பாரதி யார்?
துரை. சண்முகம்
இலக்கியம் குறிப்பாக கவிதை மீதான எனது உள்ளுணர்வின் தொடக்கம் முதலே பாடப்புத்தகங்கள் மற்றும் நூலகங்களில் அறியப்பட்ட நூல்களின் வழி பாரதியார் எனக்கு நெருக்கமானார்.
கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் பல பழைய நூல்களை புரட்டிய என்னுடைய ஆர்வமான நாட்கள் பாரதியாரின் கட்டுரைகள் பேச்சுகள் கவிதைகள் என அனைத்தையும் ஒரு பறவை பார்வையில் பார்த்தபோது இன்னும் ஈர்த்தது.
முதலில் முக்கிய காரணம்
அவருடைய கவிதை உணர்ச்சி வீச்சும் வாழ்வின் அனைத்தின் மீதான பற்று உறுதியும் என்னுடைய இளைய கனவுகளுடன் இணைந்து உத்வேகமூட்டியது.
பிறகு மார்க்சிய லெனினிய தொடர்பு வந்த நாட்களில்
அமைப்பில் இயங்கிய காலங்களில், பாரதி பற்றிய அரசியல் ரீதியான உரையாடல்கள் அவ்வப்போது குழு தோழர்களிடம் நடப்பதுண்டு. குறிப்பாக சி.பி.எம் போன்ற கட்சிகள் பாரதியை தூக்கிப் பிடித்து கொண்டாடுவதை பார்த்து பாரதியை புரட்சிக்கவிஞர் என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாத அடிப்படை கொண்டது எனும் வாதங்கள் நடப்பதுண்டு.
இதன் தாக்கம் என்னையும் ஆட்கொண்டது . அந்தக் கால பிழைப்புவாதிகளை போல தன் பிழைப்புவாதத்தில் மூழ்காமல் தெளிவான தத்துவ அடிப்படை இன்றி இந்து தேசிய பார்வையில் இருந்து சில முற்போக்கான கவிதைகளும் பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பும் குறிப்பிடத்தக்க பங்களிப்போடு இருந்தாலும், மக்களுக்கான தெளிவான அரசியல் பாதை இன்றி அவலமாக முடிந்தவன் பாரதி! எனும் அளவிலான அமைப்பின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டேன் நான்.
இத்தகைய விமர்சன எல்லைகளை கடந்து பிற்பாடு மதிமாறன் போன்ற நபர்களின் பார்ப்பன ஆர். எஸ். எஸ். காவி கவிஞன் எனும் அளவுக்கு பாரதியை திட்டமிட்ட எதிரியாக கட்டமைத்த வாதங்களை என்னால் அடிப்படை இன்றி ஏற்க முடியவில்லை.
திராவிட இயக்க வளர்ச்சியின் பித்தலாட்ட பிழைப்புவாத அரசியலை விமர்சிக்கும் போது திராவிடம் பேசிக்கொண்டே இதை செய்யலாமா? என்றால் பெரியார் வேறு அண்ணாவுக்கு பிறகு வேறு என்று பேசுவதும், பாரதி என்று வரும்போது மட்டும் சனாதன ஆதரவு தத்துவ கண்ணோட்டம் இருந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் பார்ப்பன கும்பலோடு முழு சரணாகதியாக வாழாத நடத்தையும் கொண்ட பாரதியை எந்த அளவோ! அந்த அளவு! விமர்சனமாக பார்ப்பது இல்லை இவர்கள். திராவிடத்தை ஆதரிப்பவர்கள் வேறுபாடு உண்டு. இந்து மத்தை ஆதரிப்பவர்களில் வேறுபாடே கிடையாது எனும் மட்டையடி பார்வை இது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, பார்ப்பனர்கள் பக்கம் முரண்பட்ட, வாழும் காலத்தில் அவர்களால் வெறுக்கப்பட்ட பாரதியை ஆர் .எஸ் .எஸ் இந்துவாக நிறுவத் துடிக்கும் வெறுப்பு அரசியலின் மறுபக்கம் இது.
மேலும் பாரதியின் சிறந்த கவிதைகளுக்காகவும் குறிப்பிட்ட அளவு ஏகாதிபத்திய எதிர்ப்பு பண்புக்காகவும் பாராட்டுவதை கூட, அப்படி சொல்பவர்களையும் சேர்த்து பார்ப்பன அடிமைகள் ஆர்எஸ்எஸ் அடிமைகள் என்று பழிதூற்றும் அளவுக்கு வரலாற்று முரண்களை வகைப்படுத்தத் தெரியாத காரியவாத தற்குறிகளின் கருத்தை மார்க்சிய கண்ணோட்டம் உள்ளவர்கள் ஏற்க இயலாது.
சேகர் பாபு செந்தில் பாலாஜி போன்ற பித்தலாட்ட திராவிட கொழுந்துகளை பற்றி கண்டிக்கவும் எதிர்க்கவும் வாய் தவறி பேசவும் கறார் காட்டாத இந்த பேர்வழிகள், இவர்களே சொல்லிக் கொள்ளும் சமூக நீதியை குழி தோண்டி புதைத்து சாதி சங்க மாநாட்டில் பட்டம் சூட்டிக் கொள்ளும் திமுக அமைச்சர்களை பற்றி பொதுவெளியில் பேசத் துணியாத இந்த பேர்வழிகள், பாரதியை குறிப்பிட்ட கவித்திறன் செயல்களுக்கு ஆதரித்தால் கூட பார்ப்பன அடிமைகள் என்பது வசை பாடி திரிப்பது ஆர்.எஸ்.எஸ் பாணி திராவிட கூச்சலே.
தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்டுகள் மீது தனது கொள்ளிக்கண் பார்வையை மறைக்க கூலிங் கிளாஸ் போட்டு அலைந்த பிறவி எதிரி ராஜாஜியை மூதறிஞர் என்று உறவாடியதை எல்லாம் அது வேறு இது வேறு என வகை பிரிக்க தெரிந்த இந்த வாழும் கலை வல்லுநர்களுக்கு, பாரதியை விமர்சனத்துடன் ஆதரித்தால் கூட உலக மகா தவறு போல கம்பு சுற்றுவது நகைப்புக்குரியது.
இந்தச் சூழலில்
பாரதி யார்? என்று புரிந்துகொள்ள முரண்பாடுகளின் அறிவியலை அறிந்து கொள்ள எல்லாவற்றையும் விட இலக்கிய கூட்டம் என்பதே மால.லெ. குழுக்களில் இல்லாத இந்த நேரத்தில், செந்தளம் வலைதளம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த இணைய வழி கூட்டம் தெரிந்து கொள்ள ஒரு நல் வாய்ப்பு!
https://meet.google.com/hub-rpox-cwd
வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுங்கள்!
தோழமையுடன்
துரை. சண்முகம்