வலுக்கட்டாயமாக புகுத்தப்படும் ஸ்மார்ட் EB மீட்டர் திட்டத்தை எதிர்த்து ஏன் பல மாநில மக்கள் போராடுகின்றனர்?

செந்தளம்

வலுக்கட்டாயமாக புகுத்தப்படும் ஸ்மார்ட் EB மீட்டர் திட்டத்தை எதிர்த்து ஏன் பல மாநில மக்கள் போராடுகின்றனர்?

பீகார், மகாராஷ்டிரா ஸ்மார்ட் மீட்டர்கள் திட்டத்தால் எழுந்துள்ள பாதிப்புகள்

தமிழகத்தில் TANGEDCO இருப்பது போல முப்பையில் BEST(The Bombay Electric Supply & Tramways) என்ற மின்சாரம் விநியோகம் செய்யும் அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 10.8 இலட்சம் வீடுகளுக்கும், வணிக பயன்பாடுகளுக்கும் இந்த நிறுவனம் மின்சாரம் விநியோகித்து வருகிறது. தற்போது வரை 3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு பலரும் இரண்டு, மூன்று மடங்கு அதிகமான மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனையொட்டி எழுந்த போராட்டத்தின் காரணமாகவும், மகாராஷ்டிர மாநில தேர்தலையொட்டியும் தற்காலிகமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் வேலையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

 

இதேபோல், பீகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தின், ஜகதீஸ்பூர் தாலுகாவில் வசித்து வரும் நேகா குமாரி என்பவருக்கு 64 இலட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தச் சொல்லி குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறியுள்ளார். ராஞ்சியில் வலுக்கட்டாயமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் வேலையை பாஜக ஆசியுடன் ஆட்சி நடத்தும் நித்தீஷ் குமார் புகுத்தி வருகிறார்.

 குஜராத் மக்களுக்கே எதிரான கார்ப்பேரட்-குஜராத் மாடல்

முன்கூட்டியே பணம் செலுத்தி எப்படி செல்போன் சேவைகளை பெறுகிறோமோ அதுபோல முன்கூட்டியே பணம் செலுத்திய இருப்புக் கணக்கை அடிப்படையாக கொண்டே இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதிலும், அரை மணி நேரேத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுகிறதாம்; எல்லோரும் தவறாமல் வீட்டில் உறங்கிவிடும் இரவு நேரங்களுக்கு தனி விகிதத்தில்(Time of Day) கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால், தாறுமாறாக மின் கட்டணம் கணக்கிடும் நிலை உருவாகி ,  முன்கூட்டியே செலுத்திய கட்டணம் எந்நேரமும் பூஜ்ஜியமாகி மாறிவிடுகிறது. இதன் விளைவாக நேரங்கெட்ட நேரத்தில், பலமுறை தன்னிச்சையாக மின்சார இணைப்பு துண்டிக்கப்படுவதாக குஜராத்திய மக்கள் மனம் குமுறுகிறார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, குஜராத் மாடல் ஆட்சி நடக்கும், குஜராத்திய மக்களுக்கு எப்போதும் தனிக்கவனிப்பு இருக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதிலும்கூட மோடியின் கார்ப்பரேட் மாடல் என்றால் என்னவென்பதை எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கு சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மறுத்தார்கள் என்றால் 10,000 தண்டத் தொகை விதிப்போம் என்று குஜராத் மாடல் அதிகாரிகள் மிரட்டல்கள் மூலம் ஸ்மார்ட் மீட்டர் திட்த்தை புகுத்தி வருகிறார்கள்.

 

அதானியின் கொள்ளை விலையால் அதிர்ச்சியடைந்த யோகியின் உ.பி.

ஒரு ஸ்மார்ட் மீட்டரின் விலை 10,000 ரூபாய் என்றும், அதை வீடுகளில் பொருத்த வேண்டுமெனில் 25,000 ரூபாய் என்றும் அதானி குழுமம் விலை நிர்ணியித்துள்ளதாக கூறுகிறார்கள்.  உத்திரபிரதேசத்தில் ஆளும் பாசிச யோகி ஆட்சியில் கூட அம்மாநில வித்யூத் வித்ரான் நிகம் என்ற நிறுவனம் மின் விநியோக வேலைகளைச் செய்து வருகிறது.  அதானியின் மின்சாரக் கொள்ளை விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அரசு நிறுவனம், அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இன்று, ஒரு மாநிலத்தின் அரசே கார்ப்பரேட்டுகளின் கொள்ளை விலைக்கு அஞ்சி ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது. நாளை, ஒட்டுமொத்த மின்சாரத் துறையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்பட்டு விடுமானால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஸ்மார்ட் மீட்டர்களை அதானி, டாடா என்ற இரண்டு கார்ப்பரேட்கள்  மட்டுமே தயாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். கிளை நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் வாயிலாக அம்பானியும் ஒரு பக்கம் முதலீடு செய்துள்ளார். நவீனமயமாக்கல் என்ற பெயரில் மின்சாரத் துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை எதிர்த்து பல மாநிலங்களில் போராட்டமும் நடந்து வருகிறது.

