தேவை வர்க்கப் பார்வை!
துரை. சண்முகம்

தேவை வர்க்கப் பார்வை!
காந்தியைப் பற்றி
பகத்சிங் விமர்சித்தபோது ,
" பொது எதிரி பிரிட்டிஷ்காரனுக்கு
இது வாய்ப்ளித்து விடும்!"
என்றா பேசினார்கள்.
காந்தியைப் பற்றி
அம்பேத்கர் விமர்சித்த போதும்
பெரியார் விமர்சித்த போதும்
ஜனசங்கத்து காரனுக்கு வாய்ப்பு அளித்து விடும்!
என்றார் நினைத்தார்கள்,
ரசித்தார்கள்!
அம்பேத்கர் பெரியாரைப் பற்றி விமர்சித்தால் மட்டும்
அது
எதிரிக்கு வாய்ப்பாகிவிடும்!
ஆகவே
அமைதி காப்பது
நல்லது என்கிறார்கள்.
பேசுவதால் பிளவுபடுவோம் என்பது
மூடி மறைக்கப்படும்
அரசியல் சந்தர்ப்பவாதம்.
அரசியல் முரண்பாடுகளை
விவாதிப்பதன் மூலம்தான் அரசியலுக்கான ஐக்கியமே ஈட்டப்படும்.
இதில்
கொளத்தூர் மணி அவர்கள் போல
"ஜீவா பிள்ளைகளுக்கு
கல்யாணம் பண்ணி வைத்தோம்
காப்பாற்றினோம்! "
எனும்
பண்ணையார் பார்வையின்றி என்னவும்
அரசியலாக விமர்சிக்கலாம்.
இது தவிர
ஜீவாவை
இந்திய இடதுசாரிப் போக்கை
இதிலிருந்து பிரிந்த
பல கம்யூனிச இயக்கங்களே ஏற்கனவே விமர்சித்தது உண்டு.
ஜீவா விமர்சிக்கப்படாதவர் அல்ல. விமர்சிக்க வேண்டாம் என்றும் மறுக்கக்கூடாது.
ஆனால் அது வர்க்கக் கண்ணோட்டத்தில் ஆன விமர்சனமாக இருப்பது பயன் தரக்கூடியது.
ஜீவாவின்
கம்பன் கழக இலக்கிய உரை
சீன இந்தியப் போரில்
அவரது அரசியல் நிலை
போன்றவற்றில் மாறுபட்ட கம்யூனிஸ்டுகளும் உண்டு!
இது மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆன விமர்சனமும் அந்த நோக்கிலான விவாதமும்.
வர்க்க அரசியலை அணுகுவதில் கண்ணோட்டத்தில் உள்ள பிரச்சனை பற்றியதாகும்.
ஆனால் பெரியார், திராவிட இயக்கம் மீதான விமர்சனம் என்பது வர்க்க அரசியலுக்கு எதிரான நிலைப்பாடுகளைப் பற்றிய விமர்சனம். வர்க்க அரசியல் பார்வையை மறுக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதரவு கண்ணோட்டத்தின் மீதான விமர்சனம். ஜீவா அதை சரியாகவே செய்திருக்கிறார்.
மேலும் ஜீவா மட்டும் பெரியார் கண்ணோட்டங்கள சீண்டி விட்டார்! என்பது போல இன்றைய தலைமுறை பார்வைக்கு பரப்பப்படுகிறது.
பெரியார் இயக்கத்தோடு இணைந்தும் முரண்பட்டும் போனதற்கான காரணங்களின் வழி வர்க்க அரசியலாக தோழர் ஜீவா வெளிப்படுத்தியது அது.
சொல்லப்போனால் ஜீவா போன்ற கம்யூனிஸ்டுகள்தான் சரியாகவும் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை வைத்தவர்கள். விமர்சனம் என்பதை அதன் அரசியல் அர்த்தத்தில் வைத்தவர்கள்.
பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுடன் முரண்பாடு கொண்டபோது அரசியல் விமர்சனமாக அல்லாமல் பெரியாரை கேவலமாக தனிநபர் தாக்குதலாகவும்,
முரசொலியில் கேலி கிண்டல் கார்ட்டூனாகவும் தனிநபர் தாக்குதல் கலாச்சாரத்தை தொடங்கியது திமுக தான்.
பிறகு பெரியார் மீது பற்று என காட்டிக்கொண்ட போது கண்ணீர் துளிகள்! என பெரியாரும் விமர்சித்து உள்ளார்.
ஆனால் கம்யூனிஸ்களின் விமர்சனம் வர்க்க கண்ணோட்டத்தில் ஆன அரசியல் பயன்கருதியதாக நடத்தப்பட்டது.
பெரியார் மீதும் நீதிக் கட்சியின் மீதும் பி .ராமமூர்த்தி போன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் விமர்சனம் வைத்திருக்கி றார்கள். பெரியாரும் கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம் வைத்திருக்கிறார்.
