சலுகை விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெயால் இந்தியாவில் உண்மையான இலாபம் யாருக்கு போய் சேருகிறது?
தமிழில்: விஜயன்

கரண் பிர் சிங் சித்து, ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, பஞ்சாபின் முன்னாள் சிறப்பு தலைமைச் செயலாளர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரக் கல்வி பயின்ற இவர், எரிசக்தி பொருளாதாரம், அரசின் வரி கொள்கைகள், வணிகம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். சலுகை விலையில் இந்தியா கொள்முதல் செய்யும் ரஷ்ய எண்ணெய்யால், நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் எவ்வாறு பெருத்த இலாபங்களை ஈட்டித் தந்திருக்கிறது என்பதையும், அதேவேளை பொதுமக்கள் தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதற்கு அதிக விலை செலுத்தி வருவதற்கான காரணத்தையும் அவர் விரிவாகப் அம்பலப்படுத்துகிறார்.
கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா 25% முதல் 50% வரை என குறிப்பிடத்தகுந்த அளவிற்கு சலுகை விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை பெற முடிந்தது. இதன் விளைவாக, சர்வதேச சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், ஒரு பேரலுக்கு 5 முதல் 30 அமெரிக்க டாலர்கள் வரை இந்தியா குறைவாகச் செலுத்தி வருகிறது. ஆயினும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் கிட்டத்தட்ட எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கின்றன — ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ₹95 ஆகவும், டீசல் சுமார் ₹88 ஆகவும் உள்ளது. அதேசமயம், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெருத்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளன. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் சார்ந்த வரிகள் வாயிலாக ஆண்டுதோறும் சுமார் ₹4.7 லட்சம் கோடி என்ற அளவிற்கு தொடர்ந்து வசூலித்து வருகின்றன. ஆனால், பெட்ரோல் நிலையங்களில் இந்திய மக்கள் எவ்வித நிவாரணத்தையும் கண்டதில்லை.
2023–24ம் நிதியாண்டில், இந்தியாவின் மூன்று மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் — இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் — ஒட்டுமொத்தமாக ₹86,000 கோடி இலாபத்தைப் பதிவு செய்துள்ளன. இது, முந்தைய ஆண்டில் ஈட்டிய ₹3,400 கோடியுடன் ஒப்பிடுகையில், ஒரு பிரம்மாண்டமான அதிகரிப்பாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலாபம் ₹8,242 கோடியில் இருந்து ₹39,619 கோடியாக உயர்ந்து, 381% வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் மிகப்பெரிய இலாப உயர்வைப் பதிவு செய்துள்ளது; அதன் இலாபம் முந்தைய ஆண்டில் ₹1,870 கோடியிலிருந்து ₹26,674 கோடி எனப் பன்மடங்கு அதிகரித்து, 1,326% உயர்வைக் கண்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் தனது நிலையை முழுமையாக மாற்றி அமைத்து, முந்தைய நிதியாண்டில் கண்ட ₹8,974 கோடி நட்டத்திலிருந்து, ₹14,694 கோடி இலாபத்தை ஈட்டி சாதனை புரிந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் காட்டிலும், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கற்பனைக்கும் எட்டாத அளவிலான அதீத இலாபங்களை அள்ளிக் குவித்தன. தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயைத் தாராளமாய் இறக்குமதி செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுத்திகரிப்பின் மூலம், ஒரு பேரலுக்கு 12.5 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இலாபம் ஈட்டியுள்ளது. ரஷ்ய நிறுவனமான ரோஸ்நெஃப்ட்டின் வலுவான துணையுடன் இயங்கும் நயாரா எனர்ஜி, ஒரு பேரலுக்கு 15.2 அமெரிக்க டாலர்கள் என, இதையும் விஞ்சிய கூடுதல் இலாபத்தை பதிவு செய்துள்ளது. தினந்தோறும் இலட்சக்கணக்கான பேரல்கள் சுத்திகரிக்கப்படுவதன் விளைவாக, இந்த லாப வரம்புகள், இலட்சக்கணக்கான கோடிகளைத் தாண்டி, கற்பனைக்கும் எட்டாத அளவிலான அதீத இலாபங்களை அள்ளிக் குவித்தன.
