கார்ப்பரேட்களுக்கு காவு கொடுக்கப்படும் இந்திய அஞ்சல்துறை: ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தமிழில் : விஜயன்

கார்ப்பரேட்களுக்கு காவு கொடுக்கப்படும் இந்திய அஞ்சல்துறை: ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தபால் ஊழியர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி(இன்று) வேலை நிறுத்தம்

முன்மொழியப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது என்று தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தபால் துறையில் உள்ள 4.5 லட்சம் ஊழியர்களில் சுமார் 60% பேர் ஆகஸ்ட் 10-ம் தேதி, இந்தத் துறையின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளில் கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அஞ்சலக ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) கூறியுள்ளது.

அஞ்சலக ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜனார்தன் மஜும்தார் கூறுகையில்,  கோவிட்-19 தொற்றுநோய் காலத்தைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தோல்வியுற்ற தரகுரிமையின் கீழ் துவங்கப்பட்ட அனைத்து அஞ்சலக நிலையங்களையும் "தக் மித்ரா" திட்டத்தின் கீழ் கொண்டு வருவவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. அதிக தபால் நிலையங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கான சரியான வழி புதிய அலுவலகங்களை திறப்பதே தவிர தரகர்களால் திறக்கப்படும் நிலையங்கள் மூலம் அல்ல என்றார். "தரகுரிமையின் மூலம் திறக்கப்படும் தபால் நிலையங்ளின் வேகமான வளர்ச்சியானது துறையின் வருமானத்தை  விழுங்கிவிடுவதோடு மட்டுமல்லாமல் துறையின் நிதித் தேவைக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது" என்று அவர் கூறினார்.

சுமார் 30 கோடி கணக்குகளும் கிட்டத்தட்ட ₹ 10 லட்சம் கோடி நிலுவைத் தொகையைக் கொண்ட சிறுசேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு கார்ப்பரேட்மயமாக்குகிறது என்பது ஊழியர்களின் மற்றொரு பெரிய கவலை. துறையின் வருவாயில் கிட்டத்தட்ட 50% இந்த சேமிப்பு வங்கிகளில் இருந்து வருகிறது. "ஆனால் துறையானது இந்திய தபால் கட்டண வங்கியின் (IPPB) உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. "IPPBயை வலுப்படுத்துவதே மத்திய அரசாங்கத்தின், துறையின் நோக்கமாகும், இது நிதியமைச்சரின் கடைசி பட்ஜெட் உரையிலிருந்து தெளிவாகிறது. இதுமட்டுமல்லாமல். மையமான அஞ்சலகப் பணிகள் மட்டுமே  துறையின் களமாக இருக்க வேண்டும் என்றும், மீதமுள்ள செயல்பாடுகள் IPPB உடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தபோது எங்கள் அச்சங்கள் உண்மையாகின. நிதித் துறைகளில் இரட்டைக் கட்டமைப்பு இருக்காது என்றும், வங்கி, காப்பீடு மற்றும் பிற நிதித் தேவைகளுக்கு ஒற்றை IPPB கட்டமைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கடந்த பட்ஜட் உரையிலே குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார். 

செய்தித்தாளுக்கு மஜும்தார் கொடுத்த பேட்டியில், அஞ்சல் ஊழியர்களின் மற்றொரு கவலை பற்றி பேசுகிறார்;  இந்திய தபால் கட்டண வங்கி (IPPB) லிமிடெட் அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறு சேமிப்பு திட்டத்தை கார்ப்பரேட்மயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

T.S.R.சுப்பிரமணியம் தலைமையிலான தனிச்சிறப்புக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, நாட்டில் உள்ள பரந்த அஞ்சல் வலையமைப்பை சிறப்பாகப் பயன்படுத்த, மத்திய அரசு, 2018 இல், IPPBஐக் நிறுவியது; இதுவே அஞ்சல் துறையின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் கார்ப்பரேட் நிறுவனமாகும்.அஞ்சல் ஊழியர்களின் பல கட்ட போராட்டங்களை புறக்கணித்தே IPPB-ஐ, 650 கிளைகள் மற்றும் 3,250 அணுகல் மையங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

IPPB ஆனது இந்தியா போஸ்ட்டின் பரந்த விநியோக வலையமைப்பை கடன் முதலீடுகளைக் கொண்டு விரிவுபடுத்தியதால், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஒருங்கிணைந்த வங்கிச் சேவைகளை வழங்கும் தபால் அலுவலகங்களில் நவீனமயமாக்கப்பட்ட அமைப்பை உருவாக்கியது. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், தபால் சேவையின் வங்கி மற்றும் காப்பீட்டு செயல்பாடுகளை IPPB உடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது, இதுவும் தபால் ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது..

திரு. மஜும்தார் மேலும் கூறுகையில், "பிரதமர், அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கிக் கணக்குகளை IPPB லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. “அஞ்சல் துறை ஊழியர்களை IPPBயில் பணிபுரியமாறு ஏற்கனவே அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். உண்மையில், இவை பேரழிவு தரும் நடவடிக்கைகளாகும், இது அஞ்சலக சேமிப்பு வங்கிகளில் (PSOB) டெபாசிட் செய்யப்பட்ட பெரும் தொகையின் மீது கார்ப்பரேட்களின் கோரப்பிடியை இறுதியாக சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையாகும்.. மேலும் இந்த பெரும் தொகையான மக்கள் பணத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். அஞ்சலக சேமிப்பு வங்கிகளின் அர்த்தத்தையே தலைகீழாக மாற்றுவதற்கு முன், அதன் முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அகில இந்திய ஆர்எம்எஸ் & எம்எம்எஸ் ஊழியர் சங்கத் தலைவர் பி. சுரேஷ் கூறுகையில், ரயில்வேயிடமிருந்து ரயில்வே அஞ்சல் சேவையை பிரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. "அதே நேரத்தில், அமேசான் விரைவான விநியோகத்திற்காக ரயில்வேயைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்த திசையில் செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் கோடாரி இப்போது தபால் துறை மற்றும் இரயில்வே அஞ்சல் சேவையின் மீது வந்து விழுந்துள்ளது,” என்று திரு.சுரேஷ் கூறினார். தொழிற்சங்கங்கள் நல்லிணக்கத்திற்காக முயற்சித்ததாகவும், ஆனால் மத்திய தொழிலாளர் ஆணையர் எந்தக் கூட்டத்தையும் கூட்டவில்லை என்றும், துறை அதிகாரிகளுடன் நடத்திய கூட்டமும் எந்தப் பலனையும் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

- விஜயன் 

(தமிழில்) 

மூலக்கட்டுரை : thehindu.com & thewire.in