தேர்தல் பத்திர திட்டம் - முதலாளித்துவ ஊழலின் சட்ட வடிவம்

சமரன் சிறப்புக் கட்டுரை

தேர்தல் பத்திர திட்டம்  - முதலாளித்துவ ஊழலின் சட்ட வடிவம்

பாசிச பாஜக ஆட்சியானது பிப்ரவரி 1 2017 அன்று 2017 -18 பட்ஜெட் தாக்கலின் போது தேர்தல் பத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது. பாஜகவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இத்திட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய போது "அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்காக பெறும் நிதியில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் பொருட்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று வாய்ச்சவடால் அடித்தார். 

அந்நிய நிதி உதவிச் சட்டம் 1976, நிதிச் சட்டம் 2017, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரிச் சட்டம் 1961 மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்து பண மசோதா எனும் பெயரில் பாஜக அரசு தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்து சட்டமாக்கியது. இந்த திருத்தங்களை எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களவையில் கொண்டு வர முடியாது என்ற காரணத்தால்தான் மசோதா என்ற பெயரில் மக்களவையில் மட்டும் அமல்படுத்தி திட்டத்தை சட்டமாக்கியது பாஜக அரசு. வழக்கம்போல பாசிச முறையில் ஓர் பாசிச திட்டத்தை அமல்படுத்தியது மோடி அரசு.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசிக்காமல் இத்திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு ரிசர்வ் வங்கியும் தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தன. ரிசர்வ வங்கியும் தேர்தல் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்த போது, "அரசு முடிவு செய்துவிட்டது; ரிசர்வ் வங்கியிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை" என்று பாசிச முறையில் பதில் அளித்தது மோடி அரசு. ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் (Urjit Patel) "தேர்தல் பத்திரம் வழங்குவதை ரிசர்வ் வங்கி மூலமாக செயல் படுத்த வேண்டும்" என்று அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். ரிசர்வ் வங்கியின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது; அச்சுக்கான செலவினம் குறையும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அக்கடிதத்திற்கு மோடி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. அத்திட்டத்தை தனது ஏவல் வங்கியான பாரத ஸ்டேட் வங்கியிடம் (எஸ்பிஐ) ஒப்படைத்தது.

இத்திட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR - Association for Democratic reforms)), பொதுநலன் (Common cause), குடிமக்கள் உரிமை அமைப்பு, சிபிஎம் கட்சி மற்றும் தகவல் உரிமை செயற்பாட்டாளர் (RTI Activist) லோகேஷ் பத்ரா போன்றோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 2024 அன்று "இத்திட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானது" என்று கூறி இத்திட்டம் மற்றும் அதற்கான சட்ட திருத்தங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்தது. மேலும் ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை (நிதி அளித்தவர், நிதி பெற்றவர்) எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் மார்ச்-18 அன்று ஆணை பிறப்பித்தது. புதிய சட்ட திருத்தங்களின்படி விவரங்களை வெளியிட மறுத்த பாரத் ஸ்டேட் வங்கி, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு 4 மாதம் அவகாசம் கேட்டது. அதாவது தேர்தலுக்குப் பிறகு தருவதாக பாஜக தந்த நெருக்கடியின் காரணமாக 4 மாத காலம் அவகாசம் கேட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகு சில விவரங்களை ஒப்படைத்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த விவரங்கள் தேர்தல் பத்திரங்களில் நடந்துள்ள ஊழல்கள், மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சிபிஐ, சிபிஎம் கட்சிகளைப் போன்று எம்எல் அமைப்புகளும் அரசியல் கட்சிகளை அவற்றின் வர்க்கப் பின்புலத்திலிருந்து மதிப்பிடாமல் திருத்தல்வாதத்தில் மூழ்கிப் போய் காங்கிரசு-திமுக கட்சிகளை ஆதரித்து சீரழிந்து வரும் சூழலில் இத்திட்டமும், திட்டத்தின் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அரசியல் கட்சிகள் வெறுமனே கட்சிகள் அல்ல; அவை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்ற லெனினின் புகழ்மிக்க கோட்பாட்டை சரியென்று நிரூபித்துள்ளன.

எதற்காக இத்திட்டம்?

பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும் அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது. இவ்விதம் கார்ப்பரேட் ஏகபோகத்தை நிலை நிறுத்துவதற்கு அரசியல் ஏகபோகம் தேவைப்படுகிறது. அரசியல் ஏகபோகத்திற்கு அரசு மற்றும் அரசியல் கட்சிகளை கார்ப்பரேட்டுகள் தனது பிடியில் வைத்து ஆதிக்கம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம் தந்து தமக்குத் தேவையான ஒப்பந்தங்களை கார்ப்பரேட்டுகள் பெறுகின்றன. இந்த லஞ்சத்தை முதலாளித்துவ ஊழல் என்று மார்க்சியம் வரையறுக்கிறது. இந்த முதலாளித்துவ ஊழலை சட்டமாக்குவதற்காகவே தேர்தல் பத்திர திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

காங்கிரசு ஆட்சியில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலம் முதலாளித்துவ ஊழல் ஏற்கெனவே சட்டமாக்கப்பட்டிருந்தது. அச்சட்டம் ஊழல் குறித்த விவரங்களை தேவைப்படின் வெளியிடுவதற்கான திருத்தங்களைக் கொண்டிருந்தது. ஆனால் பாஜக ஆட்சி ஊழல் குறித்த விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று திருத்தியது. இரண்டு சட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடு இது மட்டுமே ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் அரசின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஏகபோக ஒட்டுண்ணி முதலாளித்துவத்தை - கார்ப்பரேட் ஏகபோக அதிகாரத்தை- அதாவது பாசிசத்தை அரசு ஊட்டி வளர்க்கிறது. (ஒட்டுண்ணி முதலாளித்துவம் என்பது அரசின் மீது ஆதிக்கம் செலுத்தும் பன்னாட்டு ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு தரகுமுதலாளித்துவத்தைக் குறிக்கிறது). உலக வர்த்தக கழகம் வலியுறுத்தும் "வர்த்தகத்தை எளிதாக்கும் கொள்கைக்கு (Ease of doing Business)" ஏற்ப பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் சர்வாதிகாரத்தில் ஏகபோகத் தன்மையை உருவாக்க இத்திட்டம் சேவை செய்கிறது.

இத்திட்டம் அரசியல் கட்சிகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் வங்கிகளுக்கு இடையிலான கண்ணில் தெரியா சிலந்தி வலைப் பின்னலின் சிறு பகுதியை அம்பலப்படுத்தியுள்ளது. பாராளுமன்றம், சட்டமன்றத்தின் போலி ஜனநாயகத் தன்மையை, அதன் நிர்வாணத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. நாட்டின் அரசியல் - பொருளாதாரத்தை தீர்மானிப்பது பாராளுமன்றமோ, சட்டமன்றமோ அல்ல! கார்ப்பரேட்டுகளே! என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கார்ப்பரேட்டுகள் தமது கருப்பு பணத்தை சட்டபூர்வமாக வெள்ளையாக்குவதற்கு இது வழி ஏற்படுத்தி தருகிறது. அதாவது ஊழலை சட்டபூர்வமாக்குவதன் மூலமும், ஊழல்வாதிகளை தமது கட்சியில் இணைப்பதன் மூலமும் "ஊழலை ஒழிக்கும்" புதிய வழியை பாஜக உருவாக்கியுள்ளது.

திட்டமும் சட்டத் திருத்தங்களும்

பாஜக ஆட்சி இத்திட்டம் கொண்டு வருவதற்கு முன்பு அரசியல் கட்சிகளுக்கு பெரும் முதலாளிகள் நிதி தரும் விவரங்களை அக்கட்சிகள் ஆவணமாக வைத்திருப்பதற்கும், தேவைப்படின் வெளியிடுவதற்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951) 29 சி பிரிவு உத்திரவாதப்படுத்தியது. இந்த 29 சி பிரிவை திருத்தி அரசியல் கட்சிகள் தமக்கு நிதி தந்த தனிநபர்/முதலாளிகளின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று பாஜக ஆட்சி மாற்றிவிட்டது. அதாவது சட்டவிரோதத்தையே சட்டமாக்கி விட்டது. இதன்படி நிதி தருபவரும், நிதி பெறுபவரும் பரஸ்பரம் எவ்வித நிதி பரிமாற்ற விவரங்களையும் வைத்திருக்க தேவையில்லை. முந்தைய சட்டத்தில் பணமாக தரும் முறை இருந்தது; இந்த புதிய சட்ட திட்டத்தில் தேர்தல் பத்திரமாக தரும் முறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல்மயமாக்கம் தேர்தல் நிதி ஆதாரங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் என்று மோடி கும்பல் வழக்கம் போல் வாய்ச்சவடால் அடித்தது. உண்மையில் ஏற்கனவே இருந்த அரைகுறை வெளிப்படைத் தன்மையையும் இந்த புதியகாலனிய பாசிசச் சட்டம் ஒழித்துக் கட்டிவிட்டது என்பதே உண்மை. 

உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்த பின்னரும் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட மறுத்தது மோடி கும்பல். காவிமயம், கார்ப்பரேட் மயமாகிவிட்ட பாரத ஸ்டேட் வங்கி மோடி கும்பலின் ஊழல் கருவியாக செயல்படுகிறது. வேறு வழியில்லை என்றான பிறகு சில விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு எஸ்பிஐ தந்தது. அதிலும் முழு விவரங்களை வெளியிடவில்லை. வெறும் 12,000 கோடி மதிப்பிலான பத்திர விவரங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இது மிகவும் சொற்பமே. இதில் சுமார் 50% பத்திரங்களை பாஜகவும் மீதி 50% பத்திரங்களை பிற கட்சிகளும் பெற்றுள்ளன. ஆளும் கட்சியிடம் தேவையானதை பெறவும், எதிர்க்கட்சிகள் அது குறித்து பாராளுமன்றத்தில் பேசாமல் இருக்கவும் பத்திரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. 

முந்தைய சட்டத்தில் நிதி தரப்படும் விவரங்கள் வெளியிடப்படுவதற்கு உத்திரவாதம் இருந்ததாலேயே அதை நாம் ஆதரிக்க முடியாது. அல்லது காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் பழைய சட்டம் கொண்டு வருவதே மாற்று என்பதிலும் நமக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரசு ஆட்சி கொண்டுவந்த முந்தைய சட்டமோ அல்லது பாஜக ஆட்சி கொண்டு வந்த புதிய சட்டமோ இரண்டுமே கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான உறவை உறுதிப்படுத்துபவையே. முந்தைய சட்டம் அமலில் இருந்த காலத்திலும்கூட தேர்தல் நிதியானது பெரும்பாலும் சட்டவிரோதமாகவே தரப்பட்டது. அது புதிய சட்டத்திலும் தொடர்கிறது. அம்பானி, அதானிகளின் தேர்தல் பத்திரங்கள் அல்லது தேர்தல் பத்திர விவரங்கள் பாரத வங்கி தந்த விவரங்களில் இல்லை என்பதே இதற்கான சாட்சியமாகும். மட்டுமின்றி தங்களால் நியமிக்கப்பட்ட அடிமைகளுக்கு, தங்கள் வீட்டு நாய்களுக்கு பிஸ்கட் போடுவதற்கு தேர்தல் பத்திரம் மட்டுமே வழியல்ல. நேரடி பரிமாற்றம், தேர்தல் அறக்கட்டளை மற்றும் சுவிஸ் வங்கி உள்ளிட்ட பலவாறான சட்டவிரோத வழிகள் உண்டு. அல்லது எஸ்பிஐ வெளியிடாத விபரங்களில் அது பற்றி தகவல்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவே.

சட்டத் திருத்தங்கள்

1. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் 29 சி பிரிவு "அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் நிதி பெற்றால் அவற்றின் தகவல்களை வெளியிட வேண்டும்; அவ்வாறு வெளியிடுவது வாக்காளர்களின் தகவல் பெறும் உரிமையை உத்திரவாதப்படுத்தும்" என்று கூறுகிறது. முன்பு சொன்னவாறு இப்பிரிவு திருத்தப்பட்டு 1) குறைந்தபட்ச தொகை 20,000 ரூபாய் என்பதிலிருந்து 2,000 ரூபாய் ஆக குறைக்கப்பட்டது 2) நிதி தருபவரும், பெறுபவரும் எவ்வித தகவல்களையும் வெளியிடத் தேவையில்லை என்று மாற்றப்பட்டது.

2. தேர்தல் பத்திரம் மூலமாக பெறப்படும் நிதியுதவி பற்றிய தகல்களை அரசியல் கட்சிகள் வெளியிட தேவையில்லை என்று நிதிச்சட்டம் 2017-ம் திருத்தப்பட்டது.

3. கம்பெனிகள் சட்டம் 2013-ன் 182-வது பிரிவு கார்ப்பரேட்டுகள் தரும் நிதியுதவிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அப்பிரிவு திருத்தப்பட்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் இலாப சராசரியில் 7.5% நிதியாக தர வேண்டும் என்பது திருத்தப்பட்டு இலாபம் ஈட்டாமல் நட்டம் அடைந்த பெரு நிறுவனங்கள் கூட அரசியல் கட்சிகளுக்கு பத்திரம் மூலம் நிதியுதவி அளித்து தங்களுக்குத் தேவையான ஒப்பந்தங்களைப் பெற முடியும் என்பதாக மாற்றப்பட்டது. இதன்முலம் இலாபம் ஈட்டும் நிறுவனம்கூட நட்டக் கணக்கு காண்பித்து மேலும் ஒப்பந்தங்களைப் பெற முடியும். 

4. அந்நிய நிதியுதவி கட்டுப்பாட்டுச் சட்டம் 1976 (Foreign Contribution Regulation Act) திருத்தப்பட்டு பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் வாயிலாக நிதியுதவி (இலஞ்சம்) செய்து தேவையான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிளை நிறுவனம் வைத்துள்ள எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் அரசின் மீது ஆதிக்கம் செலுத்த தேர்தல் பத்திர திட்டம் வழிவகை செய்கிறது. உலக வர்த்தக கழகத்தின் "வர்த்தகம்/தொழில் நடத்துவதற்கு உகந்த சந்தையை உருவாக்கும் கொள்கைகளில்" (Ease of doing business) இது முக்கியமான அம்சமாகும். அதாவது பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தக ஏகபோகத்தை எளிதாக உத்திரவாதப்படுத்தவும், அரசின் மீதான அவற்றின் ஏகபோகத்தை எளிதாக்கவும் இத்திட்டம் சேவை செய்கிறது. பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அழுகிப்போன ஒட்டுண்ணி முதலாளித்துவத்தை இது ஊட்டி வளர்க்கிறது.

இவ்வாறு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோக ஒட்டுண்ணி முதலாளித்துவத்தை நிலைநிறுத்தும் இத்திட்டம் இயல்பாகவே சிறு, குறு நடுத்தர முதலாளிகளையும், தேசிய முதலாளிகளையும், அதிகாரத்தில் இல்லாத மாநில அளவிலான தரகு முதலாளிகளையும் சந்தையிலிருந்து அப்புறப்படுத்துகிறது. அதன் மூலம் மையப்படுத்தப்பட்ட ஏகபோக சந்தை உருவாக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

5. நிதிச்சட்டம் 2017-இல் இருந்த கார்ப்பரேட்டுகள் தரும் நிதியுதவிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் அச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது. மேலும் நிதி விவரங்களை வெளியிட தேவையில்லை எனவும் பாஜக ஆட்சியால் மாற்றப்பட்டது.

6. வருமான வரிச்சட்டம் 1961-ல் பிரிவு 13 A(b) ரூ.20,000க்கு மேலாக தரப்படும்/பெறப்படும் நிதிக்கு ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இப்பிரிவும் திருத்தப்பட்டு ஆவணங்கள் வைத்திருக்க தேவையில்லை என்பதாக மோடி கும்பல் மாற்றியது. இது மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும் அதாவது பத்திரம் வழங்கும் தனிநபர் (அ) பெரு நிறுவனங்கள் 80aa மற்றும் 80GGB பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும் எனவும் திருத்தப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மட்டுமின்றி அதற்கு வரிவிலக்கும் அளிக்கிறது மோடி அரசு. 

7. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29 A-ன் கீழ் பதிவு செய்து, கடந்த சட்டமன்ற (அ) பாராளுமன்ற தேர்தலில் 1% க்கும் கீழ் வாக்குகள் பெறாத (அதாவது 1% க்கும் மேல் வாக்குகள் வாங்கிய) கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரம் பெற முடியும் எனவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 

  • இத்திட்டத்தின் கீழ் தேர்தல் பத்திரம் கடனுறுதிச் சீட்டு (Promissary note) மற்றும் தாங்கு பத்திரமாக (Bearer Bond) வழங்கப்படும். அதாவது அப்பத்திரத்தில் பத்திரம் தருபவர், பெறுபவர் விவரங்கள் இடம் பெறாது.
  • ஜனவரி 2, 2018-ல் அரசுக் குறிப்பாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் எந்தவொரு இந்தியக் குடிமகனும், இந்திய நிறுவனமும், இந்தியாவில் செயல்படும் எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்புகளில் வழங்கலாம். அவற்றை அரசியல் கட்சிகள் 15 நாட்களுக்குள் காசாக்க வேண்டும். 
  • எவரும் எத்தனை பத்திரம் வேண்டுமானானலும் எத்தனை கோடி வேண்டுமானாலும் வழங்கலாம். 15 நாட்களுக்குள் காசாக்கவில்லையெனில் அந்தப் பணம் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியில் செலுத்தப்படும். 

