யு.ஜி.சி-யின் 'இந்திய ஞான மரபுகள்' திணிப்பு: கல்விக்கே பேராபத்து என்பதற்கான பத்து காரணங்கள்

தி வயர்

யு.ஜி.சி-யின் 'இந்திய ஞான மரபுகள்' திணிப்பு: கல்விக்கே பேராபத்து என்பதற்கான பத்து காரணங்கள்

இது வெறும் பாடநூல்களில் புதிய அத்தியாயங்களைச் சேர்ப்பதோடு முடிந்துவிடுவதில்லை; இது இந்தியாவில் கல்வியின் அடிப்படைக் கோட்பாட்டையே மாற்றியமைக்கும் ஒரு பேராபத்தான திட்டமாகும். பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) ஊடாக அரசு, வரலாறு முதல் வேதியியல் வரை அனைத்துப் பாடங்களிலும் “இந்திய ஞான மரபுகளை” இணைக்கும் புதிய கல்லூரிக் கல்வித்திட்டத்தை அமலாக்கி வருகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நல்லதொரு அம்சமாகவே காட்சியளிக்கும். தங்கள் நாட்டின் பராம்பரியச் செழுமையை இளைய தலைமுறை அறிந்துகொள்வதை யார்தான் வேண்டாம் என்பார்? ஆயினும், நாம் நுட்பமாக ஆய்வு செய்வது இன்றியமையாதது. சிக்கல் இந்தியக் கருத்துக்களை உள்ளிணைப்பதில் அன்று; மாறாக, இது மாணவர்களின் சுயாதீனமாக சிந்திக்கும் திறனைச் சிதைக்கவல்ல ஒரு அணுகுமுறையாகும். இந்த புதிய கல்வித்திட்டம் பெரும் சிக்கல்களை விளைவிக்கக்கூடும் என்பதை உணர்த்தும் பத்து காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. சிந்திக்கக் கற்றுத்தருவதை விடுத்து, எதைச் சிந்திக்க வேண்டும் என இது கட்டளையிடுகிறது

உண்மையான கல்வி, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது. எந்தவொரு வரலாற்று ஆளுமையையும், புனித நூலையும், ஆற்றல்மிக்கக் கருத்தையும் கேள்விக்குட்படுத்துவதை தவிர்க்கக்கூடாது. ஆனால், இக்கல்வித்திட்டமோ முற்றிலும் நேர்மாறாகச் செயல்படுகிறது. இது மாணவர்களைக் கேள்வி கேட்பதை விடுத்து, கண்மூடித்தனமாகப் போற்றவும், அப்படியே ஏற்றுக்கொள்ளவும் தூண்டுகிறது. உதாரணமாக, கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவுள்ளது. அர்த்தசாஸ்திரத்தின் கடுமையான, ஈவிரக்கமற்ற முறைகள், அதன் இறுக்கமான சாதியக் கட்டமைப்பு, ஒற்றறியும் செயல்பாடுகளுக்கான அதன் ஆதரவு குறித்து மாணவர்கள் திறம்பட விவாதிக்க வழிவகுப்பதே உண்மையான கல்வியாக இருக்க முடியும். ஆனால், இப்பாடத்திட்டமோ அர்த்தசாஸ்திரத்தை "திறமையான மேலாண்மைக் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் ஓர் ஊற்றுக் கண்ணாக" சித்தரித்து, மாணவர்களுக்கு "அதன் நடைமுறைப் பயன்பாடுகளைப் புரிந்துகொள்ளவும், போற்றிப் பாராட்டவும் உதவுவதற்காக இப்பாடம் சேரக்கப்ப்பட்டுள்ளது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. 

இதேபோல், கணிதத்தில், மாணவர்கள் ‘சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கணித வழிமுறைகளைக் கற்பார்கள்; “சூத்திரங்களைப் பயன்படுத்தி பல்வேறு ஒருபடி மற்றும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்ப்பதற்காக” இவை சேர்க்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இது மாற்று சிந்தனையை தூண்டுவதாக இருப்பதற்கு மாறாக, இது அப்படியே மதிக்கப்பட வேண்டும் என்ற ஓர் அதிகாரப்பூர்வ ஆணையாகவே வழங்கப்படுகிறது. விமர்சனச் சிந்தனையின் கடுன உழைப்பை, தேசியப் பெருமை எனும் எளிதான கவர்ச்சியால் மூடிமறைத்து விடுகிறது.

2. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அபத்தமான முறையில் கலக்கிறது

இத்திட்டம் வெவ்வேறு காலகட்டங்களின் கருத்துக்களை, அவை ஒன்றிணைந்தவை போலக் கலந்துவிடுகிறது. உதாரணமாக, 'ராம ராஜ்யம்' எனும் பழம்பெரும் கருத்தை, இக்கால கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) என்ற பாடத்துடன் இணைத்து கற்பிக்க முன்மொழிகிறது. “'ராம ராஜ்யம்' (சமத்துவ ஆட்சி) போன்ற கருத்துக்களை கார்ப்பரேட் நிறுவனச் சமூகப் பொறுப்பு (CSR) என்ற கோட்பாட்டின் பின்னணியில் ஆராயலாம்” என்றும் கூறுகிறது. இது ஒரு ஸ்மார்ட்போனைச் சுத்தியலால் சரிசெய்ய முயற்சிப்பது போன்றது. ஆனால், 'ராம ராஜ்யம்' என்பது ஒரு கற்பனையான, இலட்சிய அரசனைப் பற்றிய பண்டைய மதக் கருத்தாகும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனச் சமூகப் பொறுப்பு (CSR) என்பது, பெரும்பாலும் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கான நோக்குடன், கார்ப்பரேட் நிறுவனத்தின் பொதுப் பிம்பத்தைப் பேணும் ஒரு நவீனகால வணிக உத்தியாகும். 

நேரம் கணிக்கும் முறை குறித்த பாடமும் இதையேத்தான் செய்கிறது. இது பண்டைய இந்திய அலகுகளான கடிகைகளை (Ghatis), GMT போன்ற நவீன கால அளவீடுகளுடன் ஒப்பிட்டுப் போதிக்கிறது. ஏனெனில், பாடத்திட்டத்தில் "கடிகைகள் / விகடிகைகளின் நேரத்தை கணக்கிடுதல்" மற்றும் "நேர அளவீடு – GMT, IST, LMT" ஆகிய இரண்டும் உள்ளடங்கியுள்ளன. ஒரு பிழையான சமநிலையை உருவாக்குவதே இதன் குறிக்கோள்; அதாவது, ஒரு பழைய அமைப்பு, புதிய ஒன்றால் உறுதிப்படுத்தப்பட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது நவீனகால கார்ப்பரேட் நிறுவன நடவடிக்கைகளுக்குப் பாரம்பரியத்தின் முலாம் பூசி நியாயப்படுத்துகிறது. பண்டைய மரபின் மரியாதைக்குரிய முகமூடியிட்டு, அவற்றை விமர்சனங்களிலிருந்து பாதுகாக்கிறது.

3. அறிவியல், கலை, புராணக் கதைகளுக்கிடையிலான தெளிவான எல்லை கோட்டை இது கலைக்கிறது

இது இக்கல்வித்திட்டத்தின் மிகவும் அபாயகரமான அம்சங்களுள் ஒன்றாகும். இது பல்வேறு அறிவுக் கூறுகளைக் குழப்பிவிடுவதோடு, நிரூபிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகளையும், கலைச் சிறப்புகளையும், பண்டைய நம்பிக்கைகளையும் சம அளவில் அணுகுகிறது. 'பஞ்சகோஷம்' தொடர்பாக முன்மொழியப்பட்ட பாடத்திட்டம், “சக்கரங்களைச் இயக்குவதன் மூலம் அறிவுக்குறியெண்ணை (IQ) அதிகரிக்கலாம்” என்பதை ஒரு செய்முறைப் பயிற்சியாகப் பட்டியலிடுகிறது.  இது புராணங்களையும், சடங்குகளையும் அறிவியல் கணக்கீடுகளுக்கு நிகராகப் பாவிக்கிறது. நாரத புராணம் போன்ற மத நூல்களிலிருந்து கணிதத்தைக் கற்பிக்க வேண்டும் அல்லது அப்பாடத்தை வேதங்களுடனும் "தனிமனித ஆளுமை மேம்பாட்டுடனும்" இணைக்க வேண்டும் என்ற பரிந்துரைகளிலும் இதே குழப்பம் பிரதிபலிக்கிறது. 