பாஜகவின் புதிய மின்சார சட்டமும், கார்ப்பரேட்டுகளின் கூட்டுக் கொள்ளையும்

பாஜகவும், அதன் அடிவருடிகளும் பழைய மின் கட்டண கணக்கீடு முறைக்கும்,  புதிய ஸ்மார்ட் மீட்டர் முறைக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை என்ற தீவிர பொய்ப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பெரிய வித்தியாசமில்லாத திட்டத்திற்கு ஏன் “2.80 இலட்சம் கோடி” செலவு செய்வதற்கு மத்திய மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதைகூடவா நம் மக்கள் யோசிக்க மாட்டார்கள்? மக்கள் நலத் திட்டங்களுக்கும், சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கும் செலவு செய்ய வேண்டிய மக்களின் வரிப்பணம் நேரடியாக அதானி, டாடாக்களின் சட்டைப் பைகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே மோடியின் நோக்கமாக உள்ளது. 

2022-ல் மின்சார சட்டத்தில் இதற்காக பிரத்யேக மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்பு சர்வதேச அளவில் ஏகாபதிபத்திய நாடுகளுக்கு இடையில் மோதல் கடுமையானது. இதன் விளைவாக உலகம் முழுவதையும் பாதிக்கும் வகையில் எரிசக்தி நெருக்கடி எழுந்தது. அந்நிய நாடுகளின் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அதானி, டாடா நிறுவனங்கள் இந்த நெருக்கடியில் நேரடியாக இலாபமடைய வேண்டும் என்பதற்காகவே இந்திய எரிசக்தி பங்குச் சந்தையில்(IEX)  அதிக விலைக்கு நிலக்கரியை கொள்முதல் செய்வதற்கான அனுமதியை மோடி அரசு அப்போது வழங்கியது. அரசின் நிலக்கரி கொள்கையில் கொண்டு வந்த ஒற்றை மாற்றத்தால், ஒரு மாதத்தில் மட்டும் ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை 7 மடங்கு அதிகமாகியதாக கூறப்படுகிறது. இவற்றை பெற்று மக்களுக்கு வழங்கும் அரசுகளும் நேரடியாக கார்ப்பரேட்டுகளின் இலாப வெறியை மக்கள் மீது சுமத்தி வருகிறார்கள். சமீப காலங்களில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு முன்பாகவே மின் கட்டண விலை தாறுமாறாக உயர்வதற்கு இதுபோன்ற பங்குச்  சந்தை சூதாட்டமும் முக்கிய காரணமாக அமைந்திருப்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

மக்களின் மீது சுமத்தப்படும் கார்ப்பரேட்டுகளின் உச்சபட்ச இலாப வெறி

 

தொலை தொடர்பு துறைகளில் எப்படி கார்ப்பரேட்டுகளின் ஏகபோக கூட்டணி, உச்சபட்ச இலாபத்தை பறித்தெடுக்கும் நோக்கில், விலையேற்றம் செய்து வருகிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அதேபோல, மின்சாரத் துறையும் தனியார் கைகளுக்கு சென்றுவிடுமானால், அதிலும் உச்சபட்ச இலாபத்தை பறித்தெடுக்கும் நோக்கில், கார்பபரேட்டுகள் பன்மடங்கு விலையை உயர்த்த சிறிதும் தயங்கமாட்டர்கள் என்பதை எவரும் எளிதில் மறுத்துவிட முடியாது.

உச்சபட்ச இலாபத்தை அபகரிக்கும் கார்ப்பரேட்டுகள் மீது  நேரடியாக வரி போட்டு ஏழை, எளிய  மக்களுக்கு நலத்திட்டங்களை  செய்ய வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களே கூறி வருகின்றனர். இதையே முற்போக்கான வரிக் கொள்கை என்று அழைக்கின்றனர். அரசு வழங்கும் மின்சாரத்தில், வணிக நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் விதித்து, ஏழைகளுக்கும், குடும்ப பயன்பாடுகளுக்கான மின் கட்டணத்தை குறைத்து வழங்கும் மானிய திட்டங்கள் (cross-subsidy) சில மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன.  மின்சாரத்துறை தனியார்மயமாக்கப்பட்டு வருவதால் ஏழை, எளிய மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அத்தனை சலுகைகளும் தயவுதாட்சணியமின்றி பறிக்கப்படும். வணிக பயன்பாடிற்கான மின்சார கட்டணத்தில்கூட சிறு,குறு, நடுத்தர தொழில்களே பெரிதும் பலிகொடுக்கப் படுகின்றன. மற்றபடி, உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் கூட்டணியில் துவங்கப்படும் எந்தவொரு நிறுவனத்திற்கும் பல ஆண்டுகளுக்கு பூஜ்ஜிய மின்சார கட்டணம், அல்லது அதிக மானியம் கொடுத்து பெயரளவிற்கு மிகக் குறைந்த மின்சார கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும், இந்த ஸ்மார்ட் மீட்டர்களின் ஆயுட் காலம் 7 ஆண்டுகள் வரை மட்டும் செல்லுபடியாகும் என்று கூறுகிறார்கள். இன்றைக்கு, அரசாங்கம் மக்கள் பணத்தை வாரிக் கொடுத்து மீட்டர்களை பொருத்தி வருகிறது. இன்றைக்கே ஒரு மீட்டர் 10,000 ரூபாய் என்று சொல்லப்படும்போது 7 ஆண்டுகள் கழித்து இவற்றின் விலை பலமடங்கு அதிகரித்திருக்கும் என்பதை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