போன்றவை இத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களாகும்.

கார்ப்பரேட்டுகளின் ஏவல்களாக செயல்படும் பாராளுமன்ற கட்சிகள்!

இந்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது அருண் ஜெட்லி "தேர்தல் அரசியலில் ஏராளமான கருப்பு பணம் புழங்குகிறது; ஆகவே தேர்தல் அரசியலில் வெள்ளைப் பணம் புழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதை மின்னணு வங்கி செயல்முறை வாயிலாகவே சாதிக்க முடியும்" என்றார். அதாவது கறுப்பு பணத்தை தனது அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் வெள்ளையாக்கித் தரும் என்றார்.

பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் கார்ப்பரேட்டுகளுக்கு வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி தந்து தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. அல்லது தேர்தல் பத்திரங்களைப் பெற்ற பின்பு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரம் தர மறுத்த நிறுவனங்களை அமலாக்கத்துறை, மிஜி, சி.பி.ஜ மூலம் "ரெய்டு பயம்" காட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்றுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் பாஜக அரசு தேர்தல் பத்திர முதலாளித்துவம் (அ) ஒட்டுண்ணி முதலாளித்துவம், தேர்தல் பத்திரம் தராத முதலாளித்துவம் அல்லது சிறு, குறு, நடுத்தர, மாநில தரகு முதலாளித்துவம் என முதலாளித்துவத்தை இரண்டாகப் பிரித்துவிட்டது. தேர்தல் பத்திரம் தராத முதலாளிகளை சந்தையில் இருந்து அகற்றி அழித்து வருகிறது. இந்தியச் சந்தை தேர்தல் பத்திர முதலாளித்துவத்துக்கேற்ப மாற்றப்பட்டு வருகிறது. நாட்டின் தேவையிலிருந்து சந்தை மாற்றப்படவில்லை. தேர்தல் பத்திர கார்ப்பரேட்டுகளும் அம்பானி-அதானிகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர்.

2019 ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை பெறப்பட்ட பத்திரங்கள் குறித்து எஸ்பிஐ வெளியிட்ட விவரங்களின்படி, 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பாஜக மட்டும் சுமார் 6,520 கோடியை தேர்தல் பத்திரம் வாயிலாக இலஞ்சமாக பெற்றுள்ளது. இது மொத்த பத்திரங்களில் 50% ஆகும். காங்கிரசு, திரிணாமூல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதமுள்ள 50% பத்திரங்களை பெற்றுள்ளன. அதாவது ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் ஊழலை சரிசமமாக பகிர்ந்துள்ளன. ஆளும் கட்சி அதிகபட்சம் இலஞ்சம் பெற்றிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. சுரங்க முதலாளிகள், நில முதலாளிகள், நிதி நிறுவனங்கள், மருந்து கம்பெனிகள், லாட்டரிச் சீட்டு முதலாளிகள், பொறியியல் மற்றும் கட்டுமானத் துறை முதலாளிகள் என அனைவரும் ஆளும் வர்க்க கட்சிகளுக்கு பத்திரங்களை வழங்கியுள்ளனர். 

மேகா எஞ்சினியரிங் நிறுவனம் 584 கோடி, குவிக் (QWIK) சப்ளை 375 கோடி, வேதாந்தா 226.65 கோடி, பார்தி ஏர்டெல் 197.4 கோடி, மதன்லால் லிமிடட் 175.5 கோடி, கெவன்டர் ஃபுட் பார்க் 144.5 கோடி, டிஎல்எப் கமர்சியல் டெவலப்பர்ஸ் 130 கோடி, பிர்லா கார்பன் 105 கோடி, ஃபியூச்சர் கேமிங் 100 கோடி மற்றும் ஹல்டியா எனர்ஜி 81 கோடி என சுமார் 6,000 கோடிக்கும் அதிகமான இலஞ்சப் பணத்தை பாஜக மட்டுமே பத்திரங்களாகப் பெற்றுள்ளது.

திரிணாமூல் 1609 கோடி, காங்கரசு 1421 கோடி, பி.ஆர்.எஸ்(BRS) 1214 கோடி, பி.ஜெ.டி(BJD) 775 கோடி, திமுக 639 கோடி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு 337 கோடி, தெலுங்கு தேசம் கட்சி  218 கோடி, சிவசேனா 159 கோடி மற்றும் ஆர்.ஜே.டி(RJD) 72 கோடி மதிப்பிலான பத்திரங்களை இலஞ்சமாகப் பெற்றுள்ளன. 

திரிணாமூல் கட்சி ஃபியூச்சர் கேமிங் (மார்ட்டினின் லாட்டரி நிறுவனம்), ஹல்டியா எனர்ஜி லிமிடெட் மற்றும் தரிவால் (Dhariwal) உள்கட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து முறையே 542 கோடி, 281 கோடி, 90 கோடி மதிப்பிலான பத்திரங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரசு கட்சி வெஸ்டர்ன் உபி பவர் டிரான்ஸ்மிசன் (Western UP Power Transmission), வேதாந்தா மற்றும் எம் கே ஜி குரூப் (MKG Group) நிறுவனங்களிடமிருந்து முறையே 11கோடி, 104 கோடி, 91.6 கோடிகளை பத்திரங்களாகப் பெற்றுள்ளது. 

பிஆர்எஸ் கட்சி மேகா என்ஜினியரிங் (Megha Eng), யசோதா மருத்துவமனை மற்றும் சென்னை கிரீன்வுட்ஸ் நிறுவனத்திடமிருந்து முறையே 195 கோடி, 94 கோடி மற்றும் 50 கோடிகளைப் பெற்றுள்ளது. 

பிஜேடி (BJD - பிஜூ ஜனதா தளம்) கட்சியானது எஸ்ஸல் மைனிங் (Essel Mining), ஜின்டால் ஸ்டீல் (Jindal Steel) மற்றும் உட்கல் அலுமினியா (Utkal Alumnia) நிறுவனத்திடமிருந்து முறையே 174.5 கோடி, 100கோடி, 70 கோடியைப் பெற்றுள்ளது. 

திமுக ஃபியூச்சர் கேமிங் (Future gaming) மற்றும் மேகா என்ஜினியரிங் நிறுவனங்களிடமிருந்து முறையே 503 கோடி, 85 கோடியை இலஞ்சமாகப் பெற்றுள்ளது.

ஃபியூச்சர் கேமிங், மேகா என்ஜினியரிங், எம்கேஜி குரூப், குவிக் சப்ளை செயின் (Qwik supply chain), ஹல்டியா எனர்ஜி (Haldia Energy), வேதாந்தா (Vedanta - தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்), எஸ்ஸல் மைனிங் (Essel mining), பார்தி குரூப் (Bharti Airtel Group) மற்றும் ஜின்டால் ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள்தாம் தேர்தல் பத்திரங்கள் வழங்கிய நிறுவனங்களில் முதல் 9 இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளன.

பத்திரங்களைப் பெற்ற கட்சிகளில் பாஜக முதலிடத்திலும், திரிணாமூல், காங்கிரசு, பிஆர்எஸ், பிஜேடி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரசு, தெலுங்கு தேசம் கட்சி, சிவசேனா, ஆர் ஜே டி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

சதவிகித அடிப்படையில் மொத்த பத்திரங்களில் (வெளியிடப்பட்ட பத்திர விவரங்களில்) பாஜக 47.46%, திரிணாமூல் 12.6%, காங்கிரசு 11.6%, பி ஆர் எஸ் 9.51%, பிஜேடி 6.07%, திமுக 5%, சிவசேனா 1.24%, ஆர்ஜேடி 0.57% என்ற அளவில் பத்திரங்களை இலஞ்சமாகப் பெற்றுள்ளன.