குறிப்பாக தமிழகத்தில் மார்க்சிய லெனினிய அரசியல் இயக்கங்களும் பெரியார் நீதிக்கட்சி திராவிட இயக்கம் மீதான அரசியல் விமர்சனங்களை நிறைய எழுதியுள்ளார்கள். "புதிய ஜனநாயகம் இதழ்" நிறைய கட்டுரைகளும், "ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்" மற்றும் "இட ஒதுக்கீடு ஒரு மார்க்சிய லெனினிய பார்வை"
போன்ற நூல்களில் ஆரிய திராவிட பிரிவுகளின் மேட்டுக்குடி ஆதிக்க சாதி நலன்களுக்கான அரசியலை ஆதாரத்துடன் எழுதி இருப்பார்கள்.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சில வெளியீடுகள்,
தோழர் ஏ. எம் .கே. அவர்களின் தனி ஆய்வு கட்டுரைகளில் நீதிக்கட்சி பெரியார் மீதான விமர்சனங்கள் திட்டவட்டமாக உள்ளது.
கேடயம் மன ஓசை குழுவினரின் திராவிடர் கழகம் பெரியார் மீதான விமர்சனக் கட்டுரைகளும் உண்டு.
இடைப்பட்ட அரசியல் மாற்ற காலத்தில் பொது எதிரிக்கு வாய்ப்பாக இடம் தரக் கூடாது என்று நினைத்து இத்தகைய தத்துவ அரசியல் விமர்சன மரபை கைவிட்டதாலோ என்னவோ, அரசியல் விமர்சனம் என்பதையே அரசியல் வளர்ச்சி என்று பார்க்காமல், உண்மையில் பொது எதிரியான முதலாளித்துவ சக்திகளிடம் மெல்ல மெல்ல கரைவதுதான் நடந்துள்ளது. புதிய இளம் தலைமுறை இடம் அவர்கள் எதார்த்தத்தில் எதிர்கொள்ளும் வர்க்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராக வர்க்க அரசியலையே பேசவிடாமல் எதற்கெடுத்தாலும் பெரியார் அம்பேத்கர் என , கம்யூனிச அரசியலையே பேசாத காயடித்தல் நிலை ஏற்பட்டு விட்டது.
ஆனால் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் கட்சிகள் தெளிவாக உள்ளன.
குறிப்பாக திராவிட மாடல் திராவிட மரபு என சொல்லிக் கொள்ளும் திமுக, இப்படி எல்லாம் நடந்து கொண்டால் கம்யூனிஸ்டுகள் நம்மை ஆதரிக்க மாட்டார்கள்! என்று அஞ்சுவதில்லை உழைக்கும் மக்களை ஒடுக்கும் திட்டங்களை துணிச்சலுடன் செய்கிறது.
இந்த நடு சென்டர் பேர்வழிகள் திமுகவிடம் போய் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக இயங்காதீர்கள்! கம்யூனிஸ்டுகளை இழந்து விடுவோம் என்று கதறுவதில்லை.
ஏனென்றால் திமுக பேசும் திராவிட மாடலுக்கு கம்யூனிசம் எதார்த்தத்தில் தேவையற்றது.
தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றுவதற்கு அந்த அடையாளத்தையும் அந்த கொடியையும் கொஞ்சம் கூட்டணியாக காட்டிக் கொள்கொள்கிறது.
பொது எதிரிக்கு எதிராக உலகிலேயே சிறந்த கம்யூனிச தத்துவத்தை பாழ்படுத்தி விடுவோமோ! என்று எங்கேயும் எப்போதும் சீர்திருத்தவாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை.
சிறு விமர்சனங்கள் செய்தால் கூட முரசொலியில் போட்டு வெளுக்கிறார்கள். அது சரிதான் அவர்கள் கொள்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கையை உறுதியாக பேசும் போது மட்டும் வந்து பாய்கிறார்கள்.
எனவே அரசியல் விவாதங்களே கூடாது என்பது அந்த அரசியல்வாதத்தில் ஒரு பக்கம் சாய்ந்து இருப்போரின் நடுநிலை மாயை.
அமைதியாக இருந்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்! எனும் இந்துத்துவ மாயை நமக்கு தேவை இல்லை.
கொள்கை அரசியல் விவாதத்தை உழைக்கும் மக்கள் நலனுக்கான குறிக்கோளோடு நடத்த வேண்டும் என்பதுதான் அடிப்படை.
தனிநபர்களின் மேன்மை அறிவை காட்டுவதற்காக அல்ல,
சரியான வர்க்க அரசியலை வாதக்களத்திற்கு அழைத்து வரும்போதெல்லாம் பாட்டாளி வர்க்கத்திற்கான அரசியல் அணி திரட்டலும் உருவாக்கமும் அதிகரித்து உள்ளதே ஒழிய வீணானது இல்லை.
சொல்லப்போனால் இது போன்ற வாதங்களின் போது தான் பொது எதிரி என்பவன் ஏதோ தூரத்தில் இருப்பவனாக மட்டுமல்ல,
நம் கூடவே நின்று கொண்டு பொதுவாக கம்யூனிசம் பிரமாதம் என்று ரசித்துக் கொண்டு, குறிப்பான தருணங்களில் பொது எதிரியாக பரிணமிப்பவர்களை யும் பார்க்க முடிகிறது.
முரண்பாடுகளின் வளர்ச்சி விதி தெரியாதவர்கள்தான் முரண்பாடுகளே அபாயம் என்று அலறுவார்கள்.
அரசியல் முரண்பாடுகளின் வளர்ச்சியின் அவசியம் கருதி
இது சமூகத்துக்கு தேவையான வர்க்கக் கண்ணோட்டம் என்பதற்கான வாதங்கள் இன்னும் நிறைய நடத்தப்பட வேண்டும்.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/1H15n5Vcwq/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு