என்ற எண்ணம் இருக்கிறது. மற்றவர்கள் இதை உடைக்க சிதைக்க முயல்கின்றனர் என்று நினைக்கிறார்கள்.  இதன் காரணமாகவே காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு தடையற்ற முதலாளித்துவம், இந்து ஆதிக்க சாதி ஆதிக்கம் ஆகிய கொள்கைகளைக் கொண்டிருந்த பிஜெபியை ஆதரிக்கின்றனர்.

இப்போதும் கூட பிஜேபி இந்துத்துவ அரசு தனியார் மயம், உலக மயம், பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவறைக் கைவிட்டால் கார்ப்பரேட் உலகால் கைவிடப்படும். அப்போது நாக்பூர் சதியால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. கார்ப்பரேட் சக்திகள் நாட்டின் முக்கால் வாசி செய்தி சேனல்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, கற்பனையே செய்ய முடியாத மாபெரும் தொகைகளை பிஜேபிக்கு நன்கொடையாகக் கொடுக்கின்றன. மாநிலக் கட்சிகளை இந்த கார்ப்பரேட் அமைப்புகள் மிரட்டி பிஜெபி ஆதரவு நிலைக்குத் தள்ளூகின்றன.

உதாரணமாக திமுக அரசு கோவை குடிநீர் விநியோகத்தைக் கையில் வைத்திருக்கும்  பிரஞ்சு நிறுவனமான சூயஸுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூயஸ் நிறுவனம் பிஜேபி அரசின் பொருளாதார கொள்கைகளின் காரணமாகவே இங்கே வந்துள்ளது. எனவே சூயஸுக்கு பிஜேபியும், பிஜேபிக்கு சூயசும் ஆதரவாக உள்ளன. திமுக இதில் ஒன்றுமே செய்ய இயலாது. பண்பாட்டு தளத்தில் இந்துத்துவாவை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும் பொருளாதார தளத்தில் பிஜேபியை கொள்கையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இதில் நாக்பூர் பார்ப்பனர்கள் என்ன சதி செய்து , அனைத்தையும் தீர்மானித்து ?

பெரும்பாலான வட இந்திய கட்சிகளுக்கு தென்னிய கட்சிகள் குறிப்பாக நமது திமுக, அதிமுக போல கட்டமைப்பு கிடையாது.  ராகுல்காந்தி தேர்தல் மோசடிகளை அம்பலப் படுத்தினார் அல்லவா? அதில் ’0’ என்ற வீட்டு எண் கொண்ட வாக்காளர்கள், ஒரே வீட்டில் முப்பது நாற்பது வாக்களர்கள், ஒரே வாக்காளருக்கு பலவேறு தொகுதிகளில் வாக்கு என்று பல சித்து வேலைகள் இருந்தன. தமிழ்நாட்டில் எல்லா வார்டுகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் இருக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் கட்சிகள்   இந்தப் பட்டியலை வைத்து வாக்காளர்களைச் சந்திப்பார்கள், பூத் ஸ்லிப் கொடுப்பார்கள். இங்கே 0 என்ற முகவரியிட்ட வீடுகள், வாக்காளர்கள் எல்லாம் சாத்தியமேயில்லை. மிகச் சிறிய முறைகேடுகள் கூட எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். அதையும் மீறி வெளியாட்கள் வாக்களிக்க வந்தால் பூத்களில் குவிந்திருக்கும் கட்சிக் காரர்கள், ஏஜெண்டுகள் கண்டுபிடித்து விடுவார்கள். இந்த பூத் ஏஜெண்ட்ட்டுகளே இல்லாத காரணத்தால்தான் வட இந்திய கட்சிகளை பிஜேபி ஏமாற்ற முடிந்தது.

இதில் வேடிக்கை என்னவெனில் பிஜேபியும் பெரும்பாலும் அப்படித்தான். அதற்கும் மிக உறுதியான ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர் படை இல்லை. இதன் காரணமாகவே பிஜேபி ஆர் எஸ் எஸை நம்பி இருக்கிறது.இருந்த போதிலும் கடந்த பத்து ஆண்டு ஆட்சியின் காரணமாக பிஜேபி தனித்த அரசியல் கட்சியாக வளர்ந்து விட்டது. மெல்ல மெல்ல பிஜேபி தான் தனியான கட்சி, சுதந்திரமான கட்சி, ஆர் எஸ் எஸ்ஸின் முன்னணி அமைப்பு அல்ல என்று நிலை நாட்ட விரும்புகிறாது. பி ஜே பி தலைவர் ஜே பி நட்டா 2024 இல் கொடுத்த ஒரு பேட்டியில் நாங்கள் எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம். அவர்கள் அதாவது ஆர் எஸ் எஸ் அவர்கள் பணியைச் செய்கிறார்கள் என்றார்.

இன்று பிஜேபி கட்சியில்   பல நீண்டகால ஆர் எஸ் எஸ் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு மற்ற கட்சிகளிலிருந்து வந்த தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே பாருங்களேன்.  அண்ணாமலை ஆர் எஸ் எஸ் காரர் அல்ல. இப்போது தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து வந்தவர். மேற்கு வங்காளத்தில் உள்ள பெரும்பாலான பிஜேபி தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி, திருணமூல் கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளிலிருந்து வந்தவர்கள்.

