குடந்தை: தொடர் சாதிய இழிவுபடுத்துதலுக்கெதிரான மாணவர்களின் போராட்டம்

செந்தளம் செய்திப்பிரிவு

குடந்தை: தொடர் சாதிய இழிவுபடுத்துதலுக்கெதிரான மாணவர்களின் போராட்டம்

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி புவியியல் துறை பேராசிரியர் மணியோசை தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தி ஆபாச வசவுச் சொற்களால் திட்டிவந்துள்ளார். இதற்கு துறைத் தலைவர் கோபுவும் உடந்தையாக செயல்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக கல்லூரி முதல்வருக்கும் உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்கும் மாணவர்கள் கூட்டமைப்பின் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், பேராசிரியர் மணியோசையை பணி நீக்கம் செய்யக் கோரியும் துறைத்தலைவர் கோபு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவர்கள் ஒன்று திரண்டு கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

மாணவர்களின் போராட்டம் வெல்ல அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமையாகிறது.

ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில், இதே துறையைச் சார்ந்த வடிவேலு எனும் பேராசிரியர் இதேபோன்று மாணவர்களை சாதிரீதியாக ஒருமையில் பேசியதற்காகதான் மாணவர்களின் போராட்டத்திற்கு பின்  வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

இவ்வாறு, கும்பகோணம் கல்லூரியை பொறுத்தவரை சாதி ரீதியாக மாணவர்களை இழிவுப்படுத்தும் போக்கு தொடர்கதையாகி வருகிறது. 

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியே உயர்சாதி திமிரில் தான் பொதுஇடங்களில் கூட பேசிவருகிறார். ஆளும் திமுக அரசும் தமிழ்நாடு முழுவதும் சாதிவெறிப் போக்குகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகளையும் தூண்டிவிட்டு வருகிறது. 

ஆகையால், மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவதோடு நாட்டில் நிலவும் சாதிய அடக்குமுறைக்கு எதிராக போராடவும், அதற்கு துணைபோகும் ஆளும் வர்க்க அரசுகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட வேண்டும்.

- செந்தளம் செய்திப்பிரிவு