மத்திய அரசு, எரிபொருள் மீது விதிக்கும் கலால் வரி வாயிலாக, ஆண்டுதோறும் ஏறத்தாழ ₹2.7 லட்சம் கோடியைத் திரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ₹13 எனவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ₹10 எனவும் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரலில், இந்த வரி லிட்டருக்கு மேலும் ₹2 உயர்த்தப்பட்டதன் விளைவாக, மத்திய அரசுக்கு சுமார் ₹32,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. மாநில அரசுகளும், குறிப்பாக மதிப்புக்கூட்டு வரி (VAT) மூலமாக, எரிபொருள் வரிகளை அதிக அளவில் சார்ந்து இருக்கின்றன. எரிபொருள் வழியாக மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் ஆண்டு மதிப்புக்கூட்டு வரி வருவாய் ₹2 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. மதிப்புக்கூட்டு வரியானது, அடிப்படை எரிபொருள் விலையின் விகிதாச்சார அடிப்படையில் (ad valorem) விதிக்கப்படுவதால், அடிப்படை விலை உயரும்போதெல்லாம், மதிப்புக்கூட்டு வரியாக வசூலிக்கப்படும் தொகையும் தன்னிச்சையாக அதிகரித்து விடுகிறது. சராசரியாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விலையில் 30 சதவீதமும், ஒரு லிட்டர் டீசலின் விலையில் 26 சதவீதமும் மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியாகச் சென்று சேர்கிறது. இது எரிபொருளை, மாநில அரசுகளுக்கு மிகவும் நம்பகமான, லாபம் ஈட்டித்தரும் வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக உருவாக்கியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, அவை பெட்ரோலின் இறுதி சில்லறை விலையில் சுமார் 46% ஆகவும், டீசலின் சில்லறை விலையில் 42% ஆகவும் காணப்படுகின்றன. இந்த வரிகளுக்கு அப்பால், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) தங்கள் சந்தைப்படுத்தல் இலாப வரம்புகளை வியப்பூட்டும் விதத்தில் பெருமளவில் உயர்த்தியுள்ளன. தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான அவர்களின் விற்பனை இலாபம் ₹15 என்பதாகவும், ஒரு லிட்டர் டீசலுக்கான இலாபம் ₹12 என்பதாகவும் அதிகரித்துள்ளது. இந்த லாபங்கள், நுகர்வோர் செலுத்தும் சில்லறை விலையில், கண்ணுக்குப் புலப்படாத மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் உள்ளுறைந்துள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஒரு பேரலுக்கு 1 அமெரிக்க டாலர் சரிவு ஏற்படும் ஒவ்வொரு வேளையிலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் லிட்டருக்கு தோராயமாக ₹0.55 ரூபாய் இலாபம் ஈட்டி வருகின்றன. ஆனால், இந்த ஆதாயங்கள் பொதுமக்களுக்கு விலைக் குறைப்பாக எள்ளளவும் சென்றடைவதில்லை; மாறாக, அவை முழுவதுமாக அந்த நிறுவனங்களாலேயே தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.
ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி போன்ற தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெயைக் கணிசமான சலுகை விலையில் கொள்முதல் செய்தன. அதனைச் சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருட்களாக உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தன. 2024-25ம் நிதியாண்டில், இந்த ஏற்றுமதியின் மதிப்பு 60 பில்லியன் டாலரைத் தொட்டது. இதில், ரஷ்ய எண்ணெய்க்குத் தடை விதித்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கே (EU) 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், இந்தச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் விற்று, பெரும் இலாபத்தைப் ஈட்டுகின்றன.