பாஜக, காங்கிரசு, திரிணாமூல், பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரம் பெற்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடமோ, தமது வலைதளங்களிலோ வெளியிடவில்லை. பிற கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பத்திர விவரங்களை வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிட்டதாலேயே அவை ஜனநாயகக் கட்சிகள் எனும் வாதம் முன்வைக்கப்படுவது பெரும் மோசடியாகும். வெளிப்படையான ஊழல், வெளிப்படைத்தன்மை இல்லாத ஊழல் இரண்டிற்குமான வேறுபாட்டை சிலாகிப்பது மோசடி அல்லாமல் வேறென்ன? பாஜகவுககு மாற்றாக முன் நிறுத்தப்படும் காங்கிரசு கட்சியும் தனது பத்திர விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி நேரடியாக பத்திரம் வழங்காவிட்டாலும் அதானி நிறுவனங்களுடன் தொடர்புடைய மூன்று நிறுவனங்கள் பாஜகவிற்கு பத்திரம் வழங்கியுள்ளன. 2019 முதல் 2023 வரை சுமார் ரூ.55.4 கோடிக்கு அவை தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளன. இதில் ரூ.42 கோடி பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் முதல் நிறுவனம் வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனமாகும். இதில் அதானியின் 65.1% பங்குகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் கௌதம் அதானியும், நிர்வாக இயக்குநராக அவரது மகன் ராஜேஷ் அதானியும் இருக்கிறார்கள். இந்நிறுவனம் ரூ. 13 கோடி மதிப்பிலான பத்திரங்களை வழங்கியுள்ளது. 2வது நிறுவனமான வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனம் 27 கோடிக்கு பத்திரங்களை வழங்கியுள்ளது. மூன்றாவது நிறுவனமான வெல்ஸ்பன் ஸ்விங் விமிடெட் நிறுவனம் மொத்தம் 15 கோடி மதிப்பிலான பத்திரத்தை பாஜகவிற்கு வழங்கியுள்ளது. எனினும், இந்த தொகை மிகவும் சொற்பமான தொகையே ஆகும். வேறு சட்ட விரோத வழிகளில் அதானி - அம்பானியின் நிறுவனங்கள் பாஜகவிற்கு நிதி தந்திருக்க வேண்டும். அல்லது வெளியிடப்படாத விவரங்களில் தகவல் உள்ளதா? என தெரியவில்லை,

தமது மொத்த தேர்தல் நிதி திரட்டலில் பாஜக 50% மட்டுமே தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது. காங்கிரசு 55-60% வரை தான் பத்திரம் வாயிலாக பெற்றுள்ளது. பல கட்சிகள் தேர்தல் பத்திரம் பெறவேயில்லை. ஆக பத்திரம் மூலம் பெறுவது என்பது ஒரு வழி மட்டுமே. ஏராளமான பிற வழிமுறைகள் மூலம் எல்லாக் கட்சிகளும் முதலாளிகளிடம் இருந்து தேர்தல் நிதி பெற்று வருகின்றன என்பதே உண்மை.

அரசின் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் ஆதிக்கம் செலுத்த மூலதனத்திற்கு தேர்தல் பத்திரம் என்பது ஒரு வழி மட்டுமே; ஆனால் அது மட்டுமே வழி அன்று. ஏராளமான வெவ்வேறு முகமூடிகளில் மூலதனம் அரசைக் கட்டுப்படுத்தும். இல்லாவிடில் மூலதனத்தால் இயங்க முடியாது. அரசு என்பது மூலதனத்தின் வேட்டை நாய்.

அரசைக் கட்டுப்படுத்தும் மருத்துவத்துறை மூலதனம்

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மலேரியா, கோவிட் மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படும் பல உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவ தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் தமது கருப்பு பணத்தை பாஜகவிற்கு வாரி வழங்கி "தரமான நிறுவனங்களாக" மாறிவிட்டன. பாஜக அரசு அவற்றிற்கு போலியான சான்றிதழ் கொடுத்து தனது வயிற்றை நிரப்பி மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.

23 மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் பாஜக உட்பட பல அரசியல் கட்சிகளுக்கு சுமார் 762 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளன.

1) டோரன்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் (Torrent Pharmaceuticals)

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டும் இயங்கும் இந்நிறுவனம் 2018 மற்றும் 2023 க்கு இடையில் தயாரித்த மூன்று மருத்துகளின் மருத்துவ தரப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன. 

மாரடைப்பை தடுக்கும் Deplett A (டெப்லெட் ஏ) 150மிகி மாத்திரை, இதய அழுத்தத்தை குறைக்கும் Nicoran (நிகோரன்) IVL மாத்திரை மற்றும் வயிற்றுக் போக்கிற்கு தரப்படும் Loperamide மாத்திரைகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்தன. அதையடுத்து 61 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அந்நிறுவனம் பாஜகவிற்கு வழங்கியுள்ளது. மேலும் காங்கிரசு கட்சிக்கு 5 கோடியும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா எனும் கட்சிக்கு 7 கோடியும் வழங்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளும் பொருட்டும், எதிர்கட்சிகள் அது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பாமல் இருக்கும் பொருட்டும் தேர்தல் பத்திரம் இவ்வாறு பகிர்ந்து தரப்படுகின்றன. 

2. சிப்லா லிமிடெட் (Cipla Ltd)

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் 2018-2023 க்கு இடையில் ஆர்சி காஃப் சிரப் (Cough Syrup), லிப்வாஸ், ஒன்டென்செட்ரான் மற்றும் சிப்ரெமி ஊசி (கோவிட் தடுப்பு மருந்து) போன்றவை தரப் பரிசோதனையில் 7 முறை தோல்வியடைந்தன. லிப்வாஸ் கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஒன்டென்செட்ரான் (Ondansetron) வாந்தி வராமல் தடுக்கும் மருந்தாகும். இதனையடுத்து அந்நிறுவனம் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பாஜவிற்கும், 2.2 கோடி மதிப்பிலான பத்திரங்களை காங்கிரசுக்கும் வழங்கி தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டது.

3. சன் பார்மா (Sun Pharma)

2019 - 2023 வரை இந்நிறுவனம் தயாரித்த மருத்துகள் 6 முறை தரப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தன. அதில் கார்டிவாஸ் (இரத்த அழுத்தம், இதய செயலின்மை, மாரடைப்பிற்கு தரப்படும் மாத்திரை) லாடோப்ரோஸ்ட் கண் மருத்து மற்றும் ஃப்ளெக்சுரா-டி ஆகியன அடங்கும்.

இந்நிறுவனம் பாஜகாவிற்கு மொத்தம் 31.5 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை 2019 ஏப்ரல் 15, 2019 மே 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் வழங்கியுள்ளது.

4. ஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட் (Zydus Healthcare Ltd)

2023 ம் ஆண்டில் இந்த நிறுவனம் தயாரித்த ரெம்டெசிவிர் மருத்துகளின் ஒரு தொகுதியில் (கோவிட் தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து) தரம் இல்லை என்று பீகாரின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு கூறியது. 2022 அக்டோபர் 10 மற்றும் 2023 ஜூலை 10 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நிறுவனம் பாஜக, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு முறையே 18 கோடி, 8 கோடி, 5 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியுள்ளது.

5. ஹெட்ரோ ட்ரக்ஸ் மற்றும் லேப்ஸ் லிமிடெட் (Hetro drugs and labs Ltd)

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தயாரித்த மருத்துகள் 7 பரிசோதனைகளில் தோல்வியடைந்தன. அதில் ரெம்டெசிவிர் மற்றும் மெட்பார்மின் (சர்க்கரை நோய்க்கான மருந்து) ஆகியவை அடங்கும். 2022 ஏப்ரல் 7 மற்றும் 2023 ஜூலை 11 ஆகிய தேதிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை தெலுங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கு ஹைட்ரோ ட்ரக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஹைட்ரோ லேப்ஸ் நிறுவனம் 2022 ஏப்ரல் 7 மற்றும் 2023 அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பாஜகவிற்கும் வழங்கியுள்ளது. 

6. இன்டாஸ் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் (Intas Pharmaceuticals Ltd)

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தயாரித்த எனலாபிரில் (Enalapril) மாத்திரை (மாரடைப்பு, இரத்த அழுத்தத்திற்கானது) ஜூலை 2020 ல் பரிசோதனையில் தோல்வியடைந்தது. 2022 அக்டோபர் 10 ம் தேதி 20 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை இந்நிறுவனம் பாஜகவிற்கு வழங்கியுள்ளது. 

7. ஐபிசிஏ லெபோரட்ரிஸ் (IPCA Laboratories) 

மும்பையில் செயல்படும் இந்த நிறுவனம் தயாரித்த லாரியாகோ (Lariago) மாத்திரை (மலேரியா சிகிச்சைக்கானது) 2018 அக்டோபரில் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தது. 2022 நவம்பர் 10 முதல் 2023 அக்டோபர் 5 ம் தேதி வரை இந்நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பாஜகவிற்கும், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கும் வழங்கியுள்ளது. 

8. கிளென் மார்க் ஃபார்மா லிமிடெட் (Glen mark Pharma Ltd)

மும்பையில் இயங்கும் இந்நிறுவனம் 2022 மற்றும் 2023 க்கு இடையில் தயாரித்த மருந்துகள் 6 பரிசோதனைகளில் தோல்வியடைந்தன. அதில் ஜிடென் (Ziten), டெல்மா ஏ எம் (Telma A M) மற்றும் டெல்மா ஹெச் (Telma H) ஆகியன அடங்கும். இவை முறையே நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு தரப்படுகின்றன. இந்நிறுவனம் 2022 நவம்பர் 11 ம் தேதி 9.75 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பாஜகவிற்கு வழங்கியுள்ளது.

9. யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (Yasodha Super Specialty Hospital)

தெலுங்கானாவிலுள்ள இந்நிறுவனம் 2021 அக்டோபர் 4 முதல் 2023 அக்டோபர் 11 ம் தேதி வரை 162 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ யிடம் வாங்கியது. 2020 டிசம்பர் 22 ம் தேதி வருமான வரித்துறை அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியது. பிறகு 2021 அக்டோபர் 4 முதல் இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கத் துவங்கியது. பிஆர்எஸ் கட்சிக்கு 94 கோடி ரூபாய், காங்கிரசுக்கு 64 கோடி ரூபாய், பாஜகவிற்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

10. டாக்டர் ரெட்டிஸ் லேப் (Dr. Reddy’s Lab)

ஹைதராபாத்தில் செயல்படும் இந்நிறுவனம் 2019 மே 8 முதல் 2024 ஜனவரி 4 வரை 84கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ-யிடமிருந்து வாங்கியுள்ளது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறை 2023 நவம்பர் 12 ம் தேதி சோதனை நடத்தியது. 2023 நவம்பர் 17 அன்று 21 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை இந்நிறுவனம் வாங்கியது. 2024 ஜனவரி 4 ம் தேதி 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரம் வாங்கியது. பிறகு பிஆர்எஸ் கட்சிக்கு 32 கோடி ரூபாய், பாஜகவிற்கு 25 கோடி ரூபாய், காங்கிரசு கட்சிக்கு 14 கோடி ரூபாய் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியுள்ளது. 

11. அரபிந்தோ ஃபார்மா (Aurobindo Pharma)

ஹைதராபாத்தில் செயல்படும் இந்நிறுவனம் 2021 ஏப்ரல் 3 முதல் 2023 ஏப்ரல் 8 வரை 52 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை எஸ்பிஐ யிடம் வாங்கியது. 2022 நவம்பர் 10 ம் தேதி இதன் இயக்குநர் பி.சரத் சந்திர ரெட்டி பணமோசடி வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு 2022 நவம்பர் 15 ம் தேதி 5கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது. வாங்கிய பத்திரங்கள் அனைத்தையும் பாஜகவிற்கு வழங்கிவிட்டது. அதன்பிறகு அவர் பாஜக ஆட்சியின் உதவியுடன் பிணையில் விடுதலையாகிவிட்டார்.

12. நாட்கோ ஃபார்மா (NATCO)

ஹைதராபாத்தில் செயல்படும் இந்நிறுவனம் 2019 அக்டோபர் 5 முதல் 2024 ஜனவரி 10 வரை 69.25 கோடி ரூபாய்க்கு பத்திரங்களை வாங்கியது. இதில் பிஆர்எஸ் கட்சிக்கு 20 கோடி ரூபாய், பாஜகவிற்கு 15 கோடி ரூபாய், காங்கிரசுக்கு 12.25 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியது.

13. எம்எஸ்என் ஃபார்மாகெம் லிமிடெட் (MSN Pharmachem Ltd)

ஹைதராபாத்தில் செயல்படும் இந்நிறுவனம் பிஆர்எஸ் கட்சிக்கு 20 கோடியும், பாஜகவிற்கு 6 கோடியும் பத்திரங்களாக வழங்கியுள்ளது.

14. யூஜியா ஃபார்மா ஸ்பெஷாலிட்டிஸ் (Eugia Pharma Specialities)

ஹைதராபாத்தில் செயல்படும் இந்நிறுவனம் 15 கோடி ரூபாய்க்கு பாஜகவிற்கு மட்டும் பத்திரங்களை வழங்கியுள்ளது.

15. அலெம்பிக் ஃபார்மா (Alembic)

குஜராத்தில் செயல்படும் இந்நிறுவனம் 10.2 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பாஜகவிற்கு வழங்கியுள்ளது.

16. ஏபிஎல் ஹெல்த்கேர் லிமிடெட் 

ஹைதராபாத்திலுள்ள இந்நிறுவனம் 2023 நவம்பர் 8 அன்று 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பாஜகவிற்கு வழங்கியுள்ளது.

ஆக, தரப் பரிசோதனைகளில் தோல்வியடைந்த நிறுவனங்கள், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையால் ரெய்டு நடத்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் பாரபட்சம் பார்க்காமல் இலஞ்சம் தந்து தங்களது தரமற்ற மருந்துகளை சந்தைக்கு அனுப்பியுள்ளன என்பது சொல்லாமலே விளங்கும்.

பிற துறைகள்

வெளியிடப்பட்ட விவரங்களில் மருத்துவ துறை பங்களிப்பு வெறும் 762 கோடி ஆகும். இதில் மட்டுமே இவ்வளவு மோசடியும், ஊழலும் நடந்துள்ளது எனில் பிற துறைகளில் கேட்கவே வேண்டாம். பொறியியல் மற்றும் உள்கட்டமைப்புத் துறை 1,365 கோடி ரூபாய் (இதுவே அதிகபட்சம் பத்திரம் வழங்கிய துறை), சுரங்கம் 667 கோடி ரூபாய், ஆற்றல் துறை 449 கோடி ரூபாய், நிதி நிறுவனம் 342.5 கோடி ரூபாய், ரியல் எஸ்டேட் 631.4 கோடி ரூபாய் மற்றும் பாதுகாப்புத்துறை 100.45 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வழங்கியுள்ளன.

அமெரிக்காவின் குவாட் திட்டம் மற்றும் ப்ளுடாட் நெட்வொர்க் திட்டத்திலுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுரங்க திட்டங்களில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கே அத்துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் பத்திரம் வழங்கியுள்ளன என்பது தெளிவு. லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடும் மார்ட்டினின் நிறுவனம் (Future Gaming) பாஜகவிற்கு மட்டுமின்றி அதிகளவில் திமுக, திரிணாமுல் கட்சிகளுக்கும் இலஞ்சம் தந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பாஜகவும், காங்கிரசும் பத்திரங்களை பெற்றுள்ளன. வேதாந்தா நிறுவனமும் எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழக மக்களை கொன்று குவித்த பின்பும் இக்கட்சிகள் இந்நிறுவனத்திடமிருந்து பத்திரம் பெற்று தமிழக மக்களிடமே வந்து வாக்கு கேட்கின்றன. இடதுசாரிகளும், எம்எல் அமைப்புகளும் பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசை முன் நிறுத்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமேயன்றி வேறில்லை. 

"இந்தியாவின் லாட்டரி சீட்டு அரசன்" என்று அழைக்கப்படும் ப்யூச்சர் கேமிங் நிறுவனம் இந்தியா முழுவதும் தங்கு தடையின்றி லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடவே பாஜகவிற்கும், திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கும் தேர்தல் பத்திரங்களை வாரி வழங்கியுள்ளது.

மேகா என்ஜினியரிங் நிறுவனம் (ஆந்திரா) பத்திரம் வழங்கிய பிறகு, அதற்கு பிரதிபலனாக 800 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை HPCL இடமிருந்து பெற்றுள்ளது. மேலும் 4,700 கோடி மதிப்புள்ள ஜோசிவா சுரங்கப் பாதை ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு துறையிடமிருந்து பெற்றுள்ளது. மேகா என்ஜினியரிங் நிறுவனம் காஷ்மீரில் ஜோஜிலா பாஸ் டனல் (Zojila Pass Tunnel) திட்டத்தை உள்கட்டமைப்பு துறையிடமிருந்தும், 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்புத் துறையிடமிருந்தும் பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறை (Defense Ministry) அமைச்சகம் இந்நிறுவனத்திடமிருந்து Radio Relay Communication Equipments - களை கொள்முதல் செய்துள்ளது. மேலும் Power Transmission Project, crude Oil Refinery Project (5,400 கோடி மதிப்பிலான திட்டம்) போன்ற திட்டங்களையும் பத்திரங்கள் வழங்கியதற்கு கைமாறாக பாஜக ஆட்சியிடமிருந்து பெற்றுள்ளது. வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜின்க் (Hindustan Zinc) நிறுவனம் மற்றும் ஜின்டால் நிறுவனம் ராஜஸ்தானில் தங்க சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. 

நாம் முன்பு கூறியவாறு இவை தேர்தல் ஆணையம் வெளியிட்ட சிறிதளவு தகவல்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் மட்டுமே ஆகும். தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் சராசரியாக 50% நிதி மட்டுமே பெற்றுள்ளன. மீதி 50% பிற வழிகளில் பெறுகின்றன. உதாரணமாக, பூனாவில் செயல்படும் சீரம் இன்ஸ்டியூட் (Serum Institute) வேறு வழியில் நிதி தந்துள்ளது. கோவிட் தடுப்பூசியான கோவி ஷீல்ட் (Covishield) ஐ உலகில் அதிகளவில் விற்பனை செய்தது இந்த நிறுவனமேயாகும். கோவிட் 2 வது அலைக்குப் பிறகு ஆகஸ்ட் 2022 ல் வருமான வரி விலக்கு பெற்ற "தேர்தல் அறக்கட்டளை" (Electoral Trust) வழியாக பாஜகவிற்கு 3 தவணைகளாக இந்நிறுவனம் நிதி தந்துள்ளது. அவற்றில் ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை (Prudent Electoral Trust) மூலம் பாஜகவிற்கு ரூ.50.25 கோடி ரூபாய் தேர்தல் நிதி தந்துள்ளது. இந்த அறக்கட்டளை முன்பு சத்யா அறக்கட்டளை (Satya Electoral Trust) என்ற பெயரில் இயங்கி வந்தது.

ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் இது குறித்து ஒரு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. 2013 லிருந்து சுமார் 272 மில்லியன் டாலர் பணமானது (சுமார் 2176 கோடி ரூபாய்) வெவ்வேறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு தேர்தல் நிதியாக சென்று சேர்ந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது. அதில் மூன்றில் இரண்டு பங்கு பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ப்ரூடன்ட் அறக்கட்டளையானது சுனில் பார்தி மிட்டலின் பார்தி ஏர்டெல் குழுமம் (Bharti Airtel Group), எஸ்ஸார் குழுமம் (Essar Group), டிஎல்ஃஎப் (DLF) எனப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம், யுபிஎல் (UPL) எனப்படும் பூச்சிக் கொல்லி தயாரிப்பு நிறுவனம், RP சஞ்சிவ் - கோயங்கா குழுமம் மற்றும் கேடிலா (Cadila) எனும் மருந்து நிறுவனம் போன்றவற்றால் நடத்தப்படும் அறக்கட்டளையாகும். 

இவ்வாறாக பாஜக, காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளுக்கு கார்ப்பரேட்கள் வழங்கிய  லஞ்சத்திற்கு எஸ்பிஐ இடைத்தரகராக செயல்பட்டுள்ளது. 

காவிகளின் பிடியில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ - SBI)

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சேவைத்துறை என்பதிலிருந்து சந்தைக்கான வணிகமய வங்கிகளாக மாற்றப்பட்டுள்ளன. நிப்பான், கோடாக், பிர்லா குழுமம் போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களை எஸ்பிஐ-ல் பங்குதாரர்களாக மோடி ஆட்சி இணைத்துள்ளது மட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கியை யெஸ் (YES) வங்கி எனும் தனியார் வங்கியுடன் (merge) இணைத்துள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ மார்ச் 6ஆம் தேதி அன்று தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தந்திருக்க வேண்டும். ஆனால் மார்ச் 4 ஆம் தேதி அன்று தனக்கு மேலும் 116 நாட்கள் தேவை என சொல்லியது. இந்தக் கால அவகாசம் கேட்பதற்கு கூட 17 நாட்கள் எடுத்துக் கொண்டது. தீர்ப்பு வந்த உடனேயே கால அவகாசம் கேட்டிருந்தால் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் 17 நாட்கள் கழித்து 116 நாட்கள் கால அவகாசம் கேட்டதின் மூலம் காவி மயமாக்கப்பட்ட கார்ப்பரேட் வங்கி என்பதை எஸ்பிஐ தன்னை அம்பலப்படுத்திக் கொண்டது. அதாவது பாஜக ஆட்சிக்கு களங்கம் வந்துவிட கூடாது என்பதற்காக தேர்தலுக்குப் பிறகு தான் தர முடியும் என்று கூறியதன் மூலம் பாஜகவின் கருவியாக, பாரத ஸ்டேட் 'சங்கியாக' பாரத் ஸ்டேட் வங்கி தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்தியுள்ளது. மிக மோசமாக கேள்விக்குள்ளாகி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது.

கால அவகாசம் கோரியதற்கு எஸ்பிஐ முன்வைத்துள்ள காரணங்கள் என்ன?

"முத்திரையிடப்பட்டு மூடப்பட்ட பத்திரங்கள் விற்பனைக்கு என கண்டறியப்பட்ட கிளைகளில் முதலில் இருந்தன. பிறகு அவை மும்பையில் உள்ள முதன்மை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் திறந்து தரவுகளை சேகரிக்க கால அவகாசம் தேவை. 29 வங்கி கிளைகள் மட்டும் தான் தேர்தல் பத்திரங்களை விற்க அதிகாரம் பெற்றன. அங்கு பத்திரங்கள் டெபாசிட் செய்த பின்னர் அரசியல் கட்சிகள் இந்த பத்திரங்களை பெற்றுக்கொள்ள இதற்கென தனி கணக்கை துவங்க வேண்டும். கட்சிகள் தொகையை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முத்திரையிட்டு மூடி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். சில தகவல்கள் டிஜிட்டல் வடிவத்திலும் சில தகவல்கள் ஆவண வடிவத்திலும் உள்ளன" என்று கூறியது.

சில தகவல்கள் ஆவண வடிவத்தில் உள்ளதாக எஸ்பிஐ கூறுவது பெரும் மோசடி ஆகும். Core Banking Solution எனப்படும் டிஜிட்டல் முறை வங்கிகளில் அமலாக்கப்பட்ட பின்னர் அனைத்தும் டிஜிட்டல் வடிவத்தில் தான் இருக்க வேண்டும். பிறகெப்படி டிஜிட்டல் வடிவத்தில் இல்லாமல் இருக்கும்? மோடி கும்பலின் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது பித்தலாட்டம் என்று தானே அர்த்தம்! ஊழலை டிஜிட்டல் முறையில் செய்வது தான் டிஜிட்டல் இந்தியா போலும்!!

அடுத்ததாக பல தரவுகளை சேகரித்து சரி பார்க்க வேண்டும் என்று கூறியது. 2018 முதல் 2023 வரை சுமார் 44,000 பத்திரங்கள் விற்கப்பட்டன. இவற்றில் 22,000 பத்திரங்கள் (2019 வரை விற்கப்பட்டவை) பற்றிய தகவல் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. 2019 க்கு பிறகு 22,000 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. எனவே எஸ்பிஐ இது பற்றி தகவல் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். ஆனால் அதற்கு 116 நாட்கள் கால அவகாசம் கேட்பது கேலிக்குரியது. எஸ்பிஐ தனது அனைத்து வங்கி நடவடிக்கைகளையும் டிஜிட்டல் முறையில் மாற்றிவிட்ட பிறகு டிஜிட்டல் அல்லாத ஆவண வடிவத்தில் உள்ளதாக கூறி கால அவகாசம் கோருவது பித்தலாட்டமின்றி வேறு என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கிளைகளில் 19 கிளைகள் மட்டுமே பத்திரங்களை விற்றுள்ளன. 

14 கிளைகளில்தான் கட்சிகள் கணக்கு துவங்கி தமது பத்திர தொகையை பெற்றுள்ளன. அவ்வாறு பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே! பத்திரங்கள் ஆண்டு முழுவதும் விற்கப்படுவதில்லை. ஆண்டிற்கு 4 முறை மட்டுமே விற்கப்படும். எனவே பத்திரம் தொடர்பான வங்கி செயல்பாடுகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இருக்கும். இவற்றை சேகரிக்க முடியவில்லை என்பது பித்தலாட்டமே. வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகள் கூட 24 மணி நேரத்தில் வங்கிகளில் சேகரிக்கப்பட்டு தரப்படும் போது எஸ்பிஐ யின் வாதம் பாஜகவின் தலையீட்டின் அடிப்படையிலானது என்பது சந்தேகமே இல்லை. 

மேலும் டிஜிட்டல் வடிவத்தில் இல்லை என்று சொல்வது முற்றிலும் பொய். காரணம் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பெற்ற தகவலின் படி எஸ்பிஐ பத்திரங்களுக்கான டிஜிட்டல் பணிகளுக்கு ரூபாய் 1.50 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே டிஜிட்டல் படுத்தவில்லை எனக் கூறுவது அப்பட்டமான பொய். உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த பிறகுதான் மீதி தகவலை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.

