மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வழக்கு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணை
செந்தளம் செய்திப்பிரிவு
மேற்குத் தொடர்ச்சி மலையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதன் பகுதியாகவே மாஞ்சோலை மக்களை மோடி அரசும், தி.முக அரசும் கூட்டு சேர்ந்து விரட்டுகின்றன. நான்கு தலைமுறைகளாக காடு திருத்தி தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி உழைத்து வந்த மக்கள், இந்துத்துவ மாடல் - திராவிட மாடல் அரசுகளால் விரட்டப்படுகிறார்கள். தங்கள் வாழ்விடத்திலிருந்து தங்களை வெளியேற்றும் அரசின் முடிவிற்கு எதிராக மாஞ்சோலை தொழிலாளர்களும் கிருஷ்ணசாமியும் தொடர்ந்த வழக்கில், அம்மக்கள் வெளியேற்றப்படுவதற்கு தடை விதித்ததுடன், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசின் டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் ஆலோசனையும் கூறியிருந்தது. ஆனால் மாஞ்சோலை மக்கள் இயற்கையாக வனத்தில் வாழக்ககூடியவர்கள் அல்லவென்றும் அரசின் டான் டீ நிறுவனம் தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த முடியாது என்றும் அவர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு நிலையறிக்கை தாக்கல் செய்ததுடன், மாஞ்சோலை மக்கள் அரசியல் ஆதாயம் அடைய முற்சிப்பதாகவும் தி.மு.க அரசு தனது அறிக்கையில் கூறியிருந்தது. இவ்வழக்கு மீதான விசாரணையில் கடந்த ஆகஸ்ட் 30 இல் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறு வாழ்வு திட்டம் பற்றி நீதிபதிகள் தமிநாடு அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, தாங்கள் ஏற்கனவே அறிக்கை சமர்பித்துள்ளதாக அரசு தரப்பில் கூறபட்டது. (அதாவது மாஞ்சோலை மக்களை வெளியேற்ற வேண்டும் எனும் நிலைதான்). மாஞ்சோலை மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும் என கிருஷ்ணசாமி தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து, மாஞ்சோலை தொழிலாளர்கள் பி.பி.டிசி நிறுவனதால் பணியமர்த்தப்பட்டவர்கள், அவர்களை எப்படி பாரம்பரிய வனவாசிகளாக கருத முடியும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இவ்வழக்கை, வனம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இன்று - செப்டம்பர் 10 இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் மாஞ்சோலை மக்களை இயற்கையாக வாழும் வனவாசிகளாக கருத முடியாது என நீதிமன்றமும் தனது நிலையை தெரிவித்திருப்பதிலிருந்து பா.ஜ.க-தி.மு.க அரசுகளுடன் மாஞ்சோலை மக்களை வெளியேற்றுவதில் நீதிமன்றமும் இணைந்துவிட்டதென்றே கூற வேண்டும்.
படிக்கவும்: கார்ப்பரேட்டுகளின் பிடியில் மேற்கு தொடர்ச்சிமலை! வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்!
நமது செந்தளம் வலைதளத்தில் வெளியிடப்பட்ட சமரன் கட்டுரையில் கூறியுள்ளவாறு கார்ப்பரேட்டுகளுக்கு மேற்குத் தொடர்சி மலையை தாரை வார்க்கும் மோடி அரசு கொண்டுவந்துள்ள வனசட்டம் மற்றும் பல்லுயிர் பெருக்கச் சட்டத்திற்கு சேவை செய்யவே மாஞ்சோலை மக்கள் விரட்டப்படுகிறார்கள். மேலும் மாஞ்சோலையை சுற்றியுள்ள அகத்தியர் மலைலையை கைப்பற்றி தொடர்ந்து வளம் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையெங்கும் விரிந்து செல்லும் கார்ப்பரேட் திட்டத்திற்கு சேவை செய்யவே மாஞ்சோலை மக்கள் விரட்டப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது மனம் கொள்ளதக்கதாகும்.
- செந்தளம் செய்திப்பிரிவு