அரசு பெயரளவில் எரிபொருள் விலைகள் 'கட்டுப்படுத்த முடியாதவை' என அறிவித்தாலும், உண்மையில் யதார்த்தம் வேறுவிதமாகவே உள்ளது: சில்லறை விற்பனை விலைகள் இன்றும் அரசின் பிடியில்தான் இருக்கின்றன. எரிபொருள் என்பது அரசுக்கு ஒரு நிலையான வரி வருவாய் ஆதாரமாகத் திகழ்வதால், விலைகள் தொடர்ந்து உயர்மட்டத்திலேயே நிலைநிறுத்தப்படுகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களோ, சமையல் எரிவாயு மானியங்களால் ஏற்பட்ட கடந்தகால இழப்புகளை ஈடுசெய்ய அதிக இலாப வரம்புகள் தேவை என வாதிடுகின்றன. இக்காரணங்களாலேயே, மலிவான கச்சா எண்ணெயின் பலன் பெரும்பாலும் நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் மட்டுமே சென்று சேர்கிறது. சாமான்ய பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் தொடர்ந்து அதிக விலையைச் செலுத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியாவின் பங்கைத் தவறான கோணத்தில் சித்தரித்தார். ஆயினும், அவரது அக்கூற்றுக்கள், இந்திய மக்களின் மனங்களில் ஒரு நியாயமான வினாவை மறைமுகமாக எழுப்பின: மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் 'இந்தியாவின் நலன்' கருதி இறக்குமதி செய்யப்பட்டது என்றால், அதன் முழுப் பலனும் சாதாரண மக்களை ஏன் சென்றடைவதில்லை? லாபங்கள் நிறுவனங்களின் இலாபக் கணக்குகளையும் அரசின் கருவூலத்தையும் மட்டுமே நிரப்புகின்றனவே தவிர, சாதாரண குடும்பங்களின் சேமிப்புக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிப்பதில்லை என்பதையே புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மலிவான ரஷ்ய கச்சா எண்ணெயால் கிடைக்கும் பலன், வெறுமனே எண்ணெய் நிறுவனங்களின் இலாபமாகவோ, அல்லது அரசாங்கங்களின் கூடுதல் வரி வருவாயாகவோ மட்டும் தேங்கிவிடக் கூடாது. அதே நிதியாண்டில்(2024-25), எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ₹86,000 கோடிக்கும் அதிகமான இலாபத்தைக் குவித்தன. மத்திய அரசு கலால் வரி வாயிலாக ₹2.7 லட்சம் கோடி வருவாயை ஈட்டியது. மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (VAT) மூலம் மேலும் ₹2 லட்சம் கோடியைத் திரட்டின. இவ்வளவு பெரிய வருவாய் ஈட்டப்பட்ட போதிலும், பொதுமக்களுக்கான எரிபொருள் விலைகள் இன்றும் உயர்ந்தே காணப்படுகின்றன.
இப்பொழுதே மாற்றத்தை வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம். தனியார் மற்றும் பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களின் மிக உயர்ந்த இலாப வரம்புகளைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் கடுமையான எரிபொருள் வரிகளைக் குறைக்க வேண்டும். மலிவான ரஷ்ய கச்சா எண்ணெயின் பலன் வெறும் நிறுவனங்களின் இலாபக் கணக்குகளிலும், அரசு கருவூலங்களிலும் மட்டும் தேங்கிவிடக் கூடாது. அது பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு வடிவத்தில் நுகர்வோரை நேரடியாகச் சென்றடைய வேண்டும். அப்போதுதான், பல ஆண்டுகால உயர் எரிபொருள் செலவுகளால் அல்லலுறும் சாமான்ய இந்தியர்கள் உண்மையான நிவாரணத்தைப் பெறுவார்கள்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://kbssidhu.substack.com/p/who-really-pockets-indias-russian