மார்ச் 2020ல் யெஸ் வங்கி (YES Bank) எனும் கார்ப்பரேட் தனியார் வங்கி பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. அவ்வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்க 6,050 கோடி ரூபாய் எஸ்பிஐ வழங்கியது. மேலும் தனது பங்குகளில் 48% சதவீதத்திற்கும் மேலான பங்குகளை யெஸ் வங்கிக்கு வழங்கியது. முன்னாள் எஸ்பிஐ சேர்மன் ரஜினிஷ் குமார் இது பற்றி கூறும்போது "பாரத் ஸ்டேட் வங்கி - யெஸ் வங்கி இணைப்பு என்பது கோவிட் போன்று எதிர் பாராமல் நடந்ததாகும்" என்கிறார். அதன் பிறகு எஸ்பிஐ ன் பங்குகள் 26% சதவீதமாக குறைந்தது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு யெஸ் வங்கியில் பாரத் வங்கி 26% சதவீத பங்குகளை வைத்திருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மார்ச் 2023 வரை முடிந்திருக்க வேண்டிய இந்தப் பங்கு விற்பனை முடிந்தபாடில்லை; மேலும் தொடர்கிறது. மேலும் ஏராளமான சிறு குறு நிதி நிறுவனங்களையும் எஸ்பிஐ அண்மை காலங்களில் விழுங்கி செரித்துவிட்டது.

2023 நவம்பரில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பது என மோடி ஆட்சி முடிவு செய்தது. இதுகுறித்து நிர்மலா சீதாராமன் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளை விலக்கிக் கொள்வது; அவற்றை தனியார் வங்கிகளுக்கு விற்பது குறித்து பேசினார். கடந்த சில ஆண்டுகளாகவே பாரத ஸ்டேட் வங்கியின் இத்தகைய கார்ப்பரேட் நலன்களுக்கான சந்தை சார்ந்த செயல்பாடுகளை கண்டித்து அதன் ஊழியர்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராடி வருவது குறிப்பிடத்தக்கது. ஜன் தன் யோஜனா, கடன் மேளாக்கள் (Loan mela), தனியார் வங்கிகள் போல கொடுக்கப்படும் இலக்குகள் (Targets), பணிச்சுமை, இணையதள நிறுத்தம் (Network Breakdown) உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

பாரத் ஸ்டேட் வங்கியின் முன்னாள் இயக்குனர் பதவியில் இருந்த போது அதானி குழுமத்திற்கு அளவுக்கு மீறி கடன் கொடுத்தார். ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடியின் முன்னிலையில் நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்கு சில நிமிடங்களில் 8000 கோடி ரூபாய் கடன் அளித்தார். இது கடும் கண்டனங்களுக்கு ஆளானது. அவர் பணி ஓய்வு பெற்ற பின்பு அதானி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவராக பணியமர்த்தப்பட்டார்.

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்த விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் 6 பேர் அடங்கிய கமிட்டி அமைக்க அரசுக்கு ஆணையிட்டது. அதில் ஒருவராக இருந்த ஓ.பி.பட் (O.P.Bhatt) கிரீன்கோ என்ற renewable energy நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் அதானி குடும்பத்துடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நிறுவனம் ஆகும். பிறகு அவர் டாட்டா மோட்டார்ஸ் (TATA Motors) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக மீண்டும் பணியமர்த்தபட்டார். அவர் ஏற்கனவே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இந்த ஓ.பி.பட் யார் என்றால் பாரத் வங்கியின் முன்னாள் சேர்மன் ஆவார்.

அக்டோபர் 2021இல் பாரத வங்கியின் முன்னாள் சேர்மன் பிரதீப் சௌத்ரி ஹோட்டல் ஜெய்சலாமர் (Jaisalamer) உடன் தொடர்புடைய கடன் ஊழல் வழக்கில் (Loan scam) தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டார். 2015இல் கடனை கட்ட மறுத்த இந்த ஹோட்டலைக் கைப்பற்றி தவறான வழிகளில் சட்டவிரோதமாக விற்று விட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பாஜக அரசின் தலையீட்டால் அவர் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்‌.

மேற்கூறிய தகவல்கள் பாரத ஸ்டேட் வங்கி காவிமயமாகிவிட்டதையும் கார்ப்பரேட் மயமாகிவிட்டதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. பாஜக ஆட்சி, வங்கித் துறை மற்றும் கார்ப்பரேட்களுக்கு இடையிலான கள்ள உறவையும் இவை எடுத்துக் காட்டுகின்றன. பாரத ஸ்டேட் வங்கியை இனி "பாரத ஸ்டேட் சங்கி" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். 

முதலாளித்துவ ஊழலை ஒழிப்போம்!

இந்தியாவில்தான் உலக அளவில் தேர்தலுக்காக அதிகபட்ச பணம் விரயமாக்கப்படுகிறது. 2024 தேர்தலுக்கு தோராயமாக 1.34 லட்சம் கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை விட இது மிகவும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 தேர்தலில் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர திட்டத்திற்குப் பிறகு இது பன்மடங்கு பெருகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கட்டுப்பாடுகள், வெளிப்படைத் தன்மை கூட இந்தியாவில் இல்லை. தேர்தலில் கள்ளப்பணம் அதிகமாக புழங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அரசியல் கட்சிகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சொத்துக்களை குவிக்கின்றன. இவற்றின் மீது எந்த கண்காணிப்பு முறையும் இங்கு இல்லை.

அமெரிக்காவில் தேர்தல் நிதியானது, கட்சி சார்ந்து இல்லாமல் வேட்பாளர் மற்றும் அவரது பிரச்சாரம் சார்ந்து தரப்படுகிறது. ஆனால் இந்தியாவில் முழுக்க கட்சிகளையும், கட்சி நடவடிக்கைகளையும் மையப்படுத்தி நிதி தரப்படுகிறது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிதி தரும் நிறுவனங்களுக்கும்/ தனிநபர்களுக்கும் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்க சட்ட வழிமுறைகள் உள்ளன. முக்கியமாக அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டில் நுழைந்து அரசியல் கட்சிகளுக்கு நிதி தருவது தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி தருபவரின் தன்மையைப் பொறுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பிரிட்டனில் நிதி பங்களிப்பிற்கு கட்டுப்பாடு விதிக்காமல், நிதியை செலவிடுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் தங்குத்தடையின்றி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தந்து அரசை கட்டுப்படுத்துகின்றன. எந்த நிறுவனம் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் தரலாம், எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நிதி பங்களிப்பிற்கும் கட்டுப்பாடு இல்லை; செலவினங்களுக்கும் கட்டுப்பாடு இல்லை. 

முதலாளித்துவ நாடுகளில் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையைப் பிரச்சாரம் செய்து வாக்குகளை திரட்டுகின்றன. ஆனால் இந்தியாவில் வாக்காளர்களுக்கு பணம் தந்து கட்சிகள் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன. 

தேர்தல் செலவினங்களுக்கு கட்டுப்பாடு மற்றும் எல்லைகளை வரையறுத்து பின்பற்றும் முறையை முதலாளித்துவ நாடுகள் பின்பற்றுகின்றன. உதாரணமாக பிரிட்டன் அரசு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு அதிகபட்சம் ஒரு தொகுதிக்கு 30,000 யூரோக்கள் (30 லட்சம் ரூபாய்) மட்டும் செலவு செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை; அவற்றை கண்காணிக்கும் முறையும் இல்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிகளின் கருவியாகவே செயல்படுகிறது. 

அரசியல் கட்சிகள் பொது நிதியை திரட்டி இயங்கும் வகையில் முதலாளித்துவ நாடுகளில் வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, ஜெர்மனியில் அரசியல் கட்சிகள் முந்தைய தேர்தல் அறிக்கை மற்றும் செயல்பாடு, உறுப்பினர் கட்டணம், தனியார் நிதியாதாரம் போன்றவற்றை கணக்கு காட்டி பொது நிதியை (மக்கள் நிதி) திரட்ட முடியும். மட்டுமின்றி தேவைப்படின் அரசிடமிருந்தும் கூட நிதி உதவி பெற முடியும். தேர்தல் நிதி பெறுவதற்கான ரசீதுகளை ஒப்படைக்க வேண்டும். இந்த "இரசீது முறை" அமெரிக்காவிலும் நடைமுறையில் உள்ளது. அவை "ஜனநாயக இரசீது" எனப்படுகிறது. வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு நிதி தரவும், அதற்கான இரசீது பெறவும் சட்ட வழிமுறைகள் அங்கு உண்டு. ஆனால் இந்தியாவில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற எம்எல் இயக்கங்கள் மட்டுமே பொது நிதியைத் திரட்டி இயங்குகின்றன. சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கூட திமுகவிடமிருந்து முறையே 15 கோடி, 10 கோடி என 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு நிதி பெற்றுள்ளன. பெரும்பாலான எம்எல் இயக்கங்கள் கூட திமுகவை சார்ந்து இயங்கும் இழிநிலைக்கு தாழ்ந்துவிட்டன. பாஜக, திமுக போன்ற பெரும் முதலாளித்துவ கட்சிகள் எவ்வித கட்டுப்பாடும், கண்காணிப்புமின்றி கார்ப்பரேட்டுகளிடம் இருந்து லஞ்சம் பெற்று நாட்டை அவர்களுக்கு கூறு போட்டு விற்கின்றன. இதற்கு திருத்தல்வாத சிபிஐ, சிபிஎம் மற்றும் எம்.எல். இயக்கங்கள் துணைபோகின்றன.

