பழனி கோவில் பிரச்சினை : பாசிசமயமாகும் நீதித்துறை

செந்தளம் செய்திப்பிரிவு

பழனி கோவில் பிரச்சினை : பாசிசமயமாகும் நீதித்துறை

பழனிமலைக் கோவில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் என்பவர்  "பழனி மலைக் கோவில் மறறும் அதன் தேவஸ்தானக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துணை கோவில்களுக்குள்ளும் இந்து அல்லதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நுழைவதற்கு தடை செய்ய வேண்டும்" என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார்.  

அவ்வழக்கின் மீது ஜனவரி 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின நீதிபதி ஶ்ரீமதி தலைமையிலான பென்ச், ஆலய நுழைவுச் சட்டம் -1947 ஐ மேற்கோள்காட்டி கீழ்க்கண்ட தீர்ப்பினை வழங்கியது.    

”இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு  இடங்களில் வைக்க வேண்டும்.

அவர்கள் யாரும் கொடி மரத்தை தாண்டி உள்ளே செல்லக் கூடாது. 

மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் - இந்து கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், கோவிலுக்குள் தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு  வைக்க வேண்டும்;  அந்த பதிவேட்டில் இந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய விரும்புகிறேன் என உத்திரவாதம் ”உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம்.

கோவில் என்பது புனிதத் தலம். அது ஒன்றும் சுற்றுலாத் தலம் அல்ல. 

இதே நடைமுறையை மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோவில்களும் பின்பற்ற வேண்டும். 

மேலும்  இந்து அறநிலையத்துறை ஆணையர், கோவிலின் ஆகம விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் "  

என்று  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு தொடுத்தவரும் தீர்ப்பு சொன்ன நீதிபதியும்  இந்துத்துவ பாசிசத்தின் ஏவல்களாக செயல்படுகின்றனர்  என்பதை சொல்லத் தேவையில்லை. 

பாசிசமயமாகும் நீதித்துறை 

உயர் நீதி மன்ற  தீர்ப்பு  சாரத்தில் ஆகம விதிகளை கறாராக  கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில்தான் இந்த கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக கோரும் வழக்கிலும் கூட உச்ச நீதி மன்றம் ஆகம கோவில்களுக்குள் அனைவரும் அர்ச்சகர் ஆக அனுமதிக்க இயலாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கும்  இந்த தீர்ப்பே வழிகாட்டியாக விளங்குகிறது. 

ஆகம விதியை கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்  பொருள் என்ன? 

நிலவுடமை சமூகத்தில் நிலவிய  நால்வர்ண முறையை கோவில்களுக்குள் பிரயோகப்படுத்தவே  ஆகம விதிகள் உருவாக்கப்பட்டன. இன்றைய அரை நிலவுடமை சமூகத்திலும் இந்த வன்கொடுமைகள் தொடர்கின்றன. 

வேற்று மதத்தினர் மட்டுமல்ல இந்து மதத்திலேயே இன்னென்ன சாதிகள் இவ்வாறுதான்  வணங்க வேண்டும் என ஆகம விதிகள் வரையறுத்துள்ளன. அதாவது கருவறை வரையில் ஒரு சாதி., முதல் சுற்றில் (பிரகாரம்) ஒரு சாதி, இப்படி அடுக்கடுக்கான சுற்றுக்கள் (பிரகாரங்கள்) வைத்து அதில் எந்த  தொலைவிலிருந்து எந்த சாதி கோபுரத்தை தரிசித்துவிட்டு போய்விடவேண்டும் என்று வரையறுத்து  ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகள் மீது சாதி தீண்டாமை வன்கொடுமையை கோவில்களில் ஆகம விதிகள் மூலம் ஏவுகிறது இந்து மதம். 

இதைத்தான் இந்த தீர்ப்பில் சங்பரிவார கும்பலின் மனசாட்சியாக விளங்கும்  நீதிபதியும் வலியுறுத்தியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. 