பல முதலாளித்துவ நாடுகளில்கூட மின்சாரத் துறை என்பது அரசாங்கத்தின் பொறுப்பில்தான் உள்ளது. புதிய காலனிய கட்டுப்பாடுகளும், நிதி மூலதன ஆதிக்கமும் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகமாகியிருக்கும் பின்தங்கிய நாடுகளைத் தவிர எங்குமே மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கல் கொண்டு வரப்படவில்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், மோடி அரசாங்கம்தான், அம்பானி, அதானி, டாடாக்களின் இலாபம் தப்பித்தவறிக் கூட குறைந்து விடக் கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக செயல்பட்டு நிதி மூலதன ஆதிக்கத்தையும், புதிய காலனிய ஆதிக்கத்தையும் மென்மேலும் இறுக்கி வருகிறது.

இன்றைய  அரசு என்பது கார்ப்பரேட்டுகளுக்கானதே!

இந்தியாவில் மட்டுமல்லாது, பிற புதிய காலனிய நாடுகளிலும்கூட இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்துவதற்கு அமெரிக்க சார்பு நாடான அரபு அமீரகத்தில் அமைந்துள்ள Esyasoft நிறுவனத்துடன் சென்ற ஆண்டே Adani Energy Solutions மூலமாக 276 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. Schneider Electric SE and Electricite de France SA போன்ற பிரான்ஸ் நாட்டு கார்பரேட்டுகளும்கூட முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக கூறுகின்றனர். நவீனமயமாக்கல் என்ற பெயரில் அரசாங்கமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான ஒரு திட்டத்தை போட்டு மக்கள் பணத்தை மொத்தமாக கொடுத்து அதானி, டாடா, அம்பானி போன்ற உள்நாட்டு கார்ப்பரேட்டுகளிடம் ஸ்மார்ட் மீட்டர்கள், மின்சாரங்களை அதிக விலைக்கு வாங்குகிறது என்பது ஒருபக்க உண்மையாக இருந்தாலும், இந்த பொருட்களின் உற்பத்திக்காக அரசாங்கமே டாலரில் கடன்களையும், முதலீடுகளையும் ஏற்படுத்தி தருவது, இதுவரை அந்தந்த மாநில அரசுகுள் உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பு வசதிகளை இலவசமாக தாரை வார்ப்பதோடு, போட்டியில்லா சந்தைகளையும் பரிசாக தருவதற்கு துணிந்துள்ளனர் என்பது மற்றொரு பக்க உண்மையாக இருக்கிறது. 

நாம் செய்ய வேண்டியது என்ன?

பெரும்பான்மை இந்திய மக்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் வாடி வதங்கி வரும் நிலையில், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கார்ப்பரேட்டுகளின் கொள்ளை இலாபத்தை உத்திரவாதம் செய்வதற்காக பாசிச அரசுகள் எந்தளவிற்கு திட்டமிட்டு செயல்படுகிறது என்பதை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.  இந்த அரசுகள், ஏன் ஒரு படித்த பட்டதாரிகள் தொழில் துவங்க முன்வந்தால் எந்தவொரு திட்டமிட்ட கடன் வசதிகளையும், இன்னப்பிற வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவதில்லை என்ற கேள்வியை ஓங்கி எழுப்ப வேண்டும். மின் கட்டண கணக்கீட்டாளர் பதவி உட்பட TANGEDCOவில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2019-ம் ஆண்டே வெளியிடப்பட்டது. ஆனால், மோடி கொண்டு வந்த மின்சார சட்டத் திருத்தத்தை திராவிட மாடல் ஸ்டாலின் அரசு வாய்மூடி ஏற்றுக்கொண்டது; ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக இந்த அறிவிக்கையை எதற்காக திரும்பப் பெற்றுக் கொண்டது என்று ஆராய்ந்தால் குஜராத் மாடலுக்கும்-திராவிட மாடலுக்கும் இடையிலான ஒற்றுமை புலப்படும். மெதுமெதுவாக கொல்லும் விஷம் போல, மின் கட்டணம் மெதுமெதுவாக ஏறிவருவதற்கு பின்னால் எந்தெந்த கார்ப்பரேட்டுகளின் நலன் ஒளிந்திருக்கிறது என்பதை அடையாளங் காண வேண்டும். இன்றைய காலத்தில் மின்சாரம் என்பது அடிப்படை அத்தியாவசிய வசதி என்று கோருவதோடு நில்லாமல், இவையெல்லாம்  இந்த கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதும் நம் அடிப்படை கடமையாகிறது.

- செந்தளம்