முதலாளித்துவ நாடுகளில் அரசியல் கட்சிகள் பெறும் நிதி உதவிகளை வெளிப்படையாக அறிவிக்கவும், நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் அது குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கவும் சட்ட வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக பிரிட்டனில் அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 7500 பவுண்டுகளுக்கு அதிகமாக நிதி பெற்றால் அதை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஜெர்மனியில் 10,000 யூரோவுக்கு அதிகம் பெற்றால் அரசிடம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குறைந்த அளவு நிதி தருபவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மட்டும் அங்கு வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்படுவது அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் அவை வெளியிடப்படுவதில்லை. மேலும் இத்தகைய சிறிதளவு நிதி தருபவர்கள் அரசின் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆனால், இந்தியாவில் காங்கிரசு ஆட்சி கொண்டுவந்த சட்டம் நிதி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினாலும் யாரும் அதை செய்ததில்லை. பாஜக ஆட்சி கொண்டு வந்த திட்டமோ இருதரப்பு விவரங்கள் வெளியிடப்படுவதை தடை செய்து விட்டது. ஆளும் வர்க்க கட்சிகள் பொது நிதியில் இயங்குவதில்லை. மாறாக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கின்றன. கார்ப்பரேட்டுகளின் லஞ்சப் பணத்தில் ஆட்சிக்கு வந்து மீண்டும் மக்களை கொள்ளை அடிக்கின்றன. 

ஆக, குறைந்தபட்ச முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப் போன்றாவது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், நிதி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். தேர்தல் நிதி பெறுவதற்கும் தேர்தல் செலவினங்களுக்கும் நேரடியான கட்டுப்பாடுகளையும் வெளிப்படை தன்மையையும் கொண்டு வர வேண்டும். ஆண்டுதோறும் அதை தேர்தல் ஆணையத்திற்கும் மக்களுக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர  நிறுவனங்களின் நிதி மற்றும் பொது நிதியில் (public funding) இயங்குவதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். தேர்தல் பத்திர திட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் ஏராளமான குறுக்கு வழிகள் (தேர்தல் அறக்கட்டளைப் போன்ற) மூலம் அரசியல் கட்சிகள் பெரு முதலாளிகளிடம் இருந்து நிதி பெறுவதை தடை செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்கான சில கட்டுப்பாடுகளை இந்திரஜித் குப்தா கமிட்டி (1998) நிர்ணயித்தது. அரசு நிதி (State funding), பொது நிதியில் (public funding) கட்சிகள் இயங்குவது; பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் செலவினக் கட்டுப்பாடுகளை அக்கமிட்டி ஆலோசனையாக முன் வைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தது. 

தேர்தல் ஆணையம் கூட 2004 ல் அரசியல் கட்சிகள் தமது வரவு- செலவு அறிக்கையை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கியது. ஆனால் அதை எந்தக் கட்சியும் மதிப்பதில்லை, விதியை மதிக்காத கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆளும் கட்சியின் கருவியாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. 

1999 சட்ட கமிஷன் (Law commision) பொது நிதியில் தான் கட்சிகள் செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஐ திருத்தி அதில் 78A எனும் பிரிவை இணைத்து அதன் கீழ் வரவு -செலவு கணக்கு பராமரித்தல், தணிக்கை (Audit) நிதி விவரங்களை வெளியிடுதல் போன்றவற்றை கட்சிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கூறியது. ஆனால் அதையும் காங்கிரஸ் ஆட்சி தூக்கி கிடப்பில் போட்டு விட்டது.

அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு தரும் பணம் முதலாளித்துவ ஊழல் என்று மார்க்சியம் வரையறுக்கிறது. இதுகுறித்து எங்கெல்ஸ் கூறுவதாவது; "ஜனநாயக குடியரசுக்கு இனி சொத்துரிமையில் ஏற்படும் சொத்துரிமை வேறுபாடுகள் பற்றி (குடிமக்கள் ஒவ்வொருவரிடையில் ஏற்படும் வேறுபாடுகள்) அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரியாது. அதில் செல்வம் தனது சக்தியை மறைமுகமாக பயன்படுத்துகிறது. ஆனால் முன்னினும் உறுதியாக திட்டவட்டமாக தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. ஒருபுறம் அதிகாரிகளுக்கு நேரடியாக தரும் லஞ்சம் மூலம் தனது பிடிக்குள் கொண்டு வருவது (இதற்கு அமெரிக்கா சிறிய உதாரணத்தை தருகிறது) மறுபுறம் அரசாங்கத்திற்கும் பங்குகள், பரிவர்த்தனை அரங்கிற்கும் ஒரு நேச கூட்டின் வடிவில் செயல்படுகிறது" என்கிறார். (குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலிலிருந்து)

லெனின் இதை எடுத்துக்காட்டி முதலாளித்துவ குடியரசு ஏகாதிபத்திய சகாப்தத்தில் காலாவதியாகி விட்டதால்; முதலாளித்துவம் ஏகபோக கட்டத்தை அடைந்து விட்டதால் நிதி மூலதனத்தின் பங்கு மார்க்கெட், பங்கு பரிவர்த்தனை அரங்கின் சக்தி அதிகரிக்கிறது. ஊழலின் பரிணாமமும் பன்மடங்கு பெருகிவிட்டது என்று விளக்குகிறார். 

ஆக, முதலாளித்துவம் அரசின் மீது ஆதிக்கம் செலுத்த மேற்கொள்ளும் இரு பொருளாதார வழிமுறைகள் உள்ளன: 1. நேரடி இலஞ்சம், 2. அரசாங்கம், பங்குகள், பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் கூட்டு. 

தற்போதைய புதிய காலனிய கட்டத்தில் இம்முறை காலனிய நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளன. அதாவது, இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளிலும் இதேமுறையில் முதலாளித்துவ ஊழல் செயல்படுகிறது. 

ஊழல் என்றால் பொதுமக்களிடமிருந்து அரசு அதிகாரிகள் பெறும் லஞ்சம் மட்டுமே என்று அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கம் பேசியது. அக்கும்பல் முதலாளித்துவ ஊழலைப் பற்றி பேசவில்லை. அதை மறைமுகமாக ஆதரித்தது. இந்த ஊழலும் கூட முதலாளித்துவ ஊழலின் விளைவே ஆகும்.  முதலாளித்துவ ஊழலை ஒழித்தால்தான் இதையும் ஒழிக்க முடியும். ஊழலின் ஊற்றுக்கண் பாராளுமன்றமே ஒழிய வீடு அல்ல.

ஆக, முதலாளித்துவ ஊழலை ஒழிக்க வேண்டுமாயின் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும். நிலவுகிற புதியகாலனிய, தரகு முதலாளித்துவ பாசிச ஆட்சி முறையால் முதலாளித்துவ ஊழலை ஒழிக்கவே முடியாது. பாசிசமும் ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் ஆகும்.  

இடைக்காலத் தீர்வாக, வெவ்வேறு சட்ட வழிமுறைகள் மூலம் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடம் பெறும் கருப்பு பணத்தை ஒழிக்க, குறைந்தபட்சம் முதலாளித்துவ நாடுகளில் உள்ள அரைகுறை கட்டுப்பாடுகளையாவது விதிக்க வற்புறுத்தி நாம் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க வேண்டும். இந்திரஜித் குப்தா கமிட்டி (1998), சட்ட கமிஷன் (1999) பரிந்துரைத்த திருத்தங்களையாவது அமல்படுத்தக் கோரி போராட வேண்டும். பாஜகவின் வெளிப்படைத் தன்மையற்ற ஊழல் திட்டத்திற்கு மாற்று காங்கிரசின் வெளிப்படையான ஊழல் திட்டம் அல்ல! என்பதை பிரச்சார இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர, தேசிய முதலாளிகள் தரும் நிதியிலிருந்தும், பொதுநிதி, அரசு நிதியிலிருந்தும் அரசியல் கட்சிகள் இயங்கும் வகையில் அரசியல் சட்டம் இயற்றக் கோரி போராட வேண்டும். இதை முதலாளித்துவச் சீர்திருத்தம் என்ற வகையில் மட்டும் நாம் ஆதரிக்கலாம்.

நிரந்தரத் தீர்வாக, புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் அமையும் அனைத்து தேசிய இனங்களின் கூட்டரசான மக்கள் ஜனநாயக குடியரசுதான் முதலாளித்துவ ஊழலை முற்றாக ஒழிக்க வல்லது.  

- சமரன் (ஜூன் 2024 இதழில்)