தவிர பிஜேபி ஆர் எஸ் எஸ்ஸில் எப்போதும் ஒரு துறையில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு பஞ்சம் இருக்கும். அத்தகைய நிபுணர்களை அவர்கள் வெளியில் இருந்தே அழைத்துக் கொள்வார்கள். இப்போதும் மத்திய அமைச்சரவையில் உள்ள ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள் அல்ல. இது ஆர் எஸ் எஸ் –பிஜேபி உறவில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

கொஞ்சகாலமாகவே பிஜேபி அரசும் மோடியும், அமித் ஷாவும் இந்து மகாசபையைச் சேர்ந்த சாவர்க்காரை முன்னிலைப் படுத்தி வருகின்றனர். தங்கள் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வல்கரை அவ்வாறு புகழ்வதில்லை. வேடிக்கை என்னவெனில் சாவர்க்காருக்கு ஆர் எஸ் எஸ் மீது அவ்வளவு நல்ல எண்ணம் இல்லை.  திட்ட வேறு செய்திருக்கிறார். “அவன் கல்லறையில் எழுதுங்கள். பிறந்தான், ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தான். இறந்து விட்டான்.” அதாவது ஒன்றுமே செய்யாமல் இறந்து விட்டான் என்று சொல்லியிருக்கிறார்.

ஆர் எஸ் எஸ்ஸும் இந்துமகாசபையை ஒரு போதும் தேர்தலில் ஆதரித்ததில்லை. ஆனால் இன்றையை பிஜேபி, ஆர் எஸ் எஸ் தலைவர்களான ஹெட்கேவார், கோல்வால்கருக்கு பதில் சாவர்க்காரை தங்கள் தலைவராக முன்வைக்கிறது. சாவர்க்கார் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார், அந்தமான சிறையில் பலகாலம் அடைக்கப்பட்டிருந்தார் என்பது ஆர் எஸ் எஸ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என்ற குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் தந்திரம் மட்டுமல்ல. தாங்கள் தனித்துவமானவர்கள், ஆர் எஸ் எஸ்ஸை நம்பி இல்லை என்பதை நிலை நாட்டவும் சாவர்க்கார் பயன்படுத்தப்படுகிறார். அமித் ஷாவின் வரவேற்பறையில் சாவர்க்கார் படம் தான் இருக்கிறது.  கோல்வால்கர், ஹெகேவார் படங்கள் இல்லை.

சொல்ல வருவது என்னவெனில் அவர்களுக்குள்ளேயே பல தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் எங்கே நாடு முழுவதையும் சதி செய்து கட்டுப்படுத்துவது.

இந்த சதிக் கோட்பாடு எங்கிருந்து வந்தது, எப்படி இதைப் பல தோழர்கள் நம்புகிறார்கள் என்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

    இந்தியாவில் நடக்கும் அனைத்துக்கும் பின்னால் பார்ப்பனர்களின் நலன் இருக்கிறது. அவர்கள் சாதியை உருவாகினர், பெண்ணடிமைத் தனத்தை உருவாக்கினர், மூட நம்பிக்கைகளை உருவாக்கினர். இப்போதும் சமூகம் முன்னால் நகர விடாமல் தடுத்து வருகின்றனர் என்ற திராவிடர் கழகக் கொள்கை. 

    மகாத்மா காந்தி கொலை, மற்றும் இந்திரா காந்தி பரப்பிய வலதுசாரி சி ஐ ஏ தொடர்பு, சதி வலைகள் போன்ற கருத்துக்கள்.

    அன்னா ஹஸாரேவை ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது, ரஜினிகாந்த் போன்றவர்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயன்றது. அதிமுக, பாமகவுக்குள் ஊடுருவியது.

இதில் மூன்றாவது காரணம் பிஜேபி கார்ப்பரேட் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க முயன்ற போது நடந்தது. அதிமுக, பாமக விஷயம் எல்லாம் பிஜேபி ஆட்சியில் நிலைத்து நின்ற பிறகு பதவி பலத்தைப் பயன்படுத்திச் செய்தது. அதில் அதிமுக பலவீனமும் இருக்கிறது.  மற்ற இரண்டு காரணங்களுக்கும் இக்கட்டுரையில் முற்பகுதியில் போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.

இந்த சதிக் கோட்பாடு நமக்கு அறிவுத் துறையில் மாபெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஜவஹர் நகர் புனரமைப்புத் திட்டம், ஸ்மார்ட் சிடி திட்டம், குடிநீர் தனியார்மயம், புலிகள் காப்பகங்கள் போன்ற மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் சதி வேலைகளில் ஈடுபடும். அது போல ஆர் எஸ் எஸ் – பிஜெபியும் அத்தகைய வேலைகளில் ஈடுபடத்தான் செய்யும். ஆனால் சதிகள் மட்டுமே எதையும் தீர்மானிப்பதில்லை.  வலிமை வாய்ந்த அரசியல் பொருளாதார சக்திகளின் நடவடிக்கையே நாட்டின் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது. அதைப் புரிந்து கொள்ளத் தவறினால்  நாம் யாரை எதற்கு எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே குழம்பிப்  போய் திக்குத் தெரியாத காட்டில் தவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

இரா. முருகவேள்

https://muranpaadu.com/rss-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு