பெண்களே! உங்களை யாரும் வன்புணர்ந்தால் ஏதும் பேசாமல் அமைதி காக்கவும்

ஒரத்தநாடு: கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை மீண்டும் சிதைக்கும் திமுக அரசு

பெண்களே! உங்களை யாரும் வன்புணர்ந்தால் ஏதும் பேசாமல்  அமைதி காக்கவும்

பேசு! வாயை மூடு!!
கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை இந்த சமூகம் எவ்வாறு தோற்கடிக்கிறது என்பது பற்றிய சுருக்கமான பார்வை

ஆகஸ்ட் 24 அன்று, தஞ்சாவூர் நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பாப்பநாடு கிராமத்திற்கு நாங்கள் வந்தபோது, குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு சில போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அது ஒரு சிதைக்கப்பட்ட கொட்டகை, அதன் மையத்தில் ஒரு பெஞ்ச், அப்பகுதி அடர்ந்த புல்வெளியால் சூழப்பட்டிருந்தது. அங்கே பீர் பாட்டில்களும் குப்பைகளும் சிதறிக் கிடந்தன. சுமார் இரு வாரங்களுக்கு முன்பு அவ்விடத்தில் துயர்மிகு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததையொட்டி கொட்டகையைச் சுற்றியுள்ள புல்வெளி மட்டும் தற்போது வெட்டப்பட்டுள்ளது.

23 வயது பெண், ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக சிதைக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற கொடூர நிகழ்வுகள் என அனைத்தும் அந்த சிறிய, சேதப்படுத்தப்பட்ட காலி கொட்டகைக்குள் அடங்கியுள்ளது.

அச்சம்பவம் பற்றிய தகவல்கள் நமக்கு நடுக்கத்தை கொடுக்கின்றன: அவள் வலுக்கட்டாயமாக பெஞ்சில் கிடத்தப்பட்டிருக்கிறாள், பீர் பாட்டிலால் தாக்கப்பட்டிருக்கிறாள், அவள் பேச்சு மூச்சற்று கிடந்திருக்கிறாள். 

இரண்டாக தடுக்கப்பட்டிருந்த கொட்டகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்திருந்தார். அவர் கதவைத் திறந்து வந்தார். சோர்வுடனும் கவலையுடனும் காணப்பட்டார். புதிதாக வந்துள்ள எங்களிடம் பேச அவருக்கு தயக்கம் இருந்தது. அமைதியான தொனியில் மிகக் குறைவாகவே பேசினார். எம்மை, தன் மருமகனின் வருகைக்காக காத்திருக்க கூறினார்.

சிறிது நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அக்காள் கணவர் செந்தில் வந்தார். எங்களை அப்பெண் இருந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார், ஒரு சிறிய அறையில் அவள் வெறும் தரையில் அமர்ந்தாள். அவள் மிகச்சோர்வாக இருந்தபோதிலும், எங்களை வரவேற்கும் விதமாக புன்னகையித்து எனக்கு ஒரு நாற்காலியை வழங்கினாள். கொடூரமான அந்தத் தாக்குதல் நடந்து 10 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அவளுடைய ரணங்கள் ஈரமாக இருந்தன, ஆனால் வெளித் தெரியவில்லை. அவள் பேசத் தொடங்கியதும், தனக்கு நேர்ந்த கொடூரத்தை பேச முன்வரும் ஒரு பெண்ணை இந்த (ஆணாதிக்க) சமூகம் எவ்வாறு தோற்கடிக்கிறது என்ற உண்மை வெளிப்பட்டது. ‘குற்றம் நடந்த நேரத்திலேயே புகாரளிக்கவில்லை' என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் – பாதிக்கப்பட்டவரின் நடத்தையையே கேள்விக்குரியதாக்கும் கும்பல்களுக்கு அவரின் இந்த துயரக் கதை (செருப்படி) பதில்.

ஒரு கும்பலால் கொடூரமாக சிதைக்கப்பட்ட போதிலும், வீட்டிற்கு வந்த உடனேயே தனக்கு நடந்ததை தன் வீட்டாரிடம் சொல்லும் அளவுக்கு தைரியமாக இருந்தாள். எந்தத் தாமதமும் இன்றி புகாரளிக்க அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லும் அளவுக்கு அவள் தைரியமாக இருந்தாள். ஆனால் அவளுடைய அந்த தைரியமும் இந்த சமூகத்தால் பலவீனப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 12, 2024, மதியம் 3 மணி

காலையில் கல்லூரிக்குச் சென்று சான்றிதழ்களைப் பெறச் செல்வதற்கு முன்பு, இப்படியொரு துயரம் நிகழும் என அவள் தனது கெட்ட கனவுகளில் கூட நினைத்திருக்கவில்லை. தொழில்நுட்ப தவறுகளால் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருந்தது. அதற்காக, கல்லூரி முடிந்ததும் வங்கிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அவள் வீட்டை அடையும் கனநேரத்திற்கு முன்பு பைக்கில் வந்த கவிதாசன் என்பவன் அவளை வண்டியில் ஏறக் கூறியிருக்கிறான்; அவன் கிரிமினல் குற்றாவாளி. அவள் மறுத்துவிட்டு தொடர்ந்து நடந்தாள். அவளைப் பின்தொடர்ந்து அவளது புத்தகப்பையை பறித்து சென்றான். "நான் எனது பையைத் திரும்பப் பெற முயற்சித்தேன்; எனது வங்கிப் புத்தகம் மற்றும் பிற ஆவணங்கள் அதில் இருந்தன. அவன் என் தலைமுடியைப் பிடித்து கொட்டகைக்குள் என்னை இழுத்துச் சென்றான். நான் எதிர்க்க முயன்றபோது, பீர் பாட்டிலால் தாக்கப்பட்டேன்..." என்று அவள் கூறிக்கொண்டிருக்கையிலேயே கண்ணீர் வெடித்தது; தழுதழுத்தாள்.

அந்தக் கும்பலில் ஆறு பேர் இருந்தனர். அவளால் அழவும் முடியவில்லை. அவள் கொஞ்சம் வலிமையைத் திரட்டி கத்த முயன்றபோது, அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்றாலும் அனைவரும் வேலைக்கு சென்று விட்டதால் பக்கத்து வீடுகளில் யாரும் இல்லை. அவளது தந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார், கொட்டகைக்கு அருகிலேயே, அக்கும்பலால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாள்.

அக்கும்பல் சென்ற பின் ஆடைகளை அணிந்து கொண்டு தட்டுதடுமாறி வீட்டிற்கு சென்றாள். வந்தவுடன் அக்காள் கணவரிடம் தயக்கமின்றி தனக்கு நடந்த கொடூரத்தை கூறியுள்ளார்; அவள் (தனக்கு நிகழ்ந்த குற்றத்திற்கு எதிராக போராட வேண்டும் என்பதில்) உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தாள்.

மாலை 4.30 மணி

அப்பெண், தன் தந்தை மாமாவுடன், வீட்டிலிருந்து ஒரு கி.மீ.-க்கும் குறைவான தூரத்தில் உள்ள பாப்பாநாடு காவல் நிலையத்தை அடைந்தார். பெண் காவல் அதிகாரி சூர்யா, பாதிக்கப்பட்டவரின் வாய்மொழி புகாரை ஏற்காமல் எழுத்துப்பூர்வமாக புகாரளிக்க கூறி அலைகழித்துள்ளார்; வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளார். அவளது காயங்களைப் பரிசோதிக்கவோ, மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவோ அந்த அதிகாரி அக்கறை காட்டவில்லை. அத்தருணத்தில் சம்பவங்களின் வரிசையை கூட தொகுத்து எழுதுவதற்கு சக்தியற்று இருந்தனர்; செய்வதறியாது குழம்பி நின்றனர்.

மாலை 5.15 மணி

பாப்பாநாடு காவல் நிலையத்தில் அளித்த புகார் செவிடன் காதில் ஊதிய சங்காய் மாறியதால், அங்கிருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கேயும் அவளுக்கு எதிராக தடைசுவர் எழும்பியது. குற்றத்தை பதிவு செய்வதற்கு பதிலாக, மருத்துவ பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும், சம்பவ எல்லைக்குட்பட்ட ஒரத்தநாடு காவல் நிலையத்திற்குச் செல்லுமாறும், அறிவுறுத்தப்பட்டது, இது கும்பல் பலாத்கார வழக்கு என்று முழுமையாகத் தெரிந்திருந்தும், அவளைத் தங்கள் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் தயாராக இல்லை.

மாலை 6 மணி

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தாள், அங்கே காக்க வைக்கப்பட்டாள். யாரும் அவளை கவனிக்கவில்லை. உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டும்கூட மருத்துவரோ அல்லது செவிலியர்களோ அவளைப் பரிசோதிக்கவோ மருத்துவம் பார்க்கவோ தயாராக இல்லை. மிருகத்தனமான பலாத்கார தாக்குதலுக்குப் பின்னான நீண்ட நேரக் காத்திருப்பு மற்றும் அலைகழிப்பால் கிட்டத்தட்ட மயக்கநிலையடைந்ததை கவலையுடன் நினைவு கூர்ந்தாள். முதலில் காவல் நிலையத்துக்குச் சென்று குற்றத்தைப் பதிவு செய்துவிட்டு போலீஸ் உதவியுடன் திரும்பும்படி மருத்துவமனை நிர்வாகமும் கைவிரித்தது. இது பலாத்கார குற்றச்சாட்டு என்பதால் முதலில் குற்றத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் ஆஜராக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

நாங்கள் (அவுட்லுக்) பலமுறை முயற்சித்தும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் மீனா நியூட்டன் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

இரவு 10.45 மணி

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு அனைத்து மகளிர் காவல் நிலையமான ஒரத்தநாடு காவல் நிலையத்தை அடைந்தார் அந்த பெண். அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள ஆர்எம்எச் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இத்தகைய கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிர்பிழைத்த பெண், சுமார் ஏழு மணி நேரம் கழித்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (அரசு நிர்வாகத்தின் எத்தகைய அவலமான அலட்சியம் இது, கொடுமை! – மொ-ர்)

ஆகஸ்ட் 13, காலை 7 மணி

முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில் நடந்த ஒரு குற்றத்தில், பாதிக்கப்பட்டவர் ஒரு மணி நேரத்திற்குள் புகாரளித்தார், 15 மணி நேரம் கழித்து எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றத்தை விசாரிப்பதற்கு அத்தியாவசியமான ஆரம்ப மணிநேரங்கள் (அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால்) வீணடிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவச் சேவையைப் பெறுவதற்கும் குற்றத்தைப் பதிவு செய்வதற்கும் கூட 10 மணி நேரத்திற்கும் மேலாக உதவிநாடி அங்குமிங்கும் ஓட வேண்டிய (அவலநிலை) இருந்தது.

ஒரத்தநாடு காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஷஹானாஸை அவுட்லுக் சார்பில் தொடர்பு கொண்டபோது, அவர் காவல்துறையின் குறையை ஒப்புக்கொண்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பாப்பாநாடு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் புகாரை ஏற்க மறுத்த இன்ஸ்பெக்டர் சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கொடுக்கவில்லை என்பதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் மீனா நியூட்டனுக்கு மாஜிஸ்திரேட் நோட்டீஸ் அனுப்பினார், அங்கு. ஆனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்குமாறு காவல்துறை கோர முடியுமா? அவர்களின் அதிகார வரம்பிற்கு வெளியே நடந்த குற்றத்தை அவர்கள் பதிவு செய்ய மறுக்க முடியுமா? அப்படி மறுக்க முடியாது என்று குற்றவியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 173 இதைத் தெளிவாக்குகிறது: "இக்குற்றம் நிகழ்த்தப்ட்டதுடன் தொடர்பான ஒவ்வொரு தகவலும், அது எந்த இடத்தில் செய்யப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், வாய்வழியாகவோ அல்லது மின்னணு தகவல்தொடர்பு மூலமாகவோ கொடுக்கப்படலாம். காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம்  கொடுக்கப்பட்டால் - எழுத்துப்பூர்வமாகவோ அல்லது சொல்லசொல்ல எழுதப்பட்டதாகவோ - இருப்பினும் கூட, அதில் உள்ள ஒவ்வொரு தகவலும் அதைக் கொடுப்பவரால் ஒப்பமிடப்படும்.

எஃப்.ஐ.ஆர் பதிவதில் காலதாமதம் செய்வது கேடு விளைவிக்கும்

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் காரணமற்ற தாமதம், வழக்கு விசாரணைக்கான அடிப்படைகளை தகர்க்கிறது என்பது கடந்த கால சட்ட வழக்குகளின் அனுபவம். லலிதா குமாரி vs உபி அரசு என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைகளில் சரியான நேரத்தில் எப்ஐஆர் பதிவு செய்வதன் முக்கியத்துவத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. "எப்.ஐ.ஆர் பதிவு என்பது பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்கான முதல் படியாகும்; இது, நிகழ்த்தப்பட்ட குற்றத்தினை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் 'சட்ட விதியை' நிலைநிறுத்துகிறது. இது விரைவான விசாரணையை எளிதாக்குவதோடு சில நேரங்களில் குற்றத்தினை தடுக்கவும் செய்கிறது. இவ்வாறு இரண்டு விதமாகவும், இது சட்ட விதிகளை வலுப்படுத்துகிறது, குற்றவியல் வழக்குகளில் (சாட்சியங்களை அழிப்பது போன்ற) தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதை குறைக்கிறது; புகாரை வேண்டுமென்றே முன் –பின் தேதியிட்டு மாற்றி பதியும் நிகழ்வுகளைக் குறைக்கிறது.”

துலியா காளி vs தமிழ்நாடு அரசு என்ற வழக்கில், எப்ஐஆர் பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், வழக்கு விசாரணையை எவ்வாறு பலவீனப்படுத்தும் என்பதை உச்ச நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. "முதல் தகவல் அறிக்கையை சமர்பிப்பதில் தாமதம், பின்னால் வழக்கை தேவைக்கேற்ப ஜோடிப்பதற்கு இட்டுச்செல்லும். தாமதத்தால், அந்த அறிக்கை அதன் உண்மைத் தன்மையை இழக்கிறது; அது  சிதைந்த, மிகைப்படுத்தப்பட்ட அல்லது தேவைக்கேற்ப இட்டுக்கட்டப்பட்ட கதையாக மாறும் அபாயம் எழுகிறது. எனவே, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் ஏதேனும் தாமதம் இருந்தால் அதற்கு அத்தியவசியமான போதுமான விளக்கமளிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆறு பேர் கொண்ட கும்பல்; ஆனால் நான்கு பேர் மீது மட்டும் எப்ஐஆர்

பாதிக்கப்பட்டவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தின்படி, அக்கிராமத்தைச் சேர்ந்த கவிதாசன் என்பவன், அவளை வலுக்கட்டாயமாக ஒரு கொட்டகைக்கு இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அப்பெண்ணுக்கு அடையாளம் தெரிந்த ஐந்து நபர்கள் இருந்தனர். இருப்பினும், கவிதாசன், பிரவீன், திவாகர், லியோதர்ஷன் ஆகிய நான்கு பேர் மீது மட்டுமே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட அதே நாளில் (ஆகஸ்ட் 13) நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரில், லியோதர்ஷன் என்பவன் மைனர். கவிதாசன் ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி. 

பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் அவளைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யும் போது மற்ற இருவர், யாரும் வராதப்படி (குற்றச் செயலுக்கு) காவல் காத்துள்ளனர். இது கேள்வியை எழுப்புகிறது: எஃப்.ஐ.ஆரில் இருந்து காவல்துறை இருவரை எப்படி நீக்கியது? இதுகுறித்து ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., ஷஹானாசை கேட்டபோது, அவர்,  "விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது எந்த நேரத்திலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம்" என்றார். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர் பெயரை சுட்டிக்காட்டிய போதிலும், எஃப்ஐஆரில் இருந்து இருவர் ஏன் தவிர்க்கப்பட்டனர் என்பதற்கு அவரின் பதில் போதுமானதாக இல்லை. சம்பவத்தன்று மாலை 4:02 மணிக்கு இரண்டு பைக்குகளில் ஆறு பேர் புறப்பட்டுச் செல்வதை, (அவுட்லுக் அணுகிய) அருகிலுள்ள இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது. இந்த உறுதியான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அவர்களின் பங்கு குறித்து இன்னும் விசாரித்து வருவதாகக் கூறி, வேண்டுமென்றே எஃப்.ஐ.ஆரில் இருந்து இரண்டு நபர்களை போலீசார் தப்பவிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் முன் வன்புணர்வு குற்றவாளிகள்

வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர் சந்திக்கும் அத்துமீறல்கள் எஃப்ஐஆர் பதிவுசெய்வதில் இருந்த தாமதத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. BNSS (164 CrPC) பிரிவின் 183-ன் கீழ், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மற்றொரு அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சந்தித்தார். நீதிமன்ற வளாகத்தில் கவிதாசனையும் திவாகரையும் சந்தித்தாள். திவாகர் நேரடியாக அவளை அணுகி "அவனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. தான் அனுபவித்த கொடூரமான தாக்குதலுக்கு 48 மணி நேரத்திற்குள், குற்றவாளிகளை எதிர்கொண்டபோது தான் உணர்ந்த அதிர்ச்சி மற்றும் அவமானத்தின் ஆழமான உணர்வை அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த பெண், நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். சம்பவத்துக்கு முந்தைய நாள்தான் வீட்டுக்கு வந்த அவர், அதன்பிறகு சென்னை திரும்பவே இல்லை. தன் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான சிந்தனையில்லாமல், முழுக்க முழுக்க தனிமையில் உழன்று, சின்னஞ்சிறிய ஒரு அறையில் தன் பகல் மற்றும் இரவுகளைக் கழிக்கிறாள்.

தான் அடைபட்டு கிடக்கும் அறையை விட்டு இந்த நிருபர் தன்னை வெளிக்கொணரப் போகிறார் என்ற நம்பிக்கையில், அப்பெண் இறுதியாக நம்மிடம்  ஒரு கேள்வியை கேட்கிறார், “இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த வழக்கு முடிந்து விடுமா? நான் எப்போது என் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்?”

அதற்கு உறுதியான பதில் நம்மிடம் இல்லை.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை : அவுட்லுக் இதழ்