நீடித்த நிலையான சந்தைப்படுத்தல் என்ற பாடத்திட்டத்தில் "வேத நூல்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது" என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. இது கணிதம் போன்ற ஒரு கறாறான பாடத்தை, ஓர் ஆன்மீக நிகழ்ச்சி நிரலுக்குச் சேவை செய்ய வைக்கிறது. 'பரமாணு' என்ற கருத்தும் நவீன அணு கோட்பாடும் ஒன்றே என்று கூறுவதற்கு ஒப்பாகும் இது. இது கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆகிய இரண்டின் மதிப்பையும் ஒருசேரக் குறைக்கிறது. 

4. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை 'வரலாறு' என்று திணிக்கிறது

நாம் கற்பிக்கும் வரலாறு ஒருபோதும் நடுநிலையானதன்று; அது எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது. இப்பாடத்திட்டம், சுதந்திரப் போராட்டத்திற்கான பட்டியலில் வி.டி. சாவர்க்கர் போன்றோரைச் சேர்ப்பதன் மூலம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. நவீன இந்திய அரசியல் சிந்தனைக்கான பாடத்திட்டத்தில் அலகு III-ல்: “தேசிய இயக்கம் – பி.ஜி. திலகர், மகாத்மா காந்தி, தேசியவாதிகள் – வி.டி. சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாய” ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக, இந்தியாவின் அடிப்படைக் கதை ஒரு பன்முகத்தன்மை கொண்ட, பல மதங்களை உள்ளடக்கிய இயக்கத்தைப் பற்றியதாகவே இருந்துள்ளது. சாவர்க்கரின் சிந்தனையோ வேறுபட்டது: அவர் இந்தியாவை ஒரு இந்து தேசம் என்றார். அவரை உள்ளடக்குவது, மதச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தாக்கத்தை இந்து தேசமாக மாற்றும் ஒரு முயற்சியே. 

கணிதத்தில் ‘பாரதத்தின் கண்டுபிடிப்புகள்’ குறித்து முன்மொழியப்பட்ட பாடத்திட்டத்திலும் இந்த நிகழ்ச்சி நிரல் எதிரொலிக்கிறது; இது "இந்த உன்னதமான வரலாறு ஏன் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது" என்பதை ஆராய்வதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது வரலாற்றை ஒரு தேடலாகக் காட்டாமல், கடந்தகால துயரங்களையும் நிகழ்கால மீட்டெடுப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கதையாடலாகச் சித்தரிக்கிறது – இது இந்து தேசியவாதத்தின் மையக் கருப்பொருளாகும்.

5. ஒடுக்கப்பட்டோரின் அறிவு மரபுகளை அழித்தொழித்தல்

இப்பாடத்திட்டம் ஒற்றை “இந்திய ஞான மரபு” குறித்துப் பேசுகிறது, இது ஒரு அபாயகரமான பொய்ம்மையாகும். இந்தியாவுக்கு ஒருபோதும் ஒரேயான அறிவு முறை இருந்ததில்லை; பல அறிவு முறைமைகள் இருந்தன, அவை பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் மரபுகளுக்கு எதிராக போராட்டத்தின் வடிவத்திலேயே உருவாயின. தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்கள் – வேத சூத்திரங்கள் முதல் புராணங்கள் வரை – அனேகமாக அனைத்தும் உயர் சாதிச் சமஸ்கிருத மரபுகளிலிருந்தே வந்தவை. உதாரணமாக, ஒரு பாடத்திட்டம் அதன் “அறவியலுக்கான தத்துவ அடிப்படைகளை” “வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற பண்டைய இலக்கியங்கள்” ஆகியவற்றின் மீது கட்டமைக்கிறது. 