தொடர்புடைய கட்டுரை: கண்ட தேவியில் தேரின் மீது நிலப்பிரபுத்துவ, அம்பல ஆதிக்கம்

இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு சட்டம் - 1947, இந்து இல்லாத எந்த ஒரு சமூகத்தினரும் கோயிலுக்குள் நுழைவதை தடுப்பது மட்டுமின்றி இந்து மதத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகள் மீது தீண்டாமையை  கடைபிடிக்கின்ற  ஆகம விதிகளை உயர்த்தி பிடிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம் இன்று பொருந்தாது. ஆனால் அதனை மேற்கோள் காட்டி நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு வழங்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 

இதில் யார் இந்துக்கள் என்று எவ்வாறு தற்போது வரையறுக்க முடியும் என முன்னாள் நீதிபதி சந்துரு பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார். 

"நீதிபதி ஸ்ரீமதி இந்துக்கோவில்களில் கொடி மரத்தை(துவஜஸ்தம்பம்)தாண்டி இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லக்கூடாதென்று உத்திரவிட்டுள்ளார்கள். ஆனால் யார்"இந்து"என்று சொல்வதிலேயே குழப்பம் உள்ளது. 1936 வரை மனு தர்மத்தின் படி தலித் மக்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை (அவர்ணாஸ்) . அதற்கு முன்பு நாடார் பிரிவை  ஏற்றுக்கொள்ளவில்லை சவர்ணத்தில் இருந்தாலும் ஆகம விதிப்படி பிராமணர்களில் ஒரு பிரிவினர்(ஸ்மார்த்தர்கள்) கொடிமரத்தைத் தாண்டி கோவிலுக்குள் வரக்கூடாது. ஏனென்றால் அவர்கள் சிலை வழிபாட்டில் நம்பிக்கையற்ற அத்வைத பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்களையே பிரம்மன் என்று நம்புபவர்கள் (அஹம் பிரம்மாஸ்மி).  இவர்களையும் நீதிபதி  தடைசெய்வார்களா? அவர்கள்தான் கர்மாவை நம்புவதாக ஒரு தீர்ப்பில் சொல்லி இருக்கின்றார்கள். எனவே இதையும் அவர்கள் தனது கர்மாவாக நினைத்து தீர்ப்பு  கூறலாம்." என்கிறார்.

எனவே இந்த தீர்ப்பு நாத்திகர்கள் மற்றும் பிற மதத்தினருக்கு எதிரானது மட்டுமின்றி இந்து மத்தத்திலேயே இருக்கும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கும் எதிரானது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டமாவது  மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறதா ? எனில் அதுவும் இரட்டை வேடம் போடுகிறது. 15 வது அம்சம்  மதச்சார்பின்மையை,  மத உரிமைகளை பேசுகிறது. மறுபுறம் ஆகம விதிகளை உயர்த்திப்பிடிக்கும் 25,26 பிரிவுகளை எடுத்துக்காட்டி  தீர்ப்புகள் வழங்குகிறது. இது இந்திய ஜனநாயக்ததின் போலித்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு நீதித்துறை உள்ளிட்ட அத்தனை அரசாங்க உறுப்புகளும் பாசிசமயமாகிவிட்டதேயே எடுத்துக் காட்டுகிறது. 

இது குறித்து சமூகநீதி என வாய்ஜாலம் காட்டும் திமுக அரசு வாய்திறக்காமல் மேல் முறையீடு செய்யாமல்  கள்ள  மௌனம் காக்கிறது. இந்துத்துவ பாசிச கும்பலின் தாக்குதல்களுக்கு துணை போகிறது. தமிழ் நாட்டிலுள்ள கோவில்களை காவிக் காடையர்களுக்கு தாரை வார்க்கிறது. ஆகவே மக்கள்தாம் போராடி இதை முறியடிக்க வேண்டும். 

செந்தளம் செய்திப்பிரிவு