இந்தக் கல்வித் திட்டம் போராட்டத்தின் ஊடாக எழுந்த மகத்தான ஞான மரபுகளை அப்பட்டமாகப் புறக்கணிக்கிறது. புத்தர், பூலே, அம்பேத்கர் ஆகியோரின் சாதி மறுப்புச் சிந்தனைகள் எங்கே? ஆதிவாசி சமூகங்களின் சூழலியல் மரபுகள் எங்கே? தலித் போராட்டங்களின் வரலாறுகள் எங்கே? இவர்களை வேண்டுமென்றே உள்ளடக்காமல் விடுவதன் மூலம், இந்த பாடத்திட்டம் இத்தகைய குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சமூக நீதி கேட்டுப் போராடிய அவர்களின் பாரம்பரியம் "இந்திய அறிவு" என்ற கணக்கில் வராது என்பதைச் சூசகமாக உணர்த்துகிறது.

6. இது பல்கலைக்கழக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

பேராசிரியர்கள் எதை, எப்படிப் போதிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரம் கொண்ட தன்னாட்சி நிறுவனங்களாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். இக்கல்வித்திட்டம், அரசாங்கத்திடமிருந்து வரும் ஒரு மேலிட உத்தரவாகும். இது அச்ச உணர்வை விதைக்கிறது. ஒரு பேராசிரியரின் ஆய்வு, அரசாங்கம் விரும்பும் வரலாற்றுக்கு முரணாக அமைந்தால், அதை அவர்கள் அச்சமின்றிப் போதிக்கத் துணிவார்களா? இத்திட்டம் கல்வியாளர்களை அரசாங்கத்தின் வெறும் செய்தித் தொடர்பாளர்களாக மாற்றிவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது. இது பல்கலைக்கழகங்களை, தீவிர விவாதங்கள் நடக்கும் மையங்களாக இராமல், அதிகாரப்பூர்வ கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லும் சலிப்பூட்டும் இடங்களாக மாற்றிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

7. இது ஒரு சிறந்த வாழ்வை அளிக்காமல், கலாச்சாரப் பெருமை பேச வைக்கிறது.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்துப் பலரும் கவலை கொண்டுள்ள இச்சூழலில், அரசு ஏன் இதைத் தற்போது திணிக்கிறது? இது ஒரு பொதுவான அரசியல் தந்திரமே. ஓர் அரசு மேம்பட்ட வாழ்க்கையை வழங்க இயலாதபோது, அதற்குப் பதிலாக ஒரு பண்பாட்டுப் பெருமையின் கதையை முன்வைக்கிறது. “பாரதத்தின் கண்டுபிடிப்புகள்: உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை” போன்ற தலைப்புகளைக் கொண்ட பாடப்பிரிவுகள் இதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளன. “நீங்கள் இன்னல்களைச் சந்தித்தாலும், ஒரு புகழ்பெற்ற நாகரிகத்தின் அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்பதே இதன் உள்ளர்த்தமாகும். "இந்திய இலக்கியத்தின் பெருமையை" வியந்து போற்றுவதே 'பாரத் போத்-பாரதத்தை அறிந்து கொள்வோம்' என்ற கல்வித்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இது மக்களை அவர்களின் நிஜ உலகப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் உத்தியே தவிர வேறல்ல.

8. அதிகாரத்துவ முதலாளித்துவத்திற்கு உகந்த பணியாளர்களை உருவாக்கும் உத்தி

விசித்திரமாகத் தோன்றினாலும், இந்தப் பழைமைவாதக் கல்வித்திட்டம் இன்றைய பெருநிறுவனங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் ஊழியர்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. சிவ் நாடார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அம்பர் ஹபீப் குறிப்பிடுகையில், இத்தகைய கணிதப் பின்னணியில் பயின்று வரும் ஒரு மாணவர் 15-ஆம் நூற்றாண்டின் இந்தியக் கணிதத்தை அறிந்திருந்தாலும், நவீன ஆராய்ச்சிகளுக்குப் பொருத்தமற்றவராகவே இருப்பார். மேலும், ஐ.ஐ.டி-யில் முதுகலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கும் சிரமப்படுவார். இந்த பாடத்திட்டம், புத்தாக்கச் சிந்தனைக்கு ஒவ்வாத, ஆனால் சாதாரணத் தொழில்நுட்பப் பணிகளுக்குப் போதுமான பட்டதாரிகளை உருவாக்குகிறது.

 “அடிப்படை தகவல் தொழில்நுட்பக் கருவிகள்” குறித்தான ஒரு பாடத்திட்டமானது, “அடிப்படை கணினித் திறன்கள் பெற்றவர்களாக மேம்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இது ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய ஒரு பொறியாளரை உருவாக்கும், ஆனால் புதிய சூத்திரத்தைக் கண்டறியக்கூடிய ஒருவரை அல்ல. இது இந்த அமைப்பிற்குச் சேவை செய்யப் போதுமான திறமை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குமேயன்றி, அதை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டோரை அல்ல.

9. இது கடுமையான கேள்விகளைக் கேட்க அஞ்சும் குடிமக்களை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

சுயமாகச் சிந்தித்து ஆட்சியாளர்களைப் பொறுப்பேற்க வைக்கும் குடிமக்களே ஜனநாயகம் வளம்பெறுவதற்கு அவசியம். ஓர் பேரரசோ, அதிகாரத்திற்குக் கீழ்ப்படியப் பயிற்றுவிக்கப்பட்ட அடிமைகளை மட்டுமே விரும்புகிறது. இக்கல்வித் திட்டம் மாணவர்களை வெறும் அடிமைகளாக மாற்றுவதையே நோக்கி நகர்கிறது. "கற்கும் மாணவரிடையே களங்கமற்ற மனநிலையை வளர்ப்பதற்கு" "யோகா மற்றும் மகிழ்ச்சி" என்றவொரு பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்; இதுவே சமூகத்தில் நிலவும் ஊழல்கள், குற்றங்கள், அநீதிகளைக் குறைக்கும் என்றும் கூறுகிறார்கள். பாடத்திட்டம் விமர்சனத்திற்கு இடமளிக்காமல், வெறும் விசுவாசத்தையே ஊக்குவிக்கிறது. "தனிமனித வாழ்வில் தேசியப் பெருமையையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் விதைப்பதே" "வளர்ந்த பாரதக் கனவு" (Envisaging Viksit Bharat) என்ற பாடத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. சுதந்திரச் சிந்தனை கொண்ட தலைமுறையை வளர்ப்பதற்குப் பதிலாக, வெற்றுப் பெருமையும் கீழ்ப்படிதலும் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

10. முக்கியப் பிரச்சினை: கல்வியின் நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது

இது வெறும் ஒரு தவறான கொள்கை மட்டுமல்ல; கல்வியின் உண்மையான பொருள் குறித்த பெரும் பிரச்சனையை உள்ளடக்கியிருக்கிறது. இறுதியாக ஒரேயொரு மையக் கேள்விக்கு வந்து நிற்கிறது: எதற்காக கல்வி? 

தன்னை உணர்வதற்காக கல்வியா? குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கவும், அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி நீதியானதோர் உலகைப் படைப்பதற்கான சுதந்திரத்தை பெறுவதற்காக கல்வியா? மனித மனதை மதக் கோட்பாடுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகளிலிருந்து விடுவிக்கும் வழியே கல்வி என்று கூறும் பாரம்பரியத்தை - புத்தர் காலம் முதல் அம்பேத்கர் காலம் வரை நீண்டுவரும் ஓர் ஒப்பற்ற பாரம்பரியத்தை தொடர்வதற்காக கல்வியா? 

அல்லது ஒரு நிலையான அடையாளத்தை உருவாக்குவதற்கானதாக கல்வியா? ஒற்றைப் பண்பாடு, ஒற்றை வரலாற்றால் வரையறுக்கப்பட்ட பழம்பெருமை பேசும், விசுவாசமான குடிமக்களாக குழந்தைகளை மாற்றுவதற்கானதா கல்வி? 

இக்கல்வித் திட்டம் இரண்டாவது பாதையையே தேர்ந்தெடுக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட மனப்பாங்கு கொண்ட இந்தியரை உருவாக்கக் கல்வியைப் பயன்படுத்தும் ஒரு திட்டமாகும். இதற்கு மாறான – சுதந்திரச் சிந்தனையுள்ள குடிமகனை உருவாக்கும் கல்வி – தான் இன்று பேராபத்தைச் சந்திக்கிறது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/education/ten-reasons-why-ugcs-push-for-indian-knowledge-is-a-threat-to-education

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு